• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 17

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
372
63
Tamil Nadu, India
அத்தியாயம் 17

கௌசல்யா டாக்டரின் ஆலோசனைப்படி முழு ஓய்வில் இருந்து மெல்லத் தேறத் தொடங்கினார். உடலைத் தேற்ற முடிந்தாலும், தளர்ந்து போன மனதை சரி செய்யவே முடியவில்லை. விழித்திருக்கும் போதெல்லாம் அவர் மனம் வாஸந்தியின் நினைவிலேயே உழன்று கொண்டிருந்தது.

அரவிந்த் இரண்டு நாட்களாக அலுவலகம் செல்லத் துவங்கியிருந்தான்.. தொழிலை நிலை நிறுத்தி, முன்னேற்றத்தை அடைய நிறையப் பாடுபட வேண்டியிருந்தது. அன்றும் வீட்டுக்குத் திரும்பிய அரவிந்திடம்,

“கண்ணப்பா...! ஒரே ஒரு தடவை எனக்காக தேடிப் பாருடா.. சின்ன வயசு.. ஆதரவுக்கும் நம்மள விட்டா யாருமில்லை. அவளைப் பார்த்து நல்ல புத்தி சொல்லிக் கூப்பிட்டா அதுவும் நான் கூப்பிட்டா கண்டிப்பா வந்திடுவா. கொஞ்சம் பிடிவாதம்.. அசட்டுத்தனமா ஏதோ புரியாம வெளியே....”

அம்ம்ம்.. மா... இன்னொரு முறை நீங்க அவ பேச்செடுத்தா.. அப்புறம்... வேண்டாம்மா.. இப்ப தான் கொஞ்சம் மறந்திருக்கேன். மறுபடி கிளராதீங்க.. அப்புறம் நான் வீட்டுக்கு வரவே யோசிக்க வேண்டியிருக்கும். அசட்டுத் தனமா.? அவளுக்கா.. இத்தனை வீம்போட எல்லாத்தையும் உதறிட்டு போனவளுக்காக பாவம் பார்க்காதீங்க.. அஞ்சு வருஷமா தனியா தானே இருந்திருக்கா. அதே போல இப்பவும் இருப்பா.. எத்தனை பிடிவாதம் இருக்கு தெரியுமா? வெறுத்திருச்சும்மா..

நான் அவளுக்கு எப்பவுமே நல்லதை மட்டும் தான் நினைச்சேன். அவ அதுக்கு பெரிய முள் கிரீடத்தையே தலையில் தூக்கி வெச்சுட்டு போய்ட்டா.. அவள உயிரா நினைச்சேன்மா உங்க கிட்ட சொல்லாம கூட கல்யாணம் பண்ணிக்கற அளவு அவ மேல பைத்தியமா இருந்தேன் மா. அத்தனையும் துடைச்சு எறிஞ்சுட்டா. இரண்டாவது முறையும் நான் அவ மேல வெச்ச பிரியத்தை மிதிச்சுட்டு போயிருக்கா.. தனியா போய் கஷ்டப்பட்டா தான் புத்தி வரும்.

சரி... என்னை விடுங்க... உங்க மேல மதிப்பும் மரியாதையும் இருந்திருந்தா, இப்படி செய்வாளா? என் மேல நம்பிக்கை இல்லாம போனவளை இழுத்துட்டு வந்து ப்ரூவ் பண்ண வேண்டிய தேவையே இல்லை. விடுங்கம்மா. எனக்கு நீங்க மட்டும் போதும்மா. நான் குளிச்சிட்டு வரேன்.. டிபன் எடுத்து வைக்கச் சொல்லுங்க.. சாப்பிடலாம்” ஆவேசமாக ஆரம்பித்து வேதனையோடு பேசி விட்டு தன் அறைக்குள் புகுந்தான்..

