• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு - 1

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
45
18
Tamil nadu
செந்தழல் நிலவே...

நிலவு - 1

முழு நிலவு வானில் தன் ஆதிக்கத்தை செலுத்திய நேரம், அந்தக் கானகத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு, வண்டுகளின் ரீங்காரத்தோடு ஆங்காரமாய் கலந்து, பொங்கும் பால் போல் நானூறு அடி உயரத்திலிருந்து பாய்ந்து தரையினை அதிர வைத்துக் கொண்டிருந்தது அந்த பாலருவி.

ஒற்றைக் கோடாய் இறைவன் வரைந்த அந்த நகரும் ஓவியம், பாறைகளின் இடுக்கில் எல்லாம் ஓடி, அவை மறைத்து வைத்த ரகசியங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்த வெற்றிச் சிரிப்பில், கானகம் அதிர இரைச்சல் இட்டது.

தொங்கும் வெள்ளைத் திரை போல் தோற்றமளித்த அந்த அருவியின் உள்ளே அசைவில்லாமல் ஓர் உருவம் நின்றிருந்தது.

சாதாரண மானிடர்களால் அரை நொடி கூட, அந்த அருவியின் வேகத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் தொடர்ந்து பல மணி நேரம் அசையாமல் சிலை போல் மூச்சடக்கிக் கொண்டு அந்த உருவம், அருவியின் வேகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தது.

கூப்பிய கரங்கள் தலைக்கு மேல் ஓர் அடி உயர்ந்து நிற்க, இடது கால் தொடை மீது, வலது கால் பாதம் அழுத்தி நிற்க, பாறை போல் உருண்டு விழுந்த அருவியின் சிதறல்கள், அந்த உருவத்தின் உச்சந்தலையில் தாக்குதல் நடத்தி அதன் மௌனத்தை கலைக்க முடியாமல், தோற்றுப் போன தன் முயற்சியில், கற்றைக் கருங்கூந்தல் வழியே நழுவி, மார்பைத் தழுவி கீழே விழுந்து, அஃது ஓர் பெண் சிலை என்று அறிந்து கொண்டது.

கடும் குளிரிலும் அவளின் தேகத்தை மரத்துப் போக விடாமல், அவள் உள்ளே கனன்று கொண்டிருக்கும் உஷ்ணம் தடை செய்தது.

முழுமதி தோன்றும் நாளில் எல்லாம் தன் தேகம் பற்றி எரியும் காரணத்தை அறிய முடியாமல் தவித்தாள் அவள். ஒரு தீயின் தாகத்தை, நீரில் அணைக்க முயன்றாள்.

குறுநாடன் தொல்குடி மரபின் குலவிளக்காய் தோன்றி, வேண்டும் வரம் யாது என்று புரியாமல், நீரில் நீண்ட தவம் புரியும் அவளின் பெயர் "மானு".

அந்த அடர் காட்டிற்குள் அருள் பாலிக்கும் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் குகைக் கோவிலில், 'பூ மூடல்' வழிபாடு ஆரம்பமாகியது.

அந்த இரவு வேளையில், குறுநாடன் மரபைச் சார்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அனைவரும் அந்தக் கோவில் முன்பு குழுமி இருந்தனர்.

ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனுக்கு மிகவும் பிடித்த அடர் சிவப்பு நிற வெட்சிப் பூக்களை அனைவரும் கையில் ஏந்தி நின்றிருந்தனர்.

குகையின் உள்ளே பீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனின் உருவத்தை சற்று நகர்த்தி விட்டு, சக்தி பீடத்தின் அடியில் இருக்கும் குழிக்குள் வெட்சிப் பூக்களை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி, நிரப்பி வழிபடுவதே 'பூ மூடல்' விழா ஆகும்.

ஒவ்வொரு வருடமும் முழு சித்திரை மாத பௌர்ணமி தினத்தில், நடைபெறும் பூ மூடல் விழாவில் நோய் நொடி அற்ற பாதுகாப்பான வாழ்க்கையை தருமாறு அந்த இறைவனை வேண்டி நின்றனர் குறுநாடன் தொல்குடி மரபின மக்கள்.

