• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 14

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 14


அதிர்ந்தது தீபா மட்டும் அல்ல மலரும் தான். அவள் என்ன சொன்னாள் என்பதை அவளே முதலில் உணரவில்லை.அவன் பெயரை சொன்னபிறகு தோழிகளின் கேள்வியில் தான் என்ன சொன்னோம் என்பது அவளுக்கு புரிந்தது ...

“அது யாருடி மாதேஷ் ...உனக்கு பிடிச்ச ஹீரோன்னு சொல்ற” என அவர்கள் கேட்க அப்போது தான் தன்னுள் அவன் எந்த அளவு கலந்திருக்கிறான் என்பதை அவளே உணர்ந்தாள். அதற்கு பின் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.....அவள் மனதை அவளே அப்போது தான் கண்டுகொண்டாள். நினைக்கும்போதே உடல் சிலிர்த்தது அவளுக்கு.......அந்த உணர்வில் இருந்து மீள முடியாமல் தவித்தவள் தோழிகளின் கேள்விக்கு வேறு எதோ பதில் சொல்லி சமாளித்துவிட்டு வேகமாக அங்கிருந்து எழுந்து வெளியே வந்தாள்.


பள்ளியின் மரத்தடியில் சென்று அமர்ந்தவள் தான் எதற்காக அவன் பெயரை சொன்னோம் என நினைத்து பார்த்தாள். “ஒருவேளை காலையில் தீபாகிட்ட அவனை பத்தி பேசிட்டு வந்தோம்...அதனால சொல்லி இருப்பமா? ...இல்ல சின்ன வயசில இருந்தே அவனை பிடிக்குமே அதனால் சொல்லி இருப்பமோ” என அவளுக்குள் அவள் கேட்டுகொண்டிருக்க அவன் முன் வந்து நின்றாள் தீபா.


“என்ன மலரு இப்படி பண்ணிட்ட.....நீ எதுக்கு மாதேஷ் பெயரை சொன்ன “ .....என கோபமாக கேட்க


மலரோ பதில் சொல்லாமல் அவளையே பார்க்க


அவளோ “எனக்கு அப்பவே கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு...என்னடா எப்போ பார்த்தாலும் மாதேஷ் பத்தியே பேசிட்டு இருக்காளே...என்ன விஷியமா இருக்கும்னு.....இப்பதான தெரியுது ...நீ அவனை லவ் பண்ணிருக்க...அதான் அவனை பத்தியே பேசிட்டு இருந்திருக்க....சீ வெட்காமா இல்லை” என எண்ணெயில் போட்ட கடுகு போல் அவள் படபடவென பொரிந்து தள்ள


உடனே மலர் பதட்டத்துடன் “ஏய் சும்மா உலராத...நான் எங்க அவனை லவ் பண்றேன் .....நீ ஏன் இப்படி எல்லாம் நினைக்கிற தீபா...எனக்கு அந்த அண்ணாவ என சொன்னவள் சட்டென எனக்கு சின்ன வயசில இருந்தே அவரை ரொம்ப பிடிக்கும்.....அதான் எல்லாரும் பிடிச்சவங்க பேர் சொல்லும்போது நானும் அவர் பேர் சொல்லிட்டேன்” என அழும் குரலில் சொன்னாள்.


அதற்கு பின்பே கொஞ்சம் சாமதானம் அடைந்த தீபா பின்னர் அவளின் அருகில் அமர்ந்து “இங்க பாரு எனக்கும் தான் மாதேஷ் பிடிக்கும்.....அதுக்காக நான் அங்க மாதேஷ் பேர் சொன்னனா என அந்த நேரத்திலும் தன் மனதின் ஆசையை லேசாக கோடிட்டு காட்டியவள் ...... வேற யாராவது இத கேட்டிருந்தா என்ன நினைப்பாங்க .......ஒழுங்கா படிச்சு முதல்ல பாசாகிற வழிய பாரு” என்றாள் தீபா.

