• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
859
KT -12

காரில் ஏறியதுமே பிள்ளைகள் இருவருக்கும் நல்லத்தூக்கம். பின்பக்கம் மூவரும் ஏறிக்கொள்ள, டிரைவருக்கு பக்கத்தில் இளங்கோ அமர்ந்திருந்தான்.

கவிதா மேடம் பேசியதை கேட்டதில் இருந்தே கொடி மிகவும் அமைதியாகிவிட்டாள். அதை இளங்கோவும் கவனிக்கத்தான் செய்தான்.

ஆனாலும் அப்போதும் அவளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

அதே சமயம் அந்த இடத்திலேயே நிலமையை கையில் எடுத்து சமாளித்ததை நினைத்து பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

கண்களை மூடி ஜன்னலில் தலை சாய்ந்திருந்தவளை கண்ணாடி வழியாக பார்த்தான். கருமணிகள் உருண்ட விதத்திலே அவள் இன்னும் தூங்கவில்லை என தெரிந்தது.

கவிதா மேடத்தின் இன்றைய பேச்சை பற்றி தன்னிடம் கேட்பாள், அதற்கு என்ன பதில் சொல்வது என யோசித்தபடியே மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

சட்டென நிமிர்ந்து முந்தானையில் முகத்தை துடைத்து, மீண்டும் ஜன்னலில் சாய்ந்தாள்.

அழுகிறாள்.! நெஞ்சை பிசைந்தது அவனுக்கு. பிரச்சினை நடந்த ஆரம்பத்தில் அவள் அழுது பார்த்தது. அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறான்.

இரவின் சூழலில் ஒருசில வினாடிகள் அப்படியே அசையாமல் மௌனமாக கண்மூடியபடியே இருந்தான்.

‘இளா நீ தப்புக்கு மேல தப்பு பண்ற, அவ செஞ்சது தப்பாவே இருந்தாலும் நீ கொடுத்த தண்டனை மிக அதிகம், சீக்கிரம் அவளை சமாதானம் செஞ்சி உங்கிட்ட கொண்டு வந்துடு. கொஞ்ச நாளா அவ பேச்சும் செயலும் நல்லதாவே படல’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டே வந்தான்.

அவளைப் பிரிந்து அவன் மட்டும் நிம்மதியாக இருந்திருப்பானா? இல்லையே, இல்லவே இல்லையே!

அவளை விட அவன்தானே மனைவியை அதிகம் தேடினான். அன்றைய நாட்கள் கண் முன்னே விரிந்தது.

காதலித்தான்.. உயிராய் உணர்வாய் காதலித்தான். அவளை மட்டுமே உலகம் என்று நம்பினான். தன் அன்னையின் பேச்சை கேட்காமல் இவள்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து திருமணம் செய்தான்.

ஆனால் அவள்.!

ஏதோ தவறு செய்துவிட்டாள். அவளுக்கே தெரியவில்லைதான். நம்பிக்கை வைத்தாள், ஏமாற்றிவிட்டார்கள். அதை அவனிடம் கூறியிருக்க வேண்டுமல்லவா.?

மூன்றாவதாக ஒருவர் வந்து கூறியதுதான் அவனின் கோபத்தை கூட்டியது. தன்னிடம் மறைத்ததை கூட அவனால் மன்னிக்க முடியும், தாயே ஆனாலும், அவர் வந்து மனைவியைப்பற்றி அனைத்தையும் கூறியதைத்தான் அவனால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் சொல்லும் அளவிற்கா நம் வாழ்க்கை இருக்கிறது என்ற கோபமும் ஆத்திரமும் தான் அன்றைய பேச்சு. ம்ச் என்ன வாழ்க்கை? என இப்போதும் அவனுக்கு சலிப்பு வந்தது.

அப்படியே சீட்டின் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் வீடும் வந்துவிட, பிள்ளைகளை எழுப்பி அவர்களுக்கு தேவையானது செய்து உறங்க அனுப்ப
என கொடிக்கு வேலை சரியாக இருந்தது.

