நதி - 03
உள்ளே வந்த மருத்துவர் அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான், அடுத்த நொடி அனைவரையும் வெளியே அனுப்பிவிட, கார்த்திக் மட்டும் ‘நான் ஏன் போக வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அங்கேயே நின்றான் திமிராக. அபிராமிக்கு முதலுதவியை செய்துவிட்டு, தன் உதவியாளரிடம் “சிஸ்டர் இந்த பேஷன்ட்ட பார்க்க யார் வந்தாலும், என்னைக் கேட்காம அலோவ் பண்ணாதீங்க, முக்கியமா மிஸ்டர் கார்த்திக்கை..” என அவனைப் பார்த்துக் காட்டமாகச் சொல்லிவிட்டு வெளியேற, துவண்ட கொடியாகக் கிடந்த அபியைப் பார்க்க அந்த செவிலியருக்கே பாவமாகத்தான் இருந்தது.
வெளியில் வந்த மருத்துவரை மொத்த குடும்பமும் சூழ்ந்து கொள்ள, “அவங்களுக்கு சர்ஜரி பன்ற ஐடியா இல்லைன்னா, நீங்க நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் செய்துகோங்க, இங்க வந்து இவ்ளோ வைலன்ஸ் இருக்கக்கூடாது..” என்று மீண்டும் பின்னோடு வந்த கார்த்திக்கைப் பார்த்து முறைத்துவிட்டு போய்விட்டார்.
இவன் என்ன சொல்வானோ என அங்கிருந்த அனைவரும் கார்த்திக்கையேப் பார்க்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் “நீங்க என்ன வேனும்னாலும் செய்துகோங்க, எனக்கு அதைப்பத்தி ஒன்னுமில்ல. ஆனா அவ என் வீட்டுக்கு வரக்கூடாது, அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல. சேதாரத்துக்கும் சேர்த்துதான். இல்லை, நாங்க கூட்டிட்டு தான் வருவோம்னு அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தா, என்னை மறந்துடுங்க. அப்படியே அவளையும்.” என்ற கார்த்திக், தன்னை முறைத்த பைரவியைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு கிளம்பிவிட்டான்.
அதற்குள் புவனேஷும், பார்கவியும் மருத்துவரிடம் சர்ஜரிக்கு சரியென்று சொல்லிவிட, அதற்கான வேலைகள் வேகமாக நடந்தது. அப்போது தான் மற்றொரு ஜோடியான ருத்ரேஷும் அவனது மனைவியுமான பவி3 என்ற சாம்பவியும் அவசர அவசரமாக வந்தனர்.
“என்னடா இந்த கார்த்திக். கூப்பிட கூப்பிட கவனிக்காம போயிட்டு இருக்கான். இவன் திமிரு குறையவே குறையாதா..?” என கார்த்திக் கண்டுகொள்ளாமல் சென்றதை வைத்து ருத்ரேஷ் கடுப்பாகக் கேட்க,
“என்னமோ அவர் மட்டும்தான் திமிரா இருக்குற மாதிரி பேச்சப்பாரு, உங்க குடும்பத்துல எல்லாருமே அப்படித்தானே,” என முணுமுணுத்த மனைவியை ருத்ரேஷ் முறைக்க,
“க்கும் இது மட்டும் தான நமக்கு.” என அதையும் வாய்க்குள்ளே முணுமுணுத்துவிட்டு பைரவியின் அருகில் போய் நின்று கொள்ள,
“ம்ச் இங்க வந்தும் உங்க ரெண்டு பேருக்கும் சண்டைதானா, அப்படின்னா வீட்டுலையே இருந்திருக்க வேண்டியது தானே,” எனத் தம்பியையும், தம்பி மனைவியையும் திட்டிவிட்டு, “ச்சே இவன் ஏன்டா இப்படி இருக்கான்,” எனத் தலையைக் கோதிக் கொண்டான் புவனேஷ்.
