• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 23



கார்த்தியின் அந்த சத்தத்தில் டாக்டர் நர்ஸ் என அனைவரும் வந்துவிட, அடுத்த சில மணி நேரங்கள் அவளுக்கான சிகிச்சை நேரம் எனக் கழிய, கார்த்தி தான் தவித்து துடித்து போனான்.



‘என் அபி எனக்கு வேணும், அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது’ என்ற வேண்டுதலை மட்டுமே ஜெபம் போல மனதுக்குள் கூறிக்கொண்டே இருந்தான்.



அதே நேரம் இனி அவளைத் தனியாக சமாளிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அதனால் மனோகரிக்கும் தன் தாத்தாவிற்கும் அழைத்து, முதலில் தயங்கினாலும் அடுத்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டான்.



மனோகரியைப் பார்த்த சில நாட்களிலேயே அவள் அபி மேல் வைத்திருந்த அன்பும், புரிதலும்தான் கார்த்தியை அவளிடம் அனைத்தையும் கூற வைத்தது.



மனோகரியும் கார்த்தியின் நம்பிக்கையை பொய்யாக்கவுமில்லை.



முதலில் கார்த்தி தன்னிடம் கூறியதை ஒருமுறைக்கு பலமுறை தனக்குள்ளே அசைபோட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.



அவன் எதற்காக செய்தான் என்பதை புரிந்து, அதன்பிறகே முரளிக்கும் வீட்டிற்கும் கூறினாள். அவள் கூறிய விதத்திலேயே கார்த்தியின் மேல் அவர்களுக்கு தப்பான எண்ணம் வரவில்லை.



அவர்களை ஓரளவிற்கு பக்குவப்படுத்தியே மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள் மனோகரி.



மனோவின் மூலம் கேட்ட எதையும் முரளியால் நம்பவே முடியவில்லை. கதிரவனை தன் தந்தை என்று நினைப்பது கூட அவனுக்கு அவமானமாக இருந்தது.



இனி நொடிக்கூட தங்கையை இங்கு விட்டு செல்லக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்து பயமும் பதட்டமுமாகவே வந்தான்.



அவர்கள் வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கு வந்திருந்தார் சிவநேசன். வந்தவர் கார்த்தியை உண்டில்லை என்றாக்கிவிட்டார்.



பேரன் கூறியதில் இருந்து அவருக்கு புரிந்தது, அவன் மதிக்காக எதையும் செய்யவில்லை, அந்த பெண்ணிற்காக. அவளை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பொறுமையாக கதிரவனை டீல் செய்திருக்கிறான் என்று புரிந்தது.



எவ்வளவு பெரிய விசயத்தை யாரிடமும் சொல்லாமல், அவனாகவே முடிவெடுத்து எத்தனை வேலை பார்த்திருக்கிறான்.



இதில் அவர்கள் வீட்டுப்பெண்ணும், குடும்ப கௌரவமும் அடங்கியிருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லையா.?



முதல்முறையாக கார்த்தியின் செயல் அந்த பெரியவருக்கு பயத்தையும் கோபத்தையும் கொடுத்தது.



“சரி இப்போ நீ என்ன செய்யனும்னு நினைக்கிற, அந்த கதிரவனை என்ன செஞ்ச.? எதுக்காக அவனை இவ்வளவு நாள் விட்டு வச்சிருந்த.?” என கோபம் இருந்தாலும், நிதானமாகவே கேட்டார் சிவநேசன்.



அவருக்கு பயம் வேறு. எங்கே கோபமாக பேச ஆரம்பித்தால், வீம்புக்கேனும் ‘அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யப்போறேன்’ என்று சொல்லி விடுவானோ என்று பயந்தார்.



ஏனென்றால் பெற்றவர்களை விட அதிகம் கார்த்தியைப் பற்றி தெரிந்தவர் சிவநேசன்தான். அதனாலே நிதானமாக கையாண்டார்.



“தெரில..” என பெருமூச்சு விட்டவன், “எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு.” என்றான் சாதாரணமாக.



கார்த்தியின் பதில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் “அவளுக்கும் உன்னைப் பிடிக்கனும்..” என்றார் நிதானமாக.



