• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 13

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
28
36
13
Srilanka
நேசம் - 13

MEME-20240624-111949.jpg



தானும் நன்றாக இருந்து, தம்மையும் நன்றாக வாழ வைப்பாள் என கனவு கண்ட அவளது தாயை எப்படி யோசிக்காது விட்டாள்? உண்மை தெரியும் இடத்தில் தன் ஆசையினால் மகள் வாழ்க்கையை தானே வீணடித்து விட்டோம் என உடைந்து போவாளே! பின் அவளுக்கு ஒன்றென்றால், அவளையே நம்பி இருக்கும் அவளது தங்கைமாரின் நிலை?


'இல்லை... நான் என்ன கஷ்ட பட்டாலும் வீட்டு காரருக்கு இது தெரியக்கூடாது? தெரியக்கூடாது எண்டா நான் நாட்டுக்கு போகக்கூடாது. நான் நல்லா இல்லாட்டிக்கும் பரவாயில்லை. வீட்டை கொஞ்சமாச்சும் உயர்த்தோணும். தங்கச்சியாக்கள கொஞ்சமாச்சும் நல்லா படிக்க வைக்கோணும். வீட்ட ஒரு நிலமைக்கு கொண்டு வந்துட்டு என்ர பிரச்சினைய சொல்லுவம்.' முடிவினை எடுத்தவளுக்கு எப்படி அதை நடைமுறை படுத்துவது என்பது தெரியவில்லை.


"அந்த அண்ணா திரும்ப கூப்பிடுவார் தானே அப்ப இதை பற்றி கதைப்பம். அவரால நாட்டுக்கு போக உதவி செய்யிறது தானே கஷ்டம். வேலை எடுக்க ஏதாவது உதவ ஏலுமென்டா உதவுவார்." எண்ணிக் கொண்டவளாய் நாடு செல்லும்ண்ணத்தை விட்டு விட்டு தன் வேலையில் முணைந்தாள்.


இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அவனிடம் இருந்து எந்த அழைப்புமே இல்லை.

'உதவி எண்டு கேட்டோன்ன அந்த அண்ணாவும் வந்த இடம் தெரியாம ஓடிட்டாரே.. இனி யாரிட்ட உதவி கேட்கேலும். நமக்கு இது தான் விதி போல..' புலம்பியவளாய் அமர்ந்திருந்தவள் காதினில் அதே செருமும் ஒலி.


ஆம் அவள் இப்போதெல்லாம் அதே பார்க்குக்கு நேரம் தவறாமல் ஆயர் ஆகிவிடுவாள். அவளுக்கும் என்ன பொழுது போக்கு. சதா ரீவியே கதி என அதன் முன்பும் எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? அதனால் மாலை நான்கு மணியினை பார்க்குக்கு செல்வோம் என அர்ப்பணித்து விட்டாள்.


செருமல் ஒலி கேட்டு திரும்பியவளுக்கு அங்கு அமர்ந்திருந்தவனை கண்டதும் விழிகள் அகல விரிய ஆரம்பித்தது.


ஆம் அவன் வேறு யாருமில்லை. அவனே தான். அன்று அவளருகில் அமர்ந்த அதே வெள்ளைக்காரன்.


"மூசூ மேதம்" அதே வார்த்தை.


"இவனுக்கு வேற இடமே இல்லையே...! எப்ப பாத்தாலும் என்னையே இடிச்சு இருக்கோணும். இதில மூசூ எண்டு கொண்டு... உண்மையில அந்த மூசூவுக்கு என்ன தான்டா அர்த்தம்? எதை பழகுறனோ இல்லையோ இந்த மூசூ என்னண்டு முதல்ல பழவவேகாணும். என்ன கெட்ட வார்த்தை என்னை பார்த்து சொல்லுனான் எண்டே தெரியேல." முணுமுணுத்தவளாய் அவனை முறைத்து விட்டு விலகி அமர்ந்து கொண்டவளையே பார்த்திருந்தவன்,



"வூ வெனே இசி து லே யூர்...?" என கேட்டு விட்டு பதிலுக்காய் அவளை அவன் பார்த்திருக்க.


"அடேய் கழுதை... உன்னை இப்ப என்னை ஏதாவது கேள் எண்டு கேட்டனா? எனக்கு ஒரு வார்த்தைக்கே அர்த்தம் தெரியேல.. இதுல மூச்சு முட்டுற அளவுக்கு மூக்கால இத்தனை வார்த்தை கதைக்கிறியே! என்ன சொல்லுவன்?" என்று விட்டு கேளாதவள் போல் அமர்ந்திருந்தவளையே ஒரு மாதிரியாக பார்த்தவன்.


