• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-16. அசுரன் வடிவில் வந்த காலன்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-16. அசுரன் வடிவில் வந்த காலன்

மாடுகளுக்குப் பொதுவாக மூக்கணாங்கயிறும், கழுத்துக் கயிறும் போட்டு இரண்டையும் சேர்த்து ஒரு துடுப்புக் கயிற்றைக் கட்டி அதில் வளையம் கோர்த்து முடியிட்டுக் கயிற்றைப் பின்னியிருப்பார்கள். அந்த வளையத்தில் தான் வடக்கயிற்றைக் கோர்த்து அதனை அழைத்துச் செல்வது, கட்டிப் போடுவது எனத் தங்கள் ஆளுமைக்குக் கீழ் வைத்திருப்பார்கள்.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுவதே கூட ஒரு கலை தான். திமிரும் மாடுகளைப் பிடித்து, லாவகமாக அதற்கு இரத்தம் வாராமல் போடவேண்டும். வாடியிலிருந்து, வெளிவரும் ஜல்லிக்கட்டு காளைக்கு இந்த மூக்கணாங்கயிற்றைத் தான் அறுத்து விடுவார்கள். அப்போது அது சீறிப் பாய்ந்து வரும்.

அசுரனுக்குக் கட்டியிருந்த மூக்கணாங்கயிறு, அதனை வாங்கி வந்த போது மாற்றியது தான். ஆனால் கிடையில் கிடந்த அது புது இடத்தில், மனிதர்களைக் காணவும் மிகவும் எகிறியது . அதுவும் வாடி போன்ற அமைப்பை மாந்தோப்பில் ஓரிடத்தில் அமைத்துப் பழக்கியதில் கொஞ்சம் தேய்ந்து இருந்தது.

பொதுவாக, காளைமாட்டைக் கன்றிலிருந்து வளர்ப்பவர்கள், அதற்குத் தீவனம், வைக்கோல் முதலியவற்றைக் கொடுத்துப் பழகிக் கொள்வார்கள். வீட்டு ஆட்கள் அருகில் வந்து பழகும் போது, அவர்களை மோப்பமிடும் மாடு, அவர் தம்மைக் காப்பவர் என அறிந்து அவரை முட்டாது.

அசுரன் காளையையும் சின்னச்சாமி, அறிவு, குமரவேல் ஆகியோரை ஓரிரு முறை, செவிடனோடு சென்று, பருத்திக்கொட்டையோடு, வெல்லம் கலந்து அதற்குப் பிடித்த தீவனத்தைக் கொடுத்துப் பழக வைத்திருந்தனர். போனமுறை கயல்விழி வந்த போதும் கூட, அன்பு அவளைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டு, அசுரனுக்கு வாழைப்பழம் கொடுக்கச் சொன்னான். அவள் வேண்டாம் மாமா, எனப் பயந்து நடுங்கியவளை,

"மாடுபிடி வீரனை கடிக்கப் போறவ, நாமளே மாடு வளர்க்கிறோம். மாட்டுக்குப் பயப்படக் கூடாதுடி. நாளை பின்ன, நீ இங்க வந்து போகனுமா என்ன." என எடுத்துச் சொல்லவும், அவனை இறுக பற்றிக் கொண்டே வந்து, நெஞ்சு தடதடக்க அசுரனுக்கு வாழைப் பழத்தைக் கொடுக்க, அவளோடைய உடல் உராய்ந்த இரசாயன மாற்றத்தில் மையலாகி இருந்த அன்பு. " இனிமே, அடிக்கடி உன்னை அசுரன் கூடப் பழக விடனும்டி." எனக் கேலியாகச் சொன்னான். அவள், அவனை முறைக்க, அசுரன் அவளைப் பார்த்துச் சீறியது. " ஆத்தி!!!" என மாமனோடு ஒண்டிக் கொண்டாள்.

