• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 35

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 35

மேலே சென்ற ஒரு மணி நேரத்தில் முழங்கை வரை மடித்துவிட்ட சட்டையை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு பளபளக்கும் முகத்துடன் முன்னுச்சி சிகையை கைகளால் கோதியபடி பால்நிலாவின் வெளிச்சமாய் முகப் பொலிவுடன் படிகளை தாவி கடந்து வந்து இறுதிப் படிக்கு வந்தபின் தான் தர்ஷினி, அகிலன், கல்பனா என அங்கே அவனைப் பார்த்தபடி இருந்த மூவரையும் கண்டான் ரகு.

ஆராத்யாவை பேசி சம்மதிக்க வைத்து அடுத்த அரை மணி நேரத்தில் கீழே இறங்கி வர, நந்திகள் மொத்தமாய் இருப்பதாய் தான் தெரிந்தது அவன் கண்களுக்கு.

"போச்சு! இதுங்களா?" என்று முணுமுணுத்தவன் ஆனாலும் எதுவும் அறியாதவன் போல,

"ம்மா! ஆபீஸ் கிளம்புறேன்.." என்று சத்தமாய் சொல்ல,

"இவன் இறங்கி வந்தப்ப கூட கொஞ்சம் தான் சந்தேகம் இருந்தது.. கத்தி கூப்பாடு போட்டு அதுவும் ஆபீஸ் தான் போறேன்னு சொல்லும் போது தான் ஆபீஸ் இல்லாம எங்கேயோ போறான்னு எனக்கு சந்தேகம் வருது!" தர்ஷினி சொல்ல,

"நம்ம ஸ்டைல்லேயே கேட்டுடுவோமே!" என்று கல்பனா கண்ணடிக்க,

"இன்னுமா நீங்க அடங்கல? என்னவோ நல்ல நேரமா இருக்க போய் காலைல நீங்க பண்ணின அலப்பறைக்கு இது ஒரு குடும்பமான்னு ஓடாம இங்கேயே வாக்கப்பட அந்த பொண்ணு சம்மதம் சொல்லி இருக்கு.. எதையாவது பண்ணி வைக்காதிங்க!" என்ற அகிலன் பேச்சை காதில் வாங்கவில்லை இருவரும்.

"ஆபீஸ் போனுமா ரகு? மணி மூணாக போகுதே போக மாட்டியோன்னு நினச்சேன்.. மதியமே சரியா சாப்பிடல.. காபி எதாவது போடவா?" என அன்னை கேட்க,

"இல்லம்மா! நான் பார்த்துக்குறேன்!" என்றவன் மூவரையுமே பார்க்காமல் கிளம்பிவிட நினைக்க,

"வா தர்ஷி! நாம போய் ஆராவை பார்த்துட்டு வருவோம்!" என்று ஆரம்பித்து வைத்தாள் கல்பனா.

சட்டென கால்கள் நிற்க திரும்பிப் பார்த்தவன், "இப்ப எதுக்கு அங்க?" என்று கேட்க,

"உனக்கென்ன? நாங்க ஆராவை பார்த்து கல்பனா அண்ணி கன்சீவா இருக்கறதை சொல்லி பீசா வாங்கி சாப்பிட்டு செலிப்ரட் பண்ணுவோம்..!" என்று தர்ஷினி கூற,

"கூடவே கல்யாணப் பொண்ணுகிட்ட ட்ரீட் கேட்டு பில்லை அவளையே தர சொல்லுவோம்!" என்று அலப்பறையை ஆரம்பித்து வைக்க,

உடனே பதிலாய் எதுவும் சொல்லிவிட முடியாமல் பொய் சொல்லி கிளம்புவதில் முதல் முறையாய் ஒரு அவஸ்தை ரகுவிற்கு.

"நீ கிளம்பு! நாங்க பார்த்துக்குறோம்!"

"க்கா! அதான் நாளைக்கு ஃபன்க்சன் சொல்லி இருக்கு இல்ல.. அப்புறமா பார்த்துக்கலாம் இப்ப எதுக்கு அங்க போய்கிட்டு?" வாய்க்கு வந்ததை அவன் சொல்லி வைக்க,

"அப்ப நீ ஆபீஸ் தான் போற?" என்றாள் தர்ஷினி. மறைக்காமல் சொல்லிவிடு என்னும் முறைப்பு கூடுதலாய் அவளிடம்.

