• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 32

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 32

அடித்து பிடித்து ஓடி, கிடைத்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனை வந்து சேர்ந்த ஆராத்யா ஒரு நிமிடம் தடுமாறி நின்றவளுக்கு சட்டென எதுவும் தோன்றவில்லை.

தன்னை நிதானப்படுத்தவும் முடியாமல் கலங்கி நின்றவள் சுற்றிலும் பார்த்த பொழுது தான் அங்கிருந்த வரவேற்பு இடம் தெரியவும் அங்கே சென்றவள்,

"இங்க ராம்னு.. இல்ல ரகுராம்.. அச்சிடேன்ட்னு.." என்றவள் முடிக்க முடியாமல் ஏங்க புரிந்து கொண்ட செவிலியர்,

"ஒரு நிமிஷம்!" என்று கூறி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் அந்த பெயரைத் தேடினார்.

"இல்ல மேம்! அப்படி யாரும் இங்க இல்ல!" நர்ஸ் கூறிவிட,

"இந்த ஹாஸ்பிடல் நேம் தான் சொன்னாங்க.. கொஞ்சம் நல்லா பாருங்க.. ப்ளீஸ்!" என்றவள் அழவே ஆரம்பிக்க, அருகில் இருந்த இன்னொரு நர்சிடம் விசாரித்தார் அவர்.

"அச்சிடேன்ட் கேஸ் எதுவும் நான் இல்லாதப்ப வந்துச்சா ஜெனி?" என்று அந்த பெண் கேட்பது நன்றாய் ஆராத்யா காதிலும் விழ, உதட்டை கடித்து அழுகையை விழுங்க போராடி நின்றவள் அருகே,

"இங்க என்ன பண்ற?" என்ற வார்த்தையோடு அந்த குரலையும் தெரிந்து கொண்ட ஆராத்யா சட்டென அந்த குரல் கேட்ட திசையில் திரும்ப, கையில் அலைபேசியுடன் புருவம் சுருங்க அவளைப் பார்த்தபடி ரகுராம்.

"நீங்க.. நீங்க உங்களுக்கு.." என்றவளுக்கு இன்னும் கண்ணீர் நிற்கவில்லை. ஆனாலும் சிறு புன்னகை அவனை முழுதாய் பார்த்ததில். தலை முதல் பாதம் வரை என்று வேறு பார்த்து வைக்க புரியாமல் விழித்தவன்,

"ஆராத்யா! என்ன ஆச்சு? இங்க எப்படி நீ ஆபீஸ் போகலையா? ஆஃபீஸ்ல யாருக்கும் பிரச்சனையா? ஏன் அழுதுட்டு நிக்குற? யாரோட வந்த?" என்று பலவாறு கேட்டும் சுற்றிலும் வேறு அலுவலகத்தில் உள்ள யாரும் நிற்கிறார்களா என பார்த்தும் அவன் கேட்க, பதில் சொல்லாமல் அழுகையை முழுதாய் தீர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"ஆரா!" என்றவன் சுற்றி இருப்பவர்கள் பார்வை வேறு இவர்கள் மேல் விழ, கைகளைப் பிடித்து இழுத்து தான் வந்தான் ஓரமாய்.

"ப்ச்! தர்ஷ் சீக்கிரம் லாபி வா!" என அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் ஆராத்யாவை அமர சொல்லி, தண்ணீரையும் கொண்டு வந்து தர, சாவதானமாய் நடந்து வந்தாள் ஆராத்யா குழந்தையோடு.

"ஹாய் ஆரா! வாட் அ சர்ப்ரைஸ்?" என்று கேட்டபடி தர்ஷினி வர,

"க்கா! அழுது ஊரை சேர்க்குறா..
என்னனு கேளு.. குடு பாப்பாவை!" என வாங்கிக் கொண்டு ஆராத்யாவை அவன் பார்க்க, அவளருகில் சென்றாள் தர்ஷினி.