இதே போல், சிவகாமியைப் பழகிக் கொள்ளச் சொல்லவும், "அன்பு, பசுமாடுகிட்ட வேணா பழகிக்கிறேன். அந்த அசுரனைப் பார்த்தாலே பயமா இருக்கு வேண்டாம்பா." என்றவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், "தோட்டத்துக்கு உங்க யார் கூடையாவது தான் வரப் போறேன். அதுவும் போக அதைக் கட்டித் தான போட்டு இருப்பீங்க. அது இருக்கத் திசைக்கே நான் போகமாட்டேன்." என மறுத்து விட்டார். அது போல் பழகியிருந்தாலும், அன்று நடந்த அசம்பாவிதத்தைத் தடுத்து இருக்கலாம். விதி யாரை விட்டது. சிவகாமிக்கு எமன் அசுரன் வடிவில் வந்திருந்தான்.

சிவகாமி உணவுப் பையை ஷெட்டில் வைத்து விட்டு, அன்புவைத் தேட, அவன் வண்டியைக் காணவில்லை எனவுமே, அவன் வெளியே சென்றிருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டவர், ' இந்தச் செவிடனையுமில்ல காணோம்." எனத் தேடிக் கொண்டே, மாந்தோப்புக்குள் சென்றார்.

சித்திரை மாதம், மாங்காய் காய்க்கத் தொடங்கியிருந்தது, இவர்கள் தோட்டத்து பாலமணி மாம்பழம் மிகவும் ருசியாக இருக்கும். அதன் மணம் அவரைத் தோட்டத்துக்குள் இழுத்து வந்தது. இன்றைய உணவோடு சேர்த்துச் சாப்பிடலாம் , கணவருக்கும் மிகவும் பிடிக்கும் எனக் கனிந்து கீழே விழும் மாம்பழங்களைத் தேடி தோட்டத்துக்குள் வந்தார்.

அங்கே கட்டப் பட்டிருந்த அசுரன், வெயில் தாளாமல் பெரு மூச்சு விட்டுக் கொண்டு, முன்னங்காலால் மண்ணைப் பறித்துக் கொண்டும், தலையைக் கீழே முட்டிக் கொண்டு, அதற்குப் பழக்குவதற்கு எனக் கொட்டி வைத்திருந்த செம்மண்ணில் கொம்பைக் குத்திக் கொண்டும் இருந்தது. மாமரத்தில் கட்டப்பட்டிருந்த காளை இங்கும், அங்கும் அது சுழன்று கொண்டிருந்ததில் ஏற்கனவே தேய்ந்திருந்த மூக்கணாங்கயிறு இழுபட்டு, நூல் பிரிந்தது.

சிவகாமி, செவிடனுக்குச் சத்தம் கொடுத்துக் கொண்டே வரவும் மருண்ட காளையானது, சட்டெனக் கட்டப்பட்டிருந்த வட கயிற்றை அறுத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வர, எதிர்த்தார் போல் வந்த சிவகாமி செய்வதறியாமல் திகைத்தார்.

கட்டிப் போட்டிருக்கும் பசு மாட்டையாவது, தொட்டுத் தடவுவாறே ஒழியக் காளையிடம் நெருங்க மாட்டார். வாட்ட சாட்டமான, பெரிய திமில்களும், கூர் கொம்புமாகச் சீறிப் பாய்ந்து வந்த காளையைக் காணவும், "ஆத்தா மீனாட்சி!!!" என நெஞ்சில் கை வைத்தவர். காளை அருகில் வரவும் பக்கவாட்டில் திரும்பி ஓட, அசுரன் பின் தொடர்ந்து வந்தது. அவர் இங்கும், அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓட சினம் கொண்ட காளை மூன்றடி தவ்வி அவரைத் தாக்கியது.

"அன்பு..." எனக் கத்தியபடி மல்லாக்க விழுந்தவர், தலை ஒரு கல்லில் போய் அடிக்க, "அம்மா!!!" என அலறினார் சிவகாமி. கீழே கிடந்தவரை இரண்டு முறை கொம்பால் முட்டித் தள்ள, மாடு தாக்கிய அதிர்ச்சியிலும், கீழே விழுந்து தலையில் அடிப்பட்டதாலும் சிவகாமி அசையவும் முடியாமல் கிடந்தார்.

