நதி - 06
“என்ன சொல்றான் ருத்ரா அந்த குமார்..” என்ற மகேஸ்வரனிடம், “கார்த்தி அங்க வரவே இல்லையாம் பெரியப்பா. நமக்கு தெரிஞ்ச எல்லா இடத்துலையும் தேடியாச்சு, நம்ம பண்ணை வீட்டுக்கு கூட போயிட்டு வந்தாச்சு பெரியப்பா..” என சோர்வாக அமர்ந்தான் ருத்ரேஷ். இப்போது எல்லோரும் வீட்டில் கூடியிருந்தனர்.
மருத்துவமனையில் அபியைக் காணவில்லை என்றுத் தெரிந்ததும், “அபிராமி கூட இருக்கத்தானே உங்களை இங்க விட்டுட்டுப் போனாங்க, உங்களுக்கு இருக்கப் பிடிக்கலன்னா ஏன் வரீங்க. நானும் அவளைப் பார்த்தேன்னு எல்லோருக்கும் சொல்லனுமா, இல்ல அம்பிகா மருமகளை வந்து எட்டிக்கூடப் பார்க்கல, நான்தான் அவ மருமகளையும் பார்த்துக்கிட்டேன்னு பெரியம்மாவைப் பத்தி சொல்லி, உங்க பெருமையை பரப்பனுமா..” என ருத்ரன் தன் தாயை வைத்து விளாச,
பவானிக்கு முகமே இல்லை. அவரது எண்ணமும் அதுதான். ஆனால் அதை வெளிக்காட்டினால் வீட்டரசியல் வீதிக்கு வந்துவிடுமே, “ருத்ரா யாருக்கிட்ட பேசுறன்னு தெரியுதா, வாயை அடக்கிப் பேசு..” என மகனை அடக்கியவர், யாரையும் பார்க்காமல் ‘என்னமோ பண்ணுங்கடா, என்னை விட்டுடுங்க’ என்ற ரீதியில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அடுத்து உடனே மருத்துவமனை நிர்வாகத்தில் தெரிவித்து, சிசிடிவி கேமரா மூலம் பார்க்க, கார்த்திதான் அபிராமியை தோளில் தூக்கிக்கொண்டு போவது போல் வீடியோ இருந்தது. ஒழிந்து, மறைந்து, பயந்து எல்லாம் எதுவும் செய்யவில்லை கார்த்தி. மிகவும் கேசுவலாக, யாருக்கும் சந்தேகமே வராதபடி கடத்தியிருந்தான்.
அவனின் அந்த செயலே, ‘நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்றத் திமிரைக் காட்ட, பல்லைக் கடித்தனர் அனைவரும்.
உடனே தெரிந்த இடத்தில் எல்லாம் விசாரிக்க ஆரம்பிக்க, அதிலும் அவன் எஸ்டேட்டில் இருக்கிறேன் என்று சொன்ன அந்த வீட்டின் காவலாளிக்கும் போன் செய்து கேட்க, கார்த்தி அங்கு வரவே இல்லை என்று சொல்லிவிட, இனி வந்தால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வைத்த புவனுக்கு, கார்த்தியால் பெரும் தலைவலியாக இருந்தது.
கட்டிய மனைவியை காரை ஏற்றப் பார்த்தான், இப்போது கடத்திவிட்டான் என்பதைத் தான் அங்குள்ள யாராலும் நம்பவே முடியவில்லை. கார்த்தியிடம் இப்படி ஒரு குணமா..? யாராலும் ஏற்கவே முடியவில்லை.
அவர்கள் பார்த்த கார்த்தி இப்படிப்பட்டவன் அல்ல, கொஞ்சம் மூர்க்கக்குணம் உண்டுதான். அதுவும் அது வீட்டில் மட்டும்தான் காட்டுவான். வெளியில் அதை யாரிடமும் இதுவரை காட்டியதில்லை. ஆனால் இப்போது.?
“அடுத்து என்ன பண்ணலாம் புவன்?” என்ற ருத்ரனிடம்,
“போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்..” என்று பட்டென்று சொன்ன பைரவியை எல்லோரும் முறைக்க, “கொஞ்ச நேரம் சும்மா இரு பவி.. பெரியவங்க பேசட்டும்..” என மாதேஷ் மனைவியை அடக்க, அந்த பேச்சுக்கு அமைதியானலும், கணவனை முறைக்கத் தவறவில்லை பைரவி.