"வெளில போறவன்கிட்ட என்ன வம்பு உனக்கு? போய் உன் பொண்ணுகிட்ட கொஞ்ச நேரம் படு! உனக்கு ஜூஸ் தந்தேனே குடிச்சியா? அப்ப ரூம்ல போய் ரெஸ்ட் எடு.. இனி குழந்தை பொறக்குற வர நீ பேசவே கூடாது பார்த்துக்க!" என்று மகேஸ்வரி இருவரையும் சொல்லிவிட்டு,

"அகி அவளை உள்ள கூட்டிட்டு போ!" என்று அகிலனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட,

"ஏய்! அவனை கிளம்ப விடுங்க ரெண்டு பேரும்.. கிளம்புற நேரத்துல தடுத்துகிட்டு.." என்ற அகிலனுக்கும் தம்பியின் நிலை புரிய அவனுக்கு உதவியாய் வந்தான்.

"தர்ஷி! போய் பாப்பாவை பாரு!" என்று விரட்ட,

"ஒரு நிமிஷம் அகி!" என்ற தர்ஷினி,

"ஆமா! மதியமே உன் கல்யாணம் உறுதி ஆகிட்டே! என் புருஷன்.. அதான் உன் மாமாக்கு போன் பண்ணி இப்படி இப்படி நடந்துச்சுன்னு சொன்னியா?" என்று கேட்க,

வாசலையும் மணியையும் பார்த்து கிளம்பும் அவசரத்தில் நின்ற ரகு அவள் கேள்வியில் தான் நியாபகம் வந்தவனாய் நெற்றியில் அடித்துக் கொண்டு அதே நிலையில் தர்ஷினி புறம் திரும்ப,

"இம்புட்டு தானா டா உங்க பாசம் எல்லாம்?" என்று தர்ஷினி சொல்லி செல்ல,

"க்கா! நிஜமா சாரி! ஆனாலும் இப்ப டைம் இல்ல நைட்டு சொல்லிடுறேன்!" என்று சொல்லியபடியே ஓடி காரை எடுத்துக் கொண்டு கேட் அருகே வந்து பார்க்க, இன்னும் ஆராத்யா கிளம்பி இருக்கவில்லை அவன் கூறிய இடத்திற்கு.

"தட்ஸ் குட் மை கேர்ள்!" சொல்லிக் கொண்டவன், அவளுக்கு முன் சென்று அவள் வரவைக் காண ஆவலாய் சென்றான்.

இருபது நிமிடங்கள் கடந்தும் ஆராத்யா வராமல் இருக்க, நிமிடங்கள் எல்லாம் நொடிகளாய் தெரிந்தது ரகுவிற்கு.

அன்று இரவு உணவிற்காக அவளை அழைத்து வந்திருந்த அதே இடத்தில் தான் இன்றும் காத்திருந்தான்.

இதோ வந்துவிட்டாள்! கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவள் ரகுவைப் பார்வையால் தேட, அவன் பார்வை முழுதும் அவளிடம் மட்டும் தான்.

டேபிளில் முழங்கையை ஊன்றி வலது கை அவனின் முகத்தை தாங்கி இருக்க, மற்றொரு கை டேபிளில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தது அவனும் அறியாமல்.

பார்வை மட்டும் நீலவண்ண சல்வாரில் தன்னைப் பார்த்துவிட்டு தூரமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வரும் அவளிடம்.

ஏற்கனவே பார்த்து பிடித்தவள் தான் எனினும் இதோ அவளும் இனி தன்னை கவனிப்பாள் தானே என்ற எண்ணம்.. இன்னும் சில நாட்களில் தான் அவளின் கணவன் எனும் எண்ணம் என மனதுக்குள் அத்தனை எண்ணங்கள்.

புதிதாய் ஒரு புத்துணர்ச்சி மனதுள் அதிகமாய் ஊர்வலம் நடத்த, பார்வை கூட கொஞ்சம் உரிமையாய் அவளிடம் வலம்வர, கூடவே அவளின் சிவந்த முகமும் என நெஞ்சமெல்லாம் கொண்டாட்டமும் திண்டாட்டமும் ரகுவிற்கு.

'ஷட்டப் ரகு! ஓஹ் காட் உன்கிட்ட ஆராவை கல்யாணம் வரை எப்படி காப்பாத்த?' என்று அவனே அவனுக்கு கேள்வி கேட்டுக் கொண்ட தருணம் அது.

