இரண்டாம் வாழ்வு
பேருந்தில் இருந்து இறங்கி, மனதில் பயத்தோடு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் வர்ஷா. இந்தப் பயம் இன்று மட்டுமல்ல, சில தினங்களாக அவளுக்குள் உருவெடுத்துப் பெண்மையை ஆட்டிப் படைக்கின்றது. காரணம் அவன். ஆனால் பயம் அவனை நினைத்து அல்ல, அவளை எண்ணியே! எங்கே தனக்குத்தானே விதித்துக் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்து விடுமோ என்று!
'அவனிருக்கும் புறம் திரும்பாதே!' எனக் கருவிழிகளுக்குக் கட்டளை விதித்து நேர் பார்வையுடன் நடந்தவளை, பரந்தாமனின் அழைப்புத் தடுத்து நிறுத்தியது.
"மாமா.." எனத் திரும்பியவளிடம், "என்னமா இவ்வளவு சீக்கிரம் வந்திட்ட?" என்றவாறே வந்தார்.
"பஸ்ஸு சீக்கிரம் வந்திடுச்சு மாமா"
"சரி சரி, கண்ணா நான் வர்றேன்டா!" என அங்கிருந்தவனிடம் விடைபெற்று நகர்ந்தவர்.. நொடி நிதானித்து, "இங்க வா"
"என்ன சார்..?" என்று அருகே வந்தவனிடம், "இது வர்ஷா!" என அறிமுகப்படுத்தி.. அவளிடமும், "இவன் என்னோட ஸ்டூடண்ட் மா!" என்றார் அந்த ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளர்.
"வணக்கம்" எனக் கைக்கூப்பியவளைக் கண்டு கள்ளப் புன்னகைச் சிந்தியவன், "வணக்கம் மட்டும் தானா மேடம்? வீட்டுக்குக் கூப்பிட்டுக் காஃபி, டீ எதுவும் கொடுக்கமாட்டீங்களா..?"
அவள் திகைக்க, "அட படவா இப்பத்தான என் பொண்டாட்டிக் கையால டீ குடிச்சிட்டு வந்த.?" என்று முன்னாள் மாணவனின் தோளில் வலிக்காமல் அடித்தவர், "அவன் விளையாடுறான்மா, நீ தப்பா நினைச்சிக்காத!" என்றபடி வர்ஷாவுடன் தங்களது வீடு நோக்கி நடந்தார். முன்னோக்கி நடந்தவளின் உடல் பின்னிருந்தவனின் ஊடுருவும் பார்வையை உணர்ந்தது.
கண்ணனுக்கு அவளை முதன் முறையாய்க் கண்ட நொடி நினைவிற்கு வந்தது. பேருந்து பயணத்தில் பயணச்சீட்டிற்காகக் கால்சராயில் பணம் எடுக்கும் நேரத்தில்.. ஓட்டுனர் திடீரென்று அழுத்திய விசையில் நிலைத்தடுமாறி அருகே நின்றிருந்த பெண்ணின் மீது மோத, ஆடவனின் கை அவளின் இடையில் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டது.
"பொறுக்கி!" என்று அவனது கன்னத்தில் அறைந்துவிட்டுச் சென்றவளைப் பற்றிக் கவலைக் கொள்ளாது, தன்னைப் புழுவைப் போல் நோக்கிய வர்ஷாவின் பார்வையில் குறுகிப் போனான்.
அவளுக்காகத்தான் அவன் வந்தது, அவளைக் காணவே வந்தது! 'அறிமுகமற்ற முதல் பார்வையே இப்படியா அமைய வேண்டும்?' என மானமுள்ள மனது தன்னையே நொந்து கொண்டது.
அதன்பின்பு அவளின் துச்சமான பார்வையில் நேரடியாகப் பேசும் தைரியம் வராததால்.. பாவையவள் பணிக்குச் செல்லும் போதும், பணியிலிருந்து திரும்பும் போதும் கண்களாலேயே தொடர்ந்து கொண்டிருந்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன் அதேபோல் ஒரு பேருந்து பயணம். இம்முறை கூட்ட நெரிசலில் வர்ஷா அவனின் அருகே நெருக்கமாய் நிற்க வேண்டியதாயிற்று. பிடிமானத்திற்காகப் பேருந்தில் இருந்த கம்பி எதையும் பிடிக்க முடியாத நிலையில், வேறு வழியின்றி அவனின் மேல்சட்டையைப் பற்றிக் கொண்டாள்.
