நதி - 04
“என்ன முரளி இந்த நேரத்துல..” என்ற ராகவின் குரலே அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்று சொல்ல,
“சாரிடா. டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன், அபி இன்னும் வீட்டுக்கு வரலையாம், கால் செஞ்சாலும் அட்டெண்ட் செய்யல, மனோ கொஞ்சம் பயந்துட்டா, அதான் டைம் பார்க்காம..” என முரளி சங்கடமாகப் பேச,
“டேய் உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது, இப்படியெல்லாம் தயங்கி பேசாதன்னு, இரு நான் விசாரிச்சிட்டு பேசுறேன். இன்னைக்கு அங்க லேபர்ஸ் எல்லாருக்கும் விருந்துடா. அதனால அபியும் போயிருக்கலாம். லேட்டாகிருக்கும். இருந்தாலும் நான் ஒரு டைம் சுயம்பு சார்கிட்ட கேட்டுடுறேன்..” என்ற ராகவ் உடனே சுயம்புவிற்கு அழைத்து கேட்க, அவருக்கும் ராகவிற்கும் சில வருடங்களாக நல்லப் பழக்கம் என்பதால் மறைக்காமல் அனைத்தையும் சொல்லிவிட, கார்த்தியின் மேல் ஏகத்திற்கும் கோபம் பொங்கியது.
ஆனால் தன் பதிலுக்காக நண்பன் காத்திருப்பான் என்பதை உணர்ந்த ராகவ், முரளிக்கு அழைத்து, “முரளி பயப்பட ஒன்னுமில்ல, அபிக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட், கால்ல லேசான காயம். ஹாஸ்பிடல்ல இருக்காங்க, கூடவே சுயம்பு சாரும் இருக்கார். நீ மனோக்கிட்ட எதுவும் சொல்லாத, அபியோட போன் மிஸ்ஸிங்க் போல, நான் சுயம்பு சார் நம்பர்ல இருந்து பேச சொல்றேன். முடிஞ்சா நீ இங்க வந்துட்டுப்போ. நீயும் போய் ரெண்டு வருஷம் ஆகிடுச்சு இல்ல.” என்ற ராகவிடம்,
“பெருசா ஒன்னும் இல்லையே ராகவ். இல்ல எங்கிட்ட மறைக்கிறியா, சொல்லு ராகவ்..” எனப் பதட்டமாகக் கேட்க,
“முரளி நிஜமாவே சின்ன காயம்தான், நீ பயந்து உன் வைஃபையும் பயப்பட வைக்காத. நீ ஒன்ஸ் தேனி வந்துட்டுப் போ, அப்போதான் உனக்கும் பயம் போகும்..” என்ற ராகவிடம்,
ம்ம் ஆமா ராகவ், மனோவும் சொல்லிக்கிட்டேதான் இருக்கா. இந்த வீக் டிக்கெட் கிடைக்கல, அடுத்த வீக்கென்ட் அங்க இருக்குற மாதிரி வந்துடுறோம். உனக்கு முடிஞ்சா யாராச்சும் ரெண்டு பேரை வச்சு வீட்டை க்ளீன் செய்துடுறியா..” எனவும்,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் முரளி. சபரியும் தானே கூட அழைச்சிட்டு வரனும். சபரி பத்தி கார்த்திக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆகிடப்போகுது. இன்னும் இன்னும் அபியை டார்ச்சர் செய்வான்டா.. நீ மட்டும் வந்துட்டு போகலாமே..” என,
“பொண்டாட்டியை வச்சு பொழைக்கத் துப்பில்லாதவன் எல்லாம் பேசக்கூட அருகதை இல்லாதவன், அப்படி மட்டும் நடக்கட்டும், அவன் சாவு என் கைலதான்..” என கோபத்தில் கத்திய முரளியை ஒருவழியாக சமாதானம் செய்து போனை வைத்த ராகவிற்கு அபியையும் தெரியும், அவள் வாழ்க்கையில் நடந்து முடிந்த இருண்ட பக்கங்களும் தெரியும்.
தெரிந்தால் மட்டும் அவனால் என்ன செய்துவிட முடியும். ஒரு பெருமூச்சுத்தான் கிளம்பியது. சுயம்புலிங்கத்திற்கு அழைத்து அபியின் நலன் பற்றி அடிக்கடி தன்னிடம் கூறுமாறு மட்டும் சொல்லிவிட்டு வைத்தான்.
அபிராமிக்கு சர்ஜரி முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. இப்போது அவளை நார்மல் வார்டிற்கு ஷிஃப்ட் செய்திருக்க, பார்கவியும், சாம்பவியும் பகல் இரவு என மாறி மாறி உடனிருக்க, பைரவி மட்டும் தினமும் மாலையில் வந்து பார்த்துவிட்டுச் சென்றாள்.