"அன்பு..." எனச் சிவகாமி கத்தும் சத்தம் தான், வண்டியில் வந்து இறங்கிய அவன் காதில் கேட்டது. வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும், " அம்மா" என அலறியவன், பதறித் துடித்துச் சத்தம் வந்த திசையை நோக்க, மாந்தோப்பிலிருந்து குரல் வந்தது என அனுமானித்துப் புயல் வேகத்தில் பறந்து ஓடி வர,

முதல் தவ்வில் சிவகாமியை முட்டித் தள்ளியிருந்ததில் அவரது விலாவில் ஏற்கனவே குத்தியிருந்த மாடு அவரை முட்டித் தள்ளிக் கெந்தி விட, எந்த வித தாக்குதலையும் சமாளிக்கத் தயாராக இல்லாத சிவகாமி, மாட்டின் இழுப்புக்குச் சென்றார். தூரத்திலிருந்து அதைப் பார்த்த அன்பு " அம்மா..." என அலறிக் கொண்டே ஓடி வர,

அசுரன் காளை அவன் விளையாட்டுக் காட்டுகிறான் என, தவ்வி திரும்பி சிவகாமியை ஒரு மிதி மிதித்து விட்டு அவனைத் தாக்க ஓடி வந்தது. ஆனால் அன்புவின் பார்வை காளையிடமின்றி அம்மாவிடமிருந்ததில் அது எதிரே ஓடி வந்ததில் முழுக் கவனமில்லை, எதிரே சந்தித்த அன்புவையும் அது பதம் பார்த்து, அவனது முகத்தில் கோடுகளைக் கீறியது. மாடுபிடி வீரனாக இயல்பாக அதனிடமிருந்து விடுபட்டவன் கவனம் அம்மாவிடமே இருக்க, அங்கே செல்ல விடாமல் தடுக்கும் அசுரனை பலம் கொண்ட மட்டும் அன்பு தள்ளி விட, அது திரும்பத் தாக்கியது. ஐந்தறிவும், ஆறறிவும் உள்ள காளைகள் இரண்டும் மூர்க்கமாக மோதின.

" அன்பு" எனத் தீனமாகச் சிவகாமி அழைக்கும் குரலில் அன்பு மேலும் வெகுண்டான். அன்பு கத்திக் கொண்டு ஓடி வருவதை மட்டுமே அப்போது தான் பம்ப் செட்டில் குளித்து விட்டு வந்த செவிடன் பார்க்கவும், அவனும் வேட்டியைக் கட்டிக் கொண்டு ஓடிவர, இவர்கள் துவந்த யுத்தத்தைப் பார்த்து, வடக்கயிற்றைத் தூக்கிக் கொண்டு வந்தான்.

அதற்குள் அசுரனைச் சாய்த்திருந்த அன்பு , செவிடனிடம் அதை விடுத்து, விட்டு அம்மாவிடம் ஓடினான்.

சிவகாமி, விலாவில் மாடு குத்தியதிலும், தூக்கி எறிந்ததில் தலைக் கல்லில் பட்டதிலும், கீழே விழுந்த அதிர்ச்சியிலுமாக நிலை குழைந்து கிடக்க, "அம்மா..." என அவரருகில் மண்டியிட்டு அமர்ந்து, அவரைத் தூக்கி மடியில் வைத்துக் கன்னத்தைத் தட்டவும், கண் சொருகப் போனவர், " அன்பு, எனக்கு ஒன்னும் இல்லைடா. லேசா இடுப்பு நோகுது." என்றார்.

அந்த அவஸ்தையிலும் தன்னைத் தேற்றும் அம்மாவைக் கண்டு கண்ணீர் தாரை தாரையாகக் கொட்ட, உடல் பதற, "உனக்கு ஒண்ணுமில்லை மா. ஒண்ணுமில்லை." என அம்மாவுக்கும், தனக்குமாகச் சொல்லிக் கொண்டவன், அவரைத் தூக்கிக் கொண்டு எழுந்தான். அன்பு அம்மாவை அணைத்திருந்த தனது தோளில் ஈரத்தை உணர்ந்தவன், சட்டெனத் தூக்கிக் கொண்டு கேட்டை நோக்கி ஓட, அசுரனைக் கட்டிப் போட்ட செவிடன் செய்வதறியாது, "ஆத்தா. ஆத்தா..." என அலறியபடி பின்னாடியே ஓடி வந்தான்.

