• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 2

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 2

மனமேடையில் வாசு இறுக்கமாய் அமர்ந்திருக்க, அவனருகே அமர வைக்கப்பட்டாள் திக்ஷி.

"வாசு!" என்று தோள்களை சிவகாமி அழுத்த, அந்த கைகளை தட்டிக் கொடுத்தவன் ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து நன்றாய் அமர்ந்தான்.

"சங்கு! இப்படி கோர்த்து விட்டுட்டியே!" என்று மனதிற்குள் தன் சகோதரியை நினைத்துக் கொண்டாள் திக்ஷிதா.

தாய் தந்தை பார்த்து வைத்தவன், படிப்பு முதல் தொழில் வரை என அனைத்தும் வீட்டில் பேசி தெரிந்திருக்க, மறுக்க காரணம் இல்லை என்று சம்மதித்திருந்தாள்.

சில நிமிடங்கள் தயங்கி நின்றது கூட தனக்கு இப்பொழுது தேவையா என்ற எண்ணத்தில் தான்.. அதையும் உமா பேசி சரி செய்திருக்க, இதோ மேடையில் சிலை போல இருப்பவனைப் பார்த்து ஒரு சின்ன பயம்.

முகத்தின் அழுத்தமும் அன்னை தந்தை அவனிடம் பேசவே தயக்கமும் என நினைத்துப் பார்க்கையில் தன்னால் இப்படி யோசித்து நிறுத்தி எல்லாம் பேச முடியுமா? தனக்கு அது வருமா என அவள் நினைத்தைபடி இருக்க, கழுத்தில் ஏதோ ஊர்வது போல இருக்க, அவன் தான் தாலியினை ஏற்றி இருந்தான்.

குனிந்து அதைப் பார்த்தவள் நிமிர்ந்து வாசுவைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.

அதில் அவன் பார்க்கிறானே என இவ்வளவு புன்னகைக்க, அவன் மூன்று முடிச்சிடும் வரை பார்த்திருந்தவன் பின் கைகளை எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டான்.

"சுத்தமோ சுத்தம்! இனி நீ என்ன யோசிச்சாலும் வேஸ்ட் டி.. அதான் கட்டிட்டானே!" என முணுமுணுத்தவள் மீண்டும் ஒரு முறை குனிந்து அந்த கயிற்றினைப் பார்த்துக் கொண்டாள்.

"இங்க பாரு! கழுத்தை சுத்தி நெறிச்சுட கூடாது.. அமைதியா அழகா கொண்டு போகணும் என்னை.. சரியா?" என புது மஞ்சள் கயிற்றோடு பேச்சு வார்த்தை நடத்த, முணுமுணு சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், அவள் கீழே குனிந்திருக்கவும் நிமிர்ந்து அன்னையைப் பார்த்தான்.

"என்ன அம்மு பண்ற? அழறியா?" என வாசு பார்வைக்கே குனிந்திருந்தவளை சிவகாமி பயந்து கேட்க,

"அழறேனா?" என திரும்பிப் பார்த்தவள்,

"மாமி! தாலி கட்டின கையோட இப்படியா கேட்டு வைப்பிங்க?" என்றவள் பேச்சில் தான் நன்றாய் மூச்சு விட்டார்.

"அண்ணி! வாழ்த்துக்கள்!" என்று ஒருவன் கைகொடுக்க, திரும்பி கணவனானவனைப் பார்த்தாள்.

"விஷ்வா! என் தம்பி!" என்றான்.

"ஹாய்! தேங்க்ஸ்!" என்று அவளும் கை குலுக்கிக் கொண்டாள்.

"உங்க ரெண்டு பேரோட..." என முறைத்தவர் பின் இருவரையும் எழுந்து வந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள சொல்ல, பெரியவர்கள் ஆசிர்வாதம் தொடங்கி சம்பிரதாயங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது.

சங்கமித்ரா எங்கே எப்படி யாருடன் சென்றாள் என முழு விபரமும் திக்ஷிதாவிற்கு தெரியும்.. ஆனாலும் அன்னையிடம் கூட சொல்ல பயம்.

