• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 19

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
372
63
Tamil Nadu, India
அத்தியாயம் 19

“மனசு சரியில்லை.. நானாக பேசற வரைக்கும் போன் பண்ணாதேன்னு சுனில்கிட்ட சொல்லிட்டாங்க. உங்களுக்குள்ள எல்லாம் சரியாயிருக்கும்னு நினைச்சோம். ஆனா நீ இங்க எப்படி..” ஆதங்கத்தோடு கேட்டாள்.

காயூ கேள்விமேல் கேள்வியாகக் கேட்க கேட்க வாஸந்தியின் கண்களும் முகமும் சிவந்து பளபளத்தன.

“சொல்லுடி. அம்மா நல்லா ஹெல்த்தியா தானே இருந்தாங்க..? அப்புறம் எப்படி... அதுமட்டும் இல்ல எங்க கல்யாணத்துக்கு கூட வரப் பிடிக்காம எதுக்கு வாஸு சொல்லாமெ கொள்ளாம ஓடிப்போன..?”
காயூவின் குரலில் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்ற கட்டளை இருந்தது.

வாஸந்தி சொல்லத் தொடங்கினாள்.

----------------

“நாம ஏர்போர்ட்ல இருந்து திரும்பியதும், என்னை வீட்ல விட்டுட்டு கிளம்பின பிறகு, நைட் அர்வி கிட்டயிருந்து போன்.

“வசும்மா .” குரல் தழுதழுத்தது.”என்னாச்சு அர்வி.. ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு.. மாமாவுக்கு இப்ப பரவாயில்லையா? அத்தை எப்படி இருக்காங்க? சுனில் அண்ணாவும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க.”

“வசு... அ...ப்பா ... போயிட்டார்டா ... என்னை விட்டு …அம்மாவை விட்டு..இந்த உலகத்தைவிட்டே போயிட்டார். நான் பார்த்து ஒரு ரெண்டு நிமிஷம் தான் பேசியிருப்பேன். அதுக்கே ரொம்ப சிரமப்பட்டார். . மறுபடி ஒரு அட்டாக்.”. ‘குரலில் அழுகை...’

உச்சபட்ச அதிர்ச்சி அவளைத் தாக்க, அர்வி... எ..ன். ன சொல்றீங்க..? எப்படி. ? என்றவளின் விழிகளில் கண்ணீர் உற்றெடுத்தது...

“ஆமாம் வசு. ... இப்பதான் பத்து நிமிஷம் தான். ஆகுது.. அம்மா அதைக் கேட்டு மயங்கி விழுந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு பக்கம் ட்ரீட்மெண்ட். நடக்குது... இப்ப வீட்டுக்கு கிளம்பிடுவோம். அங்க போனதும் உன்கிட்ட பேச இன்னும் இரண்டு நாளைக்கு சந்தர்ப்பமே இருக்காது. . அத்தைகிட்ட சொல்லு. இப்ப எழுப்ப வேண்டாம். காலையில் சொல்லிடு. அதுக்குத்தான் கூப்பிட்டேன்”.

“அர்வி ..! நான் அம்மாவோட கிளம்பி வரட்டுமா..? அத்தையை நான் பாத்துக்கறேன்... ”

“இல்லை வசும்மா.. வேண்டாம். அம்மாகிட்ட இந்த சந்தர்ப்பத்தில் உன்னை அறிமுகப்படுத்த முடியாது. இப்ப என்னால பேச முடியல. இரண்டு நாள் கழித்து பேசறேன். அப்ப மீதி விவரங்களைச் சொல்றேன். இங்க அப்பா பிசினஸ்ல நிறைய பிராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ணியிருக்கார். அதுதான் அவர் உயிரைப் பறிச்சிருக்கு. டாக்டர் அங்கிள் கூப்பிடறார். வெச்சிடறேன்’’.

அளவுக்கு அதிகமான சோகத்தை தாங்கியிருந்ததும் அதையும் மீறி முறையாக தன்னை அழைத்து விபரம் சொன்னவனை நினைத்து பெருமையாக இருந்தாலும் தன் மாமனாரின் மறைவு அவளை துயரத்தில் மூழ்கடித்தது.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தன் தாயிடம் விஷயத்தை தெரிவித்தாள். அரவிந்தை தொடர்புகொள்ள பல முறை முயன்றும் முடியாததால் சுனிலை அழைத்தாள்.