இருவரது தேகங்களும் உரசிக் கொண்டன. 'அவன் தன்னைத் தவறாக நினைத்து விடுவானோ.?' என்றெண்ணி பரிதவித்துப் போனாள் பாவை.
இயலாமையுடன் நிமிர்ந்து பார்த்தவளிடம், "இது நடக்கிறது தான். கண்ணால பார்க்கிறதும் பொய், காதால கேட்கிறதும் பொய்! தீர விசாரிச்சு உண்மையைத் தெரிஞ்சிக்கணும் மேடம். அதைவிட்டுட்டு அது என்ன எப்ப பார்த்தாலும் குற்றவாளியை மாதிரி பார்க்கிறது..?
இன்னைக்கு நீங்க இருக்கிற நிலைமையில தான் அன்னைக்கு நானும் இருந்தேன்! பட் உங்களை நான் தப்பா நினைக்கல!" எனச் சிரித்தவனைக் கண்டு முதன்முதலாய் தவறு செய்துவிட்ட உணர்வோடு இணைந்து, வேறு எதுவோ அவளுக்குள் உருவெடுத்தது.
பயணம் முடிந்து இறங்கியவளை அவனும் பின்தொடர்ந்து வீடுவரைக்கும் வர, பயம் தொற்றிக் கொண்டது நங்கைக்கு. ஒருமுறை திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாது, இல்லத்திற்குள் சென்றாள்.
அதன்பின்பான அவனின் தொடர்ந்த பார்வைகள்.. அவளை இன்னும் நெருங்கியது, சற்றே உரிமை உணர்வோடு. 'யார்? என்ன..?' என்று எதுவும் தெரியாது அவனைப் பற்றி! ஆனால் கடக்கும் ஒவ்வொரு முறையும் கண்களுக்கு முன், மனம் அவனை உணர்ந்தது.
கடந்த சில தினங்களாய் கருவிழிகளும் கூட, அவன்புறம் அசையத் துவங்கியிருந்தன. மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்த உணர்வு அவளுக்குள் உருவெடுத்தது. மனமும் மூளையும் 'தவறு!' என எச்சரிக்க.. கண்கள் அந்த எச்சரிக்கையை அவசியமற்றதாய் எண்ணித் தூரப்பார்வையில் நிறுத்தி வைத்திருந்தது!
சமையலறையில் இருந்து வெளியே வந்த சங்கரி.. தன்னை மறந்து அமர்ந்திருந்தவளின் அருகே வந்து, "ஏய் வர்ஷா என்னாச்சு, என்ன பகல்லயே கனவு காணுறியா..? கனவுதான் காணலாம், ஆனா அது கை சேராது! போ.. போயி மூஞ்சியைக் கழுவிட்டு எல்லாருக்கும் காஃபி போட்டுக் கொண்டு வா..!"
மனைவியின் பேச்சைக் கவனித்த பரந்தாமன், "இப்பதான வேலை முடிஞ்சு வந்திருக்கா. அதுக்குள்ள வீட்டு வேலையை அவக்கிட்டத் தள்ளணுமா.? ஏன் அந்தக் காஃபியை நீ போட்டா என்ன? பலகாரம் செஞ்ச உனக்கு, இது செய்ய மட்டும் கஷ்டமா இருக்கா..?"
"ஒருமணி நேரமா அடுப்பு அனல்ல நின்னு.. மசால் வடை செஞ்சிருக்கேன் நான், ஒரு பத்துநிமிசம் அவளும்தான் வேலைச் செய்யட்டுமே..?"
"அதுசரி, எங்க உன் சின்ன மருமகள்..?"
"ராஜ் அவளை இன்னைக்குச் சினிமாக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னானாம். அதான் ரெடியாகிட்டு இருக்கா..!"
