• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு -02

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
சந்தன பூங்காற்றே 2

"சந்தோசமா? இப்ப சந்தோசமா? படிச்சு படிச்சு சொன்னேனே! நம்ப வச்சு ஏமாத்திட்ட இல்ல?"

முதலிரவுக்கு என ஏற்பாடு செய்திருந்த அறைக்குள் கண்ணன் அங்கும் இங்குமாய் உறுமலோடு நடந்து கொண்டிருக்க, கையில் பாலுடன் உள்ளே வந்த லதாவைப் பார்த்ததும் பொங்கி விட்டான்.

எதிர்பார்த்தவள் போல எதுவும் பேசாமல் நிற்க,

"என் வாழ்க்கையே போச்சு! என்னை நம்பின பொண்ணுக்கு துரோகம் பண்ண வச்சுட்டியே! உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லயா?" என மீண்டும் கண்ணன் இரைய,

"நான் எதுவும் பண்ணல.. என்னால எதுவும் பண்ண முடியல!" என்றாள் தன்பக்கமாய்.

அதில் ஒரு நொடி அவளை உறுத்து விழித்தவன்,

"முடியாது.. எப்படி பண்ண முடியும்? எவ்வளவு சொத்து, எவ்வளவு பெரிய வீடு.. இந்த வீட்டுக்குன்னு வாழ வந்தா கிடைக்குறே பேரு.. கிடைக்குற ஆடம்பரம்.. பின்ன எப்படி முடியும்?" என்று கண்ணன் கேட்க,

"ஷட் அப்! யாரை பார்த்து என்ன சொல்றிங்க? என்ன பேசினாலும் பொறுத்து போவேன்னு நினைச்சீங்களா? நான் லதா.. நீலகண்டன் பேத்தி.. எனக்கு நீங்க சொன்ன சொத்து, ஆடம்பரம் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்.. என்னை போய்.. ச்ச!" என்றவளுக்கு தாங்க முடியவில்லை அவன் பேச்சு.

"ஓஹ்! உன் வீடு தேடி வந்தேன்.. உன்கிட்ட கெஞ்சி கேட்டேன்.. இந்த கல்யாணம் நடந்தா என்ன நடக்கும்னு சொன்னேன்.. ஆனா நீ?" என மீண்டும் மீண்டும் அவன் பழி சுமத்த,

"நானும் ஒன்னும் உங்களை ஆசைபட்டு எல்லாம் கல்யாணம் பண்ணிக்கல.. எனக்கு கல்யாணம் பத்தின எண்ணமே இல்ல.. எல்லாம் என் நேரம்..." என்றவள் தன் கனவை நினைத்து கண்ணீர் விட,

"நீ என்ன வேணா சொல்லிக்கோ.. ஆனா இது உனக்கு நிரந்தரமான இடம் இல்ல.. அதுக்கு உனக்கு தகுதியும் இல்ல!" கண்ணன் கூற,

"யூ இடியட்! இதுக்கு மேல பேசினால் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.. என்ன விட்டா ஓவரா பேசுறீங்க? என்ன குறைஞ்சி போய்ட்டேன் உங்க தகுதிக்கு? ஹெலோ மிஸ்டர்! உங்க அத்தை என் காலுல விழாத குறையா கெஞ்சினாங்க.. அப்படி மட்டும் நடக்காம இருந்திருந்தா..." என்றவள் அந்த நினைவில் வாட,

"போதும்! என் அத்தையை பத்தி பேசின.. அவங்க உன்கிட்ட கெஞ்சினாங்களா?" என்றவன் ஏளனம் இன்னும் வெறுப்படைய செய்தது லதாவை.

"போய் கேளுங்க உங்க அத்தைகிட்ட.. இவ்வளவு பேசுற நீங்க.. உங்க அத்தைகிட்ட சொல்லி ஈசியா கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே! சொல்ல போனா கல்யாணம்ன்ற பேச்சோடவே நிறுத்தி இருக்கலாமே.. அத விட்டுட்டு ஏன் என்கிட்ட வந்து கெஞ்சணும்?" அவனுக்கு எதிராய் கேட்டவள் அவன் காட்டிய முகபாவனையையும் அப்படியே காட்டிட,

"அது என் விதி! பெத்த பொண்ணை விட என் மேல பாசமா இருந்த அந்த மனுஷியை என்னால எதிர்த்து பேச முடியலை.."

"ஒஹ்! காதலிக்குறேன்னு சொல்லி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்க முடியாத நீங்க என்னை குறை சொல்றிங்க? நல்லாருக்கு உங்க நியாயம்.." என்றவள் வார்த்தை எத்தனை உண்மை என தெரிந்தாலும் அதை கேட்டவளை தான் முறைக்க முடிந்தது கண்ணனுக்கு.

