• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
994
498
93
Tirupur
பார்வை - 23

காலங்கள் அதன் போக்கில் நகர, சத்யாவிற்கு ஒரு நள்ளிரவில் வலி எடுத்தது. பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, நந்தகுமாருக்கு அழைத்து கூறினர்.

முதலில் அவர்கள் வர தாமதமானதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சத்யா வீட்டில்..

ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட வரவில்லை என்றதும் தான் யோசனை ஆனார்கள்.

வராதராஜனுக்கு அவர்கள் வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி என்ற மனோபாவம் தான்.

ஆனால் காமாட்சியால் அப்படி இருக்க முடியாதே.. வந்து போகிறவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அதனால் சின்ன மகனிடம், “தம்பி மாப்பிள்ளை வீட்டுக்கு போய், அங்க என்ன நிலவரம் என்று பார்த்துட்டு வா.. குழந்தையை கூட இன்னும் பாக்க வரல. அங்க எதுவும் பிரச்சனையோ என்னமோ.” என்றதும் தாயை முறைத்தான் அருள்.

“தம்பி அங்க என்ன பிரச்சனைன்னு தெரியாம நம்மலா ஒரு முடிவு வந்துடக்கூடாது.” என்று சமாதானம் செய்து மகனை, நந்தகுமாரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சத்யாவிற்கு கணவன் வந்து பார்க்கவில்லை என்ற கவலையே இல்லை. ஆனால் இப்போது குழந்தை மீது ஒரு பிடிப்பு வந்திருந்தது அவளுக்கு.

இது அவனுடைய குழந்தை மட்டுமல்ல என்னுடைய குழந்தையும்தான். அவனுடைய சில நிமிட வேலைக்கு தந்தை பதவியை எப்படி கொடுப்பது. 10 மாதங்கள் கருவறையில் தாங்கி குழந்தையை மெய் வருத்தி பெற்றிருக்கிறாள். அப்படி பார்த்தால் இவன் எனக்கு மட்டும்தான் குழந்தை. அவன் வந்தாலும், போனாலும் கவலையே இல்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

இங்கே நந்தகுமார் வீட்டிற்கு வந்த அருளை, ‘வா’ என்று அழைக்க கூட ஆளில்லை.

‘ஏன் வந்தாய்’ என்று அவர்கள் கேட்கவில்லை என்றாலும் ‘எதற்கு வந்தேன்’ என்று பதில் சொல்ல வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.

அதனால் பல்லை கடித்துக் கொண்டு “பாப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. நேத்தே கூப்பிட்டு சொன்னேன் மாமா வரவே இல்லை.” என்றான் எரிச்சலாக.

“எங்கள சந்தி சிரிக்க வச்சுட்டு போனவளுக்கு புள்ள பிறந்துருச்சா? அத வேற வந்து நாங்க பார்க்கணுமா.? நல்லா இருக்கே உங்க கதை.” என நந்தகுமாரின் மூத்த அக்கா சித்ரா பேச,

“இங்க இருந்து போன இத்தனை மாசத்துல ஒரு நாளாவது எங்க அம்மாவையோ எங்களையோ விசாரிச்சு இருப்பாளா உன் தங்கச்சி. எங்களை விடு கட்டின புருஷனை பற்றி யோசிச்சுருப்பாளா? எங்கள பத்தி யோசிக்காதவளை நாங்க எதுக்கு வந்து பாக்கணும்..?” என ரஞ்சனியும் திமிராக பேச, அவர்கள் இருவரையும் அடித்து நொறுக்கும் அளவிற்கு கோபம் வந்தது அருளுக்கு.

அவர்கள் இருவரையும் பேசவிட்டு அந்த வீட்டு ஆண்கள் நால்வரும், மரம் போல் அமர்ந்திருக்க நேராய் நந்தகுமாரிடம் சென்றான்..