“விடு புவன், அவனைப்பத்தி தெரியும் தான. அபிக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு..” என ருத்ரேஷ் கேட்க,
“நேத்து பார்ட்டினு எல்லாரும் கடைல இருந்து சீக்கிரமே போயிட்டாங்க போல, அபிக்கிட்ட யாரும் சொல்லாம போகவும், அவளுக்கும் தெரியல. வழக்கம்போல நைட் லேட்டா போயிருக்கா, காலையில் இருந்து சாப்பிடாம வேற இருக்கவும், மயங்கி விழுந்திருக்கா. நடந்து போய்ட்டு இருக்கும் போது இவ விழுவான்னு தெரியாதே, பின்னாடி வந்த கார் கால்ல ஏறிடுச்சு. நல்லவேலை அந்த கார் சடனா கவனிச்சு ஓரமா போனதால இதோட போச்சு.. இல்லைன்னா நசுங்கி போயிருக்கும்..” என்ற புவனின் பேச்சில் எல்லாருக்குமே அபியை நினைத்து வருத்தமும் கவலையும் உண்டானது.
ஆனால் பைரவிக்குத்தான் கார்த்திக்கின் மேல் இருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை, எப்படி கொஞ்சமும் இரக்கமே இல்லாமல், அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான் என மனதுக்குள் குமைந்து போயிருந்தாள்.
ஏனென்றால் அவளை இடித்துவிட்டு போனதே அவன்தானே. அதை அவன் வேண்டுமானால் எல்லோரிடமிருந்தும் மறைக்கலாம், ஆனால் அவனின் காருக்குப் பின்னே வந்த காரில் இருந்த அவளுக்குத் தெரியுமே.
முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் இருக்குமிடம் உணர்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். இப்போது இதை யாரிடமும் அவளால் சொல்லமுடியாது. முதலில் அபிராமி சரியாகி, அவள் என்ன முடிவெடுக்கிறாள் என்றுத் தெரிய வேண்டும். அதன் பிறகே இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவளுக்கு அபியை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
‘எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டியவள் ப்ச், தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டவளை என்ன சொல்ல’ பெருமூச்சுதான் கிளம்பியது.
அப்போது ருத்ரேஷின் மொபைல் அடிக்க, எல்லோரும் அவனையேப் பார்க்க, “தாத்தா தான், இவன் அங்க போய் எதுவும் வில்லங்கம் செஞ்சி வச்சிட்டானோ என்னமோ’ எனப் புலம்பியபடியே போனை எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லுங்க தாத்தா..” என்றவனிடம், “நம்ம கார்த்தி சொல்றது உண்மையா.? அந்த பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்னு சொன்னீங்களாம். அப்படி ஒரு முடிவு நீங்களா எப்படி எடுக்கலாம், அப்போ இந்த வீட்டுல நான் யாரு.? என்கிட்ட கேட்காம நீங்களா எப்படி ஒரு முடிவு எடுப்பீங்க. கார்த்தி சொன்னது தான் நானும் சொல்றேன், அந்த பொண்ணு இங்க வரக்கூடாது. எல்லாம் முடிஞ்சா விட்டுட்டு எல்லாரும் வீடு வந்து சேருங்க..” என இவன் பேசக்கூட நேரம் கொடுக்காமல் வைத்துவிட்டார் சிவனேசன்.
அவர் பேசியதை மற்றவர்களுக்கு சொல்ல, “உங்க தம்பிக்கு எங்க இருந்து இவ்ளோ தைரியம் வருதுன்னு இப்போ புரிஞ்சிகோங்க. சின்னவங்க தப்பு செஞ்சா சொல்லித் திருத்தனும். அதைவிட்டுட்டு எல்லாத்துக்கும் கூட சேர்ந்து கோரஸ் போடக்கூடாது உங்க தாத்தா மாதிரி” என்ற பைரவியை எல்லோரும் யோசனையாகத்தான் பார்த்தார்கள்.
பொதுவாக பைரவி எல்லாத்திலும் முன்னே நிற்பாள்தான். அதிலும் தப்பென்று வந்தால் யாரையும் வைத்து பார்க்காமல் பேசிவிடுவாள்தான். ஏன் இதோ உள்ளே இருக்கும் அபிராமியைக் கூட அப்படி பேசியவள்தான். ஆனால் இப்போது அந்த கோபத்திற்கும் மேலே எதுவோ அவளிடம் இருப்பது போல் தோன்றியது.
‘என்னாச்சு இவளுக்கு’ என்றுதான் எல்லோருடைய பார்வையும் இருந்தது.
