• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -01

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
நிலவு மகள் தன் ஆட்சியை முடித்து ஆதவன் ஒளிர இடம் கொடுத்து விலகி விட்டாள்.. அந்த சிறு வீட்டில் அலாரம் அடித்து அன்றைய நாள் வேலையை துவக்கியது.. அலாரத்தின் ஒலியில் தன் இமைகளை மெல்ல மலர்த்தி தன் தளிர் கரம் கொண்டு அலாரத்தை அணைத்தாள் பெண்ணவள்.

அழகிய வட்ட முகம்.. சிறகடிக்கும் பட்டாம் பூச்சி விழிகள்... அதில் தெளிந்த தன்னம்பிக்கை.. வெண்மை நிற புடவையில் அழகாய்த்தான் இருந்தாள்.. நெற்றியில் கருப்பு பொட்டு மட்டும் தான்.. அவள் அகல்யா.. அந்த காலை வேலையிலே தலைகலைந்து அழகான ஓவியமாய் எழுந்தவள் முதலில் கண்டது தன் அருகில் அழகாய் துயில்கொண்டிருந்த இரு மழலைகள் தான்.. இரு மழலைகளுமே ஆண்குழந்தைகள். அவளின் கருவில் உதித்த தங்க மகன்கள்.

ஆதர்ஷ் பெரியவனின் பெயர்.. தாயின் மேல் அதீத பாசம் கொண்டவன்.. அவளின் மிகப் பெரிய நம்பிக்கை அவன்.. எட்டாம் வகுப்பு படிக்கின்றான்.. நவிஷ் சின்னவனின் பெயர்.. இவனுக்கு அனைத்து சொந்தமும் வேண்டும் என்றாலும் தாய் சொல்லை மீறாத தனையன்.. மூன்றாம் வகுப்பு படிக்கின்றான்.. தாயின் வலியை கண்டு வளர்ந்தவர்கள் இருவரும்.. அதனாலே இருவருக்கும் தாயின் மேல் அலாதி பிரியம்.

இருவருக்கும் தாயும் தந்தையும் இவள் மட்டுமே.. இவர்கள் இருவருக்காக மட்டுமே தனது வாழ்வை அர்பணித்தவள்.. இந்த அழகிய சிறிய கூடு தான் இவளின் வாழ்க்கை.. இவள் ஒரு கைம்பெண்.

கணவனை இழந்த இந்த மூன்று ஆண்டுகளில் தான் இந்த வாழ்க்கையும் இதிலுள்ள மனிதர்களின் உண்மை முகமும் அறிந்து கொண்டாள்.. ஆனாலும் யாரிடமும் சென்று கையேந்த அவளுக்கு பிடிக்கவில்லை.. கணவனை இழந்தவள் தானே என்று அவளை சுற்றி வந்த வல்லுறுக்கள் ஏராளம்.. ஆனால் அதையெல்லாம் கடந்து பிறந்த வீட்டிற்கும் செல்லாமல் புகுந்த வீட்டின் ஆதரவும் இல்லாமல் அவள் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது.. மூன்று பேரை சுமந்து தங்களின் வாழ்வாதாரத்தை பாரமாக்கி கொள்ள அவளின் புகுந்த வீட்டினருக்கு விருப்பமில்லை.

கணவன் வீட்டு சொத்து என்று இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது தான்.. ஆனால் அதை அவளுக்கு பிரித்து கொடுப்பதற்கு அவளின் புகுந்த வீட்டினருக்கு பிடிக்கவில்லை.. தங்களின் பேரன்கள் வளர்ந்த பின்பு தான் சொத்தில் பாகம் தருவதாக சொல்லிவிட்டார்கள். அவளுக்கு யாரையும் அழைத்து நியாயம் கேட்கும் அளவுக்கு ஆள்படை இல்லை.. அதனால் ஒதுங்கி வந்து விட்டாள்.. சென்னை வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. தனது விடிமுயற்சியால் அரசு தேர்வு எழுதி பாஸ் பண்ணினால்.. ஆனால் அவளின் கெட்ட நேரமோ என்னவோ அந்த வேலைக்கு அவள் விலையாய் பல லட்சங்கள் கேட்டனர்.. மனம் வெறுத்துப் போனவள் அரசு வேலைக்கு முழுக்கு போட்டு விட்டாள்.. பல லட்சங்கள் செலவு செய்து வேலைக்கு போகும் அளவு அவள் வசதியானவள் அல்ல.. அப்படி கடன் வாங்கி அரசாங்க வேலை வாங்கினாலும் சம்பாத்யம் முழுவதும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே முடிந்துவிடும்.