"ஏதாவது சொன்னனீங்களா மெதம்...?" என்றான்.


"சொன்னா மட்டும் விளங்கிடும்." அவன் தமிழில் தான் கதைத்தான். ஆனால் அவளுக்கு அவன் பிரஞ் காரன் என்று பதிந்ததால், தமிழில் கதைத்தது கருத்தில் எடுபடவில்லை.


"விளங்குமே... இப்ப நான் தமிழ்ல தான் கதைச்சன்." என்றான் சிரித்துக் கொண்டு. அவன் அப்படி சொன்னதும் தான், அவளுக்கு உறைத்தது.


"என்னது...? உங்களுக்கு தமிழ் தெரியுமோ!" என்றாள் ஆச்சரியம் காட்டி. ஒரு வெள்ளைகாரன் இப்படி தமிழில் கதத்தால் ஆச்சரியம் காட்டாமல் என்ன செய்வது?


"ம்ம்... இப் இல்லை... படிக்கிற காலத்தில இருந்து தமிழ் கதைப்பன்." என்றான் வெறுமையாய் ஓர் புன்னகையினை வெளிப்படுத்தி.


"எப்பிடி...?" அறியும் ஆவல் அவளுள்.


"தெரியாது. ஆனால் தமிழ் எண்டா பிடிக்கும். அதனால தான், தமிழ் பெண்ண கல்யாணம் செய்தேன்." என்றான்.


"என்ன நீங்கள் தமிழ் பொண்ணை கலியாணம் செய்தீங்களா?" நம்ப முடியாது அவள் வாய் விரிக்க.


"ஏன் செய்யக்கூடாதா...? என்னண்டே தெரியாது. தமிழ் கலாச்சாரத்தில என்னையே அறியாத ஈர்ப்பு. அதால படிக்கேக்க என்னோட சேர்ந்து படிச்ச தமிழ் பெடியனிட்ட பழக்கம் வைச்சு, அவனிட்டயே தமிழ் கேட்டு கதைக்க வெளிக்கிட்டன். அப்பிடியே ஒரு தமிழ் பொண்ண டாவும் அடிச்சு கல்யாணம் செய்திட்டன்" என அவன் கூட. நம்பமுடியாததாக இரந்தாலும், கேட்கும் போது நன்றாகத் தான் இருந்தது அவளுக்கு. கூடவே பெருமையாகவும்.


"அப்பிடியா...?" என்றவளுக்கு சற்று முன் அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து தான் விட்ட வார்த்தைகள் நினைவில் வர, ஒற்றை கண்ணை இறுக மூடி நாக்கினை ஓரமாக கடித்து தலையினை குனிந்து கொண்டவள்.


"சொரி... உங்களுக்கு தமிழ் தெரியாது எண்டு நினைச்சு..." மேலே செல்ல முடியாது அவள் திணற. அதில் பட்டென நகைத்தவன்,


"பரவாயில்ல... உங்களுக்கு மட்டும் எனக்கு தமிழ் தெரியும் எண்டு தெரியுமோ என்ன? அது சரி இங்க அடிக்கடி பாக்கறறே.. இங்க பக்கமாவேி உங்கட வீடு இருக்கு?" பெரிய மனதுடன் மன்னித்து தொடர் வினா அவன் தொடுக்க, ஒற்றை புருவம் உயர்த்தி நோக்கியவளின் எச்சரிக்கை உணர்வும் ஒட்டிக் கொள்ள.


"ம்ம்..." என்று வெறுமனவே பதில் தந்து விட்டு வேறு புறம் தலையினை திருப்பிக் கொண்டாள் மிருதுளா. பின்னே வேற்று மனிதனுடன், அதுவும் ஓர் ஆணுடன் இவ்வளவு நேரம் அவள் பேசியதே இல்லை. இன்று நெருங்கிய உறவு போல் பேசியது இப்போது தான் அவளை குடைந்தது.


"ஏன் டக்கெண்டு முகம் மாறிட்டுது. ஓ... உங்கட வீடு எங்க எண்டு கேட்டதாலயோ...? அய்யோ நான் பிழையா எதுவும் கேக்கேல. அதுவும் இல்லாம நான் தான் ஏற்கனவே சொல்லிட்டனே... எனக்கு கலியாணம் நந்துட்டுது எண்டு. அடிக்கடி இங்க பாக்கிறனே பக்கமா இருக்குமோ எண்டு தான் கேட்டன். மற்றம்படி ஒண்டுமில்ல..." என்றான் தன்னை தவறாக நினைத்து விட்டாள் என்று அவசரமாக.


