அத்தியாயம்-2
சிறு வீட்டுப் பொங்கல்
தமிழகமே ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் என களத்தில் குதித்து இருக்க, மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள இராஜக்காள் பட்டி என்ற ஊரில் உள்ள சிவகாமி இல்லத்தில் மட்டும் அதற்கான பெரிய ஆதரவு இல்லாமல் சாதாரணமாகவே இருந்தனர். இத்தனைக்கும் அவர்கள், தங்கள் தோட்டத்தில் ஷெட் போட்டு, இரண்டு ஆட்களையும் வேலைக்கு போட்டு இருபது மாடுகளுடன் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களும் கூட.பெரியவர் சின்னச் சாமி வீட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த தென்னங் கீற்றுக் கொட்டகையில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு தை மாதத்தின் பனிக் காற்றையும் பொருட்படுத்தாது படுத்திருந்தார்.
திறந்திருந்த காம்பவுண்ட் வாசல் வழியாக இருசக்கர எம் எயிட்டி வாகனம் ஒன்று உள்ளே வந்தது. காலையில் பீச்சிய பாலை தங்கள் தோட்டத்திலிருந்து சொசைட்டியில் சென்று ஊற்றி விட்டு, மேலும் சில வேலைகளை முடித்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த தன் அப்பாவிடம் வந்தான் அறிவு.
"செய்தி கேட்டிங்களா அப்பா, ஜல்லிக்கட்டு நடத்தனுமுண்டு தமிழ் நாடு பூரா போராட்டமே நடத்துறாங்களாம். சென்னையில மெரினா பீச்ல பெரிய கூட்டமாம். அலங்காநல்லூர்லையும் வாடி வாசல் முன்னாடி சனம், ஆணு, பொண்ணுண்டு வித்தியாசமில்லாத இரண்டு நாளா கிடையா கிடக்குதுப்பா..." என்றான்.
படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து, "நேத்தே, மேலத் தெரு முனியாண்டி சொல்லிக்கே போனாப்ல, ஒரு நாளைக்குத் தர்ணா போராட்டமுண்டு செய்வாய்ங்கே, அப்புறம் ஓஞ்சுருமுண்டு நினைச்சேன். இன்னும் நடக்குதாக்கும்???" என வினவினார் சின்னசாமி.
"ஆமாப்பா, இதுல முக்கியமான விசயம் என்னாண்டா, மாட்டையே தொட்டுப் பார்க்காத பட்டணத்தில் வளர்ந்த புள்ளைங்க, கம்யூட்டர்ல வேலை பார்க்கிறவைங்க எல்லாம், தமிழ், தமிழர்களுண்டு பெருமை பேசிட்டு கூடுறானுங்க." எனச் சிறு நகையோடு அறிவுச் சொல்லவும்.
"அது சரி, தமிழ்நாட்டில் பொறந்துட்டு இது கூட இல்லையிண்டா எப்படி. திராவிடக் கட்சிங்க, இப்படிப் பேசிப் பேசியே தான ஆட்சியைப் பிடிச்சாங்க, இவைய்ங்களும் சாதிச்சா சரி தான்." என அவர் முன்னம் நடந்ததை நினைவு கூர்ந்தார்.
"அப்ப கட்சிக்காரங்க போராடுனாகப்பா, இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில பெரிய கட்சிகளோ, அமைப்போ, மனுசங்களோ இல்லை. எல்லாருமே பொதுசனம் தான்." என விளக்கம் தந்த அறிவு,
"இந்நேரம் சின்னவன் இங்க இருந்திருந்தாண்டா, அவன் தான் ஆளுக்கு முன்னே நிண்டுக்கிட்டு இருந்திருப்பான்." எனப் புலம்பவும், சின்னச்சாமி முகத்தில் மகனைக் காணும் ஏக்கம் தோன்றியது.
கொழுந்தனைப் பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தொடர்ந்து, மாமியாரைப் பற்றியும் பேச்சு வரும், மாமனார் மேலும் வருந்துவார் என உணர்ந்த அறிவின் மனைவி சாந்தி, போராட்ட நிகழ்வுகள் தொலைக்காட்சியில் பார்த்ததை பற்றிச் சொன்னாள்.
