• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 31

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 31

"ஆரா! வா வா வா!" என்று கல்பனா வரவேற்க அங்கிருந்தவர்களைப் பார்த்து புன்னகை செலுத்தியபடி தர்ஷினி அருகே வந்தாள் ஆராத்யா.

"ஹே ஏஞ்சல்! உங்களுக்கு பேரு வச்சாச்சா?" என்று தர்ஷினி மடியில் இருந்த குழந்தையை ஆராத்யா கொஞ்ச,

"என் பொண்ணு உன் மேல செம்ம கோவமா இருக்கா!" என்றாள் தர்ஷினி.

"அதெல்லாம் என் பட்டுக்கு கோபம் இருக்காதே! வாங்க! வாங்க!" என்று கூறி குழந்தையை அள்ளிக் கொள்ள, மகேஸ்வரியும் சமயலறையில் இருந்து வெளிவந்து பேசிவிட்டு சென்றார் அவளிடம்.

"அடடா ஏன் அழறீங்க நந்து மா?" என்று குழந்தையிடம் ஆரா கேட்க,

"நான் தான் சொன்னேனே அவ உன் மேல கோவமா இருக்கா!" என்று சிரித்தாள் தர்ஷினி.

"தர்ஷ்! பாப்பா பசில அழுது.. என்னை ஏமாத்த பாக்குறீங்க!" என்று முறைத்த ஆரா,

"அம்மா புவ்வா தரலையா அம்மு?" என்று குழந்தையிடமும் கேட்க,

"இரண்டு கைக்குழந்தைகள் பேசிக் கொள்கிறதே! அடடே ஆச்சர்யக்குறி!" என்று கல்பனா சொல்லவும் கல்பனாவோடு தர்ஷினியும் சிரிக்க, அகிலன் நந்தாவோடு, நந்தாவின் பெற்றோருமே புன்னகையுடன் அமர்ந்திருந்தனர்.

"ஒன்னு சேர்ந்தாச்சா! புடிங்க என் ஏஞ்சலை.. போய் பசியாத்துங்க.. நான் அப்புறமா வர்றேன்!" என்று எழுந்து கொள்ள,

"கோச்சுட்டியா ஆரா!" என்று கல்பனா கேட்டாள்.

"ஆமா!" என்று வேண்டுமென்றே ஆராத்யா கூற,

"அப்ப சரி! கோச்சுக்கோ!" என்று சொல்லி அவள் எழுந்து செல்ல, பாவமாய் ஆராத்யா உதட்டை சுழிக்க, தர்ஷினி இன்னும் சத்தமாய் சிரித்தாள்.

"உங்க கெஸ்ட் இருக்காங்களேன்னு பாக்குறேன்.. நாளைக்கு வச்சுக்குறேன்!" என்றவள் கிளம்ப போக, அழுத குழந்தையை தோளில் இட்ட தர்ஷினி,

"சரி சரி! இனி சிரிக்கல! எப்ப பாரு ஓடுறதலயே இருக்காத! வா ரூம்க்கு போலாம்!" என்று கையைப் பிடித்தாள்.

"ம்ம்ஹும்! டிஎல்க்கு டிமிக்கி குடுத்து சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்.. போய் கார்த்திகிட்ட என்னாச்சுன்னு கேட்கணும்... அப்புறமா வர்றேன்!" என்று ஆரா சொல்ல சொல்ல கேட்காமல், கையோடு தன் அறைக்கு இழுத்து சென்றாள் ஆராத்யா.

கீழே நடந்த அனைத்தையும் மேல் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரகுவும் இருவரும் மேலே வரவும் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

"என்ன வாய் பேசுறா! என்கிட்ட மட்டும் தான் சைலன்ட் மோட்!" என்று ரகு தனக்கு தானே கூறிக் கொள்ள,

'பார்க்குறப்ப எல்லாம் அழ வச்சது நீ தான டா!' என்று எட்டிப் பார்த்தது மனசாட்சி வேறு.

"ஏஞ்சல்! உங்க அம்மாக்கு சேட்டை கூடிட்டே போகுது.. சொல்லி வையுங்க!" என்று அறைக்கு வந்த ஆராத்யா குழந்தையிடம் சொல்ல,

"நீ உட்கார்.. நான் பாப்பாக்கு பசியாத்திடுறேன்!" என்று சொல்லி திரும்பி அமர்ந்து கொள்ள, சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது.

