• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 10

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 10 (1)

கரையோரம் படர்ந்திருந்த அந்த ரோசா வண்ண மலர்களில் சில மலர்கள், காற்றில் உந்தப் பட்டுக் கடலினுள் சென்று விழ, அந்த மலர்களை மீண்டும் அள்ளி வந்து கரோயோடு சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தன கடல் அலைகள்.

மலர்களோடு வந்த கடல் அலைகள் கரையைத் தழுவிச் செல்வதையே வேடிக்கை பார்த்தபடி மரக்குற்றி ஒன்றில் அமர்ந்திருந்தாள் தேனு.

அதே குற்றியில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தான் இசை. நெடு நேரமாக இருவரும் மௌனத் தவத்தில் இருக்க, அந்தத் தவத்தினை தேனுவே மெல்லக் கலைத்தாள்.

"ஏதவோ கதைக்கோணும் எண்டு சொல்லீட்டு.. இப்புடி சைலன்டா இருந்தால் என்ன அர்த்தம்.."

"கதைக்க வந்த விஷயத்தை எப்புடி ஆரம்பிக்கிறதுன்டு யோசிக்கிறேனென்டு அர்த்தம்.."

"ஓ.."

"ம்ம்.."

"இன்னும் யோசிச்சு முடியலியோ.."
எனத் தேனு கேட்டு முடிக்கும் போதே, இசைக்குத் தெரிந்த நண்பர்கள் இருவர் அவனை நோக்கி வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் இருவரும் தங்களுக்கு நடுவில் வந்ததால்,தேனுவிடம் மனம் விட்டுப் பேச நினைத்ததைப் பேச முடியவில்லையே என்கிற கடுப்பு இசைக்கு.

"டேய் மச்சான் இங்க என்னடா செய்றாய்.."

"ஆ.. கத்தரிக்காய் புடலங்காய் வாங்கலாம் என்டு வந்தனான்.."

"அது சரி.. கடற்கரையில அது எல்லாமா விளையுது.."

"ஓமோம் அது தான் விளையது.."

"அது சரி.. சிஸ்டர் யாரு உன்னோட ஆளோ.."
என வந்தவர்கள் கேட்க, ஒரு கணம் திடுக்கிட்டுப் போய்த் தேன்மதியைப் பார்த்தவன், அவளும் தன்னைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்ப்பதைப் பார்த்ததும், கொஞ்சம் கூட தாமதிக்காமல்
"ஓம்.. எப்புடிக் கண்டு பிடிச்சீங்கள்.."
என்று சொல்லி விட்டு மீண்டும் தேன்மதியைப் பார்த்தான்.

அவளோ பதில் சொல்லாமல் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையைப் பாத்தா தெரியுமேடா.. அது தான் சிஸ்டரைப் பாக்கும் போது உன்ரை கண்ணுக்குள்ள காதல் பொங்கி வழியுதே பிறகென்ன.."

"ஓ.. அது வேறை உங்கடை கண்ணுகளுக்குத் தெரியுதா.."

"தெரியாம பின்னே.. எங்கடை வேலையே அது தானே.."

"தெரியுதில்லே.. பிறகென்ன சிவபூசைக்குள்ள எருமை மாதிரி.. நிண்டு கொண்டு கொஞ்சம் தனிய விட்டிட்டுப் போறது.."

"அதென்னடா சிவபூசைக்குள்ள எருமை.. அது கரடி எல்லோ.."

"நீங்கள் ரெண்டு பேரும் எருமை தானே.."

"அது சரி இதுக்கு மேல நிண்டால்.. பிடிச்சுக் கடலுக்க போட்டாலும் போட்ருவாய் நீ.. நாங்கள் போய்த் தொலையிறம்.. நீ உன்ரை காதல் பயிரை வளரு.."

"நீங்கள் விட்டாத் தானே வளக்க.."

"கல்யாணத்துக்கு மறக்காமச் சொல்லுடா.."

"சீக்கிரமா இடத்தைக் காலி செஞ்சீங்கன்னா சொல்றதைப் பத்தி யோசனை செய்யப்படும்.."
என இசை முடிப்பதற்குள், அந்த இடத்தை விட்டு அவனது நண்பர்கள் ஓடியே போய் விட்டார்கள்.