"அது என்னமோ, பீட்சாவோ, பீட்டாவா அதை எதிர்த்து கோஷமெல்லாம் போடுறாங்க. அவுங்க தான் காளை மாட்டைத் துன்புறுத்துறோமுண்டு கேஸ் போடுறாகலாம்ல?" எனத் தனக்குத் தெரிந்ததைப் பகிரவும்.
" அது மட்டுமல்ல, மாட்டை மனுசன் கஷ்டப்படுத்துறான். மனுசனை மாடு தாக்குது. இது ஆபத்தான விளையாட்டுண்டு நிறையச் சொல்றாய்ங்கே. அதுவும் நிசந்தானே. நம்மளே இந்த காளை மாடுனால தான அம்மாவை இழந்து நிற்கிறோம்." என வருந்தினான் அறிவு.சின்னச்சாமி மௌனம் காத்தார். வார்த்தைகளில் அடங்குவதா அவர் இழப்பு.
"ஆபத்து எதில தான் மாமா இல்லை. அந்தக் காலத்தில் மாட்டை அடக்கினவனுக்குத் தான், அது தான் வீரமுண்டுச் சொல்லி பொண்ணையே கட்டிக் குடுத்தாகண்டு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்." என்றாள் சாந்தி.
" இப்ப எல்லாம் கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறவனுக்குதான் மவுசு. ஒரு கெத்துக்கு வேணா, பணக்காரய்ங்க காளை வளர்க்குறாக. முன்னை மாதிரி காளை மாட்டு உபயோகமும் குறைஞ்சிடுச்சு. ஏர் உழுக, வண்டிக் கட்டண்டு காளை மாட்டை வளர்த்தாக. இப்பத் தான் டிராக்டர் வந்துருச்சே. காளையை வளர்த்தா தான பிறகு ஜல்லிக்கட்டு நடத்தலாம் . இப்ப காளை வளர்க்கிறதுக்கே கணக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களே!!!" என்றான் அறிவு.
"நீ சொல்றது சரி தான். இப்பவே அந்த நிலமையிண்டா, ஜல்லிக்கட்டும் நடக்கமாப் போச்சுண்டா காளை மாட்டை ஆர்வமா யாரும் வளர்க்க மாட்டாக. காளை மாடு வளர்ந்தா தான நாட்டு மாடு இனம் பெருகும்." என்றார் சின்னச்சாமி.
"அப்பக் காளை மாட்டை வளர்க்கனும் சொல்றீங்களாப்பா?" என அதிர்ச்சியாகவே கேட்டான் அறிவு. ஏனெனில் மூன்றரை வருடத்துக்கு முன் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, காளை மாடே வேண்டாம் என விற்று விட்டார்கள். பசு மாடு மட்டுமே வளர்க்கின்றனர், பசு மாட்டைச் சினைக்குக் கூடச் செயற்கை முறை கருத்தரிப்புக்கு அனுப்பி விடுவார்கள்.
"நடக்கக் கூடாதது நமக்கு நடந்துச்சுண்டு வாயில்லா ஜீவனை நம்ம வெறுக்கக் கூடாதுப்பா." என எங்கோ வெறித்தபடி சின்னச்சாமி சொல்லவும்,
"அப்பா..." என அவர் தோளைத் தொட, கண்கள் கலங்க உட்கார்ந்திருந்தவர், ஒரு பெருமூச்சோடு,
"விதி முடிஞ்சு போறவ போயி சேர்ந்திட்டா, கோவத்தில ஒன்னு இரண்டு வார்த்தை ஆத்தமாட்டமச் சொல்றது தான். அதுக்குக் கோவிச்சுக்கிட்டு இளந்தாரிப் பயலுமில்லை கண் காணத போயிட்டான்." எனச் சின்னசாமி, சின்ன மகன் அன்புவை பற்றி மூன்று வருடமாகப் புலம்பும் அதே புலம்பலைப் புலம்பவும்.
