• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிமலனின் நாயகி - 9

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
8. மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

9. வீட்டிலும் அவள்

நிமலனைப் பற்றிய தன் அனுமானங்கள் தவறானவை என்பதை உணர்ந்து கொண்ட சித்ரா, அவன் மீது விண்ணளவு மரியாதை கொண்டாள்.
ஏதோ உளறிக் கொண்டிருக்கிறானென்று நினைத்திருந்தவள் உண்மையில் அவன் ஒரு செயல் வீரனென்று அறிந்துகொண்டாள்.
அன்று சேவாலயாவுக்கு அவனால் கிட்டப்போகும் உதவிகளின் பட்டியலைப் பார்த்தவுடன் வாயடைத்துத்தான் போய்விட்டாள் அவள். அவனது எண்ணங்களும் சிந்தனையும் மனமும் எத்தனை விசாலமானது என்றெண்ணி வியந்தாள்.
அப்படியானால் தன்னைக் காதலிப்பதாய் அவன் சொன்னதும் மணமுடிக்க நினைப்பதும் கூட உண்மை தானோ என்று முதன்முறையாய்த் தோன்றியது அவளுக்கு.
அன்று அந்த மிகப்பெரிய மீட்டிங் முடிந்து கோடி நன்றிகள் சொல்லிவிட்டு கனகலிங்கம் விடைபெற்ற போது சித்ரா நிமலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.
கலங்கிய கண்களோடு ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு விடைபெற்றாள்.
அவனைக் கட்டிவைத்திருக்கும் அந்த பெரிய விழிகள் சொன்ன பார்வை மொழியே அவனுக்கும் போதுமானதாய் இருந்தது.
அவளுக்குக் கொஞ்சம் அவகாசமும் இடைவெளியும் அளிக்க அவனும் நினைத்தபடியால் அவளைத் தொந்தரவு செய்யவே இல்லை.

சித்ராவுக்கு நிமலன் செய்திருக்கும் அசாதாரண உதவியை உள்வாங்கவும் சீரணிக்கவுமே அதிக நேரம் பிடித்தது.
ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் வரும்
"மலர்கள் கேட்டேன்.. வனமே தந்தனை..
தண்ணீர் கேட்டேன்.. அமிர்தம் தந்தனை..
எதை நான் கேட்பின் உனையே தருவாய்??!!"
என்ற பாடல் வரிகளை நிமலனுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டே இருந்தது அவள் மனது!

சிறிதாக இரண்டே இரண்டு கட்டுமான நன்கொடைகள் கேட்டுப் போனவளுக்கு நிமலன் அள்ளிக் கொடுத்துவிட்டானே!
பல பெரிய கட்டுமான கம்பெனிகளின் CSR நிதிகளை ஒன்றிணைத்து ஒரே ஒரு உண்டு உறைவிட சிறப்புப் பள்ளியைத் தத்தெடுத்து அத்தனை தளவாட வசதிகளையும் ஏற்படுத்தும் புது முயற்சி எத்தனை பெரிய விஷயம்!!

பொதுவாக கார்பொரேட் கம்பெனிகள் இந்த CSR நிதியினை அவர்களின் கம்பெனி அமைந்துள்ள பகுதியினைச் சுற்றியே ஏதேனும் சில சமூகப் பணிகளுக்கு செலவழிப்பது தான் வழக்கம். சுற்றுவட்டாரத்தில் மக்கள் கேட்கும் ஏதேனும் ஒன்றைச் செய்துகொடுப்பார்கள். உதவி பெற்றவர்கள் அதற்கு நன்றி விழா எடுப்பார்கள். அதனால் கம்பெனிக்கு ஒரு நல்ல பெயரும் விளம்பரமும் கிடைக்கும். வரி விஷயங்களிலும் அவர்கள் இதைக் காட்டிக்கொள்வார்கள்.
ஆனால் நிமலன் மெனக்கெட்டு ஆங்காங்கே சின்ன அளவில் பயன்பட்டுவந்த இந்த நிதியினை ஒன்று திரட்டி உருப்படியாக ஒரு மாதிரி சிறப்புப்பள்ளி அமைக்கலாமென்று பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்து பெரிய நல்ல காரியம் ஒன்றைச் செய்திருப்பது நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று தானே.