அவனது பதட்டமே சொன்னது அவன் தவறான நோக்கத்தில் கேட்கவில்லை என்று.


"ச்சீச் ச்சீ... நானும் ஒண்டும் நினைக்கேல.. எனக்கும் சரியா இடம் சொல்லத் தெரியாது. அதான் பேசாம இருந்தன்." என்றாள் மழுப்புவது போல.


"ஓ... அப்பிடியா...? ஓகே விடுங்கோ.. உங்கட விலாசம் தெரிஞ்சு கடிதமா போட போறன்? என் பெயர் கென்ரி... நான் கொஞ்சம் தூரம் தான். பக்கத்தில ஒரு வேலை விஷயமா வரேக்க.. இங்கயும் கொஞ்சம் நேரத்த சிலவழிப்பன். அப்ப தான் உங்கள கண்டன். தமிழ் எண்டு யாரை கண்டாலும் தான் ஒரு பாசம் வந்திடுமே. அதான் உங்களோடயும் கதைக்க ஆசைப்பட்டன். சரி எனக்கு நேரம் ஆகுது. இன்னொரு தரம் பாக்கேக்க கதைப்பம். அப்ப நான் வெளிக்கிடுறன்." என அவன் எழுந்து கொள்ள. சினேகமாய் புன்னகைத்து தலையசைத்தவளை பார்த்தவாறு விடைபெற்றான் கென்ரி.


வீட்டுக்கு வந்த மிருதுளா திறப்பினை கதவினில் நுழைத்து விட்டு திருக, அது எங்கே திருகு பட்டது.


"கதவுக்கு என்ன நடந்தது. ஏன் துறப்பு உள்ள போகுதில்ல..." புலம்பியவளாய் மேலும் உள்ளே திறப்பினை திணிக்க முயன்ற நேரம், கதவானது உள்ளிருந்து திறபட. ஒரு நிமிடம் அதிர்ந்தே போனாள் மிருதுளா.


"எங்க போட்டு வார?" குரலை உயர்த்தி கேட்டது வேறு யாருமல்ல... அவள் கணவன் சியாம் தான். அவன் உள் பக்கம் திறப்பினை போட்டிருந்ததனால் தான், அவளால் திறப்பினை உள்ளே தள்ள முடியவில்லை.


முதலில் அதிர்ந்தவளும், அவனது கேள்வியில் பதில் கூறப் பிடிக்காது மறு புறம் திரும்பிக்கொண்டு உள்ளே செல்ல.


"உன்னட்ட தான் கேக்கிறன். பதில் சொல்லாம போற..." இன்னும் உச்சத்தில் அவன் குரல் ஒலித்தது. நின்று திரும்பி அவனை முறைத்தவள்,


"பதில் சொல்லோணுமோ..? ஏன் பதில் சொல்லோணும்? அவசியம் எனக்கில்ல." விரக்தியின் உச்சமாய் பதில் சொல்லியவளை ஆங்காரமாய் முறைத்தான் அவன்.


"என்ன வெளியால வெளிக்கிட்ட உடன வாயும் வந்திட்டுதோ.. இது என்ர வீடு. இண்டைக்கு வரைக்கும் என்ர காசில தான் நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிற.. அதுவுமில்லாம உன்னை தொட்டு தாலி கட்டின புருசன் நான். எனக்கு பதில் சாெல்லாம வேற யாருக்கு பதில் சொல்ல போறியாம்." அவன் மட்டும் குறைந்தவனா என்ன?


"புருசன்...!" ஒர மாதிரியாக கூறிவிட்டு செட்டியில் வந்து அமர்ந்தவள் அதன் பின் கேட்ட கேள்வி ஒன்றுக்கும் பதில் கூறவில்லை. பதில் என்ன அவன் முகத்தை நிமிர்ந்து ஓர் பார்வை கூடப் பார்க்கவில்லை. அவனும் எத்தனையோ முனைகளில் அவளிடம் கேள்விகளை கேட்டு விட்டான். அவளிடமிருந்து எதிர்த்து ஓர் பார்வை கூட வரவில்லை என்றதும்.