அவரின் மனம் சோர்ந்து போனது, வர்ஷாவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை. சமையலறையில் அவளும் அந்நிலையில் தான் இருந்தாள். விழிகளில் அனிச்சையாய் நீர்த் துளிர்த்து வழிந்து மார்பைத் தொட்டது. அவளவனின் தீண்டல் நினைவிற்கு வந்தது.
அனைவருக்கும் குளம்பியைக் கொடுத்தவள், அந்த வீட்டின் இளையராணிக்கும் கொடுக்கச் சென்றாள். புதுப்புடவை உடுத்தி தயாராகி இருந்தாள் அவள்.
வர்ஷாவைக் கண்டதும், "அக்கா இந்தப் பூவை மட்டும் வச்சு விடுறீங்களா.?" என வினவியபடி குண்டு மல்லிகைச் சரத்தை நீட்ட.. அதன் வாசத்தில் கிறங்கிப் போனாள் பெண்ணவள்.
இளையவளின் தலையில் பூவைச் சூட்டிய வர்ஷா, தன் கையை முகத்தின் அருகே கொண்டு சென்று நுகர்ந்து பார்த்தாள். அதன் நறுமணம் பழைய நினைவுகளை எல்லாம் தூண்டிவிட, அனிச்சையாய் தேகத்தின் வெப்ப அளவீடு மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கியது.
அவள் மலர் சூடி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எவரும் 'நீ பூ வைக்காதே!' என்று சொல்லவில்லை. ஆனால் 'இந்தாம்மா பூ வச்சிக்கோ!' என்று அவளிடம் கொடுக்கவும் இல்லை. அவளாகவே தன் உணர்வுகளுக்கு அணைக்கட்டும் விதமாய் அதை நிறுத்திக் கொண்டாள். ஆனால் இன்று ஏனோ ஆசை அடிமனதின் ஆழம் வரை விருட்சமாய்ப் படர்ந்து, அவளின் உறுதியைச் சோதித்துக் கொண்டிருந்தது.
அருகிலிருந்த மேஜையில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணத்தில் ரோஜா பூக்களைக் கண்டவளின் உள்ளம் கரையுடத்து ஆசை வெள்ளம் பெருக்கெடுக்க, "நான் இந்த ரெட் கலர் ரோஸை எடுத்துக்கவா மீனா..?" என்று வினவியவளைப் பார்த்து வெகுளியாய்ச் சிரித்த இளையவள், "எடுத்துக்கோங்க அக்கா" எனக் கொடுத்து, தானும் ஒன்றைச் சூடிக் கொண்டாள்.
அதன் காம்பினை இறுக்கமாய்ப் பிடித்து முட்கள் தன் கைகளுக்குள் ஆழமாய்ப் பதியும்படி செய்தவாறே தன் அறையை நோக்கிச் சென்றாள் வர்ஷா. அவளுக்குத் தனிமை தேவைப்பட்டது, உடல் மற்றும் மனதில் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்கும் உணர்வுகளின் வழித்தடத்தினைக் கண்டறிந்து, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திட!
கூடத்தில் அமர்ந்திருந்த சங்கரியிடம், "அத்தை தலைவலிக்கிற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்!" என்றவளைக் கூர்ந்து பார்த்தவர், "சரி சரி, ஆனா உள்ளப்போயி படுத்திடாத. மணி ஆறாகுது, ஒரு ஏழு மணி போல வேணும்னா படுத்துக்கோ!" என்றிட, தலையசைத்துவிட்டுச் சென்றாள்.
அறைக்கதவைத் தாளிட்டு அதன்மீது சாய்ந்து கொண்டவளுக்கு அவனுடனான தனிமையின் நிகழ்வுகள் நினைவுகளாய் மேலெழும்பி.. பெண்மையின் உறுதியை மெல்ல மெல்ல குறைக்கத் துவங்க.. அதனுடன் பயணிக்க இயலாது, அடுத்தடுத்த நொடிகளில் அடிவயிற்றின் ஆழம்வரை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட்டாள் வர்ஷா. உடல் அனலில் தகிப்பது போலொரு பிரம்மை! மனமும் உடலும் அவனின் அருகாமையைத் தேடியது.
