நதி - 02
தேனி - கம்பம் சாலையில் அந்த ஐ20 மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தைப் பார்ப்பவர்களுக்கு ஓட்டுகிறவனின் மேல் கோபமும் எரிச்சலும் தன்னாலே உண்டாகும். ஏன் வாய்க்கு வந்த வசைமொழிகளை வாரி வழங்கவும் செய்வார்கள்.
ஆனால் உள்ளிருப்பவனுக்கோ இங்கிருந்து தூரமாக, மிக மிக தூரமாக போய்விட வேண்டும். யாருடைய தொந்தரவும் இருக்கக்கூடாது அவனுக்கு. இப்போது யாரையும் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை. தனிமை தனிமைதான் வேண்டும் அவனுக்கு. இந்த நாளை அவன் வாழ்க்கையில் இருந்து எடுத்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஆனால் முடியாதே, முடியவே முடியாதே.!
அவனது போன் வேறு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. பவி1 என்ற பெயரைப் பார்த்ததும் கோபம் பலமடங்கு பெருக, இன்னும் காரின் வேகத்தைக் கூட்டினான்.
மீண்டும் மீண்டும் விடாமல் போன் ஒலிக்க, எரிச்சலில் அதை அட்டெண்ட் செய்தவன் “லுக் பவி.. எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும், ஒரு பார்டி நீங்க அரேஞ்ச் செஞ்சா, அதுக்கு நான் வரனுமா.? ஐ கான்ட்.” எனக் கடுமையாகப் பேச,
“ஹேய் எங்க போய் தொலைஞ்ச நீ, இப்போ என்ன பிரச்சினை உனக்கு. என்ன நடக்குதுன்னு தெரியாம ஏன் தையதக்கான்னு குதிக்கிற, உன்னோட சூப்பர் மார்க்கெட்ல வேலை செய்ற பொண்ணு ரோட்ல அடிபட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்குன்னு போன் வந்தது. உனக்கு கால் பண்ணா, நீ எடுக்கலன்னு வீட்டுக்கு கூப்பிட்டாங்க. நீ போனா போ.. இல்லைன்னா இரு. எனக்கென்ன.. இந்த பார்டி உனக்காக இல்ல, நீ வரனும்ன்ற அவசியமும் இங்க யாருக்கும் இல்ல..” என்ற பவி போனை வைத்துவிட, இப்போது அவனது கார் சற்று ஆட்டம் கண்டது.
காரை ஓரமாக நிறுத்தியவன் உடனே தன் போனில் மிஸ்ட் கால் வந்த எண்களை எல்லாம் செக் செய்ய, அதில் தனது மேனேஜர் சுயம்புலிங்கம் நம்பரும் இருக்க, வேகமாக அவருக்கு கால் செய்தான்.
யாருக்கு என்னமோ என்ற பதட்டம். தன் இடத்தில் வேலை செய்கிறவர்கள் என்றால் முழு பொறுப்பும் அவனதுதானே. இவன் போனுக்காகவே காத்திருந்தவர் போல, உடனே எடுத்த சுயம்பு “சார்.. சார் எங்க இருக்கீங்க.” எனப் பதட்டமாக கேட்க,
“யெஸ் சுயம்பு சொல்லுங்க. பார்டி ஓக்கே தானே நம்ம பொண்ணுங்களுக்கு யாருக்கு என்னாச்சு?” என அவர் கேள்வியை டீலில் விட்டுவிட்டு, அவன் ஒரு கேள்வியை கேட்க,
“பொண்ணுங்க எல்லாம் சேஃப்தான் சார். பார்டி முடிஞ்சி கிளம்பிட்டாங்க, இது நம்ம அபி மேடம் சார்.” என இழுக்க,
“பொண்ணுங்க சேஃப்தானே, நீங்களே நம்ம வண்டில வீட்டுல விட்டுட்டீங்க இல்லையா. அதுதான் ரொம்ப முக்கியம்.” என மீண்டும் அதையே அழுத்தி கேட்க,
“எஸ் சார். அதெல்லாம் பிரச்சினை இல்லை சார். நம்ம அபி மேடம்தான்..” என அடுத்து என்ன சொல்ல எனத் தெரியாமல் விழிக்க,
“ம்ம் இப்போ சொல்லுங்க அபி மேடம்க்கு என்னாச்சு..” என அவன் தன் பதட்டத்தை எல்லாம் விட்டு வெகுநிதானமாகக் கேட்க,
“தெரியல சார். நம்ம கடைல இருந்து லேட்டாதான் கிளம்பிருக்காங்க போல, காலையில் இருந்து சாப்பிடவும் இல்ல போல, அப்படியே ரோட்டுல மயங்கி விழுந்து, ஒரு கார் அடிச்சிட்டு போயிருக்கு. தலையிலயும், இடது கால்லயும் காயம். கால்ல சர்ஜரி செய்யனும் சொல்லிருக்காங்க.” என பதட்டமாக சொல்ல,
“சரி.. வேற என்ன.?” என அவன் கேட்க,
“சார்..” என்ற சுயம்புக்கு இப்போது தன் முதலாளியின் மேல் அளவுகடந்த கோபம் வந்தது.
