• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு - 01

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 1

தொடர்ந்து நடந்த எதையும் நம்ப முடியாமல் மனம் தளர்ந்து போய் இருந்தவள் கழுத்தினில் மூன்று முடிச்சுக்கள் விழ, இதையுமே நம்பவும் ஏற்கவும் முடியாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஸ்வர்ண லதா.

எத்தனை ஆசைகள் எத்தனை எத்தனை கனவுகள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் ஆகி இருக்க, இதை விதி என்று விட்டுவிட முடியாமல் மனம் கொதித்த பொழுதும் என்ன செய்துவிட முடியும்.

தாலிக் கட்டிக் கொண்டிப்பருவன் முகம் இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்க்காமலே அறிவாள் லதா.

அவனின் கோப மூச்சுக்களையும் தான் தான் தாங்க வேண்டுமா? எனும் பொழுதே ஆயாசமாய் ஒரு உணர்வு.

அதற்கு கொஞ்சமும் குறையாமல் கொதித்துக் கொண்டிருந்தது ஸ்வர்ணலதாவின் பின் கையால் சுற்றி வந்து நெற்றி வகிட்டில் குங்குமம் இட்ட தீப கண்ணனின் மனம்.

எவ்வளவு கூறினேன்.. கொஞ்சமாவது என் பேச்சை கேட்டாளா? என அவளை கண்களால் எரித்தபடி குங்குமம் இட, அதை பார்க்காமலே உணர்ந்தவள் கண்களை திறக்கவில்லை அந்த நிமிடம்.

"எழுந்து லதா கையை புடிச்சிட்டு மூணு முறை சுத்தி வா ப்பா!" கண்ணனின் அத்தை விசாலாட்சி கூற, அவரிடம் மெல்ல புன்னகைத்து தலையசைத்தவன் அவள் கைகளை அப்பொழுது தான் பார்த்தான்.

வலது கைகளில் உள்ளங்கையை சுற்றி துணியால் சுற்றப்பட்டு இருந்தது. கேள்வியாய் அவளை அவன் பார்க்க, அதை கவனிக்கவும் இல்லை கவனிக்கும் மனநிலையிலும் இல்லை ஸ்வர்ணலதா.

"அக்கா!" என்று பின்னின்ற கிருஷ்ணா லதாவின் தோள்களைப் பற்ற,

"என்ன கிருஷ்ணா?" என்றாள் சாதாரணமாய்.

"மாமா கூட அக்னியை சுத்தி வரணுமாம்.." கிருஷ்ணா கூற,

'இதுவேறயா?' என நினைத்து திரும்ப, கண்ணனின் கண்கள் அவளின் காயத்தில் இருந்தது.

"நீ போய் ஹெல்ப் பண்ணு!" என்ற விசாலாட்சி தீப கண்ணனின் தங்கை யசோதாவை கூற,

லதாவின் கூரை புடவை முந்தானையை அண்ணனின் தோளில் கிடந்த அங்கவஸ்திரத்தின் நுனியில் முடிச்சிட்டு,

"அண்ணி!" என லதாவின் கைகளை மெல்ல பிடித்து சுண்டு விரலைப் பற்றி தன் அண்ணனின் கைகளில் கொடுக்க, எதுவும் பேசாமல் இருவருமாய் எழுந்து சுற்றி வந்தனர்.

சுற்றி வந்து விசாலாட்சியின் அருகில் நின்றவன் , "அத்தை மாமா!" என்ற கண்ணன் விசாலாட்சி அவர் கணவர் கண்ணபிரான் கால்களில் விழவும் தானுமாய் அவர் கால்களில் விழுந்து எழுந்தாள் லதா.

எளிமையாய் கோவிலில் திருமணம் நடைபெற்று இருக்க, பெரிதாய் எவருக்கும் அழைப்புகள் இல்லை.

சொந்தபந்தங்கள் என ஸ்வர்ணலதாவின் பக்கம் உறவுகள் எல்லாம் மிக குறைவு என்ற போதும் தீப கண்ணனின் பக்கமாய் அதிக உறவுகள் இருந்தும் வேண்டாம் என்று முடிவாய் கூறிவிட்டார் விசாலாட்சி.