வித்தியாசமான ஒலிகளைத் தரும் பறைகளை முழங்கச் செய்து, நீண்ட குழல்களில் சத்தம் ஏற்படுத்தி தங்கள் பூஜையைத் தொடங்கினர்.

பக்தி பரவசத்தில் மெய்யோடு மனமும் உருக, கண்கள் மூடி நின்று இருந்தனர்.

தாயின் காலடியில் நின்று கொண்டிருந்த குழந்தை ஒன்று, தன் தாயின் புடவையை கீழ் நோக்கி இழுத்து, தன் தாயின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றது.

இறைவனை வேண்டி நின்று கொண்டிருந்த அந்த தாயோ தன் குழந்தையின் செய்கையை குறும்பென்று நினைத்து, அக்குழந்தையின் முதுகில் சிறு தட்டு தட்டினாள்.

தன் தாயின் மீது கோபம் கொண்ட அச்சிறு குழந்தையும், தாயை விட்டு சற்று விலகி நின்று கொண்டது.

அக்குழந்தை தன் அருகே பளபளவென ஏதோ ஊர்வதைக் கண்டு, ஆர்வத்துடன் அதன் பின்னே செல்ல ஆரம்பித்தது.

தன் பாதையில் யாரோ குறுக்கிடுவதைக் கண்ட, ஆறு கிலோ எடை கொண்ட பதிமூன்றடி ராஜ நாகம், தன் வாலினில் சத்தம் ஏற்படுத்தி, முயன்றவரை தன்னை உயர்த்தி, அக்குழந்தையின் முன் படம் எடுத்து நின்றது.

தன்னை அணைத்தபடி நின்று கொண்டிருந்த குழந்தையைத் தேடியபடி கண்களைத் திறந்த அந்தத் தாய், கூட்டத்திலிருந்து சற்று தள்ளி தன் குழந்தை நிற்பதைக் கண்டு, அதன் அருகில் சென்றாள்.

சற்று தொலைவிலேயே தன் குழந்தையின் முன் ராஜ நாகம் நிற்பதைக் கண்டு, "வீல்!" என்று அலறினாள்.

அத்தாயின் அலறல் சத்தத்தில், சட்டென்று முன்னேறிய ராஜநாகம், குழந்தைக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை வெகுவாய் குறைத்தது.

இசைக்கருவிகள் பேச்சற்று மௌனமாகின. கூட்டத்தினரும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தங்கள் வழிபாடுகளை நிறுத்திவிட்டு அக்குழந்தையை எப்படி பத்திரமாக மீட்பது என்று யோசனையில் ஆழ்ந்தனர்.


குழந்தையின் அருகில் நெருங்கினால், ராஜநாகம் எங்கே குழந்தையை தீண்டி விடுமோ என்று அச்சம் கொண்டனர்.

குழந்தையின் அருகே பதட்டத்துடன் ஓடிச் சென்ற தாயை அருகில் நின்ற பெண்கள் இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.


சத்தம் செய்து பாம்பின் கோபத்தை தூண்டி, விபரீதத்தை விளைவிக்காமல் இருக்க அனைவரும் பேரமைதியாய் நின்றிருந்தனர்.

ராஜ நாகம் தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிந்து விடும் . அதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்ந்து கொள்ளும் . இதன் நுண்ணிய பார்வைத்திறன், முன்னூறு அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன்கொண்டது

அப்படிப்பட்ட ராஜநாகம் தன் பாதையில் குறுக்கிடும் தடையை விட்டு விடுமா என்ன? அந்தக் குழந்தையை வளைக்க, சுருண்டிருந்த தன் வாலினை, அக்குழந்தையின் புறம் நீளமாய் நகர்த்தத் தொடங்கியது.

நாகத்தின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு, பழங்குடியினர் தங்கள் அருகே இருக்கும் கற்களை சேகரித்தனர்.

ஒரு சேர அனைவரும், ஒரே நேரத்தில் கற்களை எறிவதற்கு ஆயத்தம் ஆகிய நேரம், சட்டென்று அந்த ராஜ நாகம் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பள்ளத்தில் தள்ளப்பட்டது, வலிமையான வேகத்தில் பாய்ந்து வந்த ஒரு அம்பினால்.