மலரோ அவள் முகத்தை பாவமாக பார்க்க

உடனே தீபா மேலும் அவளுக்கு புரிய வைக்க எண்ணி “அப்புறம் நீயே யோசிச்சு பாரு மலரு ..........மாதேஷ் படிப்புல பஸ்ட் மார்க் ...நீயோ பள்ளியில லாஸ்ட் மார்க்...... படிப்பவிடு, பெர்சனாலிட்டி பாரு......அவரு நல்ல உயரம் ...நீயே குள்ள கத்திரிக்கா...... அவரு எல்லார்கூடவும் சிரிச்சு சகஜமா பேசுவாரு.......நீ என்கூடவே சிரிச்சு பேச சில மாசமாச்சு ...... எந்த விதத்தில பார்த்தாலும் உங்க இரண்டு பேருக்கும் ஒத்தே வராது .....நீ வடதுருவம் ..அவரு தென் துருவம்......இரண்டு துருவமும் சேர வாய்ப்பே இல்லை....அதனால உனக்கு எதுக்குடி இந்த மாதிரி கற்பனை எல்லாம்....அதெல்லாம் தப்பு ” என சிறுபிள்ளைக்கு சொல்வது போல அவள் அறிவுரை சொன்னாள்,

மலரும் தலையை மேலும் கீழும் ஆட்டி அதை ஏற்றுகொள்ள “ஹப்பா இப்பவாவது புரிஞ்சுதே ....இனியாவது இப்படி உலராத” என நிம்மதி பெருமூச்சு விட்ட தீபா “சரி பஸ்க்கு நேரமாச்சு கிளம்பலாமா” என கேட்கவும்


ம்ம்ம் என்றவள் கடைசியாக தீபாவை பார்த்து மலர் கேட்ட கேள்வியில் வாழ்க்கையே வெறுத்து போனாள் அவள்.

தீபா பேசியதிற்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு கடைசியாக எனக்கு ஒரு சந்தேகம் என்ற மலர் “ஏன் தீபா நான் ரொம்ப குள்ளமாவா இருக்கேன்......அவரோட காதுக்கு கொஞ்சம் தான கீழே இருப்பேன்” என கேட்கவும் அதுவரை பேசியது எல்லாம் பயனற்று போனதை எண்ணி நொந்து போனாள் அவள்.


“அடியேஏஏஏஏ” என பற்களை நரநரவென கடித்தவாறு தீபா கத்தவும் “சரி வா பஸ்க்கு போலாம்” என அவளை பிடித்து இழுத்து சென்றாள் மலர்.


அதற்கு பின்பு தீபா மாதேஷை பற்றி பேசுவது குறைத்து கொண்டாள்.ஆனால் மலரோ தீபா பேசியதை கேட்டதில் இருந்து” ஓ இதற்கு பேர் தான் காதலா” என யோசிக்க தொடங்கினாள். முழுநேரமும் அவனை பற்றிய நினைவிலே இருந்தாள். தீபா சொன்ன விஷியங்கள் அவன் மனதை பாதிக்க அவன் ஒரு முறை வீட்டிற்கு வந்த போது அவனுக்கே தெரியாமல் அவன் அருகில் நின்று உயரம் பார்த்தவள் அதில் தீபா சொன்னது போல் அவள் மிகவும் குள்ளமாக தெரிய அவள் முகம் வாடிவிட்டது.

ஆமா தீபா சொன்னதை நான்கு யோசித்தவள் அவனுக்கு சமமாக வர என்ன செய்ய வேண்டும் என பட்டியலிட ஆரம்பித்தாள். அவளது முதல் பாய்ன்ட் படிப்பு...அதை நினைக்கும்போதே அவளுக்கு குளிர் காய்ச்சல் வருவது போல் தோன்ற வேண்டாம் வேண்டாம் அடுத்தது பார்க்கலாம் என தாவினாள். அவன் அனைவரிடமும் நன்றாக பேசுவான்....ஆம் அது மலருக்கும் தெரியும்... அந்த ஊரில் அவனை தெரியாதவர்கள் யாரும் கிடையாது......அவனை பிடித்ததிற்கு அதுவும் ஒரு காரணம். இவள் எளிதில் யார்கூடவும் பேசிபழக மாட்டாள். இவன் மட்டும் எப்படி எல்லாருடனும் அவர்கள் வயதிருக்கு ஏற்றார் போல பேசி அவர்களை நண்பர்களாக்கி கொள்கிறான். முதலில் ஆச்சிரியமாக பார்த்த மலர் அதில் மயங்கியும் போனாள்.அவனை போல் பேசுவது கொஞ்சம் சிரமம் தான் என முடிவு எடுத்து அதில் இருந்தும் ஒதுங்கினாள்.