"தர்ஷ்! நமக்குள்ள ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு நினைக்குறேன்!" என்றாள் ஆராத்யா ஏதோ சிந்தனை செய்து.

"அப்ப கூட இந்த ஜென்மத்துல பந்தமாக வாய்ப்பில்லைன்ற!" என்றாள் பொடி வைத்து தர்ஷினியும் முகம் பாராமலே.

அதில் முகம் வாடினாலும் அதை கவனியாதது போல, "ஷ்ஷ்! சொல்றதை கேட்கணும்! இங்க வந்துட்டு போனாலே ஒரு பாசிட்டிவ் வைப் தெரியுமா எனக்கு?" என்று ஆராத்யா சொல்ல,

"அதான் இங்கேயே இருக்கலாம்னு சொல்றேன்.. கேட்க மாட்டேன்றியே!" என்றாள் தர்ஷினி.

"தர்ஷ்!" என்று கண்டிப்புடன் ஆராத்யா குரல் கொடுக்க,

"ஆரா! இப்ப கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆக போகுதே! இப்ப கூட உன் முடிவுல எந்த மாற்றமுமே இல்லையா?" என்று பேச்சை நேரடியாய் துவங்கி வைத்தாள் தர்ஷினி.

"அதெல்லாம் இப்ப எதுக்கு தர்ஷ்! இப்ப கீழ எவ்ளோ ஜாலியா பேசிட்டு இருந்தோம்.. அது மாதிரி எப்பவும் இருக்கனும் நாம.. அது போதும் ஏனக்கு.."

"ஓஹ்! ம்ம் சரி தான் ஆரா! ஆனா இந்த லூசு ரகுக்கு தான் புரியல.. சும்மா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு உளறிக்கிட்டு இருக்கான்.. இவன் எப்ப தான் திருந்த போறானோ!" என்று அடுத்த அடி தர்ஷினி எடுத்து வைக்க,

"தர்ஷ்!" என்ற ஆரா சிறிது இடைவெளிவிட்டு,

"எப்பவும் தனியாவே இருக்க முடியுமா? கொஞ்ச நாள்ல அவங்களே சரி ஆகிடுவாங்க! நீங்க அதுக்கு அழகா அவங்களுக்கு ஏத்த ஜோடியா ஒரு பொண்ணை பார்த்து சொன்னா அவங்க மனசு சரினு தோணும்.. அப்புறம் என்ன!" என்றவள் குரல் கொஞ்சமாய் நடுங்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

வந்ததும் சுற்றி அனைவரும் இருக்க, ரகு வந்திருப்பானே என்று அவனை தான் தேடியது ஆராவின் கண்கள். முயன்று தான் மற்றவர்களை கவனத்தில் கொண்டு தன்னை சரி செய்தது.

"அட இது தெரியாம போச்சு பாரேன் எனக்கு! சரி எனக்கு ரகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நீயும் முக்கியம்.. அப்ப உனக்கும் நல்ல அழகான பையனா நான் பார்த்தா ஓகே சொல்லிடுவ தானே?" என்ற தர்ஷினியின் பேச்சை எதிர்பாராதவள் மனம் அடித்துக் கொள்ள, பதில் சொல்ல முடியவில்லை.

முயன்று எச்சிலை விழுங்கிக் கொண்டவள், "நான் தான் சொன்னேனே! எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல.. அதோட யாரையும் நான் நம்ப தயாரா இல்ல.. பாக்கலாம்.. இன்னும் ரெண்டு வாரம் தான் அப்புறம் ஸ்ருதி அஜய் எல்லாம் என்னைய விட்டு போய்டுவாங்க.. அம்பிகா ஆண்ட்டி கூட அவங்க சொந்த ஊருக்கு போறாங்கலாம்.. அந்த வீட்டை என்னை பார்த்துக்க சொல்லி என்னை அங்கேயே இருக்க சொல்லி இருக்கா ஸ்ருதி!" என்றாள் பேச்சை மாற்றிடும் நோக்கில்.