"உன்னை என்ன பண்றது ஆரா? எதுக்கு அழுற?" என்று தர்ஷினி கேட்க,

"ராம் சார்.. அவங்க.. போன்..." என்றவள் வார்த்தை திக்கி திக்கி வர,

"சரி போன் வந்துச்சு.. நான் அதை கேட்கல ஆரா! எதுக்கு அழற? ஏன் இங்க வந்தன்னு கேட்டேன்?" என்று தர்ஷினி தெளிவாய் கேட்க,

"ப்ச்! க்கா! யாருக்கு என்னனு கேளு.. யார் கூட ஆரா வந்த?" என்ற ரகு கைகளில் குழந்தை அழுது வடிந்த கண்ணீரோடு தூங்கிக் கொண்டிருக்க, அவனால் சத்தமாய் கேட்கவும் முடியவில்லை.

இப்பொழுது தான் முதல் தடுப்பூசி இட்டு வீலிட்டு அழுது உறங்கி இருந்தாள் குழந்தை.

"அவ மட்டும் தான் வந்திருப்பா ரகு.. ஸ்கூட்டி ஆபீஸ்ல இருக்கும்.. வழி தெரியாது இல்ல அதான் பதறி ஓடி போற ஆட்டோவை நிறுத்தி வந்திருப்பா."

உடன் இருந்து பார்த்தது போலவே தர்ஷினி சொல்ல, ஏங்கியபடி கேள்வியாய் ஆராத்யா பார்க்க,

"என்ன க்கா சொல்ற நீ?" என்றான் ரகு சுத்தமாய் எதுவும் புரியாமல்.

"மேடம் நீங்க சொன்ன மாதிரி எந்த அச்சிடேன்ட் கேசும் வர்ல.. நீங்க வேற ஹாஸ்பிடல்ல செக் பண்றது பெட்டர்!" முதலில் கேட்டிருந்த செவிலியர் பெண் வந்து ஆராத்யா இன்னும் ஏங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் சொல்ல,

"இல்ல இல்ல... இதோ! இவர் தான் நான் சொன்னது.. அப்படி எல்லாம் ஒன்னும் ஆகல! நான் தான் தப்பு.. நான் தான் தப்பா கேட்டுட்டேன்!" அத்தனை அழுகையிலும் பதட்டத்திலும் வேகமாய் அந்த பெண்ணை மறுத்து ஆராத்யா கூற,

"தேங்க் யூ சிஸ்டர்! நாங்க பார்த்துக்குறோம்!" என்று தன்மையாய் கூறி அனுப்பினாள் தர்ஷினி.

"ஆரா! என்ன கேட்ட அவங்ககிட்ட? எனக்கு என்ன? எனக்கு சுத்தமா புரில!" என்றவனுக்கு அங்கே நடப்பது தலையை சுற்றியது.

"ரகு! காருக்கு போலாம்.. அங்க போய் நான் சொல்றேன்!" என்று கூறி தர்ஷினி கண்ணசைக்க,

"என்ன! உனக்கு தனியா ஆட்டோ சொல்லனுமா? வந்து வண்டில ஏறு!" என்று கடிக்காத குறையாய் ஆராவிடம் சொல்லி முன்னால் குழந்தையுடன் ரகு செல்ல,

"இவன் ஒருத்தன் ஆவூன்னா கத்துவான்!" என்று ஆராத்யா கைப் பிடித்து அழைத்து சென்றாள் தர்ஷினி.

"நிஜமா எனக்கு போன் வந்துச்சு தர்ஷ்! இங்க பாரேன் என் போன்ல அந்த நம்பர் கூட.." என்றவள் போனை பேகை என தேட, எதுவும் அங்கே இல்லை.

"என்கிட்ட இருக்கு.. லாபில விட்டுட்ட.." என்று பேகை கொடுத்தாள் தர்ஷினி.