இனி அடுத்தது பெர்சனாலிட்டி ...அதை நினைக்கும்போதே அவள் இதழில் சிறு புன்னகை வந்து போனது.....அதே நேரத்தில் தன்னிடம் இல்லாதது எல்லாம் அவனிடம் இருப்பதால் தான் அவனை தனக்கு பிடித்திருக்கிறதோ என்ற எண்ணமும் தோன்றியது.

இந்த விஷியத்தில் எந்த சமாதானமும் செய்யாமல் நாம் முயற்சித்து அவனுக்கு இணையாக வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் அவனது உயரத்திற்கு இணையாக தானும் வர வேண்டும் என்று சபதம் எடுத்து அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாள் அவள். 1


உடனே வீட்டில் உள்ளவர்களிடம் “நான் உயரமாக வளரனும்....அதுக்கு நான் என்ன பண்ணனும்” என கேட்டாள்.


குணவதியே “ஏண்டி ஏழுகழுதை வயசாகிடுச்சு திடீர்னு இப்போ வந்து நான் வளரனும்னு கேட்டா நாங்க என்ன பண்றது...உங்க அப்பா மாதிரி இருந்தா உயரமா இருந்திருப்ப ..நீ தான் என்னை மாதிரி போய்ட்டியே” என அவர் தன் மகள் தன்னை போல் என பெருமையுடன் சொல்ல


அவளோ சிணுங்கலுடன் “ இந்த அப்பா குள்ளமா இருக்க உன்னை எதுக்கு கல்யாணம் பண்ணார்...உயரமா இருக்க பொண்ண கண்ணாலம் பண்ணிருந்தா நானும் உயரமா இருந்திருப்பேன் என்றவள் பேசாம இந்த அம்மாவ டைவேர்ஸ் பண்ணிடுங்க அப்பா” என சொல்லவும் குணவதி அதிர்ச்சியுடன் மகளை பார்க்க வீட்டில் இருந்த மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.

உடனே தர்மலிங்கம் “இது கூட நல்லா இருக்கே” என கேலியாக சொல்ல

“ஏண்டி சொல்ல மாட்ட தவமா தவம் இருந்து உன்னை பெத்ததுக்கு எனக்கு நல்ல காரியம் செய்யரடி” என அவளை பொய் கோபத்துடன் குணவதி கடிந்து கொள்ள

“போம்மா உன்னால்தான் நான் குள்ளமா போயிட்டேன்....அச்சோ இப்போ நான் வளரனும்...அதுக்கு என்ன பண்றது” என மீண்டும் ஆரம்பத்தில் வந்து நின்றாள்.


உடனே பாஸ்கர் அவளிடம் “இப்போ நீ வளர்ந்து என்ன பண்ண போற மலர்......உனக்கு இந்த உயரமே கொஞ்சம் அதிகம் தான்” என சொல்லி சிரிக்க

அவளோ திரும்பி அவனை முறைத்தவள் “போடா அண்ணா .....நீதான் எனக்கு முன்னாடி பிறந்து எனக்கு கொடுக்காம எல்லாமே சாப்பிட்டு சாப்பிட்டு உயரமாகிட்ட...நான் குள்ளமா போயிட்டேன் ...எல்லாம் உன்னாலதான்” என சிறுபிள்ளை போல அவன் மீது சண்டைக்கு போனாள் அவள்.


உடனே அவளது சித்தி “இதுக்கு ஏன் அழுகிற மலரு..... அதான் டிவில உயரமாவதற்கு எதோ சொல்றாங்களே அந்த பவுடர் வாங்கி குடி” என சொல்ல அதுவரை பால் குடிக்காதவள் வளரவேண்டும் என்பதற்காக தினமும் பாலில் அந்த பவுடர் கலந்து குடித்தாள்.