"இந்த காயம் எப்படி வந்தது தெரியுமா?" என்று உள்ளங்கை காயத்தை காட்டி கேட்க, கேள்வியாய் அவனும் பார்த்தான்.

"உங்க அத்தை ஜாதகத்தை மட்டும் நம்பி தானே என்னை உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வர நினைச்சாங்க.. அப்ப அபசகுனமா எதாவது நடந்தா இந்த கல்யாணம் நடத்த யோசிப்பாங்க.. கல்யாணம் தானா நிற்கும்னு நான் பண்ணினது.." என்றவள் பேச்சில் அதிர்ந்து பார்த்தான் தீப கண்ணன்.

"என்ன சொல்ற?"

"இந்த காயம் ஒரு முறை வந்தது இல்ல.. ஆப்பிள் கட் பண்ணி கையை கட் பண்ணினேன்.. மறுபடியும் பட்ட காயத்துலயே தீயை வச்சுக்கிட்டேன்.. இதுக்கு மேல நான் உயிரை தான் விட்ருக்கணும்!" என்று கோபமாய் அவள் சொல்ல, பதில் பேச முடியவில்லை அவனால்.

"என்கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொன்ன உங்களுக்கு உங்க அத்தைகிட்ட பேச முடியலை.. வளர்த்த பாசம்.. அதே தான் எனக்கும்.. என் தாத்தா..." என்றவளுக்கு அந்த நினைவே அழுகைக்கு இழுத்து செல்ல, முயன்று கண்ணீரை உள்ளடக்கினாள்.

"எனக்கும் வளர்த்த பாசம் தான்.. என் தாத்தா கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு சேர்த்து கட்டின எங்களோட ஸ்கூல் எங்களுக்கு வேணும்.. ஆனா அதுக்காக சத்தியமா உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கல.. எனக்குன்னு ஒரு கனவு.. அதை மொத்தமா குடுத்துட்டு தான் இங்க வந்து நிக்குறேன்"

"ம்ம் நல்லா கதை சொல்ற.. பாட்டு தான் பாடுவன்னு சொன்னாங்க.. கதை கூட எழுதுவ போல.. ஆனா அதை நம்ப நான் ஆளில்லை.. என் அத்தை என் மேல அக்கறை, ஜாதகத்தை நம்பி உன்கிட்ட வந்திருக்கலாம்.. ஆனா நீ எனக்கு சத்தியம் பண்ணின தானே?" என்று கண்ணன் கேட்க,

"நீங்க ஒரே கேள்வியை எந்த விதத்துல கேட்டாலும் என் பதில் ஒன்னு தான்.. அதுக்கு காரணம் உங்க அத்தை தான்.. ரெண்டாவது காரணம் நீங்க.. உங்களை உங்களாலையே காப்பாத்திக்க முடியல.. என்னை நம்பினேன் சொல்றிங்க.. நானும் நம்பினேன்.. இந்த கல்யாணம் நடக்காதுன்னு நம்பினேன்.. என் தாத்தாக்கு கூட தான் வாக்கு குடுத்தேன்.. ஆனா விதி!"

"போதும்! விதி விதி விதி! இந்த வார்த்தை தான்.. இந்த வார்த்தை தான் என் வாழ்க்கைலேயே விளையாடிடுச்சு" என டேபிளில் ஓங்கி குத்தியவன்,

"ஜாதகம் பார்த்து உனக்கு இது தான் விதிக்கப்பட்டிற்குன்னு சொல்லி என்னை..." என்றவன் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான்

"நீங்க எப்படி வேணா நினைச்சுக்கலாம்.. அதுக்கு என்னோட பதில் இது தான்.. என் தாத்தாவோட ஸ்கூலை காப்பாத்த நினச்சு என் கனவை அழிச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.. ஆனாலும் நீங்க கேட்ட சத்தியம் உறுத்தலா இருக்க போய் வந்தது தான் இந்த காயம்.. இதுக்கு மதிப்பில்லாம போகும்னு நான் நினைக்கல. இதுவும் விதி தான்.. இதுக்கு மேல என்கிட்ட என்ன கேட்டாலும் என் பதில் இவ்வளவு தான்" என்றவள் கீழே படுத்துக் கொள்ள ஆயத்தமாகி,

"இது எனக்கு நிரந்தரம் இல்லைனு நீங்க சொல்லலாம்.. கடவுள் முடிவுன்னு ஒன்னு இருக்கு.. ஜாதகம், பரிகாரம்னு எதையும் நான் நம்பல.. கடவுளை நம்புறேன்.. எனக்கான இடம் இது இல்லைனா நிச்சயமா என்னால உங்களுக்கு தொல்லை இருக்காது!" என்று கூறி படுத்துவிட, அறையின் மூலையில் இருந்த தொலைபேசி அழைத்தது.