அவர்கள் சென்ற பிற்பாடு, இசையைப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள் தேன்மதி.

"என்ன நீங்கள்.."

"என்ன நான்.."

"என்னையப் பாத்து அவையள் உங்கடை ஆளோ எண்டு கேக்க ஓம் எண்டு சொல்லுறியள்.."

"சரி நான் தான் ஓம் எண்டு சொன்னான்.. நீ டக்கெண்டு இல்லை எண்டு சொல்ல வேண்டியது தானே.."

"அது.."

"ஆ என்ன அது.."

"நீங்கள் ஏன் இல்லை எண்டு சொல்லேல்லை.."

"இல்லை எண்டால் தானே இல்லை எண்டு சொல்லோணும்.."
என்றவனின் பதிலில் வேகமாக எழுந்தவள், அங்கிருந்து செல்ல முயல, அவள் எழுந்த வேகத்தில் அவளது வலது பக்கத் தொடை வலி காணவே, கால் தடுமாறிக் கீழே விழப் போனவளை, மெல்லத் தாங்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டான் இசை.

சில நிமிடங்கள் அவன் மடியில் இருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், அதன் பின்னரே தான் இருக்கும் நிலையை உணர்ந்து பதறிக் கொண்டு மீண்டும் வேகமாக எழப் போக, சட்டென்று அவளைப் பிடித்துக் கொண்டான் இசை.

"இரு இரு.. திரும்ப வேகமா எழும்பி விழுந்து வைக்காத.. நானே இறக்கி இருத்தி விடுறன்.."
என்று கொண்டே அவளை மெல்லத் தூக்கி அந்தக் குற்றியில் அமர வைக்கப் போனான் அவன்.

அந்த நேரத்தில் கைகளைக் கோர்த்தபடி வான்மதியும் தமிழ்பரிதியும் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த தேன்மதியோ சங்கடத்தில் நெளிந்தாள்.

"ஏய்.. நெளியாதடி நீ நெளியிற நெளிவுக்கு கீழ எங்கயும் போட்டுறப் போறன்.."
என இசை சொல்ல, இவன் செய்யக் கூடியவன் தான் என்பது போல, சட்டென்று அவனை இறுகப் பற்றிக் கொண்டாள் தேனு.

அருகில் வந்ததும் தேனுவின் முகத்தில் தெரிந்த வலியின் கோடுகளில்
"என்ன தேனுக்குட்டீ.. கால் ஏதும் நோகுதோ.."
எனப் பதறிக் கொண்டு வந்தான் தமிழ்.

"கொஞ்சம் நோகுது தான் தமிழ்த்தான்.."

"ஏன் என்ன நடந்த.."

"அது.. ஒண்டுமில்லை தமிழத்தான்.."

"உன்ரை முகமே சரியில்லையே.. இவன் ஏதாச்சும் வம்பிழுத்தவனோ.."

"சே சே.. அப்புடி எல்லாம் இல்லை.."
என வேகமாகச் சொன்ன தேன்மதியை, இமைக்காமல் பார்த்திருந்தான் இசை.

தம்பியின் பார்வையில் எதையோ புரிந்து கொண்ட தமிழ்
"உனக்கு நடக்கக் கஷ்டமா இருக்கும்.. ஆட்டோ பிடிச்சு விடுறன்.. நீ அக்காவோட வீட்டை போ.."
என்று கொண்டே ஆட்டோ ஒன்றை வரவழைத்து தமக்கை தங்கை இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டுத் தம்பியின் பக்கம் திரும்பினான்.

"என்னடா நடக்குது இங்க.."

"என்ன நடக்குது.. அங்கா ஒரு நாய் நடக்குது.. பக்கத்துல மனுஷர் நடக்கினம்.. அவ்வளவு ஏன் இப்பக் கொஞ்சம் முதல் நீங்களும் கூட நடந்து தானே வந்தனீங்கள்.."

"பார்ரா.. என்ரை தம்பிக்கு சமாளிக்கச் சுத்தமாவே வருகுது இல்லை.."

"தெரியுதில்லே பிறகு என்ன கேள்வியாம்.."

"சரி சொல்லு.. தேனுட்டை உன்னோட லவ்வை சொல்லீட்டியோ.."

"எப்புடிண்ணா.. எப்புடி உங்களுக்குத் தெரியும் நான் அவளை லவ் பண்றது.."

