• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 21

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
நதி - 21

மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது! அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது.!


மதி.! மதி என்றதும் அவனுக்குள் கதிரவனின் மேல் ஒரு பெருங்கோபம் தானாய் கொழுந்து விட்டெரிந்தது.

கதிரவனைப்பற்றி விசாரிக்கும் போதுதான், அவனுக்கு மதியைப்பற்றிய உண்மையும் தெரிந்தது. அபியின் வாழ்க்கையில் இருந்து கதிரவனை தூர நிறுத்த வேண்டும் என்றுதான் அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தது.

ஆனால் அதில் அவனுக்கு கிடைத்த தகவல்கள் அவனே எதிர்பார்க்கவில்லை. அதில் மதியும் அவனிடம் மாட்டியிருக்கிறாள் என்று தெரிந்தபோது கதிரவனின் முடிவு அகோரமாகத்தான் இருக்கும் என்று முடிவே செய்துவிட்டான் கார்த்தி.

திருநங்கைகள் மீது மிகப்பெரும் மரியாதை உண்டு கார்த்திக்கு, அவனது கடை மற்றும் ஆஃபிசில் கூட அதிகமான திருநங்கைகளைத்தான் வேலைக்கு வைத்திருக்கிறான்.

சிவநேசனுக்கும் கார்த்திக்கும் ஒத்து வராத ஒரே இடம் இதுதான்.

ஒருகாலத்தில் இந்த சமுதாயத்தை சீரழித்தவர்கள் அவர்கள் என்று பெரியவர் சொன்னால், இந்த சமுதாயத்தால் சீரழிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பான் பேரன்.

கார்த்தியிடம் இந்த ஒரு நடவடிக்கையை மட்டும் யாராலும் மாற்றவே முடியவில்லை.

அன்றும் கூட மதியை கல்லூரியில் இருந்து அழைத்து வருவதற்காகத்தான் சென்றிருந்தான். அப்போது சாரதா என்ற திருநங்கை அவனுக்கு மிகவும் பரிச்சயம். அவரை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். அவரிடம் தான் பேசிக்கொண்டிருந்தான்

அப்போது அந்த வழியாக சென்ற கதிரவனைப் பார்த்ததும் சாரதா “இவனெல்லாம் என்ன மனுஷனோ தெரில, பணத்துக்காக என்ன என்ன வேலை எல்லாம் செய்றான்” என அறுவறுப்பாக கார்த்தியிடம் சொல்ல, கார்த்திக்கோ சாரதாவின் பேச்சில் புருவம் சுருக்கினான்.

“என்ன சொல்றீங்க சாரதா? இந்தாளை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.?” என சற்று பதட்டமாக கேட்க,

“ஏன் தெரியாம? இவன்தான் இங்குட்டு புரோக்கர் தம்பி. புரோக்கர்னா பொம்பளைத் தொழிலுக்கு மட்டுமில்ல எல்லாத்துக்கும். ஆம்பளைக்கு, பொம்பளைக்குன்னு எல்லாத்துக்கும் ஆள் பிடிச்சு கொடுப்பான். முன்னாடியெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களுக்குத்தான் பொண்ணுங்கள பிடிச்சி கொடுத்துட்டு இருந்தான், இப்போ படிக்கிற பசங்களுக்கு ஆசையைக்காட்டி இந்த வேலை பன்றான்.” என ஆத்திரமாக சொல்ல,

“என்ன சொல்றீங்க..” என்றவனுக்கு கதிரவனை இப்படியென்று யோசிக்கவே முடியவில்லை. ஆனாலும் உண்மை அதுதான் எனும்போது என்ன செய்ய முடியும்.?

“ஆமா தம்பி.. நல்ல வசதியான வீட்டுப்புள்ளைங்கள பிடிச்சி, அதுங்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்கி, அதுங்களை உடம்பு சுகத்துக்கு பழக்கி விட்டுடுறான் தம்பி..” என்றவருக்கு கதிரவனின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

“உங்களுக்கு எப்படி தெரியும் சாரதா.?” என்ற நேரம் மதி “அண்ணா போலாமா?” என்று அவனிடம் வர,

அதே நேரம் சாரதாவைப் பார்த்த மதியும், மதியைப் பார்த்த சாரதாவும் ஒரு சேர அதிர்ந்து போயினர். இவர்கள் இருவரின் அதிர்ச்சியை உணரும் நிலையில் கார்த்தி இல்லை. அவனுக்கு கதிரவனைப்பற்றிய உண்மைகள், அபியின் மேலான நல்லெண்ணங்களை கீழாக்கிக் கொண்டிருந்தது.

