• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 14

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
28
36
13
Srilanka
நேசம் - 14

MEME-20240624-111949.jpg


மிருதுளாவுக்குத் தான் ஏன் வாயை விட்டோம் என்றிருந்தது. இனி அவள் நிலை? கொஞ்சம் பொறுமை காத்து இருக்க வேண்டுமோ? ஆனால் இவனிடம் எல்லாம் இறங்கிப் போக அவள் மனம் இடம் தரவில்லை. அவ்வளவு ஏன் அவன் முகத்தை பார்க்கவே அருவெருப்பாக இருக்கையில், அவனது உரிமையான கேள்விகள் ஆத்திரத்தை உண்டு செய்ய தானே செய்யும்.


ஆனால் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று பாவம் பேதை நினைக்கவில்லை. இப்போது தன் செலவுக்கு எங்கே போவாள்? யாரையாவது தெரிந்தால் பொருள் உதவியாவது கேட்கலாம். அவளுக்கு யாரை தெரியும்? கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போல் ஆனது அவளுக்கு. என்ன செய்வது என தெரியாது பலத்த யோசனையில் இருந்தவளுக்கு இருண்டது கூடதெரியவில்லை.


கிட்டத்தட்ட ஒன்பது மணியினை கடிகார முட்கள் தொடுவதற்கு சிறு மணித்துளிகளே இருக்க, வழமையாக ஒலிக்கும் தொலைபேசி மணியும் ஒலி எழுப்ப ஆரம்பித்திருந்தது.


தன்னிலை மறந்து இருந்தவள் ஏதோ வயின் கொடுத்த பொம்மையாட்டம் தன் போக்கில் நடந்து சென்று ரிசீவரை எடுத்து காதில் வைத்தாள்.


"ஹலோ..." எதிரில் கேட்ட ஆண் குரலில் தான் சித்தம் தெளிந்தவாய் நடப்புக்கு மீண்டவள்.


"ஆ... அண்ணா" என்றாள். அவனை விட்டால் அவளை அழைப்பது யார்? கடந்த சில தினங்கள் அவனிடம் இருந்து அழைப்பு வராமல் அந்த போன் ஓய்வெடுத்ததே தவிர, வேறு எந்த அழைப்பும் வரவில்லை.


"ம்ம் நான் தான்ம்மா... ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு. திரும்பவும் ஏதாவது பிரச்சினையா?" என்றான் அவளது தெளிவற்ற பேச்சினை இனம் கண்டு.


எத்தனை நாளாக அவளை அவனுக்கு தெரியும். அண்ணா என்ன அழைப்பை வைத்து அவளது மனநிலையை இவ்வளவு கட்சிதமாக கணிக்கிறான் என்றால், எத்தளவுக்கு அவளை அவன் கவனித்திருக்கிறான். எண்ணத்தில் ஓடினாலும், அதை அப்படியே மறைத்தவளோ.


"புதுசா எங்க இருந்தண்ணா பிரச்சினை வர போகுது? இவர் தான்ணா" என்றாள் சலித்தவாறு.


"உன்னாலயும் என்னம்மா செய்யேலும். என்னதான் இருந்தாலும் இந்த நாடு உனக்கு பழகும் வரைக்கும் கொஞ்சம் பொறுத்து போம்மா. இப்போதைக்கு இதை விட்டா உனக்கும் வேற வழியில்ல. நீ ஏதும் கதைக்கப் போய், வீட்டை விட்டு வெளியால போ எண்டுட்டா உன்ர நிலை என்னவாகும்?" சூழ்நிலை உணர்ந்தவனாய் எடுத்து கூறினான்.


"அந்த கட்டத்தை எப்பயோ தாண்டிட்டன் அண்ணா. கொஞ்ச நேரத்துக்கு முன்னம் தான் வீட்ட வந்தார். அப்ப நான் வெளியால போயிருந்தன். வந்து பாத்தா வீட்ட நிக்கிறார். அதோட எங்க போற, எங்க வார எண்டு கேள்வி வேற. நான் தான் மனிஷி இல்லை எண்டு ஆகிட்டுதே. இவர் ஆர் கேக்கிறது எண்டு ஆதங்கத்தில நானும் நாலு வார்த்தை விட்டுட்டன். அதில கோபம் வந்து, உனக்கும் எனக்கும் எத்த சம்மந்தம் இல்லை... இனிமேல் உன்னை நீயே பார் எண்டுட்டு போட்டார்" என்றாள் இதோ உடைத்து விடுகிறேன் என்ற அழுகையினை அடக்கிய குரலில்.