சுனில், ‘வாஸு ...! இப்பத்தான் காரியம் எல்லாம் முடிஞ்சுது. அரை மணி நேரம் முன்னால தான் வீட்டுக்கு வந்தோம். அம்மாதான் ரொம்ப இடிஞ்சு போயிருக்கிறாங்க. பிரஷர் குறையாததால் டிரிப்ஸ் போட்டிருக்காங்க. தூங்குறதுக்கும் சேர்த்து . நிறைய கூட்டம் மா... இவன் ஒருத்தனா திணறிக்கிட்டு இருக்கான். அவனால இப்ப உன்கூடப் பேசமுடியாது. எங்க வீட்லயிருந்து அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லோரும் வந்திருக்காங்க. நைட் படுக்க வரும்போது உன்கிட்ட பேசுவான். நான் அவன்கூடவேதான் இருக்கேன். கூட்டம் அதிகமா இருக்கு”

“அண்ணா,..ஹ உங்க வீட்ல வரும்போது சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போமே... இப்ப கிளம்பி வரட்டுமா?”

“இல்லம்மா .. வேண்டாம்! அரவிந்த் ரொம்ப கலங்கிப் போயிருக்கான். பிசினஸ்ல ஏகப்பட்ட குழப்பம், பிரச்னை. அதை உடனே சால்வ் பண்ணலைனா தொழில் மொத்தமா போயிடும். அவனுக்கு ஃபமிலியைப் பத்தி யோசிக்கக்கூடாத அளவு நிலைமை சிக்கலா இருக்கும்மா. பாவம் அவன் அவுங்கம்மாவுக்கு கொஞ்சம் சரியாகட்டும்.

நீ காலேஜ் ரி ஓப்பன் ஆனதும் காயூ கூட வழக்கம்போல கிளம்பிடு. இங்க பிராப்ளம் செட்டிலாக மாதக்கணக்கில் ஆகும்போல் தெரியுது. எனக்கு கால் லெட்டர் வரும்வரை இங்கேயே இருந்து அவனுக்கு ஹெல்ப் பண்ணலான்னு டிசைட் பண்ணிட்டேன்.”

’அந்த அளவு என்ன பிரச்னை சுனில் அண்ணா?”

’அதை விடும்மா... நாங்க பாத்துக்கறோம். ஆமா யோகேஷ் மறுபடி வந்து ஏதாவது தொல்லை செஞ்சானா?”

“இல்லண்ணா.. வரலை .. வந்தால்லாம் இனி நான் பார்த்துக்குவேன். எனக்கு மேரேஜ் ஆயிடுச்சுங்கறதே பெரிய தைரியத்தைக் கொடுத்திருக்கு. .. அர்வி நினைப்புதான் .. ஒரு இரண்டு நிமிஷம் பேசினா கூட போதும். . அங்க பக்கத்திலதான் இருக்காரா? ”

“இரு பாக்கறேன்..”

சிறிது நேர மௌனத்துக்குப்பிறகு,

“வசு ம்மா” அரவிந்தின் குரல் கரகரத்தது.

“அர்வி ... எப்படி இருக்கீங்க? அத்தைக்கு இப்ப பரவாயில்லையா? ”

“இருக்கேன்டா. அம்மாவுக்கு தூக்கத்துக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க. கட்டாயப்படுத்தியதும் பால் அரை டம்ளர் குடிச்சாங்க.தூக்கத்துலகூட அழுது புலம்பிக்கிட்டே இருக்காங்க.. என்னால முடியலைடா வேதனையா இருக்கு. என் அப்பா...”

“அர்வி.. ப்ளீஸ். எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க. நீங்களே ஃபீல் பண்ணா அத்தையை யார் பாத்துக்குவா? ஒழுங்கா சாப்பிடுங்க ... முடிஞ்சபோது போன் பண்ணுங்க...”

“சரி வசு. யாரோ விசாரிக்க வராங்க. அப்புறமா கூப்பிடறேன்.”

வாஸந்திக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவனுடைய துயரத்தில் பங்குகொள்ள முடியாத வேதனை. அதன்பிறகு வந்த ஒரு வாரமும் அரவிந்தை மட்டுமல்ல சுனிலிடம் கூட பேச முடியவில்லை. காயத்ரியிடம் கேட்டபோது அவளும்கூட மழுப்பினாள். மாலதிக்கு மகளின் சோர்வும் மனக்கலக்கமும் புரிந்தாலும் ஆறுதல்கூற வழியில்லாமல் தவித்தார்.