“பையு ரிலாக்ஸ்.. ஏன் இப்படி ரியாக்ட் பண்ற, கொஞ்சம் அமைதியா இரு. அவர் சொன்னா சொல்லிட்டுப் போகட்டும் அதை எல்லாம் இன்னும் கேட்டுட்டு இருக்க முடியாது. நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு. உனக்கு இங்க இருக்க கஷ்டமா இருக்கும்..” என்ற பார்கவியிடம்,
“இருக்கட்டும் பாரு. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்..” என்றவளிடம்,
“நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா உள்ள இருக்குற பாப்பா அட்ஜஸ்ட் ஆக மாட்டா.. கிளம்பு முதல்ல..” என சாம்பவியும் சொல்ல, ஆண்கள் மூவரும் அதையே சொல்ல,
“சரி நான் போறேன், ஆனா இங்க என்ன நடந்தாலும் எனக்கு உடனே சொல்லனும்..” என்று மாதேஷோடு கிளம்ப, வீட்டில் சிவனேசனைச் சுற்றி அவரது இரண்டு மகன்களும், மருமகள்களும் யோசனையாக நின்றிருக்க, அவர்களை கிண்டலாகப் பார்த்தபடி சிவனேசனின் அருகில் திமிராக அம்ர்ந்திருந்தான் கார்த்தி.
சிவனேசன் அவர் மனைவி பார்வதி, அவர்களுக்கு இரண்டு ஆண்கள் மூத்தவர் மகேஸ்வரன் அவர் மனைவி அம்பிகா. அவர்களுக்கு புவனேஷன், அடுத்து கார்த்தீசன் என்று இரு ஆண்கள். பூமதி என்று ஒரு பெண்.
அடுத்தவர் ஜெகதீஸ்வரன் அவர் மனைவி பவானி. அவர்களுக்கு மூத்தவன் ருத்ரேஷ், அடுத்து மாதேஷ் என இரண்டு ஆண்கள் மட்டும். மொத்த குடும்பத்திற்கும் ஒரே பெண்ணாக கடைக்குட்டி பூமதி. அந்த வீட்டின் மகாலட்சுமி என்று அவள் பிறந்ததில் இருந்து கொண்டாடுபவள்.
ஆரம்பத்தில் சிவனேசனின் குடும்பம் சாதாரன மிடில் கிளாஸ் குடும்பமாகத்தான் இருந்தது. அவரது அப்பா வீட்டிலேயே ஒரு பெட்டிக்கடையை வைத்திருக்க, சிவனேசன் தலையெடுத்த பிறகு அது மளிகைக்கடையாக மாறியது.
பின் அவர் பிள்ளைகள் அந்த இடத்தை விஸ்தாரமாக்கி கொஞ்சம் பெரிது செய்ததுடன், பக்கத்து ஊரான பெரியகுளத்திலும் சிறிதாக ஆரம்பித்தனர். அப்படியே தேனியை சுற்றிலும் அவர்களது ஈசன் மார்க்கெட் வளர, அவர்களது பிள்ளைகளும் சொந்தத் தொழிலில் இறங்கியதுடன் அதை தமிழ்நாடு மட்டும் இல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் கர்நாடகாவிலும் கிளைகளைப் பரப்பினர்.
ஈசன் மளிகை, ஈசன் மார்க்கெட்டாகி, பின் ஈசன் சூப்பர் மார்க்கெட்டாக, மாலாக மாறி நின்றாலும், சிவனேசனுக்கு வெளிநாட்டிலும் ஈசனை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இருக்க, இதில் திருப்தி அடையவில்லை..
என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்க, அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல கார்த்திக்கிற்கும் அந்த எண்ணம் உருவாக, முதலில் இலங்கையில் தொடங்கிப் பின் சிங்கப்பூர் மலேசியா என ஈசன் பறக்க ஆரம்பிக்க, தன் கனவை நனவாக்கிக் கைக்குள் கொண்டு வந்த கடைசி பேரனிடம் சிவனேசனுக்கு எப்போதும் பாசம் அதிகம். அவன் கேட்டு இல்லையென்று எதையும் அவர் சொன்னதில்லை.
