நதி - 07
இருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் தன் கதிர்களை பூமியில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அழகானக் காலைப் பொழுது.
உடலின் ஒவ்வொரு செல்லும் வலியில் துடிக்க, கண்களைத் திறக்கவே முடியாமல் திறந்த அபிராமியின் பார்வையில் பட்டது அந்த மரக்குடில்.
மெல்ல விழிகளை சுழல விட்டவளுக்கு அந்த இடமே பயத்தைக் கொடுத்தது. ஆங்காங்கே விலங்குகளின் தலையும், தோலும் மாட்டப்பட்டிருக்க, ஓரிடத்தில் வேட்டையாடத் தேவையான சில கத்திகளும், வில்-அம்புகளும், ஒரு துப்பாக்கியும் மாட்டப்பட்டிருக்க, அதுவரை கதகதப்பாக இருந்த உடல் இப்போது பயத்தில் தூக்கிப்போட்டது.
எப்படி இங்கே வந்தோம் என்பது நினைவில் வர, பயம் பயம் மட்டுமே அவள் கண்களில், அவள் பயத்திற்கு தகுந்தாற் போலவே, ஆட்கள் இருந்ததற்கான அறிகுறியே இல்லை.
எழவே முடியாமல் எழுந்து அமர்ந்தவள், காதுகளை கூர்மையாக்கி யாரேனும் இருக்கிறார்களா.? பேச்சு சத்தம் கேட்கிறதா.? என பார்க்க, பறவைகளின் சத்தமும், காற்று வீசி மரங்கள் அசையும் ஓசை மட்டுமே கேட்க செய்வதறியாது திகைத்துப் போனாள் பெண்.
நேற்றிரவு கார்த்தி இருந்தானே, இல்லை அது பொய்யா.? அவனைப் பார்த்தது பிரம்மையா. இல்லை என் பயத்தின் விளைவா? எனத் தனக்குள்ளே புலம்பியவள், இல்லையே அவன் இல்லையென்றால் இந்த இடத்திற்கு நான் எப்படி வந்திருக்க முடியும். கார்த்திதான் தூக்கிக்கொண்டு வந்திருப்பான். இப்போது இங்கு இல்லை போல. எங்கேயும் வெளியில் சென்றிருப்பானோ என யோசனைகள் வரிசைக்கட்ட அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
நேரம் தான் சென்றதே தவிர, அவன் வந்தபாட்டைக் காணோம். அந்த இடத்தில் அவன் இருந்ததற்கான சுவடும் இல்லை. கால் வேறு வலி எடுக்க ஆரம்பிக்க, பசி ஒரு புறம், அதோடு கழிவறைப் போக வேண்டியக் கட்டாயம் வேறு. நிச்சயம் துணையில்லாமல் அவளால் போக முடியாத சூழல் வேறு.
உடலின் உபாதைகள் அவளை அமரவிடாமல் செய்ய, மெல்ல அடிபடாத காலை ஊன்றி அந்த மரக்கட்டிலைப் பிடித்து தத்தி தத்தி அறைக்கதவை அடையுமுன்னே வலி பின்னியெடுக்க, உடல் சோர்வாகி விழப் போகிறோம் என உணரும் நேரம் கதவைப் பிடித்து, பல்லைக் கடித்தபடி வலியைப் பொருக்க முடியவில்லை அவளால்.
கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது வலியில். முடிந்தவரை ‘கார்த்தி கார்த்தி’ எனக் கத்த, அவள் குரல் அந்தக் கானகத்தில் பட்டு எதிரொலித்து அவளுக்கே வித்தியாசமாகக் கேட்க, அப்போதுதான் புரிந்தது அந்த இடத்தில் அவளைத் தவிர யாரும் இல்லையென்று.