"அது கோவமில்லைபா, இப்படி ஆயிடுச்சேண்டு இயலாமை. குத்த உணர்ச்சி, அவனாலையே தாங்க முடியலை." எனத் தேற்றினான் பெரிய மகன்.
"பெத்த மனசு கேக்கலையேப்பா. இதே உங்க அம்மா, இருந்திருந்து, நான் போயிருந்தேண்டா, இந்தப் பய கண்காணாம போயிருப்பானா?" என அவர் வேகமாகக் கேட்கவும்.
"மாமா!!!" என மருமகளும், "அப்பா... என்னாப் பேச்சு பேசுறீங்க???" என மகனும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
"நிசத்தைத் தான்டா சொல்றேன். அப்பன்ண்டா எல்லாத்தையும் தாங்கிக்குவாண்டு அவனுக்கு நினைப்பு." என அவர் கண்கலங்கவும் அவருக்கு ஆதரவாகப் பேசிய பெரியவன்,
"அவனை விடுங்கப்பா, தன்னால வருவான் எங்கப் போகப் போறான்?" என்று விட்டு, "செல்வியக்கா போன் போட்டுச்சு, கயல் சிறு வீட்டுப் பொங்கல் வச்சிடுச்சாம். சாய்ந்திரம் பூஎருவாட்டி தண்ணீல விடுறாகலாம். உங்களைக் கட்டாயம் வரச் சொல்லுச்சு." என்றான்.
"காலையிலேயே கயலும் போன் அடிச்சிருச்சுப்பா. இரண்டு வருசமா நான் வரலையாம், இந்த வருஷம் கட்டாயம் நான் வரனுமுண்டு ஒரே பிடிவாதம். இந்தப் புள்ளையும் எத்தனை வருசத்துக்குக் கன்னிப் பொங்கல் வச்சு, காத்திட்டு இருக்கும். அட இந்தப் பயலுக்குப் பெத்தவன், கூடப் பொறந்தவைங்க மேல தான் கோபமுண்டா இருக்கட்டும், பரிசம் போட்டவளையாச்சும் தாலி கட்டி கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியது தானே!" என மீண்டும் குறை பட்டவர், "போயிட்டு வாரேன், இந்தத் தடவை இரண்டில் ஒரு முடிவு எடுத்துட்டு தான் வருவேன்." என உறுதியாகக் கூறினார்.
"இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து பார்க்கலாம்ல மாமா, அன்பு வந்திருச்சுண்டா என்னா பதில் சொல்றது?" என்ற பெரிய மருமகளிடம், "நான் என் மகனுக்காகக் காத்திருக்கலாம் ஆத்தா, ஆனா ஒரு பொட்டப் புள்ளையைக் காக்க வைக்கிறது எந்த விதத்தில நியாயம். என்ன தான் மச்சினன் குடும்பமுண்டாலும், நாமளும் நல்லது கெட்டதை யோசிக்கனுமுல்ல. " என்றவரின் வாதத்துக்குப் பதில் அளிக்க முடியாமல் உள்ளே சென்றாள் சாந்தி.
சின்னச்சாமி, உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர், சுமார் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, மனைவி சிவகாமிக்காக, அவரது பிறந்த வீட்டுக்கு அருகிலேயே , தானும், நிலம் வீடு , தொழில் என அமைத்துக் கொண்டு பாலமேடு பகுதியிலேயே செட்டில் ஆகி விட்டார். ஒரு மகள், இரண்டு மகன்கள் என நிறைவான குடும்பம். மகளை சிறிய மச்சினனுக்கே மணமுடித்து கொடுத்தவர், பெரிய மகனுக்கு தன் சொந்தத்தில் மணமுடித்தார். இளைய மகனுக்கு, பெரிய மச்சினன் மகளுக்கே மணமுடிக்க காத்திருந்த சமயத்தில், அவரது மனைவி சிவகாமி அகால மரணமடைந்து விட, சின்ன மகனும் வீட்டை வெறுத்து வெளியேறிவிட்டான்.