அபியும் அதில் உண்டு. ஒரு நாள் அபி வேண்டும் என்று வந்து நின்றான். திருமணம் செய்து வைத்தார். ஒருநாள் அவள் வேண்டாம் என்றும் வந்து நின்றான். விவாகரத்து வாங்கிக் கொடுத்தார். அவனிடம் மட்டும் ஏன் எதற்கு என்ற கேள்விகள் அவருக்கு இருக்காது. அப்போதும் சரி, இப்போதும் சரி.
“மகேஷா நம்ம கார்த்திக்கு ஒரு இடம் வந்திருக்கு. விசாரிச்ச வரைக்கும் நல்ல இடம்தான். நீங்க நாலு பேரும் பேசிட்டு சொல்லுங்க ஒரு நல்ல நாளாப் பார்த்து, பொண்ணு வீட்டுல போய் பேசிட்டு வரலாம்..” என்றவரை முறைத்துப் பார்த்தார் பார்வதி.
“என்ன பேசுறீங்க. இப்போ யாரு இவன் ஜாதகத்தை வெளியில் எடுத்தது, அம்பிகா நீ எடுத்துக் கொடுத்தியா, பவானி நீ எடுத்துக் கொடுத்தியா.? யார் இந்த வேலையைப் பார்த்தது..” என கணவரிடம் ஆரம்பித்து, மருமகள்களிடம் கோபமாகக் கேட்க,
“அவங்க யாரும் எடுத்து கொடுக்கல, நான்தான் எடுத்து கொடுத்தேன். இப்ப என்ன பாட்டி. எனக்கு அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு. நான்தான் தாத்தாக்கிட்ட சொன்னேன்.. நான் பொண்ணைப் பார்த்துட்டேன், நீங்களும் போய் பேசிட்டு, பார்த்துட்டு வாங்க” எனக் கார்த்தி பார்வதியிடம் திமிராகப் பேச,
“ஓ.. உனக்குப் பிடிச்சிருக்கா அப்போ சரி. கண்டிப்பா போய் பேசிட்டு வரலாம். கையோட உனக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்தானே அந்த இத்துப்போன வக்கீலு அவனையும் கூப்பிட்டு போலாம். அடுத்து அவனும் தேவைப்படுவான்ல” என அவனைப் போலவே திமிராகப் பேசி, நான் உனக்கு பாட்டிடா என நிரூபித்தவர், கணவனிடம் திரும்பி
“அவனுக்குத்தான் அறிவில்ல, சின்னப்பையன். உங்களுக்கு எங்க போச்சு மூளை. இந்த முட்டாள் சொன்னான்னு, எங்க யாரையும் கேட்காம ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்தீங்க, அடுத்து என்ன நடந்ததோ எவ்வளவு கீழ்த்தரமா பேச முடியுமோ பேசி அவளை அனுப்பியும் வச்சீங்க. இப்போ அவளுக்கு என்ன வழி சொல்வீங்க. இவன் இஷ்டத்துக்கு ஆட இங்க யாரும் ஆள் இல்லை. அந்த பொண்ணைக் கூப்பிட்டு வந்து பொழைச்சா பொழைக்கட்டும், இல்ல இப்படியே சுத்தட்டும். அதை விட்டுட்டு பொண்ணு பார்க்குறேன் புடலங்கா பார்க்குறேன்னு கிளம்பினா அடுத்து நீங்க என்னை மண்ணுலதான் பார்ப்பீங்க..” என, “ம்மா, அத்தை, அய்யோ, என்னம்மா, என்னத்த..” என்ற மற்றவர்களின் அதிர்ச்சியைக் கண்டு கொள்ளாமல், தன் அத்தனை நாள் கோபத்தையும் அவரிடம் காட்டிவிட்டு அறைக்குள் போய்விட, அவருக்குப் பின்னே மகன்களும், மருமகள்களும் ஓட, இடிந்து போய் அமர்ந்துவிட்டார் சிவனேசன்.
பார்வதி தன் கோபத்தை, எதிர்ப்பை காட்டுவார் என்று தெரியும். ஆனால் உயிரை விட்டு விடுவேன் என்றெல்லாம் பேசியது, நிஜமாகவே அந்தப் பெரிய மனிதருக்குப் பயத்தைத்தான் கொடுத்தது.
உண்மைதான் பார்வதி சிவனேசனுக்கு பயத்தைக் காட்டிவிட்டுத்தான் போனார். ஒரு பெண்ணின் வாழ்க்கை இவர்களுக்கு அத்தனை இளப்பமாகப் போய்விட்டதா என்ற எண்ணம் தான் பார்வதிக்கு.