"ஐயோ... ஏம்மா அவசர பட்ட... இப்ப பார் யாருக்கு நட்டம். நல்ல காலம்.. வீட்டை விட்டு போ எண்டு சொல்லேல. சொல்லிருந்தா நீ நடுத்தெருவு தான். சரி இனி நடந்ததை நினைச்சு கவலை படுறதால எந்த பிரியோசனமும் இல்லை. ஆனா இனி என்ன செய்யப்போற எண்டு தான் கவலையா இருக்கு" என்றான் அவன் பங்கிற்கு வருத்தம் காட்டி.



"அதுதான் அண்ணா தெரியேல... அதுக்காகஎந்த முயற்சியும் எடுக்காம இருக்கேலாது தானேண்ணா... அண்ணா எனக்கு நல்லா சமைக்க தெரியும். இங்க யார் வீட்டிலயாவது சமைக்கிற வேலை எடுக்கலமாண்ணா...?" என்றாள் விபரம் தெரியாது.


"என்ன சமையல் வேலையோ...!" என்றவன், "ஏன்ம்மா நீ வேற விபரம் தெரியாம... இங்க அந்த மாதிரி வேலை எல்லாம் இல்லை. அவனவன் இருக்கிற பிஸியில வீட்டில சமைக்காம கடைகள்ள சாப்பிடுறான் நீ சமையல் வேலை எண்டுற... அதோட இங்க அதுக்கு அனுமதி இல்லை. வேற வேல தான் பாக்கோணும். அதுக்கும் உன்ர விசா என்ன மாதிரியான விசா எண்டு தெரியோணுமே... சரி அதுக்கு பிறகு வீட்டில கதைச்சியா? உன்னை அனுப்பின விசா என்ன மாதிரியான விசாவாம்" என்றான்.


"எங்கண்ணா கதைக்க...? நான் தான் சொல்லிட்டனே. போன் இல்லை எண்டு" என்றாள் கவலையாய்.


"சரி அப்ப உன்ர வீட்டு நம்பர தா! நான் விசாரிக்கிறன்" என்றான் சற்றும் யோசிக்காது.


"நீங்களோ..." என அவள் அதிர்வு காட்ட.


"ஓமாம் நான் தான். ஏன் நான் கதைக்கிறதால ஏதும் பிரச்சனை வந்திடுமோ என்ன?" அவள் அதிர்ச்சி அவனுக்கும் தயக்கத்தை கொடுத்தது.


"பிரச்சனை எண்டு வராது. ஆனா...."


"என்ன ஆனா எதா இருந்தாலும் சொல்லும்மா."


"அது... நான்... எனக்கு இங்க என்ன நடக்குது எண்டு வீட்டில ஆருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா வேதனைப்படுவினம். என்ர கஷ்டம் என்னோட போகட்டுமேன்." என்றாள் வீட்டினருக்கு தன் நிலை தெரியக்கூடாது என்பதில் உறுதியாய்.


"தொடங்கிட்டீங்களா...? பொம்பிளையல் இப்பிடி இருக்கிறதால தான், ஆம்பிளையள் இந்த மாதிரி தைரியமா பிழை செய்யினம். எடுத்துக்காட்டா இருக்க வேண்டிய இடத்தில இருக்கிற நீங்கள் அமைதியா இருக்கிறதால தான், இன்னொரு பொண்ணும் இவனை மாதிரி ஆம்பிளக்கிட்ட ஏமாந்து வாழ்க்கைய துலைச்சிட்டு நிக்கிற... சரி நீ தெரியக்கூடாது எண்டு நினைச்சிட்ட... நானும் எந்த விபரமும் சொல்லோல. உன்ர போன் ஏதோ பிரச்சினை பண்ணுது. அதால உன்னால கதைக்க ஏலாம இருக்கு எண்டுர்றன். போன் சரியானதும் கதைப்பாள் எண்டு விபரத்தை கேக்குறன். சரியா..." என்ற,


"ம்ம்... தாங்க்ஸ் அண்ணா..." என இலக்கத்தை தந்து போனை வைத்ததும் தான் நிம்மதியானது அவளுக்கு.



கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பது போல், அவளுக்கு தெரிந்த எல்லாம் நாங்கு சுவர் வீடும், அந்தப் பார்க்கும் தான். மனம் முழுவதும் கனத்தோடு அந்த பார்க்கின் கதிரையில் அமர்ந்திருந்தவள் உடலோ சோர்ந்து போய் இருந்தது.


