• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பகுதி – 10


சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது.



பாவிப்பெண்!! இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டாளே!!! அவர் மனது மகளை சாடியது.


அவருக்கு தெரியுமே கணவன் மகள் மேல் கொண்ட பாசம் ..அதுவும் மூத்த பெண்ணாய் தன் அன்னையே வந்ததாக அன்றோ அவளைக் கொண்டாடினார்.


ஹ்ம்ம்..தந்தையின் மனமறிந்தும் அவர் அந்த குடும்பத்தின் மீது கொண்ட வெறுப்பு தெரிந்தும் சுபாங்கி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தாள்.



ஹ்ம்ம்.. அவள் இன்றி வீடே வெறிச்சோடியதைப் போல் அல்லவா இருக்கிறது. என்னதான் வீட்டில் இயல்பாக வளைய வருவதைப் போல் காட்டிக் கொண்டாலும் சின்னவர்கள் இருவரின் முகத்திலும் அவளின் பிரிவின் தவிப்பு அப்பட்டமாய் தெரிகிறதே!!! எப்படி அவர்களைக் கூட பிரிந்து செல்ல முடிந்தது அவளால்...அந்தளவு தூரம் அவனின் காதல் அவளுக்கு முக்கியமாய்ப் போய் விட்டதா...




ஹ்ம்ம்..அவள் தன் காதல் தான் முக்கியம் என்று போயிருக்கலாம்..ஆனால் அவர் பெற்றவள் ஆயிற்றே!!! எப்படி மகள் எப்படியோ போகட்டும் என்று விட முடியும்...கணவன் என்னதான் மகள் மீது கோபமாய் இருந்தாலும் அவள் பிரிவு அவரையும் வாட்டுவது மனைவிக்கு புரிந்தது.....ஹ்ம்ம்...சின்னதுகள் இரண்டும் கூட வீட்டில் இல்லை...சுபி குறித்து கணவனிடம் பேசுவதற்கு இதுதான் சரியான நேரம்....




ஆழ்ந்து ஒரு முறை மூச்சை எடுத்து தன்னை பேசுவதற்கு தயார்ப் படுத்தியவர் கணவன் அருகில் சென்று அமர்ந்தார்.மனைவி அருகில் அமர்ந்தது கூட தெரியாமல் சிந்தனையில் இருந்தவரின் தோளை மெல்லத் தொட்டு “என்னங்க சுபி ஞாபகமா..??” என மென் குரலில் வினவினார்.




அதிர்ந்தாற் போல உடல் தூக்கிப் போட திரும்பிய தர்மராஜின் பார்வை மனைவியை கோபத்துடன் முறைக்க அந்த ஓடுகாலியைப் பற்றி நான் ஏண்டி நினைக்கப் போகிறேன் .?? என்று சீறினார்.




அத்தனை வருடங்களை அவருடன் ஒன்றாக கழித்த மனைவிக்கு தெரியாதா கணவனின் மனது ..எதுவுமே கூறாமல் அமைதியாக சிவகாமி கணவனையே சிலகணங்கள் இமைக்காது பார்த்திருக்க தர்மராஜின் பார்வை மெல்லத் தாழ்ந்தது. கூடவே “அவ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடி..’ என்றார் கலங்கிய குரலில்...




கணவனின் வலியை தானும் உணர்பவர் போல சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் பின் மெல்ல அத்தனை நாட்களாய் தன் மனதை உறுத்திக்கொண்டிருந்த விடயத்தைக் கேட்டார்.



என்னங்க!! நான் ஒன்று சொல்கிறேன் என்று கோபிக்காதீங்க..


என்ன..சொல்லு..




ஏங்க நீங்க ஒன்றும் படிக்காத தற்குறி இல்லை. நன்றாக படித்து சென்னையில் கௌரவமான வேலை பார்க்கும் ஒருத்தர். பல்வேறு பட்ட உலக அனுபவம் உங்களுக்கு நிறையவே உண்டு. அப்படி இருக்கும் போது காதல் திருமணம் புரிவது ஒன்றும் இந்தக் காலத்தில் அவ்வளவு தவறான விடயம் இல்லை என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.




முன்பு உங்கள் தங்கை காதல் மணம் புரிந்தார்கள் என்று அடியோடு அவர்களை வெறுத்து ஒதுக்கினீர்கள் சரி அன்றைய காலம் அது பெரும் பிழையாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இப்போது அப்படி இல்லையேங்க?? இந்த காலத்தில் காதல் திருமணம் எல்லாம் வெகு சாதாரணமான ஒரு விடயம் ஆகிவிட்டதே!!!