"அதென்ன பெரிய விஷயம்.. அது தான்.."

"போதும் நிப்பாட்டுங்கோ.. இப்ப என்ன முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தாத் தெரியும் எண்டு சொல்லப் போறியள் அப்புடித் தானே.."

"கரெக்டு.."

"இப்போ யாரு முயல் யாரு நாயி.."

"அதெல்லாம் நான் சொல்ல மாட்டன்.."

"அப்புறம்.."

"நீ சொல்லு உன்னோட காதல் கதையை.."

"என்னத்தைச் சொல்ல.. அவ ஏத்துக்குவாளோ இல்லையோனு உள்ளூர பதட்டமா இருக்கு.. இருந்தாலும் ஒரு நம்பிக்கை.."

"அது சரி.. எப்ப பாரு கீரியும் பாம்பும் மாதிரி நம்மக்கிட்டே சண்டையாப் போடுறவன் தீடீரெண்டு வந்து.. லவ்வை சொன்னா எந்தப் பொண்ணு தான் ஏத்துப்பா சொல்லு.."

"அப்போ என்னதாண்ணா செய்யிறது.."

"அண்ணா உனக்கு ஐடியா குடுக்கிறேன்.."

"அடிகிடி வாங்க வேண்டிய தேவை வராதே.."

"சே சே.. அந்தளவுக்கு போகாது.."

"அப்புடியெண்டால் சரி தான்.. சொல்லுங்கோ அந்த ஐடியாவைக் கேப்பம்.."

"இப்போ நீயாப் போய் காதலை சொன்னால் தானே தேனு அடிக்க வரும் எண்டு யோசிக்கிறாய்.."

"நிஜமாவே அடிப்பாளா அண்ணா.."

"சொல்ல ஏலாது எல்லோ.."

"அதுவும் சரி தான்.. சரி சொல்லுங்கோ.. நானா போய் சொன்னால் அடிக்க வருவாள் எண்டால்.. வேறை ஆரைத் தூது விடுறது.."

"அம்மாவை விடுவம்.."

"அவா என்னைய ஓட விட்டு அடிக்கவா.."

"அப்புடி இல்லைடா.. அம்மாட்டைப் போயி அம்மா நானு தேனுவை விரும்புறன் அவளை எனக்குக் கட்டித் தருவீங்களானு கேளு.."

"கேட்டா.."

"கேட்டுப் பாரு.."

"அதுவும் சரி தான்.."

"சரி இப்ப சொல்லு.. எப்போ காதல் கடல்ல தொபுக்கடீரெண்டு குதிச்சனீ.."

"அது தான் எனக்கே தெரியாத சங்கதி.. எப்ப பாரு அவளோட சண்டைக்குப் போய் தனகிறது தான் எனக்கு வேலை.. எப்ப அவளைக் காதலிக்க தொடங்கினேன்னு தெரியலை.."

"ஏதோ ரெண்டு பேரும் பிடுங்குப்பாடு இல்லாமல் சேர்ந்தால் சரி தான்.."

"ஆனா ஒரு விஷயம் மட்டும் அண்ணா.. அவ வாழ்க்கையில கண்டு வந்த கஷ்டங்களைக் கேட்டதும் கொஞ்சம் உள்ளுக்க ஒரு மாதிரி போயிட்டுது.. அதைக் கேட்ட பிறகு அவளோட சண்டைக்குப் போறதை நான் விட்டால்.. அதை அவளால ஏற்றுக் கொள்ள முடியாது.. எங்க தன்ரை வாழ்க்கையில நடந்த கஷ்டங்களால தான் நான் தன்னில அனுதாபம் காட்டுறனோன்டு அவளுக்குத் தோணக்கூடாதெல்லோ.. அதோட அவளோட தனகாட்டிக்கு எனக்குத் தூக்கமே வராதண்ணா.. கடைசியா இப்ப நான் எடுத்த முடிவு அவளோட சண்டை போட்டுக் கொண்டே அவளுக்கு எப்பவுமே நான் துணையா இருக்கோணும் எண்டது மட்டும் தான் அண்ணா.."

"எனக்கு உன்னோட மனசு புரியுது இசை.. கண்டிப்பா அவ உன்னைய ஏத்துப்பாடா.. வா அம்மாவோட காதுல போட்டு வைப்பம்.."
என்று கொண்டே தன் தம்பியுடையானை அழைத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான் தமிழ்.