“என்னாச்சு? எதுக்கு நீங்க பாப்பாவ பாக்க வரல? குழந்தையை பார்க்க வரல? அவ உங்க பொண்டாட்டி, அங்க இருக்கறது உங்க குழந்தை.” எனக் குரலில் கடுமையை தேக்கி கேட்க , அதில் நந்தகுமாருக்கு எரிச்சல் வந்தது.

ஆனால் அவனிடம் எதிர்த்து பேசி ரணகளம் ஆகப்பிடிக்கவில்லை. அதனால் “எங்க அம்மாவுக்கு ரொம்ப சீரியஸ் ஆயிடுச்சு, கம்பம் ஹாஸ்பிடல்ல வெச்சிருக்கோம். இன்னைக்கு போய் அம்மாவைப் பார்த்துட்டு அங்க வர்ற மாதிரிதான் இருந்தோம்.” என அவனும் வேண்டா வெறுப்பாய் பேச,

“ஓ” என்றவன் அதற்குப் பிறகு அங்கு நிற்கவில்லை.

எங்கே அங்கு நின்றால் கைகலப்பு ஆகிவிடுமோ என்று பயம். இவர்களையெல்லாம் சும்மா விட்டு வருகிறோமே என்று ஒரு ஆதங்கம். இனி தங்கையின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து அருளை மேலும் மேலும் முரடனாக்கியது.

அவர்கள் வீட்டிலிருந்து வந்தவன், நேராக மருத்துவமனைக்கு செல்லாமல், எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவுதான் வந்தான்.

நந்தகுமாரின் வீட்டிற்கு சென்று வந்த அருளின் முகம் மிகவும் இறுகிப் போயிருந்தது.

கணவருக்கு தெரியாமல் மகனை அழைத்து என்னவென்று விசாரித்த காமாட்சிக்கு, ரஞ்சனியின் பேச்சு ஆத்திரத்தை கிளப்பியது.

இனி எப்படி மகளை அங்க அனுப்புவது என்ற பயம், அந்தத் தாயின் நிம்மதியை வேறு இழக்கச் செய்திருந்தது.

இது எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கும் மகனுக்குமான ஒரு உலகத்தில் ஐக்கியமாகியிருந்தாள் சத்யா.

அடுத்த மூன்றாம் நாள் சத்யாவும் குழந்தையும் வீடு வந்து சேர்ந்தனர். இப்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் சத்யாவை அங்கு அனுப்ப விருப்பமே இல்லை. அதனால் அந்த கவலையை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டனர்.

குழந்தையின் வரவு அவர்களை சற்று இலகுவாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

சத்யாவிடமும் மாறுதல்கள் தென்பட்டது. தன் மகள் இப்படி இருந்தாலே போதும் என்ற எண்ணம் பெற்றோருக்கு வர, நந்தகுமாரை பற்றியோ அவர்கள் வீட்டைப் பற்றியோ யாரும் எதுவும் கேட்கவும் இல்லை பேசவும் இல்லை.

நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட, நடப்பதை நல்லதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு பெரிய உண்மையை உணர்ந்திருந்தனர்.

அதனால் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை நந்தகுமார் இல்லாமலே கொண்டாடினர்.

தாய் வீட்டுக்கு வந்த இந்த ஆறு மாதத்தில் சத்யாவின் வாழ்க்கை அந்த ஊரில் பலரால் பலவிதமாக, அலசி ஆராயப்பட்டதால் இப்போது அவர்களுமே, அமைதியாக வந்து குழந்தையை ஆசீர்வதித்து சென்றிருந்தனர்.

இந்த நிகழ்விற்குப் பிறகு சத்யாவிடம் ஒரு பெரும் மாற்றம். இந்த ஊரையும், அவர்கள் பேசுவதையும் நினைத்துதான் அவள் பயந்து கொண்டு இருந்தாள். ஆனால் அவர்களே இதை பெரிதாக எடுத்து அலசி ஆராயாமல் சென்று விட நிம்மதியானாள். இனி அங்கு போக வேண்டாம் என்ற முடிவும் எடுத்திருந்தாள். ஆனால் விதி அப்படி விடுமா என்ன?