உமாவுமே தனியாய் கணவன் மற்றும் இளைய மகள் முன்பு அத்தனை அழுது சங்கமித்ராவையும் அப்படி திட்டிவிட்டார்.

"இனி எனக்கு அவ பொண்ணே இல்ல.. எனக்கு ஒரே பொண்ணு தான்" என்றெல்லாம் பேசி இருக்க, கதிரும் மனைவி சொல்வது சரி என்பதை போல தான் நின்றிருந்தார்.

அந்த பயத்திலேயே யாரிடமும் மூச்சு கூட விடாமல் அன்னை தந்தையை சமாதானப்படுத்த திருமணத்திற்கும் சம்மதித்து இதோ மணமக்களாய் திக்ஷிதாவின் வீட்டிற்கு வருகின்றனர்.

"ஹ்ம்! சங்கு! நீயும் உன் வீட்டுக்காரரும் வருவீங்க.. உங்களுக்கு ஆரத்தி எடுத்து உன் ஆத்துக்காரர்கிட்ட பைசா வசூல் பண்ணி மைசூர் ட்ரிப் போலாம்னு நினச்சேன்.. விதி என்னை எங்க கொண்டு வந்து விட்ருக்கு பாரேன்" என மீண்டும் ஆரத்தி சுற்றும் நேரம் அவள் முணுமுணுக்க,

"என்ன எதாவது பேசிட்டே இருக்க?" என்றான் வாசு அவளிடம் வாசலில் வைத்தே.

"ஹான்! நானா?" திக்ஷிதா கேட்க,

"பின்ன! கவனம் எங்க இருக்கு?" என்று அழுத்தமான குரலில் கேட்க, ஆ'வெனப் பார்த்தாள் அவனை.

"ஏன் டா புலம்புறதுக்கு கூட பெர்மிஸ்ஸன் வாங்கணுமா?" என்பதை போன்ற பார்வை.

உள்ளே அழைத்து வந்து பால் பழம் கொடுத்து அமர வைக்க, "கதிர்! ஆறு மணிக்கு மேல தான் நல்ல நேரம்.. அப்பவே கொண்டு வந்து விடுங்க.. இப்ப சூலமும் சரி இல்லை" என்று ரத்தினம் கூற,

"ஹப்பா! ஈவ்னிங் வரை இங்கே தான்!" என்றவளை அருகில் இருந்தவன் முறைக்க,

"ஆத்தி! இவனை மறந்துட்டேனே!" என்றதையும் முணுமுணுக்க தான் செய்தாள்.

"இனி ஒன்லி மைண்ட் வாய்ஸ் தான்.." நினைத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து சிரித்து,

"சாரி! இனி சிப்!" என்று கூற, அவனும் திரும்பிக் கொண்டான்.

திக்ஷிதாவின் சொந்தங்கள் சிலர் அவள் வீட்டிற்கும் வருகை புரிந்திருக்க, மூச்சு முட்டிக் கொண்டு வந்தது வாசுவிற்கு.

"நாங்க கிளம்புறோம் பா.. அங்கேயே போய் எல்லாம் ஏற்பாடு பண்றோம்.. விஷ்வா உன்கூட இருப்பான்.. பார்த்துக்கோ!" என்று கூறி சிவகாமி ரத்தினத்துடன் விடைபெற,

"மாப்பிள்ளையை உன் ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லு திக்ஷி!" என்றார் அன்னை.

"என் ரூம்லயா?" அவள் கேட்க,

"ஷ்ஷ்! மெதுவா டி!" என அன்னை மிரட்ட,

"ம்மா! இப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும்.. என் ரூம் உள்ள வந்தா மனுஷன் வீட்டை விட்டே போயிடுவார்.. அவ்ளோ கொடூரமா இருக்கும்" என்று அன்னையிடம் மெதுவாய் அவள் பேச,

"நான் காலையிலேயே ஆள் வச்சு கிளீன் பண்ணிட்டேன்.. சத்தமில்லாம அழைச்சுட்டு போற வழியைப் பாரு!" என்று கூறவும் திரும்பிப் பார்க்க, அண்ணன் தம்பி இருவரும் இவளை தான் பார்த்திருந்தனார்.