அவர்கள் இருவரும் வீட்டினுள் நுழையும் போதே, அம்பிகையும் அமுதாவும் ஏதோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் வீட்டினுள் நுழைந்ததை மற்ற இருவரையும் கவனிக்கவில்லை.

"அம்மா.. உங்களுக்கு என்ன தான் பிரச்சினை சொல்லுங்கோ.."

"எனக்கு என்ன பிரச்சினை.. உங்களுக்குத் தான் பிரச்சினை எண்டு நினைக்கிறன்.. மூத்தவனுக்குத் தான் உங்கடை இஷ்டம் போல கலியாணம் நடத்தப் போறியள்.. சின்னவனுக்கு எண்டாலும் நான் வரன் பாக்கக் கூடாதோ சொல்லு.."

"நல்லா பாருங்கோவன் ஆர் உங்களை வேண்டாம் எண்டு சொன்னது.. ஆனா அவனுக்கு எண்டும் ஏதாச்சும் விருப்பம் இருக்குமெல்லோ.. அவன் ஆரும் பிள்ளையை விரும்பியிருந்தால் உங்கடை பாட்டுல வரன் பாத்து வீண் மனஸ்தாபங்கள் தான் மிஞ்சும்.. அதனால அவனிட்டை ஒரு வார்த்தை கேட்டிட்டுப் பாருங்கோண்டு தானே சொல்லுறன் அம்மா.."

"அவனிட்டை என்னடி கேக்கிறது.. அவன் நான் சொன்னால் மற்றக் கதை கதைக்கவே மாட்டான்.. அதோட அவன் ஒண்டும் உந்த லவ்வு கிவ்வு எண்டு போக மாட்டான் சரியோ.."

"உங்கடைபாட்டில ஒரு முடிவு எடுத்திட்டுப் பிறகு முகத்தைத் தூக்கிக் கொண்டு தான் நிக்கப் போறியள் நீங்கள்.."

"அதையும் ஒருக்காப் பாப்பம்.."

"என்ரை சிவனே.. உங்களுக்கு என்ன தான் நடந்தது.. நல்லாத் தானேம்மா இருந்தனீங்கள்.. கொஞ்ச நாளாவே உங்கடை எண்ணம் கதை ஒண்டுமே சரியில்லை.. ஆரவோ உங்களுக்குச் செய்வினை சூனியம் வைச்சிட்டாங்கள் எண்டு நினைக்கிறன்.."
என்று அமுதா அலுத்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு அருகில் வந்து நின்றான் இசை.

"அவனே வந்திட்டான்.. அவன் பார் நான் சொல்லுறதை தான் கேப்பான்.. இசைக்குட்டீ இங்க பாரன்.."

"அம்மம்மா.. நான் தேனுவை விரும்புறன்.. அவளைத் தான் கல்யாணம் செய்யப் போறன்.. அதனால நீங்கள் கஷ்டப் பட்டு எனக்கு வரன் பாக்க வேண்டாம்.."

"என்னடா உளறுறாய்.. அவளுக்கும் உனக்கும் எத்தினை வயசு வித்தியாசம்.. அதோட அவளுந்தை கால் வேறை பிரச்சினை.."

"உங்களுக்கு அவளிந்தை வயசு பிரச்சினையோ இல்லாட்டிங்கு அவளிந்தை கால் பிரச்சினையோ.."

"ரெண்டுமே பிரச்சினை தான்.."

"எனக்கு அது பிரச்சினை இல்லை அம்மம்மா.. எனக்கு அவள் தான் எண்டு எப்பவோ முடிவு செய்திட்டன்.."

"அப்ப இந்த வீட்டுல பெரிய மனுஷி எண்டு நான் இருக்கிறதால எனக்கென்ன மரியாதை.."

"ஒரு கேள்வி கேக்கவா.. உங்களுக்கும் ஐயாவுக்கும் எத்தினை வயசு வித்தியாசம் அம்மம்மா.."

"அது.."

"என்ன அது.. பத்து வயசு வித்தியாசம்.. எனக்கும் அவளுக்கும் உங்கடை ஜோடியை விட ஒண்டு தானே குறைவு.. அதோட ஐயா நடக்கவே மாட்டாத ஆள் எண்டு தெரிஞ்சு தானே அவருக்குக் கழுத்தை நீட்டினீங்கள்.."