"ப்ச்! ஸ்டாப் இட் ஆரா! என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. ஏன் இப்படி இருக்க?" என்று அவளின் கலைந்த தோற்றம் பார்த்து கவலையாய் கேட்ட ரகு, குழந்தையை அதன் உறக்கம் கலையா வண்ணம் தர்ஷினி கைகளில் கொடுக்க,

"சார் நான் ஆபீஸ் தான் போனேன்.. அங்க போனதும் எனக்கு கால் வந்துச்சு உங்களுக்கு... அச்சிடேன்ட்னு..." என்று கூற,

"வாட்? எனக்கா? யார் பண்ணினாங்க?" ரகு கேட்க,

"பண்ணினது யார்னு எனக்கும் தெரியாது ரகு.. ஆனா அப்படி பண்ண சொன்னது..." என்று இழுத்து,

"நான் தான்!" என்று தர்ஷினி கூற, கண்களை அகல விரித்துப் பார்த்தாள் ஆராத்யா அவளை.

"க்கா!" என்று பேச வந்த ரகுவை,

"இப்ப அது முக்கியம் இல்ல ரகு! உனக்கு என்ன ஆனா இவளுக்கு என்ன? ஓகே ஆபீஸ் எம்டிக்கு அச்சிடேன்ட்னு ஓடி வர்றதுல தப்பில்ல தான்.. ஆனா இப்படி பதறி துடிச்சு ஆபீஸ்ல அவ பிரண்ட்ஸ் யாருக்கும் சொல்லாம ஏன் தனியா வரணும்?" என்று தர்ஷினி கேட்க, ஆராத்யா வெறித்து பார்த்தபடி இருந்தாள் இன்னும் இதை செய்தது தர்ஷினி என்ற அதிர்ச்சி நீங்காமல்.

கணவன், கல்பனா, கணவனின் தோழன் இவர்களின் பங்கு இல்லாமல் தர்ஷினி தனியாய் இதை செய்துவிடவில்லை.

குழந்தைக்கு பெயர் சூட்டிய அன்று ஆரா பேசிய பேச்சில் அவளின் குழப்பங்கள் புரிய அப்போது இருந்து யோசித்து, கல்பனாவையும், கணவனையும் கூட்டு சேர்த்து ஒரு வாரமாய் காத்திருந்து தான் இதனை செய்து முடித்திருந்தாள் தர்ஷினி.

நந்தா "இதெல்லாம் சரி வராது டி.. வேற ஏதாவது யோசி!" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தர்ஷினி இதை விட நல்ல வழி இல்லை என்று கூறி கணவனை சம்மதிக்க வைத்து, இவர்களில் யார் பேசினாலும் ஆராத்யா கண்டு கொள்வளோ என யோசித்து பக்காவாய் ஒரு திட்டம் திட்டி நந்தா ஊருக்கு சென்ற மூன்றாம் நாளில் அவன் நண்பனை பேச வைத்து என பலமாய் வேலை செய்திருந்தனர்.

குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டிய நாளும் அப்பொழுது வரவே, இதே மருத்துவமனை பெயரை சொல்ல சொல்லி இருந்ததால் நந்தா நண்பன் நந்தாவின் முன்னிலையில் தான் ஆராத்யாவிடம் பேசி இருந்தான் ரகுராம் என்பவர் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் உடனே வரும்படியும் சொல்லி மருத்துவமனை பெயரோடு.

"க்கா! அவளுக்கு தான் புரியலைன்னா நீயுமா?" என்று கோபமாய் ரகு கேட்டு காரின் முன் பக்கம் வந்து திறந்து அமர,

"புரியலைன்னு நீ இப்படி பார்த்துட்டே இருந்தா இவ கிழவி ஆனாலும் இப்படி தான் உன்னை சுத்த விட்டுட்டு இருப்பா.. நீயும் வெள்ளை தாடி வச்சு ஆரா ஆரான்னு உன் தலையில நீயே கொட்டிட்டு இருப்ப.. நானும் எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணினேன்.. பாப்பா பேர் வைக்குற ஃபன்க்ஷன்ல கூட அவ்வளவு பேசினேன்.. ம்ம் காது குடுத்து கேட்க மாட்டுறா! எவனோ பேசுறது முக்கியமாம் இவ நிம்மதியை தொலைச்சுட்டு!" என்று தர்ஷினி தன்னால் முடிந்த மட்டும் திட்ட, ரகு ஆராத்யாவை முன்னிருந்து திரும்பிப் பார்த்தான்.