மாலையில், பாலமேடு பத்திரகாளியம்மன் கோயில் முன் உள்ள முச்சந்தியில் இளம் பெண்கள் பூ எருவாட்டியை மூங்கில் கூடைகளில் சுமந்து கொண்டு வந்து வைத்து, “தாணானே, தாணானே” எனக் கும்மிக் கொட்டிக்கொண்டிருந்தனர்.
மார்கழி மாதம் முப்பது நாளும், அவரவர் வீட்டு வாசலில் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு, அதனை அலங்காரம் செய்யவெனப் பசுஞ்சாணத்தை உருட்டி அதில் பூசணி பூவை சொருகிக் கோலத்தின் நடுவில் வைப்பர். அன்று மாலையே அந்தச் சாணி உருண்டைகளை எருவாகத் தட்டி, நடுவில் வைத்திருந்த பூசணிப் பூவையும் அதன் இதழ்களைக் கிழித்து எருவிலேயே ஒட்டி, பூ எருவாட்டிகளாகச் செய்து காயவைப்பர்.
இவ்வாறு செய்த பூ எருவாட்டிகளை வைத்து கன்னிப் பெண்கள், தை மூன்றாம் நாள் மண்பானைகளில், அவரவர் வீட்டில் சிறுவீட்டுப் பொங்கல் எனும் கன்னிப் பொங்கல் வைத்துப் பழகுவர். இதில் எரிபொருளாக இந்த எருவாட்டிகளை உபயோகித்து மீதம் உள்ளவற்றைக் கோவிலுக்கு முன் கொண்டு வந்து வைத்து மாலை நேரத்தில் கும்மிக் கொட்டி, அவரவர் வேண்டுதலோடு, அருகிலிருக்கும் நீர்நிலையில், பூ எருவாட்டிகளின் மேல் சூடமேற்றி வழிபட்டுத் தண்ணீரில் விடுவர்.
அது போல் இன்றும் பத்திரகாளியம்மன் கோவில் முன் நல்ல அலங்காரமாகச் சிங்காரித்துக் கொண்டு, கும்மி கொட்டிய கன்னிப் பெண்கள் கூட்டத்தில் சற்றே அலங்காரங்கள் குறைவாக அதே சமயம் நியமத்தோடும், சிரத்தையோடும், மனதில் வேண்டுதலோடும் கும்மிக் கொட்டிக் கொண்டிருந்தாள், இந்தத் தைப்பூசத்தில் தன் இருபத்தி ஐந்தாவது அகவையைப் பூர்த்திச் செய்யும் கயல்விழி.
அந்தக் கன்னிப் பெண்கள் கூட்டத்திலேயே அநேகமாக வயது மூத்தவளாக அவள் தான் இருப்பாள். சிலர் கேலியாகவும், சிலர் பாவமாகவும், சிலர் கரிசனத்தோடும் கயல்விழியை பார்ப்பார்கள்.
கிராமங்களில் ஒரு பெண் என்னதான் படித்து, பட்டம் பெற்று, வேலையிலிருந்தாலும் கன்னியாக நின்றால் எனில், அதுவும் பரிசம் போட்ட பிறகு கன்னியாய் நின்றால் எனில் பலவிதமாகப் பேசத்தான் செய்வார்கள்.
ஆனால் அத்தனை வசைச் சொற்களையும் தாங்கிக் கொண்டு, தன்னை முழு மகிழ்ச்சியோடு பரிசம் போட்டு, மணக்க உறுதி தந்து சங்கிலி அணிவித்த அத்தை மகனுக்காக இன்றும் பாவை நோன்பு இருந்து வழிபடுகிறாள் அந்தப் பாவை.
ஒவ்வொரு வருடமும் பூஎருவாட்டியில் சூடத்தை வைத்து ஏற்றி விட்டு, அது செல்லும் பாதையில் கண் எடுக்காமல் பார்த்திருப்பாள். இந்த மூன்று வருடங்களாக அவள் எதிர்பார்ப்பு பொய்த்து, சிறிது தொலைவிலேயே சூடம் அணைந்து விடும். அந்தச் சகுனமே சத்தியம் போல் அவள் மணாளன் இருக்கும் இடமும் தெரியாமல் தான் இருந்தது.