ஷவரில் இருந்து விழுந்த ஜில்லென்ற நீர் கூட அவன் மனக் கொதிப்பை குளிர்விக்கவில்லை.. தலையைக் கூட துவட்டாமல், ஜன்னலருகே நின்று தோட்டத்தை வெறித்தவனின் கண்களில் உயிர்ப்பில்லை..

‘பெரிய மகாராணி..! போடி... நீ என்ன சொல்றது. நான் சொல்றேன்.எனக்கு நீ வேண்டாம் டி. ஒண்ணுமே தெரியாம வெகுளியா இருந்த உனக்கு இத்தனை அலட்சியமா..! போ... போ... ச்சே. வேண்டாம். இனி உன்னைப் பத்தி நினைக்கவே போறதில்ல.” வெறுப்பின் உச்சத்தில் பொருமினாலும், ஒரு கடுகளவு கூட அவளை தன் மனத்திலிருந்து விலக்க முடியவில்லை. அவளின் நினைவுகளை யாருமறியாமல் தனக்குள் புதைத்துக் கொண்டான். அதன் மேல் பிசினஸ் என்ற அடித்தளத்தை பலமாக அமைத்தான்.. அதன் பிறகு வேலை... வேலை... என்று மூழ்க. ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் கூட போதவில்லை.

கௌசல்யாவின் உடல் நன்கு தேறியதும், பிசினஸில் தனது கவனத்தை திருப்பினார்.. மனம் சற்றே ஆறுதலடைந்தது. அவரின் தனிமையை விரட்டி, அவரை இயல்பாகக், அவரிடம் அதிக பொறுப்புகளைக் கொடுத்தான். களைப்போடு வீடு திரும்பும் கௌசல்யாவிற்கு சீக்கிரம் உறக்கம் வந்து விடும்.

அரவிந்த், தொழிலை விரிவு படுத்த வெளிநாடுகளுக்குப் பறக்க ஆரம்பித்தான். சென்னையின் நிர்வாகம் முழுவதும் கௌசல்யாவின் துணையோடு, சுனில் கவனித்து வந்தான்..

ஆம்..! சுனிலே தான். அன்று ‘ஒசான் டே’ வில் சுனிலை குடும்பத்தோடு சந்தித்த பிறகு, அவனோடு மீண்டும் பேச ஆரம்பித்து இருந்தான். வாஸந்தி வெளியேறியதும்,

“டேய் சுனில்.! மறுபடியும் உன்னோட ஃப்ரண்ட்ஷிப் எனக்கு வேணுன்டா. உன் மேல எனக்கு என்ன கோபம் ன்னு எனக்கே தெரியலை. சாரிடா. அர்த்தமேயில்லா இத்தனை வருஷமா உன்னை தொடர்பு கொள்ளவே முயற்சி பண்ணலை. நீ போன் செய்த போதும் அதை எடுக்காமல் விட்டுட்டேன். சாரிடா. என்னை மன்னிச்சிடு. காயூவையும் மன்னிக்கச் சொல்லு.” என்று நட்பை புதுப்பித்துக் கொண்டிருந்தான். நட்பு ஈகோ பார்ப்பதில்லை. சுனில் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல்,

அரவிந்தின் வற்புறுத்தியதும், தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, சென்னையில் குடியேறினான். காயத்ரிக்கும் சென்னைக்கே மாறுதல் கிடைக்க, சுனில் அரவிந்தின் தொழில்களை நிர்வாகம் செய்யத் துவங்கினான். ஷர்மிதாவின் பிஞ்சுப் பாதங்கள் அடிக்கடி அரவிந்தின் வீட்டையும் கௌசல்யாவின் மனதையும் ஒருங்கே நிறைத்தது.

காலச்சக்கரம் மெல்லச் சுழன்றது. அரவிந்த் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தான். வீடு, தொழில், வெளிநாட்டுப் பயணங்கள் என்று எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் விரைந்தன.