“பிடிக்கும்.. பிடிக்க வைப்பேன்.. பிடிக்கலன்னாலும் அவளை என்னால விடமுடியாது..” என்றான் இறுக்கமாக.



“ம்ச் கார்த்தி நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்னு சொல்ல முடியாது. இதுவரைக்கும் நீ கேட்டது, செஞ்சது எல்லாம் எனக்கு சரியாப்பட்டது அதனால சரின்னு சொன்னேன். இது அப்படி கிடையாது. நம்ம குடும்ப கவுரவம் இதுல இருக்கு. உன் இஷ்டத்துக்கு எதையும் செய்ய முடியாது..” என்றார் கண்டிப்புடன்.



“ம்ச் தாத்தா..” என கார்த்தி ஏதோ பேச வரும் முன்னே முரளியும் மனோகரியும் பதட்டமாக உள்ளே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அமைதியானவன், முரளியை ஒரு ஆராயும் பார்வை பார்த்தான்.



பின் அவன் கையைப் பிடித்து “ஸாரி முரளி இவ்ளோ லேட்டா சொல்றதுக்கு, பட் எங்களுக்கு வேற ஆப்சனும் இல்லை. எங்களைத் தப்பா நினைக்காதீங்க என்றான்..” தேர்ந்த வியாபாரியாக.



இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட முரளிக்கு தெரியவில்லை. கடும் கோபம்தான். ஆனால் தவறு அவன் தந்தையிடம் இருக்கும்போது அவனால் என்ன செய்துவிட முடியும். அமைதியாக கேட்டுக்கொண்டான்.



“அபியை பார்க்கலாமா.?” என பதட்டமாக மனோகரி கேட்க,



“ம்ம் வாங்க..” என்றபடியே அபியின் அறைக்குள் அழைத்துச் சென்றான். அப்போதும் அபி மயக்கத்தில் தான் இருந்தாள்.



தங்கையின் இந்த கோலத்தைப் பார்த்த முரளிக்கு நெஞ்சமெல்லாம் வேதனையில் வலித்தது. அபியின் கைகளைப் பிடித்தபடி அவளுக்கருகில் அமர்ந்துவிட்டான்.



மனோவும் முரளியின் அருகில் நின்று அபியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.



சில நிமிடங்களுக்குப் பிறகு அபியின் மேலிருந்த பார்வையை விலக்கி கார்த்தியைப் பார்த்த முரளி, “அந்தாளு இன்னும் உயிரோட இருக்காரா.?” என்றான் ஆத்திரமாக.



அப்படி உயிரோடு இருந்தால் கொன்றுவிடும் அளவுக்கு கோபம் அவன் விழிகளில் தெரிந்தது.



“ம்ம் இருக்கான். உங்க தங்கச்சி வந்து தான் அவனை என்ன செய்யனும்னு சொல்லனும்..” என்றான் இறுகிய குரலில்.



“அவ வந்து ஏன் சொல்லணும் நானே சொல்றேன் அந்தாள கொன்னுடுங்க” என்றான் ஆக்ரோஷமாக.



“எனக்கும் அதே எண்ணம் தான் ஆனால் உன் தங்கச்சி எழுந்து வந்து என் அப்பா எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்.?” என்றான் அதே குரலில்.



“இனி அந்தாளு இருந்தாலும் இல்லனாலும் எங்களுக்கு ஒன்றுதான், நான் இனி அபியை இங்க விட்டுட்டு போக மாட்டேன். அவர பத்தி நான் யோசிக்கக்கூட மாட்டேன். நீங்க அவரை என்ன செய்யணுமோ செய்ங்க. நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்.” என்றான் முரளி.



அபியை அழைத்து செல்வேன் என்றதும், கார்த்தியின் முகத்தில் தோன்றிய மாறுதல்களை, கவனித்த மனோகரி “மாமா அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல அபி எழுந்துக்கட்டும்.” என அந்த பேச்சுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தாள் மனோகரி.



இவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிவ நேசனுக்கு சட்டென்று ஒரு எண்ணம், அவர் பார்வை முரளியைத் தொடர்ந்தது.



பேரனைப் பார்த்து கண்ணசைத்தவர் வெளியில் செல்ல, அவருக்கு பின்னே கார்த்தியும் சென்றான்.



