• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 15

"ம்மா! சும்மா தான சொல்றிங்க?" பயம் அப்பட்டமாய் முகத்தில் தெரிய சிவா கேட்க,

"நீ தான சிவா அன்னைக்கு என்கிட்ட சொன்ன? பொண்ணை பாரு கல்யாணத்தன்னைக்கு எனக்கு காட்டு போதும்ன்னு! இப்போ நான் சொல்றேன். நான் சொல்ற பொண்ணை தான் நீ கல்யாணம் கட்டணும். அப்போ தான் நான் இந்த வீட்டுல இருப்பேன்!" ஒரேயடியாய் சொல்லிவிட்டால்தான் உண்டு என்பதை போல கனகவள்ளி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்துவிட்டால் தான் சரி என்பதை போல சொல்லி மூச்சு வாங்க கோபமாய் நிற்க, சிவா தான் அரண்டு போனான் அதில்.

அன்னையை அவனுக்கு தெரியுமே! பேச்சுக்கு சொல்வதாக இருந்தாலும் இந்த விஷயத்தில் விளையாடுபவர் இல்லையே! அதுவும் அவர் முகத்தில் தெரியும் அத்தனை தீவிரமும் நான் சொல்வதை செய்வேன் என்பதாய் இருக்க, உள்ளுக்குள் ஒரு பய பந்து உருண்டு வந்தது அவனுக்கு.

"வள்ளி! என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? ஏன் உன் புள்ள மேல உனக்கு இருக்க பாசம் என் மவனுக்கு இருக்காதுன்னா நினைக்க? நீ பார்த்து கெட்டி வைக்கனும்னா உனக்கு புருசன்னு இவன் எதுக்கு இருக்கான்? அம்புட்டுக்கா அவன் ஆவாம போய்ட்டான்? ஏன் டி இப்படி அகமெடுத்து ஆடுத?" ஈஸ்வரி தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டினார்.

"இங்க பாருங்க த்த! இவன் எனக்கும் பையன் தான? அவருக்கு இருக்க உரிமை எனக்கும் இருக்குனு சொல்லுதேன்! அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லாம பொண்ணு பாக்கன்னு கூட்டிட்டு போய் ஒரு கூத்து பண்ணினாரு இல்ல? பாத்துட்டு தான இருந்திங்க?"

"அதுக்குன்னு நீ தனியா பொண்ணு பார்ப்பியோ?"

"ஏன்? பார்த்தா தான் என்னங்குறேன்? எனக்கு பிடிச்சிருக்கு. இந்த வீட்டுக்கு மருமகளா வர எல்லா தகுதியும் இருக்கு. வேற என்ன வேணும்?" இன்னமும் கணவன் மேல் இருக்கும் கோபம் குறையாமல் அனலாய் தான் வார்த்தைகள் வந்து கொண்டிருந்தது வள்ளிக்கு.

"எங்ககிட்ட எல்லாம் கேட்கனும்னு உனக்கு எண்ணம் இல்லாம போச்சா டி? இப்படி பொசுக்குன்னு அவனை எதுத்து பேசிகிட்டு கிடக்க?"

"நான் சொல்லணும்னு நினைச்சது தான் த்த. மரியாதையா பேச நினைச்சது தான். உங்க மகன் பாக்குற வேலைக்கு நான் இப்படி தான் சொல்ல முடியுது. இதுவும் ஒன்னும் அவரை எதித்து பேசணும்னு எல்லாம் பேசலை. எனக்கு பிடிக்காததை பிடிக்கலைனு சொல்ல நான் என்னைக்கும் தயங்குனது இல்ல தான?" என்று கேட்க, வாயடைத்து மகனைக் கண்டார் ஈஸ்வரி.

மனைவியை அறிந்த வாழவந்தானும் வள்ளியை பார்த்தபடி தான் நின்றிருந்தார்.

இப்படி மனைவி பேசுவது ஒன்றும் புதிதில்லை அவருக்கு. ஆனால் பெண் யார் என்று கூறாமல் இப்பொழுது வரையும் பொடி வைத்து பேசுவதாகவே தோன்றியது வாழவந்தானுக்கு.