பாவமாய் இருந்ததோடு இப்படி குழந்தையாய் இருக்கிறாளே எதுவும் புரியாமல் என்றும் ஆயாசமாய் இருக்க,

"ஆரா! உன்னை என்ன சொல்றது நான்..." என்று ஸ்டீரிங்கில் தாளம் தட்டியவன்,

"தேங்க்ஸ் தர்ஷ்!" என்று புன்னகைத்து சொல்லவும் இருவரும் அவனை பார்க்க,

"இவ்வளவு என்னை தேடி இருக்காளே! இதுவே போதும் எனக்கு.. ஆனா இனி இப்படி பண்ணாத.. வருவா.. அவளுக்கே ஒரு நாள் புரியும்..!" என்று சகோதரியிடம் கூறினான்.

"ஆரா! ம்ம்ம்ம்!" என்று சிரித்துக் கொண்டவன்,

"நீ என்னை தேடி வரணும்னா எனக்கு எதாவது ஆகணுமா?" என்று கேட்க, நின்றிருந்த கண்ணீரில் ஒரு சொட்டு உற்பத்தி ஆனது அவன் கேள்வியில்.

"டேய்! அதிகமா பேசாத! எனக்கு வேற வழி தெரியல... ஆராக்கு உன்னை புடிக்கும்னு எனக்கு எப்பவோ தெரியும்.. அதை அவளே தெரிஞ்சிக்கணும்னு தான் இப்படி நான் பண்ணினேன்.." என்றாள் தர்ஷினி.

"ஆரா! கோவமா என் மேல?" என்று தர்ஷினி கேட்க, எதுவும் பேசும் நிலையில் இல்லை ஆராத்யா.

எத்தனை ஏமாந்திருக்கிறோம் என்ற நினைவு ஒரு புறம் இருந்தாலும் ரகுவிற்காக தான் இத்தனை அழுது பேச்சச்சு நின்றது அவளுக்கே இப்பொழுது அதிர்ச்சியாய் இருந்தது.

தர்ஷினி மேல் கோபமா என்றால் அதை பற்றிய நினைவுக்கு இன்னும் ஆராத்யா வரவில்லை. தனக்கு வந்த அழைப்பு பொய்.. ரகுவிற்கு எதுவும் இல்லை.. இதை செய்தது தர்ஷி.. என்பது மூளைக்கு சென்று கொண்டிருக்க, தான் அவனுக்காக துடித்தது இன்னும் மனதை பிசைந்து உண்மையை அவள் தலையில் கொட்டி சொல்லியது.

இத்தோடு ரகுவின் கேள்வியும். நிஜம் தானே! உயிரை கையில் பிடித்து அல்லவா ஓடி வந்திருந்தாள்...

இத்தனை பிடித்தமா அவன் என்றால் தனக்கு? என்ற கேள்வியோடு முன்னே பார்க்க, அவன் லாவகமாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

காரின் அமைதி கூட அவளுக்கு தெரியவில்லை.. தான் இருந்த நிலை தன் மனதை தெளிவாய் விளக்கிக் கொண்டு இருந்தது.

அவளின் அமைதியில் பின்புற தோற்றம் என்ன என்று தெரியாவிட்டாலும் அவளை சிந்திக்க விட்டு குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டு தர்ஷினி அமைதியாய் வர,

சிறிதாய் ஒரு இடம் தனக்கென்று தன்னவளின் இதயத்தில் இருப்பது கொஞ்சம் எட்டிப்பார்த்திருக்க அதில் சிறு பூஞ்சாரல் மனதில் வீசியதில் இதழ்பிரியா புன்னகை இருந்தாலும், தர்ஷினியை கண்டிக்கும் எண்ணமும் இருந்தது ரகுவிற்கு.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
துடிப்பாங்க....
தவிப்பாங்க....
தள்ளியும் நிப்பாங்க
தவிக்கவும் வைப்பாங்க.....
தாங்க முடியலை டா சாமி....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
துடிப்பாங்க....
தவிப்பாங்க....
தள்ளியும் நிப்பாங்க
தவிக்கவும் வைப்பாங்க.....
தாங்க முடியலை டா சாமி....
அது தானே காதல் 😷😷