“சொல்லுங்க தாத்தா” என்றபடியே வந்தவனிடம்,



“எனக்கு சுத்தி வளச்சு பேச விருப்பமில்ல, நம்ம மதியைப்பத்தி நீ என்ன யோசிச்சிருக்க” என்றார் சற்றே கிண்டலாக.



என்ன தாத்தா? என்ன திடீர்னு மதியைப்பத்தி கேக்குறீங்க, மதியைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு. அவளோட ஸ்டடிஸ் முடிஞ்சதும், அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிச்சிட வேண்டியதுதான்.” என்றான் சாதாரணமாக.



“நல்லா யோசிச்சுதான் சொல்றியா?” என்றார் பெரியவர்.



அந்த குரலில் சிறு நக்கல் வழிந்ததோ என்று, கார்த்தி சந்தேகமாக அவரைப் பார்க்க, ஆம் நக்கல்தான். அவர் முகத்தில் கிண்டலான ஒரு பார்வை இருந்தது.



“நீங்க என்ன சொல்ல வரீங்களோ அதை தெளிவா எனக்கு சொல்லுங்க தாத்தா. இப்படி பொடி வச்சு பேசுறதெல்லாம் வேண்டாம். அதைக் கேட்கிற மூடுல நான் இல்ல.” என்றான் கார்த்தி எரிச்சலாக.



“அந்தப் பொண்ண பார்த்ததும் உன் மூளை மழுங்கிடுச்சுன்னு எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே தெரிஞ்சது.” என கிண்டலாக பதில் கொடுத்தவர், “உன் தங்கச்சி செஞ்சு வச்ச காரியத்துக்கு, அவளுக்கு யாரு மாப்பிள்ளை தருவா? அவள பத்தின உண்மைகளை மறைத்து எப்படி கல்யாணம் செய்ய முடியும். நம்ம சாதிசனத்துலையோ, இல்ல வெளியவோ நம்ம கௌரவத்துக்கும் அந்தஸ்துக்கும் தகுதியான மாப்பிள்ளை எப்படி கிடைப்பான். கண்டிப்பா அதுக்கு வாய்ப்பில்லை. அப்படியே கிடைச்சாலும் நம்ம சொத்துக்காக வருவாங்க அப்படி வர்றவங்க நம்ம பொண்ணை எப்படி நல்லா பாத்துப்பாங்க.” என்று கைதேர்ந்த ஒரு வியாபாரியாக பேரனிடம் பேசினார்.



பெரியவரின் பேச்சு கார்த்திக்கும் சிலது புரிந்தது. அவனுக்கும் இந்த பயம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அவளைப் பற்றிய உண்மைகளை மறைத்து ஒரு திருமணத்தை செய்து வைக்க அவன் விரும்பவில்லை. இப்போது சிவனேசன் பேசுவதை கேட்டபிறகு, அவர் ஏதோ ஒரு முடிவுடன் இருப்பதாக அவனுக்குத் தெரிந்தது.



அதனால் அவரே மீதியையும் சொல்லட்டும் என்று அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.



“உனக்கு ஓரளவுக்கு புரிஞ்சிருச்சின்னு எனக்கு தெரியுது. ஆமாம்! நீ அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம்தான். வீட்ல இருக்கிறவங்களையும் என்னால சமாளிக்க முடியும். ஆனா அந்தப் பையன் முரளியை நம்ம மதிக்கு கட்டி வைக்கணும். அவனும் நம்ம வீட்டோட மாப்பிள்ளையா நம்ம வீட்டுக்கு வரணும். இதுக்கு சரின்னு சொன்னா உன் கல்யாணத்தை பத்தி நான் வீட்ல பேசுறேன்.” என்றார் முடிவாக.



கார்த்தியைபற்றி எப்படி அனைத்தும் சிவநேசனுக்கு அத்துப்படியோ, அதேபோல்தான் சிவனேசனை பற்றிய அனைத்தும் கார்த்திக்கு அத்துப்படி. அவனின் தொழில் குருவே அவர்தானே.



அவர் எப்படியும் இதுபோலத்தான் யோசிப்பார் என்று அவன் முன்னமே நினைத்திருந்தான். அதை சரியாக காட்டிவிட்டார்.