அரசாங்க வேலை கனவுக்கு முழுக்கு போட்டு இப்பொழுது ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை.. வரலாறு அவளுக்கு மிகவும் பிடித்த பாடம்.. ஆனால் இப்பொழுது தமிழாசிரியை.. அன்று வார விடுமுறை நாள். வாரம் முழுவதும் ஓய்வின்றி ஓடுபவளுக்கு அன்று தான் கொஞ்சம் ஓய்வு நாள்.. எப்பொழுதும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் காலைக்கடன்களை முடித்து குளித்து விட்டு தனது சமையல் வேலையை முடித்து விட்டு தனது குழந்தைகளை எழுப்பி விட்டு அவர்களையும் குளிக்க வைத்து அவர்களின் பாடங்களை படிக்க வைக்க ஆரம்பித்தால் ஏழு மணி ஆனவுடன் அக்கம் பக்கம் உள்ள குழந்தைகள் டியூசன் வந்துவிடுவார்கள்.

அவர்களையும் அமரவைத்து அவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பாள். அவளுக்கு ஒவ்வொரு நாளும் இப்படி தான் துவங்கும்.

விடுமுறை நாள் மட்டும் காலை ஆறு மணி வரை தூங்குவாள். அன்று முழுவதும் தனது குழந்தைக்காக அவர்களுடனே செலவிடுவாள்.

அன்று எழும்பொழுதே மனம் ஏனோ சொல்லெனா உணர்வில் தவித்தது.ஏனென்று தான் புரியவில்லை. எத்தனையோ இன்னல்களை சந்தித்தாலும் இன்னும் இந்த வாழ்க்கை என்ன அதிர்ச்சியை தரும் என்று தான் தெரியவில்லை. தூக்கத்தில் இருந்து எழுந்தும் படுக்கையில் இருந்து எழாதவள் ஏதோ யோசனையில் படுத்திருந்தவளை நடப்புலகிற்கு கொண்டு வந்தது 'அம்மா'.என்ற அழைப்பு.

அவளின் இரண்டாவது புத்திரனின் அழைப்பு, "குட்மார்னிங் அம்மா.."

"குட்மார்னிங் நவி.." என்று தன் புதல்வனை நெஞ்சோடனைத்து தலையில் இதழ் பதித்தாள்.

தாயின் அரவணைப்பு அவனுக்கு மேலும் தூக்கத்தை தான் வரவழைத்தது.. அதைக் கண்ட பெண்ணவள்,

" ஏய் நவி எழுந்திரு முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வா.. ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துட்டு வரேன்.." என்று செல்லமாய் அதட்டியபடி கூறினாள்.

அவள் எழுந்து குளித்துவிட்டு சமையல் கட்டிற்கு சென்று பசங்களுக்கு ஹார்லிக்ஸிம் தனக்கு காபியும் போட்டு எடுத்து வந்தாள்.. அவள் காபி டிரேயுடன் வரும் பொழுது அவளின் தலைச்சன் பிள்ளையும் எழுந்து அவளுக்காக பிரஷ் அப் செய்து அவளுக்காக காத்திருந்தான்.. அவளை கண்டவனின் விழிகள் சிரித்தபடி

" ஹேப்பி மார்னிங் அம்மா.."

"ஹேப்பி மார்னிங் தர்ஷ்.. நீயூம் எழுந்துட்டியா.." என இருவருக்குமான ஹார்லிக்ஸை கொடுத்து விட்டு அவளும் காபி கப்பை எடுத்துக் கொண்டு ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டாள்.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது காபியை அருந்தினாள்.

மூவரின் கப்பையும் எடுத்துக் கொண்டு சமையலறை சென்றவள் என்ன சமைக்கலாம் என்று யோசித்தபடியே காபி டம்ளரை கழுவினாள்.

சப்பாத்திக்கு மாவை பிசைத்து வைத்து விட்டு நேற்று பொழுதில் வாங்கிய காளானை எடுத்து கிரேவி செய்ய ஆரம்பித்தாள்.. இருவருக்கும் சப்பாத்தி காளான் கிரேவி மிகவும் பிடிக்கும்.. அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்வது அவளின் வழக்கம்.


அவள் சமைத்து முடிக்கவும் ஆதர்ஷிம் நவிஷிம் குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது.. அவர்கள் சமையலறை வரும் பொழுது வாக்கு வாதத்துடன் தான் வந்தனர்.. அவர்கள் இருவரையும் கண்டும் காணாதவள் போல தனது வேலையை செய்து கொண்டிருந்தாள்.. அதே நேரத்தில் இருவரும் கோரசாக ஒரே நேரத்தில் "அம்மா.." என்று அழைத்தனர்.

அவர்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தாள், "என்ன அதிசயமா ரெண்டு பேரும் ஒண்ணா ஒத்துமையா வந்து பேசுரிங்க.. ஏதோ வில்லங்கம் போல இருக்கு.. என்ன விஷயம் சொல்லுங்க.." எனக் கேட்டாள்.

"அம்மா இன்னைக்கு லீவு தானே.. வெளியே போலாமா மூணு பேரும்.. ரொம்ப நாளாச்சுமா ப்ளிஸ் மா ப்ளிஸ் மா.." என இருவரும் ஒரே நேரத்தில் நச்சரித்தனர்.

அவர்களின் தொல்லை தாங்காமல், "சரி டா போலாம்.. முதல்ல இந்த பிடிவாதத்தை விடுங்க.. நான் சொல்ற இடத்துக்கு தான் போகனும்.. டீல் ஓகே வா.." இறுதியான முடிவாய் கேட்டாள்.

இருவரும் அமைதியாய் நல்ல பிள்ளைகளாய் தலையாட்டினார்கள்..

"சரிம்மா ஆனா ஈவ்னிங் பீச் போகனும் கண்டிப்பா நீங்க கூட்டிட்டு போகனும்.. ஓகே வா.." தாயிடம் இருவரும் ஒப்பந்தம் போட்டனர்.

சிறிது நேரம் யோசித்தவள், "ம்ம் சரி.. முதல்ல சாப்பிட வாங்க.." இருவரையும் டைனிங் டேபிளில் அமர வைத்து உணவு பரிமாறினாள். மூவரும் உணவு அருந்திவிட்டு பாத்திரங்களை துலக்கியவளின் கவனத்தை கலைத்தது அலைபேசி அடிக்கும் சத்தம்.


" ஆது யாருன்னு பாரு.." மகனுக்கு கட்டளை விதித்தவள் தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

அலைபேசியை எடுத்து பார்த்தவனின் கண்கள் மலர்ந்தது. தனது குரலை உயர்த்தியபடி,

" அம்மா ஆயா கால் பண்ணிருக்காங்க மா.." என்று சொன்னவன் தன்னாலே அட்டென்ட் செய்து பேசினான்.

"ஹலோ ஆயா எப்படி இருக்கீங்க.."

"நான் நல்லாருக்கேன் சாமி.. நீங்க எப்படி ராசா இருக்கீங்க.." என்றது எதிர்புறம் இருந்த குரல்.

" நல்லா இருக்கோம் ஆயா.. இதோ அம்மாகிட்ட தரேன் ஆயா..." அகல்யாவிடம் தந்தான் அலைபேசியை.

அலைபேசியை வாங்கியவள் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.. பெரிதாக எதுவுமில்லை நலம் விசாரிப்பு எப்பொழுது ஊருக்கு வருவாய் இது போன்ற கேள்விகள் தான்.

அவளுக்கு தந்தை இல்லை.. தாய் மட்டுமே.. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தந்தை இறந்தார்.. அவளுக்கு தம்பி , தங்கை உண்டு.. தங்கை நர்சிங் முடித்து அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.. அவளுக்கு திருமணம் ஆகி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் உண்டு.. தம்பி இன்ஜினியரிங் முடித்து தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான்.. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. இத்தனை உறவுகள் இருந்தும் தனியாகத் தான் இருக்கிறாள். அதற்கு அவளின் பயம் முதற் காரணமாக அமைந்தது.. எங்கே அவர்களுக்கு தான் பாரமாகிவிடுவோமோ என்ற பயமே அனைவரையும் தள்ளி நிறுத்தினாள் பெண்ணவள்.

மூவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே செல்வதற்காக தன் டூ வீலர் எடுத்தாள்.

கிளம்பும் போது, "அம்மா முதல்ல எங்க போறோம்.." என்றான் கேள்வியாய் ஆதர்ஷ்.

"முதல்ல நம்ம தனசேகர் தாத்தாவை பாத்துட்டு அப்புறம் வெளியே போலாம் சரியா.." இருவரிடமும் பேசிக் கொண்டே கிளம்பினார்கள் மூவரும்.

முதலில் 'சாரதா இல்லம்' சென்றனர் மூவரும்.அங்கு அவர்களை வரவேற்றார் ஆசிரமத்தின் நிர்வாகியான தனசேகர்.

"வாம்மா வித்யா எப்படி இருக்கே.. வாங்க வாங்க பேரப்பசங்களா.." ஏதோ தன் சொந்த குடும்பத்தை வரவேற்பது போல வரவேற்றார்.


தன்னுடைய வாழ்வை இழந்து இருகுழந்தைகளுடன் மனநிம்மதி இல்லாத நிலையில் தனது இரு குழந்தைகளுடன் சென்னை வந்த புதிதில் தனசேகரனை சந்தித்தாள். அன்று முதல் இன்று வரை அவரை தந்தையாக நினைத்து அப்பா என்றே அழைத்து வந்தாள்.அவரும் அவளை மகளாகவே பாவித்து ஆலோசனை வழங்குவார். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அவரின் உயிரை காப்பாற்றியவள் என்ற நன்றி கடனும் அவருக்கு உண்டு.

இந்த சாரதா இல்லம் அவரின் மனைவியின் நினைவாக நடத்தி வருகிறார்.. இருபது வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் தீவிரமாக எதிர்த்தனர்... ஜாதி,இனம் என இருவரும் வேறு வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள்.. இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து ஊரை விட்டு வந்து தங்களது வாழ்வை துவங்கினர்.. அவர்களின் காதல் வாழ்க்கை நான்கு வருடத்தில் முடிவுற்றது.. திருமணம் முடிந்த ஒரு வருடம் அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கடவுள் அளிக்கவில்லை.. அதை பற்றி பெரிதாக கவலை படாமல் தன் மனைவியையே குழந்தையாய் பார்த்து வாழ்ந்தார்.. ஆனால் அவரின் மனைவிக்கோ தங்களின் பெயர் சொல்ல வாரிசு வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் அதை கணவனுக்காக மறைத்தார்.. ஆனால் அதுவும் பூதகாரமாய் வெடித்தது ஒரு நாள்.

பக்கத்து வீட்டு வளைகாப்பு என்று சென்றவர் வரும்போது அழுகையுடனே வந்தார் சாரதா.. ஆனால் தன் அழுகையை தன் கணவனுக்கு தெரியாமல் மறைத்தார்.. மனைவியின் மேல் அதீத காதலில் இருந்தவருக்கு அவரின் அழுகை தெரியாமலா போய்விடும்.. மனைவியின் அழுகையை கண்டு கொண்டவர் அவரிடம் எதுவும் கேட்காமல் நேராய் சென்றது பக்கத்து வீட்டாரிடம் தான்.

அந்த பெண்ணுக்கும் அங்கே நடந்த விடயம் எதுவும் தெரியாது.. ஆனால் சாரதா சென்றதும் என்னவென்று விசாரித்து அறிந்து கொண்டவருக்கு அங்கே வந்த அவர்களின் உறவினர் மீது கோபம் வந்து திட்டி அனுப்பிவிட்டார்.. தனசேகர் வந்து நிற்கவும் மறுக்க முடியாமல்,

"அண்ணா என்னை மன்னிச்சிருங்க.. நான் இல்லாத போது நடந்துருச்சின்னா.. என்னை மன்னிச்சிருங்க அண்ணா.." அந்த பெண் கண்கலங்கவும் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் வந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்து தன் மனைவியை சமாதானம் செய்ய துவங்கினார்.. ஆனால் இந்த முறை அவரின் சமாதானம் எதுவும் சாரதாவிடம் செல்லுபடியாகவில்லை. தன் முடிவில் நிலையாக நின்றுவிட்டார்.. ஒன்று மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்ப்பது.. இல்லையா தன்னவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது.. இதை விட்டால் தனக்கு வேற வழி இல்லை என்று தன் முடிவில் உறுதியாய் நின்றுவிட்டார் சாரதா.. கண் நிறைந்த கணவனுடன் வாழ்ந்த காதலான வாழ்வுக்கு தங்களின் வம்சம் விளங்க ஒரு குலவிளக்கு இல்லையே என்ற வருத்தமே அவரின் பிடிவாதத்துக்கு காரணமாய் அமைந்தது.

காதலித்து கல்யாணம் செய்து வாழ்ந்த இத்தனை வருடங்களில் மனைவியின் பிடிவாதத்தை அன்று தான் உணர்ந்தார் தனசேகர்.. தனக்காக இல்லாமல் தன் மனைவியின் காதலுக்காவும் அவள் தன் மேல் வைத்த நேசத்திற்காகவும் கொஞ்சம் இறங்கி வந்தார் தனசேகர்.. அது மருத்துமனையின் பரிசோதனைக்கு செல்வதென்று.. ஆனால் அன்றே ஒர் முடிவெடுத்து விட்டார்.. நிறை குறை யாரிடம் இருந்தாலும் தங்களின் வாழ்வு தன் இணையிடம் மட்டும் என்று.

அப்படி மருத்துவமனைக்கு செல்லும் போது தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சியான விடயமே தெரிந்தது.. அது தெரிந்ததிலே இருவரும் மனமும் உடைந்து போனது.


காலத்தின் கையில் கைப்பொம்மையாய் ஆனேனடி பெண்ணே..!!
உன் காதலினாலே உயிர் வாழ்ந்தேனடி கண்ணம்மா..!!
மீண்டு வருவாயா..!! இல்லை என்னை மீட்டு செல்வாயா..!!


நிழலை வருடும் நிஜம்...

தொடரும்..🌹
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரொம்ப நல்லா இருக்கு 👌
ஆதர்ஷ் & நவிஷ் ❤️
பசங்களுக்கு வயதுக்கு மீறிய பக்குவம் 😍 அதான் அம்மாவ தொந்தரவு பண்ணாம உதவியா இருக்காங்க 🤩
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரொம்ப நல்லா இருக்கு 👌
ஆதர்ஷ் & நவிஷ் ❤️
பசங்களுக்கு வயதுக்கு மீறிய பக்குவம் 😍 அதான் அம்மாவ தொந்தரவு பண்ணாம உதவியா இருக்காங்க 🤩

தனசேகர் & சாரதா என்ன குண்டு போடுவாங்கன்னு தெரியலையே 🤔
 
  • Like
Reactions: ரமா