அனைவரும் அம்பு வந்த திசையினை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் நோக்க, அங்கே தெரிந்த காட்சியில் அனைவரின் விழிகளும் விரிந்தது.

காட்டு மரத்தின் கிளையை , தன்னிரு கால்களால் பற்றிக் கொண்டு, தன் தேகத்தை தலைகீழாய் காற்றில் ஊசலாட விட்டு, ஒளி பொருந்திய கண்களில் கூர்மையோடு, கைகளில் வில்லேந்தியபடி மரத்தில் பிணைந்த காட்டு மலர்க்கொடி போல் அனைவருக்கும் காட்சி தந்தாள் மானு.

"அடேயப்பா! நம் கூட்டத்தில் மானுவைப் போன்ற தைரியசாலிப் பெண் யாரும் இல்லை"

" தைரியசாலி மட்டும் இல்லை. அவளைப் போன்ற துணிச்சல் மிகுந்த பெண்ணை பார்ப்பதும் அரிது "

"கூட்டத்தில் இத்தனை பேர் இருந்தும், கண நேரத்தில் சாதுரியமாக முடிவெடுக்கும் மானுவின் கம்பீரம் என்றுமே அழகுதான்"

கூட்டத்தினர் மானுவிற்கு புகழாரம் சூட்ட, அவளோ தன் உடலை, தான் கையில் ஏந்திய வில் போல் அனாயாசமாக வளைத்து, நிமிர்ந்து மரக்கிளையில் இருந்து தாவிக் குதித்து இறங்கினாள்.

அவள் இறங்கி நடந்து வர, கூடியிருந்த கூட்டம் இரு மருங்கிலும் விலகி வழி விட்டு, அவளை வணங்கி மரியாதையோடு பார்த்தது.

அருவியில் நனைந்த ஈர உடையில் இணைக்கப்பட்டிருந்த பையில் இருந்து வெட்சிப் பூக்களை கையில் எடுத்து மனதார ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனை வேண்டி பூக்களால் அந்த அம்மனை அர்ச்சித்தாள்.

அவள் பூக்களை தூவிய அடுத்த நொடி வானத்தில் இடி முழங்க, மின்னல் வெட்ட, மழை அதிவேகமாய் கொட்டியது.

கூட்டத்தினர் குகை ஓரங்களில் ஒதுங்க ஆரம்பித்தனர். கரங்களில் ஏந்திய வெட்சிப் பூக்களோடு கண் மூடி மழையில் நனைந்து கொண்டிருந்த மானு மட்டும் தனித்து நின்றாள்.

தலையினை அசைத்துக் கொண்டே பாதங்களை உதைத்து, மழை நீரை சிதறச் செய்தாள். மழையின் ஜதிக்கு தாள நயத்துடன் அவள் பாதங்கள் அசைந்ததும், நின்றிருந்த மேல தாளங்கள் மீண்டும் முழங்க ஆரம்பித்தன.

முழு வேகத்துடன் உடலை சுழற்றிக் கொண்டே கையில் இருந்த வெட்சிப் பூக்களை எல்லாம் அம்மனின் பாதத்தில் சமர்ப்பித்தாள்.


அவளின் இரு கரங்களும் எதிரெதிர் திசையில் சுழன்று அழகாய் அபிநயம் பிடித்தது. துடியிடையோ லாவகமாய் அசைந்து அவளின் நடனத்திற்கு முத்திரை பதித்தது. தரையில் படாது காற்றில் மிதந்த பாதங்களோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அவளின் நடனத்தின் வேகம் கூடக் கூட மழையும் வேகம் பிடித்தது. ஒரு கட்டத்தில் சட்டென மழை நின்று வானில் முழு நிலவு தெரிய, சிரித்த முகத்துடன், அம்மன் முன் இருந்த சூலத்தில் தன் கட்டை விரலை குத்தி, அதில் துளிர்த்த ரத்தத்தில் அம்மனுக்கு திலகமிட்டாள்.

தொல்குடி மக்கள் குலவையிட்டு கரம் கூப்பி வணங்கி தங்கள் வழிபாட்டை முடித்துக் கொண்டனர்.

அனைவரும் காட்டுப் பகுதியில் இருந்த தங்கள் குடியிருப்பை நோக்கி நகர்ந்து சென்றனர்.