தீப கண்ணன் யசோதாவின் தாய் தந்தை சிறு வயதிலேயே விபத்து ஒன்றில் இறந்திருக்க, வளர்த்தது எல்லாம் தந்தையின் சகோதரி விசாலாட்சி தான்.

யசோதா அப்பொழுது சிறு குழந்தை.. விவரம் அறியா குழந்தை.. தீப கண்ணன் அப்பொழுது தான் ஓரளவு அறியும் வயதை அடைந்திருக்க, விசாலாட்சி தான் அவனுக்கு எல்லாமும் என்றாகிப் போனார்.

கண்ணனின் தாய் வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தவர்.. அவரின் சொத்துக்கள் அப்படியே கணவருக்கு வந்து சேர்ந்திருக்க சொத்து வசதி வாய்ப்புகளில் எந்த குறையும் இருந்ததில்லை.

இப்பொழுது வரையுமே அத்தையின் கவனிப்பில் தான் அலுவலகம் இயங்கி வர, கண்ணன் தினமும் அலுவலகம் சென்று வருகிறான்.

"வீட்டுக்கு போலாம் ப்பா!" என்று விசாலாட்சி கண்ணனிடம் கூற,

"தாத்தாவை பாக்கணும்!" என்றாள் தவிப்போடு ஸ்வர்ணலதா.

"அம்மாடி! கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல வீட்டுக்கு விளக்கேத்தணும்.. அப்புறமா நீயும் கண்ணாவும் போய் உங்க தாத்தாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க.. சரியா?" என்று கேட்க, லதா மனம் இல்லாமல் நிற்கவும்,

"நான் தாத்தாகிட்ட சொல்லிக்கிறேன் க்கா.. நீ போய்ட்டு வா!" என்றான் கிருஷ்ணா.

"நீயும் வா கிருஷ்ணா.. அக்கா வாழப் போற வீட்டை நீ பார்க்க வேண்டாமா?" விசாலாட்சி அழைக்க,

"ஆமா ப்பா வந்துட்டு போ!" என்றார் கண்ணபிரான்.

லதாவும் கலங்கிய கண்களால் தம்பியிடம் கேட்க, கொஞ்சம் உருகி தான் போனான் கிருஷ்ணன்.

"க்கா! என்ன நீ? அழறியா?" என்று லதாவின் தலையில் தட்டியவன்,

"நான் எங்க போக போறேன்? தினமும் வருவேன் உன்னை பார்க்க.. இப்ப தாத்தா எப்படியும் நம்மை தேடுவாங்க தானே? அதான் சொல்றேன்.. நான் தாத்தாகிட்ட போய் சொல்றேன்.. நீ போய்ட்டு சாயந்திரமா வந்திட்டு போ! என்ன சித்தி சரி தானே?" என்றான் விசாலாட்சியிடம்..

"விளையாட்டு பையன்னு நினச்சேன்.. பொறுப்பானவணா இருக்க.. சரி ப்பா அப்படியே பண்ணிடலாம்" என்று புன்னகைத்து கூறினார் விசலாட்சி.

"மாமா நான் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்.. அக்காவை பார்த்துக்கோங்க.. தாத்தாவையும் என்னையும் விட்டா அக்காக்கு யாரும் இல்லை.. இப்ப நீங்க தான் எல்லாம்.. உங்களை மட்டும் நம்பி தான் நான் அக்காவை அனுப்புறேன்!" என்று கண்ணனின் கைகளைப் பிடித்து கிருஷ்ணன் கூற,

இவர்கள் பேச்சில் தலையிடாமல் நின்ற கண்ணனுக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

தலையை மட்டும் அசைத்துவைத்தான். அவனின் இந்த பட்டுக் கொள்ளா தன்மை அப்போது புரியவில்லை கிருஷ்ணனிற்கு.

"போலாமா? நல்ல நேரத்துல கிளம்பிடலாம்!" கண்ணபிரான் கூற,

"நான் அண்ணி பக்கத்துல!" என வந்து லதா அருகே இன்னொரு புறமாய் நின்று கொண்டாள் யசோதா.

கிருஷ்ணன் புன்னகையோடு கையசைத்து விடைகொடுக்க, காரில் ஏறியதும் இறங்கிய சொட்டுக் கண்ணீருடன் கையசைத்தாள் லதா.