‘கடவுளே இது எந்த இடம், இங்கிருந்து எப்படி வெளியே செல்வது, கார்த்தி எங்கே.? இந்த இடத்தில் தன்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கு போனான்’ என கேள்விகள் படையெடுக்க, தன்னுடைய உபாதைகள் வேறு நிற்கவிடாமல் செய்ய, ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கதவோரமாய் இருந்த ஒரு கொம்பை எடுத்து தாங்கியபடியே வெளியே எட்டிப்பார்த்தவளுக்கு தலையை சுற்றியது.
ஏனென்றால் அந்தக் குடில் மரத்தின் உச்சியில் பல அடி உயரத்தில் இருந்தது. இப்போது என்ன செய்வது எனப் புரியாமல், இயலாமையால் அடக்கி வைக்கப்பட்ட அழுகை வெடிக்க கத்தி கதற ஆரம்பித்தாள்.
‘கார்த்தி, கார்த்தி’ என்ற வார்த்தைகள் தவிர வேறொன்றும் அவள் வாயில் இருந்து வரவில்லை. கண்களில் தேடுதலைத் தாங்கி சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவன் பெயரைச் சொல்லி கதற, அருகில் யானையின் பிளிறல் சத்தம் கேட்க, சட்டென்று தன் கரம் கொண்டு வாயை மூடியவளின் விழிகள் அதிர்ச்சியில் தெரித்து விடும் அளவுக்கு விரிந்தது.
இவளது சத்தம் கேட்ட திசையில் தான் அந்த யானையும் வந்து கொண்டிருந்தது. வேகமாக கதவின் பின் வரப் பார்த்தவள் கையில் இருந்த கொம்பை மறந்திருக்க, திரும்பிய வேகத்தில் அது அவளின் அடிப்பட்ட காலில் விழுந்துவிட, எதிர்பாராமல் விழுந்த அடியில் வலி அதிகமாக ‘அம்மா’ என்ற அலறலோடு கீழே விழுந்து அந்த மரத்தின் படிகளில் கட்டிய கயிறில் மாட்டி தொங்க ஆரம்பித்திருந்தாள் அபிராமி. அவளது அந்த சத்தத்தில் யானையும் மேலும் வேகமான எட்டுக்களோடு அந்தக் குடிலை நோக்கி வந்து கொண்டிருந்தது..
முடிந்தது.. அனைத்தும் முடிந்தது.. இன்னும் இரண்டே எட்டில் தன்னை அடைந்து, தும்பிக்கையால் தூக்கி கீழேப் போட்டு கொல்லப்போகிறது. தான் அனாதையாகத்தான் சாகப்போகிறோம். இங்கிருக்கும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இரையாகப் போகிறோம் என்று நினைத்தவளின் மனதில் குழந்தை தன் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரித்துக் காட்டியது.
தன் பலம் கொண்ட மட்டும் அந்த கயிறைப் பிடித்திருந்தவளுக்கு, மயக்கம் வரும் போல் இருந்தது. ‘இல்லை நான் சாகக்கூடாது. என் குழந்தை அவனை விட்டுவிட்டு நான் போகக்கூடாது’ என மனதில் தைரியத்தைக் கூட்டி அந்தக் கயிற்றை விடாமல் பிடித்திருந்தாலும், உடல் சோர்வு அதற்கு ஒத்துழைக்கவில்லை.
உடல் தளர ஆரம்பிக்க, கைகள் தன்னால் கயிற்றில் இருந்த இறுக்கத்தை விட ‘சபரி கண்ணா அம்மாவை மன்னிச்சிடுடா, உன்னை விட்டுட்டுப் போறேன்’ என இதற்குமேல் மேல் போராட முடியாது என நினைத்தவள் அதுவரைத் தான் பிடித்திருந்த அந்தக் கயிற்றை விட்டிருந்தாள் அபிராமி.
-
“மாமா அபி பத்தி முரளி அண்ணாவுக்கு சொல்லிட்டீங்களா..” என மகேஸ்வரனிடம் கேட்ட பார்கவியைப் பார்த்து, ‘ஆமாம்’ என்றுத் தலையசைத்தவர் மனைவியையும், தம்பி மனைவியையும் பார்த்து முறைத்தார்.