தன் தாத்தாவின் திறமையை மனதுக்குள் மெச்சிக்கொண்டான். ஆனால் அவர் எண்ணம் நடக்காது என்று அவனுக்கு ஏற்கனவே புரிந்தது.



ஏனென்றால் அவன் முரளியையும் மனோகரியையும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். இருவருக்குள்ளும் இருக்கும் அந்த உறவு, அவர்கள் உறவுக்காரர்கள் என்பதையும் தாண்டி ஒருவர் மனதில் ஒருவர் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொண்டே இருந்தது.



அது தெரிந்தும் அவனுக்கு புரிந்தும் எப்படி முரளியிடம் பேசுவான்.



ஆனால் தாத்தாவிற்காக அவரின் மன ஆறுதலுக்காக, முரளியிடம் மேலோட்டமாக பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.



அதனால் சிவனேசனிடம் “சரிங்க தாத்தா நீங்க சொல்ற மாதிரி நான் முரளிக்கிட்ட பேசுறேன். முரளி சரின்னு சொன்னாலும் வேண்டாம்னு சொன்னாலும் அதை நான் ஏத்துக்குவேன். மதியோட லைபை என்னோட லைஃப் கூட சேர்த்து நீங்க ப்ளே பண்ணாதீங்க. வீட்லயும் சரி, நீங்களும் சரி யாரும் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் அபியை நான் கல்யாணம் செய்யப்போறது உறுதி. என்னோட முடிவை மாத்த யோசிக்காதீங்க. நீங்க உங்க முடிவை மாத்த முயற்சி பண்ணுங்க” என்றவன் மீண்டும் அபியின் அறைக்குள் நுழைந்தான்.



கார்த்தியை பார்த்ததும் முரளி எழுந்துகொள்ள, “மனோ நீங்க கொஞ்ச நேரம் அபி கூட இருங்க, நான் முரளிக்கூட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு..” என்றதும்,



“கண்டிப்பா சார். நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க..” என்றவள் அபிக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.



அறையை விட்டு வெளியே வர, “சரி கார்த்தி நான் கிளம்பறேன், அங்க மதி எப்படி இருக்காளோ தெரியல, நீயும் சீக்கிரம் அங்க வந்துடு, அதுதான் அந்த பொண்ணோட சொந்தம் வந்துட்டாங்களே..” என கார்த்தியைப் பார்த்து சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.



இனி அபியோடு இருக்க வேண்டாம் என்று சூசகமாக சொல்லி செல்லும் தாத்தாவைப் பார்த்து பல்லைக் கடித்தான் கார்த்தி.



அவர் நகர்ந்ததும் கார்த்தியின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான் முரளி. “உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுனே தெரில சார். அவளைக் காணாம இந்த ரெண்டு நாள்ல என் உயிரே எங்கிட்ட இல்ல சார். அவளுக்கு எல்லாமே பயம் சார். எப்படி எங்க மாட்டிக்கிட்டு தவிக்கிறாளோன்னு நான் துடிச்சு போயிட்டேன் சார். நேரம் ஆக ஆக அவள் உயிரோட இருக்காளோ இல்லையோன்னு கூட பயந்துட்டேன் சார். இப்போ அபியை முழுசா பார்க்கவும்தான் எனக்கு நிம்மதியா இருக்கு சார். இந்த உதவிக்கு நன்றியா என் உயிரைக் கொடுத்தா கூட தகும் சார். ரொம்ப ரொம்ப நன்றி சார்.” என்றான் முரளி உணர்ச்சிப் பெருக்குடன்.



“பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் முரளி. அதோட உங்களை வாங்கினா கூட யூஸ் ஆகும். உங்க உயிரை வாங்கி நான் என்ன செய்ய..” என்றான் சிறு புன்னகையுடன்.



கார்த்தியின் பேச்சில் முரளி குழப்பமாக பார்க்க, “எஸ் முரளி, எங்க தாத்தாவுக்கு உங்களை எங்க வீட்டு மாப்பிள்ளையா ஆக்கிக்க ஆசை. என்னை உங்ககிட்ட பேச சொல்லிட்டு போறார்.” என்றதும் முரளியின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
149
43
Theni
குடும்பமே வில்லத்தனமா தான் யோசிக்குமா?
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
128
43
Tanjur
என்ன ஒரு வில்லத்தனம் இந்த பெருசுக்கு