இவ்வளவு அவசரமாய் சகோதரியின் திருமணம் நடந்து முடிந்திருக்க வேண்டாம் என்று தோன்றிய அடுத்த நொடி,

"ச்ச! என்ன கிருஷ்ணா நீ? அக்கா சந்தோசமா இருப்பா அங்க.. இதை விட நீ நல்ல இடமா பார்த்திருக்க முடியுமா?" என தனக்கு தானே கேட்டுக் கொண்டு தாத்தாவை காண கிளம்பினான் கண்ணில் கட்டிய நீரை உள்ளிழுத்து.

"யசோ! அண்ணியை பூஜை ரூம்க்கு கூட்டிட்டு போ!" விசாலாட்சி கூற,

மாலையை கழட்ட போன கண்ணனை தடுத்தார் அவர்.

"நீயும் போ கண்ணா! சாமி கும்பிட்டு விளக்கேத்தினதும் மாலையை கழட்டலாம்" என்று கூற, அத்தை சொல் எதற்கும் மறுப்பு இல்லை கண்ணனிடம்.

பூஜை அறையின் ஒரு பக்கம் முழுதாய் காட்சி அளித்தனர் அத்தனை கடவுள்களும்.

"எல்லாம் உன் செயல்.. என் தேவையை எனக்கு சேர்த்திடு!" என வேண்டிக் கொண்டவள் விளக்கினை ஏற்ற, அத்தையின் சொல்லிற்காக அங்கே நின்றான் கண்ணன்.

"தீஷா! அத்தானும் அக்காவும் வந்துட்டாங்க!" என மகள் தீக்ஷிதாவிற்கு அழைத்து விசாலாட்சி கூறியவர்,

"சரி சரி பண்ணு!" என்று கூறி வைத்தார்.

"கண்ணா! உன் போன்க்கு வீடியோ கால்ல வர்றா பாரு தீஷா!" என்று கூறி அவர் அறைக்கு செல்லவும், மொபைலை எடுத்தான் கண்ணன்.

"வாழ்த்துக்கள் அத்தான்.." என்று கூற,

"தேங்க்ஸ் மா.. பிரகாஷ் எங்க?" என்று கேட்க,

"ஆபீஸ் போய்ட்டாங்க த்தான்.. பாப்பா பிளே ஸ்கூல் போய்ட்டா!" என்று கூற,

"சரி டா!" என்று புன்னகைத்தான்.

"அக்காகிட்ட குடுங்க!" என்று தீஷா கேட்க,

"பேர் சொல்லி கூப்பிடு தீஷா!" என்றவன் யார், என்ன என எதுவும் கூறாமல் மொபைலை லதாவிடம் நீட்ட,

வாங்கியவள் புன்னகைத்தாள், "ஹாய் க்கா! காங்கிரட்ஸ்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. நீங்க நல்லா பாடுவீங்களாமே! பாப்பாக்கு பாடுறவங்களை ரொம்ப பிடிக்கும். அவ வந்ததும் சொல்றேன்.. கண்டிப்பா அவகிட்ட நீங்க பேசணும்!" என்று கூற,

பேசியது அனைத்தும் தீஷிதா தான்.. தலையை ஆட்டி சரி என்றதோடு முடித்து வைத்தாள் லதா.

அவள் பேசி முடித்த பின் தான் லதாவின் அருகில் வந்தாள் யசோதா.

"என்ன அண்ணி டல்லா இருக்கீங்க? டயர்டா? கை வலிக்குதா? எப்ப மருந்து போடணும்? காலைல போட்ருப்பிங்க? ஈவ்னிங் இந்த கட்டை மாத்திக்கலாம் தானே?" என கையை காட்டி சொல்ல,

"ம்ம் நான் பார்த்துக்குறேன்!" என்று சிரித்தாள்.

"நான் ஹெல்ப்க்கு எல்லாம் தேவை பட மாட்டேன்.. அண்ணா பார்த்துக்குவாங்க தான்.. இருந்தாலும் கேட்டேன்.." என்ற யசோதா,

"அண்ணா ஏற்கனவே ரொம்ப ஹெல்பிங் கேரக்டர்.. இதுல வைஃப்க்கு ஒண்ணுன்னா சொல்லனுமா? இனி மருந்து போடுறது என்ன? ஊட்டி விடுறது என்ன?" என்று கிண்டல் செய்ய,

"யசோ!" என்று கண்டித்தான் கண்ணன்.