அடுத்த நாளுக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு, தானும் உடையை மாற்றிவிட்டு, மாத்திரையை எடுத்தவளின் முன்னே வந்து நின்றான் கணவன்.

“மாத்திரை போட்டதுமே உறக்கம் வந்துடுமா.? இது எதுக்காக கொடுத்துருக்காங்க..” என்றான் அவளைப் கூர்மையாக பார்த்தபடியே.

அந்த பார்வையில் தடதடத்த மனதை கட்டுப்படுத்தி “ஆமா உடனே தூக்கம் வந்துடும், இது தைராய்டுக்கு” என மென்று விழுங்கினாள்.

“ஓ.. இதுக்கு முன்னாடியும் எடுத்துருக்கத்தானே அப்போ எல்லாம் இப்படி சொல்லலயே..” என தன் நாடியைத் தடவினான் பார்வையில் அழுத்தம் கூட்டி.

“இப்போ அதிகமாகிடுச்சு, அதோட வலியும் அதிகமாகிடுச்சு அதான்..” என்றாள் மெல்ல, உடல் நடுங்கத் தொடங்கியது. கண்டுபிடித்துவிடுவானோ என்ற பயத்தில்.

“இது என்ன? கழுத்துல கட்டி மாதிரி இருக்கு..” என மனைவியை நெருங்கி கழுத்தை ஆராயப்போக,

சட்டென்று கணவனின் கையை தட்டிவிட்டு, இரண்டடி பின்னே வந்தவள், “கட்டி.. கட்டி இல்ல. வீக்கம் அது. கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும் சொல்லிருக்காங்க..” என பதறியபடியே கூறவும்,

“இப்போ அதை பார்த்தா என்ன.? ஓவரா தான் சீன் போட்டுட்டு இருக்க.” என தன் கையைத் தட்டிவிட்ட கோபத்தில் கத்த,

“எனக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்குத்தான் பிடிக்காது. நான் பக்கத்துல வந்தாலே உங்களை மயக்க, வந்த மாதிரி பேசுவீங்க.” என பட்டென்று சொன்னவள், கழுத்தை தடவியபடியே திகைத்து நின்றவனை தாண்டி சென்று மாத்திரையை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘என்ன பேசுறா இவ. மயக்கி, கியக்கினு" என ஏகத்துக்கும் எரிச்சல் வந்தது இளங்கோவிற்கு.

பேச்சுக்கு பேச்சு அவன் பேசியதைத்தான் அவள் திருப்பி சொல்லி இருக்கிறாள் என்பதை வசதியாக மறந்துவிட்டான்.

கிச்சனில் இருந்து வந்தவள், அவளுக்கான இடத்தில் சென்று படுக்க, “ஹேய் உள்ள வந்து படு. பிறகு நேத்து போல முடியாம போய்ட போகுது..” என அவளை அதட்டிக்கொண்டே அருகில் போக,

“வேண்டாம்.” என முடிக்கும் முன்னே அவளிடம் வேகமாக வந்தான்.

“என்னடி நினைச்சிட்டு இருக்க, கொஞ்சம் இறங்கி வந்தா ஓவரா போற, உள்ள வந்து படுக்க சொன்னா சரின்னு கேட்டு பழகு. பதிலுக்கு பதில் பேசினா அப்புறம் நடக்குறதே வேற..” என காட்டமாய் கத்த,

அதில் மிரண்டவள் விழிகளில் இருந்து நீர் கடகடவென இறங்கியது.

“ஹேய் இப்போ ஏன்டி இவ்ளோ ட்ராமா பண்ணுற, நான் தான் நீ என்னமோ பண்ணு, எப்படியோ போன்னு விட்டுட்டேனே, இன்னும் ஏன் அழுது அழுது நடிச்சிட்டு இருக்க..” என எரிச்சலில் கத்தியவன், “உள்ள வந்து படு” என விடாமல் அவள் கையை பிடிக்க,
அவனைத் தடுக்க முடியாமல் எழுந்து நின்றவளுக்கு கண் சொக்கி தூக்கம் வர ஆரம்பித்தது. அதை கண்டவன் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு வந்து அறைக்குள் படுக்க வைத்தான்.