வீட்டில் தினமும் அவளது அம்மா உமா, தன் கணவன் கந்தவேலிடம் மகளை இப்படி வீட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதற்கு மூக்கால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார், தன் அண்ணன் மகனுக்கு கொடுத்திருந்தாலும் , நன்றாக வாழ்ந்து இருப்பாள் என இடித்துரைத்து கொண்டே இருப்பார்.
ஆனால் கயல்விழியின் நம்பிக்கை, தன் மனம் தெளிந்து பரிசம் போட்டுச் சென்றவன் கட்டாயம் கைப் பிடிக்க வருவான் என்பதே. ஏனெனில் அலைபேசியை அங்கேயே விட்டுச் சென்றவனுக்குக் கணினி வழியான அஞ்சல்களை மட்டும் அனுப்பிக் கொண்டே தான் இருந்தாள். அதற்கான பதில்கள் வராத போதும், அவள் மொழிகளை அவன் வாசிக்கிறான் என்றே அவள் உள்ளம் சொல்லியது.
இதோ இன்று காணும் பொங்கல் வைத்து விரதமிருந்து, இப்போது பூ எருவாட்டி நீரில் விடுவதற்கும், தனது சித்தப்பா குமரவேல் மனைவியும், தனது வருங்கால நாத்தனாருமான கலைச் செல்வியோடு தான் வந்திருக்கிறாள். ஒரு சுற்று, இரண்டு சுற்று என ஒவ்வொரு சுற்றுக்கும் அவள் விழிகள் சுற்றி நின்ற கூட்டத்தில் தனது அத்தை கணவனும், அவளைப் பொறுத்தவரை அவளது மாமனாரான சின்னச் சாமியைத் தான் தேடியது.
இரண்டு வருடமாகக் கூப்பிட்ட போதெல்லாம் வராதவர், இந்த முறை வந்தால், மாமன் மகனும் வந்து சேருவான் என அவளது உள் நெஞ்சம் சொல்லியது, அதனால் சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்தவள் கண்ணில் பட்டார், உணர்ச்சிகளற்ற முகமாய் வெள்ளை வேட்டி சட்டையில் நின்ற சின்னச்சாமி .
அவரைக் கண்டவுடன் சற்றே மனம் துள்ள, கும்மியடி பாட்டில் தன் மனதை செலுத்தி, அது முடிந்தவுடன் கூடையை கையில் சுமந்து, மஞ்சமலை ஆற்றில் சிவகாமியின் செல்வனை நினைத்து, பாவை விடு தூதாக அன்புச்செல்வனுக்குச் சீக்கிரம் வரச் சொல்லி பூஎருவாட்டியில் சூடம் வைத்து ஏற்றி நீரில் விடுத்தாள் தூது.
ஒளிமயமான எதிர்காலம் காண ஒளியை ஏற்றிவிட்டு , நெஞ்சில் பயத்தோடு அதனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க, இந்த முறை அவள் தூது விட்ட மூன்று பூ எருவாட்டிகளுமே நின்று நிதானமாக ஒளியைத் தாங்கி அவள் நிர்ணயித்த இடத்தையும் தாண்டி சூடத்தோடு சேர்ந்து மணந்தும், எரிந்தும் சென்றன.
கயல் விழியாள், உணர்ச்சி வசப்பட்ட வளாகத் தன கயல் விழிகளில் நீர் பளபளக்க முகத்தில் மகிழ்ச்சி பொங்க, ஊற்றுக் கண்ணாய் மதுரை மண்ணெங்கும் பொங்கிப் பரவும் வைகையை வழிபட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
ஆனால் அவளின் பொங்கும் மகிழ்ச்சியை , நீரூற்றி அடக்கவென, அவளது அம்மா திட்டமிட்டுக் கொண்டிருந்தார், என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம் .