• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 27

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 27

மீண்டும் ரகு நந்தாவோடு உள்ளே வர, தர்ஷினியோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா. பதிலுக்கு சிறு மென்னகை தர்ஷினியிடம் இருக்க, நந்தா மனைவியிடம் வரவும் ஆராத்யா எழுந்து கொண்டாள்.

"வலி இருக்குதா தர்ஷி?" நந்தா அவளின் ட்ரிப்ஸ் இல்லாத கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க,

"உங்க வயித்தை கிழிச்சு தைக்க சொல்லிட்டு நான் கேட்குறேன் இந்த கேள்வியை!" என்றவள் பேச்சில் சிறிதாய் சிரித்தவன் அவள் தலைகோத, புன்னகையுடன் கல்பனா அருகில் வந்து நின்றாள் ஆராத்யா.

"அத்தை மாமா எங்க? நான் பார்க்கவே இல்லையே?" தர்ஷினி கணவனிடம் கேட்க,

"ரொம்ப வலில அழுதியே! உனக்கு ஸ்லீப்பிங் டோஸ் குடுத்ததனால யார் வந்ததும் தெரில.. கொஞ்ச நேரம் முன்னாடி தான் அத்தை கூட வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.. நாளைக்கு வருவாங்க.." என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

"நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? நான் வேணா உங்களுக்கு துணைக்கு இருக்கவா?" கல்பனாவிடம் ஆராத்யா கேட்க,

"ம்ம் தர்ஷி துணைக்கு நான், என் துணைக்கு நீ, அண்ணன் துணைக்கு ரகு, ரகு துணைக்கு..." கிண்டலாய் ஆரம்பித்து கல்பனா சொல்லிக் கொண்டே இருக்க,

"அண்ணி!" என்று அழைத்தவன் கல்பனா திரும்பவும்,

"டைம் ஆயிடுச்சு!" என்றான் ரகு. தனக்கு தான் என்று ஆராத்யாவிற்கு புரிய, ஆராத்யா ரகுவிற்குள் எதுவோ பிரச்சனை என்று மட்டும் கல்பனாவிற்கு தெரிய, சாதாரணப் பேச்சுக்கள் கூட இருவரிடமும் இல்லை என்பதை கவனித்தாள் கல்பனா.

ரகு கூறவும் மணியை பார்த்த ஆராத்யா "எட்டு மணி ஆகிடுச்சா? டைம் போனதே தெரில!" என்றாள் மீண்டும் உறங்கும் குழந்தையைப் பார்த்து புன்னகைத்து.

"இங்க ரெண்டு பேர் தான் ஸ்டே பண்ண சொல்லிருக்காங்க ஆரா.. நான் பார்த்துக்குறேன்.. நீ போய்ட்டு வா.. டெய்லி எல்லாம் இவ்வளவு தூரம் அலைய வேண்டாம்.. இன்னும் ரெண்டு நாள் தான்.. வீட்டுக்கு வந்ததும் தம்பியோட நீ விளையாடு.. ஓகே?" என்று சொல்ல,

"ம்ம் நீங்க என்னையும் பாப்பா ஆக்கிடுவீங்க போல! வர்றேன்.." என்று கூறியபடி கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டவள்,

"கிளம்புறேன் தர்ஷ்.. ஏஞ்சலை பார்த்துக்கோங்க.. நான் நாளைக்கு வர்றேன்!" என்று சொல்லி பேசி விடைபெற நின்றாள்.

ரகுவை தர்ஷி பார்க்கவும் எதையோ உணர்ந்த ஆராத்யா, "நான் வர்றேன் சார்.. வர்றேன் தர்ஷ்! பை!" என்று நந்தா தர்ஷினிக்கு கூறி கதவருகே நின்ற ரகுவை தாண்டி வேகமாய் வெளியே சென்றுவிட்டாள்.

'அவ்ளோ உஷாரா நீ?' என்று எழுந்த புன்னகையை தனக்குள் ரகு அடக்கிக் கொள்ள,

"வர வர ஆராக்கு என்னை நல்லா புரியுது நந்து.. லேட் ஆச்சேன்னு ரகுவை ட்ராப் பண்ண சொல்ல திரும்புனேன்.. அதுக்குள்ள எடுத்தேன் பாரு ஓட்டம்னு ஓடுறா!" இன்னும் வலி இருந்தது.. மூன்று நாட்களாவது இருக்கும் என்று மருத்துவரே சொல்லி இருக்க, அந்த வலியிலுமே தர்ஷினி பேச்சை நிறுத்தவில்லை.