நான் இன்னும் உன் வாழ்க்கையில் விளையாடி முடிக்க வேண்டிய காலகட்டங்கள் நிறைய இருக்கிறது என்று விதி அவளைப் பார்த்து கைகொட்டி சிரித்தது.

குழந்தைக்கு பரணிதரன் என்று பெயர் சூட்டி முழுதாக மூன்று நாட்கள் கூட ஆகவில்லை.

அதற்குள் நந்தகுமாரின் அம்மா இறந்து விட்டதாக தகவல் வர, நல்லதிற்கு போகவில்லை என்றாலும் கெட்டதிற்கு போக வேண்டும் என்ற சொல்லுக்கு ஏற்ப, சத்யாவையும் பரணியை அழைத்துக் கொண்டு சென்றனர் காமாட்சி தம்பதியினர்.

பரணியின் பெயர் சூட்டு விழாவிற்கு அடுத்த நாள்தான் இரண்டு மகன்களும் வட இந்தியா பக்கம் லாரிக்கு சென்ருந்தனர்.

இனி அவர்கள் வர ஒரு மாதமோ இரண்டு மாதமோ ஆகலாம்.

அதனால் அவர்கள் இல்லாமலே நந்தகுமாரின் வீட்டிற்கு சென்றனர்.

இவர்களைப் பார்த்ததுமே நந்தகுமாரின் பங்காளி வீட்டு முறையில் உள்ள ஒரு பெண்மணி “வா சத்தியா! எங்க நீ வரமாட்டியோந்னு நெனச்சு பயந்துட்டேன். என்ன இருந்தாலும் உன் மகன்தானே இந்த வீட்டு வாரிசு. அவன்தான் எல்லாம் செய்யணும்..” எனவும் சத்யாவிற்கு அதுவே அதிர்ச்சியாக இருந்தது.

ஒருமாத குழந்தை என்ன செய்யும். அதே அதிர்ச்சியோடு தன் தாயைப் பார்க்க, அவருக்குமே அது அதிர்ச்சிதான். ஆனால் கூட்டத்தில் என்ன பேசிவிட முடியும். மகளையும் தன்னையும் சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

இவர்களின் வரவுக்காக காத்திருந்ததைப் போல, “சரி அதான் வரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்களே, இனி ஆக வேண்டியத பாருங்க, ரொம்ப நாளா படுக்கையில் கிடந்த உடம்பு, இன்னும் வச்சுக்கிட்டு அழகு பார்க்க வேண்டாம்..” எனக் கூட்டத்தில் ஒருவர் சத்தமிட,

அதன்பின் வேலைகள் ஜருராக நடந்தது.

அப்போதுதான் சத்யாவின் வீட்டினருக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவர்களின் வரவுக்காகத்தான் காத்திருந்தார்கள் என்று. ஆனால் அந்த வீட்டில் இருந்து யாரும் அழைத்து சொல்லவில்லை. செய்தி கேள்விப்பட்டு அவர்களாக வரவேண்டும் என்று நினைத்திருக்கின்றனர்.

அவர்களின் எண்ணத்தை நினைக்கும் போது வரதராஜுக்கு அசிங்கமாக இருந்தது. என்ன ஜென்மங்கள் இவர்களெல்லாம் என்று ஆத்திரமாக வந்தது. வழக்கம்போல பெண்ணைப் பெற்ற தந்தையாக வாயை மூடிக்கொண்டார்.

கூட்டத்தில் இதையெல்லாம் வெளிப்படுத்த முடியாதே, அதனால் அமைதியாக நடக்க வேண்டியதை பார்த்தார்.

அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து, காடு போனவர்கள் வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட, நந்தகுமார் குழந்தையை பார்க்கவே இல்லை.

அந்தப் பங்காளி உறவில் உள்ள பெண்மணியின் வீட்டில் தான் சத்யாவும் அவர்களின் குடும்பமும் இருந்தது.

சத்யாவும் குளித்து குழந்தையையும் குளிக்க வைத்து, அடுத்து கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஊர் தலைவர்கள் சூழ உள்ளே வந்தான் நந்தகுமார்.