அதோடு நம்ம பொண்ணு ஒன்றும் ஊர் பேர் தெரியாத ஒருத்தனை திருமணம் செய்யவில்லையே!! மாறாக சொந்த அத்தை பையனைத் தானே!!



நிறுத்து சிவகாமி!! தர்மராஜின் அதட்டலில் அதிர்ந்து விழித்தார் மனைவி.


எ..என்னங்க..??


நீ நினைப்பது போல அன்றும் சரி இன்றும் சரி நான் காதலுக்கு எதிரி இல்லை. நான் என் தங்கையை வெறுத்து ஒதுக்கியது அவள் காதல் திருமணம் செய்ததற்காக இல்லடி.. அவள் செய்தது துரோகம்..நம்பிக்கைத் துரோகம்...அதோடு அவளின் தெரிவும் மிகத் தவறான ஒன்று...ஹ்ம்ம்..அதே தவறைத் தானே இன்று உன் பெண்ணும் செய்திருக்கிறாள்....



அவன்..அந்த தனஞ்சயன் ஒன்றும் நல்லவன் இல்லை..அப்படியே அவன் அப்பனின் மறுபதிப்பு அவன்..பொறுக்கி சுத்தப் பொறுக்கி...உன் பெண் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறாள்.



என்னங்க சொல்றீங்க...??


ஹ்ம்ம்...உனக்கு இதுவரை எதையுமே யாரைப் பற்றியுமே தெளிவாக சொன்னதில்லை அல்லவா..?? ஹ்ம்ம்...எங்கே அந்தப் பேச்சினை எடுக்கவே தான் எனக்கு பிடிப்பதில்லையே!!! ..இப்போது சொல்கிறேன் கேள்.


தர்மராஜின் மனம் வேகமான பஸ் வண்டிப் பயணத்தின் மரங்களாய் பின்னே நகர அவர் கண் முன்பே பூம்பொழில் விரிந்தது.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பூம்பொழில்

அது தான் தர்மராஜின் பூர்வீகம். தாய் , தங்கை , அவர் என மிகவும் சிறிய குடும்பம் தான் என்றாலும் மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. அவர்கள் ஒன்றும் பெரும் பணக்காரர்கள் இல்லை என்றாலும் யாரிடமும் கைநீட்டிப் பிழைக்கவும் இல்லை. அந்த கிராமத்துப் பெண்களின் தலையெழுத்துப்படியே பிரபாவதியின் படிப்பு அவர் பருவம் அடைந்ததுடன் நிறைவுபெற தர்மா சென்னைக்கு சென்று கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.


தர்மராஜ் போலவே தனஞ்சயனின் தந்தை விஜயனின் பூர்வீகமும் அதுவே!! விஜயன் பெரும் பணக்காரர். பண்ணையின் ஒரே வாரிசு. அந்த கிராமத்தில் பாதி அவர்கள் சொத்தே!! விஜயனின் சிறு வயதிலேயே தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராய் அவரை விட்டு போய்விட அவர் இளமைப் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் போதே கேட்பார் அற்ற சுதந்திரத்துடனும் கைநிறையப் பணத்துடனும் தான் அடியெடுத்து வைத்தார்.



அளவுக்கு மீறி எது கிடைத்தாலும் அது அழிவிற்கே என்பது அவர் விடயத்தில் சரியாய் பொருந்திப் போயிற்று. கை நிறைந்த பணமும் கேட்பாரற்ற சுதந்திரமும் அவரை தவறான பாதையில் வழிநடத்தியது. தான் பணக்காரன் தனக்கெதற்கு கல்வி என்ற திமிரில் படிப்பையும் நிறுத்தினார். காலப் போக்கில் முழுத் தறுதலையாகவே மாறிப் போனார்.



தர்மாவும் விஜயனும் கிட்டத்தட்ட சம வயது இளைஞர்கள்.ஆகவே அவர்களுக்குள் இயல்பான ஓர் அறிமுகம் இருந்தது. ஆனால் விஜயன் தர்மாவை எப்போதும் ஒரு பொருட்டாய் கருதியதே கிடையாது. அவரின் நட்பு வட்டம் வேறாகவே இருந்தது.