"அந்த பாடு படுத்தியிருக்கீங்க ரெண்டு பேரும்!" என்று நந்தா முறைக்க,

"நான் தூங்கிட்டேன்!" என கண்களை மூடிக் கொண்டாள் தர்ஷினி.

மெதுவாய் அங்கிருந்து நகர்ந்து கதவை திறந்து ரகு வெளியே செல்ல, அதை பார்த்தாலும் புரிந்தாலும் கல்பனா நந்தா இருவருமே அமைதியாய் இருந்து கொண்டனர்.

கார் பார்க்கிங் அருகே ரகு வேக நடையில் வர, வாசலிலேயே கண்டு கொண்டான் வண்டியை உதைத்துக் கொண்டிருந்த ஆராத்யாவை.

"நேரமில்லாத நேரம் தான் நீ என் காலை வாருவியா? ப்ளீஸ் ஸ்டார்ட் ஆகிடு!" என வண்டியோடு ஆராத்யா பேசிக் கொண்டு நிற்க, அவளருகே யாரோ வந்து நிற்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தாள்.

ரகுவைப் பார்த்ததும் என்ன பேச என தெரியாமல் கைகளைப் பிசைய, வண்டியை தன் கைகளுக்குள் கொண்டு வந்த ரகு சுவிட்ச்சை தட்டி, பின் தானும் உதைத்துப் பார்த்து, பெட்ரோல் இருக்கிறதா என்பதையும் பார்த்து எதுவும் பயன்தராமல் போக,

"ஹ்ம்!" என்று பெருமூச்சோன்றை கொடுத்து இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டு நிமிர்ந்தவன் சில நொடி யோசித்துவிட்டு,

"ஆட்டோல போறியா?" என்று கேட்கவும் விழித்தவள் கண்களில் எதுவோ தாக்குவதாய் இருக்க, நந்தாவிற்கு அழைத்தான் ரகு.

அதற்குள் தான் ஒரு முறை எடுத்துப் பார்க்கலாம் என ஆராத்யா வண்டியை உதைக்க,

"அது தான் பிடிவாதம் பிடிக்குதே! ஏன் திரும்ப திரும்ப அதையே படுத்துற?" என்று ரகு அவளிடம் கேட்கும் நேரம் நந்தாவும் அழைப்பை ஏற்றிருந்தான்.

"மாமா! கார் சாவி உங்ககிட்ட தானே இருக்கு?" ரகு கேட்க, அந்த பக்கம் நந்தா எதுவோ கூறவும் முறைத்துவிட்டு பின்,

"சரி வந்து வாங்கிக்குறேன்!" என்று சொல்லி வைத்தான்.

"வண்டி இங்கேயே நிக்கட்டும்.. நான் சாவி வாங்கிட்டு வர்றேன்!" என ரகு உள்ளே செல்ல போக,

"பரவால்ல! என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்.. நான் ஆட்டோல போய்க்குறேன்!" என்றவள் திரும்பி நடக்க பார்க்க,

"வெரி குட்! ஆட்டோக்காரனே பெட்டர் இல்ல?" என்று ரகு கேட்ட நொடி, மீண்டும் வண்டி அருகே வந்து நின்றுவிட்டாள்.

கோபமாய் பல்லைக் கடித்து சாவி வாங்க ரகு உள்ளே செல்ல, அங்கே நந்தா வேறு வகுப்பெடுத்தான் ரகுவிற்கு.

"இப்படி தான் அன்னைக்கும் சத்தமா பேசி வச்சுட்டு வந்தியா? ஏன் டா உனக்கு இவ்வளவு கோபம் வருது?" நந்தா கேட்க,

"மாமா! ஸ்டார்ட் ஆகாத வண்டியை போட்டு படுத்தினா ஸ்டார்ட் ஆகிடுமா? இதுல ஆட்டோல போறியானு கேட்டதுக்கு என்னை தனியா அனுப்புறியான்ற மாதிரி லுக்கு வேற! தெரிஞ்சு பன்றாளா தெரியாம பன்றாளானு காண்டாகுது.. நான் பைக்ல வந்தேன்னு சொன்னா அதுக்கும் வேற மாதிரி தான் பார்த்து வைப்பா.. அதான் கார் கீ கேட்டேன்!" என்றவன் கைகளில் சாவியை கொடுத்த நந்தாவிற்கு ரகு புலம்பலில் சிரிப்பு வர,