இதோ... இன்று இன்னுமொரு மிகப் பெரிய தொழில் ஒப்பந்தத்தை தன் வசமாக்கிக் கொண்டு ஜெர்மனியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தான். பூங்கொத்தோடு அவனை ஏர்போர்ட்டில் எதிர் கொண்ட சுனிலைத் தழுவி,

“என்னடா இது டிராமா..? எனக்கு நீ பொக்கே தரணுமா? நோ ஃபார்மாலிட்டீஸ்” என்று செல்லமாக கடிந்து கொண்டான்..

“இல்லைடா... உனக்கு தமிழ்நாட்டின் சிறந்த தொழிலதிபருக்கான விருது கிடைச்சிருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷம். காயூ என்னை ஏர்போர்ட்டுக்கு விரட்டி விட்டுட்டா. ஷர்மியும் கூட வரேன்னு ஒரே பிடிவாதம். சமாளிச்சுட்டு ஒடி வந்தேன்.”

ஆசையும் ஆவலுமாக, “கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” என்றவனிடம், “அன்-டைமா இருக்கே மச்சான்.. அப்புறம் ஸ்கூலுக்கு கிளம்ப காலையில ரொம்ப ரகளை பண்ணுவா... வா போகலாம். அம்மா உனக்காக தூங்காம காத்துகிட்டு இருப்பாங்க.”

காரில் ஏறிய அரவிந்தின் தோற்றத்திலும் ஏராளமான மாற்றம்.. வசீகரமும் கம்பீரமும் கூடிப் போயிருந்தது. ஆனாலும் முகத்தில் மாறாத கடினமும், விழிகளில் எதிராளியைக் கூறு போடும் வல்லமையும் நினைத்ததை சாதித்து முடிக்கும் பிடிவாத குணமும் நிரந்தரமாகக் குடியேறியிருந்தன. தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியான அரவிந்துக்கு - அவன் முன்னேற்றத்திற்கு சுனிலும், புதிதாக ஒரு வருடத்திற்கு முன் அவனின் பி.ஏ.வாக நியமிக்கப் பட்ட தினேஷும் இரு கண்களாகத் திகழ்ந்தனர்..

--

அரவிந்தின் வாரிசு ஆரோக்கியமாக வாஸந்தியின் வயிற்றில் வளர வளர, அவளின் மனநிலையும் மெல்ல மாற ஆரம்பித்திருந்தது. நிறைய யோசிக்க ஆரம்பித்தாள். குழந்தையின் நலனுக்காக வேளை தவறாமல் சத்தான உணவுகளையும் டானிக்கையும் சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பேணிக் கொண்டாள்.. அதற்கு நிவி, அன்னம்மாவின் முழுமையான அக்கறையே காரணம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

சங்கர் அவளைத் தன் சகோதரியாகவே முழுமையாக மனதளவில் ஏற்றுக் கொண்டான். அவனின் அன்பில் கரைந்து போய் ‘அண்ணா’ என்று உரிமையாக அழைத்து ஆறுதல் தேடிக்கொண்டாள். மூன்று வருடங்களாகவே தங்கள் சொந்த பந்தங்களின் நிராகரிப்பையும் வெறுப்பையும் மட்டுமே அனுபவித்திருந்த சங்கருக்கும் நிவிக்கும் வாஸந்தியின் வரவு தேனாய் இனித்தது. தனக்கு இன்னும் தாயாகும் பாக்கியம் கிட்டவில்லையே என்று ஏங்கிப்போயிருந்த நிவி, வாஸந்தியை மகிழ்வோடு அரவணைத்துக் கொண்டாள்.

இங்கு வருவதற்கு முன் மெஸ் வைத்து நடத்திய அனுபவம் இருந்ததால் அன்னம்மா மூன்று பேருக்கும் விதவிதமாக வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டாள். இந்தச் சூழ்நிலையில் வாஸந்திக்கு தனிமை உணர்வு குறைந்து,பின் மறைந்தே போனது.