அடுத்த வாரம் காலையில் ஏழு மணிக்கே தன் வழக்கமான கணீர் குரலில் “மாலதி அக்கா”என்று யோகேஷ் ஆஜரானான். மாலதிக்கு அதிர்ச்சியோடு எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற படபடப்பும் கூடியது.

16

உள்ளே வந்த யோகேஷின் தோற்றத்தில் பெருத்த மாற்றம். ஃபார்மல் உடையில், சீராக வெட்டப்பட்ட கேசம், கிளீன் ஷேவ் செய்த முகம் என்று கண்ணியமான தோற்றத்தில் வந்தவனைப் பார்த்ததும் மாலதிக்கு குற்றவுணர்ச்சி மிகுந்தது.

“என்னக்கா... முழிக்கற..? என்னடா ரவுடியாட்டம் திரிஞ்சவன் இப்படி இருக்கானேன்னு பார்க்கிறியா? எல்லாம் நம்ம வாஸந்தியைப் பார்த்த நேரம்தான். பிரின்சிபாலோட மருமகனாகப்போறேன். அதோட ஒரு பொண்ணை மரியாதையோட கூட்டிட்டுப் போற அளவு யோக்கியதையா இருக்கணுமில்ல. ஒரு வார்த்தை சொன்னதும் பசங்க என்னை பார்லருக்கு கூட்டிட்டுப் போய்விட்டானுங்க. இப்ப பார்க்க கொஞ்சம் சுமாரா இருக்கேன்ல” முகத்தில் கொஞ்சம் வெட்கத்தின் சாயல்.

மாலதிக்கு தன்ன்டைய உணர்வுகளை வரையறுக்க முடியாமல் போனது. அவன் மேல் தோன்றியது பரிதாபமோ, இரக்கமோ, வாஞ்சையோ ஏதோ ஒன்று. ஆனால் கண்டிப்பாக கோபமோ, வெறுப்போ இல்லை என்பது மட்டும் புரிந்தது.

பத்து வருடங்களுக்குமேலாக ஆசிரியராக இருந்த அவருக்கு, அவன் நடத்தையில் பேச்சில் கல்மிஷம் இல்லை என்பது பார்த்த முதல் நாளே தெரிந்தது. யோகேஷ் ஒரு ‘ஸ்பாயில்ட் சைல்ட் ’ என்று அனுமானித்தார். வாஸந்தியின் விஷயத்தை மனம் நோகாமல் எப்படிச் சொல்வது? என்று குழம்பினார்.

முதன் முதலாக வாய் திறந்து கனிவுடன் “தம்பி,! டிபன் சூடா இருக்கு. முதல்ல வந்து சாப்பிடு. அப்புறமா பேசலாம்.” என்றதும் மாலதியை நேர் பார்வை பார்த்து, ஒரே ஒரு நொடி புருவத்தை சுளித்தான். பின் பதில் பேசாமல் சாப்பிட அமர்ந்தான்.

கையைத் துடைத்துக்கொண்டே, ”ம்... சரி ...இப்ப நீ சொல்ல வந்த முக்கியமான விஷயத்தைச் சொல்லு” என்றான்.

மாலதிக்கு தூக்கி வாரிப்போட்டது. அவனின் புத்தி கூர்மையை வியந்து, இவன் மட்டும் நல்வனாக இருந்திருக்கக்கூடாதா? என்று ஏங்கினார். எப்படித் துவங்குவது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டிருந்தபோது, வேகமாக வெளியே வந்த வாஸந்தி,

“மாமா. ” என்றாள். இப்போது அதிர்ந்து போனது யோகேஷ்தான்!