“அப்பா நீங்க சொல்லுங்க, என்ன பண்ணலாம். கார்த்தியை இப்படியே விடமுடியாது. அந்த பொண்ணை எதாச்சும் பண்ணிட்டா, பிரச்சினை வேறமாதிரி ஆகிடும். நாளைக்கு அவங்க வீட்டுக்கு பதில் சொல்லனும்..” என புவன் கேட்க,
“என்ன பேசுற புவன். அவன் உன் தம்பி, யாரோ மாதிரி பேசாத..” என அம்பிகா மகனை அதட்ட,
“எல்லா பிரச்சினையும் உங்களாலத்தான் பெரியம்மா, அந்த பொண்ணை உங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல. அதுக்காக நீங்க கார்த்திக்கு சப்போர்ட் செஞ்சி பேசாதீங்க.. அவன் செய்றது தப்பு. இப்போவும் அவனோட சேஃப்டிக்காகத்தான் நாங்க பேசுறோம்.. அதை முதல்ல புரிஞ்சிகோங்க..” என ருத்ரன் அம்பிகாவையும் திட்ட, இப்போது பேசமுடியாது எனத் தெரிந்து, அமைதியாகி விட்டார்.
“தாத்தா உங்களுக்கு கார்த்தி போன் செஞ்சானா.?” என மாதேஷ் சிவனேசனைக் கேட்க,
அதுவரை மற்றவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சிவனேசன், “நான்தான் இந்த பிரச்சினையில இனி மூக்கை நுழைக்க மாட்டேன்னு சொல்லிருந்தேனே. இப்பவும் அதேதான் சொல்றேன். எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல..” என கராராகச் சொல்ல,
“நீங்க இதுல இருக்கீங்களா.? இல்லையான்னு கேட்கல. உங்க அருமைப் பேரன் போன் செஞ்சானான்னு தான் கேட்டேன்..” என மாதேஷ் மீண்டும் அழுத்திக் கேட்க,
அவனை முறைத்தவர், “கார்த்தி பண்ணல, நான்தான் அவனுக்கு பண்ணேன், அவன் போன் ஸ்விட்ச் ஆஃபாகி இருக்கு..” என்றவர், “அபிராமியோட அண்ணனுக்கு போன் செஞ்சி சொல்லிடு மகேசா, அதுதான் முறை. நமக்கும் நல்லது. புவன் சொன்னது போல நாளைப்பின்ன பிரச்சினைன்னா என்ன செய்யமுடியும்..” என்றவரை என்ன கணக்கில் சேர்க்க, என எல்லோருக்கும் எரிச்சல்தான் வந்தது.
ஊசியாய் குளிர் உடலைத் தாண்டி உயிரை ஊடுருவிச் செல்ல, உடலைக் குறுக்க முயன்றவளால் முடியாமல் போனது. மெல்ல தன் விழிகளை பிரிக்க முடியாமல் பிரித்தவளின் பார்வையில் விழுந்தது சுற்றிலும் அடர்ந்த மரங்களும், அதைப் போர்வையாக மறைத்திருந்த இருளும்தான்.
காண்பது சரியா எனும் விதமாக மீண்டும் விழிகளை மூடித் திறக்க, சரிதான் என்ற பதிலேக் கிடைக்க, அப்போதுதான் ஹாஸ்பிடலில் நடந்தது கண் முன்னே ஓடியது.
“ஒரு போன் பேசிட்டு வரேன், இங்க வெளியத்தான் இருப்பேன், எதாச்சும்ன்னா கூப்பிடு..” என்று விட்டேத்தியாகச் சொல்லிவிட்டு பவானி வெளியில் சென்ற ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அறைக்குள் வந்திருந்தான் கார்த்தி.
அவனைப் பார்த்து பயந்தவளைக் கண்டு நக்கலாகச் சிரித்தவன், “என்ன மேடம் எப்படி இருக்கீங்க, உங்க கால் எப்படி இருக்கு..” என்றவனை வித்தியாசமாகப் பார்த்தாள் அபிராமி.