இந்தியா உடலியல் உளவியல் குறைபாடுகள் கொண்ட குடிமக்களின் தேவைகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரும் நாடாக இன்னும் வளரவில்லை. இப்போது தான் இந்த விஷயத்தில் நாட்டில் பல மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அப்படியிருக்க நிமலனின் முயற்சியால் சேவாலயா நாட்டின் முதல் உலகத்தர சிறப்புப் பள்ளியாகிவிடும். நிமலன் காட்டிய வழியினைப் பின்பற்றி இன்னும் பலர் வருவார்கள். ஆங்காங்கே இது போல் சிறப்புப்பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டால் அது எத்தனை பெரிய சமூக மாற்றத்தினைக் கொண்டுவந்துவிடும்!! இதை நினைத்து நினைத்து பூரித்துப்போனாள் சித்ரா!

2 நாட்கள் கழித்து பள்ளியில் கட்டுமானப் பணிகளும் துவங்கிவிட்டன. நிமலனும் பள்ளிக்கு வருவதும் போவதுமாய் இருந்தானே தவிர சித்ராவை அவன் தொந்தரவு செய்யவில்லை. பேசவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ளவில்லை.

தவறாக எடைபோட்டுவிட்டோமே என்ற எண்ணத்தால் சித்ரா நிமலனிடம் போய் பேசுவதற்கு மிகவும் தயங்கினாள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் என்ற குறள் வழி அவன் நடந்து தன்னைத் தண்டித்துவிட்டதாக நினைத்தாள்..

உண்மையில் அவன் அளித்த இந்த சின்ன இடைவெளியும் அவகாசமும் அவளிடம் அவன் போட்ட கணக்குப் படியே காதலைக் கிளறித்தான் விட்டன.
எட்ட இருந்து அவனைப் பார்த்த போதெல்லாம் அவனாக ஏதாவது பேசமாட்டானா என்று அவள் ஏங்கினாள். எதிர்பார்த்தாள்.

ஆனால் அவன் பேசவில்லை. அவளாக சென்று பேசவும் அவளின் தயக்கம் அவளை அனுமதிக்கவில்லை.
மொத்தத்தில் நிமலன் அவளுக்குள் விரிந்துவிட்டான். கல்லாகிப் போயிருந்த அவளின் மனதை உருக்கிவிட்டான். இறுக்கி வைத்திருந்த அவளின் முடிச்சுக்களைத் தளர்த்திவிட்டான். அவளின் இதயக்கதவுகளைத் தட்டிவிட்டான்!

அவன் பேசாததால் நிலவிய இந்த அமைதியை உடைக்க வழி தெரியாது தவித்தாள் சித்ரா.
இப்படியே 5 நாட்கள் ஓடிப்போனது.
நிமலன் அவளிடம் நெருங்காமல் பேசாமல் கட்டுப்படுத்திக்கொண்டானே தவிர அவளை அணு அணுவாய் இரசித்துக்கொண்டுதான் இருந்தான்.
அவளின் மாநிறம் அவனுக்கு அவனின் தாயார் பானுமதியை நினைவூட்டிக்கொண்டே இருந்தது.
எந்த ஆர்பாட்டமும் இல்லாத அவளின் அடக்கமான அழகும், படு ஸிம்பிளான காட்டன் புடவைகளை நேர்த்தியாகக் கட்டிவரும் அவளின் திருத்தமும், அந்த அடர்த்தியான சுருட்டை கூந்தலும் கண்டு அவன் சொக்கித்தான் போனான்.
குறைபாடுகள் கொண்ட குழந்தைகளிடம் அவள் காட்டும் அன்பும் அந்த குழந்தைகள் அவளிடம் கொண்டுள்ள பாசமும் அவனை ரசிக்க வைத்தது. பணி மீது அவளுக்குள்ள அர்பணிப்பு உணர்வும் திறமையும் அவனை மிகவும் கவர்ந்தது!

பள்ளி முடித்து ஒரு நாள் அவளுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து போய் அவள் ஒரு பணி செய்யும் மகளிருக்கான தங்கும் விடுதியில் தங்கியிருப்பதையும் பார்த்துக்கொண்டான் நிமலன்.