ஆனால் காலப் போக்கில் அந்த ஊர் மக்கள் மத்தியில் தர்மாவிற்கு கிடைத்த மரியாதை விஜயனின் கவனத்தைக் கவர்ந்தது.ஓர் இடத்தில் விஜயனும் தர்மாவும் சந்தித்துக் கொண்டால் விஜயனுக்கு அவன் குடும்பத்திற்குரிய மரியாதை கிடைத்ததே தவிர அவனுக்கு என்று எந்த தனிப்பட்ட மரியாதையும் கிடைக்கவில்லை. ஆனால் தர்மாவின் பண்பான நடத்தையாலும் நம்ம ஊரில இருந்து பட்டணத்துக்கு போய் படிக்கிற புள்ள என்ற பேராலும் தர்மாவிற்கு ஊரார் மத்தியில் பெரும் மதிப்பும் பாசமும் கிடைத்தது.



அதை உணர்ந்து கொண்ட விஜயனின் மனதில் பொறாமைத் தீ பற்றிக் கொண்டது.இவன் நமக்கு நிகராக மரியாதை பெறுவதா என்று உள்ளூரக் கொதித்த விஜயனுக்கு எப்படியாவது தர்மாவை தனக்கு கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.



தன் மனதின் காழ்ப்புணர்ச்சியை புன்னகையால் மறைத்தவாறே தர்மாவிடம் தன் பண்ணை கணக்கு வழக்குகளைப் பார்க்க நம்பகமான ஒரு ஆள் தேவை. நீ அந்த உதவியை செய்து தர முடியுமா..?? என மிகவும் நயமாக வேண்டிக் கொண்டார்.



தர்மாவிற்கும் அதில் ஒன்றும் குறை இருப்பதாக தோன்றவில்லை.எனவே அதற்கு சம்மதித்தார். ஆனால் காலப் போக்கில் தன்னை ஏதோ அவரிடம் வேலை செய்யும் அடிமட்டக் கூலியாள் போல விஜயன் நடத்த முயல்வதைக் கண்டுகொண்ட தர்மாவிற்கு அப்போதுதான் விஜயனின் மனதின் காழ்ப்புணர்ச்சி புரிந்தது. அதன் பின் ஒரு கணமும் தாமதியாது அவரிடம் வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்.


ஏன் ? என்று கேட்ட விஜயனிடம் “பிடிக்கவில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். கோபத்தில் முகம் பயங்கரமாய் மாற என்னிடம் கைநீட்டி கூலி பெறுவது உனக்கு கௌரவக் குறைச்சலாய் இருக்குதா..? படித்த திமிரா..?? என்று ஆத்திரத்துடன் கேட்ட விஜயனிடம் அவர் முகத்தை நேரே பார்த்து “ நிச்சயமாய் “ என்றதுடன் விலகிச் சென்றார் தர்மா.



அவரின் விலகல் விஜயனை மிகவும் பாதித்தது. தர்மாவை தன்னிடம் வேலைக்கு அமர்த்தியதில் சற்று மட்டுப்பட்டிருந்த அவனின் ஆங்காரம் மீண்டும் தலை தூக்கியது. மீண்டும் எப்படி தர்மாவை தனக்கு கீழே கொண்டு வருவது என்று தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்த விஜயனின் காதில் தர்மாவின் தங்கை பிரபாவதியின் திருமணப் பேச்சு விழுந்தது.



ஊர் கோவில் திருவிழாவில் அவர் சில தடவை பிரபாவதியைக் கண்டிருக்கிறார். ஆளும் அழகியே!!! தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கும் இடத்தில் அண்ணன் எப்போதும் அடங்கியே போக வேண்டும். தர்மா தங்கை மீது அதிகப் பாசம் கொண்டவனும் கூட.



விஜயனின் இதழ்கள் ஓர் குரூரப் புன்னகையைச் சிந்தின.



தர்மாவால் சற்று நேரம் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.என்ன திமிர் இருந்தால் அவன் அவரிடமே அப்படிக் கேட்பான். விஜயன் எவ்வளவு பொறுக்கி என்று அவருக்கு தெரியும்.அப்படிபட்டவன் அவரிடமே வந்து அவர் தங்கையைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேக்கிறான் என்றால் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.?? அவன் பணம் கொடுத்த திமிரா..??



விஜயனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியவர் “இந்த எண்ணத்தை இத்தோடு மற. இனி ஒருதரம் இப்படிக் கேட்டாய் என்றால் கொன்று புதைத்து விடுவேன்.” என எச்சரித்துவிட்டு சென்றார்.