தினமும் பாலை குடித்துவிட்டு சுவற்றின் அருகில் நின்று உயரத்தை சரிபார்ப்பாள். பவுடர் டின் அதிகமானதே தவிர அவளது உயரம் ஒரு இஞ்சு கூட கூடவில்லை.

ஒரு மாதம் குடித்தவள் “என்னமா நான் வளரவே இல்லை...அப்படியே இருக்கேன்...வேற ஏதாவது சொல்லுங்க” என்ன எல்லாரையும் நச்சரிக்க அவர்களும் தங்களுக்கு தெரிந்த ஐடியாக்களை சொல்ல அனைத்தும் செய்து பார்த்தாள்.. ஒருமுறை வீட்டின் தூணை பிடித்து தொங்கியவள் கைகள் வேர்த்து வழுக்கிவிட கீழே விழுந்து ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தாள்..


அடுத்து படிப்பு விஷியத்தில் அவனுக்கு சமமாக வர நினைத்தவள் விடிய விடிய விழுந்து விழுந்து படித்தும் பார்டர் மார்க்குக்கு மேல அவளால் தாண்ட முடியவில்லை. இதில் சொல்லிகொடுத்த பாஸ்கர் முதல் பள்ளி ஆசிரியர் வரை அனைவரையும் திட்டி தீர்த்தாள்.


அவளும் தினம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மாதேஷை மனதில் வைத்தே செய்ய அழியாத சிற்பமாய் அவள் மனதில் பதிந்து போனான் அவன்..


இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாதேஷின் நினைவில அவள் திளைத்து இருக்க, இங்கு மாதேஷோ கருமமே கண்ணாக நன்றாக படித்து கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்தான்.

அதே போல மலரும் பகீரத முயற்சி எடுத்து பார்டர் மார்க்கில் பாசாகி பன்னிரண்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்தாள்.

மலரின் நாட்கள் மாதேஷின் நினைவுகளில் கழிய அதற்கு சம்பந்தபட்டவனோ அதை பற்றி அறியாமல் தனது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு போக தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தான்.


“அம்மா விடுங்கம்மா ...அவன்தான் ஆசைப்படறான் படிக்கட்டுமே” என மோகன் சொல்லவும்


அதெல்லாம் வேண்டாம் தம்பி..... இங்கிருக்க காலேஜில படிக்கிறதா இருந்தா படிக்கட்டும்.... .....கோயம்புத்தூர் தான் போய் படிக்கணும்னா அந்த படிப்பே வேண்டாம்.....வாரம் ஒருமுறை வந்திட்டு போகும்போதே எனக்கு கஷ்டமா இருக்கு...அங்க போய்ட்டா மாசம் ஒருமுறை தான் வருவான்......அவனை பார்க்காம என்னால இருக்க முடியாது ...அதெல்லாம் வேண்டாம்” என்றார் கற்பகம்.


“அம்மா இந்த காலேஜில சீட் கிடைகிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ? எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு...நான் போகணும்” என கெஞ்சி கொண்டிருந்தான் மாதேஷ்.


அப்போது “இங்க பாருப்பா ஆண்டவன் புண்ணியத்தில நம்ம தொழில் இப்போ நல்ல நிலையில நடந்த்கிட்டு இருக்கு.....மோகனுக்கு கல்யாணம் ஆகபோகுது.....இங்க கடைக்கும் ஆள் வேணும் ...நீ இங்கேயே இருந்தா கூடமாட ஒத்தாசையா இருக்கும்...நல்லா யோசிச்சு பாரு” என்றார் அவனின் தந்தை.


உடனே மோகன் “அப்பா தயவு செய்து அவனை தடுக்காதீங்க.....ஏற்கனவே அவன் விரும்பின படிப்பை அவனால் படிக்க முடியலை....இப்பவும் அவனோட விருப்பத்திற்கு நம்ம குறுக்க நிற்க வேண்டாம்.....நான் கடையை பார்த்துகிறேன் ..அவன் படிக்கட்டும்” என ஒரு தமையனின் கடமை உணர்ந்து அவன் பேச அவனது தந்தையோ பதில் சொல்லாமல் சென்றுவிட்டார்.


