பரிதி - 05
“அம்மு சீக்கிரம் ரெடியாகி வா.. நாம வெளியே போயிட்டு அப்படியே பார்டிக்கு போயிடலாம். உன் ஃப்ரண்ட்ஸை சீக்கிரம் வர சொல்லு..” என அவசரப்படுத்தியவனிடம்,
“ம்ம் சரி மாமா.. நாம எங்க போறோம்.” என்றாள் விழிகளை விரித்து.
“கோவிலுக்கு. மார்னிங்க் போக முடியல இல்ல. அதான் இப்போ போயிட்டு அப்படியே பார்டிக்கு போயிடலாம்..” என்றான் அந்த விரிந்த விழிகளை விழுங்கியபடி.
“மாமா கோவிலுக்கு போடுற ட்ரெஸ் எப்படி பார்டிக்கு போட முடியும்..” என சினுங்கியவளைப் பார்த்து
“அதெல்லாம் போடலாம். நீ சாரி வியர் பண்ணு. அதுதான் உனக்கு அம்சமா இருக்கும்..” என்றான் ரசனையாக.
“என்ன உங்க பார்வையே சரியில்லயே. இதுக்கு முன்னாடி எதாச்சும் நடந்ததா..?” என சந்தேகமாக கேட்க,
“ச்சே ச்சே.. உனக்குத் தெரியாம அப்படி என்னம்மா நடந்துருக்கும் சொல்லு.” என்றவனின் விழிகளில் தெரிந்த சில்மிசத்தில் அவன் ஏதோ மறைக்கிறான் என்பது புரிய,
“மாமா என்னமோ நடந்திருக்கு. அது என்னனு சொல்லுங்க ப்ளீஸ்..” என சினுங்க,
“நீ இப்படியெல்லாம் சினுங்காதடி. நானே என்னை எவ்வளவு கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேனு தெரியுமா..? டெம்ப்ட் பண்ணிட்டு நீ ஜாலியா இருப்ப, நான்தான் அல்லல் படனும். இந்த வேலையே ஆகாது. ஓடிப்போ..” என்றவன், தலையை கோதியபடி வேறுபக்கம் திரும்பி மூச்சை இழுத்துவிட,
நித்திலனின் இந்த பேச்சு அவளுக்கே புதிது. அது பிடித்தும் இருக்க, அதை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற முடிவுடன் “என்னன்னு சொல்லுங்க மாமா. ப்ளீஸ். நீங்க வெட்கமெல்லாம் படுறீங்க. அய்யோ. அப்போ ஏதோ இருக்கு.” என அவன் முகத்தைப் பிடித்து திருப்பி தன்னை பார்க்க வைத்தவள், ‘என்ன நடந்தது’ எனும் விதமாக புருவத்தை உயர்த்த,
“ம்ச் அம்மு.. அது இன்னொரு நாள் சொல்றேன். இப்போ டைம் இல்ல கிளம்பு..” என அவள் விழிகளைப் பார்க்காமல் கூற
“மாமா என்னை பாருங்க. என்னை பார்த்து சொல்லுங்க..” என அவனை அதட்ட,
“ம்ச் என்னடி வேணும் உனக்கு..” என எரிச்சலானவனை மையலாகப் பார்த்து, “உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா மாமா?” என்றாள். பெண்ணின் குரல் குழைந்து வந்தது.
அந்தக் குரல் அவனையும் ஏதோ செய்ய, “ம்ம் அது எப்படி சொல்ல. நீதான் நான். நான்தான் நீ. எனக்கு இந்த காதல் வசனம் எல்லாம் பேச தெரியாதுடி. ஆனா நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்ல.” என அவன் சொல்லி முடிக்கும் முன்னே இறுக்கமாக, மிக மிக இறுக்கமாக அனைத்திருந்தாள் தசிரா.
இப்படியொரு அனைப்பை அவளிடமிருந்து எதிர்பாராதவன், முதலில் தயங்கிப் பின் தனதாக்கிக்கொண்டான் அவள் அனைப்பையும், அவளின் இதழையும்.