ஒரே அறையில் இருந்தாலும், தேவைக்கு அதிகமாக நால்வரும் பேசிக்கொள்ளவே இல்லை. அதிலும் சாம்பவியால் சிறிது நேரம் கூட வாயை மூடி இருக்க முடியாது. சரியான வாயாடி. அவள் வாயைத் திறக்காமல் அமைதியாக இருப்பதே, தன்மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்று அபிக்கு புரியாமல் இல்லை.
ஆனால் என்ன பேச, சொல்ல. பேச வேண்டும் என்றால் ஆதியிலிருந்து அந்தமாய் அனைத்தையும் சொல்ல வேண்டும். அதில் கார்த்தி அவள் மேல் சுமத்திய பழியையும் சேர்த்து. அதை எப்படி இவர்களிடம் சொல்லமுடியும். எப்படியெல்லாம் ஆரம்பித்த வாழ்க்கை, தன்னையும் மீறி வெளியேறிய கேவலை என்ன முயன்றும் அடக்க முடியவில்லை.
அதைக் கவனித்த சாம்பவிதான், “அபி.. அபி என்னம்மா வலிக்குதா.? டாக்டரைக் கூப்பிடவா.? பாருக்கா சீக்கிரம் வாங்க, அபிய அழறா.?” என பாத்ரூமில் இருந்த பார்கவியையும் அழைக்க, அவளும் பதட்டத்துடனே வர,
இவர்களின் பதட்டத்தில் மேலும் மேலும் அழுகைக் கூடியதே தவிர குறையவில்லை. ஒரு கட்டத்தில் அவள் வலிக்காக அழவில்லை என்று புரிய, அவளது முதுகை வருடியபடியே நின்றிருந்த மூவரின் கண்களிலுமே கண்ணீர்தான்.
சில நிமிடங்களில் அழுகையைக் கட்டுப்படுத்தியவள், “ஸாரிக்கா.. என்னால உங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம். எப்படியும் இதை வச்சு கார்த்தி வீட்டுல பிரச்சினை செஞ்சிருப்பார். அவர் பேச்சைக் கேட்டு தாத்தாவும் உங்களைத் திட்டுவார்.” என மென்று முழுங்கியவளின் முகத்தை தனக்கு நேராகத் திருப்பிய பைரவி,
“கார்த்தியோட கார்தான் உன்னை இடிச்சதுன்னு உனக்குத் தெரியும், ஆமாவா இல்லையா.” என அதட்ட,
“ம்ம்ம்..” என்றுத் தலையை மட்டும் ஆட்ட,
“ராஸ்கல், அப்படி இருந்தும் ஏன் அமைதியா இருந்த.? நீ கம்ப்ளைன்ட் கொடு. அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்..” எனக் கோபமாகக் கேட்க, மற்ற இருவருக்கும் இது புது செய்தி.
‘என்ன’ என அதிர, பைரவி தான் பார்த்ததை சொன்னவள், “நான் பார்டில இருக்கும்போது அபி வரலன்னு. சுயம்பு சார்கிட்ட கேட்கும்போதுதான் அவளுக்கு தெரியாதுன்னு சொன்னார். சரி கடைலதான் இருப்பா கூட்டிட்டி வரலாம்னு நான் போகும் போதுதான் இது நடந்தது. நான் உடனே சுயம்பு சாரை வரச்சொல்லி, ஹாஸ்பிடல்ல சேர்க்க சொல்லிட்டு, உங்கக்கிட்ட சொல்ல வீட்டுக்கு வந்தேன்,” எனவும்,
“ச்சே.. எப்படி மிருகமா மாறிட்டார் இந்த கார்த்திக் அத்தான். நாலு பேர்ல அவர் ஒருத்தர்தான் உறுப்படியா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்காருன்னு நினைச்சேன், ஆனால் அவருக்குள்ள இப்படி ஒரு அரக்கக்குணம் இருக்கும்னு நினைக்கவே இல்ல..” என்றாள் சாம்பவி.