“நீ நீங்க இங்க என்ன பண்றீங்க?” என அதிர்ச்சியில் மதி கேட்க,

“நானும் அதேதான் கேட்குறேன், நீ இங்க என்ன பன்ற?” என சாரதாவும் சற்று அழுத்தி கேட்க, அந்த அழுத்தத்தில் நிகழ்வுக்கு வந்த கார்த்தி, “இவ என் தங்கச்சி சாரதா, எங்க வீட்டுக்கே ஒரே பொண்ணு இவதான். சரி நீங்க டைம் கிடைக்கும் போது ஆஃபிஸ்க்கு வாங்க பேசலாம். இப்போ கிளம்பறேன்..” என காரில் ஏற,

“ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணாக்கிட்ட எதையும் சொல்லிடாதீங்க, நான் இப்போ எந்த தப்பும் செய்றதில்ல.” என கார்த்திக்கு தெரியாமல் மதி சாரதாவிடம் கெஞ்சிவிட்டு செல்ல, அது கார்த்தியின் காதில் இப்போது தெளிவாக விழுந்தது.

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. என்ன பிரச்சினை என மதியிடம் கேட்கலாம், அவள் உண்மையை சொல்லமாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.

அதே சமயம் மதியை வைத்துக்கொண்டு சாரதாவிடமும் கேட்க முடியாது. உண்மையை மறைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மதிக்காக சாரதா உண்மையை சொல்லாமல் விடலாம்.

அதனால் அமைதியாகவே வண்டியை ஓட்டினான். அடுத்தநாள் கார்த்தி வரும் முன்னே ஆஃபிசில் காத்திருந்தார் சாரதா. அவரையும் அவர் முகத்தில் தெரிந்த பதட்டமும் பிரச்சினை பெரிதுதான் என்று புரிய வைத்தது கார்த்திக்கு. அவரை உள்ளே அழைத்து விசாரித்தான்.

“ஸாரி சார். உங்க டைமை வேஸ்ட் பண்றேன்..” என்ற சாரதா, அவனின் புரியாத பாவனையில் “அந்த கதிரவனைப் பற்றி சொன்னேன்ல, அவனோட லிஸ்ட்ல உங்க தங்கையும் இருக்கா. அதாவது வசதியான வீட்டு பசங்க லிஸ்ட்ல” என்று பட்டென சொல்ல, கார்த்தியின் பார்வை கூர்மையாகியது.

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மதுரைல ஒரு பப்ல இருந்து ஒரு பொண்ணை காப்பாத்தினேனு சொன்னேன்ல அது உங்க தங்கைதான். ஃபுல்லா குடிச்சிருந்தா, அதோட போதை மருந்தும் எடுத்திருக்கா? யார் வந்து என்ன செய்றாங்கனே தெரியாத அளவுக்கு போதை.” என்றதும் அமர்ந்திருந்த சேரில் இருந்து பட்டென்று எழுந்துவிட்டான். அவன் உடல் கோபத்தில் இறுகிப் போனது.

“என்ன சொல்றீங்க.?” என்றான் அதிர்வாக

“உண்மை சார். நான் ஏன் பொய் சொல்ல போறேன். அதுவும் உங்ககிட்ட.” என்றதும், கார்த்தியின் உடல் தளர்ந்தது. ஆம்! அவர் ஏன் பொய் சொல்லவேண்டும்.

“எனக்கு தெளிவா சொல்லுங்க..” என்றான் உள்ளே போன குரலில்.

“அன்னைக்கு உள்ள என்ன நடந்ததுனு எதுவும் எனக்குத் தெரியல சார். ஆனா பப் விட்டு வெளிய வரும்போதே உங்க தங்கை முழு போதையில் இருந்தாங்க, சுத்தமா நிதானம் இல்ல. வழியில் போறவன் வர்றவன் எல்லாம் *******விட்டு போனாங்க. அதைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்துடுச்சு. நான் போய் அவனுங்களை எல்லாம் தள்ளிவிட்டுட்டு அந்த பொண்ணை ஆட்டோவில் ஏத்தினேன். அப்போதான்” என்றவர் கார்த்தியைப் பார்க்க அவன் விழிகள் சிவந்து, விட்டால் இப்போதே மதியை கொன்றுவிடும் அளவிற்கு கோபத்தில் இருக்கிறான் என்று புரிந்தது.