"அட போங்க மாமா! உங்களால தான் இப்படி புலம்புறேன்.. கொஞ்சமாவது லவ்வு தெரியட்டும்னு சொன்னிங்க.. இப்ப பார்த்தீங்க இல்ல?" என்றவன்,

"இவளை என்ன பண்றது? அதுவும் உருப்படியா ஒரு ரீசன் கூட சொல்ல தெரியல.. எதுக்கு பயந்துக்கணும்னும் தெரியல!" என சொல்லி தலையை ஆட்ட,

"இவ்வளவு புலம்பாத டா.. சிரிப்பு வருது.. கஷ்டப்பட்டா தான் இஷ்டப்பட்ட வாழ்க்கை நிலைக்கும்.. கிளம்பு!" என்று சொல்லி அனுப்பி வைத்தான் நந்தா.

'நேரம் பார்த்து காலை வாரி விட்டுட்ட இல்ல.. இரு உனக்கு சாப்பாடு கம்மியா தர்றேன்..!' என வண்டியிடம் கூறிய ஆரா,

'ஆரா! கீப் காம்.. அவங்க என்ன பேசினாலும் பதில் பேச கூடாது.. அந்த பக்கம் திரும்பிடவே கூடாது.. உனக்கு புண்ணியமா போகும் தயவு செஞ்சு எதுவும் பேசாத!' என தனக்கு தானே பேசிக் கொண்டு நின்றாள் ஆரா.

காரை எடுத்துக் கொண்டு ரகு வரவும், ஆராத்யா பின்னால் கதவை திறக்க போக, சட்டென கார் கதவுகளை லாக் செய்தவன்,

"நான் டிரைவர் இல்ல.." என்றது புரியவே சில நேரம் எடுத்தது ஆராத்யாவிற்கு.

ஒருவழியாய் தன்னை சமாளித்துக் கொண்டு முன்னே வந்து அமரவும் ரகு கிளம்ப, பாதி தூரம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை அவர்களிடம்.

மனம் அமைதி இல்லாமல் சுற்ற, சுற்றி இருந்த அமைதியும் சேர்ந்து நிம்மதியை தான் குலைத்தது ரகுவிற்கு. பாடல் கேட்கும் மனநிலையும் இல்லை.. அமைதியாய் ரகு வர ஆராத்யாவிற்கே என்னவோ போல இருந்தது அவனின் அமைதி.

முதல் முதலில் காரில் அவன் பேசியதை நியாபத்திற்கு கொண்டு வர, அது கைகளை கீறிக் கொண்டதற்கு அவன் கூறிய அறிவுரை என்றும் நியாபகம் வந்தது.

அவன் சொற்களை அந்நேரம் மறந்திருந்தாள். நான் தேடி வர மாட்டேன் என்றதோடு நீயாக வருவாய் என்றது நியாபக அடுக்கின் கீழே சென்றிருக்க, அவனை திரும்பிப் பார்த்தாள்.

ரகு கவனித்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

"இந்த பிரச்சனை எல்லாம் இதோட விட்டுடலாம் சார்.. உங்க வீட்டுக்கு புதுசா ஒரு தேவதை வந்திருக்காங்க.. மத்ததெல்லாம் தூக்கி போடுங்க.. இனி உங்களுக்கு எல்லாம் நல்லதா அமையும் வாழ்த்துக்கள் சார் தாய்மாமாவானதுக்கு"

தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டு ரகுவிடம் மாற்றம் இருக்கும் என நினைத்து ஆராத்யா சிறிதாய் புன்னகை செய்து சொல்ல, அவள்புறம் திரும்பி பார்த்தான்.

"என்ன பிரச்சனையை விடணும்?" என்று ரகு புரியாமல் கேட்பதை போல கேட்க, விழித்தாள் ஆராத்யா.

"நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணினது பிரச்சனையா? வேணாம் ஆரா! இன்னும் பேச வைக்காத! எதை தூக்கி போட சொல்ற? நான் அன்னைக்கே சொன்னது தான்.. உனக்கு பிடிக்கலையா ஓகே ஒதுங்கிட்டேன்.. உன்கிட்ட பேசல தானே? நான் எதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணல தானே? ஓகே கடவுள் எனக்கு விதிச்சது இது தான்.. இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் எல்லாம் இல்லைனு நானே என்னை தேத்தி என் வழில போய்ட்டு இருக்கேன்.. உன்கிட்ட கேட்டேனா தாய்மாமாக்கு வாழ்த்து சொல்லுன்னு.." என்றவன் பேச்சில் வாயடைத்து போனாள் ஆராத்யா.