“சுயம்பு அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க, அவங்க வந்ததும் விட்டுட்டு நீங்க கிளம்புங்க, அன்ட் நார்மலா நாம நம்ம ஸ்டாஃப்க்கு என்ன செலவு செய்வோமோ அதுக்கு செக் கொடுத்துட்டு வந்துடுங்க. இனி அவங்க நமக்கு வேலைக்கு வேண்டாம். வேற கேன்டிடேட் பாருங்க..” என வைத்துவிட,
“ச்சீ.. என்ன ஜென்மம் இவனெல்லாம்.” என்றானது சுயம்புலிங்கத்திற்கு. ‘அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க’ எப்படி இவனால் இந்த வார்த்தையை சொல்ல முடிந்தது. அவளுக்கு அப்படி ஒரு வீடு இருந்தால் இங்கு வந்து இவனிடம் ஏன் நாயை விட கேவலமாக வார்த்தைகளை வாங்கிக் கொண்டு வேலை செய்யப் போகிறாள்.
மனம் கனத்தது மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை, ஓரளவிற்கு என்றால் அவர்கூட அந்தப் பணத்தைக் கட்டிவிடுவார். ஆனால் அது தன் முதலாளிக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். முடியும் காரியமா.?
சிறிது நேரம் யோசித்தவர், தைரியத்தை வரவைத்து மீண்டும் அவனுக்கு கால் செய்ய, இப்போது ஸ்விட்ச் ஆஃப் என்று வர, வேறுவழி இல்லாமல் அந்த வீட்டின் பெரியவருக்கு அழைத்து விட்டார்.
“சொல்லுப்பா சுயம்பு, என்ன இந்த நேரத்துல. கடைல எதுவும் பிரச்சினையா.?” என சாதாரணமாக என்றாலும், ஆளுமையானக் குரலில் கேட்க,
“அதுவந்து ஐயா.. நம்ம கடைல வேலை பார்க்குற அபி பொண்ணுக்கு” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடிக்க,
“ஓ..” என்று ஒரு நொடி இடைவெளி விட்டவர், பின் “இதுல நான் என்னப்பா செய்யமுடியும்.எல்லாருக்கும் என்ன செய்வோமோ அதை செஞ்சிட சொல்லித்தான் பேரன் சொல்லிட்டானே. இனி வேற என்ன செய்ய. அவனோட விஷயத்துல நாங்க யாரும் தலையிட முடியாது. ஏதோ இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்குறான். அந்த பொண்ணுக்கு உதவுறன்னு அதையும் கெடுத்துக்க சொல்றியா..” என அவர் அதே குரலில் கேட்க,
“அய்யோ ஐயா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஐயா. அந்த பொண்ணுக்குன்னு யாரும் இல்லையே. எடுத்து செஞ்சிப் பார்த்துக்க உங்களைத் தவிர யார் இருக்கா.? என்ன இருந்தாலும் அபி மேடமும் உங்க வீட்டு மருமக பொண்ணுதானே..” என தைரியத்தை வரவழைத்து, அந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன்னே எதிர்பக்கம் போன் கட்டாகியிருந்தது.