சில நிமிடங்களுக்கு தொடர்ந்த நீண்ட நெடிய இதழ் முத்தம்.!
இருவருக்கும் அழுக்காத முத்தம். அவன் முடிக்க அவள் தொடர, அவள் முடிக்க அவன் தொடர என நீண்டு கொண்டே செல்ல, தசிராவின் போன் அழைப்பு இருவரையும் முடிக்க வைத்தது.
“ம்ச் யாருடி..” என அவளை விட முடியாத ஏக்கத்தில் எரிச்சலால கேட்க,
“ம்ம் உங்க மாமாதான். என்னனு தெரில..” என அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தபடியே, “ப்பா..” என்றாள் போனில்.
“அம்முமா… என்ன பண்றீங்க..” எனவும்,
“நத்திங்க் ப்பா.. மாமா கோவிலுக்கு போகலாம்ன்னு கிளம்ப சொன்னாங்க. ரெடியாகிட்டு இருக்கேன். என்னாச்சுப்பா..” என யோசனையாக கேட்டவளிடம்,
“நத்திங்க் அம்மு. மார்னிங்க் பேசும் போது மூடவுட்ல இருந்தியா.. அதுதான் இப்போ உன்னை கூலாக்கலாம்னு கால் பண்ணேண். பட் அதுக்கு அவசியமே இல்ல போல. உன்னோட வாய்ஸே உன்னோட ஹேப்பியை சொல்லுது.” என்றதும் பெண்ணுக்கு சட்டென்று ஒருமாதிரியாகி விட்டது.
“ப்பா…” என்றவளின் குரலும் உள்ளே போய்விட்டது.
“ஹேய் அம்மு.. என்னடா அதுக்குள்ள மறுபடியும் மூடவுட்டா.? நான் உன் மூடை ஸ்பாயில் பண்னிட்டேனா” என்ற விக்ரமிடம்,
“நோ ப்பா.. நான் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன். ஐ ஃபீல் லோன்லி… நீங்க எப்போ வருவீங்க..” என குரலும் உடைய ஆரம்பிக்க,
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நித்திலனுக்கு கோபமும் எரிச்சலும் போட்டி போட்டுக்கொண்டு வர, சட்டென்று அவளிடமிருந்து போனை வாங்கி “மாமா உங்க பொண்ணு இப்போதான் கொஞ்சமா நார்மல் மோடுக்கு வந்தா, அதுக்குள்ள போன் செஞ்சி உங்க பாசப்பயிறை வளர்க்கலன்னா என்ன? உங்க பொண்ணு ஒரு நாள் மூடவுட்டா இருந்தா என்ன தேஞ்சி போயிடுவாளா.? நான் இங்கதானே இருக்கேன். என் மேல நம்பிக்கை இல்லாமலா என்னை உங்க பொண்ணுக்கிட்ட அனுப்புனீங்க. இப்போ மறுபடியும் முகத்தை தூக்கி வச்சிட்டா.. நான் எப்போ மலை இறக்க?” எனக் கத்த,
இங்கு தசிரா அவனை அதிர்ந்து விழித்துப் பார்க்க, அங்கோ ஸ்பீக்கரில் போட்டு குடும்பமே உட்கார்ந்திருக்கும் போல, மொத்தக் குடும்பமும் நித்திலனின் பேச்சில் கத்த ஆரம்பித்தது.