அதனைக் கட்டுக்குள் கொண்டு வர இயலாது அணிந்திருந்த புடவையை அவிழ்த்து எறிந்தவளுக்கு.. முட்டிக்கொண்டு அழுகை வந்தது. அதன் ஒலி வெளியே கேட்டு விடாதபடி ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு, மறுகையால் தலையணையை அணைத்தபடிக் கண்களில் கண்ணீருடன் படுக்கையில் சாய்ந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து எழுந்து கொண்டவளின் கண்களில், எதிர்ப்பக்கம் புகைப்படத்தில் இருந்த விஜயின் பிம்பம் விழ.. அவமானத்தில் கூனிக்குறுகிப் போனாள்.
புடவையை எடுத்துத் தன்மீது போர்த்திக் கொண்டவள், "ஸாரிடா.. ஸாரி ஸாரி. என்ன செய்யிறதுன்னே தெரியல. என்னால உணர்வுகளைக் கண்ட்ரோல் பண்ண முடியல! நீ கூட இல்லாத இந்த ரெண்டு வருசமும், உன் நினைப்பையே சுமந்துக்கிட்டு இருக்கிறது போதுமானதா இல்ல. இந்த உடம்பும் மனசும் எதையோ தேடுது! அது உனக்குப் புரியுதா..?
எவ்வளவு நாளைக்கு இந்தக் கட்டுப்பாட்டு எனக்குள்ள இருக்கும்னு தெரியல. பயமா இருக்கு! எது எதுக்கோ ஏங்குறேன் விஜய். செத்துப் போயிட்டா கூட நல்லது, இந்த அவஸ்தையில இருந்து தப்பிக்கலாம்ன்னு தோணுதுடா! ரொம்ப வலிக்கிது..!" என முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதவளைக் கண்டு, புகைப்படத்தில் இருந்தவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
'நிழல் படமாய் இருப்பவன் அரூபமாய் வெளிவந்தாவது தனக்குள் துளிர்க்கும் உணர்வுகளுக்காக ஏதேனும் ஒரு வழியைக் கண்டறிந்து உரைத்துவிட மாட்டானா?' என்றிருந்தது வர்ஷாவிற்கு. வேகமாய் எழுந்தவள் புகைப்படத்தை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
நேரம் கடந்தது. வெளிப்பக்கம் கேட்ட ஒலியில், ராஜும் மீனாவும்.. பெற்றவர்களிடம் விடைபெற்றுத் திரைப்படத்திற்குச் செல்கின்றனர் எனப் புரிந்து கொண்டாள்.
விஜயின் புகைப்படத்தை உரிய இடத்திலேயே வைத்தவள், அவசரமாய் ஓய்வறைக்குள் புகுந்தாள். நீராடி.. சுடிதாரை உடுத்திக் கொண்டவள், படுக்கையில் விழுந்தாள். கண்களின் ஈரம் காய்ந்தபாடில்லை.
உண்மையாகவே தலைவலித்தது வர்ஷாவிற்கு. இயல்பாய்ப் படுக்க முடியவில்லை, உடலைக் குறுக்கிக் கொண்டாள். தேகம் சுடுவதாய்த் தோன்றியது. நெற்றி, நாசி, காதுகளின் பின்புறம், கழுத்தைச்சுற்றி.. என வரிசையாய் தைலத்தைத் தேய்த்தவள், அதன் வாசத்தையும் ஆழமாய் மூச்சிழுத்து உள்வாங்கிக் கொண்டாள்.
சற்றுமுன் நுகர்ந்த மல்லிகை மணம் உணர்வுகளில் இருந்து காணாமல் போனது. மனவலியும், குற்ற உணர்வும் மட்டுமே நிறைந்திருந்தது.
உறங்க முயன்றவளுக்கு உறக்கம் வரவில்லை. கீழே கிடந்த ரோஜா மலர் பார்வையில் பட, எடுத்துக் கொண்டாள். போர்வையைப் போர்த்தி, தைலத்தின் வாசம் தன்னிடமிருந்து வெளியேறி விடாதபடிப் பார்த்துக் கொண்டாள்.