அரவிந்தைப் பற்றிய நிவியின் பேச்சு வாஸந்தியை சிந்திக்க வைத்தது. அதன்பின் அவன்மேல் கொண்டிருந்த அர்த்தமற்ற கோபம் கரைந்து போனது. அவ்வப்போது அரவிந்தின் ஞாபகமும் அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் கிளர்ந்தெழ முகம் வாடிப்போவாள். அத்தனை ஏக்கத்துக்கும் அவனின் புகைப்படமே வடிகாலாய் இருந்தது. இரவு நேரங்களில் மென்குரலில் பேசி மன்னிப்பு கேட்பது தினசரி வழக்கமானது. அவள் மூட் அவுட் ஆகும்போதெல்லாம் சங்கரும் நிவியும் அவளை அழைத்துக்கொண்டு கோயில், சினிமா, வாக்கிங், ஷாப்பிங் என்று சுற்றுவார்கள். அங்கு பணிபுரியும் மருத்துவர்களை ரிலாக்ஸ் செய்ய, மருத்துவமனைக்குள்ளேயே தோட்டமும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு போன்ற இடங்களும் உண்டு. ஸ்ரீபுரம் கோயில் அவள் மனதுக்கு மிகவும் பிடித்தமானதொரு இடம். அங்கே வீற்றிருக்கும் மகாலட்சுமியை கண்டதுமே அவளின் கலக்கமெல்லாம் பறந்தோடிப் போகும். ஸ்ரீயின் பேரழகுத் தோற்றமும் கோயிலின் தூய்மை, அமைதி எல்லாம் அவளுக்குத் தன் தாயின் மடி சேர்ந்த உணர்வை ஏற்படுத்தும்.

வாஸந்திக்கு ஏழாம் மாதம் துவங்கியிருந்தது. தாய்மையின் ஜொலிப்போடு வளைய வந்தாள். சங்கர்-நிவி இருவரும் வாஸந்திக்கு வளைகாப்பு வைபவத்தை நடத்தி முடித்தனர். சங்கர் அழகான பட்டுப்புடவையை வாங்கி வந்திருந்தான். அவர்களின் அன்பின் கனம் தாங்காமல் வாஸந்தி,

“அண்ணா! நீங்க எனக்கு செய்ற உதவிக்கெல்லாம் நன்றிக் கடனைச் செலுத்த இந்த ஒரு ஜென்மம் போதாது. .. நிவி நீயும் ... பேச முடியாமல் போனது.

வாஸும்மா.. இது ஒரு அண்ணன் தங்கைக்கு செய்யற கடமை... இதில் நன்றிக்கடன் எங்க வந்தது? அப்பன்னா மனசளவுல எங்ககிட்டேயிருந்து நீ விலகிதான் நிக்கற.அப்படித்தானே... ஆனா நான் உரிமையோட என் தங்கச்சிக்கு சீர் செய்யறதா நினைச்சுதான் இதெல்லாம் ஏற்பாடு செஞ்சேன். உன் மனசுல மூணாவது மனுஷனாதான் .என்னை........”

“அண்ணா போதும் ... இனி எதுவும் போசாதிங்க. என்னை மன்னிச்சுடுங்க.இனி மேல் இது மாதிரி பேச மாட்டேன்.”விழிகளில் ஈரம் படற கெஞ்சியவளின் தலையை வருடி, “அசடு..! இன்னிக்கு போய் யாராவது அழுவாங்களா? கண்ணைத் துடை மொதல்ல” என்றான்.

நிவேதிதா தான் கலகலப்பாகப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கினாள். வாஸந்தி பிரசவ தேதிக்கு ஒருவாரம் முன்னதாக மட்டும் விடுப்பு எடுக்க முடிவு செய்திருந்தாள். அதனால தினமும் வழக்கம்போல நிவியோடு சேர்ந்து ஹாஸ்பிடல் சென்று வந்தாள். மூவருக்கும் மதிய உணவை தயார் செய்து அன்னம்மா கொண்டு வருவாள். வாஸந்தி அன்னம்மா பெயரில் வங்கியில் கணக்கு ஆரம்பித்து, ஒரு நிலையான தொகையை சேமிப்பாக அவள் பெயரில் போட்டு வந்தாள்.வாஸந்தி பிரசவசத்திற்கு ஒரு வாரம் முன்பே விடுப்பு எடுத்துக்கொண்டு முழு ஓய்வில் இருந்தாள். அப்போதெல்லாம் அரவிந்தின் நினைவு வாட்டி வதைக்க, மனம் அவள் அருகாமைக்காக மிகவும் ஏங்கியது. அவளின் தோள் சாயத் துடித்த மனதை அடக்கும் வழியறியாமல் தவித்துப் போனாள். யாரும் அறியாத வண்ணம் இரவில் கண்ணீர் சிந்துவாள்.

ஒரு நாள் யாருமில்லாத தனிமையில் அவளின் நினைப்பு அதிகமாக . அவனை தன் செல்போனில் அழைத்தாள். அவள் புதிதாக சிம் மாற்றியிருந்ததால் அரவிந்திற்குத் தெரியவாய்ப்பில்லாமல் போனது.

“யெஸ்.. அயாம் அரவிந்த் ஹியர்,” என்ற கம்பீரமான குரலில் சிலிர்த்துப் போனவளாய் மயங்கி நின்றாள். அவளிடம் கொஞ்ச நஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்த மிச்ச சொச்ச கோபமும் ஈகோவும் முழுவதுமாக காற்றில் கரைந்தது.

“ஹலோ... ஹலோ... ”என்று தொடர்ந்த அவனின் குரல் செவிகளத் தீண்டிச்செல்ல, பதில் சொல்ல வகையின்றி அழைப்பைத் துண்டித்தாள். அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்த, அவனின் புகைப்படத்தை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

ஒரு நாள் மாலை வேளையில் நிவியும் அன்னம்மாவும் துணை வர, தோட்டத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தபோது சுளீர் என்று வலி பின்னியெடுக்க, தள்ளாடி நிவியின் கரங்களை பற்றிக்கொண்டாள்.

பதறிப்போய், நிவி, “என்னாச்சு வாஸு.”என்றதும்,”நிவி வலிக்குதுப்பா ... நிக்க முடியல. கால் மடங்குது...அடி வயிறு சுளீருங்குது…தாங்க முடியலை ”… ”லேபர் பெயின் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்.மெதுவா எங்க கையைப் பிடிச்சுக்க. உள்ளே போலாம்.”

அன்னம்மா செய்த முதலுதவிகள் பயனற்றுப் போனது. நிவியின் துணையோடு வாஸந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஒருமணி நேரப் போராட்டத்தின் பயனாக சுகப்பிரசவத்தில், அரவிந்த்- வாஸந்தியின் இளவரசன் அழகுக் குவியலாக இம்மண்ணில் உதித்தான். சங்கரும் நிவியும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்தனர். ..

கொழு கொழுவென்று நான்கு கிலோ எடையுடன் சுருண்ட முடி, ரோஜா நிறம்,மற்றும் தன் தந்தையைப்போலவே புறங்கையில், சிவந்த மச்சத்தோடு பிறந்தவனை நிவி ஆசை ஆசையாய் ஒரு பூங்கொத்தாய் கைகளில் அள்ளிக்கொண்டாள். குழந்தையைப் பார்த்ததும், அன்னம்மா கண் திருஷ்டி படும் என்று ஆலம் கரைத்து வைத்தாள். நிவி, வாஸந்தி கண் விழித்ததும்,

“வாஸு ... இப்ப எப்படி இருக்கு ...? வலிக்குதா? என் மருமகனைப் பாரு... கொள்ளை அழகா இருக்கான். கையில பாரு அதிர்ஷ்ட மச்சம்.!