‘இந்தப் பணக்காரங்களே இப்படித்தான் போல, ஏதோ இவர் கொஞ்சம் நல்லமாதிரி, மனசாட்சியோட நடந்துப்பாருன்னு நினைச்சு அந்த பெரிய மனுசனுக்கு கூப்பிட்டது தப்பா போச்சு. அவங்க புத்தியைக் காட்டிட்டாங்கள்ல’ என நினைத்தவர், படுத்திருந்த அபியைப் பார்க்க, அவளும் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் பேசியது அனைத்தையும் கேட்டிருப்பாள் என்பது அவள் முகத்தில் தெரிந்த வலியிலே புரிய, “என்ன அபிம்மா இது. உடம்ப பார்த்துக்க வேண்டாமா. பாரு ஒரு நேரம் சாப்பிடாம விட்டு எவ்வளவு பெரிய பிரச்சினையை இழுத்து வச்சிருக்க, ஒன்னும் இல்ல, சின்ன சர்ஜரி செஞ்சா போதுமாம், சரியாகிடும் சொன்னாங்க.” என்றவரிடம்,
வலிய புன்னகைத்தவள், ”ரொம்ப தேங்க்ஸ் சார், இனி நான் மேனேஜ் பண்ணிப்பேன், நீங்க கிளம்புங்க, வீட்டுல எல்லாரும் பயந்துக்க போறாங்க..” என தன் இயலாமையைக் காட்டாமல் பேச,
“நான் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன் அபிமா. நீ ரெஸ்ட் எடு. நான் உனக்கு குடிக்க வாங்கிட்டு வரேன்..” என நழுவப் பார்க்க,
“ஸார் ப்ளீஸ்.. நீங்க கிளம்புங்க, இனி நான் மேனேஜ் செஞ்சிப்பேன். என்னால உங்களுக்கும் பிரச்சினை ஆகிடும் ப்ளீஸ்..” எனக் கெஞ்ச,
“அய்யோ அபி என்னம்மா நீ.. அதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை. அப்படியே ஆனாலும் அதை நான் பார்த்துக்குவேன். நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என அவளை அடக்க,
“ப்ளீஸ் சார், கிளம்புங்க. இனி என்னோட பெர்சனலை யாருக்கிட்டயும் பேசாதீங்க.. முக்கியமா அவங்க வீட்டு ஆட்கள்கிட்ட” என முணுமுணுக்க, அதில் என்ன கண்டாரோ “ஸாரிம்மா..” என்றவர் அந்த அறையை விட்டு வெளியில் வர, அதற்காகவே காத்திருந்தது போல, அவனை முறைத்துக்கொண்டு வெளியில் நின்றிருந்தான் எம்டி என்ற அமன்.
சுயம்புவைப் பார்த்து “கிளம்புங்க” என்றுவிட்டு, அறைக்குள் நுழைந்தவன், அபியின் சோர்வான முகத்தைப் பார்த்து, திருப்தியடைந்தவனாக “என்ன ஆறு மாசத்துக்குள்ள அடுத்தவனைப் பிடிச்சாச்சா..” என நக்கலாகக் கேட்டபடியே அவளுக்கு எதிரில் வந்து நின்றான் அவன். அவளின் கணவன் என்று சொல்லப்படுபவன். இதுவரை நம் கதையில் அவன் அவன் என்றழைக்கப்பட்ட ஈசன் கார்த்தீசன்.
எதிரில் நின்றவனின் வார்த்தையில் இன்னும் ஏன் தான் உயிரோடு இருக்கிறோம் என்ற எண்ணம்தான் அபிக்கு. ஆனால் அவன் பேசுவதெற்கெல்லாம் சாக வேண்டும் என்றால் ஒரு நாளில் பலமுறை செத்திருக்க வேண்டுமே. அதனால் அதை வெளிக்காட்டாமல்,
அவனை நேர்கொண்டு பார்த்தவள், “அப்படியே இருந்தாலும் அதைப்பத்தி உங்களுக்கு என்ன.? இது ஒன்னும் உங்க ஆஃபிஸ் இல்ல. உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு அவசியமும் இல்ல.” என்றவளை கண்கள் இடுங்க பார்த்தவன், ஆங்காங்கே ரத்தத் திட்டுக்களுடன் மருந்து கட்டப்பட்டிருந்த அவளது இடதுகாலைப் பிடித்து அழுத்த ஆரம்பித்தான்.