"சரி சரி! நீங்களே பேசிக்கோங்க.. நான் டிஸ்டர்ப் பண்ணல.. அண்ணி! நான் இங்க தான் என் ரூம்ல இருப்பேன்.. ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க.. ஓடோடி வந்துடுவேன் சரியா?" என்று கேட்க,

"நீ இங்கேயே இரேன் யசோதா?" என்றாள் சட்டென்று லதா.

"என்ன பேசிட்டு இருக்கீங்க மூணு பேரும்?" என்று விசாலாட்சி வர,

"அத்தை! நான் ரூம்க்கு போகவா?" என்றான் கண்ணன்.

"ஏன் டா?" என எதுவோ சொல்ல வந்தவர்,

"சரி டயர்டா இருக்கும்.. நீ போய் ரெஸ்ட் எடு.." என்று கூறி,

"யசோ! நீ அண்ணியை உன் ரூம்க்கு கூட்டிட்டு போ! லதா! நீ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு!" என்றார்.

சரி என்று கூறி யசோதாவின் அறைக்கு வந்துவிட்டனர் இருவரும்.

"தாத்தா!" என்று வீட்டிற்குள் நுழைந்த கிருஷ்ணனைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார் நீலகண்டன்.

"கோவமா இருக்கீங்களாக்கும்.. கோவில்ல என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரிய வேண்டாம்?" என்று கிண்டலாய் கிருஷ்ணன் கேட்க,

"வேண்டாம் டா.. எதுவும் தெரிய வேண்டாம்.. கல்யாணம்னு சொல்லி தானே கூட்டிட்டு போன? பின்ன என்ன தெரியணும் இந்த கிழவனுக்கு?" என்று கோபமாய் சொல்ல,

"என்ன தாத்தா இது? இதெல்லாம் வீண் பிடிவாதம்.. இதனால என்ன ஆச்சு? நீங்க அக்கா கல்யாணத்தை பார்க்க முடியாம போனது தான் மிச்சம்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?" கிருஷ்ணன் கேட்க,

"பேசாம போ டா.. உன்கிட்ட நான் பேசினேனா? வந்ததும் என் வாயில விழாத!" என்று கோபம் தான் அவருக்கு..

"சரி போங்க.. நானும் பேசல உங்ககிட்ட.. வேணா பாருங்க.. அக்கா அங்க செம்மயா வாழ போறா.. அய்யயோ என் பேத்தி கல்யாணத்தை பார்க்காம விட்டுட்டேனே உட்கார்ந்து பீல் பன்னிட்டு இருக்க போறீங்க!" என்றான்.

இந்த திருமணம் வேண்டாம் என அவ்வளவு மறுத்த நீலகண்டனை எதிர்த்து தான் இதை நடத்தி முடித்திருக்கிறான் கிருஷ்ணன் விசாலாட்சியை நம்பி.

எங்கே யாருக்கு எப்பொழுது என எப்பொழுதோ மேலிருப்பவன் விதித்திருக்க நடப்பது நடந்து தானே தீரும்.

தொடரும்..
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
119
47
28
Tirupur
சூப்பரா இருக்கே👌 இப்ப இந்த கண்ணன் பயலுக்கு என்ன பிரச்சினை?🙄
தாத்தா ஏன் இந்த கல்யாணத்துக்கு மறுப்பு சொன்னார்?🧐
 
  • Like
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
சூப்பரா இருக்கே👌 இப்ப இந்த கண்ணன் பயலுக்கு என்ன பிரச்சினை?🙄
தாத்தா ஏன் இந்த கல்யாணத்துக்கு மறுப்பு சொன்னார்?🧐
பாதிப்பு வந்துட்டே இருக்கு சிஸ்டர்.. Tqq
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
64
28
Karur
எனக்கு ஒரு டவுட்
இதுல கண்ணன் ஹீரோவா
கிருஷணன் ஹீரோவா
 
  • Love
Reactions: Rithi