தூரத்தே தேடியவள் ரகுவைக் கண்டதும் சிறு புன்னகை கொண்டு அவன்புறம் நடந்து வரும் பொழுதே அவன் பார்வையை கண்டு முகம் செம்மையுற, அழகுக்கு அழகு சேர்த்தது அந்த வெட்கமும்.

"நேரமாச்சா?" என்றவள் அவனுக்கு எதிரில் டேபிள் அருகே அமர, கொஞ்சமும் அசராமல் எழுந்து வந்து அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டதில் மனதுக்குள் ஒரு தடதடப்பு ஆராத்யாவிற்கு அவனிடம் இதை எதிர்பாராதவள்.

"அன்னைக்கு தள்ளி இருக்க வேண்டிய இடத்துல நான் இருந்தேன்.. இன்னைக்கு அப்படி இல்லையே!" என்று அதற்கு விளக்கமும் கொடுக்க,

அவன் பார்வையும் பேச்சும் என சுத்தமாய் அங்கே ரகுராம் என்ற எம்டியாய் இல்லாமல் ஆராத்யாவின் காதலை பெற, தன் காதலை உணர்த்தும் ஒரு இளைஞனாய் அவனை காண முடிந்தது.

"என்னாச்சு லேட்?" ரகு கேட்க,

"ஸ்ருதிகிட்ட சொல்லிட்டு வரணுமே?" என்றவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

"ம்ம் என்னனு?"

"நீங்க என்ன சொல்லிட்டு வந்திங்க?"

"நான் சொல்லல.. ஆனா கெஸ் பண்ணிருப்பாங்க.. நான் வெளில வரவும் ரெண்டு பேருமா ஆராவை பார்க்க போறோம்னு கிளம்பி என்னை கண்ணை கட்ட வச்சுட்டாங்க!" என்று சொல்ல ஆராத்யா சிரிக்கவும்,

"ஸ்ருதி கேட்கல?" என்றான் ரகு.

"ம்ம் கேட்டா.. ஆனா தர்ஷ் அளவுக்கு கிண்டல் பண்ண தெரியாது அவளுக்கு!"

"ஹ்ம்!" என்றவன் அவளை அமர சொல்லி இருவருக்குமாய் காபி வாங்கி வந்து அமர்ந்தவன் அவளருகில் ஒன்றை நகர்த்தினான்.

"தேங்க்ஸ் ஆரா!" ஒரு சிப் எடுத்துக் கொண்டவன் சொல்லவும் அவள் கேள்வியாய் பார்க்க,

"நிஜமா எக்ஸ்பெக்ட் பண்ணல.. அதுவும் மார்னிங் அக்கா ஒரு கேங் சேர்த்து இவ்வளவு பண்ணுவானும் நினைக்கல!"

"அதுக்காக மட்டும் நான் சம்மதம் சொல்லல.." எங்கே அவன் தவறாய் நினைத்துக் கொண்டானோ என வேகமாய் அவள் மறுக்க வர,

"தெரியும்! இந்த பேமிலியை உனக்கு புடிக்கும்.. அதானே?" என்றதற்கும்

"ம்ம்ஹும்! அதுவும் தான்.." என்று கூற,

"அப்ப வேற?" என்றவன்,

"பேமிலினு சொன்னதுல நானும் இருக்கேன்.. அப்ப என்னையும் பிடிக்கும் தானே?" என்று அவன் நேராய் எளிதாய் கேட்டுவிட, அப்படி சாதாரணமாய் எல்லாம் அவன்முன் அமர்ந்துவிட முடியவில்லை ஆராத்யாவிற்கு.

"தர்ஷ் சொன்னா.. பிடிக்கும்னா அது அப்படியே இருக்கட்டும்.. நாளைக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணின அப்புறம் பேசிக்கலாம் மத்ததெல்லாம்!" என்றவனின் குறுஞ்சிரிப்பு என்னவோ கதை சொல்ல, முகத்தை மறைக்கும் வழி தெரியாது கிளம்பிவிட்டால் என்ன என்று தான் தோன்றியது அவளுக்கு.