அதைக் கவனித்த புவன், “என்னப்பா..” என, “உன் அம்மாவும், சித்தியும் நம்மக்கிட்ட இருந்து இன்னும் என்ன என்ன மறைச்சிருக்காங்கன்னு நமக்குத் தெரியனும்ல..” என மனைவியைக் கூர்மையாகப் பார்த்து கூற, பெண்கள் இருவருக்கும் உள்ளே பயம் பிடிக்க ஆரம்பித்தது.
“என்ன சொல்றீங்க பெரியப்பா புரியல..” என ருத்ரன் கேட்க,
“அபிராமி இங்க இருந்து போகும் போது நாம யாரும் இல்ல, அதாவது ஆம்பளைங்க நாம யாரும் இல்ல இல்லையா.?” என இப்போது தம்பி மனைவியை அதே போல் கூர்மையாகப் பார்த்தார்.
“ஆமா பெரியப்பா, அன்னைக்குதானே மதுரைல பாண்டி கோவில் கிடா விருந்து நடந்தது. நாம எல்லாரும் கண்டிப்பா அங்க போகனும் சொல்லி தாத்தா கூப்பிட்டு போனார். பாட்டியும் ரெண்டு பவி அண்ணியும் நம்ம கூட வந்துட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருந்தாங்க. பைரவி அவ அம்மா வீட்டுக்கு போயிருந்தா..” என அன்றைய நாளைப் பிட்டுபிட்டாக மாதேஷ் வைக்க, ‘இன்னும் துள்ளியமா ஞாபகம் வச்சிருக்கானா இவனை’ என இப்போது இரண்டு அம்மாக்களும் மகனை முறைத்தனர்.
அதைக் கவனித்த பார்வதி பாட்டி, “என்ன பெரியவனே, என்ன சொல்ல வர. சரியா சொல்லு..” எனக் கடிய,
“அம்மா உங்களுக்கும் இது தெரியும்னு எனக்குத் தெரியும். வீட்டுல நீங்க எல்லாம் இருக்கப் போய்த்தான் நாங்க நிம்மதியா வெளி வேலையா அலையுறோம். நீங்க எல்லாம் சரியா பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை. ஆனா அந்த பையன் முரளிக்கிட்ட பேசின பிறகு அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுடுச்சு ம்மா..” என வேதனையானக் குரலில் மகேஸ்வரன் சொல்ல,
தந்தையின் குரலில் இருந்த வேதனை எல்லோரையும் அசைக்க, “என்ன பெரியப்பா.. அவன் அந்த முரளி எதாவது தப்பா பேசிட்டானா.? அவனை என்ன செய்றேன் பாருங்க..” என ருத்ரன் கொதிக்க,
“அப்படி பேசியிருந்தா கூட மனசுல இருக்குற இந்த வலி போயிருக்குமோ என்னவோ..” என்றவர், “ஒரு குழந்தையைக் கொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்ததுன்னு கேட்டான்..” என்றார் அதே வேதனையானக் குரலில்.
“மாமா..” என அதிர்ந்த பார்கவி, வேகமாக புவனை பார்க்க, அவனும் இப்போது மனைவியைத்தான் பார்த்தான்.
“என்ன பெரியப்பா சொல்றீங்க..” என மாதேஷ் கேட்க,
“அபி பொண்ணு இங்க இருந்து போகும் போது புள்ள உண்டாகி இருந்தாளாம். கார்த்திக்கும் அவளுக்கும் இருந்த பிரச்சினையைப் பயன்படுத்தி உன் அம்மாவும், சித்தியும் அந்த குழந்தையை அழிச்சு, அவளையும் வீட்டை விட்டு அனுப்பிருக்காங்க..” என விரக்தியானக் குரலில் கூற, பார்கவியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், வேதனையும், வலியும் அடுத்து அங்கு யாரையும் பேசவிடவில்லை.