சோர்வுறாது என்ன செய்யும். அவள் தான் சரியாக சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகின்றதே. ஆம் இரண்டு நாட்கள் தான். உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என அவள் கணவனான சியாம் கூறிச்சென்று இன்றாேடு ஒரு கிழமை கடந்து விட்டிருந்தது. எதார்த்தமாம வந்தானோ, இல்லை நடப்பை கணித்து வந்தானோ...! சமையலுக்காக அவன் வாங்கிக் கொடுத்த பாெருட்கள் முடிந்து போகும் நிலையில் இருக்கையில் தான் அவன் அங்கு வந்தான். அன்று மட்டும் அவள் அவனுடன் இயல்பாக கதைத்திருந்தால் இன்று பட்டினி என்னும் நிலை வந்திருக்காது. ஆனால் நடந்ததை மாற்ற யாரால் முடியும்?


இதோ வீட்டாரோடு கதைத்து வருகிறேன் என போனவனும் அதே போக்கு தான். மருந்துக்கு கூட ஒரு அழைப்பு இல்லை. இவள் அழைக்கலாம் தான், ஆனால் அவன் சூழ்நிலை என்னவென்று தெரியாத போது, தான் அழைக்கப் போய், அதனால் ஏதன் பிரச்சினை வந்து விட்டால்!


வேண்டாம் என்ற மனதின் சொல்லை அவளால் தட்ட முடியவில்லை. மூன்று வேளையும் வெறும் தேயிலை தண்ணியை குடித்தே இந்த இரண்டு நாட்களை ஓட்டி வந்தவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது. மனதின் ஓலத்தை மறைக்க உதட்டை பிதுக்கு அழுகையினை அடக்கியவள் தோளினை யாரோ தொடுவது போல் ஓர் உணர்வு.


திரும்பிப் பார்த்தாள். மூன்றாம்பிறை வளைவளவு விரிந்த புன்னகையின் மத்தியில்.


"மூசூ மெதம்" என்றவாறு அருகில் வந்து அமர்ந்தான் கென்றி. இன்றைக்கும் அவன் கூறும் வார்த்தையின் பொருள் தெரியாது தான். அதை கேட்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை. வேண்டா வெறுப்பாக கடமையே என ஓர் புன்னகையினை பதிலுக்கு கொடுத்து விட்டு மீண்டும் வெறுமையில் ஆழ்ந்தவள் செயலே அவளது குழப்பத்தை வெளிப்படுத்த,


"ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்கள் மிருதுளா?" என்றான் அவளை இன்னமும் ஆழமாக பார்த்தவாறு. எதை சொல்வாள் அவள். வருபவன் போவபன் எல்லோருக்கும் தான் ஏமாற்றப்பட்டதை சொல்லலாமா? இல்லை சொல்வதால் தான் பெருமையா? கூறுலதால் நாளை அவளுக்கே அது பாதகமாக திரும்பி விட்டால்?


"ஒண்டுமில்ல... வீட்டில தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு. கதைக்கக் கூட ஆக்கள் இல்லாம இருக்கிறத விட காெடுமை இல்லை. இப்பிடியே தனியா இருந்தா விசர் புடிச்சிடும். அதான்." மழுப்பலாய் பதில் கூறினாள்.


"அதான் பார்க் வாரீங்களே.. பேந்து என்ன?"


"பார்க்கிலயா எந்த நேரம் இருக்கிறன். பின்நேரம் தானே வாரன். அதுவும் வந்து சும்மா வேடிக்கை பாத்திட்டு போறன். குளிர் தொடங்கினா இங்கயும் வரேலாது." என்றாள் உதட்டை கோணலாக்கி.


"அதுவும் சரி தான். அப்பிடி எண்டா வேலை ஒண்டு பாக்க வேண்டியது தானே!" அவனுக்கு தான் அவள் நிலை தெரியாதே. எதார்த்தமாக கேட்டுவிட்டு பதிலுக்காய் அவளையே பார்த்திருக்க, அதுவரை தூரத்தே கவனத்தை வைத்தவாறு பதில் தந்தவள், அவன் புறம் திரும்பி,


"அங்க தான் பிரச்சினையே! என்னை என்ர மனுசன் பொன்சர்ல எடுக்கேல. இவற்ர அப்பப்பாவும், அப்பம்மாவும் தான், லேட் ஆகுது எண்டு ஆராரோ காரை புடிச்சு விசா வாங்கி அனுப்பி வைச்சவ. அவ என்ன விசாவில அனுப்பினவ எண்டு எனக்கு தெரியாது. வேலை எண்டு வெளிக்கிட்டா, அதால பிரச்சினை வருமாமே! பிறகு புடிச்சு நாட்டுக்கு அனுப்பிடுவினமாம். அதோட எனக்கு பாசையும் தெரியாது." என்றாள் பாவமாக.


"பாசை ஒரு பிரச்சனையே இல்ல மிருதுளா. அது போகப் போக பழகிடமாம். ஆனா விசா தான்...." இழுத்தவன்,


"விசா கேக்காம வேலை தார இடமா பாத்து போகலாமே!"