தொல்குடி இன மக்களின் தலைவர் நல்மாடன் அவரின் துணைவி நங்கை மற்றும் அவர்களின் மூத்த மகன் கடம்பன் ஆகியோர் குகை வாசலில் நின்று அம்மனின் அருட்பிரசாதத்தை ஒருசேர பெற்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் அருகில் சென்ற மானு, "அப்பா!" என்றாள்.

பதில் இல்லாத தந்தையின் மௌனம் தன் மீது அவர் கொண்ட கோபத்தை எடுத்துக்காட்டியது.

சில நிமிடங்கள் கடந்தும் எந்த பதிலும் வராமல் இருக்கவே மீண்டும், "அப்பா" என்று அழைத்தாள் சத்தமாக.

மாடன் தன் மனைவி நங்கையை பார்த்து முறைக்கவே, "ஏய் மானு! அருவியில் குளித்து முடித்து விட்டு வர இவ்வளவு நேரமா? நம் குல மரபுப்படி பெண்கள் தான், அதுவும் நம் குலத் தலைவர் வீட்டுப் பெண்கள் தான் பூஜையை முடித்து வைக்க வேண்டும் என்று தெரிந்தும், இத்தனை நேரம் கடந்து இறுதியில் வந்து உன் தந்தையை பதட்டப்பட வைத்தால், அவர் எப்படி உன்னுடன் சுமூகமாகப் பேசுவார்?" என்று கோபத்தோடு ஆரம்பித்து இறுதியில் கேள்வியாய் முடித்தார் நங்கை.

" முழுமதி நாளில் நான் என்னையே மறந்து விடுகிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் " என்று மன்னிப்பையும் ஆளுமையாகக் கேட்ட தன் மகளின் மீது, அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைத்துக் கொள்ள முடியாத மாடன் புன்னகை புரிந்தார்.

" அப்பா! உங்களின் செல்ல மகளின் பேச்சுக்கு கடைசியில் நீங்கள் தலையை அசைத்து விடுகிறீர்கள். சிறுவயதில் இருந்தே உங்கள் மானு, பௌர்ணமி அன்று பாலருவியிலேயே குடிகொண்டு இருப்பாள் என்று நாம் அனைவரும் அறிந்ததே.

முக்கியமான பூ மூடல் விழாவிற்கும் அவள் தாமதமாக வந்தது, அனைவரும் ஒதுங்கிப் போய் நிற்க, இவள் ராஜ நாகத்துடன் சண்டை போட்டது என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் நீங்கள் தள்ளுபடி செய்ததை நான் ஒத்துக் கொள்ள முடியாது. ஆண்கள் என்று நாம் இருக்கும்போது நம்மை முந்திக் கொண்டு இவள் செயல்பட்டது தவறுதான் அப்பா" என்று கடம்பன் சண்டையிடத் தொடங்கினான்.

" ஆண்களை விட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் மரபில் பிறந்துவிட்டு இப்படி நீ பேசுவது வேடிக்கையாக இருக்கிறது அண்ணா! நீ எத்துனை குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் இறுதியில் வெற்றி எனக்கே! ஆமாம் தானே அப்பா!" என்று தன் தந்தையையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள் மானு.

பெற்றோர் இருவரும் சிரிக்க, தமையன் மட்டும் முறைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தவள், "ஒரு தாயின் தவிப்பை கண்ட பிறகும் , அந்தக் குழந்தையை மீட்பதற்கு ஓரடி கூட எடுத்து வைக்காத நீ, என் செயலில் குற்றம் காண்பது, அதுவும் ஒரு பெண் என்று குறிப்பிட்டு பேசுவது விந்தையாக உள்ளது" என்றாள் கண்டனக் குரலில்.

"அது... அது... இறை வழிபாட்டில் இருக்கும் போது சிந்தையை தவற விட்டு, சுற்றி நடப்பதை எப்படி கவனிக்க பார்க்க முடியும்? வழிபாட்டிற்கு முன்பு என்றால் நான் அப்பொழுதே கண்டுபிடித்து அந்த நாகத்தை விரட்டி இருப்பேன். என் வீரம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றான் கடம்பன் தன்னை சமாளித்துக் கொண்டு.