ரோஜா தண்டின் முட்களை வலக்கையின் ஒற்றை விரலால் வருடினாள். இரண்டாம் முறை சற்று அழுத்தமாய்த் தொட்டவளுக்கு.. முள்ளின் முனை குத்தி வலி எடுக்க, மனவலிக் குறைவதாய்த் தோன்றியது. அடுத்த முறை அழுத்தத்தின் அளவு அதிகரித்து.. வலியின் அளவீடு இன்னும் கூடியது. சுகமாய் இருந்தது வர்ஷாவிற்கு, அந்த அதிகப்படியான வலி! தன்னிலை மறந்து உறங்கிப் போனாள் பாவை.
இரவு உணவிற்காக மூத்த மருமகளை அழைத்த சங்கரிக்கு எந்தப் பதிலும் வரவில்லை, வர்ஷாவின் அறையில் இருந்து. 'தலைவலியால் உறங்குவாள்' என்றெண்ணி அப்படியே விட்டுவிட்டார். கணவரை அழைக்க, இருவருமாக உண்டனர்.
"ராஜூம், மீனாவும் எப்ப வருவாங்க மா.?" என்ற பரந்தாமனின் வினாவிற்கு, "இல்லங்க அவங்க வரமாட்டாங்க"
கேள்வியாய்ப் பார்க்க, "ரெண்டு நாள் லீவுல, அதுனால மீனாவோட வீட்டுக்குப் போறாங்க!"
"ம்ம்.." எனப் பெருமூச்சுவிட்டவர், "போயிட்டு வரட்டும்!"
"ஏங்க நான் ஒரு விஷயம் சொல்லவா..?"
"ம்ம்.."
"வர வர வர்ஷாவோட நடவடிக்கையே சரியில்ல!'
"என்ன சொல்லுற.?"
"ஆமாங்க. மீனாவை வச்சக் கண்ணு வாங்காம பார்க்கிறா! அவங்க எங்கேயாவது வெளிய போறாங்கன்னு தெரிஞ்சாலே முகமெல்லாம் சுருங்கிப் போயிடுது! மனசுல எதையோ வச்சிக்கிட்டுதான், இப்படி எல்லாம் நடந்துக்கிறான்னு நினைக்கிறேன்!"
"என்ன வச்சிருக்கப் போறா, தொலைச்ச தன்னோட வாழ்க்கையை நினைச்சு நொந்துக்கிட்டு இருப்பா..!"
"நீங்க என்னங்க இப்படிப் பேசுறீங்க..?"
"நான் தப்பா எதுவும் பேசலையே சங்கரி? மீனாவை விட வர்ஷாக்கு ரெண்டு வயசு தான அதிகம். அவளுக்கும் ஆசை இருக்கும் தான..?"
"அதுக்கு நாம என்ன செய்யிறது? அதான் போய்ச் சேர்ந்திட்டானே நம்ம பிள்ள..?" என்று மகனை இழந்ததை நினைத்து சங்கரி வருத்தம் கொள்ள, "சரிதான்! ஆனா.. நம்மளை விட அவளுக்கு வலியும் இழப்பும் பெரிசில்லயா.?"
"என்னங்க சொல்லுறீங்க..?"
"மிஞ்சிப் போனா.. நாம என்ன.. இனி இருபது வருசம் வாழுவோமா? ஆனா வர்ஷா.. இப்பதான் அவளுக்கு இருபத்தினாலு வயசாகுது! மீதி அம்பது வருசமும் இப்படித் தனியாவே இருக்கணுமா..?"
சங்கரி குழப்பத்துடன் பார்க்க, "மருமகளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சிடலாமே!" என்றார் பரந்தாமன்.
கணவரது பேச்சில் அதிர்ந்து, "என்ன பேச்சு இது? ஒரு பொண்ணுக்கு ரெண்டு தாலியா.? இப்படி ஏடாகூடமா எதையும் யோசிக்காம போய்ப் படுங்க!" என்ற சங்கரி, தானும் உறங்கச் சென்றார்.
கதவு தட்டும் ஒலிக்கேட்டு முயன்று எழுந்து வந்தாள் வர்ஷா. அவளின் முகத்தைக் கண்ட பரந்தாமன் குழப்பத்துடன், "என்னமா நைட்டும் சாப்பிட வரல. இப்பவும் மணி எட்டாகுது, ஆஃபிஸ் கிளம்பலயா..?"