“டேய் ஏன்டா இப்படி கத்துற..” என ரித்தி சத்தம் போட
“இப்படித்தான் புள்ளையை நீ பார்த்துக்குறியா..” என ரேனு அதட்ட,
“வாட் இஸ் திஸ் நித்தி, இதுதான் நீ அம்முவை சமாதானம் செய்ற லட்சனமா..” என ரவி எரிச்சலாக சொல்ல,
“இப்படித்தான் அக்காகிட்டயும் இவர் பேசுவாரா.? இதுக்கு இவர் போகாமலே இருந்திருக்கலாம்..” என தன்வந்த் தகப்பனிடம் எகிற,
“ம்ச் சும்மா இரு தனு. மாமா சிச்சுவேஷன் தெரியாம என்ன பேச்சு இது..” என வழக்கம் போல தயா தமையனை அதட்ட,
“கால் பண்ண முன்னாடியே சொன்னேன்ல வேண்டாம்னு. இப்போ எல்லாரும் கண்ணாவைத்தான் திட்டுறாங்க. உங்க பொண்ணு எப்போத்தான் வளருவா.?” என நிசப்தி விக்ரமிடம் கத்த,
“ம்ச் கொஞ்சம் சும்மா இருங்க..” என எல்லோரையும் அதட்டிய விக்ரம், மனைவியையும் மகனையும் முறைத்துக்கொண்டே “அம்மு லைன்ல இருக்கியா.?” என மகளிடம் கேட்க,
“எஸ் ப்பா..” என்றாள் திணறிப்போய்.
“நீ அங்க போகும்போதே இதெல்லாம் எக்ஸ்பெக்ட் செஞ்சிருக்கனும் இல்ல. நீ கூப்பிட்ட உடனே வர இடத்துலயா நாங்க இருக்கோம். அப்படி இருந்தும் கண்ணாவை அனுப்பி வச்சிருக்கோம் இல்ல. மறுபடியும் என்ன அழுகை ஆர்ப்பாட்டம் எல்லாம். இவ்ளோ தூரத்துல இருக்குற நாங்க பயந்துக்க மாட்டோமா? வருத்தப்பட மாட்டோமா.? உனக்கு இதெல்லாம் புரியுதா.? யூ நாட் அ சைல்ட். யூ நோ.?” என அழுத்தம் திருத்தமாக பேச,
விக்ரமிடம் மகளிடம் இப்படி பேசியதே இல்லை. மகளிடம் அவன் காட்டும் முகமே வேறு, மகன்களிடம் கூட காட்டுக்கத்தல் கத்துவான்.
மனைவியிடம் சொல்லவே வேண்டாம். எந்த நேரமும் வாக்குவாதம் தான் இருவருக்கும். வீட்டில் இருப்பவர்களே இது வீடா இல்லை கோர்ட்டா என முழிக்கும் அளவிற்கு இருக்கும் இருவரின் சண்டையும் சத்தமும்.
ஆனால் மகளிடம் மட்டும் மென்மைதான். அவளிடம் சத்தமாக கூட விக்ரம் பேசி யாரும் கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. இது தசிராவிற்கும் தெரியும். அது அவளுக்கு கர்வமாகவும் இருக்கும்.
அப்படியான தன் தந்தை அதட்டவும் கோபமெல்லாம் வரவில்லை. தன் தவறை உணர்ந்து கொண்டாள். அதனால் “ஐம் சாரிப்பா..” என்ற வார்த்தை உடனே வந்தது அழுகையுடன்.
“அழக்கூடாது. எப்போ இருந்து என் பொண்ணு இப்படி வீக்கா ஃபீல் செஞ்சி எல்லாத்துக்கும் அழ ஆரம்பிச்சா.? ம்ம் எப்போ இருந்து.?” என சிறு சிரிப்புடன் ஆதுரமாக, மென்மையாக கேட்க,
“நான் ஒன்னும் அழல, அப்புறம் வீக்கும் இல்ல..” என பட்டென்று ரோசமாக கூறியவள், மீண்டும் “ஸாரிப்பா” என்ன முயன்றும் கேவலாக வந்தது அழுகை.
“அம்முமா.. இப்போ எதுக்கு அழுகை. ம்ம்ம் வேலையெல்லாம் விட்டுட்டு உன்னைப் பார்க்க வந்துருக்கான் கண்ணா. நீ அழுதா அவனுக்கு வருத்தமா இருக்குமில்ல. இப்போ ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வந்து ரெஸ்ட் எடுங்க. நான் மார்னிங்க் பேசறேன். அழக்கூடாது. ஓக்கே..” என மேலும் பலவற்றை பேசி மகளை சமாதானம் செய்ய அங்கு நிசப்திக்கு எரிந்தது என்றால், இங்கு நித்திலனுக்கு காய்ந்தது.
