• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 34

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 34

நினைத்து அழுத பொழுதுகள் எல்லாம் சிரிப்பை கொடுக்குமாமே! அப்படி ஒரு இடத்தில் தான் இருந்தனர் மகேஸ்வரி குடும்பத்தினர்.

மகேஸ்வரி சந்தோஷத்தில் குதிக்கவில்லை அவ்வளவு தான்.. கொண்டாடி தீர்த்தார்.

தான் நீண்ட நாட்களாய் காண ஏங்கிய தன் செல்ல மகனின் திருமணம் கைக்கூடி வந்திருக்க, கூடவே தன் மூத்தமகன் அப்பாவாக போகிறான் எனும் செய்தி அவரை இளமையாய் உளவ செய்தது.

கல்பனா எந்த ஒன்றிற்காக ஏங்கி ஏங்கி தவித்தாளோ இதோ அந்த செல்வம் அவளினுள் கருவாய்.. நினைத்து நினைத்து மனமும் முகமும் பூரித்து ஒரே நாளில் அகிலனின் உலகையே அழகாக்கி இருந்தாள் அவன் மனைவி.

நேற்று கல்பனா மகேஸ்வரி மேல் சாயவும் சட்டென அனைவரும் பதட்டமாகி இருக்க, ரகு தான் தண்ணீரை எடுத்து வந்து தெளித்தான்.

மயக்கமில்லை ஒரு சோர்வு அதுவும் திடீரென.. மனம் பதட்டத்தில் அடித்துக் கொள்ள தண்ணீரை தெளிக்கவும் பரவாயில்லை போல தோன்றிய நொடி மின்னலாய் ஒரு கீற்று அவள் மனதினுள் எழ, கண்களை அங்கும் இங்குமாய் சுழற்றி அவள் யோசிக்க, மகேஸ்வரியும் தர்ஷினியும் பயந்து போயினர்.

"ம்மா என்னாச்சு ம்மா?" யார் பேச்சையும் கவனிக்காமல் தன் மன எண்ணத்தில் மட்டும் கல்பனா சுழன்று கொண்டிருக்க, ரகு அன்னையை கேட்கவும்,

"தெரியலையே ரகு!" என்றவர் இப்படி இருக்குமோ என்று எதிர்பார்க்கவில்லை. என்னவோ என்ற பயம் தான் அவருக்கு.

"அண்ணி!" என்று தர்ஷினி கல்பனாவை உலுக்க,

"தர்ஷி! இருக்குமோ?" என்றாள் கல்பனா இப்பொழுதும் கண்களை சுழற்றி.

"என்ன ண்ணி?" என்றவளுக்கு முதலில் புரியவில்லை.

வெளிச்சமாய் கல்பனாவின் முகமும் அப்படி இல்லையென்றால் என்ற பயமும் என மாறி மாறி அவள் முகத்தினில் தெரியவும் சில நொடிகளில் தர்ஷினிக்கு புரியவர,

"அண்ணி!" என்று கண்களை விரித்தவள்,

"உங்களுக்கு தெரியலையா? எத்தனை நாள் ஆச்சு?" என்று கேட்க, மகேஸ்வரிக்கும் புரிய ஆரம்பித்தது.

நாட்கள் தள்ளி போவதை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாதே.. கல்பனாவிற்கு எப்போதுமே அப்படி சரியாய் இருக்காதே! அதை அவளும் சொல்ல,

"அட அறிவு கெட்டவளே! உன்னைய கொல்ல போறேன் பாரு.. இதை கூட கவனிக்காம.." என்ற மகேஸ்வரி புரியாமல் நின்ற ரகுவை,

"ரகு காரை எடு டா!" என்று சொல்லி உடனே கிளம்பினர் மருத்துவமனைக்கு. நிஜம் என்று உறுதியான் அடுத்த நொடி மருமகளுக்கு உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தவர் அகிலனை அழைத்து வரவேற்று அவரே குழந்தையாய் துள்ளி குதிக்க, மொத்த குடும்பமே குதூகலித்தது.

அகிலனிடம் வாழ்த்து கூறிய ரகு சில நிமிடங்கள் கழித்து தன் அறைக்கு வந்தவனுக்கு மகிழ்ச்சியில் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை.

ஸ்ருதி பேசியதை கேட்ட அடுத்த நொடி மூச்சைடைத்து வந்தது தான் நிஜம் ரகுவிற்கு.