“மேடம் கூட்டணி எல்லாம் பலமா இருக்கு போலயே, என்ன இவங்களை எல்லாம் வச்சு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிடலாம்னு ப்ளானா.? ம்ம்ம். இந்த கார்த்தி இருக்குறவரை அதுமட்டும் நடக்கவே நடக்காது, ஒருதடவைதான் முட்டாளா இருப்பேன். ஈசியா ஏமாத்திட்டு போயிருக்கலாம். எல்லா நேரமும் முட்டாளாவே இருப்பேன்னு எப்படி நினைச்ச..” என நக்கலை விடுத்துக் கடுமையாகக் கேட்டவனை அரண்டு போய் பார்த்தாள் அபிராமி.
“இப்படி பார்த்து பார்த்துதானடி என் குடும்பத்துல இருக்குற எல்லோரையும் ஏமாத்தி கைக்குள்ள வச்சிருக்க, அவங்க எல்லாரும் பாவம் உன்னைப்பத்தி தெரியாததுனால உன்னை நம்பிட்டு இருக்காங்க. ஆனா எனக்குத் தெரியுமே. A to Z எனக்குத் தெரியுமே. அப்புறம் நான் எப்படி விடுவேன்..” என வார்த்தைகளை வாரித் தெளித்தவனை வெறித்துப் பார்த்தாள்.
அந்தப் பார்வையை உதாசீனப் படுத்தியவன், தன் கையில் இருந்த ஸ்ப்ரேவை அவள் சுதாரிக்கும் முன், முகத்தில் அடித்துவிட்டு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மயங்குவதை கைகளைக் கட்டிக்கொண்டு, எள்ளல் பார்வையில் பார்த்திருந்தான். இதுதான் அபிராமியின் ஞாபக அடுக்கில் கடைசியாக பதிந்திருந்தது.
அடுத்து நடந்திருப்பதை அவளே யூகித்திருக்க, ‘கர்த்தி நீங்க இப்படின்னு’ என யோசிக்கும் போதே காதுகளில் தூரத்தில் ஏதோ ஒரு மிருகம் கத்தும் ஒலி வித்தியாசமாகக் கேட்டது. உடல் பயத்தில் தூக்கிப்போட, மெல்ல உடலைத் தளர்த்தி, தனக்குப் பின்னே இருந்த மரத்தைப் பிடித்து எழ முயற்சித்தவளால் முடியாமல் கால் பேலன்ஸ் இல்லாமல் விழுந்துவிட ‘கார்த்தி.. நீங்க எங்க இருக்கீங்க, வாங்க ப்ளீஸ்.. பயமா இருக்கு கார்த்தி. நான் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன். ப்ளீஸ் கார்த்தி என்னை விட்டுடுங்க..” எனப் பயத்தில் சத்தம் போட்டுக் கதறியவளுக்கு, இப்போது அந்த மிருகத்தின் ஓசை மிக அருகில் கேட்டது.
பட்டென்று தன் இரு கைகளாலும் வாயை இறுக மூடிக் கொண்டவள், விழிகளில் தேங்கிய அதிர்ச்சியிலும் பயத்திலும் கட்டுப்பாடின்றி வழிந்த கண்ணீரிலும் தேகம் நடுங்க சுற்றும் முற்றும் பார்த்தபடி, “கார்த்தி நீங்க இந்தளவுக்கு என்னை வெறுப்பீங்கன்னு, கொடூரமா மாறுவீங்கன்னு நான் நினைச்சதே இல்லையே. அப்படி என்ன துரோகம் பண்ணேன் உங்களுக்கு, உங்களால உங்க முன் கோபத்தால நாம வாழ்க்கைல இழந்தது எல்லாம் பத்தாதா, இன்னும் என்னவெல்லாம் இழக்கனும்’ என மனதுக்குள்ளேக் கத்தி கதறியவளுக்கு பயம் மனதைக் கவ்வ, சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் சற்று தூரத்தில் ஒரு மரத்தின் மேல் வெளிச்சம் தெரிந்தது.
பகலவனைக் கண்ட பனி போல, அந்த தூரத்து வெளிச்சம்தான் தன் வாழ்க்கையையும் காப்பாற்றும் ஒளி என நினைத்து, சற்று தைரியம் வரப் பெற்றவளாக, எப்படியாவது அங்கே இருப்பவர்களிடம் உதவி கேட்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என நினைத்தாள்.
அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது. அவள் கதறலைத் தன் காது குளிர கேட்க வேண்டும் என்று நினைத்து வாயில் இருந்த கட்டை மட்டும் அவிழ்த்திருப்பான் போல, ஆனால் கைகள் கட்டப்பட்டுத்தான் இருந்தது. இப்போது விழுந்ததில் காலை கொஞ்சமும் அசைக்கக்கூட முடியவில்லை. லேசாக அசைத்தற்கே வலி உயிர் போய்வந்தது.