"கொஞ்சம் முடியல மாமா, லீவ் போடலாம்னு இருக்கேன்!" என்றவளை மேலும் விசாரித்து மருத்துவமனை அழைத்துச் சென்றனர் பெரியவர்கள்.
மாலை நேரத்தில் முன்னாள் ஆசிரியரைப் பார்க்க வந்த கண்ணன்.. பரந்தாமன் வீட்டில் இல்லாததை அறிந்து, "சரி நான் கிளம்புறேன் மா!" என்றான் சங்கரியிடம்.
"உட்காரு ப்பா, மெடிக்கல் ஷாப் வரைக்கும் தான் போயிருக்காரு, இப்ப வந்திடுவாரு!" என உபசரித்தவர், அவனுக்காகத் தேநீர் தயாரிக்கச் சென்றார்.
கூடத்தில் அமர்ந்திருந்தவன் உள்ளே எட்டிப் பார்க்க வர்ஷா படுத்திருப்பது தெரிந்தது. முன்பே அவளின் உடல்நிலையைப் பரந்தாமனின் மூலமாக அறிந்திருந்தவன், பேசுவதற்காகச் சென்றான்.
"வர்ஷா.."
பெயருக்குக் கண்களை மூடியிருந்தவள் திடுக்கிட்டு விழித்து, "உங்களை யார் உள்ளே வரச் சொன்னது, போங்க வெளியில!"
மெலிதாய்ப் புன்னகைத்தவன், "உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு..?"
"நல்லாதான் இருக்கு, கிளம்புங்க!"
"கிளம்பப் போறேன், அதைச் சொல்லத்தான் வந்தேன்!"
அவள் புரியாமல் பார்க்க, "உங்களுக்காகத்தான் இந்த ஊருக்கே வந்தேன். ஆனா நம்ம முதல் அறிமுகம் வேற மாதிரி அமைஞ்சிட்டதால, உங்கக்கிட்ட இயல்பா பேச முடியல. ஒரு மாசம் ஆகிடுச்சு, இதுக்கு மேல என்னால லீவ் போட முடியாது. வேலைக்குப் போயாகணும்.
நா.. நான் உங்களைக் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன். எஸ் ஆர் நோ.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க! எங்க வீட்டுல எனக்கு ஒரு வருசம் டைம் கொடுத்திருக்காங்க, அதுக்குள்ள சொன்னா போதும்! இதுதான் என்னோட நம்பர்!" என்று விஜயின் புகைப்படத்தின் அருகே சுவற்றில் எழுதியவன், தலையசைத்துவிட்டு வெளியேறினான்.
வர்ஷா மூச்சுவிடவும் மறந்து போய், பேரதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். தேநீரோடு வந்த சங்கரி, கண்ணனைக் காணாது குழப்பத்துடன் மீண்டும் சமையலறைக்குச் சென்றார்.
பத்துமாதக் காதல், பெற்றோர் சம்மதத்திற்காக இரண்டு மாத போராட்டம், ஆசையுடன் திருமணம், தனிமையின் பொழுதுகளில் திகட்டத் திகட்ட காதல் செய்த திருமண வாழ்வு, விபத்தில் உயிரிழந்த உறவு, இருபத்திரண்டு வயதில் கைம்பெண், தனிமையில் வாடும் மகளை நினைத்தே இறைவனடி சேர்ந்த பெற்றோர்கள் எனப் பெண்ணவளின் வாழ்வில் அனைத்தும் துரித கதியில் நடந்து முடிந்திருந்தது.
உடலிலும் உள்ளத்திலும் உருவான போராட்டங்களுடன், காணும் பொழுதெல்லாம் விஜயின் நிழல் படத்துடன் இணைந்து பார்வையில் படும் கைப்பேசி எண்ணும், அவளை மெல்ல மெல்ல வதைக்கத் துவங்கியது.
ஆறு மாத காலம் நத்தையின் வேகத்தில் நகர்ந்து முடிந்திருந்தது. தினம் தினம்.. அவளின் கண்முன்னே நடக்கும், ராஜுவிற்கும் மீனாவிற்கும் இடையான இயல்பான பேச்சுக்கள், அக்கறையான பார்வைகள் கூட வர்ஷாவின் மனதில் பெரும் வலியினையும் ஏக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தன.