இப்படி இருவரும் சத்தமில்லாமல் காதலித்து வந்த நிலையில், சித்ரா ஒரு ஜவுளிக்கடையில் புடவைகளை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்!
"இது நல்லா இருக்கும் உங்களுக்கு!" என்று ஒரு குரல் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பினாள்.. நிமலன்!

"நான் எனக்கு பாக்கல்ல.."

"தெரியும்! இது காட்டன் இல்லையே! ஆனா உங்களுக்கு இதுவும் நல்லா தான் இருக்குமின்னு சொன்னேன். யாருக்கு பாக்குறீங்க?"

"கீர்த்தனாவுக்கு.. நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள்!"

"ஹா..... ஆமாம்! தெரியும். அப்பறம் சஞ்சீவை வேலையை விட்டு அனுப்பிட்டேன். கீர்த்தனா வேலைக்கு வரதுன்னா ஐம் ரெடி டு அப்பாயிண்ட் ஹெர்."

"சொல்றேன். அவ வருவாளா தெரியல்ல. இப்பத்தான் வேற கம்பெனியில சேர்ந்தா"

"ஹோ!!"

"ஆமா! பிரச்சனையைக் கண்டு ஓடத்தான் பல பெண்கள் ரெடியா இருக்காங்க. எதிர்த்து யாரு நிக்குறாங்க?"

"எதிர்த்து நிக்க எல்லாருக்கும் உங்களாட்டம் நரம்படி வித்தையா தெரிஞ்சிருக்கு?"

"மனசுல தில்லு இருந்தா போதும். வித்தை எதுவும் அவசியமில்ல"

"உங்களுக்கு எப்படி இது தெரியும்?"

"எது..."

"இல்ல... சேவாலயாவில வளர்ந்ததா சொன்னீங்க. நரம்படி வித்தை அங்க எப்படி?"

"சேவாலயாவுக்கு 7 வயசுல வந்தேன். 4 வருஷம் இருந்தேன். அப்பறம் ஒரு கேரளா குடும்பம் என்னைத் தத்தெடுத்து அவங்களோட கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. அவங்க தான் இந்த வித்தையை எனக்கு சொல்லித்தந்தாங்க!"

"ஹோ! 7 வயசில தான் சேவாலயா வந்தீங்களா?"

"ஆமா!"

"அப்ப உங்களுக்கு மலையாளம் தெரியுமா?"

"ரொம்ப நல்லா தெரியுமே! இண்டர்வ்யூ முடிஞ்சிதா? இன்னும் கேள்விகள் இருக்கா!!"

"கேள்விகள் எக்கச்சக்கமா இருக்கு! பட் போரடிச்சா இப்போதைக்கு நிறுத்திக்கறேன்."

"தேங்க்ஸ்! ஆமா நீங்க எங்க புடைவை செக்‌ஷன் பக்கம்!!??"

"வேற வேலையா வந்தேன்! அப்படீன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். நீங்க இந்த கடைக்குள்ள நுழைஞ்சதைப் பாத்தேன். அதான் பேசலாமின்னு வந்தேன். சேவாலயாவில நீங்களா வந்து பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க இறங்கி வர்ற மாதிரி தெரியல்ல. அப்படியே விட்டுட முடியாதில்ல! அதான்"

தேங்காய் உடைப்பதைப் போலவே எப்போதும் பேசும் நிமலனின் வெளிப்படை சித்ராவை மிகவும் கவர்ந்தது. அவனை விழுங்கிவிடுவதைப் போல் பார்த்துக்கொண்டிருந்தாள். நிமலன் மட்டுமென்ன? அவனும் அவளைக் காதல் வழிய பார்த்துக்கொண்டு தான் நின்றான்‌.

"இங்கையே நின்னு தான் பேசனுமா!!??"

"பக்கத்தில காஃபி ஷாப் போகலாமா!!??"

"புடவைக்கு பணம் கொடுத்துட்டு வர்ரேன்." என்று சொல்லிவிட்டு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடந்து போனாள்.

நிமலனுக்குத் தலைகால் புரியவில்லை. வாழ்வில் முதன்முறையாய் அவன் உயிர் வரை ஆனந்தமடைந்தான். அவன் ஏங்கிக்கொண்டிருந்த தருணம் அமைந்துவிட்டதே.. சித்ரா இப்படி உடனே சம்மதித்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

இருவரும் பக்கத்தில் இருந்த காஃபி ஷாப் சென்றனர்.
காஃபிக்கு இடையில் ஆரம்பித்தாள் சித்ரா.