அன்பு இரண்டு கைகளிலும் அம்மாவை அள்ளிக் கொண்டு, "அம்மா, உனக்கு ஒண்ணுமில்லை மா. இந்தா டாக்டர்கிட்ட போயிடலாம்." எனப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஓடி வர, சின்னச்சாமியும் சரியாக உள்ளே ஓடி வந்தவர், கண்ட காட்சியில் அதிர்ந்து வண்டியைப் போட்டு விட்டு மனைவி மகனிடம் " சிவகாமி" என அலறிக் கொண்டு ஓடிவந்தார்.

மகனின் கைகளிலிருந்த மனைவியைப் பார்த்துக் கதறியவர், " அம்மாவுக்கு என்னடா ஆச்சு" எனக் கண்ணீர் விட்டார்.

"மாடு முட்டிடுச்சுப்பா..." எனச் சொல்லும் முன் வெடித்துச் சிதறியவன், அருகிருந்த கட்டிலில் சிவகாமியைக் கிடத்தி விட்டு அண்ணனுக்குப் போன் அடித்தான்.

"அறிவு டிராக்டர் எடுத்துட்டு வாடா. அம்மாவை மாடு முட்டிடுச்சு." எனவும் சாப்பிட உட்கார்ந்த அறிவு பதட்டமாக ,"என்னடா, சொல்ற. இப்ப தான வந்துச்சு?" என்றவன், " வரேன், வரேன், வரேன்." எனப் பதில் தந்து கொண்டே தன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லி விட்டு, டிராக்டர் எடுக்க ஓடினான்.

அதற்குள் அன்பு கதறிக் கொண்டே குமரவேலுக்கும் சொல்லி விட்டான். அன்பு அவசரமாக அங்கிருந்த வேட்டியைக் கிழித்து, சிவகாமி இடையில் ஒரு கட்டுப் போட்டவன் , 108 ஆம்புலன்ஸுக்கும் போன் அடித்தான்.

சின்னச்சாமி, " சிவகாமி. சிவகாமி..." என அழுதபடி அவரது தலையைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழ, அன்பு அம்மாவைத் தூக்கிக் கொண்டு தயாராக வாசலுக்கு வர, அறிவு, "என்னடா ஆச்சு?" எனப் பதறியபடி டிராக்டரிலிருந்து குதித்து அம்மாவிடம் வந்தவன், அவனும் அவனைப் பார்த்து அழுது விட்டு, அம்மாவை டிராக்டரில் ஏற்ற உதவி செய்தான்.

குமரவேல் வந்து சேர்ந்தான். சிவகாமி குடும்பமே டிராக்டரில் பின்னாடி ஏறிக் கொள்ள, குமரவேல் தான் டிராக்டரை அழுதபடி ஓட்டினான். அன்பு ஆம்புலன்ஸ்காரனிடம் பேசியபடி வர, சின்னச்சாமி தலையிலடித்தபடி அழுது கொண்டு வர, கலை அம்மாவைப் பார்த்துக் கதறிக் கொண்டும் பெரிய தம்பியிடம் விவரம் கேட்டுக் கொண்டே வந்தாள்.

சின்னச்சாமி மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சிவகாமி, சுற்றிப் பார்த்து விட்டு, அன்புவை அழைத்து, "அன்பு அம்மா உன்கிட்ட வந்திருவேன்டா. கவலைப் படாத." என அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

" உனக்கு ஒன்னும் ஆகாதும்மா. நான் காப்பாத்திருவேன்மா. நீ என்கிட்ட தான்மா இருப்ப. இதோ ஆஸ்பத்திரிக்கு வந்துட்டோம். ஆம்புலன்ஸ் வந்துரும். மதுரைல பெரிய ஆஸ்பத்திரிக்குப் போவோம். உன்னைக் காப்பாத்திடுவேன் மா." என அவன் நம்பிக்கை தரவும், சிவகாமி கண்ணீர் மல்கத் தலையை ஆட்டினார்.