“ஸார் நீங்க கோபத்துல அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க, நான் முழுசா சொல்லிடுறேன்..” என்றவர், “நான் மதியை ஆட்டோவில் ஏத்தினதும் இந்த கதிரவன்தான் வந்து எங்கிட்ட சண்டை போட்டது” என்றார்.

“ஏய் யாருடி நீ.. எப்படி இந்த இடத்துக்கு வந்த? எங்க வீட்டு பொண்ணை எங்க கொண்டு போற?” என கதிரவன் சாரதாவிடம் சண்டைக்கு செல்ல,

“அடிங்க்*** யாருக்கிட்ட வந்து எகிறிட்டு நிக்கிற, வகுந்துடுவேன் வகுந்து. ஏண்டா நாதாறி இது உன்வீட்டு பொண்ணா? இதை நான் நம்பனுமா? இப்படித்தான் உன் வீட்டு பொண்ணுங்கள ****கொடுத்து சம்பாரிக்கிறியா?” என சாரதா லோக்கலாக இறங்கி வந்து பேச, அதற்குள் அவர்களை சுற்றி சிறுகூட்டம் வந்துவிட்டது.

ஆனால் அனைத்தும் அரை போதையிலும், முழு போதையிலும் இருக்க, அதிலும் இருவர் மதியைப் பிடித்து வெளியில் இழுக்க பார்க்க, இங்கு இருப்பது சரியில்லையென்று புரிந்து உடனே தன் ஆட்டோவை வேகமாக வெளியில் எடுத்துவிட்டார்.

மதியை அவள் வீட்டில் விடலாம் என்றாலும், அவளைப்பற்றிய எந்த தகவலும் இல்லையென்பதால் தனக்குத் தெரிந்த இடத்தில் தங்க வைத்து, அடுத்தநாள் போதை தெளிந்தபிறகே பல அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தார்.

அப்போதும் மதியைப்பற்றிய தகவல்களைக் கேட்டதற்கு, அவளோ “வேண்டாம்.. என்னை நம்புங்க, இனி இப்படி எந்த தப்பும் செய்யமாட்டேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க. அதனால என்னைப்பத்தி எதுவும் உங்களுக்குத் தெரியவேண்டாம்..” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அன்று நடந்ததையெல்லாம் சொன்னவர், “அடுத்து ரெண்டு நாள் கழிச்சு அந்த கதிரவனை பார்த்தேன் தம்பி. அப்பதான் அவன் எல்லா உண்மையும் சொன்னான்” என்றவர் மீண்டும் அந்த நாட்களுக்கு சென்றுவிட்டார்.

“அட நீயா? என்ன இப்போ எல்லாம் உன்னை அடிக்கடி பார்க்குறேன். என் கண்ணுல பட்டா உனக்கு அதிர்ஷ்டம்தான்.” என்று சிரித்தபடியே சாரதாவிடம் வர,

“அட எச்ச்**ல நாய் நீயா? உன்னை மாதிரி ****கொடுக்குற ஆளுங்கள பார்த்தா எனக்கு அதிர்ஷ்டமா? த்து..” என்றவர், “உன் வீட்டுல பொம்பளைங்க இல்லையா.?” என அருவருப்பாக கேட்க,

“இருக்காங்க.. இருக்காங்க. அதுக்கு என்ன செய்யப்போற? அவங்களையும் சும்மா விடுவேனா என்ன? லம்பா ஒரு பணம் வந்தா அவங்களையும் விட வேண்டியதுதான்.” என லஜ்ஜையே இன்றி கூற,

“ச்சீ நீயெல்லாம் மனுசனாடா? கட்டின பொண்டாட்டிக்கு கூட உண்மையா இருக்கமாட்டியா.? த்துதூ” என்றவர், “உன் குடும்ப கதை எனக்கெதுக்கு? அன்னைக்கு அந்த பொண்ணை என்னடா செஞ்சீங்க.? அவ நைட்டெல்லாம் வலியில அனத்திட்டு இருந்தாடா?” என ஆத்திரமாக கேட்க

“ஹாஹா ஒரு வயசு பொண்ணு குடிச்சிட்டு போதை தெளிஞ்சி உடம்பு வலிக்குதுன்னு சொன்னா, என்ன நடந்திருக்கும்னு உனக்கு தெரியாதா?” என நக்கலாக கேட்டு சிரிக்க, சாரதாவிற்கு உடம்பே அறுவறுத்துப் போனது.