"உங்களுக்கு எந்த மொழியில என்ன வார்த்தை சொல்லி நன்றி சொல்லுறதுன்னு தெரியல்ல எனக்கு. அதான் உங்களோட பேச வரல்ல! ஆக்சுவலி இப்பவும் எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல்ல"

"எதுக்கு நன்றி?"

"சேவாலயாவுக்கு நீங்க செய்யுறது லைஃப் டைம் உதவி"

"சேவாலயாவுக்கு தான் நான் உதவி செய்யுறேன். உங்களுக்கு இன்னும் எதுவும் பண்ணல்லையே! அதுக்கே நன்றி சொல்றீங்களா!"

"சேவாலயாவுக்கு செஞ்சா எனக்கு செஞ்ச மாதிரி தான். ரொம்ப ரொம்ப நன்றி! எங்க பிள்ளைங்களுக்கு இத்தனை வசதிகள் கிடைக்குமின்னு நான் கனவுல கூட நினைக்கல்ல!"

"தே டிசர்வ் மோர்"

"எப்படி உங்களுக்கு இத்தனை பெரிய மனசு வந்தது? ஏன்!!"

அவளை நிலைத்துப்பார்த்தான் ஒரு கனம். பிறகு தொடர்ந்தான்.

"அம்மா அடிக்கடி சொல்லுவாங்க! எதையும் அறைகுறையா செய்யக்கூடாதுன்னு. நீங்க கேட்டது வெறும் கால்முடியாத பிள்ளைங்களுக்கு மட்டும் தான் வசதிப்படும். மத்த குழந்தைங்க என்ன செய்வாங்க? அதான் ஏதாவது உருப்படியா செய்ய யோசிச்சேன். அப்பா சோஷியலிஸ்ட். எனக்கும் கொஞ்ச கொஞ்சம் அந்த புத்தி இருக்கு. சமூகத்திலேருந்து சம்பாதிக்குறோம். திருப்பி கொஞ்சமாச்சு கொடுக்கனுமின்னு அப்பாவும் அடிக்கடி சொல்லுவாரு. இதெல்லாம் காரணம். ஆனா இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு!"

"என்ன..."

"யூ ஆர் மை குயின். நீங்க இருந்த இடம், இருக்கற இடம் நீங்க விரும்பற மாதிரி இருக்கனும். எனிதிங் ஃபார் யூ"

அதிர்ச்சியாய் குழப்பமாய் ஆச்சரியமாய் அவனை தன் பெரிய கண்களால் மெல்லுவதைப்போல் பார்த்தாள் சித்ரா!

"ஆர் யூ சீரியஸ்?"

"என்னைப் பாத்தா விளையாடுற மாதிரியா தெரியுது?"

"இல்ல.. எனக்குப் புரியல்ல.. ஏன் நான்??!!!"

"இதுக்கு என்ன பதில் சொல்லுறது?"

"இது சரிப்பட்டே வராது. உங்க உலகமும் என் உலகமும் நேர்மாறானது."

"அடக் கடவுளே.. ஒரே எர்த் தான்னு நான் இத்தனை வருஷமா படிச்சிட்டிருக்கேன்! இல்லையா!!!"

களுக்கென்று சிரித்துவிட்டாள் சித்ரா.

"ஸீ.. நம்ம விஷயத்துக்கு ஒன்னும் அவசரமே இல்ல! ஐம் வெரி க்ளியர்! நீங்க உங்களுக்கான நேரத்தைத் தாராளமா எடுத்துக்கலாம். நோ கம்பல்ஷன். அதுவரைக்கும் லெட் அஸ் பீ ஃப்ரெண்ட்ஸ்"

"..."

"என்ன பதிலைக் காணும்!!"