அவனுக்கு பின்னால் அவனின் அக்காமார்களும், அவர்களின் கணவன்மார்களும்.

இதுவரை அமைதியாக இருந்த சத்யாவின் முகத்தில் பயமும் பதட்டமும் உண்டாக ஆரம்பித்தது. அதை உணர்ந்த காமாட்சி, மகளையும் பேரனையும் உள்ளறைக்கு அழைத்து செல்லும்படி அந்த பெண்மணியிடம் கூறினார்.

இப்போது காமாட்சியும் வரதராஜன் மட்டும் அந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டதாக ஒரு உணர்வு, இவர்களை மீறி மகளை எப்படி அழைத்துச் செல்வது என்ற பயம். கூப்பிடும் தூரத்தில் மகன்களும் இல்லை என்ற வேதனை. உடன் வந்திருந்த பங்காளிகளையும் சற்று முன் முன்புதான் அனுப்பி வைத்திருந்தார்.

இவர்கள் என்ன பிரச்சனை செய்வார்களோ என்ற யோசனையிலேயே வரதராஜன் இருக்க, “இங்க பாருங்கய்யா நடந்தது நடந்து போச்சு, புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் சண்டை சச்சரவு வரத்தான் செய்யும், அதுக்காக உறவை வெட்டிவிட்டு இருக்க முடியாதில்லையா.? தப்பு பூராவும் பையன் மேலேயே இருக்கட்டும். ஆனா இப்ப அவன் திருந்திட்டேன், பொண்டாட்டி புள்ளை கூட சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறேன், என் கூட அவளை வாழ வையுங்கன்னு கேட்டு நிக்கிறான். பெரியவங்க நாமதான் புள்ளைக்கு நல்லது கெட்டதை சொல்லி புரிய வைக்கணும். கையில ஒரு குழந்தையும் ஆயிடுச்சு. இனி அத்துக்கிட்டு போறது, விவாகரத்து வாங்குவதெல்லாம் சரியா இருக்குமா.? இனி உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு உத்தரவாதம் கொடுக்கிறான். அவனோட அக்காளுங்க ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு அதிகமா வரப் போறது இல்ல, என் தம்பி வாழ்க்கைதான் முக்கியம்ன்னு சொல்றாங்க. நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு உங்க பொண்ண இங்க விட்டுட்டு போங்க. இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் இனி இருக்காது. பையன் நல்லா பாத்துக்குவான்..” என்று ஒருவர் பேச, வரதராஜுக்கு தலையில் இடி விழுந்த கதைதான்.

உள்ளே இருந்த சத்யாவிற்கு, மீண்டும் ஓர் இருளடைந்த உலகுக்குள் சென்றுவிட்ட உணர்வு.

“சரிங்க.. நீங்க சொல்ற மாதிரியே அவர் திருந்திட்டார்ன்னே வச்சுக்குவோம்.. குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆச்சு. இப்போ வரைக்கும் வந்து அந்த குழந்தையை எட்டிக்கூட பார்க்கல. கொஞ்சம் கூட குழந்தை மேல அன்போ பாசமோ இல்லை. இவரை எப்படி நம்புறது..” என காமாட்சி மிகவும் தயக்கமாக, ஒரு தாய்க்குண்டான பயத்துடனே கேட்க, அங்கிருந்த யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அந்த இடமே அமைதியாக, சத்யாவிற்குள் கொஞ்சம் திடம் வர ஆரம்பித்தது.