விஜயிடம் இருக்கும் காதலுக்கும், அவன் விட்டுச் சென்ற நாட்களின் வெறுமைக்கும் இடையே.. பெண்ணவள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது ஒவ்வொரு நொடியும் தவிக்கத் துவங்கினாள்.
மருமகளின் நடவடிக்கைகளில் தெரியும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்த சங்கரிக்கு, தங்களது குடும்பக் கௌரவத்தை நினைத்து மனதிற்குள் பயம் எழத் துவங்கியது. கணவரிடம் அதை மறைமுகமாக உரைத்தும், பரந்தாமன் கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை.
மீண்டும் வந்தான் கண்ணன். இம்முறையும் தாமோதரனின் பெயரைச் சொல்லி இல்லத்திற்கு வந்தவன், பார்வையாலேயே அவளிடம் வினா எழுப்பினான். ஆனால் விடையளிக்கும் துணிவு அவளுக்குள் இல்லை!
பணிமுடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவளை வழி மறித்த கண்ணன், "வர்ஷா எனக்குப் பதில் சொல்லு!"
அவனின் மரியாதை அழைப்பெல்லாம் காணாமல் போயிருந்தது.
"என்கிட்ட பதில் இல்ல, ப்ளீஸ் வழி விடுங்க!" என அங்கிருந்து செல்ல முயன்றாள்.
"என்ன பதில் இல்ல? உனக்கு ரெண்டு ஆப்ஷன் தான் கொடுத்தேன். அதுல ஏதாவது ஒண்ணைச் சொல்லு!"
"ஏன் இப்படிப் பப்ளிக்ல வச்சுப் பேசி உங்க மரியாதையைக் கெடுத்துக்கிறீங்க..?"
"நீ கூடத்தான் எதுக்கோ பயந்து உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கிற..?"
"கண்ணன் திஸ் இஸ் த லிமிட்!" என விரல் நீட்டி எச்சரித்தவளின் குரல், "வர்ஷா மா" என்ற மாமானாரின் அழைப்பில் தேய்ந்தது.
"என்ன மா, என்ன பிரச்சனை?" என்றவருக்குப் பதில் சொல்ல முடியாது அவள் திணற, "சரி வாங்க வீட்டுக்குப் போகலாம்!"
வர்ஷா உடன் நடக்க, "கண்ணா நீயும் தான்!" என்ற ஆசிரியரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவனும் வந்தான்.
வீட்டில் இருவரையும் அவர் பார்வையாலும், கேள்விகளாலும் துளைக்க.. நடந்ததைத் திணறலுடன் உரைத்தாள் வர்ஷா.
"நீ ஏன்மா கண்ணனைக் கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது..?" என்ற அவரது அதிரடியான கேள்வியில் அதிர்ந்தவள், "விஜயைக் காதலிச்சிட்டு எப்படி மாமா இன்னொருத்தரை..?"
"ஏன்மா, முடியாதுன்னு சொல்லுறியா..?"
"என்னோட ஆயுசுக்கும் அவர்தான்னு எனக்கு நானே சத்தியம் செஞ்சுக்கிட்டேன்!"
"அவனும் தான்.. எப்பவும் உனக்குத் துணையா இருப்பேன்னு, அக்னியைச் சாட்சியா வச்சு வாக்குக் கொடுத்துக் கல்யாணம் செஞ்சான். அதை இப்பக் காப்பாத்தினானா..?"
"மாமா இல்லாதவரைப் பத்தி.." என்றவளை இடைமறித்தவர், "அவன் இப்ப இருந்திருந்தா தான் பிரச்சனையே இல்லையே? வாய்விட்டு சொல்ல முடியாம, ஒவ்வொரு நாளும் நீ மனசுக்குள்ள படுற கஷ்டம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியாமா..?
முன்னாடியை விட ராஜுவோட கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட நடவடிக்கையில, பார்க்கிற பார்வையில அவ்வளவு மாற்றங்கள். நான் அனுபவசாலி மா, என்னால புரிஞ்சுக்க முடியும்!"
தவிப்புடன் தலைகுனிந்தவளின் தலையை வருடியவர், "எங்களைப் பத்தியோ, ஊர் உலகத்தைப் பத்தியோ, யார் என்ன சொல்லுவாங்களோன்னு எதையும் யோசிக்காத. உனக்கு என்ன தேவையோ, அதை மட்டும் யோசி! விஜய்க்குத் துரோகம் செய்யிறதா நினைக்காத, அவனுமே நீ இப்படிக் கஷ்டப்படுறதை விரும்ப மாட்டான்!
உன்னோட மாமனாரா இல்ல அப்பாவா இருந்து ஒரு விசயத்தைச் சொல்லுறேன், கண்ணனை வரச் சொன்னதே நான்தான்!"
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, "வர்ஷாவை நேர்ல பார்த்திட்டு என்னோட முடிவைச் சொல்லுறேன்னு, சொல்லித்தான் அவன் இங்க வந்தான்! உன்னோட மனசை தெரிஞ்சிக்கத்தான் ஒரு மாசமா தங்கி இருந்தான்!"
அவள் திணறலுடன், "மாமா.. அப்ப நீங்கதான்..?"
மெலிதாய்ச் சிரித்தவர், "கண்ணனும் எனக்கு மகன் மாதிரிதான். நீ எப்பவுமே எனக்கு மருமகள் தான்! இந்த மாமா சொன்னா கேட்ப தான? நீயும் குழந்தைக்குட்டிப் பெத்து சந்தோஷமா இருக்கணும் வர்ஷாமா..!" என்றவரின் சொல்லில் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அவள்.
கோவிலுக்குச் சென்றிருந்த சங்கரி, இரண்டாம் மகன் மற்றும் மருமகளோடு வீட்டிற்குள் நுழையும் பொழுது.. நிசப்தப் போர்வைப் போர்த்தியிருந்தது அவ்விடம்.
"என்னாச்சுங்க எதுக்கு இவ அழுதுக்கிட்டு இருக்கா?" என அவர் பதற்றத்துடன் வினவ.. மீனா, பெரியவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்.
"கல்யாணம் செஞ்சு நம்மளை எல்லாம் விட்டுப் போகணுமேன்னு அழுகிறா!" எனச் சிரித்த கணவனிடம், "நம்ம வீட்டுல ரெண்டரை வருசம் இருந்திருக்கா. அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யும்!" என்ற சங்கரி, "இது உனக்கு இன்னொரு பிறந்த வீடு! இங்க இருக்க, உன்னோட அப்பா அம்மாவைப் பார்க்க எப்ப வேணும்னாலும் நீ வரலாம். வர்ஷா மா.." என மருமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.
அவள் அதிர்ச்சியுடன், "அத்தை..?" என்றிட, "எங்களுக்கு எல்லாம் தெரியும், கண்ணன் போனதடவை வந்தப்ப உன்கிட்டப் பேசிட்டுப் போனதை நான் கேட்டேன். அப்பவே புரிஞ்சிடுச்சு, இது உங்க மாமா வேலைதான்னு! அதான் உன்னைக் கவனிச்சிக்கிட்டே இருந்தேன்!
நாங்கெல்லாம் இருந்தா, நீ பேசுறதுக்குச் சங்கடப்படுவன்னு தான் கோவிலுக்குப் போணோம்! உனக்குச் சம்மதம் தான, கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம்ல.?" என வினவ, அழுகையுடன் தாயாய் மாறியிருந்த மாமியாரை அணைத்துக் கொண்டாள் வர்ஷா.
"தேங்க்ஸ்டா கண்ணா.." எனப் பரந்தாமன் தன் மாணவனின் தோளில் தட்ட, "மகனுக்கு எந்த அப்பாவாது தேங்க்ஸ் சொல்லுவாங்களா..?" என்று அவரை அணைத்துக் கொண்டான் அவன்.
முன்னவனின் நினைவுகள் அவளுள் அப்படியே இருக்க..
பின்னவனுடன் இரண்டாவதாய் ஒரு வாழ்வு வந்து சேர்ந்தது பாவையின் கரங்களுக்கு!
***
நன்றி.