மனைவியின் அருகில் சென்று அவளைப் பிடித்துக் கொண்டவன், “நீ வா கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பியாம்..” என அழைக்க,
‘இல்லை’ எனும் விதமாக தலையை அசைத்தவள், அம்பிகாவிடம் சென்று “மாமா சொன்னது நிஜம் இல்லைதானே அத்தை. நீங்க அப்படி செய்யலதானே..” என யார் சொல்வதையும் கேட்காமல், நம்பிக்கையுடன் கேட்க அவள் முகத்தை நிமிர்ந்தும் கூடப் பார்க்கவில்லை அம்பிகா.
“அத்தை சொல்லுங்க ப்ளீஸ்” எனக் கெஞ்சியவளை. “நீயும் அவளும் எனக்கு ஒன்னு இல்லை கவி. நீ என் அண்ணன் பொண்ணு, அவ யாரோ ஒரு பொண்ணு.” என சூசகமாகத் தான் செய்ததை சொல்ல, அதிர்ச்சி.. பேரதிர்ச்சி பார்கவிக்குள்.
அப்படியே கணவனின் கைகளுக்குள் மயங்கியவளைத் தூக்கியவன், யாரையும் பார்க்காமல் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.
“என்னம்மா.. என்ன செஞ்சி வச்சிருக்கீங்க. ஒரு குழந்தைக்காக அண்ணனும் அண்ணியும், கோவில் கோவிலா ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலையும் போது வீட்டுக்கு வந்த வாரிசை இப்படி மொத்தமா சிதைச்சிருக்கீங்களே, என்னம்மா இதெல்லாம்..” என ருத்ரேஷ் ஆத்திரமாகக் கத்த,
“அம்மா.. நீங்களாம்மா இப்படியெல்லாம்.. இன்னும் என்னால நம்பவே முடியல, என் அம்மாக்களா இப்படின்னு..” என மாதேஷும் வருத்தமானக் குரலில் கூற,
“என்னடா ஆளாளுக்கு குறை சொல்லிட்டு இருக்கீங்க, அப்படி பாதுகாப்பு கொடுத்து பெத்துக்க அந்தக் குழந்தை ஒன்னும் கார்த்தியோட குழந்தை இல்ல. எவன்கிட்டையோ போய்..” என முடிக்கும் முன்னே “அம்மா, அத்தை, அம்பிகா” என அங்கிருந்த அனைவரும் கத்த, மனைவியை ஓங்கி அறைந்திருந்தார் மகேஸ்வரன்.
“வாயை மூடு, இனி ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தா, என் கோபத்தை முழுசா பார்ப்ப. இத்தனை பொம்பளைங்க இருந்து வளர்த்த உன் பொண்ணே என்ன என்ன கூத்தெல்லாம் செஞ்சி வச்சிட்டு போனான்னு மறந்துட்ட போல. அந்த பொண்ணுக்கு அம்மா இல்ல, இருந்த அப்பாவையும் உன் மகன் பேசியே கொன்னுட்டான். இப்ப இருக்குறது அவ அண்ணன் மட்டும் தான். இப்படி பேசிப்பேசியே அவனையும் இல்லாம ஆக்கிடாத.”
“இருக்குற எல்லா தப்பையும் செஞ்சிட்டு வந்த உன் பொண்ணே ஒருத்தன்கிட்ட நல்ல வாழ்க்கை வாழும் போது, எந்த தப்பும் செய்யாத அபிராமி மட்டும் ஏன் கஷ்டப்படனும்..” என கர்ஜித்தவரைப் பார்த்த அனைவருக்கும் பயம் வந்தது.
மகேஸ்வரன் இப்படியெல்லாம் கோபப் படுபவரே கிடையாது. ஜெகதீஸ்வவரன் கூட பிள்ளைகளைத் திட்டினால் “விடு ஜெகா, போக போக சரியாகிடுவாங்க” என்பார். அவரே கோபத்தில் கத்துகிறார் என்றால் பிரச்சினை பெரிது தான் போல என அங்குள்ள அனைவரும் அம்பிகாவையும், பவானியையும் மாறி மாறிப் பார்த்தனர்.