“ச்சீ.. இதெல்லாம் ஒரு பொழப்பா உனக்கு..?” என அதே அறுவறுத்தக் குரலில் கேட்க,

“என்னம்மா நீ? இதுதான் இப்போ கல்லா கட்டுற தொழிலே. தெரியுமா? உனக்கு தெரியாம இருக்குமா? ஆள் வேனும்னா சொல்லு நம்மக்கிட்டயும் இருக்கு.? என அசிங்கமாக பேசி உரச வர,

“த்தூ யாருக்கிட்ட என்ன பேசுற.? முட்டியை மடக்கி ஓங்கி ஒன்னு கொடுத்தா என்னைப்பத்தி தெரியும்?” என்றதும்,

“அடப்போம்மா ஆள் பார்க்க டக்கரா இருக்கயேன்னு பேச வந்தா, ரொம்பத்தா பத்தினி வேசம் போடுற.. உன்னை மாதிரி பத்தினி வேசம் போட்ட எத்தனையோ பேரை நான் பார்த்துருக்கேன், யாரையோ ஏன் சொல்லனும்? அன்னைக்கு நீ காப்பத்தினதா நினைச்சு கூப்பிட்டு போனியே அவளும்தான் என்னை மாதிரி ஒரு பத்தினி இல்லன்னு பேசினா? ஒரே ஒரு மாத்திரைதான். அப்புறம் யார் தொட்டாங்க, யார் விட்டாங்கன்னே தெரியாம போதையில இருந்தா.” என கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அசிங்கமாக பேச,

“நீயெல்லாம் கண்டிப்பா நல்ல சாவு சாவமாட்டடா? உன்னோட இந்த ஈன செயலுக்கு அசிங்கமா, அழுகிப்போய் தான் சாவ..” என்று சாபத்தை விட்டுவிட்டு தன் ஆட்டோவில் கிளம்பிவிட்டார்.

“அன்னைக்கே அவனை கொன்னுடனும் போல ஆத்திரம் தம்பி. ஆனா எனக்கு முடியல. இப்போ அது உங்க தங்கச்சின்னு தெரிஞ்ச பிறகு ஏன் அவனை கொல்லாம விட்டோம்னு ஆத்திரமா வருது..” என தன் கோபத்தை அடக்க முடியாமல் சாரதா பேச, கார்த்தியிடம் சத்தமே இல்லை.

அவன் அமைதியைப் பார்த்து பயந்த சாரதா “தம்பி..” என இழுக்க, “இனி நான் பார்த்துக்கிறேன், எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ங்க. இதைப்பத்தி யாருகிட்டயும் எப்போவும் நீங்க பேசக்கூடாது..” என்றதும்,

“தம்பி இதை நீங்க சொல்லவே வேண்டாம். ஆனா எனக்கு வேற கவலை தம்பி. அடுத்த பொண்ணுங்களுக்கே ஈவு இரக்கம் பார்க்கல, இதுல அவன் வீட்டு பொண்ணுங்களை சும்மா விட்டுருப்பான்னு எனக்கு தோணல தம்பி. ஒருவேளை அவங்களை ரொம்பவே கொடுமைப்படுத்தி வச்சிருக்கானோன்னு பயமா இருக்கு தம்பி. அவன்கிட்ட பேசினதுல இருந்து இதே எண்ணம்தான் எனக்கு. எதாச்சு செய்யனும் தம்பி.” என்றவரின் குரல் யாரோ ஒரு பெண்ணிற்காக உடைந்து அழத் தயாரானது.

“அப்படி எதுவும் நடந்திருந்தா நான் அவனை சும்மா விட்மாட்டேன் சாரதா. நீங்க தைரியமா போங்க. அவனை நான் என்ன செய்யனுமோ அதை தரமா செஞ்சிடுறேன்.” என்றவனின் குரலில் இருந்த உறுதியும் வெறியும் சாரதாவிற்கே பயத்தை கொடுத்தது.

அதுவரை சரளமாக அபியிடம் சொல்லிக்கொண்டு வந்தவன் அடுத்து சிறு இடைவெளி விட்டான்.

இனிதான் அவன் கதிரவனை எப்படி தன் கட்டத்திற்குள் கொண்டு வந்தான் என்று சொல்லப்போகிறான். அதைக் கேட்டால் அபி தன்னைப்பற்றி என்ன நினைப்பாள் என்ற தயக்கம்தான் அவன் சொல்ல வந்ததை நிறுத்த வைத்தது.

ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். அதனால் ஒரு பெருமூச்சைவிட்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.





 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அட பைத்தியக்கார டேஷே
இவந்தான் ஒரு பைத்தியம்னா, இதுக்குமேல ஒரு வக்கிரம் பிடிச்ச சைக்கோ இருக்கும்போல