"என்ன சொல்லுறதுன்னு தெரியல்ல"

"அப்பா! முடியாதுன்னு பதில் வரல்ல!! தேங்க் யூ"

இனிதே ஆரம்பித்துவிட்ட இவர்களின் பகிர்தல் அடுத்து வந்த வாரங்களில் தொடர்ந்தது. சேவாலயாவில் கட்டுமானப் பணிகளும் வளர்ந்தது. நிமலனைப் போல் நிரஞ்சனும் கட்டுமானப் பணிகளை அடிக்கடி பார்வையிட வருவதும் போவதுமாய் இருந்தார்.
அப்படி ஒரு சமயம் அவர் கனகலிங்கத்திடம் இரு உதவிகள் கேட்டான்.
"ஆட்டிசம் நிலையில இருக்குற பெண் குழந்தைக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் எனக்கு வேணும். நீங்க தான் ஏற்பாடு செஞ்சு தரனும்" என்பதே அந்த முதல் உதவி.

சித்ராவைத் தான் பரிந்துரைத்தார் கனகலிங்கம்.
ஒரு முகவரி கொடுத்து அந்த வீட்டுக்குச் சித்ராவை அனுப்பும்படி கோறிவிட்டு விடைபெற்றார் நிரஞ்சன்.
சித்ரா அந்த முகவரிக்குப் போனால் அங்கே நிரஞ்சனே தான் இருந்தார். அவர் மகள் தான் அந்தப் பெண் குழந்தை.

நிமலனுக்கு இன்னும் குஷியாகிப் போனது.

"என் மகளுக்கு உங்களையே ஆசிரியரா தேர்ந்தெடுக்கறேன். தினமும் 2 மணி நேரம் வீட்டுக்கு வந்திடுங்க."

"உங்க மகளுக்கு ஆசிரியரா என்னை நீங்க தேர்ந்தெடுக்க முடியாது சார். உங்க மகள் தான் என்னைத் தேர்ந்தெடுக்கனும். ஆட்டிசம் கற வார்த்தையே ஆட்டோ - இசம் ஆகிய இந்த ரெண்டு வார்த்தைகள்லேருந்து உருவானது தான். ஆட்டோ-னா தானாக, இசம்-னா உலகம். அதாவது தானாக ஒரு உலகத்தை உருவாக்கி அதுல இருப்பாங்க. அந்த உலகத்துக்குள்ள எல்லாருக்கும் அனுமதி கிடைச்சுடாது. உங்க குழந்தை அவளோட உலகத்தில என்னை அனுமதிச்சுட்டான்னா நிச்சயமா என்னால முடியுற வரைக்கும் அவளுக்கு உதவுவேன்" என்று சித்ரா சொன்ன பதில் நிரஞ்சனுக்கு நம்பிக்கையை அள்ளித்தந்தது.

மனைவி இன்றி தனித்தந்தையாக அந்த பெண்குழந்தையை வளர்த்துவரும் நிரஞ்சனுக்கு இது பற்றிய சித்ராவின் புரிதலும் இதில் அவளின் அனுபவமும் ஏதோ பெரிய சப்போர்ட் கிடைத்துவிட்டாற்போல் தோன்றியது.

சித்ரா விடைபெற்றதும் அதை வெளிப்படையாக நிமலனிடம் சொன்னார் நிரஞ்சன்.

"நான் என் மனைவிய தேர்ந்தெடுத்துட்டேன்னு அன்னைக்கி சொன்னேனே! அது சித்ரா தான்" என்று பட்டென்று போட்டு உடைத்துவிட்டான் நிமலன்.

அதிர்ச்சியானார் நிரஞ்சன்.
"என்ன டா சொல்ற. அப்ப சேவாலயா மொத்த ப்ராஜெக்டும் இவளுக்காகத் தானா??"

"ஆமா!"

"நிமலா! ரொம்ப சாதாரண பெண்ணா இருக்காளே டா!"

"ஸோ வாட்??!! ஐம் வெரி க்ளியர். சித்ரா தான் எனக்கு வேணும்."

"அவளுக்கு உன் எண்ணம் தெரியுமா?"