அதிர்ச்சியில் இருந்த தாத்தாவை ஒரு பார்வைப் பார்த்தவன், தன் கார்கீயை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் சென்றான்.
உடலும் உள்ளமும் அவனுக்கு நடந்த துரோகத்தை நினைத்து எரிந்தது. எத்தனை எத்தனை ஆசைகளோடும், கனவுகளோடும் அவளைத் திருமணம் செய்திருப்பான். அதெல்லாம் வெறும் மூன்றே மாதத்தில் முடிந்து கானாலாகிப் போகும் என்று கனவில் கூட நினைத்தது இல்லையே.
அவள் செய்த துரோகம் அந்த நாள் இப்போதும் கண் முன்னே நிழற்படமாக ஓட, அதைத் தாங்கமுடியாமல், காரின் வேகத்தைக் கூட்டினான்.
இங்கு “முரளி இன்னும் அபி போன் செய்யல, அவ போனும் போகல, ஹவுஸ் ஓனருக்கு கூப்பிட்டா, இன்னும் வீட்டுக்கு வரலன்னு சொல்றாங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு முரளி. கொஞ்சம் உங்க ஃப்ரண்ட்ஸ் வச்சு விசாரிங்களேன்..” என்ற மனைவியைத் தீர்க்கமாகப் பார்த்தவன்,
“என் பேச்சைக் கேட்காம அவன்தான் வேனும்னு போனா இல்ல, அனுபவிக்கட்டும். எவ்வளவு அசிங்கப்பட்டிருப்போம், அவமானப்பட்டிருப்போம், அவன் எப்படியெல்லாம் நம்ம அபியை பேசினான். அதெல்லாம் மறக்கக்கூடியதா சொல்லு. ஆனா மறந்துட்டு அவன்தான் வேனும்னு போயிருக்கா. என்னை மீறி போனவளை நான் ஏன் தேடனும். அவளே வருவா..” என்ற கணவனின் பேச்சில் அமைதியாகப் பார்த்தாள் மனோகரி.
“முரளி என்ன நடந்திருந்தாலும், அவ உங்க தங்கை என் ப்ரண்ட். அவளை அப்படியெல்லாம் விடமுடியாது. அபி போய் ஆறு மாசமாச்சு. எப்படி இருக்கா, என்ன பன்றா எதுவும் நம்மக்கிட்ட சொல்லல, அவ உதவின்னு கூப்பிடுற தூரத்துலயும் நாம இல்லை. முதல்ல உங்க ப்ரண்ட்ஸ் மூலமா விசாரிங்க, அடுத்து சென்னைக்கு எப்போ ப்ளைட்டுன்னு செக் செஞ்சி எங்க மூனு பேருக்கும் டிக்கட் போடுங்க,” என தனக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் டிக்கட் போடுமாறு மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றவளையே யோசனையாகப் பார்த்தான் முரளி.
அவனுக்கு மட்டும் தன் உயிர் தங்கையை அப்படியே விட்டுவிடும் எண்ணமா என்ன.? ஆனால் அவள் சென்றது ஒரு அரக்கனிடம். தங்கையிடம் இருக்கும் மிச்சம் மீதி உயிரையும் எடுத்துவிட்டுத்தானே மறுவேலைப் பார்ப்பான். அதனால்தானே போகவே வேண்டாம் என்று அவ்வளவு தூரம் சொன்னான். மனம் இப்போது தங்கையை மிகவும் தேடியது. அவனுக்கும் இப்போது அவளது நலனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தனக்கும் சேர்த்தே டிக்கட் போட்டுவிட்டு, தன் நண்பன் ராகவிற்கு அழைத்தான்.
மனோ எண்ணியது போலவே, அபி சாலையில் நடந்து செல்லும் போது அவளின் உயிரை எடுத்துவிட்டால் தான் என்ன என்ற எண்ணம் நொடியில் தோன்றத்தான் காரை அவளை நோக்கிச் செலுத்தினான். ஆனால் அதற்குள் அவளே மயங்கி சரியவும் தான் ஓவர்டேக் செய்து ஓரமாக சென்றது. ஆனால் அவனே கவனிக்கவில்லை காலில் டயர் ஏறி இறங்கியதை.