சத்தம் போட்டுக் கத்தவும் பயம். இவளது சத்தத்தில் விலங்குகள் வந்துவிட்டால். வலி, அதிர்ச்சி, பயம், உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து அவளை வதைக்க ஆரம்பிக்க, கடவுளே என்னை காப்பாத்து. என் குழந்தையை மறுபடியும் ஒரு தடவையாவது நான் பார்க்கனும், நான் பார்க்காமலே போய்விடுவேனானு பயமா இருக்கு ப்ளீஸ்’ எனக் கடவுளிடம் மன்றாடியவள், ‘கார்த்தி ப்ளீஸ் வந்துடுங்க, நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றேன், ப்ளீஸ் கார்த்தி..” எனக் கண்ணீர் விட்டவளின் முன் அமைதியாக, அவளையேத் தீர்க்கமாகப் பார்த்தபடி வந்து நின்றான் கார்த்திக்.
“கார்த்தி..” எனக் கதறியவள் அப்படியே மயங்கிச் சரிய, அதை உணர்வற்ற பார்வை பார்த்தவன், விழுந்தவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு அந்த மர வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
கிழிந்த நாராகத் தன் கைகளில் கிடந்தவளை, அங்கிருந்த மரக்கட்டிலில் விட்டு, கட்டுக்களை அவிழ்த்துவிட்டவன் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
‘ஏன் எங்கள் வாழ்க்கை இப்படி மாறிப்போனது’ என்று இந்த மூன்றாண்டுகளாக வழக்கம்போல முளைத்த அதே கேள்வி இப்போதும் விருட்சமாக முளைக்க, அதை ஒதுக்கித் தள்ளியவன் அங்கிருந்த பாலை எடுத்து அவளுக்குப் புகட்டி, மாத்திரைகளையும் நீரில் கலக்கி அதையும் குடிக்க வைத்துப் படுக்கவிட்டவன், கம்பளியை இழுத்து நன்றாக போர்த்திவிட்டு, அங்கு எரிந்து கொண்டிருந்த சிமிலி அடுப்பின் அருகே அமர்ந்தான். பார்வை மட்டும் அவள் மேலேதான்.
கார்த்திக் தன் தொழிலில் முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. மூணாரில் இருக்கும் எஸ்டேட்களில் இருந்து தேயிலை, காபி, மிளகு, ஏலம் போன்ற பொருட்களை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
அப்படி ஒருநாளில் தான் மூணார் பூப்பாறையில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்த நேரம், வழியில் ஒரு ஜீப் பழுதடைந்து நின்று கொண்டிருக்க, ஒரு பெரியவர் கீழே விழுந்து கிடக்க, அவருக்கு அருகே ஒரு பெண் பதட்டத்துடனும், பயத்துடனும் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே நின்றிருப்பது தெரிய, தன் காரை அங்கே ஓரம் கட்டினான்.
ஆக்ஸிடென்டோ என நினைத்து வேகமாக வர, அவன் வேகத்தைப் பார்த்த பெண், அவளும் வேகமாக அந்த டிரைவரின் அருகே போய் நின்றுகொள்ள, அந்த செய்கையில் அவளை முறைத்தவன், டிரைவரிடம் “என்னாச்சு ப்ரோ..” என சகோதரத்துவத்துடன் வினவ,
“டயர் பஞ்சர் ப்ரோ.. ரெகுலர் சவாரி, இன்னைக்கு ஆட்கள் கம்மிதான், பாதிபேர் வழியில இறங்கிட்டாங்க, இவங்க ரெண்டு பேரையும் போடில விடனும். ரிட்டர்ன் அங்க இருந்து சரக்கு ஏத்திட்டு வரனும், அதுக்குள்ள டயர் வெடிச்சிடுச்சு, எப்படியாச்சும் உருட்டிட்டு போயிடலாம்னு பார்த்தா இந்தாளு வேற குடிச்சிட்டு மட்டையாகிக் கிடக்குறாரு..” என்ற டிரைவரின் பேச்சில் அந்தப் பெண்ணின் முகம் அவமானத்தில் கருத்தது, அந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் அவனுக்குத் தெரிந்தது.