"தெரியும். ஆனா இன்னும் சம்மதம் சொல்லல்ல. ஷீ இஸ் நாட் ஈஸி பர்ஸனாலிட்டி. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு"

"நீ முடிவு பண்ணினா அது தப்பா இருக்காது.. ஓக்கே.. பாத்து பண்ணு. எனக்கு நீ சந்தோஷமா இருக்கனும். அவ்வளவு தான்"

"இருக்கேன் அண்ணே! இருப்பேன். சரி கேக்க மறந்தே போயிட்டேன். அப்பா சொன்ன அந்தப் பெண்ணப் பத்தி விசாரிக்கப் போறேன்னீங்களே என்னாச்சு"
"ஆ.. அந்த சொந்தக்காரவங்க வீட்டுக்குப் போனேன். அவங்க அந்தப் பெண்ணை ஒரு வருஷம் தான் வச்சிருந்தாங்களாம். அப்பறம் சேவாலயாவில தான் விட்டுருக்காங்க. அப்ப அந்த பெண்ணுக்கு 7 வயசாம். இதைப்பத்தி இன்னிக்கி கனகலிங்கம் ஐயா கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அந்த பெண்ணை விட்ட வருஷம், அந்த பெண்ணொட சின்ன வயசு ஃபோட்டோ, அங்க அடையாளங்கள் எல்லாம் ஒரு ஃபைல் ல போட்டு கொடுத்து விவரங்கள் கேட்டிருக்கேன். அவரு தேடி நாளைக்கு சொல்லுறேன்னு சொல்லியிருக்காரு. பாக்கலாம்" என்று சொல்லி எழுந்து போன நிரஞ்சனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தான் நிமலன். முகம் அதிர்ச்சியில் வெளிறியது!

10. மன்னிப்பே கிடையாது..

-வித்யாகுரு
 
Last edited:

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
சித்ரா இப்போதான் கொஞ்சமா அவனை னம்பின மாதிரி இருந்தது. இதுல அந்த பொண்ணூ சித்ராதான்னு தெரிஞ்சதுனா என்னாகும்.
அந்த பொண்ணு சித்ராவா இருக்கக்கூடாது
 

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
ரெண்டு பேருடைய கன்வோ நல்லா இருக்கு சிஸ்,
இப்படியே போனா நல்லா இருக்கும்.
அந்த பொண்ணு சித்ராவா இருந்தா என்னாகும்
 

Vimala

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 10, 2023
Messages
31
நிரஞ்சனோட மகளுக்கு ஆட்டிசமா.
ஆட்டிசம் பத்தின சித்ராவோட பேச்சு அருமை. அவங்கதான் நம்மளை ச்சூஸ் பண்ணனும், நாம அவங்களை சூஸ் பண்ணக்கூடாது.
ரொம்ப அருமை
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
சித்ரா இப்போதான் கொஞ்சமா அவனை னம்பின மாதிரி இருந்தது. இதுல அந்த பொண்ணூ சித்ராதான்னு தெரிஞ்சதுனா என்னாகும்.
அந்த பொண்ணு சித்ராவா இருக்கக்கூடாது
நானும் அப்படி தான்‌ நினைக்குறேன். நிமலன் ஏன் கடைசியில அதிர்ச்சி ஆகுறான்??!;
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
நிரஞ்சனோட மகளுக்கு ஆட்டிசமா.
ஆட்டிசம் பத்தின சித்ராவோட பேச்சு அருமை. அவங்கதான் நம்மளை ச்சூஸ் பண்ணனும், நாம அவங்களை சூஸ் பண்ணக்கூடாது.
ரொம்ப அருமை
மிக்க நன்றி 😍😍 ஆட்டிசம் பத்தின விழிப்புணர்வு நம்ம ஊர்ல ரொம்ப கம்மி. அதுவும் ஒரு வியாதின்னு தான் பல பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க..
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
ரெண்டு பேருடைய கன்வோ நல்லா இருக்கு சிஸ்,
இப்படியே போனா நல்லா இருக்கும்.
அந்த பொண்ணு சித்ராவா இருந்தா என்னாகும்
பெரிய குழப்பம் தான் வரும்.. பாக்கலாம்.. என்ன ஆகுதுன்னு..
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
அச்சச்சோ!! ஏதோ நடக்கப் போகுதுன்னு தெரியுது. ஆனால், என்னதுன்னு தெரியலயே அவ்வ்...

நான் சொன்ன மாதிரி சித்ரா தான் அவர்கள் தேடிய பெண்ணா வரப் போறா..
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
அச்சச்சோ!! ஏதோ நடக்கப் போகுதுன்னு தெரியுது. ஆனால், என்னதுன்னு தெரியலயே அவ்வ்...

நான் சொன்ன மாதிரி சித்ரா தான் அவர்கள் தேடிய பெண்ணா வரப் போறா..
இருக்கலாம் 😏😏
 
Top