அண்ணன் முறைக்கிறானா பார்க்கிறானா தெரியவில்லை. தம்பிக்காரன் சிரித்ததில் பேச்சை கவனித்துவிட்டான் என புரிந்தது.

"அண்ணன் அட்ஜஸ்ட் பண்ணிப்பார் அண்ணி!.. நீங்க கூட்டிட்டு போங்க!" என்று விஷ்வா கூற,

'நீ குட் பாய் டா பையா!" மனதுக்குள் விஷ்வாவை நினைத்துக் கொண்டவள் சிரித்தபடி,

"வாங்க.. ரூம் காட்டுறேன்!" என்று அழைக்க,

"நீங்க வேணா அந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்களேன் தம்பி!" என்றார் விஷ்வாவிடம் கதிர்.

"இல்ல மாமா! பரவாயில்லை!" என்று அவன் கூற, கண்களில் தோன்றிய பளிச்சிடலுடன் வாசுவை அழைத்து சென்றாள் திக்ஷிதா.

"நீங்க ரெஸ்ட் எடுங்க.. நான் அப்புறமா வர்றேன்!" என திரும்ப போக,

"ஏசி ஆன் பண்ணிடு!" என்றான்.

சரி என்றவள் அவன் சொன்னதை செய்துவிட்டு செல்ல, அறையை சுற்றிப் பார்த்தான்.

சிறிய அறை தான்.. கட்டிலின் அருகில் இருந்தாசெல்பில் முழுதும் புத்தகமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, நாற்காலியும் டேபிளும் அருகே இருந்தது.

அதற்கு மேல் பார்க்காமல் கண்களை மூடி படுத்துவிட்டான். இரவு சரியாய் உறங்காததும் காலையில் எழுந்ததும் எதிர்பாராத அதிர்ச்சியும் என மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்க, சில நொடிகள் கண் மூடி இருந்தவன் பின் தூங்கிவிட்டான்.

"ஹாய் விஷ்வா!" என்று அவனருகே திக்ஷிதா வர, அவனும் ஹாலில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தபடி இருந்தவன் புன்னகைத்து, "ஹாய் அண்ணி!" என்றான்.

"என்ன உடனே வந்துட்டீங்க?" கிண்டலை உதடுக்களுக்குள் மறைத்து விஷ்வா கேட்க,

"ஏன் உன் அண்ணாவை பாட்டு பாடி தான் தூங்க வைக்கணுமா?" என்றாள் திக்ஷிதாவும்.

"நல்லா பேசுவீங்க போலயே! ஆனா அண்ணா உங்களுக்கு அப்படியே ஆப்போசிட்" என்று கூற,

"அதான் பார்த்தேனே! இருந்தாலும் எப்படி இப்படி விரைப்பா முகத்தை மைண்டைன் பன்றாரோ!" என்றாள்.

"பார்க்க தான் அண்ணி அப்படி இருப்பாங்க.. பட் சோ ஸ்வீட் அண்ணா!" என அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய,

"என்ன ஸ்வீட்டு? காலையில இருந்து பார்க்குறேனே! சும்மா லைட்டாவாச்சும் சிரிக்கட்டுமே! ம்ம்ஹ்ம்ம்! எனக்கென்னவோ மாமியார் அதான் உங்க அம்மா குழந்தையை மாத்தி ரோபோவை தூக்கிட்டு வந்துட்டாங்கன்னு நினைக்குறேன்" என கூற,

"அண்ணி! செம்ம வாய் உங்களுக்கு.. ஆனா அண்ணா பாவம்... அண்ணா உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறாங்க" சிரித்தபடி தான் கூறினான் விஷ்வா.