அதுவும் தனக்கு பிடிக்காத தான் ஒத்துக் கொள்ளாத ஒன்றிற்கு மட்டுமே இத்தனை பேச்சிருக்கும் மனைவியிடம்.

அப்படி யாராய் இருக்கும் அந்த பெண் என்று சிந்திக்க ஆரம்பித்திருந்தார் தாய் தனக்காக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வாழவந்தான்.

இவர்களுக்கு இடையில் அன்னை அருகில் நின்றிருந்த சிவா ஒரு அடி விலகி இருந்தான் அனைவரையும் விட்டு.

"சிவாக்கு பிடிக்கும்னு நீ எப்படி சொல்ற?" என்ற வாழவந்தான் சிவா முகத்தைப் பார்க்க, கனகவள்ளியும் மகனைப் பார்த்தார்.

'அதானே! அப்படி தானே அன்னை கூறினார்!' என்று யோசித்து சிவா அன்னை பக்கம் திரும்ப,

"நீ ஆட்டுததுக்கு எல்லாம் அவன் ஆடுவான்னு நினைப்பு தான்" சிவாவின் பார்வை வைத்தே ஈஸ்வரி கூற,

"கொஞ்சநேரம் சும்மா தான் இருங்களேன்!" என்றது சிவாவே தான்.

"ம்மா! நிஜமாவா சொல்றிங்க? யாரை சொல்றிங்க?" என்று கேட்கும் முன்பே அவனை மின்னலாய் உண்மை வெட்டி இழுத்தது மூளைக்குள்.

அது உண்மையா என்ற அதிர்ச்சி ஒரு புறம் இருக்க, அந்த பெயரை கூறி அதை தந்தை கேட்டு என்ன செய்வாரோ எனும் பதட்டம் ஒருபுறம் அவனுக்கு.

சிவா கேட்டது தான் தாமதம் என்று வாழவந்தானும் மனைவி புறம் திரும்பி இருந்தார் அவர் பதிலை கேட்க வேண்டி.

"சொல்றேன்! நீங்க யார் என்ன சொன்னாலும் என்ன நினைச்சாலும் சரி. எனக்கு கவலை இல்ல. எனக்கு என் மகன் தான் முதல்ல. அவனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இது உங்களுக்கே தெரியும்!" கனகவள்ளி சொல்ல,

"அடிங்க! யாரு என்னனு கேட்டுட்டு இருக்கேன். வியாக்கியானம் பேசிட்டு இருக்க! யாருன்னு சொல்லுடின்னா! எனக்கு பாக்க தெரியாத மாதிரி நீ என்னத்த பாத்து வச்சுருக்கனு நாங்க பாக்குதோம்!" என்றார் கோபமாய் வாழவந்தான்.

அவருக்குமே இப்பொழுது ஒரு சிறு பொறி தட்டுவதை போலிருந்தது. தான் அறிந்த வரை அந்த வினோதனின் மனைவியோடு எப்பொழுதாவது பேசி வைத்து இருப்பதை மற்றவர் சொல்லி கேட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் அதற்கு வாழவந்தான் எதிர்ப்பு கூறியதை வள்ளி பெரிதாய் மதித்தது இல்லை. தன் விருப்பம் நீ என்ன சொல்வது என்று தான் வள்ளி நடந்து கொண்டார்.

ஒரு கட்டத்திற்கு மேல் எப்பொழுதாவது எங்காவது பேசுவது தானே? பேசிவிட்டு போகட்டும்.. வீடு வரை வராதவரை நல்லது என்று விட்டுவிட்டார்.

இப்பொழுது கனகவள்ளியின் பேச்சிற்கும் அந்த வினோதனின் வீட்டிற்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ என்பதை போன்று சிறு உறுத்தல் எழ மனைவியின் பதிலுக்காக பொறுமையின்றி நின்றார்.

இவ்வளவு சொல்லிய பின்னும் அண்ணனின் மகள் என்று சொல்லும் முன் சிறு தயக்கம் தான் கனகவள்ளிக்கு.