கண்கள் நிறைய, குழந்தையில் பிஞ்சுக் கால்களை வருடி, “நிவி. அண்ணா எங்கே..? இவனைப் பார்த்தாரா...? சங்கரைத் தேடி கண்கள் சுழன்றன.”

“பார்த்தாராவா...? ம்.. அவருக்கு மருமகனைப் பார்த்துட்டு தலைகால் புரியல. ஹஸ்பிடல் புல்லா ஸ்வீட் சப்ளை பண்ணிட்டு இருக்காரு...”

சொல்லும்போதே கைநிறைய குழந்தைக்குத் தேவையான பொருட்களை கூடை கூடையாய் அள்ளிக்கொண்டு சங்கர் உள்ளே வந்தான்.

“நிவி ... இதெல்லாம் குட்டிப்பயலுக்கு டிரஸ். பியூர் காட்டன். ஒரு முறை அலசி காயவைக்கச் சொல்லி அன்னம்மாகிட்ட குடுத்திடு.. இந்தா பவுடர், லோஷன், ஹேர் ஆயில், எத்தனை முடி பாரு!. .. குட்டித் தங்கத்துக்கு! அதனாலதான் வாஸு டெலிவரி வரைக்கும் வாந்தி பண்ணியிருக்கா.. இல்லை. “ஒவ்வொரு பொருளா எடுத்து அடுக்கிக்கொண்டே உற்சாகமாகப் பேசியவனைக் கண்டு வாஸந்திக்கு கண்கள் நிறைந்தது.

நிவி கன்னத்தில் கைவைத்து, ஒண்ணே ஒண்ணு வாங்க மறந்திட்டீங்க.” என்றதும் குறுஞ்சிரிப்போடு,

கிரேடில்தானே.! வாங்கிட்டேன். அது நேரா நம்ம வீட்டுக்குப் போயாச்சு. வாஸு டிஸ்சார்ஜ் ஆகி நம்ம வீட்டுக்குத்தான் வரப்போறா. அஞ்சு மாசம் ஆகட்டும்.அப்புறம் பார்க்கலாம்”

அதெல்லாம் நான் பாத்துக்கறேன். கொஞ்ச நேரம் உங்க மருமகனை பார்த்துக்குங்க... நானும் அன்னம்மாவும் வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு டிபன் எடுத்துட்டு வரோம். பால் குடிச்சிருக்கா. வாஸு எழுந்துக்கறதுக்குள்ள வந்திடறோம். இரு கைகளையும் நீட்டி குழந்தையை ஆசையோடு வாங்கிக்கொண்டு, தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.டிஸ்சார்ஜ் ஆனதும் வாஸந்தியை தன்வீட்டிற்குத்தான் அழைத்துச் சென்றான். அவளுக்கான படுக்கையறை, தொட்டில் கட்டித் தயாராக இருந்தது.

ஒரு குட்டிக் குழந்தையின் வரவு வீட்டையே சொர்க்கமாக்கியது. ஒவ்வொருவரின் மனதிலும் இருந்த துன்பமும் துயரமும் குழந்தையின் வருகையால் சூரியனைக் கண்ட பனிபோல விலகிப்போனது. குழந்தையின் கையில் இருந்த மச்சம் அரவிந்தை நினைவூட்ட, அவனின் சிறு பதிப்பாக இருந்த மகனின் மேல் வாஸந்தி உயிராகிப்போனாள்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
இருந்தாலும் வாஸந்திக்கு இவ்வளவு அழுத்தம் இருக்கக்கூடாது அரவிந் பாவம் தான், பிள்ளை இருக்குறதுக்கூடா தெரியாம இருக்கான் 😔😔😔😔😔😔😔