அப்போது “நீங்க என்னதான் கேட்டாலும், அவளுங்க ரெண்டு பேரும் வாயைத் திறக்கமாட்டாங்க, ஏனா அவங்க சுயரூபம் பெத்த புள்ளைங்களுக்குத் தெரிஞ்சா என்னாகும்” என்ற பார்வதி, “இன்னைக்கு கார்த்தியும், அபியும் பிரிஞ்சி இவ்வளவு கஷ்டப்பட இவங்க மட்டும் தான் காரணம்” எனக் காட்டமாகச் சொல்ல,
“அத்தை போதும், நானும் பார்த்துட்டே இருக்கேன் எங்களையே குறை சொல்லிட்டு இருக்கீங்க, நாங்க இப்படி செய்ய யார் காரணம் கார்த்தி தானே. யார் என்ன வேனும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுக்காக கட்டின பொண்டாட்டி மேல சந்தேகப்படலாமா.? இல்ல குழந்தை மேல சந்தேகப்படலாமா.? கார்த்திக்கு அபியைப் பிடிக்கல, அந்தக் குழந்தையைப் பிடிக்கல. அதனால நாங்க அவன் நல்லா இருக்கனும்னு நினைச்சுதான் அந்தக் குழந்தையை,” என பவானி முடிக்க முன்னே,
“ச்சீ நிறுத்து, நீயும் ஒரு பொம்பளையா.? என்ற ஜெகதீஸ்வரன், “உன்னைத் தொட்டா கூட பாவம், அதனாலத்தான் உன்னை அடிக்காம இருக்கேன். முதல்ல என் கண் முன்னாடி நிக்காம இங்க இருந்து ப்போ..: எனக் கத்த, கணவரின் இந்த அவதாரத்தில் அரண்டு போய் தன் இரு மகன்களையும் பார்க்க, அவர்களோ தாயைத் திரும்பியும் பார்க்கவில்லை.
எப்போதும் எல்லாவற்றிற்கும் கோபப்பட்டு எதிர்த்து பேசும் பைரவி கூட, இதையெல்லாம் கேட்டு அமைதியாகத்தான் இருந்தாள். அது அமைதி என்று சொல்ல முடியாது. ஒருவகையான அதிர்ச்சி. தன் மாமியார்கள் மீதிருந்த நல்ல எண்ணம் வடியத் துவங்கியதன் பிரதிபலிப்பு.
“பைய்யூ வா.. உனக்கு வாக்கிங்க் போற டைமாச்சு..” என்ற மாதேஷ் மனைவியை அங்கிருந்து கிளப்ப, சாம்பவிதான் ருத்ரனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை எதையோ உணர்த்த “சவி நான்..” என அவளருகே வர, அதற்குள் காவலதிகாரிகள் இருவர் வேகமாக வீட்டுக்குள் வந்தனர்.
அதைப் பார்த்தவன் மனைவியை விட்டுவிட்டு “சொல்லுங்க சார், என்ன விஷயம்..” என ஆளுமையாகக் கேட்க,
“மிஸ்டர்.கார்த்தீசனைப் பார்க்கனும், அவர் எங்க..?” என வந்தவர்களில் ஒருவர் கேட்க,
“என்னோட தம்பிதான், இப்போ வெளியூர் போயிருக்கான். நீங்க சொல்லுங்க..” எனவும்
“அவர் மேல கம்ப்ளைன்ட் வந்துருக்கு, டொமஸ்டிக் வைலன்ஸ்..” எனவும்
“யார் யார் இப்படி கேஸ் கொடுத்தது, அவளோட அண்ணன் அந்த முரளியா” என அம்பிகா பதற,
“இல்ல, நான்தான் அந்த கேஸ் கொடுத்தது.” என மகேஸ்வரன் அதிராமல் அவர்கள் தலையில் இடியை இறக்கினார்.