எத்தனை வருட பகை. ஒன்றுமில்லாததற்கு தான் என்றாலும் இத்தனை வருடங்களில் அண்ணனைப் பற்றியோ அண்ணன் வீட்டைப் பற்றியோ சுதந்திரமாய் இந்த வீட்டில் பேச முடிந்ததில்லை தானே? அதனால் வந்த தயக்கம் தான் அது.

'ம்மா பக்குன்னு இருக்கும்மா! வேண்டாம்ம்மா! ப்ளீஸ்!' எனும் வேண்டுதலோடு பதட்டமும் சேர, மனம் படபடக்க தான் நின்றிருந்தான் சிவா.

அவனுக்குமே நூற்றுக்கு பத்து சதவீதம் மட்டுமே சந்தேகம் எல்லாம். மீதி மொத்தமும் உண்மையை மனதின் அடி ஆழத்தில் இருந்து எடுத்து கூற, மூளை அலற, கனகவள்ளி வாய் திறக்கும் முன் நொடிக்கு நொடி பல்ஸ் எகிற தான் செய்தது.

"வேற யாருமில்ல. என் அண்ணே ரெண்டாவது மக தான்" சொல்லி முடித்தது தான் தாமதம். என்ன நடந்தது?

கண்ணத்தில் கை வைத்து கனகவள்ளி நிற்க, "யாத்தே!" என ஈஸ்வரி அலற, வாழவந்தானின் கைத்தடம் பதிந்தது சிவாவின் கண்ணத்தோடு காதிலும் தான்.

அவன் அத்தனை விரைவாய் அன்னைக்கும் தந்தைக்கும் இடையில் வருவான் என யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.

காற்றின் வேகம் என்று தான் சொல்ல வேண்டும் அவன் இருவருக்கும் இடையில் வந்து நின்ற வேகத்தை. வெறி கொண்டு வந்த கோபம் மகன் மேல் கைப்பட்ட பின் மொத்தமாய் அடங்கிப் போயிருந்தது வாழவந்தானிடம்.

சுத்தமாய் அவரும் எதிர்பார்க்கவில்லையே. மண்டைக்குள் ஏறிய கோபம் சூடு தணியும் முன் மொத்த கோபத்தையும் கைகள் வழி மனைவியிடம் சேர்க்க அவர் நினைத்திருக்க, மகன் மேல் விழுந்து அவன் இரு அடி தள்ளிப் போய் தள்ளாடி நின்றிருக்க, கனகவள்ளி ஆடிப் போனார் நடந்ததில்.

அன்னை சொல்லியதை எதிர்பார்த்தவன் தந்தையின் எண்ணத்தை கணித்து அவர் செயல் ஏற்படுத்தும் விபரீதத்தை நிறுத்தத் தான் இடையில் வந்தது. அவனே எதிர்பாராமல் தான் அடியை அவனும் வாங்கி இருந்தான்.

"சிவா!" என்று அலறி அவனை பிடித்துக் கொண்டு வள்ளி அலற,

"ம்மா! ஒண்ணுமில்ல!" என அப்பொழுதுமே அன்னையிடம் மகன் கூற, கண்கள் கலங்கி கண்ணம் சிவந்து மகன் நின்ற கோலம் மனதில் அனலாய் கொதிக்க வைத்தது கனகவள்ளிக்கு.

"சிவா! சாமி!" என்று ஈஸ்வரியும் வந்து அவன் கண்ணத்தில் கைவைக்க, "ஸ்ஸ்!" என்ற அவன் முனகலுக்கு துடித்துப் போனார் அன்னை.

வாழவந்தானும் பதறி தான் போயிருந்தார் நடந்தது நடந்து முடிந்து தான் உணர்ந்த பின்பு. சுத்தமாய் மனைவியின் வார்த்தையோ அதனால் தனக்கு வந்த வெறியோ மகனை அறைந்த அந்த நொடிக்கு பின் அவரிடம் இல்லவே இல்லை.