"ம்ம் அம்பிகா ஆண்ட்டி அம்மாகிட்ட சொன்னதா சொன்னாங்க ஆரா! உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியுமா?" என்று தர்ஷினி கேட்க,

"ஏன்? இவ்வளவு நாளும் என்னை நான் தான பார்த்துகிட்டேன்!" என்று சாதாரணமாய் சொல்லிவிட நினைத்தாலும் குரல் கரகரத்தது.

"என்கிட்ட கூட உண்மையை சொல்ல மாட்ட.. இப்ப மட்டும் நான் உனக்கு ரகு அக்கா அப்படி தானே?" என்று குழந்தையை தூங்க வைத்த தர்ஷினி ஆராத்யா புறமாய் திரும்ப, கலங்கிய கண்களை சரி செய்திருந்தவள் அவளைப் பார்த்து புன்னகைக்க,

"அன்னைக்கு நீ அவ்வளவு என்கிட்ட பேசும் போதும் முதல்ல எனக்கு வேண்டாம், தகுதி இல்ல, அப்படி தான் சொன்ன.. அப்புறமா வீட்டை பார்த்துட்டு இதெல்லாம் உனக்கு செட் ஆகாதுன்னு சொன்ன.. அதுக்கும் அப்புறமா பணம்ன்ற ஒன்னு ஒரு மனுஷனை எப்படி வேணா மாத்தும்னு சொன்ன.. சோ உன் மனசுல என்ன தான் இருக்கு ஆரா! இல்ல யார் தான் இருக்கா!" என்று அவள் தோளை தொட,

"ப்ச்! இப்ப எதுக்கு அதெல்லாம்.. சரி நான் கிளம்பட்டுமா?"

"ஏன் ஆரா ரகு கல்யாணத்துக்கு பின்னாடி மாறிடுவான்னு உனக்கு பயமா? அப்படினா நீ எங்களையும் நம்பலை தான?" என்று தர்ஷினி கேட்க,

"தர்ஷ்! போலாம் கீழ! நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு!"

"ரகு பாவம் ஆரா! நீ சொன்ன மாதிரி இன்னொரு பொண்ணை அதுவும் அந்த பொண்ணு எவ்வளவு அழகா இருந்தாலும் வேண்டாம்னு தான் சொல்லுவான்.. அவன் என் தம்பி.. உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. ஆனா எனக்கு இருக்கு!" என்று சொல்ல,

"தர்ஷ்! இப்ப எதுக்கு.."

"இல்ல ஆரா! உனக்காக தான் நான் இதுவரை என் அம்மாவை பொறுத்து போக சொன்னேன்.. இல்லைனா அம்மா தட்டை தூக்கிட்டு எப்பவோ உன் வீட்டுக்கு வந்திருப்பாங்க.. அவங்களுக்கும் உன்னை அவ்வளவு புடிக்கும்.. ஒரு மாசம் நீ ரகுவை பார்க்கல.. அவன் மாறி இருப்பான்னு நம்புறியா?" என்று கேட்க, ஆராத்யா மனதும் ரகுவிற்கு தான் பரிந்து வந்தது.

"வாழ்ந்து பார்த்தா தானே வாழ்க்கை அழகா இல்லையானு தெரியும்? வாழவே பயந்தா?" என்று கேட்க, ஆராத்யாவிடம் மௌனம் தான்.

"உன் தாய்மாமா! அவன் பேரு கூட ஏதோ சொன்னான் ரகு.. அவனை வெளில வர முடியாத படி ஏன் ஜாமின்ல கூட வர முடியாதபடி செஞ்சுட்டாங்க ரகுவும் அவன் பிரண்ட்டும்.. உனக்காக அவன் செய்யுற எதுவும் உன் மனசை தொடலையா ஆரா?"

"தர்ஷ் ப்ளீஸ்! மனசு கேட்குற எல்லாத்தையும் கொடுத்துட்டா நாளைக்கு அனுபவிக்குறது நானா தானே இருப்பேன்?"

"அப்ப மனசு கேட்குது இல்ல ஆரா? அட்லீஸ்ட் அதை ஒத்துக்கோ!" என்ற தர்ஷினி,

"ஏன் ஆரா! நீ சொல்ற மாதிரி சப்போஸ் ரகுக்கு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் நடந்து அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலை.. இந்த வீட்டுக்கு நீ வர கூடாதுன்னு சொல்லிட்டா?" என்று கேட்க, விக்கித்துப் போனாள் ஆராத்யா.