‘எவ்வளவு பேச வைக்கிறா.? என்ன சொன்னாலும் சரி சரின்னு சொல்லிட்டு இருந்தவ, இப்போ எல்லாத்துக்கும் எதிர்த்து பேசி, வீம்பு பிடிச்சுட்டு இருக்கா. இதுக்கு பிள்ளைகளே பரவாயில்ல போல..’ என புலம்பியபடி பிள்ளைகளின் அறைக்குள் எட்டிப்பார்க்க, மகன் நல்ல உறக்கம். மகள் மொபைலில் தலையை நுழைத்திருந்தாள்.

அதை பார்த்ததும் கோபம் வர, “பாப்பா என்ன இது..?” என அதட்ட,

“ப்பா..” என பயத்தில் அதிர்ந்தவள், “அது அது நோட்ஸ் பார்த்துட்டு இருந்தேன் ப்பா.” என திணற, அதுவே சொன்னது அவள் கூறுவது பொய்யென.

“மொபைலை ஆஃப் பண்ணிட்டு தூங்கு..” என அதட்டியவன், கதவை திறந்து வைத்துவிட்டு “எப்போ இருந்து டோர் லாக் பண்ணிட்டு படுக்க ஆரம்பிச்சீங்க..” என அடுத்த கேள்வியை கேட்க, “அதுப்பா.. நவீ தான்..” என இழுக்க, அதுவும் பொய் என்று புரிந்தது.

மகளை நின்று தீர்க்கமாக பார்த்தான். அந்த பார்வையே சொன்னது இன்னொரு தடவை இந்த தவறு நடக்கக்கூடாது என்று.

“ஸாரிப்பா..” என்றவள் எழுந்தமர,

“தூங்கு..” என்றவன் தங்களறைக்குள் வந்து பார்த்த போது மனைவி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

அருகில் வந்தவன் மனைவியையே கூர்மையாக பார்த்தான். நன்றாக மெலிந்திருக்கிறாள். முகம் கருத்து கண்ணைச் சுற்றி கருவளையம்.

இப்போது கழுத்துப் பகுதியை பார்த்தான். வழக்கம்போல ஒரு கையை கழுத்தை ஒட்டித்தான் வைத்திருந்தாள். என்ன பிரச்சினை இவளுக்கு, முன்னாடியெல்லாம் இப்படி படுக்க மாட்டாளே, ரொம்ப நாள் பழக்கம் போல படுத்துருக்கா, நிச்சயம் ஏதோ பிரச்சினைதான். கண்டிப்பா எங்கிட்ட மறைக்கிறா.?

கழுத்தில் இருந்த கையை விலக்கி, அந்த இடத்தை தடவி பார்த்தான். மற்றவர்கள் சொன்னது போல கட்டியெல்லாம் இல்லை. வீக்கம் போலத்தான் தெரிந்தது. மெதுவாக தடவியவன், கொடி அசையவும் வலியில் அசைகிறாள் என்று புரிந்து கையை எடுத்துக்கொண்டான்.

‘ஊப்ஸ்’ என பெருமூச்சை விட்டவன் வெளியில் வந்தான்., சீக்கிரம் எல்லாத்தையும் சரி செய்யனும், இது என் வீடு போலவே இல்ல. முதல்ல பாப்பாவை சரி செய்யனும், அவ பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்ல, இந்த வயசுல எல்லாம் சரின்னு தோணும். அவளை கவனிக்கனும், இப்போ பார்க்காம விட்டா, பின்னாடி ரொம்ப வருத்தப்படுற மாதிரி ஆகிடும். பப்ளிக் எக்சாம் வேற, பிள்ளைங்கள கவனிக்காம இவ என்ன பண்றா.?’ என மீண்டும் மனைவியிடமே வந்தான்.