"அன்பு, உனக்கு வேலைக்குத் தபால் வந்திருச்சு!" என மூச்சைப் பிடித்துக் கொண்டு, மகனிடம் ஆசையாகச் சொல்ல வந்ததைச் சொல்ல, "இதைச் சொல்லத் தான் வந்தியா. வீட்டுக்கு வந்து நானே பார்த்திருக்க மாட்டேனா? ஏம்மா!!!" எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். இயலாமையிலும், அவன் தலையில் அடித்துக் கொண்ட அவன் கையைப் பற்றியவர். "எனக்கு ஒண்ணுமில்லை டா!" என்றபடியே கண் சொருக, நால்வருமே கத்திக் கதறினர்.

அலங்காநல்லூரில் இதற்கான சிகிச்சை அளிக்கும் , அந்தச் சிறிய மருத்துவமனையில் வைத்து முதலுதவி செய்ய, அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. சிவகாமி குடும்பமே ஆம்புலன்ஸில் ஏற்றி சைரன் ஒலி அலறிக் கொண்டு மதுரை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸில், ஆக்சிஜன் வசதி இருந்ததால், தற்போதைக்குச் சிவகாமிக்கு மூச்சு மட்டும் சீரானது. இரத்தம் பெருகுவதை, தற்காலிகமாகத் தடுத்திருந்தனர். அந்த அரை மணி நேரப் பயணத்தைக் கண்ணீர் மல்கத் தாயைக் காத்துத் தரச் சொல்லி, ஊரிலிருக்கும் தெய்வங்களிடமெல்லாம் வேண்டுதலுடனும். வரிசையாக வந்த போன்களுக்குப் பதில் சொல்லி, மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொண்டும் பயணித்தனர்.

விசயமறிந்த கந்தவேல் குடும்பமும், சிவகாமியின் அம்மாவும் கூட மதுரையிலிருக்கும் மருத்துவமனைக்கு வந்து விட ஆப்ரேசன் தியேட்டர் வாசலில் அனைவரும் அழுது கதறி, தேற்றுவார் இன்றிக் கிடந்தனர்.

விலாவிலும், தலையிலும் அடி பலமாக இருப்பதால் ஆபரேஷன் செய்யப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரம் கழித்தே, எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட, சிவகாமி தனது ஜீவ மரணப் போராட்டத்தை ஆரம்பித்து இருந்தார்.

கயல்விழி, ஓடி வந்து தன் அத்தையைக் கண்ணாடி வழியே பார்த்தவள், தாங்க முடியாதவளாய் மற்றவரையும் பார்க்க, யாரை விடுவது யாரைத் தேற்றுவது என வகையறியாமல் அனைவருமே ஓய்ந்து கிடந்தனர்.

அப்போது தான் அன்புவைப் பார்த்தவள், முகமெல்லாம் இரத்த களிரியாக இருப்பதைப் பார்த்து தன் அப்பாவிடம் சொல்லி டாக்டரிடம் இழுத்துச் செல்ல, ட்ரெஸ்ஸிங் செய்யப்பட்ட அவன் முகத்தில் இரண்டு தையல்களையும் போட்டனர். அதற்கான வலியைக் கூட உணராமல், அம்மாவுக்காகத் துடித்துக் கொண்டிருந்தான் அன்பு.

மருத்துவமனையில் எல்லாரும் தங்க இயலாது எனப் பெரியவரையும், சிறியவர்களையும் கைக் குழந்தையோடு இருக்கும் சாந்தியையும் அழைத்துக் கொண்டு, உமா, கணவரையும் , பெரிய மகளை மட்டும் அங்கு விட்டு விட்டுச் செல்ல. கயல்விழியும், கந்தவேலுமாக மற்ற நால்வரையும் தேற்றினர்.

கலைச்செல்வி கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தவள், "அந்தச் சனியனை, வளர்க்காத, வளர்காதன்னு தலைப்பாடா சொன்னேனே கேட்டியாடா. இப்படி எங்கம்மா உசிருக்கே உலை வச்சிருக்கியே!" எனக் கோபமாகப் பேசவும், அன்பு உள்ளே நொந்துபோனான்.