விட்டால் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்தவன், “போதும் மாமா டைமாச்சு.. இனி இவளை நார்மாலாக்க நான் இன்னும் எவ்ளோ குரளி வித்தை காட்டனுமோ தெரியல. நீங்க பேசிப்பேசியே டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. பை.” என விக்ரம் பேசும் முன்னே போனை வைத்துவிட்டு தசிராவை முறைக்க, அதில் திருதிருத்தாள் பெண்.
அதில் என்ன கண்டானோ, “ரெடியாகுற ஐடியா இல்லையா.. ஆல்ரெடி லேட்..” என பல்லைக் கடிக்க,
“ம்ம் போறேன்..” என வாய்க்குள் முணுமுணுத்தபடியே அறைக்குள் நகர, “ஷப்பா.. நித்தி உனக்கு இந்த பெட்டர்மேக்ஸ் லைட்டேதான் வேணுமா..” என புலம்பிக்கொண்டே கிளம்ப ஆயத்தமானான்.
இங்கு “நிசாம்மா உங்கிட்ட இந்த விக்ரம் இப்படியெல்லாம் பாசமா பேசிருக்கானா என்ன.? நான் பார்த்ததே இல்ல..” என ரேணுகா மகனைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி கேட்க,
“ம்க்கும்.. அப்படியே பேசிட்டாலும். ஏன் ரேணும்மா நீங்க வேற கடுப்பை கிளப்புறீங்க. சரி என்னை விடுங்க. உங்ககிட்ட பேசிருக்காரா.?” என விக்ரமை முறைத்தபடி மாமியாரிடம் பதிலுக்கு கேட்க,
“ம்ம்க்கும்..” என ரேணுகா ஆரம்பிக்கும் முன்னமே “போதும் ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க. நீங்களும் என் பொண்ணும் ஒன்னா? அவ என்னோட தேவதை, நீங்க அப்படியான்னு நீங்களே யோசிங்க. ரெண்டு பேரும் என் தலையில உக்காந்து என்னை டார்ச்சர் செய்ற வேதாளங்க.” என இருவரையும் பார்த்து கடுப்படிக்க,
“என்ன என்ன சொன்னீங்க..” என நிசப்தி சண்டைக்கு கிளம்ப,
“அதென்னமோ உண்மைதாண்டா.. நீ விக்ரம் நாங்க வேதாளங்கதான். இல்லைன்னா உன்னையெல்லாம் மேய்க்க முடியுமா சொல்லு..” என அப்போதும் ரேணுகா மகனை கலாய்க்க, ரவியும் ரித்தியும் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட,
“ப்பா.. இன்னைக்கும் ரெண்டு பேரும் உங்களை டேமேஜ் பண்ணி கோட்டாவை முடிச்சிட்டாங்க.” என்ற தன்வந்திடம், “போடா” என பல்லைக் கடிக்க,
வழக்கம்போல இவர்களைப் பார்த்து சிறு புன்னகையுடன் நின்றிருந்த தயாவிடம், “தயா கம்..” என அழைத்துக்கொண்டு தன்வந்த் கிளம்பிவிட,
“ஹேய் இப்போ எதுக்கு நீ இன்னும் முறைச்சிட்டு இருக்க. ஆக்சுவலா நான் தான் உங்களை முறைக்கனும்..” என மனைவியிடம் சண்டைக்கு வந்தவனைப் பார்த்து கிண்டலாக சிரிக்க, அந்த சிரிப்பே உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லாமல் சொல்ல,
அதில் மனதுக்குள் அரண்டவன் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கெத்தாக “ம்ச் சரி விடுங்க. உங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிடுறேன் இனி இப்படி செய்யக்கூடாது..” என அங்கிருந்து நழுவப் பார்க்க,
“ஓ.. ஓஹோ..” என நிசப்தி இழுக்க, “ம்மா” என்றான் விக்ரம் பரிதாபமாக. அதைப் பார்த்து இருவரும் சிரிக்க, விக்ரமும் சிரித்துவிட்டான்.