“உங்களைத்தான் கூப்பிட்டேன். நீங்க என் அம்மாவை நிமிஷத்துக்கு ஒரு தடவை ‘அக்கா’ ன்னு உரிமையோட கூப்பிட்டுப் பேசறீங்க. அப்ப நான் உங்களை மாமான்னுதானே கூப்பிடணும். .. அம்மா சொல்லத் தயங்கற விஷயம் என்னைப் பத்தினது. அதனால அதை நானே சொல்றேன். . போன வாரம் எனக்கு கல்யாணமாயிடுச்சு” பட்டென்று விஷயத்தை போட்டுடைத்தாள். எதிர்ரபராத விஷயத்தைக் கேட்டதும் யோகேஷின் முகம் பயங்கரமாக மாறியது. கோபத்துல முகம் ஜிவுஜிவுக்க

"என்ன வாஸந்தி... எதுல விளையாடறதுன்னு கிடையாதா? "

“இல்ல மாமா ... இந்த விஷயத்துல யாராவது சும்மா விளையாட்டா பேசுவாங்களா? சத்தியமாதான்... அவர் பேர் அர்விந்த். எம்.டெக் முடிச்சிருக்கார். அவங்கப்பா பிசினசை ஏற்று நடத்தப் போறார். . பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்.

மௌனம்.. மௌனம் பல நிமிடங்கள் நிசப்தமாகக் கழிய ... யோகேஷன் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது.

இருவரும் பயந்து போனார்கள். கோபப்படுவான் என்று எதிர்பார்த்தபோது அவனின் பலத்த சிரிப்பு அச்சத்தையே ஏற்படுத்தியது.

“நானே எத்தன். என்கிட்ட யாரும் தப்பிக்கவே முடியாதுன்னு கர்வமாக்கூட இருந்தேன்... ஆமா வாஸந்தி… எத்தனை கெடுபிடி. . காவல் ... கண்காணிப்பு... எல்லாத்தையும் மீறி அத்தனை பேரையும் முட்டாளாக்கியிருக்கீங்க....” ஏன்..? ஏன் இப்படி செஞ்செஞ்சீங்க. உனக்கு பிடிக்கலைன்னா ... எப்பவோ என்கிட்ட சொல்லி இருக்கலாமே. மாலதி அக்கா.! ஏன் வாயே திறக்காம நிக்கற. வந்து உட்காரு. நம்ப வச்சு கழுத்தை அறுத்திட்டியே...உன் படிச்ச புத்திய காமிச்சுட்ட இல்ல....

நான் கொஞ்சம் சரியில்லாதவன்னு வந்த அன்னிக்கே சொன்னனே..? முறையா சம்பாதிக்கலை. அதையும் ஒத்துகிட்டேன். என் விஷயம் பூரா நானே புட்டு புட்டு வெச்சிட்டேன்.அப்ப ஏன் மறுத்துப் பேசல?

இப்பவும் சொல்றேன் நான் பொண்ணுங்க பின்னாடி அலையறவன் கிடையாது. நான் பார்த்து ஆசப்பட்டது முதலும் கடைசியுமா வாஸந்தி மட்டும்தான்...

என் யோக்யதைக்கு கல்யாணமே வேணாம்னுதான் நெனச்சிருந்தேன். ஆனா... வாஸந்தியை பார்த்து கொஞ்சம் சலனம். சரி இவ நம்ம வீட்டுக்கு வந்தா நாமளும் தொழிலை கொஞ்சம் முறைப்படுத்திக்கலாம். நேர்மையா ஏதாவது செஞ்சு பொழச்சுக்கலாம்னு முடிவுசெஞ்சேன். என் மாதிரி ஆளுக்கு இந்த மாதிரி ஆசையே வராதா என்ன..? இல்ல வரக்கூடாதா..?

ஒத்துக்கறேன். ஒரு அம்மாவா உன் மகளுக்கு நல்லது பண்ண முடிவெடுத்திருக்கிறீங்க. சரி அதுக்காக என் முதுகுல ஏன் குத்தினீங்க..? படிச்ச படிப்பு இதைத்தான் சொல்லிக் கொடுத்ததா..? பேசு ஏன் மௌனமா இருக்க..? பதில் சொல்ல முடியலையா... நான் உம் பொண்ணுகிட்ட எதுனா வம்பு பண்ணினா? கையைப் புடிச்சு இழுத்தனா..? ஒத்தை வார்த்தை பேசலையே. மரியாதையாதானே நடந்துக்கிட்டேன். ஏன் இப்படி செஞ்ச..? சொல்லு” சீறியவனின் குரல் சிங்கத்தின் கர்ஜனை போன்றே இருந்தது. மாலதியால் அவனின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நேர்மையான ஆசிரியரான அவருக்கு தன் செயலை நியாயப்படுத்த முடியவில்லை... அவனின் கேள்விகள் அவரின் மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்க தாமாகவே தலைகுனிந்தது.