“அபி.. நீயா சொல்லாம, நாங்க உங்கிட்ட கேட்கக்கூடாதுன்னு தான் நினைச்சோம், ஆனா நடக்குறதைப் பார்க்கும் போது, கார்த்திக்குக்கு உன்மேல இருக்குற கோபத்தைப் பார்க்கும் போது எதுவுமே சரியில்லாத மாதிரி இருக்கு. என்னதான் நடந்தது சொல்லு அபி,”
“நம்ம வீட்டுல இருந்து போகும் போது நீ கன்சீவா இருந்த எனக்குத் தெரியும். ஆனா அப்புறம் என்னாச்சு, குழந்தை என்னாச்சு. என்ன செஞ்சீங்க..” என வரிசையாகக் கேள்வியை அடுக்க,
அப்போதுதான் அவளுக்குமே சபரியின் நினைவு வந்தது, பைரபியிடம், “அக்கா உங்க போன் கொடுங்களேன், அண்ணி ரொம்ப பயந்துருப்பாங்க..” எனக் கேட்க, அவளும் யோசனையுடனே கொடுத்தாள்.
அடுத்து மனோகரியிடம் அபி பேசியதைக் கேட்டு மூவரும் மட்டுமல்ல, வெளியில் நின்றிருந்த புவனும், ருத்ரனும் கூட அதிர்ந்துதான் போனர்.
இங்கு கடையில் கார்த்தி கூறியது போல, ஈசன் சூப்பர் மார்க்கெட்டிற்கு இப்போது வேறு ஒரு பெண்ணை அக்கவுன்டன்டாக சேர்ந்திருந்தார் சுயம்புலிங்கம்.
அன்று மருத்துவமனையில் கார்த்தியின் பேச்சைக் கேட்டு மிகவும் வருந்தியவர் புவனிடம் வேலையை விட்டு நிற்பதாகச் சொல்ல, “என்ன சொல்றீங்க சுயம்பு, உங்களையா அப்படி சொன்னான்.?” என கோபமாகக் கேட்க,
“ம்ம்..” என்றவர் தயங்கி, தயங்கி அன்று கார்த்தி பேசியதை அப்படியே சொல்லிவிட, என்ன சொல்வது என்றுகூடத் தெரியவில்லை புவனேசனுக்கு. அவனும் அப்போதுதானே உள்ளே வந்தான். தம்பியின் பேச்சிற்காக தான் மன்னிப்புக் கேட்பதாக பேசி அவரை வேலையைத் தொடர வைத்தவன், வீட்டில் கார்த்தி இருக்கும் போதே சிவனேசனிடமும் சொல்லிவிட்டான்.
“தாத்தா இது என்னுடைய பொறுப்புல இருக்குற கடை, கொஞ்சநாள் அவன் பார்க்கட்டும் சொன்னீங்க, நானும் விட்டேன். அவ்வளவுதான். இங்க என்னோட முடிவுதான் கடைசி. என் ஸ்டாஃபை மரியாதை இல்லாம பேச இவனுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. இன்னொரு முறை கார்த்தி இப்படி நடந்துக்கிட்டா, அப்புறம் நான் பிசினஸ் விட்டு மொத்தமா தனியா போய்டுவேன்.” எனக் கராராகப் பேச,
“ஏய் என்ன பேசுற..” எனக் கார்த்தி எகிற
“டேய் என்னடா.. பேசுறீங்க. யார் யாருக்காகவோ பிசினஸை போட்டு ஏன் குழப்புறீங்க..” என பெரியவரும் காட்டமாகக் கேட்க,
“என்ன பேசுறீங்க, யார் யாருக்கோவா.? ஒருத்தி இந்த வீட்டு மருமக. இன்னொருத்தன் நமக்காக ஆரம்பத்துல இருந்து உழைச்சவன், சொந்த பிரச்சினையை பிசினஸ்க்கு கொண்டு வந்தது உங்க பேரன். முதல்ல அவன்கிட்ட இதெல்லாம் இருக்கக்கூடாதுன்னு சொல்லுங்க. எப்பவும் எங்களையே அடக்கிக்கிட்டு..” என்ற புவன் வெளியில் சென்றுவிட, பார்வதியோ கணவரை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“நீ ஏண்டி இந்த மூனு நாளா மனுசனை முறைச்சிக்கிட்டே இருக்க. வரவர உனக்கும் பயம் விட்டுப் போச்சு..” என மனைவியிடம் எகிற,
“முறைச்சு முறைச்சு பார்த்தா சீக்கிரம் கைலாசத்துக்கு போயிடலாம்னு சொன்னாங்க, அதான் உங்களை முறைச்சு அப்படியாவது சீக்கிரம் போய் சேரலாம்னு நினைக்கிறேன்.” என்ற மனைவியை,
“ஏன் பாருமா.. இப்படியே பேசிட்டு இருக்க, நீ இல்லன்னா நான் ஒன்னுமே இல்லடி..” என்ற வயதானவரின் குரலும் தளர்ந்துதான் போயிருந்தது.
காரணம் இந்த மூன்று நாட்களாக, கிடைக்கும் நேரமெல்லாம் தன் கோபத்தையும், ஆதங்கத்தையும் காட்ட, அவரும் தான் என்ன செய்வார்.