அக்காள் கூற்றுச் சத்தியமே எனத் தன் முகத்தில் அறைந்து கொண்டு அழுதவனை, " மாமா முகத்தில தையல் போட்டிருக்கு பேசாத இரு." என அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் கயல்.

சின்னச்சாமி, பெரிய மகனின் தோள்களில் அழுத மயங்கிச் சரிந்தவர், "இதென்னடா கருமம், சை. எம்புட்டுச் சந்தோஷமா கிளம்பினோம். மகனுக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருச்சுண்டு சந்தோஷமா, அதைக் கொண்டாட சாப்பாடோட வந்தாளே. அது ஒரு குத்தமா. காலையில என்கையால மஞ்சள் கயிறு கட்டிக்கிட்டாளே. தீர்க்க சுமங்கலியா இருக்கனுமுன்னு மீனாட்சிகிட்ட, என் ஆயுசுக்கு வேண்டுனவ, தன் ஆயுசுக்கு வேண்டலையா. காலையில் அம்புட்டு அழகா, அம்மன் சிலை மாதிரி இருந்தாளே. என் கண்ணே பட்டுடுச்சோ?"என நொந்து கொண்டவர் புலம்பி அழ,

"நீ அழுவாதப்பா. அம்மா பொழைச்சு வந்திரும்பா." என அறிவு அப்பாவைத் தேற்றினான். அன்பு இயற்கையாகவே, தன்னால் தான் அம்மாவுக்கு இப்படி ஆனது எனத் தனியாக ஒதுங்க ஆரம்பித்தான்.

"மாப்பிள்ளை, நடக்கனுமுன்னு விதி. நீ என்னடா பண்ணுவ. பேசாம இரு." என மருமகனைத் தேற்றிய குமரவேல், அண்ணன் மகளை அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, தனியாகச் சென்று அழுது வந்தான்.

"ஏன் மாமா, அம்மா பொழைச்சு வந்திருமா. எனக்குப் பயம்மா இருக்கு." எனக் கணவனின் தோளில் சாய்ந்து கலைச் செல்வி அழவும்.

"நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போக அக்காவுக்கு மனசு வராது. அது கட்டாயம் திரும்ப வந்திடும்." என மனைவிக்குச் சொல்வது போல் தனக்கே சொல்லிக் கொண்டான் குமரவேல்.

அன்பு அழுது ஓய்ந்து சாய்ந்திருக்க, அவன் தலையைக் கோதிய கயல்விழி, "மாமா, அத்தைக்குச் சரியாகிடும். நீ கவலைப்படாத." எனவும், தன்னால் கதறிக் கொண்டிருந்தவன், "அந்த நம்பிக்கையில தான்டி இருக்கேன். அம்மாவுக்கு எதாவது ஆச்சுண்டா, என்னை நானே மன்னிக்க மாட்டேன்." என அவளைக் கட்டிக் கொண்டு கதற. அவள் தேற்றிக் கொண்டிருந்தாள்.

எல்லாரையும் கதறவிட்டுக் கலங்கடித்த சிவகாமி என்ற அந்தக் குடும்பத்தின் ஆணிவேர், இவர்கள் தன்னை மறந்து மயங்கிச் சரிந்த அதிகாலை வேளையில், மூச்சு விடச் சிரமப்படச் செவிலியர் வேகமாக மருத்துவரை அழைத்தார்.

அன்பு மட்டும் முழித்திருந்தவன் வேகமாக ஐசியுக்குள் நுழைய, கடைசி மூச்சை விட இருந்த சிவகாமி மகனைப் பார்த்தபடி, கையை நீட்ட "அம்மா!!!" என வந்தான். மருத்துவ உபகரணங்களோடும், தலை, இடுப்பில் கட்டோடு இருந்தவர் கண்கள் மட்டும் மகனைப் பார்த்துக் கொண்டே கண்ணீர் விட்டது. "அன்பு நான் உன்கிட்ட வந்துடுவேன்டா!" என ஆக்சிஜன் மாஸ்க்குகுள் சொல்லிக்கொண்டே அவன் கையைப் பற்றியவாறு தனது கடைசிக் கண் வழியே தனது உயிரை விட்டார் சிவகாமி . அவனுக்கு எதுவும் புரியவில்லை. அம்மாவின் கண்கள், தன்னைப் பார்த்துக் கொண்டு, நகைத்தபடி தான் இருந்தது.