ஆர்ப்பரித்து வந்த புன்னகையை மகிழ்ச்சியை தன் வசந்தத்தை அந்த நொடியில் வெளிப்படுத்தி இருக்கலாம் தான்.. ஆனாலும் அதை மறைத்து நின்று அளவாய் சிரித்து அவர்கள் கிளம்பி அதன்பின் தன் அண்ணியை கவனித்து அவர்களின் புது வரவில் சந்தோசமாய் பங்கு கொண்டு என, அவன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவே கால நேரம் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

"ஆராத்யா!" கத்தி சொல்ல வேண்டுமாய் ஒரு உணர்வு உந்த, இதயத்தை மெல்ல நீவிக் கொண்டு வார்த்தைக்கும் வலிக்காமல் அவன் சொல்லிப் பார்த்து பால்கனி அருகே சென்றவன் கண்ணாடியில் கைவைத்துப் பார்த்தான் அந்த ஊஞ்சலை.

"இனி உனக்கு வேலை இல்லை!" மனம் தானாய் அந்த ஊஞ்சலிடம் சொல்ல,

"என்ன பண்ற ஆரா நீ என்னை?" என சொல்லிக் கொண்டவன்,

"ம்ம்ஹும்! என்னவோ பண்ணுதே!" என வாய்விட்டே சொல்லி அந்த அறைக்குள் மட்டுமாய் அத்தனை உழன்றவன், எதற்கும் மனம் நிதானிக்காமல் போக, எடுத்துவிட்டான் அலைபேசியை கையில்.

"பிக்கப் மை கேர்ள்!" என்று தனக்கு தானே சொல்லி அழைப்பு செல்லும் நேரத்திற்குள் மனதுக்குள் ரயிலோடும் சத்தங்கள்.

ரகு தர்ஷினியிடம் சொல்லியது தான் உண்மை. எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு ஆராத்யா வரும் பொழுது தன்னுடன் ரகுராம் என்ற ஒருவன் இருப்பான் என்று நினைக்கும் அளவிற்கு வந்திருந்தாள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் அலைபேசியை பார்த்த பொழுது அத்தனை அழைப்பு வந்திருந்தது கார்த்திகா, பிரேம், விக்ரம், இன்னும் அலுவலக எண்கள் என்று.

எதற்கும் அழைத்து பதில் சொல்லும் நிலையில் இல்லாமல் மொபைலை தூக்கிப் போட்டவள் தனியாய் யோசித்தது என்னவோ அரை மணி நேரம் மட்டும் தான்.

"அச்சிடேன்ட்ல ரகுராம்ன்றவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.. உடனே வாங்க!" என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப மனதில் ஓடி, உடலை நடுங்கவும் பதறவும் வைத்திருந்தது.

தர்ஷி இதை விளையாட்டாய் செய்யவில்லை என்பது புரிந்தாலும் எந்தளவிற்கு தனக்காக தன் புரிதலுக்காக இந்த குடும்பம் மொத்தமும் காத்து கிடக்கிறது என்பதும் புரிந்தது தர்ஷினி கல்பனாவின் இந்த ஒரு செயலில்.

அத்தனைக்கும் மீறி தன் மனதின் எண்ணத்தை அதுவே மொத்தமாய் படம்பிடித்து தனக்கே காட்டிவிட்டதே!

யாரும் இல்லாமல் தான் மட்டுமாய் இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போக முடிவெடுத்திருந்தவளுக்கு ரகுவிற்கு ஒன்று என்று அழைப்பு வந்த நொடி முற்றிலும் மூளை வேலையை செய்திருக்கவில்லை.

"ஏன் டி அறிவிருக்கா உனக்கு? ரகுக்கு அச்சிடேன்ட் உடனே வாங்கனு ஆராத்யாக்கு போன் பண்ணா அவ ஓடி வருவாளா? நான் ஏன் வரணும்னு உடனே உங்க வீட்டுக்கு தான் போன் பண்ணுவா இன்ஃபார்ம் பண்ண.. இல்ல ஆபீஸ்ல சொல்லி யாரையாவது பார்க்க சொல்லுவா!" என்று சொல்லி நந்தா மனைவி தர்ஷினியை அப்போது திட்டி இருந்தான்.