"ஓ... இவ்வளவுக்கு போச்சோ..?" என்றான் அவளது உதாசீனத்தில் கடுப்பாகி. அதற்கும் அவளிடம் பதில் இல்லாது போக, அதில் எக்கச்சக்க கோபத்திற்கு போனவன்,


"நானும் பாக்குறன்..." கோபமாக அவளருகில் சென்றவன், இருந்தவளை பிடித்து கீழே தள்ளி விட்டு, என்னை என்ன விசரன் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறியோ! மரியாதையா கேட்டதுக்கு பதில சொல்லு... எங்கடி போட்டு வார?" என்றான் கடித்திருந்த பற்களின் நடுவே உதடு பிதுங்கி வந்த வார்த்தைகளைக் கக்கி.


தன் உதாசீனத்தால் தன்னிடம் இருந்து விலகிச் செல்வான் என்று தான் நினைத்தாள் அவள். இப்படி கீழே பிடித்துத் தள்ளுவான் என்று நினைக்கவே இல்லை. அது சரி அவனை பற்றி அவள் நினைத்தது எல்லாமே தவறு தானே! இப்போது மட்டும் என்ன புதிதான ஏமாற்றமா? முதலில் அவனது செயலில் மிரண்டாலும், பின் தனக்குள் தைரியத்தை வரவழைத்தவளாய்,



"எந்த உரிமையில என்னை பிடிச்சு இழுத்து விழுத்தானீங்கள். என்னை தொடவோ பிடிச்சு தள்ளவோ உங்களுக்கு உரிமை இல்லை." என்றாள் இத்தனை நாள் ஏதோ மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல்.


"அ... உனக்கு தாலிகட்டின புருசன் எண்ட உரிமையில." அவன் மட்டும் குறைந்தவனா?


"புருசனா...? யாருக்கு அந்த வெள்ளைக்காரிக்கு தானே! இஞ்ச பாருங்கோ இனி ஒரு தரம் என்னை தொட்டீங்கள் எண்டா, சத்தம் போட்டு அக்கம் பக்கத்தில இருக்கிறவய கூப்பிட்டிடுவன். பிறகு என்னாகும் எண்டு நான் சொல்லத் தேவையில்ல." என்ற அவளைத் தீர்க்கமாய் ஓர் பார்வை பார்த்தவாறு.


"என்ன பயமுறுத்துறுயோ..." ஒற்றைப்புருவம் வில்லாய் வளைந்தது.


"இல்லையே! எனக்கும் தெரியும் இஞ்சத்த நாட்டு சட்டம். ஊரில நாலு பேரிட்ட கேட்டுத்தான் வந்திருக்கிறன். மொழி தெரியாட்டிக்கும், மொழி பெயர்ப்பு ஆளுங்கள வைச்சு பாெலிஸ் விசாரிப்பாங்களாம். அப்பிடி விசாரிச்சா உங்கட நிலமை என்னண்டு நினைச்சு பாருங்க." என்றாள் திமிராய்.


இவ்வளவு ஆனதன் பின்னர் அவள் ஏன் அடங்கி போகவேண்டும். எதுவும் இல்லை என்று ஆனதன் பின்னர் பயமுறுத்த இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?



"ஓ... இவ்வளவுக்கு ஆச்சோ! சரிடி... இந்தளவுக்கு நீ வந்தாப்பிறகு என்னோட திமிரையும் நீ பாக்கோணும். எப்ப இந்தளவுக்கு என்னை எதிர்க்க துணிஞ்சிட்டியோ, இனிமேல் உனக்கும் எனக்கும் இருந்த உறவு இண்டையோட இல்லை. என்ர தயவும் உனக்கு தேவையில்ல. பயப்பிடாத... உன்னை இந்த வீட்டை விட்டு போ எண்டு எல்லாம் மனச்சாட்சி இல்லாம சொல்ல மாட்டன். தாலி ஒண்டை கட்டின பாவத்துக்காக நீயே இந்த வீட்டில இரு. ஆனா அதுக்கான வாடகைய நீ தான் கட்டோணும். இனி ஒரு ரூபா என்னட்ட இருந்து உனக்கு வராது. தங்குறது திங்கிறத எல்லாத்தையும் நீயே பாரு. அப்ப தான் உன்ர கொழுப்பு அடங்கும்." கூறியவன், அவளை முறைத்தவாறே வாசலில் தொங்கிய ஜெக்கட்டை எடுத்து தோளில் கொழுவிக்கொண்டு வெளியேறியவன் உதடுகளோ,


'இன்னும் ரெண்டு நாள் தான். அதுக்கு பிறகு நீயே என்னைத் தேடி வருவ... என்னை விட்டா இஞ்ச உனக்கு நாதி எண்டு யாரு இருக்க போயினம். அப்ப உன்னை கவனிக்கிறன்.' தனக்குள் எண்ணியவனாய் சென்று விட்டான்.



தொடரும்....