அதற்குள் மருத்துவர் உள்ளே வந்தவர், அன்புவை வெளியேற்றி விட்டு, சிவகாமியைப் பரிசோதித்தார். அன்பு அப்பாவிடம் ஓடி வந்தவன், கைகள் நடுங்க, "அப்பா, அம்மா, அம்மா, எனக்குப் பயமாயிருக்குபா!!!" என அவரை எழுப்பி, அவரைக் கட்டிக் கொள்ள, அவனை அவசரமாக முதுகில் தட்டிக் கொடுத்தவர், "சிவகாமி..." என அறை வாசலுக்கு விரைந்து கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, அன்பு ஆறு வயது சிறுவன் போல், அப்பாவின் கையை, தன் கை நடுங்க பற்றிக் கொண்டான். உள்ளே எட்டிப் பார்க்கும் துணிவும் வரவில்லை.

மருத்துவர்கள் நின்ற இதயத்தைத் துடிக்க வைக்கப் போராடித் தோற்று, ஒருவர் மற்றவரிடம் இல்லை எனத் தலை ஆட்ட, இங்குச் சின்னச் சாமி மகனைக் கட்டிக் கொண்டு, "உங்க அம்மா, நம்மளை விட்டுட்டுப் போயிட்டாடா. என் சிவகாமி என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டா..." எனத் தலையில் அடித்துக் கொண்டு அழவும், அறிவு, கலை, குமரவேல், கயல் என எல்லாரும் சேர்ந்து வர, அன்பு கீழே உருண்டு கதறினான்.

மருத்துவர் வெளியே வந்து அறிவிக்க, அன்புவைத் தவிரக் குடும்பமே உள்ளே ஓடியது. கயல்விழி, அழுதபடியே, அவனை வந்து அழைக்க, "இல்லை, நான் வரமாட்டேன். அம்மா வந்துடுறேன்னு சொல்லியிருக்கு. நான் நம்ப மாட்டேன்." என வெறி பிடித்தவன் போல் வெளியே ஓடினான். கயல்விழி பின்னாடியே ஒடிச் சென்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

அழுது, புரண்டு ஆண்டாண்டு காலம் துடித்தாலும், மாண்டார், மீண்டு வாரார் எனும் கூற்றை உணர்ந்து, இருப்பதிலேயே குமரவேல் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க, உயிரற்ற சிவகாமியைச் சுமந்து விடியும் பொழுதில் இராஜக்காள்பட்டி வந்து சேர்ந்தனர்.

இராஜக்காள் பட்டியில் சிவகாமி இல்லத்தில் முதல் நாள் மங்களகரமாக, மஞ்சள் கயிறு கோர்த்துப் போட்டு, மீனாட்சியை வணங்கிய சிவகாமி, இன்று தன் முகக் களையெல்லாம் இழந்து, உயிரற்றுப் பெட்டியில் வந்து சேர்ந்தார். நேற்று இந்த நேரம் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என அம்மாவோடு ஆடிப்பாடிக் கொண்டிருந்த அன்பு இன்று அடியற்ற மரம் போல் விழுந்து கிடந்தான். நடுவில் ஒரு முறை அதிர்ச்சியில் வலிப்பு போல் வந்துவிட, அவனது நண்பர்கள் கூட்டம் தான் அவனைத் தாங்கினர்.

கலைச்செல்லி, சின்னத் தம்பியைப் பார்க்கும் போதெல்லாம், அம்மாவின் சாவுக்கு அவன் தான் காரணம் என ஆத்திரம் தீரும் வரை, தனது கோபத்தை அவனிடம் காட்ட, சின்னச்சாமி, மகளை வேண்டாம் எனச் சொல்ல கூடத் திராணியற்று இருந்தார். அறிவு அம்மாவின் இழப்பில் யோசிக்க முடியாதவனாக மாறியிருக்க, மற்றவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

கந்தவேலும், குமரவேலும் தங்கள் அம்மாவைத் தேற்றுவதே பெரும் பாடாக இருக்க, மற்ற காரியங்களையும் அவர்கள் தான் பொறுப்பெடுத்து நடத்தினர். சாந்தி கைப்பிள்ளையோடு அழுது கொண்டிருக்க அவளது பெற்றவர்களும் வந்து துணை நின்றனர். ஆனால் வருவோர் போவோர் என எல்லார் பார்வையும் தன்னையே குற்றம் சுமத்துவது போல் இருக்கவும் அன்பு அடியோடு உடைந்து போனான்.