எல்லோரும் அமைதியாக இருக்க, இனி தான் பேசாமல் எதுவும் நடக்காது என்று புரிய, “நான் இங்க இல்லவே இல்லீங்க அத்த. பாதி நாள் ட்ரெயினிங்க் போய்டுறேன். இங்க இருக்குற நாள் அம்மாக்கூட ஆஸ்பத்திரில தங்குற மாதிரி ஆகிடுச்சு. தம்பி பேர் வைக்கும் போது நீங்க கூப்பிடலன்னாலும் நான் வரனும்னுதான் இருந்தேன். ஆனா அதுக்கு முதல் சென்னைக்கு ஒரு முக்கியமான வேலையா அனுப்பி வச்சிட்டாங்க..” என்றவன்,

“அப்புறம்.. என் அம்மாவை இப்படி வச்சிட்டு சத்யாவை இங்க கூட்டிட்டு வர வேண்டாம்னுதான் நான் வரல அத்தை. குழந்த உண்டாகியிருக்கவ அம்மா வீட்டுல இருந்தா தான் நல்லா இருப்பா. இங்க வந்தா வேலை செஞ்சிட்டே இருக்கனும், என் அக்காளுங்களும் வேலை சொல்லுவாளுங்க. இதெல்லாம் எதுக்கு? சத்யாவுக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கூப்பிட்டு வரலங்க மாமா..” என இருவரிடமும் மாறி மாறி பேச, பின்னிருந்த ஐவரும் நந்தகுமாரின் இந்த நடிப்பில் வாய் பிளந்துவிட்டனர்.

நந்தகுமாரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், எங்கோ இடித்தது. காமாட்சி மகளைப் பார்க்க உள்ளே செல்ல, வரதராஜோ “மகனுங்ககிட்ட கேட்காம எந்த முடிவும் எடுக்க முடியாதுங்கைய்யா..?” என வருத்தமாக ஊர் பெரியவர்களிடம் சொல்ல,

“புரியுது புரியுதுங்க.. வீட்டுல எல்லாருக்கிட்டயும் கலந்து பேசி முடிவெடுங்க.. ஆனா நல்ல முடிவா எடுங்க..” என அவர்கள் கிளம்ப, அவர்கள் பின்னே நந்தகுமாரின் குடும்பமும் கிளம்பியது அவனைத் தவிர.

அவன் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்து அந்த வீட்டின் பெண்மணி “என்ன நந்து.?” என கேட்க,

“அது சித்தி.. தம்பியை பார்க்கனும். எடுத்துட்டு வந்து தர்ரீங்களா.?” என மிகவும் தயக்கமாக கேட்க, அவர் வரதராஜனை பார்க்க, அதற்குள் காமாட்சி பரணியைக் கொண்டுவந்து நந்தகுமாரின் கையில் கொடுத்திருந்தார்.

இந்த ஒரு செயலால் தன் மகளின் வாழ்க்கை மீண்டும் ஒரு அகல பாதாளத்திற்கு செல்வதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.





 
Last edited:

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
59
10
8
Ullagaram
பார்த்த பார்வையில்..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 23)


இப்ப இந்த குழந்தையை காட்டினதால என்ன பிரச்சினை வரப்போகுதோ தெரியலையே ?


பொண்ணுன்னாவே... ஆம்பிளைங்க எத்தனை தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சு ஏத்துக்கணுமா என்ன..?


முதல்ல சத்யாவோட அம்மா அப்பாவே சரியில்லைன்னு தோணுது. இவங்களாலத்தான் அவளுக்கு திரும்ப, திரும்ப பிரச்சினை வருது. இவளும் ஒழுங்கா உண்மையை சொல்ல மாட்டேங்குறா. என் பொண்ணோ போங்க...
சலிப்பே வந்துடுச்சு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
994
498
93
Tirupur
பார்த்த பார்வையில்..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 23)


இப்ப இந்த குழந்தையை காட்டினதால என்ன பிரச்சினை வரப்போகுதோ தெரியலையே ?


பொண்ணுன்னாவே... ஆம்பிளைங்க எத்தனை தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சு ஏத்துக்கணுமா என்ன..?


முதல்ல சத்யாவோட அம்மா அப்பாவே சரியில்லைன்னு தோணுது. இவங்களாலத்தான் அவளுக்கு திரும்ப, திரும்ப பிரச்சினை வருது. இவளும் ஒழுங்கா உண்மையை சொல்ல மாட்டேங்குறா. என் பொண்ணோ போங்க...
சலிப்பே வந்துடுச்சு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
மிக்க நன்றி சிஸ்