"அதெல்லாம் அந்தக் காலம்.."

"வேண்டாம் அம்மம்மா.. நான் உங்கடை மனசை நோகடிக்க விரும்பேல்லை.. நீங்களும் என்ரை மனசை நோகடிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறன்.."
என அத்தோடு அந்தப் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போலத் தாயின் பக்கம் திரும்பினான் இசை.

"அம்மா.. நான் ஏதாவது தப்பாக் கதைச்சிட்டன் எண்டு நீங்கள் நினைக்கிறிங்களோ.."

"சத்தியமா நான் அப்புடி நினைக்கேல்லை.. இன்னும் சொல்லப் போனால் தேனுவை நீ கலியாணம் செய்தால் சந்தோஷப் படுற முதல் ஆள் நானாத் தான் இருப்பன்.."

"ரொம்ப ரொம்ப நன்றிம்மா.."

"நான் எப்பவுமே தமிழுக்கு ஒருமாதிரி உனக்கு ஒருமாதிரி நடந்து கொள்ளவே மாட்டன்.. எனக்கு ரெண்டு பேரும் ஒண்டு தான்.. உங்கடை சந்தோஷம் எங்க இருக்குதோ அங்க தான் என்ரை சந்தோஷமும் இருக்கும்.."
என்ற தாயை இசை இறுக அணைத்துக் கொள்ள, சற்றே தள்ளி நின்றிருந்த அம்பிகையைத் தமிழ் அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்து விலக முயன்றவரை இறுகக் கட்டிக் கொண்டு
"எங்கடை அம்மம்மாக் குட்டி நல்ல பிள்ளை எல்லோ.. அவா எங்களை நல்ல விஷயங்கள் சொல்லிக் குடுத்துத் தானே வளத்தவா.. பிறகு அவாவே திடீரெண்டு இப்புடி எல்லாம் நடந்து கொள்ளலாமோ.. நீங்கள் தானே சொல்லிக் குடுத்தனீங்கள் மனுஷரோட குணத்தை மட்டும் தான் பாக்க வேணும் மற்றக் குறையளைப் பாக்கவே கூடாதெண்டு.."
எனக் கேட்ட தமிழின் வார்த்தைகளில், நிஜமாகவே அம்பிகை மனங்கலங்கித் தான் போனார்.

'என் பேரன் சொல்வது சரி தானே.. நான் எப்போது இப்படி ஆனேன்.. நல்லூரானே நல்ல காலம் என்ரை பேரன்ரை சொல்லு மூலமா என்ரை கண்ணைத் திறந்து விட்டியே..'
என நினைத்துக் கொண்டவர், தான் பேசியதற்கு தன் மகளிடமும் சின்னப் பேரனிடமும் மன்னிப்புக் கேட்கவும் தவறவில்லை.
 

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 10 (2)

காற்று லேசாக வீசிக் கொண்டிருக்க,
அந்த மாந்தோப்புக்குள் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் தேனு.

அவளால் இசையத்தான் தன்னை நேசிக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை.

இசை தன்னை நேசிக்கிறான் என்பதையும், தன் தாய் மூலம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா என்று கேட்டு அனுப்பியதையும் திரும்பத் திரும்ப யோசனை செய்து கொண்டேயிருந்தாள்.

சில தினங்களுக்கு முன்னர் தான் அவளது சக ஆசிரியை ஒருத்தி, இசையின் முகநூலில் அவனது புகைப்படங்களைப் பார்த்து விட்டு
"பேசாமல் இவனுக்கு நூல் விட்டுப் பாத்தா என்ன.. செம ஹான்சமா இருக்கானே.."
என்று சொல்ல, காரணமே இல்லாமல் தேனுவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"கலர் கலரா ஃபோட்டோ போட்டுப் பொண்ணுங்களை மயக்கிறது தான் வேலை அதுக்கு.."
என எவளோ அவனைப் பார்த்து சொன்ன விஷயத்திற்கு அவனையே திட்டித் தீர்த்தாள் தேனு.