இந்த நேரமா என நினைத்து அதை எடுக்க, "லதா!" என்று அழைத்தது விசாலாட்சி.

"சொல்லுங்க அத்தை!" என்றான் கண்ணன்.

"கண்ணா! சாரி டா.. லதாவை கொஞ்சம் கீழ அனுப்பேன்.." என்கவும் இவன் அமைதியாய் அவளைப் பார்க்க,

"கைக்கு மருந்து போட்டு கட்டி விடணும் டா.. நியாபகம் இல்லாம அனுப்பி விட்டுட்டேன்!" என்றார்.

"ஓஹ்!" என்றவன்,

"நான் பார்த்துக்குறேன் த்தை!" என்றான். என்ன சொல்ல என அவர் அமைதி காக்க,

"த்தை! ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீங்க தூங்குங்க.. நான் பார்த்துக்குறேன்.." என்றவன் அடுத்து அவர் பேசும் முன் வைத்துவிட்டான்.

சில நிமிடங்கள் நின்றவன், ”இதைப் போட்டுக்கோ!" என முதலுதவிப் பெட்டியை அவள் முன் வைக்க, விழித்துப் பார்த்தவள்,

"வேண்டாம்!" என்று மீண்டுமாய் கண்மூடிக் கொண்டாள்.

"அத்தை தான் போன் பண்ணினாங்க.. இப்ப நீ போடலைனா அவங்களை வர சொல்றேன்!"

"என் காயத்துக்கு மருந்து எப்ப எப்படி போடணும்னு எனக்கு தெரியும்.. யார் சொல்லியும் நீங்க கேட்க வேண்டியதில்லை.."

"பிரச்சனை நமக்குள்ள.. காலையில நான் அத்தைக்கு பதில் சொல்ல முடியாது.. பேசாம போடு!" என்றவன் அவளருகேவே நிற்க,

"என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" என எழுந்துவிட்டாள்.

"வீணா பிரச்சனை பண்ணாத.. உனக்காக தான் அத்தை சொன்னது.."

"அத்தை அத்தை அத்தை.. உங்களுக்கு விதி விளையாடிச்சுன்னா என் வாழ்க்கைல விளையாடினது உங்க அத்தை தான்.. இந்த காயம் அவங்களுக்கு நியாபகம் இருக்கு.. ஆனா என் தாத்தாவை பார்க்க நான் போனும்னு சொன்னது நியாபகம் இல்லை.. இது என்ன தெரியுமா? பணக்கார திமிர்.. தான் நினைச்சது நடந்த பின்ன யார் என்ன ஆனா எனக்கு என்னன்ற ஆணவம்.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. மனசுல இருக்க வலியை விட இங்க வலி எல்லாம் ஒண்ணுமே இல்ல.." என்று கையெடுத்து கும்பிட,

"ஹேய்! ச்ச! எப்படியோ போ! இருக்குற டார்ச்சர்ல எக்ஸ்ட்ராவா சேர்ந்த மாதிரி உன் கூட சண்டைக்கு நிற்க ரொம்ப தேவை தான் எனக்கு!" என்று அவள் காதுபட கூறியவன்,

'ஜீவி இன்னும் ஒன் வீக்ல இந்தியா வந்திடுவா.. அவளுக்கு நான் என்ன பதில் சொல்ல போறேன்.. அவ முகத்தை எப்படி என்னால பார்க்க முடியும்? என்னை நம்பி போன அவளுக்கு இப்படி உண்மை இல்லாம போயிட்டேனே!' என தனக்குள் நினைத்து புலம்பி உறக்கம் தொலைத்து தவித்துக் கொண்டிருந்தான் விடிய விடிய.

ஆசை ஆசையாய் தான் கற்ற சங்கீதத்தை இழந்து தான் இந்த திருமணம். சுயத்தை இழந்த உடலாய் தன்னை தானே உணர்ந்தாள் லதா.

பூர்விக இடத்தில் சங்கீதத்திற்கு என தனியாய் பள்ளி நிறுவி அதை பயிற்றுவித்து பல ஆயிர பாடல் கலைஞர்களை உருவாக்கிய நீலகண்டன் மொத்தமாய் தளர்ந்து போய் அமர்ந்து லதா பார்த்தது அந்த பூர்விக இடத்தை தன் இடம் என சொந்த அத்தை மகனே சொந்தம் கொண்டாடி நீலகண்டனை தள்ளிவிட்ட அன்று தான்.


அத்தனை அத்தனை புலம்பல்கள் நீலகண்டனிடம்.. சொத்து என அவர் சேர்த்து வைத்ததாய் நினைத்ததே சங்கீதத்தையும் அந்த பள்ளியையும் தான்.