"ஹா... ஹா..." கானகம் நடுங்க மானுவின் சிரிப்புச் சத்தம் அதிர்ந்தது. விட்டுப் போன மின்னலும், தரையைத் தொட்டு விடும் அளவு பாய்ந்தது.

" ஒரு மக்களை வழிநடத்தும் தலைவனின் வீரத்தை விட, அச்சம் இல்லாமல், அவன் தரும் அழிக்க முடியாத அரணே அவனை ஓர் அரசன் என்று அடையாளப்படுத்தும். அந்தப் பாதுகாப்பை தரத் தவறிய யாரும் ஒரு தலைவனாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள்.

இனி காரணங்களை அடுக்காமல் நம் மக்களுக்கு எந்த நேரத்திலும் பாதுகாப்புத் தரும் பணியை நீ செய்தால், உன்னை தலைவனாக அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். பெண்ணென்று நீ என்னை பலவீனப்படுத்த முயன்றால், வா மோதிப் பார்க்கலாம் " என்று சவால் விட்ட மானுவின் கண்கள் நெருப்பு ஜுவாலை போல் மின்னியது.

பேச்சின் வேகம் திசை மாறுவதைக் கண்ட நங்கை, "அடேயப்பா எப்பொழுதும் உங்கள் இருவருக்கும் சண்டை தீர்த்து வைப்பதே எங்கள் வேலையாகிப் போனது. நல்ல நாள் அதுவுமாக, வேறு எந்த பேச்சுக்களும் வேண்டாம். சண்டையும் வேண்டாம். வாருங்கள் வீட்டிற்குச் செல்லலாம்" என்றார்.

மீறிப் பேச வந்த கடம்பனின் தோளில் கையை வைத்து அழுத்திய மாடன் பார்த்துப் பார்வையில், சினத்துடன் கை கால்களை உதைத்து கொண்டு முன்னேறி நடந்தான் கடம்பன்.

பெற்றோருடன் மலைப்பாதையில் ஏறிய மானு, தூரத்தில் தெரியும் முழு நிலவை ஏனோ ஏக்கத்துடன் பார்த்தாள்.


நிலவு மலரும்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
வீரமங்கைக்கான அத்தனை தகுதியும் மானுவிடம் இருக்கும் போலவே 😃😃😃

பேச்சிலும் சகலகலா வல்லி, தமையனையே சாய்த்துவிட்டாள் 🤭🤭🤭

அவளுக்குள்ளும் ஏக்கமா, என்னாவாக இருக்கும் 🤔🤔🤔
 

fajeeha mumthaj

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 14, 2023
80
4
18
from; srilanka,
பெண்களின் வீரம் என்றால் சும்மாவா... பாம்பை கண்டால் படையே நடுங்கும் இங்கு படைகளின் நடுவே ஒற்றை பெண்ணவள் சாதுர்யமாக அதை வீழ்த்தி குழந்தையை காப்பாற்றி விட்டாளே...

எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
 
  • Love
Reactions: Shimoni

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
வீரமங்கைக்கான அத்தனை தகுதியும் மானுவிடம் இருக்கும் போலவே 😃😃😃

பேச்சிலும் சகலகலா வல்லி, தமையனையே சாய்த்துவிட்டாள் 🤭🤭🤭

அவளுக்குள்ளும் ஏக்கமா, என்னாவாக இருக்கும் 🤔🤔🤔
Hello boss .... எங்க இங்க.....happy to see your name.... 🤩🤩
 
  • Love
Reactions: Shimoni

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
செந்தழல் நிலவே
செந்தாழம் பூவே .....
சிற்றிடை அழகிய
சிறு குழந்தையை தீண்ட சென்ற
சீரும் பாம்பை
சிட்டாக பறக்க விட்டாயே
சீரி வந்த உன் அம்பினாலே...
சுழன்று ஆடும் சுடரொளியே
செருக்காக வாதிடும் போதும்
செல்லமாய் கொஞ்சிடும் போதும்
சோர்வில்லா ஜோதியே
செந்தழல் நிலவே
சிந்தனையில் என்னவோ???
வாழ்த்துகள் மா 💐💐👍🏻💕💕🤩
மானு மயக்குகிறாள் 🤩🤩🤩
 
  • Love
Reactions: Shimoni