தர்மா அப்படிப் பொங்கக் கூடும் என விஜயன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே சம்மதம் சொல்லாவிடினும் தன் பணம் அவரை சற்றாவது யோசிக்க வைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த வகையிலும் அவனுக்கு ஏமாற்றமே!! முகம் பயங்கரமாய் மாற தர்மாவின் முதுகையே குரோதத்துடன் வெறித்தபடி நின்றான் விஜயன்.




அதன் பின் தர்மா தங்கையை அழைத்துப் பேசினார். நடந்த அனைத்தையும் அவளிடம் கூறி அவள் கருத்தையும் கேட்டார்.



சொன்னாடி அண்ணா என் மனதில் யாருமே இல்லை.எனக்கு உன் கெளரவம் தான் முக்கியம். நீ எனக்கு எது செய்தாலும் சம்மதம் தான் அண்ணா என்று...அதன் பின் தான் அவள் திருமண ஏற்பாடுகளை விரைந்து கவனித்தேன். திருமணத்திற்கு முதல்நாள் வரை மனதில் எந்த கள்ளமும் இல்லாதவள் போன்று இயல்பான மகிழ்ச்சியுடன் வளைய வந்தாள் டி.



ஆ..ஆனால் மறுநாள் காலையில் அவன் கூட மாலையும் கழுத்துமாய் வந்து நின்று என்னை மதித்த ஊர் ஜனங்கள் மத்தியில் என்னை தலை குனியச் செய்தாள். அப்போது அவன் அந்த பொறுக்கி விஜயன் என்னைப் பார்த்து நக்கலாய் சிரித்தான்டி ஒரு சிரிப்பு. காலம் உள்ள வரைக்கும் மறக்காதுடி...



அந்த அவமானம் தாங்காமல் அம்மா அன்றே உயிரை விட்டார்கள்.அவர்களுக்கு இறுதிக் காரியம் செய்த கையோடு அந்த ஊரை விட்டு புறப்பட்டேன். என் பிள்ளைகளை அந்தக் குடும்பத்தின் நிழல் கூடப் படாமல் வளர்த்தேன்.கொஞ்சம் கொஞ்சமாய் என் வலிகளை மறந்து கொண்டு வந்த போது மீண்டும் என் பெண் வடிவில் அதே அடி!!! அதே ரணம்!!!



என்னால் எப்படி அவளை மன்னிக்க முடியும் சிவா. படித்து படித்து சொன்னேனேடி அவளுக்கு..அந்த குடும்பத்தைப் பற்றி அவனைப் பற்றி...உனக்கு தெரியுமா சிவகாமி அவன் அந்த தனஞ்சயன் சுத்தப் பொறுக்கிடி..அவனுக்கு வேறொரு தொடர்பு கூட உண்டு..நானே ஒரு தடவை அந்த பொண்ணுடன் அவனைக் கண்டிருக்கிறேன் தெரியுமா??



ஐயோ!! என்னங்க சொல்றீங்க..?? இதை முன்பே நீங்கள் வீட்டில் சொல்லலையேங்க?? அவன் குடிப்பான்....மரியாதை இல்லாமல் நடந்துகொள்வான். படிக்கவில்லை... என்றெல்லாம் சொன்ன நீங்க இதை ஏங்க சொல்லாமல் விட்டீங்க..?? அப்படி முன்பே சொல்லி இருந்தால் நம்ம பெண் கொஞ்சமாவது யோசிச்சிருப்பாளேங்க.


ஹ்ம்ம்....நம் குழந்தைகளைப் பொறுத்தவரை குடிக்கிறான் என்பதே போதும் என்று நினைத்தேண்டி. அதுவே அவர்களைப் பொறுத்தவரை பெரிய தப்பு தானே!! அதோடு குணம் கெட்டவன் என்றும் சொன்னேண்டி..அதை மீறி எதையும் அவர்களிடம் தெளிவாக சொல்ல எனக்கு நாக்கு வரவில்லை..நாம் நம் குழந்தைகளை அப்படி வளர்க்கவில்லையே... நான் சொன்னதிலேயே சுபி அவனைப் பற்றி புரிந்துகொண்டிருப்பாள் என்று நினைத்தேன்.



ஆனால் இப்படி தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுவாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையே!!! தர்மராஜின் உடைந்த குரலில்


சிவகாமி உறைந்து போய் அமர்ந்திருந்தார்.அந்த பெற்ற வயிறு மகளின் வாழ்க்கையை எண்ணிக் கலங்கியது.
 
Top