"எனக்கு தெரியும் நந்து நீங்க டியுப்லைட்னு! நான் என்ன சொல்றேன்னா.. இந்த காதல்ன்றது ரொம்ப மோசமான நோய்! மூளையை கழட்டி அடகு வச்சுட்டு தான் வேலையை செய்யும்.. அப்படி மூளை இருந்து ஆரா வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணி அவ ஹாஸ்பிடல் ஓடலைனா அவ மனசுல காதலே இல்லைனு சொல்லி நம்ம ரகுக்கு நாம காவி வாங்கி குடுத்துடலாம்.. டீல்?" என்று தர்ஷினியே சொல்லி தான் இந்த வேலையை செய்ததே!

இதோ கொஞ்சமும் யோசிக்காமல் இன்னும் அப்படி எதுவும் நடந்திருந்தால் என்ற படபடப்பில் நெஞ்சம் அடித்துக் கொள்ள, என்னவும் நடக்கட்டும் என்று சொல்லி ஸ்ருதி முன்பும் அவள் கணவன் முன்பும் நின்று தனக்கான திருமணத்தை பற்றிய பேச்சை அவள் துவங்கி வைத்திருக்க, அன்றைய நாள் அனைவர்க்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கி இருந்தார் கடவுள்.

ஸ்ருதி போய் பேசிவிட்டு அங்கே பேசியதை ஆராத்யாவிடம் சொல்லவும் சிறு புன்னகை கொடுத்தவள் மனம் ஊஞ்சலுக்கு செல்ல சொல்ல, அங்கிருந்து நேராய் ரகுவின் வீடு. அதை காண கூச்சம் கொண்டவள் தன் அறைக்குள் ஒளிந்து கொண்டாள்.

தர்ஷினி கல்பனா யாரேனும் ஒருவரின் கிண்டல் பேச்சை வரவை என எதிர்பார்த்து ஆராத்யா காத்திருக்க, அப்படி ஒன்று நிகழவில்லை ஒரு மணி நேரம் தாண்டியும்.

அடுத்ததாய் ரகுவின் முகம் மனதில் எழ, அதில் அவன் சிரிக்கும் முகம் கூடவே அதில் கொஞ்சம் கோபமான பார்வை கூட.

மனதின் கனங்கள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டு இலகுவாகி இருக்க, ஆனாலும் புதிதாய் அந்த மனதை என்னவோ செய்து கொண்டிருக்கும் உணர்வை தாண்டி வெளிவர முடியவில்லை அவளுக்கு.

எதுவும் செய்ய தோண்றாமல் அறைக்குள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து என்னென்ன நினைவுகளோடோ புன்னகையில் இருந்தவள் கவனத்தை தன் வசம் திருப்பியது அவளின் கைப்பேசி.

தர்ஷினியை எதிர்பார்த்து ஓடி சென்று கையில் எடுத்துப் பார்க்க, தெளிவாய் தெரிந்த ரகுவின் எண்ணில் மனதுள் மத்தள சத்தங்கள்.

விரல் நடுங்க அழைப்பை ஏற்று காதில் வைத்து அவன் குரல் கேட்க இவள் காத்திருக்க, அதற்கெனவே அவளே பேசட்டும் என வேண்டுமென்றே அமைதி காத்து சத்தமில்லா புன்னகையுடன் இருந்து கொண்டிருந்தான் ரகு.

நிமிடங்கள் கடந்தும் வந்த அமைதி ஒரு நேரத்திற்கு மேல் தவறாய் ஆராத்யாவால் புரிந்து கொள்ளப்பட,

"அங்க எதுவும் பிரச்சனையா? ஸ்ருதி வீட்டுல வந்து பேசினது உங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கலையா? அதான் தர்ஷ் என்னை பார்க்க வரலையா? அதான் நீங்களும் கோபமா இருக்கீங்களா? நான் தான் அவசரப்பட்டுட்டேன்!" என்றவள் பேச்சில்,

"சத்தியமா கடுப்பாகிடுவேன் ஆரா!" என்கின்ற அவன் சத்தத்தில் மீண்டும் கப்சிப் ஆராத்யா.

"எப்பவுமே தப்பு தப்பா தான் யோசிப்பியா?"

"இல்ல தர்ஷ் வருவாங்கனு நினச்சேன் வர்ல.. நீங்களும் பேசாம இருந்திங்களா.. அதான் ஒருவளை..." என்று சொல்லி முடிக்கும் முன்,

"நீ சித்தியா ப்ரோமோட் ஆகிட்ட அதான் தர்ஷ் வர்ல" என்றான் சட்டென்று.