கல்லூரி படிப்பை முடித்ததும் அவனது மதிப்பெண் அடிபடையில் MBA படிக்க அவனுக்கு கோவையில் பெரிய கல்லூரியில் சீட் கிடைத்தது. குடும்பத்தின் கஷ்டமான சூழ்நிலையில் கூட தன் உடன் இருந்த மகன்கள் இப்போது படிப்பதற்காக பிரிந்து செல்வது கற்பகத்திற்கு பிடிக்கவில்லை. இளங்கலை படிப்பை சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்ததால் விடுதியில் தங்கி இருந்தாலும் பாதி நாட்கள் வீட்டில் தான் இருப்பான்....ஆனால் இப்போது கோயம்புத்தூர் என்பது ஐந்து மணிநேர பயணம் என்பதால் மிகவும் யோசித்தார் கற்பகம்..


இங்கு மலரோ திருசெங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பு தான் வேண்டும் என மீண்டும் அடம்பிடித்து BCA வில் சேர்ந்தாள். 2


திருமண நாள் நெருங்க நெருங்க மீனாவை விட மலர் தான் உற்சாகமாக இருந்தாள். மாதேஷ் எந்த நிறத்தில் உடை எடுக்கிறான் என மோகனிடம் கேட்டு அதே நிறத்தில் தனக்கும் உடை எடுத்து கொண்டாள். திருமண நாளும் வந்தது. மண்டபத்தில் மாதேஷ் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்க மலரின் பார்வையோ அவனை விடாமல் துரத்தி கொண்டிருந்தது.

ஒரு முறை அவளின் விழிகள் செல்லும் திசையை கண்டு அதிர்ந்த தீபா அவளை எச்சரிக்கை செய்ய மலரோ அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

மணப்பெண் அறையில் தீபாவும் மலரும் அமர்ந்து பேசிகொண்டிருன்தனர். மீனா சடங்கிற்காக சென்றுவிட இவர்கள் இருவர் மட்டுமே அறையில் இருந்தனர். அப்போது கதவு தட்டபட மலர்தான் திறந்தாள். அங்கு மாதேஷ் நின்று இருந்தான். அவனை பார்த்ததும் அவளது முகம் செம்பருத்தி மலர் போல மலர லேசாக வெட்கம் வர அவனது முகத்தை பார்க்க முடியாமல் விழிகள் தரை நோக்கின.

கதவை சிறிது திறந்து உள்ளே வரும் வழியை அடைத்துக்கொண்டு அவள் நின்று இருக்க அவனோ புருவத்தை சுளித்து படி “இது ஏன் இப்படி நிக்குது ” என மனதிற்குள கேட்டுகொண்டே வேகமாக “கல்யாண புடவை உள்ள இருக்காம் எடுத்து கொடுங்க” என்றான்.

அவளோ அதை காதில் வாங்காமல் அவனை அருகில் பார்த்த சந்தோஷத்தில் அப்படியே நின்று இருக்க

“ஹெலோ ஹெலோ “ என அவள் முகத்தின் முன் சொடக்கு போட அதை பார்த்து வேகமாக எழுந்து வந்த தீபா அவளை பிடித்து இழுத்து உள்ளே தள்ளி முன்னே சென்றவள் “என்ன வேணும் “ என்றாள்.

“கல்யாண புடவை உள்ள இருக்காம்.....கொஞ்சம் எடுத்துகொடு தீபா” என்றான் மாதேஷ்.

“இதோ பார்க்கிறேன்” என்றவள் மலரிடம் திரும்பி “ஏய் மலர் ஏண்டி மானத்தை வாங்கிற...கல்யாண புடவை எங்க” என எரிச்சலுடன் வார்தைகளை கடித்து துப்ப

அதற்கு பின்பே சுயநினைவிற்கு வந்த மலர் “ம்ம்ம் அதுவந்து இங்க தான இருந்தது” என தேட தோழிகள் இருவரும் தேடுவதை பார்த்து உள்ளே வந்த மாதேஷ் அவனும் தேடினான். தேடும்போது ஒருவர் மேல ஒருவர் இடித்துக்கொள்ள மாதேஷும் மலரும் மோதும் நேரத்தில் மலரின் மனதில் சில்லென கொட்டும் அருவியில் நிற்கும் உணர்வு ஏற்பட குளிர்ந்து போனாள் . அதே நேரத்தில் தீபா மாதேஷின் அருகில் வரும்போது எல்லாம் கொதித்து போனாள் மலர்.