"என்னை சீண்டி பாக்க வேண்டாம் ஆரா! இப்பவும் உன்னை தனியா அனுப்ப மனசில்லாம தான் கூட வர்றேன்.. என்னை என்ன நினச்ச நீ? நீ இல்லைனா இன்னொருத்தினு போய்டுவேன்னு நினைச்சியா? ஹௌ டேர்?" என்றவன் சத்தமாய் பேசவில்லை, கோபம் இருப்பது போல முகம் இல்லை, ஆனால் வார்த்தைகள் மட்டும் கடுமையாய் வர, விழி விரிந்து கொண்டது ஆராத்யாவிற்கு.

காரை நிறுத்தாமல் செலுத்திக் கொண்டு இருந்தவன் பேச்சுக்கள் மட்டும் சரளமாய் வந்து விழ, பார்வைகள் கூட இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அவளிடம் வந்து சென்றிருக்கும்.

"உனக்கு நான் யாரோ தான்.. ஓகே அப்படியே இருந்துக்க.. ஆனா உன் வேஸ்ட் அட்வைஸ் எல்லாம் நான் சுமக்க முடியாது.. நான் உன்னை கம்பெல் பண்ணல.. அப்புறம் எப்படி நீ சொல்லலாம் மத்ததை தூக்கி போடுனு? திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங்.. மைண்ட் இட்!" என்றவன் பேசி முடித்து வண்டியை நிறுத்தவும் ஆராத்யா திரும்பிப் பார்க்க வீடு வந்திருந்தது.

'நாலு வார்த்தை பேசினேன்னு இவ்வளவு பேச்சா?' நினைத்து அவள் மெதுவாய் இறங்க,

"லுக் ஆரா! நீயா என்கிட்ட வர்ற வரை நான் பேச மாட்டேன்னு சொன்னேன் தான? இப்பவும் நானா பேசல.. முதல்ல கால் பண்ணி பேசினது நீ.. அதையும் நியாபகம் வச்சுக்கோ.." என்றவன்,

"நீ வாழ்க்கையோட ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு பேசிட்டு இருக்க.. உன் அம்மா அப்பா சந்தோசமா வாழ்ந்தவங்க தான? இப்ப ஹாஸ்பிடல்ல என் மாமாவை பார்த்த தான? என் அக்காவும் அவங்களுக்கு இப்ப பிறந்திருக்க குழந்தையும் தான் அவரோட உலகம்.. இதை நீ சந்தேகப்படுவியா? எப்போ மாறுவாரோனு நீ நினைப்பியா?" என்றதும் அவள் திடுக்கிட்டு பார்க்க,

"ஆனா நான் உனக்கு பெட் கட்றேன்! என் மாமா சாகுற வரை என் அக்காவை இதே மாதிரி பார்த்துப்பார்.. சந்தேகம்னா கூட இருந்து தெரிஞ்சிக்கோ!" என்றவன் பேச்சில் இவள் வேதனையாய் பார்க்க,

"இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க நான் உதாரணம் சொல்ல.. ஆனா எனக்கு அது தேவை இல்ல.. எனக்கு ஆரானா இஷ்டம்.. அது புரிஞ்சி நீயா வந்தா மட்டும் எனக்கு போதும்.. இல்லைனா..." என்று சிறு இடைவெளி விட்டவன், "போடி!" என்று கூறி இப்பொழுதும் வேகமாய் வீட்டினுள் காரை செலுத்திவிட,

இம்முறை அழுகை எல்லாம் வரவில்லை. தன்னுடைய நாலு வார்த்தை பேச்சுக்கா இத்தனை பேச்சு? அதுவும் என்னவெல்லாம் பேசிவிட்டான்? தான் அவனை தவறாக எடையிட்டு விட்டோமோ? என நினைக்க ஆரம்பித்து இறுதியில் அவள் எண்ணம் நின்றது அவனின் தர்ஷினி பற்றிய பேச்சில் தான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அன்று பேசாமல் இருந்து
ஆராவை நேசித்தவன்....
இன்று பேசி பேசியே
ஆராவை யோசிக்க வைக்கிறான்..... 🤩🤩🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அன்று பேசாமல் இருந்து
ஆராவை நேசித்தவன்....
இன்று பேசி பேசியே
ஆராவை யோசிக்க வைக்கிறான்..... 🤩🤩🤩🤩🤩
புரியனுமே!❤️