“ரோப் இருக்கா, அட்ஜஸ் செய்து பின்னாடியே வரமுடியும்னா, நான் ஹெல்ப் பன்றேன்..” என்ற கார்த்தியைப் பார்த்த டிரைவர்,
“உங்களுக்குப் பிரச்சினை இல்லைனா ஓக்கேதான் ப்ரோ.. ஆனா..” என இழுக்க,
“என்னாச்சு..” என்று பார்த்தான் கார்த்திக்.
“உங்களுக்கு டிஸ்டர்பா இல்லன்னா, இவங்க ரெண்டு பேரையும் உங்க கார்ல ஏத்திக்கிறீங்களா, நம்ம வண்டில சேஃப்டி இல்ல, ரோப் மிஸ்ஸான கஷ்டம்..” என்று அந்த ட்ரைவர் தயங்கி தயங்கி சொல்ல,
“எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல ப்ரோ, அவரைத் தூக்கி பின்னாடி விட்டுடுங்க, அவங்களை முன்னாடி உட்கார சொல்லுங்க..” என்று விட்டு நகர,
அந்தப் பெண்ணோ அண்ணா என்ன அண்ணா இதெல்லாம், யாருன்னே தெரியாம அவர்கூட எப்படி போகமுடியும். நாங்க ஜீப்லயே வரோம்.” என கார்த்திக்கிற்கு கேட்காதவாறு பேச,
“அதெல்லாம் முடியாது பாப்பா. உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம், முன்னாடி போற வண்டியைப் பின் தொடர்ந்து தான் நாங்க வருவோம், அந்த ரோப் கொஞ்சம் ஸ்லிப்பானாலும் வண்டி பள்ளத்துக்குள்ள விழுந்துடும், அப்படி எதுவும் நடந்தா நாங்க ரெண்டு பக்கமும் குதிச்சிடலாம், உள்ள இருக்குற நீங்க எப்படி குதிக்க முடியும். அதுவும் உங்க அப்பா இருக்குற நிலமைக்கு அதுதான் சேஃப். போ போய் வண்டில ஏறு. நாங்கதான் பின்னாடியே வரோமே அப்புறம் என்ன.?” என ஒருவாறு அவளை சமாதானம் செய்துவிட்டு, தன்னிடம் இருந்த கயிறை ஜீப்பிற்கும், காரிற்கும் இடையில் தேவையான இடைவெளிவிட்டு கட்டியவர்கள், எல்லாம் சரிபார்த்து அவளைக் கார்த்தியின் காரில் ஏற்றிவிட்டு, அவள் தந்தையும் பின்னிருக்கையில் கிடத்திவிட ஷப்பா என்று ஓய்ந்து போனார்கள்.
பின் கார்த்தி மெதுவாகக் காரை எடுக்க, அவர்கள் பின்னே ஜீப் நகர ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்றதும், “லேடிஸ் வரும்போது குடிக்கக்கூடாதுனு உங்க அப்பாவுக்குத் தெரியாதா.? இவரை நம்பி எப்படி உங்க அம்மா உன்னை அனுப்பினாங்க..” என திடிரென்று கேட்க,
அதில் சட்டென்று அவனிடம் திரும்பியவள், “அது அம்மா இல்லை..” என தொண்டையடைக்கக் கூற, “சாரி..” என்றவன், “இனி இப்படி வராத அதுவும் நைட் கண்டிப்பா வராத. எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. இங்க யாரும் நல்லவங்க கிடையாது..” என சொல்ல,
“ம்ம்ம்.. அப்பா முன்ன எல்லாம் குடிச்சது இல்ல, இப்போ அம்மா இறந்த பிறகுதான்..” என முணுமுணுக்க,
“ம்ம் வேற யாரும் இல்லையா உன்கூட..” என்றவனிடம்,
“அண்ணா இருக்கான், ஆனா மலேசியால இருக்கான்..” என்றவளின் குரலில் இருந்த சோர்வும், வலியும் அடுத்து அவனை எதுவும் கேட்கவிடவில்லை.
ஒருவழியாக அவர்களை போடியில் இறக்கிவிட்டவன், தேனியை நோக்கிப் பறந்தான். தன்னுடன் இரண்டு மணி நேரம் பயணம் செய்த பெண்ணின் பெயரைக்கூட கேட்காமல் வந்த தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் கார்த்திக்.