‘இவ சொல்றதை எல்லாம் உன் பசங்க அப்படியே கேட்கற மாதிரி யோசிக்கிற கேட்கறதே இல்ல, என்னமோ உனக்கு தெரியாத மாதிரியே யோசிக்கிற, அவங்க மதிக்காம போக உன் அம்மாவும் நீயும் தானே முக்கிய காரணம்’ என மனசாட்சி மானாவாரியாக பேச, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

இரவின் தனிமையில் சிலபல வினாடிகள் அப்படியே இருந்தான்.

அனைத்தும் உன் தவறுதான் என மனசாட்சி அவனை குற்றம் சாட்டியது.

மூளையோ,"சரி செய்.. அனைத்தையும் உடனே சரி செய் என கட்டளை இட்டது".

இப்படியான மனதிற்கும் மூளைக்குமான போராட்டத்தில் எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.

காலையில் நவீன் வந்து எழுப்பும் போதுதான் எழுந்தான். “ப்பா இன்னைக்கு உங்களுக்கு லீவா.. அம்மா கேட்டாங்க..” என்றபடியே நெற்றியில் கைவைத்து பார்த்தான்.

“எனக்கு ஒன்னுமில்ல, ஆஃபிஸ் போகனும், அசந்து தூங்கிட்டேன். நீங்க கிளம்பிட்டீங்களா.?” என்றபடியே மணியை பார்க்க, அது ஏழு என்றது.

“ஓகே.. நீங்க ரெடியாகுங்க. நான் வரேன். எனக்கு டிபன், லஞ்ச் ரெண்டுமே பேக் பண்ண சொல்லிடு, இப்போ காஃபி மட்டும் போதும்..” என அரக்க பரக்க ரெடியாக ஆரம்பித்தான்.

இந்த அவசரத்தில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதை மறந்திருந்தான்.

மூவரும் கிளம்பிய சில நிமிடங்களில், நந்தினியும் கல்லூரிக்கு செல்ல வந்திருந்தாள்.

“அண்ணி நான் கிளம்பிட்டேன். நீங்க இங்க கிளம்பும் போது எனக்கு கால் பண்ணுங்க, நான் பெர்மிசன் போட்டுக்குறேன். என்னை ஏமாத்தக்கூடாது, அப்புறம் உங்க கூட பேசமாட்டேன்..” என முறைப்பாக சொல்ல,

“வந்துடுவேன் நந்தினி.. நீ இதையே யோசிச்சிட்டு இருக்காத, பஸ் வந்துடும் கிளம்பு..” என அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தாள்.
மனம் ஏதோதோ யோசித்தது. நேற்று நடந்த சம்பவம் அவளை குற்றுயிராய் ஆக்கியிருந்தது.

அவர்களுக்கு நான் தேவையே இல்லையா, எப்போதிருந்து.? இந்த கேள்விதான் மூளையை குடைந்தது. இனி யாருக்காக இங்கு இருக்க வேண்டும்.

பெற்ற தாயை ஒதுக்கும் பிள்ளைகள், கட்டிய மனைவியை ஒதுக்கும் கணவன். போய்விட வேண்டும். இனி இங்கிருக்க முடியாது, முடியவே முடியாது.

பெரிதாக எதிலோ தோற்றுவிட்ட உணர்வு. வாழவும் தகுதியில்லையோ, அதனால் தான் கடவுள் தனக்கு இப்படியொரு வலியை கொடுத்திருக்கிறானோ என கழுத்தை தடவி கொண்டாள்.

பின் ஒரு முடிவோடு ரெடியாகி தான் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.

சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு கொடி அழைக்கப்பட, “வாம்மா கொடி, எப்படி இருக்க.?” என வாஞ்சையாக அழைக்க,

அந்த மருத்துவரை பார்த்து “கொஞ்சம் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு மேடம், நைட் நல்லா தூங்குறேன். பரவாயில்லை..” சிரிக்க,

“குட்.. எப்போ அட்மிட் ஆகுற.. உனக்கு இன்னும் 2 வீக்ஸ் தான் டைம், அதுக்குள்ள எனக்கு சொல்லு. நான் லெட்டர் ஃபார்மாலிடிஸ் எல்லாம் முடிச்சி கொடுக்குறேன்..” எனவும்,

“சரிங்க மேடம், அடுத்த வாரம் போய் அட்மிட் ஆகிடுறேன். இப்போ நான் ஊருக்கு போறேன். அப்பா வீட்டுக்கு. வரதுக்கு ஒரு வாரம் ஆகும். அதுதான் மாத்திரை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவளிடம்

“ஓக்கே மா.. ஒரு செக்கப் பண்ணிட்டு மாத்திரை வாங்கிக்கலாம், நீ போய் டெஸ்ட்க்கு கொடுத்து, ரிசல்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு வா..” என அனுப்ப, அவளும் அங்கிருந்த லேபில் டெஸ்ட் எடுத்து, ஒரு மணி நேரம் கழித்து ரிசல்டை வாங்கி மருத்துவரை பார்க்க, அவர் முகமோ மிகவும் யோசனையில் இருந்தது.

இப்போது எதையும் அவளிடம் கூறி பயமுறுத்த வேண்டாம் என நினைத்தவர், “நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா உன் ஹஸ்பண்ட் வரனும் கொடி.” என கண்டித்து கூறி அனுப்ப, வெளியில் வந்தவளுக்கு டாக்டர் கூறியதை நினைத்து சிரிப்புத்தான் வந்தது.

அந்த அரசு மருத்துவமனை ஊருக்கு கடைசியில் இருக்க, அங்கிருந்து மெதுவாக ஊருக்குள் நடக்க ஆரம்பித்தாள். கொஞ்ச தூரம் கூட நடந்திருக்க மாட்டாள், கண்கள் இருட்டிக்கொண்டு வர, வயிறு இழுத்துப்பிடிக்க, கால்கள் பலமிழக்க, ஆட்கள் நடமாட்டமில்லாத ரோட்டில் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள் பூங்கொடி. குலமகள் வீதியில்...... அவளை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டதா விதி?

விதி வலியது தான்.!

என் பிரிவு உனக்கு
நிம்மதியும் சந்தோஷத்தையும்
அளிக்கிறதா இருந்து விட்டு போ,
அதுவே நான் உனக்கு அளித்த
பரிசாக இருக்கட்டும்.
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
283
டேய்..ப..சி..பொண்டாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக மறந்திட்டியா😡
காலையில,மதியத்துக்குசாப்பாடு கேக்க மறக்கலயோ😡🤨
மறுபடியும் மறுபடியும் அவளை திட்டிக்கிட்டே இருக்கே..மனுசஜென்மம் தானா நீயி..
உன்னோட வாழ்வதற்கு அவள் அப்பாகூடவே இருந்துக்கலாம்.
லாஸ்ட் லைன் படிக்கும்போது கண்ணு கலங்கிருச்சு😥
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
135
ரைட்டரம்மா, ரொம்ப படுத்துறீங்க கொடியை.

2 - வருடமா கத்தியவன் உடனே சரியாகிட மாட்டான். அதிலும், மனைவி தன் பேச்சைக் கேட்காத கோபம் வேறு இவனுக்கு.

மகளிடம் ஏதோ தப்பு இருக்கு. திமிரும் அதிகம். சரி செய்யாட்டி பிறகு வருத்தப்பட நேரும்.
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
178
Nice update
Ivan enna ipdi irukanedo matra sapdra enna nu kekuran
Afida Ada marandachi
Ponnu sarila
Last line enna gundu vachirukeenga writerjiii
 
Top