"என்ன?" என்றவளுக்கு யோசிக்கவே முடியவில்லை. என்ன சொல்கின்றான் என சுத்தமாய் புரியாமல் அவள் விழிக்க,

"சுத்தம்! உனக்கு ஒவ்வொண்ணும் சொல்லி தரணும் போலயே!" என்று வாய்விட்டு சொல்லியவன்,

"மிஸ்ஸஸ் ஆராத்யா ரகுநாதன்! என் அண்ணா அகிக்கு பேபி வர போகுது.. நான் சித்தப்பான்னா நீங்க சித்தி தானே?" என்று தெளிவான அவன் சொல் கேட்டு, கண்களை விரித்து சிலையாய் நின்றவள் முகம் முழுதும் செவ்வானமாய் சிவந்தது அவனின் அழைப்போடு, அவன் கூறிய செய்தியும் கேட்டு.

"நிஜமாவா? ரொம்ப சந்தோஷம்.." என்றவளுக்கு சட்டென தன் சந்தோசத்தை பகிரும் வார்த்தைகள் பிடிபடவில்லை அவனிடம்.

"ம்ம்! இப்ப தான் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம்!" என்றவன் அங்கு நடந்ததை சொல்லி முடித்து,

"ஓகே! இனி அவங்க டாபிக் ஓவர்! நம்ம டாபிக்கு வருவோம்!" என்று சொல்ல, சிறு புன்னகை ஆராத்யாவிற்கு.

"என்னவாம்? திடிர்னு ஆராத்யா பொண்ணுக்கு ரகுராமை கல்யாணம் பண்ணிக்க தோணி இருக்கு?" என்றவன் கேள்வியில் இவள் அப்படியே இருக்க,

"ஆனா நான் கூட ஒன்னு யோசிச்சேன்.. நீ என்னை தேடி வர எவ்வளவு அச்சிடேன்ட் வேணா நான் எடுத்துக்கலாம்னு" என்று சொல்லவும், மீண்டுமாய் அந்த வார்த்தைகள் அவளின் விழிகளுக்கு படமாய் விரிய,

"வேண்டாம் வேண்டாம்! வேண்டாம் ப்ளீஸ்! அப்படிலாம் சொல்லாதீங்க.. எனக்கு இங்க கை எல்லாம் நடுங்குது.." என்றவளின் நடுக்கம் அவளின் குரலே உணர்த்த, முதல்முதலாய் அவளாய் தன்னை நினைத்துப் பேசும் பேச்சில் இதழ் திறக்காமல் சிரித்துக் கொண்டவன்,

"ஓகே ரிலாக்ஸ்!" என்றான் மென்மையான குரலில்.

"நான் எதுக்காக ஸ்ருதிகிட்ட...." என்றவள் பேசும் முன்,

"நோ நோ! நோ ஆரா பொண்ணே! எனக்கு தெரிஞ்சுக்கணும் தான்.. ஆனா இப்ப இல்ல.. அதுக்கு ஒரு டைம் இருக்கு.. அப்ப சொல்லு நான் கேட்குறேன்!"

"என்ன டைம்?"

"சொல்லிடுவேன் ஆனா நீ வெட்கப்படுவ.. அதையும் நான் போன்ல பார்க்க முடியாதே!" என்றவன் பேச்சுக்கள் கேட்டு,

'அச்சோ இவ்வளவு பேச்சா?' என்று அவள் விழிக்க,

"மீட் பண்ணலாமா ஆரா!" என்றான் சட்டென்று நேராய்.

"ஹான்!"

"ஓய்! கேட்டுச்சு தான?"

"இல்ல! இப்ப எப்படி? அது.. நாளைக்கு ஸ்ருதி கிளம்புறா!"

"எனக்கு பாக்கணும்னு இருக்கு.." என்று சொல்ல, மனதெல்லாம் சொல்ல தெரியாத ஒரு சிணுங்கல் ஆராவிடம்.

"மணி ரெண்டு தானே ஆகுது? ஒரு சின்ன மீட்.. ப்ளீஸ் ப்ளீஸ்!" என்று கெஞ்சவே செய்ய,

"சார்...." என்றவளுக்கு அத்தனை சிரிப்போடு சிறு சங்கடமும் அவனில் இத்தனை நாட்கள் கேட்டிராத கெஞ்சலான குரலில்.

"ம்ம்ஹும்! சாரெல்லாம் இனி இல்ல.. கால் மீ ரகு!" என்று சொல்ல,

'ராம்!' என்றவள் அழைப்பு காற்றிற்கு மட்டுமே கேட்டிற்கும்.


தொடரும்..