“என்ன பாட்டி நீயும் இப்படியே பேசுற, அப்போ அவ மேல தப்பு இல்லன்னு சொல்றியா.? எல்லாமே என் தப்பா..” என்ற கார்த்தியிடம்,
“சரி அப்போ அவ மேலத்தான் தப்புன்னா, என்ன தப்புன்னு சொல்லு. நாங்க வீட்டுல பெரியவங்கன்னு ஏன் இருக்கிறோம், எங்ககிட்ட சொல்லாம நீங்களா ஒரு முடிவு எடுப்பீங்களா.? அவ போய் இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ வரை என்ன பிரச்சினைன்னு சொல்லிருக்கியா.? சொல்லிருந்தா எங்க தப்புன்னு தெரிஞ்சி சரி செஞ்சிருக்கலாம், ஆனா நீங்க என்ன செஞ்சீங்க, நீங்களே ஒரு முடிவை எடுத்து, அவளை அனுப்பி, அவங்க அப்பாவை கொன்னு..” என வரிசையாக அடுக்க,
“போதும் இந்த பேச்சு..” என பெரியவர் அதட்ட,
“வேற என்னதான் பேச இந்த வீட்டுல, எப்பவும் உங்க முடிவுதானே, இப்போ மட்டும் ஏன் இந்த பேச்சு..” என்ற பார்வதி,
“நாமளும் ஒரு பொண்ணைக் கட்டிக் கொடுத்து தூரதேசம் அனுப்பிருக்கோம். அவ அங்க எப்படி இருக்காளோ, என்னமோ யாருக்குத் தெரியும். நாம ஒரு பொண்ணுக்கு செய்ற துரோகம், நாளைக்கு நம்ம பொண்ணுக்கே திரும்பி வந்தா என்ன செய்ய முடியும்..” என முடிக்கும் முன்னே
“ஏய் என்ன பேசுற, என் பேத்தியும் அவளும் ஒன்னா..” எனக் கத்தியவர், “இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசக்கூடாது. அந்த பொண்ணு பிரச்சினையில் இனி நான் தலையிடமாட்டேன். என்ன நடந்தாலும், நல்லது நடந்தாலும் சரி, கெட்டதே நடந்தாலும் சரி நான் பார்த்துட்டு சும்மாதான் இருப்பேன். இனி எங்கிட்ட எப்பவும் இதப்பத்தி பேசாத..” என்று கோபத்தில் கத்த,
அவர் கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் வந்துவிட, என்ன என்று எல்லோரும் பார்க்க, சிவனேசன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, பார்வதியோ அனைத்தையும் சொல்லிவிட, “பாட்டி இதுதான் கடைசி மதியைப் பத்தி பேசுறது. தகுதியில்லாத ஒருத்திக்காக நீங்க எல்லாம் பேசுறதைக் கேட்கும் போதும், பார்க்கும் போதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் தப்பு செய்வேனான்னு நீங்க யோசிக்கவே இல்லைதானே.” என்ற கார்த்தியிடம்,
“நீ தப்பு செய்யமாட்டன்னு நம்பினேன் ஒருகாலத்துல, ஆனா இப்போ இல்லை. மொத்தத் தப்பும் உன்னோடது மட்டும்தான். அபியை விரும்பினதுல இருந்து, அதை அவக்கிட்ட சொல்லாம, அவசரம் அவசரமா கல்யாணம் செஞ்சது வரை எல்லாமே உன்னோட தப்புத்தானே, நீ எப்படி தப்பு செய்யமாட்டியோ, அப்படித்தான் அவளும் தப்பு செஞ்சிருக்கமாட்டான்னு நான் நம்பறேன். அவ இந்த வீட்டுல இருந்த மூனு மாசமும் நான் பார்த்திருக்கேண். அவக்கிட்ட ஒரு சின்னத் தப்பைக்கூட நான் பார்த்தது இல்ல. பார்த்த எனக்கே தெரியும் போது, கூட இருந்த உனக்குத் தெரியாதா.? என்ன ஆம்பளைடா நீ.? ஒருவேலை எதுவும் பிரச்சினையில் இருந்தாளோ, அதை உங்கிட்ட சொல்ல முடியாம தவிச்சு, நீ அதை தப்பா புரிஞ்சிருக்கலாம் இல்லையா.. ”
“யோசி கார்த்தி, பழசையே பிடிச்சிட்டு தொங்காம, எங்க என்ன தப்பு நடந்ததுன்னு உக்காந்து யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.” என்ற பார்வதியை வெறித்துப் பார்த்தவன் கோபமாக வெளியேறிவிட்டான்.