"நான் இந்த வீட்டுக்கு வந்தா தான் நீ என்னை பார்க்க வருவ.. ஓகே தான்.. ஆனாலும் ரகு வேற நல்லவன்.. நான் முன்னாடி லவ் பண்ண பொண்ணு இது தான்னு அவன் மனைவிகிட்ட சொல்லி அது போசசிவ்வா இருந்து.... நினச்சு பாரு? நீ என்ன! நானே நாளைக்கு என் கல்பனா அண்ணியும் ரகுக்கு வர போற பொண்ணும் மனசு வச்சா தான் இந்த வீட்டுல வந்து போய் இருக்க முடியும்" என்று சொல்ல, முதலில் அதிர்ந்தாலும் தர்ஷினி சொல்லுவதன் நிதர்சனம் புரிந்தது ஆராத்யாவிற்கு.

"சொல்லு ஆரா!"

"தர்ஷ்! நேர்ல பார்த்தா தானா? போன், வீடியோ கால்னு எவ்ளோ இருக்கு.. இதெல்லாம் ஒரு விஷயமா.. நான் கிளம்புறேன்!" என்று திரும்பியவளை தன்னை நோக்கி திருப்பினாள் தர்ஷினி.

"உனக்கு ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா ரகு இருப்பான் டா.. அவனை கொஞ்சம் கண்சிடர் பண்ணு டா!"

"தர்ஷ்! நான் அழுதுடுவேன்.."

"எப்பவும் என்ன சந்தோசமாவா இருக்குற? நடிக்குற.. நிஜமா ரகுவை உனக்கு பிடிக்காது?"

"நிஜமா சொல்றேன்! ரகுராம்ன்ற மனுஷனை ரொம்ப பிடிக்கும்.. ஆனா எனக்கு அவங்க அவங்களுக்கு நான் வேண்டாம்.. அவங்க மனசை நீங்க தான் மாத்தணும்.. நான் என்னை நம்பல தர்ஷ்.." என்றவள்,

"கல்யாணம்னு ஒன்னு நடந்த பின்னாடி எனக்கு என்னோட சம்பாத்தியம் முக்கியம்னு தோணும்.. அதுக்கும் நான் போகலாமானு பெர்மிஸ்ஸன் கேட்டு நிக்கணும்.. என்னோட முடிவை நான் எடுத்து பழகிட்டேன்.. என் அப்பா அம்மாகிட்ட இருந்த என் முடிவு என் கைக்கு வரும் போது என்னால அந்த பாரத்தை தாங்க முடியல.. ஆனா அதை இப்ப இன்னொருத்தர் கையில என்னால குடுக்க முடியாது!"

"இதையெல்லாம் விட அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல அவன் என்னை என்ன கேட்டான் தெரியுமா? வசதிக்காக நான் ராம் சார் கூட பழகினேன்னு...." என்றவளால் முடிக்க முடியவில்லை.

"எதுவும் இல்லாமலே அவன் என்னை அப்படி பேசினான்.. இப்ப நான் சரினு சொன்னா நான் இந்த உலகத்துக்கு அதை உண்மைனு சொன்ன மாதிரி ஆகிடாதா? எல்லா உறவும் கூடவே வருமா என்ன? நீங்களும் ஏஞ்சலும் என்னைய நியாபகம் வச்சிருந்தாலே போதும்! நான் வர்றேன் தர்ஷ்!" என்று அறை வாசல்வரை செல்ல,

"உன்னை நீ அறியாம இருக்கன்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆரா! ஆனா ரகுவை பிடிக்கும்னு சொல்லிட்டு யாருன்னே தெரியாத நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்காக உனக்கு பிடிச்ச வாழ்க்கைகுள்ள போக பயந்து நிக்குற பார்த்தியா.. நீ தான் உலகத்துலேயே மிக பெரிய முட்டாள்!" தர்ஷினி சொல்லவும் ஒரு நொடி நின்ற ஆராத்யா பின் திரும்பாமல் வேகமாய் சென்றுவிட்டாள்.