“எப்படித்தான் ரெண்டு பேரும் இத்தனை வருஷமா ஒற்றுமையா சண்டையே போடாம இருக்கீங்களோ, நானும் உங்களை எப்படியெல்லாமோ கோர்த்து விடுறேன். கடைசில அது எனக்கே ரிவெஞ்சாகிடுது..” என சோகமாக சொல்ல, நிசப்தி ஆதுரமாக புன்னகைக்க,
ரேணுகாவோ “உன்னை நம்பி சண்டை போட நாங்க என்ன உன்னை மாதிரி முட்டாளா.? என் மருமக எவ்வளவு புத்திசாலி தெரியுமா.? உன்னைக் கல்யாணம் செஞ்சி அவ வாழ்க்கை வீணா போச்சுன்னு நான் ஃபீல் பண்ணாத நாளே இல்ல தெரியுமா.? என்ன சொல்லு விக்கி, உனக்கு என் மருமக அதிகம்தான்..” என வழக்கமான டைலாக்கை பேசி அவனுக்கு பிபியை ஏத்த, விக்ரமின் முகம் கடுகடுவென மாற, நிசப்தியின் முகம் அடக்க முடியாத சிரிப்பில் விரிந்தது.
கணவனின் முகத்தை கவனித்த நிசப்தி, இன்று இது போதும் என நினைத்து “ரேணும்மா பாவம் விட்டுடலாம், நீங்க நிலா பத்தி சொல்லுங்க..” என பேச்சை மாற்ற,
நிலா என்றதும் விக்ரமும் விளையாட்டுத்தனத்தை விட்டு, “நிலாக்கு என்னம்மா, அவளுக்கு என்னாச்சுமா?” என்றான் வேகமாக.
“டேய் நீ அப்பப்ப வக்கீலுன்னு காட்டனுமா, பிரச்சினைன்னு யார் சொன்னா.? நீயா எல்லாமே யோசிப்பியா” என மகனை கலாய்த்து, நித்திலன் பேசியதையும், ரவியுடன் பேசியதையும் விக்ரமிடம் கூற, அவன் முகம் யோசனையில் சுருங்கியது.
“நவீன் பெஸ்ட் சாய்ஸ் தான் ரேணும்மா. நாமளும் பார்த்துருக்கோம் இல்ல. அதோட முகுந்தன் அண்ணாவை நம்பி நாம கொடுக்கலாம்..” என்றாள் நிசப்தி.
“ம்மா கனடாவுக்கு எப்படிம்மா அனுப்ப முடியும். ரவி ஒத்துக்கனுமே. அம்மு இங்கேயே இருப்பா, ஆனா நிலா அவ்வளவு லாங்க்ன்னா யோசிக்கனும் ம்மா..” என்ற விக்ரமை முறைத்தாள் நிசப்தி.
“முதல் முதலா பேச ஆரம்பிக்கும் போது ஏன் நெகடிவா யோசிக்குறீங்க. அவங்க சைட் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்ச பிறகு இதை யோசிக்கலாம். ஆரம்பிக்கும் போதே தடங்கலா பேச வேண்டாம்..” என நிசப்தி அழுத்தமாக சொல்ல, ரேணுகாவிற்கும் அதுவே சரியெனப்பட, விக்ரமும் குழப்பத்துடன் தான் சரியென்றான்.
“நிசா சொல்றதும் சரிதான் விக்கி, நான் சுமதி அண்ணிக்கிட்ட பேசி முகுந்தன் வீட்டுல பேச சொல்றேன். அவங்க பக்கம் என்ன சொல்றாங்களோ, அதைப் பொருத்து நிலாவுக்கு சொல்லிக்கலாம். இப்போ நிலாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்..” என்று முடித்துவிட, மற்றவர்களும் சரியென்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.