"அட நீ வேற! மைண்ட்வாய்ஸ் கூட அவருகிட்ட ஆகாது போல.. நல்லவேளைக்கு அந்த வீட்டுலன்னு கம்ப்பெனிக்கு நீயும் மாமியும் இருக்கீங்க.. இல்ல...!" என்றவள் சுற்றும் பார்த்துவிட்டு,

"என் நாக்கை நானே வெட்டிகிட்டு உன் அண்ணனுக்காக ஊமை ஆகி இருப்பேன்" என்றதும் விஷ்வா விழுந்து விழுந்து சிரிக்க,

"சிரிக்காத டா! நிஜம் தான்.. நினச்சு பாரு.. ஒரு ரோபோ பக்கத்துல இன்னொரு ரோபோ.. அதான் உன் அண்ணா பக்கத்துல நானு.." என்றவள் பேச்சில் இன்னும் அவன் சிரிக்க,

"திக்ஷி! ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச நேரம் அமைதியா இருக்குறது இல்ல" என்ற உமா,

"ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சியா கொண்டு போறதுக்கு?" என்று கேட்கவும் அவள் தலையில் கை வைத்து,

"நீங்களே எடுத்து வச்சிடுங்கம்மா" என்றாள்.

"சரியான சோம்பேறி! அங்கே போய் என் பேரை கெடுக்காமல் இருந்தா சரி" என்று கூறி செல்ல,

"அப்புறம்! நீங்க என்ன பண்றீங்க?" என்று கேட்க, இருவரின் பேச்சுக்களும் நீண்டது.

ஒரே வயதினர் என்பதில் இருவரும் நண்பர்களாய் எளிதாய் பேசி பழகி இருக்க, நான்கு மணி அளவில் தான் எழுந்தான் வாசு.

அவனை எழுப்ப வந்த திக்ஷிதாவும் அவன் எழுந்ததை கண்டு,

"டீயா காபியா?" என்று கேட்க,

"காபி!" என்றவன் முகத்தை கைகளால் தேய்த்துவிட்டு குளியலறை சென்றுவிட,

"ஒத்த வார்த்தைல பேசுறவங்கல நான் என் பிரண்ட் லிஸ்ட்ல கூட வச்சதில்லயடா" என நினைத்தபடி கீழே சென்றாள்.

பாலை அடுப்பில் ஏற்றி காய்த்துக் கொண்டிருக்க,
"அம்மு! இதுல உன்னோட நகை எல்லாம் இருக்கு" என்று கூறி திக்ஷிதா கைகளில் உமா தர,

"அப்ப இது?" என்றாள் கழுத்தில் அணிந்திருந்தவற்றைக் காட்டி.

"அதெல்லாம் அவளோடது.. உன்னோடது பேங்க்ல தானே இருந்துச்சு.. என்னவோ அப்பாக்கு நீ அதை போட்டுட்டு போறதுல இஷ்டம் இல்ல.. அதான் திருப்பிட்டு வந்துட்டாங்க.. இதையே போட்டுட்டு போ" என்று கூற,

"அப்ப அக்கா எதையும் எடுத்துட்டு போகலையா?" என்றாள்.

"அப்படி போயிருந்தா..." என்று உமாவே பல்லைக் கடிக்க, வாயை மூடிக் கொண்டாள் திக்ஷி.

"காசு ஏது இதை திருப்ப?" என்று கேட்க,

"அதெல்லாம் இப்ப எதுக்கு? அப்புறம் பேசிக்கலாம்" என்றவர் மகள் செல்லும் பொழுது கொண்டு செல்ல வேண்டிய பலகாரங்களை எடுத்து வைக்க தயாரானார்.

"உன் வீட்டுக்காரர் கீழே வந்ததும் சொல்லு.. நான் போய் உனக்கு ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிடுறேன்" என்றுவிட்டு செல்ல, காபியை கொடுத்துவிட்டு அங்கேயே வாசு அருகில் நின்றாள் திக்ஷிதா.

"கிளம்பிட்டாங்களா எல்லாரும்? போகலாமா?" காபியைப் பருகியபடி வாசு கேட்க,

"ஆறு மணிக்கு தானே சொன்னாங்க? மணி நாலு தான் ஆகுது" என்றாள்.

"ஹ்ம்!" என்றவன் அவளைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருக்க, வாசு மொபைல் அழைத்தது.

தொடரும்..
 
Last edited: