அத்தியாயம் -04
ருத்ரன் கோபத்துடன் இருக்க, காமாட்சியோ அவனது கோபத்தை கண்டு கொள்ளாமல் பெண் தேட துவங்கி விட்டார்.
அதே நேரத்தில் ராமகோபாலன் வீணாவின் திருமணத்தில் உறுதியுடன் செயல்பட, காயத்ரி அங்கே இடைபுகுந்தாள்.
"ஏன்னா இப்போ அவளுக்கு விவாஹம் பண்ணியேத் தீரணுமா?" எரிச்சலுடன் வினவினாள் காயத்ரி.
"என்ன பேசற நீ?. அவளுக்கும் வயசாகறது இல்லியா?, நல்ல பையனா பார்த்து விவாஹத்தை காலா காலத்துல முடிக்கணும். சத்யநாராயணன் நல்ல பையனா தெரியறான். நான் விசாரிச்ச வரையில் வருமானம் ஷேமமா வர்றது மறுபடியும் பேசலாம்னு இருக்கேன்" என்றான்.
"வருமானம் வர்றது எல்லாம் சரிதான். அப்போ நமக்கு வருமானம்?" என்றவளை புரியாமல் பார்த்தான் ராமகோபாலன்.
" நீ என்ன சொல்ல வர்றே?, நேக்கு எதுவும் புரியல" என்று கேட்க
"வீணா மூலமாக வர வருமானம் நின்றுமே , அதைத்தான் சொல்லறேன் புரியறதா?" என்று காயத்ரி நொடிப்பாக கேட்க
"நேக்கு இதெல்லாம் தெரியாதா என்ன...? வந்த வரன் எவ்வளவு பெரிய இடம் னு தெரியுமோ...?நம்மாத்துக்கு அவாளோட பெண் பார்க்க வந்தாரே, அந்த மாமா மினிஸ்ட்ரேட் ல இருக்கார். நிறைய பேரை தெரிஞ்சு வச்சிருக்கார். இப்போ வீணா போற கச்சேரி எல்லாம் சின்னது. ஆனா அவா வீட்டுக்கு போயிட்டா பெரிய இடத்தில் இருந்தெல்லாம் வாய்ப்பு வரும். வரும்படியும் பெருகிடும், எல்லாம் நான் கணக்குப் போட்டுத் தான் பண்றேன்டி" என்றான் ராமகோபாலன்.
"ப்ப்ச் புரியாம தத்தியாட்டம் பேசறேளே... வீணா புக்காம் (புகுந்தவீடு) போயிட்டா அவாளுக்குத் தான் இந்த பணம் எல்லாம் போகும். நமக்கா வரும்" என்று கோபத்துடன் கேட்க
"அதைப் பேசாம இருப்பேனா நான் . மாப்ள வீணாவுடைய சம்பளம் எல்லாம் நமக்குத் தான்னு சொல்லிட்டார். பொண்ணை மட்டும் தந்தேள்னா போதும். தங்கமா பாத்துப்பேன்னு ஒரே வழிசல் போ" என்று ராமன் ஏளனமாய் கூற, காயத்ரிக்கு அப்போதும் அரைமனது தான் இந்தத் திருமணத்தில்.
"இருந்தாலும்ன்னா.... இது ஏதோ சரியாப்படலை நேக்கு. விவாஹத்துக்கு எல்லா செலவும் அவா தானே பண்றா?" என மீண்டும் சந்தேகம் கேட்க
"அவாளே அட்டிகை எல்லாம் பண்ணின்டா, என் மொபைலுக்கு ஃபோட்டோ கூட அனுப்பிட்டா வைர அட்டிகைடி. அதே போல நம்ம நீருவுக்கும் ஒண்ணு பண்ணிட்டான்னா பார்த்துக்கோயேன்" என்றான் விழி விரித்து.
"நேக்கென்னவோ அவா சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கிறாளோனு தோணறது. "என்றவள் மனதில் சிலக் கணக்குகளை போட்டாள்..
"நீயா பேசாதே காயூ. நான் அத்தனை சுலபத்தில் விட்டுடுவேனா ஆமா வீணா என்ன செய்யறா... அவளை தனியா விடாதே அவனண்ட பேசி மறுபடியும் அந்தக் கிராதகன் ஆத்துக்கு வந்திடப் போறான். "என்றான் எரிச்சலாக.
"ம்ம்க்கும்... அவ என்னவோ ஏதோ பறிகொடுத்தாப் போல உக்காந்துண்டு இருக்கா. அந்த தடியன் வேற ஜைஜான்டிக்கா வந்து நின்னு பயமுறுத்திண்டு போறான். அப்போவே அப்பா கிட்ட சொன்னேன், அவனைப் பார்த்தாலே ரௌடி மாதிரி தெரியறது . ஆத்துக்குள்ள சேக்காதேள்னு கேட்டாளோ...?!, இல்லியே. இப்ப அவா போய் சேந்துட்டா. துயரப்படுறது என்னவோ நாம தான் "என்று அலுத்துக் கொண்டாள்.
"என்னவோ காயூ, எல்லாம் நல்லா நடந்தா சரி தான் "என்றான்.
"ஏன்னா... அந்த மாமா தான் மினிஸ்ட்ரேட் ல இருக்காரே, அவரண்ட சொல்லி செக்யூரிட்டி போடச் சொன்னா என்ன?" என்று தனது யோசனையை கூற
அவனோ," அதெல்லாம் சரிப்படாது காயூ. இது ஒரு இஷ்யூ ஆகிடும். அது மட்டும் இல்லாமல் அவன் யாருனு நினைச்சுண்டு பேசற நீ. "என்று சொல்லவும்
" யார் அவன் பெரிய கலெக்டரா என்ன?" என்றாள் நொடிப்பாக.
"
கலெக்டர் இல்லை. வக்கீல். அதுவும் க்ரிமினல் லாயராம். இப்ப கூட ஏதோ ரௌடியை பிடிச்ச கேஸ்ல அதுக்கு எதிரா வாதாடப் போறது இவன் தானாம். அந்த ரௌடிக்கு சப்போர்டிவா எந்த வக்கீலும் நிக்க மாட்டேங்கிறாளாம் அத்தனை பயம் இவன் மேல. பார் கவுன்சில் ல பெரிய மரியாதை இவனுக்கு "என்று அடுக்க
"
இத்தனை சொல்றேளே அப்போ வீணாவை அவனுக்கேத் தர வேண்டியது தானே?. ரொம்ப தான் பாராட்டு பத்திரம் வாசிக்கறேள்" என்று நொடித்தவளிடம் ,"அப்படினா உன் பொண்ணும் மூலையில் உட்கார வேண்டியது தான். பரவாயில்லையா?" என்றான் கடுப்பாக
"
ஏன் ஏன்... என் பொண்ணு ஏன் மூலையில் உட்காரணும்?" என்று மல்லுக்கு நிற்க
"
அடியே அசடு...! அவன் நம்ம மாதிரி நித்தமும் கச்சேரி அனுப்பி பணம் பார்ப்பான்னு நினைச்சுண்டியா...? அவளுக்கு பிடிக்கும் போது வாசிச்சா போதும் அவ எதுல நன்னா சந்தோஷமா இருக்காளோ அதை செய்தா போதும்னு தோப்பானாரண்ட சொன்னான். நாம நம்ம பொண்ணை பிரபலம் ஆக்க வீணாவை தான் வாசிக்க சொல்றோம். அவளும் நீரஜாக்கு தகுந்தாற் போல வாசிச்சு சமாளிக்கறா... நீரஜா ஃபேமஸ் ஆகணும்னா அதுக்கு வீணா அவளோட சேர்ந்து கச்சேரி பண்ணனும்" என்றான் விளக்கமாக.
"
என் பொண்ணு கொஞ்சம் பிக்கப் ஆகட்டும் அப்புறம் பாருங்கோ. வீணை காயத்ரியையே வாசிக்க வைப்பேன்" என்று,' சபதமெடுத்துச் சென்ற மனைவியை என்ன சொல்லுவது ?'என்று புரியாமல் பார்த்தான்.
கனவிலும் நடக்காத ஒன்று... நீரஜாவிற்கு பாட்டெல்லாம் பிரமாதமாக வரவில்லை. ஏனோ தானோ ரகம் தான். அதையே வீணா ஒரு வாரம் முழுக்க பயிற்சி அளிக்க வேண்டும். நீரஜாவிற்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் அன்னையின் தொல்லை தாங்காமல் செய்கிறாள். காயத்ரிக்கு தன் மகளை பெரிய பாடகி ஆக்கிட வேண்டும் என்ற வெறியே இருந்தது.
ராமகோபாலன் காயத்ரி பேசிய
அத்தனை சம்பாஷணைகளும் வீணாவின் காதில் விழுந்து கொண்டு தானிருந்தது. கேட்டாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. இருதலைக்கொள்ளி எறும்பாய் ஒரு வாழ்வு. மனம் கவர்ந்தனோடு செல்ல முடியவில்லை. தமையனையும் பிரிய முடியா சூழல். தந்தையின் சத்தியம் அவளை கட்டுக்குள் வைத்திருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிடு எங்கேயும் போய் வாழ்ந்து விடலாம் என்று மனம் மன்றாடியது.
'
சமரா என் மனசுக்கு நிம்மதியைத் தாயேன் 'மனதோடு அவனிடம் கெஞ்சினாள்.
"
உன்னைப் போல பாடத் தெரியாது சாத். ஆனாலும் உனக்காக பாடத் தெரியும்" என்றான் புன்சிரிப்புடன். கானல்நீர் போல அவன் உருவம் மையலாய் ரசித்து நின்றது. நினைவுகள் கூட சுகம் தரும் என்று தானே நினைக்க மறந்தேன். நினைவிலேயே வாழ்ந்து விட்டால் போதுமா சமரா?!. "உன் நிஜத்தோடு நான் வாழணுமே?" வாய் விட்டே முணுமுணுத்தாள்.
கானல்நீர் ஓவியமவன் புன்னகையோடு அழியாமல் நின்றான். 'தொட்டுப் பார்க்கும் தூரம் தான் தொட்டு விடு' என்று அவன் சிரிப்பு அழைத்தது. தொட்டால் மறைந்திடுவான் என்று மூளை எச்சரித்தது.
'
உன்னைச் சேர எனக்கேன் இவ்வளவு போராட்டம் சமரா...!!' தவித்த மனதிற்கு தாகம் தீர்க்க விரும்பவில்லை அவள். இன்னும் தவித்துப் போ என்றாள் ஆத்திரமாக. அவனைத் தவிக்க விட்ட நீ மட்டும் நியம்மதியடைய வேண்டுமா ஓங்கரித்தது மூளை.
'
சாத் காம்போதி ராகமாமே அதில் ஒரு பாட்டுப் பாடேன். விரல் வலிக்குதா சாத்... இன்னிக்கு கச்சேரி அதிகமில்ல அதான் வேற ஒண்ணுமில்ல சரி ஆகிடும் டா' அன்பாய் அக்கறையாய் அவன் குரல். அடுத்த நொடியே ,"என்னை மறந்துட்டியேடி!" என்று ஏக்கமும், கோபமுமாய் அவன் குரல். ஒலித்துக் கொண்டே இருந்தது.
********
'
சாத்வி பேசுடி ஒரு முறை கூப்பிடு. வெட்கத்தை விட்டு பின்னாடியே வந்திடுறேன். உன் கிட்ட போட்ட சபதமெல்லாம் எங்க போச்சுனு தெரியல. இதுவரை எந்த வழக்கிலும் தோற்காத வக்கீல்னு பேரெடுத்தவன். உன் கிட்ட தோத்துப் போய் நிற்கிறேன். இன்னும் நிற்பேன் ஒரு முறை கூப்பிடேன்' மனதோடு அவளிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.
"
நீ கூப்பிடாம உன் கிட்ட திரும்ப வரமாட்டேன்டி" ஆத்திரமாக கத்தி விட்டு வந்தவன் தான். இதுவரை அவளெதிரில் சென்று நிற்கவில்லை. ஆனாலும் அவளைப் பார்க்காமல் இருந்ததில்லை. இதோ இன்று அத்தனை தடைகளையும் ,சபதத்தையும் உடைத்தெறிந்து விட்டுப் போய் விட்டான். வேறொருவனோடு திருமணம் நடந்திடும் என்ற பயமில்லை. அவள் இன்னொருவன் முன்பாக சென்று நிற்பதற்குள் மனதினுள் இறந்திடுவாள் என்ற பயமே அவனை அவளை நோக்கி ஓடச் செய்திருந்தது.
காமாட்சிக்கு மனமெல்லாம் பாரம் ஏறிக் குடி கொண்டது. மகன் படும் பாட்டை கண் கொண்டு பார்க்க இயலவில்லை அவரால். அவன் வாழ்வில் வேறொரு பெண் வந்தால் சரியாகிடுவான் என்பது அவர் யூகம். ஆனால் யூகங்களைக் கடந்து, தான் நினைத்ததை சாதிப்பவன் என்பதை உணரவில்லை அவர்.
"
காமாட்சி உன் வேதனை புரியுது. ஆனா அவன் தன் போக்கில் இருந்து என்னைக்கும் மாற மாட்டான் நாம பேசுறது வேஸ்ட்டு "என்றார் ருத்ரனின் தந்தை மேகநாதன் .
"
அதுக்காக அவனை அப்படியே விட்டுடலாமா...? நான் பொண்ணு பார்த்துட்டேன், இனி தேதி குறிக்க வேண்டியது தான் பாக்கி" என்றார் உறுதியாக.
"
சரி உன் இஷ்டம் " மேகநாதன் முடித்து விட்டார் பேச்சை.
********
சத்யநாராயணனின் பணம் கண்ணை மறைந்திருந்தது ராமகோபாலனிற்கு. காயத்ரி கூட ஓரளவிற்கு சமாதானம் ஆகி இருந்தாள் மகளுக்குப் போட்ட வைர அட்டிகையில்.
ருத்ரன் சமயம் பார்த்துக் காத்திருந்தான். இடையில் அவளை சந்திக்க நினைக்கவே இல்லை அவன். ராமகோபாலனை இதோடு விடக் கூடாது என்று முடிவு செய்திருந்தான்.
அவன் செய்ததற்கெல்லாம் பழிதீர்க்க இது தான் தக்க சமயம் என்று வக்கீல் மூளை உறுதியாக பேசியது.
செய்தித்தாளை திருப்பிக் கொண்டிருந்தான். மனம் அதில் பதியவில்லை என்றாலும் வெற்றிடத்தை வெறிக்க விருப்பமில்லை அவனுக்கு.
பிரபல வீணை இசைக்கலைஞர் வீணாசாத்விகா திருமணம் ஐடி ஊழியரை மணக்கிறார் செய்தி பாதியிடத்தை அடைத்துக் கொண்டு இடம்பிடித்திருந்தது. நிச்சயதார்த்தவிழா புகைப்படம் ஒன்று போடப்பட்டிருந்தது. ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்றிருந்தாள் சாத்விகா.
'
எவ்வளவு திமிர் பார் இவளுக்கு ?!'ஆத்திரத்தில் கண்மண் தெரியாத கோபம் வந்தது ருத்ரனுக்கு.
இதுவரை அழைக்காமல் இருந்த அவளது பர்சனல் கைபேசி எண்ணிற்கு அழைத்து விட்டான்.
அழைப்பு போய்க் கொண்டே இருந்தது அவளுக்கு. கையிலேயே வைத்திருந்தாலும் எடுக்கவில்லை அவள்.
'
எப்படி பேசுவேன் என்ன பேசுவேன்?' மனம் தவித்துக் கிடந்தது. ஒரு வழியாக அழைப்பை ஏற்று விட்டாள்.
அவன் நெஞ்சைக் குத்திக் கிழிக்க தயாராகி விட்டாள் சொல்லெனும் அம்பை உருவேற்றி.
"
ஹலோ சாத்... சாத்வி லைன்ல இருக்கியா உன் கிட்ட பேசணும். நான் உன்னைப் பார்க்கணும் சாத்... இதுக்கு மேல முடியாது சாத். ப்ளீஸ் சாத்வி ஹலோ "எதிர்முனையில் இரைந்து கொண்டிருந்தான் அவள் அழைப்பை ஏற்ற ஆர்ப்பரிப்பில்.
"
எதுக்கு உங்க கிட்ட பேசணும் ?,பேச விருப்பம் இல்லை, என் வாழ்க்கையில் தலையிடாதீங்க. இத்தோடு என்னை விட்டுடுங்க என்றாள் நிறுத்தி நிதானமாக.
"
சாத்வி அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ, என் கோபத்தைக் கிளறாதே உன் கிட்ட பேசணும் அவ்வளவு தான்" என்றான் இறுகிப் போன குரலில்
"
என் அப்பா அம்மா சாவுக்கு காரணமாயிருந்த உன் கிட்ட என்ன பேசணும் நான்?" என்ற வாக்கியத்தில் அவனது உறுதி எல்லாம் உடைந்து சிலையாகிப் போனான். தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது அவர்களது காதலின் இணைப்பும் எப்போதோ அறுபட்டு விட்டிருந்தது.
இணையுமா இரு உள்ளமும் நினைப்பாளா அவனின் நெஞ்சாத்தி