வாஸந்திதான், “மாமா.! நீங்க பேசிய அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். . யாராலும் மறுக்க முடியாது. இன்னிக்கு வரை உங்க பேக்கிரவுண்ட் என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா முதல் நாள் உங்களைப்பத்தி நெகடிவ்வா இருந்தாகூட அதை மறைக்காம சொன்னீங்க. பாருங்க, அப்பவே நீங்க நியாயவாதின்னு புரிஞ்சுகிட்டேன்.

எங்ககிட்ட வந்து வாஸந்தியை நான் கல்யாணம் பண்ணப்போறேன்னு நீங்களாகவே முடிவெடுத்ததை தவிர வேற எதுவும் அடாவடியா செய்யல. ஒரு தப்பான பார்வையோ பேச்சோ இருந்ததும் இல்லை. உங்க பேச்சில ஒரு கெத்தோட கண்ணியமும் இருந்தது.

உங்க யாரையுமே தேவையில்லைன்னு தான் அம்மா எல்லாத்தையும் விட்டுட்டு தனியா வந்தாங்க. இனி அந்த சொந்தத்தை புதுப்பிக்க ஒரு நாளும் அவங்க விரும்பல. நீங்க படிச்சு நல்ல வேலையில இருந்திருந்தா கூட இதே முடிவு தான் மாற்றமில்லை..,

அதனால உடனே எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் பண்ணத் துடிச்சாங்க. அதுக்கு நீங்களும் ஒரு காரணம். செக்யூரிட்டி அதுஇதுன்னு ரொம்ப பயமுறுத்தினீங்க. கட்டுக்கட்டா பணத்தை குடுத்து சீக்கிரமா கல்யாணம் நடந்தே ஆகணும்னு கண்டிஷன் போட்டீங்க. உங்ககிட்ட பேசி அதை நீங்க மறுத்துட்டு கட்டாயமா தாலி கட்டிட்டா என்ன பண்றதுன்னு.. பயந்தாங்க. அதனாலதான் இதை மறைக்க வேண்டியதா போச்சு.

ஆனா அம்மாவுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் நடந்திருக்கு மாமா. அரவிந்த், அம்மா பார்த்த மாப்பிள்ளை இல்லை. . இரண்டு வருஷமா நான் உயிரா லவ் பண்ணியவர்...” என்றதும் மாலதியும் அதிர்ந்துபோனார்.

“ஆமாம்மா... சாரி... உங்களுக்ககே தெரியாது. சுனில் அண்ணா இவர் வீட்டில் தான் தங்கிப் படிக்கிறார்.”

என்று ஆரம்பித்து ஹால் டிக்கெட் தொலைந்து போனதிலிருந்து முழுவதையும் சொல்லி முடித்தாள்.

“மாமா ... இப்ப சொல்லுங்க. எனக்காக அம்மா அப்பா சம்மதம் கூட கேட்காமல், உடனே மேரேஜுக்கு ஒத்துக்கிட்டவரை விட்டுட்டு வேற ஒருத்தரை நான் மனசாலகூட நினைக்க முடியுமா? உங்களுக்கு நான் செஞ்சது துரோகமா இருக்கலாம். என் மனசில அரவிந்தை சுமந்துகிட்டு நான் எப்படி உங்களை...... நீங்க என் சம்மதம் கேட்டிருந்தா கண்டிப்பா மறுத்திருப்பேன். சாரி மாமா ... ஆனா என்கிட்ட நீங்க கேக்கலையே”

இடையில் குறுக்கிடாமல் சோபாவில்சாய்ந்து கண்களை மூடி வாஸந்தி சொன்னது முழுவதும் கேட்டிருந்தான். சிறிது நேர யோசனைக்குப் பிறகு ,

“சரி வாஸந்தி... எனக்கு நீங்க இப்படி செஞ்சுட்டீங்க. அப்படீங்கற கோபம் என்னிக்கும் மறையாது. ஆனா உன் பேச்சில ஒரு நியாயம் இருக்கு. உன்கிட்ட நான் சம்மதம் கேட்டிருக்கணும். தப்புதான். . ஒருத்தரை மனசார ஏத்துகிட்டு அவங்ககூட வாழ முடியலைன்னா எத்தனை வலிக்கும்னு இப்ப புரியுது. போனது போகட்டும். அந்த அர்விந்த் எப்படி..? நல்லா விசாரிச்சிங்களா..? அவன் எங்க இருக்கான்..? நீ அவன் வீட்டுக்குப் போகலையா..? என்றான். ”

அவனை முழுதாக ஏமாற்றி இருக்கிறோம். ஆனாலும் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அக்கறையாக விசாரித்தவுடன் ஏதோ ஒன்று மனசில பாரமாய் ஏறி மாலதியை அழ வைத்தது. முரடன், போக்கிரி, பொறுக்கி என்று நினைத்ததெல்லாம் மடமடவென்று சரிய அவனின் பெருந்தன்மையான மனது விஸ்வரூபமாய் எழுந்து மாலதியை குறுக வைத்தது.

“யோகேஷ் தம்பி என்னை மன்னிச்சுடு. என் லைஃப்ல எனக்குக் கிடைச்ச ஏமாற்றம் என் பொண்ணுக்கு வரக்கூடாதுன்னு அவசர முடிவெடுத்து விட்டேன். ஆனா நீ மனசால ரொம்ப உயர்ந்தவன்னு நிரூபிச்சு என்னை குன்ற வெச்சுட்ட. மன்னிச்சுக்கோப்பா.”

“விடு மாலதிக்கா . இனி வாஸந்தி வேற ஒருத்தனுக்கு சொந்தமானவ. அவ நினைப்பு கூட என் மனசில வராது. ஆனா உரிமையா மாமா ன்னு என்னைக்கூப்பிட்டு பேசினா பாரு அதனால அவ தாய் மாமனா இந்த வீட்டுக்கு வரப் போக இருக்க அனுமதி குடுக்கணும். .. குடுப்பியா?”

“என்ன மாமா ..! நீங்க எப்படி அதிகாரமா ‘மாலதி அக்கா’ ன்னு கூப்பிட்டுகிட்டு உள்ளே வருவீங்களோ, அதே மாதிரி எப்பவும் வரலாம் .. இது உங்க அக்கா வீடுதான். .. அரவிந்த் சென்னையில இருக்கார். ..” ஐக்என்று முழு விவரமும் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த காயத்ரி,

“யோகேஷ் இத்தனை நல்லவனா..? நம்பவே முடியல. அப்புறம் எதனாலடி நீ எங்ககிட்ட கூட சொல்லாம ஊரைவிட்டுப் போன?... ”

“யோகேஷ் மாமா எத்தனைக் கெத்தனை நல்லவர்னு தெரிஞ்சுதோ அதே மாதிரி அரவிந்த் பத்தி தெரிஞ்சிக்கவும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சுது காயூ...!”

காயூ புருவத்தை உயர்த்தி வாஸந்தியை யோசனையாகப் பார்த்தாள். “என்னடி...? அவ்வளவு பெரிய சந்தர்ப்பம்” குரலில் காரம்.

ஆமா காயூ. அர்விக்கு அப்பா இல்லை - அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. - பிசினஸ் நெருக்கடின்னு நானும் பதினைஞ்சு நாள் விட்டேன். அதுக்குப் பிறகு கூட அவர்கிட்டயிருந்து போனே வரலை. அப்படியே பேசினாகூட ஒரிரு வார்த்தைதான், அப்புறம் - “ப்ளீஸ் டயர்டா இருக்குடா.. அப்புறம் பேசலாம்.”. இதேதான். எனக்கு சலிச்சு போயிருச்சு காயூ. காலேஜ் வேற திறக்கப்போகுது. அதுக்குள்ள மெட்ராஸ்ல சொல்லி தேர்ட் இயர் சேர்ந்துக்கலாம்னு சொன்னார். அதுபற்றி பேச்சே இல்லை. அதோட சுனில் அண்ணாவும் பிஸி. பிஸின்னு மழுப்பினார். எனக்கு இங்க இருக்கவே முடியல. அம்மா என்னை சமாதானப்படுத்தினாக் கூட அவங்களும் கவலைப்பட்டாங்க. - லவ் மேரேஜ்னு தெரிஞ்சு பயம்கூட வந்திடுச்சு.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
வாஸந்திக்கு யோகேஷ் கிட்ட பேசுற அளவுக்கு தைரியத்தை கல்யாணம் கொடுத்திருக்கு சூப்பர்