"விசா கேக்காத இடம் ஒண்டு இருக்கோ என்ன? இங்க எல்லாம் பதிஞ்சு தான் செய்யோணும் எண்டு கேள்வி பட்டன்." என்றாள் அவன் பேச்சு புரியாது.


"அது உண்மை தான். ஆனா இஞ்ச வேலை. செய்யிற எல்லாருமே அவ அவன்ர விசாவில தான் வேல செய்யானமே என்ன? வேற ஒருதற்ர விசா வாங்கி கள்ளமா தானே வேல செய்யினம். உங்களுக்கு யாரையும் இஞ்ச தெரிஞ்சா, அவட்ட வேல கேட்டு பாருங்க."


"க்கூம்... எனக்கு யாரை தெரியும்?" என்றால் சலித்து.


"என்னை மட்டும் தான் தெரியும் எண்டா, என்னட்ட வேலை கேக்கலாமே" என்றான் சிரித்தவாறு.


"உங்களிட்டயோ...?" என்றாள் அவனிடம் என்ன வேலை இருக்கப் போகிறது என்ற சநதேகத்தில புருவம் உயர்த்தி.


"ஏன் என்னட்ட எண்டா கேக்க மாட்டீங்களோ…?" அதே புன்னகை மாறாது அவன் வினவ,


"இல்ல... நீங்கள்... வேல... எப்பிடி...?" எதையுமே முழுதாக கேட்க முடியாது திணறிப்போனாள் அவன் கேள்வியில்.



"அய்யோ... இது என்ன பாசை? நானே ஏதோ தெரிஞ்ச தமிழை வைச்சு சமாளிக்கிறன். இது என்ன? எனக்கு ஒண்டுமே விளங்கேல. இருந்தாலும் உங்கட குழப்பம் என்னண்டு விளங்குது. இவனே சும்மா சுத்துறான், இவனிட்ட என்ன வேலை இருக்க போகுது எண்டு தானே!


எனக்கு சொந்தமா ஒரு கடை இருக்கும்மா... அதுவும் பாரிஸ்ல... தமிழ் ஏரியா தான். முண்டுபேரை வைச்சு வேலை வாங்குறன். தமிழ் ஏரியா எண்டதால உனக்கும் பெரிய பிரச்சினை இருக்காது. என்னட்ட வேலை செய்யிற மூண்டு பேர்ல ஒருத்தர் தமிழ். உனக்கு ஏதாவது தெரியாட்டிக்கு அவரிட்ட கேக்கலாம். தாராளமா சொல்லியும் தருவார். எனக்கும் வேலைக்கு அவசரமா ஒரு ஆள் தேவைப்படுது. நானே ஆள் எடுக்கோணும் எண்டு இருந்தன். நல்ல வேளை, நீயே வந்து கேட்டது நல்லதா போச்சு. தெரிஞ்சவையா இருந்தா நல்லது தானே!" அவன் கூறிக்கொண்டே போக, அவளோ அவன் சொல்லும் வேலைக்கு போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் ஆழ்ந்தே போனாள்.


"மிருதுளா... மிருதுளா...." அவளை தட்டியவன், "என்ன யோசனை...? இவனை நம்பலாமோ வேண்டாமோ எண்டா?"


"ச்சீ ச்சீ... அதெல்லாம் இல்லை" அவசரமாய் மறுத்தாள்.


"அப்ப வேற என்ன?"


"எனக்குத் தான் எந்த இடமும் தெரியாதே! அப்பிடி இருக்கேக்க... நான் எப்பிடி நீங்கள் சொன்ன இடத்துக்கு வாரது. அங்க வர, எதில வாரது எண்டு கூட தெரியாதே!" என்றாள் பாவமாய். அவள் முகத்தை பார்த்ததும் பக்கென சிரித்தவன்,


"இவ்வளவு தானே! உனக்கு ஓகே எண்டா சொல்லு. நாளைக்கே நான் உன்னை கூட்டிக்கொண்டு போய் எல்லாம் தெளிவா விளங்கப்படுத்துறன். பிறகு நீயே தனியா வந்து போகலாம்" என்றான்.


இதன் பிறகு வேண்டாம் என்பாளா?

"ம்ம்... நான் எத்தின மணிக்கு வெளிக்கிட்டு நிக்கோணும்." அவசரமாக அவளுக்கு வேலை வேண்டும். அப்போது தான் அவள் நிலமை கொஞ்சமாவது சரியாகும். அதனால் அடுத்த சிந்தனைக்கு இடம் இல்லாது சரி என்று விட்டாள்.



தொடரும்…