“அங்க சாமி கும்பிட நேரமாச்சு......எங்க வைச்சீங்க” என சலிப்புடன் கேட்டவன் “ஒருவேளை பூட்டி இருக்க இந்த அலமாரில இருக்குமோ என்றவன் அதன் சாவி எங்கே?” என்றான்.

“அது அது எங்க அம்மாவிடம் இருக்கு” என்றாள் மலர்.

“சரி போய் அதை வாங்கிட்டு வாங்க என்றவன் தீபா நீ வா நம்ம இந்த பக்கம் தேடலாம்” என அவள் கையை படித்து அவன் இழுத்து செல்ல மலரோ அதிர்ந்து விட்டாள். தீபாவோ திரும்பி மலரை பார்த்திருந்தால் இந்நேரம் அவளது அக்னிபார்வையில் பஸ்பாமாகி இருப்பாள்.

உடனே “இதோ இங்கிருக்கு” என வேகமாக ஒரு பெட்டிக்குள் இருந்து அந்த புடவையை எடுத்து நீட்டினாள் மலர்..

“இங்க வச்சுகிட்டு நம்ம எல்லா பக்கமும் தேடிட்டு இருக்கோம்....நீ தான இந்த பெட்டில தேடுன சரியா கவனிக்லையா” என மாதேஷ் கேட்கவும்

இதை எதிர்பார்க்காத மலர் “அது வந்து போய் நான் சரியா பாக்காம விட்டுட்டேன்” என தடுமாறியவள் அதை அவனிடம் கொடுக்க அவனோ வாங்கிகொண்டு “சரி வரேன் தீபா” என சொல்லிவிட்டு சென்றான்.

அவன் வெளியே சென்றதும் “ஹப்பாஆஅ” என பெருமூச்சு விட்டபடி அமர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க தீபாவோ இப்போது அவளை முறைத்து கொண்டிருந்தாள்.

மலரோ திருட்டு முழி முழித்தவள் “ஹிஹிஹி ஏன் தீபா வந்த உட்கார்” என சொல்ல

“உண்மைய சொல்லு ..அந்த புடவையை நீ தான ஒளிச்சு வச்ச” என கேட்க

அவளோ “நான் எல்லாம் வைக்கலை ..அது அங்க இருந்து” என்றவள் தீபாவின் முகத்தில் தெரிந்த நம்பாத்னமையை பார்த்ததும் அதற்கும் மேல் எதுவும் பேசாமல் தலை குனிந்தாள்..

“ஏண்டி நீ திருந்தவே இல்லையா ..... இன்னும் அதே நினைப்போடதான் இருக்கியா......இது மட்டும் மாதேஷ்கு தெரிஞ்சுது அவ்ளோதான்” என மீண்டும் அவள் எச்சரிக்க ஆனால் மலரோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை..

“சரிவிடுடி ....நாளைக்கு மேக்கப் எப்படி போடலாம்.....ஜடை பின்னட்டுமா ...இல்லை ப்ரீ ஹேர் விடட்டுமா” என அவள் பேச்சை மாற்றவும்

தீபாவும் சிரித்துகொன்டே “உன்னை புரிஞ்சிக்கவே முடியல மலர்” என்றவள் “ஜடை போடு அழகா இருக்கும்” என்றாள்.

. பின்னர் நாளை திருமணத்தில் என்ன நடக்கும் என்பதை பேசிகொண்டிருந்தாள். ஆம் உண்மையாக தீபா மட்டுமே பேசிகொண்டிருந்தாள். மலரோ நாளை மாதேஷ் எப்படி வருவான் ...தான் எப்படி இருக்கவேண்டும் என்ற நினைப்பிலே இருந்தாள்..

மணாளனை நினைத்து மங்கை அவள் மயங்கி இருக்க காலம் நாளை நடத்தும் விளையாட்டில் அவளது சந்தோஷ கனவுகள் சிதைந்து போக போவதை பாவம் அந்த பேதை அறிந்திருக்கவில்லை.
 
  • Like
Reactions: sumiram