இப்படி செய்வான் என்று எதிர்பாராதவள், “அய்யோ அம்மா.. அய்யோ கார்த்தி ப்ளீஸ் விட்டுடு.. வலிக்குது கார்த்தி..” எனக் கதற,
“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது. ம்ம் என்கிட்ட இப்படி பேசுவியா, பேசுவியா. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்க்.. பேசுவியா” எனத் தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தத்தைக் கூட்டி, அரக்கனாகவே மாறிக் கத்தியவனைப் பார்த்து அபியின் கண்கள் மேலே செறுகியது.
“ஏய் கார்த்தி என்ன பன்ற..” என அப்போதுதான் உள்ளே வந்த அவனது அண்ணன் புவனேஷ், கார்த்தியின் கையை அபியின் காலில் இருந்து தட்டிவிட, உயிர் போன வலியை உணர்ந்தவள் அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்.
“முட்டாள்.. முட்டாள் அடி முட்டாள். என்ன காரியம் பண்ணிட்டு இருக்கடா. அரக்கனா மாறிட்டியா.? ஒருத்தவங்களோட வலியில சந்தோசப்படுற நீயெல்லாம் மனுசனே இல்ல. அரக்கன்தான். அரக்கனோட குணம் வந்துடுச்சுடா உனக்கு..” என புவன் கத்த,
“புவன் கொஞ்ச நேரம் சும்மா இருங்க, மறுபடியும் அபியை எதுவும் செஞ்சிட போறான்” என அவனது மனைவி பவி1 என்ற பார்கவி, மருத்துவரை அழைக்க வெளியில் ஓட,
“அப்படி மட்டும் செய்யட்டும், அவனைக் கொன்னுடுவேன் நான்..” என புவன் எகிறிக் கொண்டு போக,
“அத்தான் கொஞ்சம் அமைதியா இருங்க, இப்போ நமக்கு அபிதான் முக்கியம். இனி இவங்க இஷ்டப்படி எல்லாம் விடமுடியாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை. அபி டிஷ்சார்ஜ் ஆகி நம்ம வீட்டுக்குத்தான் வரப்போறா..” என புவனேஷின் தம்பி மாதேஷின் மனைவி பவி2 என்ற பைரவி சொல்ல,
“ஏண்டி தேர இழுத்து தெருவுல விடுற.. முதல்ல அவன் சீன் எல்லாம் முடிஞ்சி கிளம்பட்டும். அடுத்து நாம என்ன பண்ணலாம்னு யோசிப்போம். அவன் இருக்கும் போது வாயைத் திறக்காத..” என மனைவியின் காதில் ஓதிய மாதேஷை முறைத்துப் பார்த்தாள் பைரவி.
“நீங்களும் பேசமாட்டீங்க, பேசுறவங்களையும் விடமாட்டீங்க அப்படித்தானே, என்னத் தப்பு செஞ்சா அந்த பொண்ணு, இதோ நிக்கிதே இந்த மலமாடு இதை லவ் பண்ணதைத் தவிர வேற என்ன தப்பு பண்ணா. அவளுக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுக்க இவன் யாரு. இனி இவன் அபி மேல கை வச்சான், டொமஸ்டிக் வைலன்ஸ்ல கேஸ் ஃபைல் செஞ்சி உள்ளத் தள்ளிடுவேன் ராஸ்கல்..” என ஏகத்துக்கும் எகிற, ‘அய்யோ இந்த சில்வண்டு வேற, அப்பப்ப அவன்கிட்ட நானும் வக்கிலுன்னு பெர்ஃபாமன்ஸ் பண்ணி நோஸ்கட் வாங்கிட்டு வரும்’ என மனைவியை அடக்க முடியாமல் மனதுக்குள் நொந்து கொண்டிருந்த மாதேஷைக் காப்பாற்றுவது போல பார்கவியுடன் உள்ளே வந்த மருத்துவர் அபியின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனார்.
Last edited: