• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 8

ஒரு வாரம் ஓடி இருந்தது பூ வைத்து சென்று. அடிக்கடி கோமளம் வந்து விடுவார் தேன்மலரைப் பார்க்க.

வரும் போது கைகள் நிறைந்த பலகாரமோ, சமைத்த உணவுகளோ என ஏதோ ஒன்று இல்லாமல் வந்ததே இல்லை. கூடவே பூவும்.

"இத்தனை பூவெல்லாம் காலேஜ்க்கு வச்சுட்டு போக முடியாது த்தை!" என கோமளத்திடம் தேன்மலர் சொல்ல,

"பிரிட்ஜ்ல வச்சுட்டு தினமும் கொஞ்சம் கொஞ்சமா வச்சுட்டு போ!" என்றார் அவர்.

"அப்போ நாளைக்கும் வாங்கிட்டு வருவீங்களே, அதை யார் தலையில வைக்கிறதாம்?" என கிண்டலாய் தேன்மலர் கேட்க,

"மலரு!" என அதட்டினார் அன்னை சந்திரா.

"என்ன பேச்சு இது பெரியவங்ககிட்ட?" சந்திரா கேட்க,

"பொம்பளை புள்ளைங்க எல்லாம் இப்படி தான் பேசி வச்சு இருக்கனும்! நீங்க சும்மா இருங்க மதனி!" என்றுவிட்டார் கோமளம்.

புஷ்பமுமே வாரத்திற்கு இருமுறை பேத்தியை காண வர, சந்திரா, ஜெகதீஸனுக்கு சந்தோசமும் அத்தனை நிம்மதியும் மகள் வாழ்வை நினைத்து.

என் பேரன் அப்படி என் பேரன் இப்படி என புஷ்பத்தின் பேச்சுக்களில் வாய் வரை வந்துவிடும் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் தேன்மலர்.

ராதிகா கல்லூரியில் தினமுமே வந்து பார்த்து செல்வதை வழக்கமாக்கி வைத்திருக்க, வெற்றி கேட்டதாய் கூறுவாள் ராதிகா தேன்மலரிடம்.

ராதிகா பூ வைத்த தினத்தில் எடுத்த மொத்த புகைப்படங்களையும் அனுப்பி குவித்திருந்தாள் வாட்சப்பில். கூடவே அன்று பூ வைத்த அன்று இரவே அவள் ஸ்டேட்டஸிலும் அண்ணன் அண்ணி என்று வைத்துவிட, கல்லூரியிலும் அத்தனை வாழ்த்துக்கள் தேன்மலருக்கு.

"எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்ல?" என்ற நண்பர்களை சமாளிக்கவே திணறினாள் தேன்மலர்.

படிப்பில் இருக்கும் போதே திருமணம் என்பதை கல்லூரியில் சொல்ல கூச்சப்பட்டு அவள் வாயை திறக்காமல் இருக்க ராதிகா மூலம் அனைவருக்குமே சேர்ந்திருந்தது செய்தி.

"மேரேஜ்க்கு கண்டிப்பா சொல்றேன்!" என்று பேசி விடுபடவே போதும் போதும் என்றானது தேன்மலருக்கு.

"உன்னை யாரு ஸ்டேட்டஸ் வைக்க சொன்னது? பாரு நான் தான் மாட்டிட்டு முழிக்குறேன்!" என ராதிகா தலையில் வலிக்காமல் கொட்டு வைக்க, அதை அலுங்காமல் அண்ணனிடம் தெரிவித்து இருந்தாள் தங்கை.

இப்படி சக்திவேல் வீட்டில் இருந்து அத்தனை பேரையும் நட்பாக்கிக் கொண்டவள் அன்று பூ வைத்த நாளில் அவன் பேசிவிட்டு சென்றதில் இருந்து இப்பொழுது வரையுமே அவன் அழைப்பையோ செய்தியையோ என எதிர்பார்த்து காத்திருக்க, அது தான் நடக்கவே இல்லை.

உன் நம்பர் நீ தான் சொல்லணும் என்று கேட்டு வாங்கி சென்றவனுக்கு அழைக்க முடியாதாமா என்று நினைத்தவளுக்கு அவன் என்னை அவனே கேட்டும் இவள் வாங்கிக் கொள்ளவில்லை என்ற நியாபகமே இல்லை.

அவன் முதன்முறை பேச வரும் போது கூட இப்போது திருமணம் தேவையா எனும் கோபம், கொஞ்சமாய் இருந்த அந்த பதட்டம் என அப்பொழுது நிஜமாய் எதிர்பார்க்கவே இல்லை இத்தனையை.

ஆனால் ஊரே திரண்டு வந்து பூ வைத்து கூடவே அவனும் வந்து தன்னோடு நின்று என நினைத்தவள் அவன் தந்த பணத்தை கூட அவ்வபோது கைகளில் எடுத்துப் பார்த்துக் கொண்டாள்.

மனதில் புதிதாய் ஒரு தவிப்பும் தேடலும் என அவளறியாமல் அவளுள் உண்டாகியிருக்க, அதை கடந்து வர தெரியவில்லை அந்த சிறு பெண்ணுக்கு.

என்னவோ அந்த அளவான புன்னகையையும் ரசனையான பார்வையையும் நிறையவே தேடிவிட்டாள். ஆனால் யாரிடம் கூறிவிட முடியும்?

தான் தன் படிப்பு நண்பர்கள் தன் அப்பா அம்மா என அவள் வட்டம் அவ்வளவு தான் என இருந்திருக்க, அவளிடம் கொஞ்சமாய் மட்டுமே பேசி இருந்தவன் அவளை அவனை மட்டும் நினைக்கும்படிக்கு மாற்றி இருந்தான்.

இது இப்படி தானோ? முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லையே! என்று அதிக சிந்தனை அவளிடம். நிஜம் தானே! இவன் தான் உனக்கானவன் என பெற்றோர்கள் காட்டிவிட, அவனுமே வந்து நீ தான் எனக்கானவள் என சொல்லி சென்றிருக்க, தேடாமல் எப்படி இருப்பாள் அவள்?.

ராதிகாவிடம் கேட்டுவிடலாமா என நினைக்கும் தேன்மலர் என்னவென்று கேட்பாய் 'உன் அண்ணன் எப்படி இருக்கிறார் என்றா?' என நினைக்கும் போதே புத்தகத்தால் தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள் எரிச்சலோடு.

ஒரு மாதமும் கடந்துவிட்டது. சக்திவேலின் குடும்பத்தினரின் அன்பில் அவளுமே விரும்பி ஏற்று அவர்களுக்குள் கலந்திருந்தாள் தேன்மலர். கூடவே படிப்பும் மற்றொரு பக்கம் சென்று கொண்டிருந்தது.

இன்னும் ஒரு மாதம் மட்டுமே கல்லூரி அதற்கு அடுத்த மாதம் தேர்வுகள் என கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாட்களில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

இடையில் இரண்டு முறை வெற்றியும் வீட்டிற்கே வந்து தேன்மலரைப் பார்த்து பேசி கிண்டல் செய்து அவளை கோபப்பட வைத்து "உனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்கு டா!" என்று அவள் சொல்லியபின் தான் வாயை மூடும் அளவுக்கு பேசி செல்வான்.

அன்று கல்லூரி முடிந்து தேன்மலர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வெளியே வர, அங்கே ராதிகா நின்றிருந்தாள்.

"வா ராதிகா!" என தேன்மலர் அழைக்க,

"இல்ல அண்ணி! நீங்க போய்ட்டு வாங்க. நான் பிரண்ட்ஸ் கூட வர்றேன்!" என மறுத்தாள் அவள்.

எப்போதுமே தேன்மலர் அழைப்பாள் தான். என்றாவது தான் ராதிகா உடன் செல்வது. நண்பர்களுடன் பேருந்தில் பயணிப்பது அவளுக்கு பிடித்தமானது என்பதால் தேன்மலரும் சரி என்றுவிடுவாள்.

இன்றும் அப்படி தான் அவள் வரவில்லை என்றதும் தேன்மலர் கிளம்பிவிட, எப்பொழுதும் போல இன்றும் அவள் பார்வை அந்த ஹோட்டலை தொட்டு மீண்டது. சக்திவேல் உடன் பேசிய நினைவினை அந்த ஹோட்டலை கடக்கும் பொழுது தினமும் அவனை நியாபகப்படுத்திவிடும்.

சட்டென்று தான் பார்த்தது உண்மை தானா என மீண்டும் மனதுக்குள் எண்ணிப் பார்த்து தேன்மலர் திரும்பிப் பார்க்க, ஆம் அவனே தான்! சக்தி வேல் இவளை தான் கவனித்து அங்கே நின்றிருந்தான்.

பிரேக்கிட்டு வண்டியை நிறுத்தியவள் மனம் நொடியில் படபடத்து முகத்தில் வெளிச்சத்தை கொண்டுவர, திரும்பி வந்து அவன் அருகே நின்றாள் சிறு புன்னகையோடு.

அவனுமே அவளை கவனித்து அமைதியான புன்னகையோடு தான் நின்றிருந்தான்.

'வர்றேன்னு ராதிகாகிட்ட சொல்லி இருப்பாங்களோ! அவ மறந்துட்டாளோ?' என எண்ணங்கள் அவளுள் ஓட,

"எப்படி இருக்க தேனு?" என்றான் புன்னகைக்கு குறைவில்லாமல்.

"நீங்க?" என்ற கேள்விக்கு, "ஹ்ம்!" என்று மட்டும் அவன் சொல்ல,

"என்ன இந்த பக்கம்?" என்றாள் அவளே! மனதில் அத்தனை துள்ளல் ஏன் என்றே தெரியாமல் வந்து ஒட்டி இருந்தது. அத்தனையும் சாலையின் ஓரத்தில் ஹோட்டலுக்கு வெளியே தேன்மலர் தன் வண்டியை பிடித்தபடி நின்று தான்.

"இல்ல ஒருத்தர் வர்றேன்னு சொன்னார்! புது கான்ட்ராக்ட்க்கு ஆள் கேட்டிருந்தேன்!" என்றவன் சாலையில் யாரையோ தேடுவதை போல பார்க்க, சுவிட்ச்சை தட்டியதை போல நின்றிருந்தது தேன்மலரின் புன்னகை.

அவனைக் கண்டதும் மின்னிய விழிகளின் ஒளி அவன் வார்த்தைகளில் குறைந்து சுருங்கிவிட, அந்த ஏமாற்ற உணர்வினை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவளால்.

அவனைப் பார்க்க இத்தனை நாளும் தான் தேடல் தவிப்பு என இருந்தது எல்லாம் நொடியில் ஒன்றுமே இல்லை என்பதை போல அவனிடம் அத்தனை சாதாரணமாய் பதில் வரவும் அவன் தன்னை நினைக்கவே இல்லை என்ற பிம்பத்தை அவளிடம் காட்டிவிட, மொத்த உணர்வுகளும் அந்த நொடி விட்டுபோய் அழுகையும் அதைவிட கோபமும் என தோன்றிய நொடி பற்களைக் கடித்து உதடுகளை அழுத்தமாய் மூடி தன்னை சமாளிக்க முயன்றவள்,

"ஓகே! பாருங்க!" என்று சொல்லி அவன் பதிலையும் எதிர்பார்க்காது வண்டியில் சாவியை ஆன் செய்து கிளம்பத் தயாராகியேவிட்டாள்.

நொடியில் சாவியில் வண்டியை ஆஃப் செய்து அந்த சாவியையும் தூக்கிவிட்டான் சக்திவேல்.

இப்படி உடனே கிளம்பிவிட நிற்பாள் என நினைக்கவே இல்லை அவன்.

தன் பதிலில் அவள் முகத்தின் பாவனைகளை ஒன்றுவிடாமல் கவனித்திருந்தானே!

விளையாட்டாய் மட்டும் தான் கூறினான். நிச்சயம் அவள் முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளை எல்லாம் எதிர்பார்த்து அவன் கூறவே இல்லை.

அவளைப் பார்க்க மட்டும் என்றே கிளம்பி வந்திருந்தவனிடம் அவள் கேள்வி கேட்டு வைக்க, 'என்ன செய்கிறாள் என பார்க்கலாமே' என்பது மட்டும் தான் அவன் நினைவு.

தன்னைப் பார்த்ததும் மலர்ந்து விரிந்த முகமும் தன் பதில் கேட்டு அந்த மலர் முகம் வாடியதும் நொடியில் கோபத்தில் முகம் சிவக்க வண்டியில் கிளம்பிட பார்த்ததும் என ஒவ்வொன்றையும் துல்லியமாய் கவனித்தவன் முகத்தில் சில நொடிகள் அதிர்வு ஏற்பட்டு அடுத்ததாய் இன்னுமே புன்னகை கூடி இருந்தது.

சாவியை எடுத்தவனை அவள் பார்த்த பார்வை இருக்கிறதே! வாழ்நாளில் மறக்கவே மாட்டான் சக்திவேல்

"சும்மா சொன்னேன் தேனு! எதுக்கு இவ்வளவு ஹாட்டா லுக்? வா உள்ள போலாம்!" என்றான் அவளை சமாதானப்படுத்துவதாய்.

எதுவும் பேசவில்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் முதலில் இருந்த அந்த உற்சாகம் முழுதாய் வடிந்திருந்தது தேன்மலரிடம்.

ஒரு மாதத்திற்கும் சேர்த்து வைத்திருந்த மொத்த கோபம் கொண்டு வண்டியை அப்படியே விட்டுவிட்டு அவள் ஹோட்டலின் உள்ளே வேகமாய் செல்ல, புருவங்களை உயர்த்தியவன் உதடுகளில் அத்தனை புன்னகை கண்களோடு.

அவனே வண்டியை ஓரமாய் நகர்த்திவிட்டு அவளைத் தேடி சென்று அமர்ந்தான் அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியில்.

"என்ன வேணும் தேனு?" என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையில் கைவைத்து கை முட்டிகளை டேபிளில் ஊன்றி அவள் அமர, இன்னுமே அவள் அதன் தாக்கத்தில் இருந்து வெளிவராததை உணர்ந்தான் சக்திவேல்.

"சத்தியமா நீ இவ்வளவு வருத்தப்படுவனு நினைக்கல!" என்றவன் முகம் அவளை கனிந்து காண,

"உன் போன் குடு!" என்றான்.

அமைதியாய் அவள் எடுத்து அவனருகில் வைக்க, தானே அதில் தன் எண்ணை அழுத்தி அவளுக்கு முன் வைத்தான்.

"நீ என்னை நினைக்கவே இல்லைனு நினச்சேன்! ஒரு ரெண்டே நிமிஷத்துல எனக்கு புரிய வச்சுட்ட!" என்றவன் புன்னகை அவளுக்கு எட்டவில்லை.

அவனும் பொய் சொல்லவில்லையே! அத்தனை அழுத்தி கூறி இருந்தானே பூ வைத்த அன்றே கேட்காமல் கிடைக்காது என்று. ராதிகாவிடமாவது தன் எண்ணை வாங்கி இருப்பாளா என நினைத்திருக்க, அதுவும் இல்லை என்றதும் அவனுமே அவள் பட்டபாட்டை தான் பட்டிருக்கிறான் என அவளறியவில்லை.

இன்று தன்னைக் கண்டதில் இருந்து இந்த நொடி வரை என அவள் முகத்தில் வந்து போன அத்தனை ஜாலங்களிலும் மூழ்கி அவன் முழு மகிழ்ச்சியில் ரசித்துப் பார்த்து அமர்ந்திருக்க,

"நான் நம்பர் கேட்கலைனா? என்கிட்ட பேசமாட்டிங்க? இல்ல?" என்ற தேன்மலர் இன்னமும் அவள் தன் எண்ணங்களில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.


தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,769
538
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️என்ன ஒரு உணர்ச்சிகள் இருவருக்குள்ளும் அதிலும் தேனு சான்ஸ் இல்ல உடனே எல்லா feelings யும் வெளிப்பட்டாச்சு 😄😄😄😄😄😄😄😄😄
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
சூப்பர் சூப்பர் சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️என்ன ஒரு உணர்ச்சிகள் இருவருக்குள்ளும் அதிலும் தேனு சான்ஸ் இல்ல உடனே எல்லா feelings யும் வெளிப்பட்டாச்சு 😄😄😄😄😄😄😄😄😄
வந்து thana ஆகணும் sis😊