மனைவிக்கு அந்த அடி விழுந்திருந்தால் கூட அவர் ஆத்திரம் தீர்ந்திருக்குமா தெரியவில்லை. இப்பொழுது அதெல்லாம் எங்கேயோ போய் ஒளிந்திருக்க, மகனுக்கு பட்ட காயம் மனதை உடைத்திருந்தது.

******************************************

"எம்மாடி! என்ன டி சொல்ற?" மாலா பதறி தான் போனார் மகள் கூறிய செய்தியில்.

"ஏன்ம்மா பேச கூடாது? மாமா தான் கேட்டாங்க ஏன் டல்லா இருக்கன்னு!" என்று மகிமா சொல்ல,

"சும்மாவே இருக்க மாட்டியா டி? அண்ணி இன்னைக்கு தான் பேசுதேன்னு சொன்னாங்க. நீ என்ன பண்ணி வச்சிருக்க? இந்த வாய்க்கு தான் அவன் உன்னை வேண்டாம்னு சொல்ல போறான்!" மாலா புலம்பவே ஆரம்பித்துவிட்டார் மகள் கூறியதை கேட்டு.

"அண்ணி சொன்ன நேரம் ஆசைல நானும் நினைப்பை வளத்துட்டு வந்தா உன்னை யாரு சிவாகிட்ட இப்போவும் இப்படி பேச சொன்னது. அன்னைக்கே அவன் தான் சொன்னான் தான? கொஞ்சம் பொறுமையா இருந்தா அண்ணி பேசி இருப்பாங்க. அண்ணிக்காக கூட சிவாவும் யோசிச்சிருப்பான். நீ திரும்ப திரும்ப அவன்கிட்ட பேசி அவனை கோவப்படுத்திகிட்டு இருக்க!"

அலுவலகத்தில் சிவா மகிமாவிடம் பேசியதை அதற்க்கு அவள் தனக்கு தோன்றியதாய் கூறியதை எல்லாம் வந்து அன்னையிடல் மகிமா சொல்ல, கொஞ்சம் துளிர்விட தொடங்கி இருந்த ஆசையில் மகளே மண்ணைப் போட்டிருக்கிறாளே! சிவா என்ன நினைத்திருப்பான் என நினைக்க நினைக்க, சுத்தமாய் விட்டு போனது மாலாவிற்கு.

"ம்மா! மாமா கோவப்படல ம்மா. அவங்க கோவப்படுற மாதிரி நான் பேசவும் இல்ல. சாதாரணமா தான் நான் சொன்னேன். அதுவும் இப்பவும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எல்லாம் நான் சொல்லவே இல்ல!" என்று தெளிவாய் குழப்பினாள் மகிமா.

"நான் பேசினதுல தப்பில்லனு தான் சொன்னேன். எனக்கு மாமாவை தான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் கேட்கல! ஆனா அன்னைக்கு நான் பேசினதுல என்ன தப்பு? எதுக்காக சொன்னேன்னு மட்டும் தான் மாமாகிட்ட சொன்னேன்" என அப்போதும் அவள் கூற,

"இவ வேற!" என குழப்பத்தில் கூறிய மாலா மணியைப் பார்க்க, அது வினோதன் வீடு திரும்பும் நேரம்.

வேகமாய் அலைபேசியோடு தங்கள் அறைக்கு சென்றவர் கனகவள்ளி எண்ணுக்கு அழைத்துவிட்டு அவர் இணைப்பில் வர காத்திருக்க, வள்ளியின் அலைபேசி வாழவந்தான் முன் கண் சிமிட்டியது மாலா என்ற பெயர் தாங்கி.

தொடரும்..
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
அப்போ சிவாக்கு பிடிச்சிருக்கு அப்படித்தானே
ஆனா அவன் ஏன் எங்கேயும் பேசல
 
  • Wow
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அப்போ சிவாக்கு பிடிச்சிருக்கு அப்படித்தானே
ஆனா அவன் ஏன் எங்கேயும் பேசல
அவனுக்கு பிடிச்சிருக்குன்னு எங்கேயும் சொல்லலையே sis🤔🤔🤔