அம்மாவுக்கு ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்தவன், அடுத்த நாள் பால் தெளித்து வந்த பிறகு, அம்மா இல்லாத வீட்டுக்குள் நுழைய முடியாதவனாகத் தனது தோட்டத்துக்கே சென்றவனுக்கு மாட்டைப் பார்க்க, பார்க்க ஆதங்கமும், இயலாமையும் வந்தது. அதிலும் அவன் தன்னையே காயப்படுத்திக் கொள்ள, ஜெகன் முதலான நண்பர்கள் அவனைத் தடுத்தனர். முடிவில் அவன் உடல் வலிப்பு வந்து தூக்கிப் போட, வீட்டில் யாருக்கும் சொல்லாமல் அவனை மருத்துவமனையில் சேர்க்க, சுய நினைவு வரவும் அங்கிருந்தும் யாரிடமும் சொல்லாமல் மாயமானான் தாயில்லா பிள்ளையான அன்புச் செல்வன்.

கயல்விழி மட்டும், தனது தந்தையிடமும், சித்தப்பாவிடமும் அன்புவை தேடச் சொல்ல, "வந்துடுவான்மா. அவன் என்ன சின்னப் பையனா???" என்றனர். கல்யாணம் பற்றிய பேச்சே இல்லாமல் நின்றது. கயல் அந்த முறை பரிட்சை எழுதத் தவறியவள் அடுத்த அரியராக அதை முடித்தாள். பத்து நாளில் அசுரனை விற்றார்கள். செவிடன் மட்டும், சிவகாமியைக் காப்பாற்ற முடியாத சோகத்தில் மற்ற மாடுகளைப் பார்த்துக் கொண்டு அவர்கள் வீடே கதி என இருந்தான்.

ஒவ்வொருவராகத் தெளிந்தவர்கள், அன்பு தவறையும் செய்து விட்டு, நல்ல வேலைக் கிடைக்கவும், வீட்டை விட்டும் ஓடிவிட்டான் எனக் கோபம் கொண்டனர். அவனுடைய சர்டிவிகேட் வீட்டில் இல்லை, எனவே சுயநலமாக வேலையில் சேர்ந்திருப்பான் என நினைத்தார்கள்.

சிவகாமியின் மறைந்து ஆறு மாதத்துக்குப் பிறகு, கயல்விழி அம்மா உமாவின் புலம்பல்கள் ஆரம்பித்தது. அதன் பின்னர்த் தான், தேட ஆரம்பிக்க, போலீஸ் ட்ரைனிங்கில் சென்று விசாரிக்க, அந்தப் பேட்ச் க்ரூப் -1 தேர்வுகளில் முறை கேடு நடந்திருப்பதாகச் சொல்லி, யாரோ கேஸ் போட, போஸ்டிங்கை நிறுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் அவன் பணியில் சேராததும் தெரிந்தது.

சின்னச்சாமி மனைவியின் இழப்பில் ஓய்ந்து போனவர், மகன் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபத்திலிருந்தார். கலைச் செல்வி தம்பியைப் பற்றிப் பேசவே தயாராக இல்லை.

அறிவு தான், தம்பியின் மனநிலையை ஓரளவு யூகித்தவன், பேப்பரில் விளம்பரம் கொடுக்கவும் தயங்கினான். இப்படியே இதோ மூன்றரை ஆண்டுகள் ஓடிய நிலையில் தான், இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் வந்துள்ளது. இன்று குமரவேல் அடிப்பட்டு வந்ததற்கும் கலைச்செல்வி தம்பியை இழுத்துக் குறை பேசவும் கயல்விழி பொங்கி விட்டாள்.
 
Top