"ஆராத்யா!" என்று அழைத்தவனிடம் முகத்தை மறைக்க திரும்பி இருந்தவள் அவன் புறம் திரும்பி பின் அவன் பார்வை சென்ற பக்கம் பார்க்க, இருவரையும் தெரியும்படிக்கு முன்பக்க கேமராவை தனது அலைபேசியில் எடுத்து வைத்திருந்தவன், 'ஸ்மைல்' என்பதை போல ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் விரித்து கேமராவிலேயே காட்ட ஆச்சர்யம் அதிர்ச்சி என அங்கே விழிவிரித்து தலைசாய்த்து பார்த்திருந்தவள் முகத்தில் சிறிது சிறிதாய் புன்னகை.

"ஃபர்ஸ்ட் மீட்... ஃபர்ஸ்ட் போட்டோ!" சொல்லிக் கொண்டவன் கையோடு அதை அவளுக்கும் அனுப்பி வைத்தான்.

ஃபர்ஸ்ட் மீட் என்றதில் முதல் முறை ரகுவோடு இங்கே வந்ததும் கூடவே பரமசிவத்தை பார்த்ததும் அவன் கூறிய வார்த்தைகளும் என நியாபகத்தில் வந்து மனம் மீண்டும் சஞ்சலம் புக,

"என்ன ஓடுது இங்க?" என்று தன் நெற்றியின் ஓரம் விரல் வைத்துக் காட்டியவன்,

"சொல்லிடு.. எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஆனா ஒவ்வொரு நாளும் உன்னை கிட்ட வச்சுட்டு உன்கிட்ட எதையும் ஷேர் பண்ண முடியாம இருந்த பிளேஸ்க்கு எல்லாம் மறுபடியும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.." என்று தலையை ஆட்டிக் கொண்டவன்,

"உன்கிட்ட சொல்லிடணும்னு தான் நினைப்பேன்.. என்னவோ ஒன்னு.. அதுவும் லாஸ்ட் டைம் இந்த ஆபீஸ் அவுட்டிங்ல நீ பேசின பாரு.. அங்க தான் முழுசா பயந்ததே! நானெல்லாம் சன்னியாசினு தான் நினச்சேன்!" என்றான் அவனே தன் மனம் திறந்து.

"நானா? நான் என்ன பேசினேன்?" என்றவளுக்கு சட்டென நினைவில் வரவில்லை.

"அதான்! உனக்கு வர போற ஹஸ்பண்ட் எப்படி இருக்கனும் எப்படி வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தியே! அது தான் நான் லாஸ்ட்டா வந்த அவுட்டிங்!" என்றதும் நியாபகம் வந்தவளுக்கு அவன் சொல்லியது அதிர்ச்சியும் கொடுக்க,

"அதுக்காகவா நீங்க அதுக்கப்பறம் ஆபீஸ் அவுட்டிங் எதுக்கும் வர்ல?" என்று அதிர்ச்சியை முகத்திலும் காண்பித்து கேட்க,

"பின்ன! இதே மாதிரி மனசுல இருக்கறதை சொல்றேன்னு நீ சொல்லிட்டு போய்டுவ.. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா யாரு பாக்குறது?" என்றவன் பேச்சில் புன்னகை எல்லாம் வரவில்லை.

"நந்தா மாமா மட்டும் இல்லைனா நான் என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரில! என்னால மாமாகிட்ட மட்டும் தான் சில விஷயங்களை ஷேர் பண்ண முடிஞ்சது.. நீ ஈசியா என்னைய வேண்டாம்னு சொல்லிட்ட.. உனக்கு போன் பண்ணி உன்னை திட்டினேனே.. அன்னைக்கு எல்லாம் மாமா மட்டும் தான் எனக்கு ஆறுதல்.. வேற யார் பேச்சையும் என்னால கேட்கவும் முடியல.. இந்த கோபம் வேற சட்டுசட்டுன்னு முன்னாடி வந்து நிக்கும் எனக்கு!" அவனை பற்றி அவனே சொல்லிக் கொண்டு இருக்க,

"நான் இப்ப வரைக்கும் அப்படி யாரும் இல்லாம தான் சரியா முடிவெடுக்க தெரியாம இருக்கேன் போல!" மனதில் தோன்றியதற்கு சட்டென வார்த்தை கொடுத்து வெளியில் ஆராத்யா சொல்லிவிட,

"ஆரா!" என்று கேள்வியாய் அவன் அழைத்தபின் தான் சுதாரித்தாள்.

தொடரும்..