அதன் பின்னர்
'எவளோ எவனையோ பாத்து என்னவோ சொன்னாங்கிறதுக்காக நாம எதுக்கு இப்போ டென்ஷனாகணும்..'
எனத் தன் மீதே கடுப்பானவளுக்கு, இசையை யாராவது சைட்டடித்தால் தனக்குக் கடுப்பாகிறது என்பது தாமதமாகவே புரிந்தது. ஆனாலும் அது எதற்காக என்பதை அவள் ஆராய்ச்சி செய்யவில்லை.

அப்படி இருந்தவளிடம் அவன் தன்னை விரும்பும் விஷயம் வந்ததும், அந்தக் கணமே அவன் தனது இதயத்துக்குள் நுழைந்து நாளாகி விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள்.

அதை உணர்ந்த நொடி அவளால் அவனை நேர் கொண்டு பார்க்கவே முடியவில்லை. இதோ இப்போது கூட வீட்டில் இருந்தால் அவனை எதிர் கொள்ள வேண்டி வருமே என நினைத்தவள், இங்கே வந்து மாந்தோப்பில் அமர்ந்து இருக்கிறாள்.

எவ்வளவு நேரம் தான் அங்கேயே இருந்தாளோ தெரியவில்லை, தன்னை நோக்கி இசை வருவதைக் கண்டதும், வழமை போல வேகமாக எழப் போக கால்கள் தடுமாறித் தான் போனது, ஒரு எட்டில் அவளைப் பிடித்துக் கொண்டவனோ
"எத்தினை நாளைக்குத் தான் உந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்.."
என்று கேட்க, அவளது தலை தானாகக் கவிழ்ந்து போனது.

சில நொடிகள் அவளது கவிழ்ந்த தலையையே பார்த்திருந்தவன், தானே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

"ஏன் என்னைக் கண்டாலே ஓடி ஒளியிறாய்.."

"................"

"உன்னைய எங்க எல்லாம் தேடீட்டு வாறன் தெரியுமா.."

"..............."

"ஏன் தேனு.. என்னை உனக்குப் பிடிக்கலியோ.."

"அச்சோ அப்புடி எல்லாம் இல்லை.."

"எப்புடி எல்லாம் இல்லை.."

"அது.."

"சரி நானும் உன்னைச் சங்கடப் படுத்த விரும்பேல்லை.. என்னைய உனக்கு பிடிக்குமா பிடிக்காதா.."

"பிடிக்கும்.."

"கொஞ்சம் சத்தமாத் தான் சொல்லுறது.."

"............."

"என்னடி மறுபடியும் சைலன்ட் ஆயிட்டாய்.."

"எனக்கு.. நீங்கள் இந்த மாதிரி தன்மையாக் கதைக்கிறது சுத்தமாப் பிடிக்கேல்லை.."

"என்னது.."

"என்னை நீங்கள் பாவம் பாத்துக் கதைக்கிற மாதிரிக் கிடக்குது.. அது எனக்குப் பிடிக்கேல்லை.. நீங்கள் எப்பவும் போல என்னோட சண்டை பிடிக்கிறது தான் வேணும்.."

"ஓ அப்புடியோ.."

"ம்ம்.."

"சரிடி குட்டிச் சாத்தான்.. நீ சொன்னதை நான் இனி ஃபாலோ பண்றன்.."

"என்னாது குட்டிச் சாத்தானா.."

"பிறகு.. சாத்தான் குட்டி எண்டு கூப்பிடவோ.."

"ஆரு சாத்தான் குட்டி.. நீங்கள் தான் வளந்து கெட்ட எருமை மாடு.. சரியான நூசு.."

"ஹேய் இரு இரு.. திரும்ப சொல்லு இப்போ என்ன சொன்னீ.."

"என்ன சொன்னான்.. நீங்கள் ஒரு வளந்து கெட்ட எருமை மாடுனு சொன்னேன்.."

"அதுக்குப் பிறகு.."

"அதுக்குப் பிறகு.. என்ன சொன்னான்.. ஆ சரியான நூசு எண்டு சொன்னான்.."
எனத் தேனு சொல்லவும், வாயை மூடிக் கொண்டு சிரித்தான் இசை.

"இப்ப என்னத்துக்கு சிரிக்கிறீங்கள்.. நான் சொன்னது மாதிரி நீங்கள் நூசு தான்.."

"என்ரை குட்டிச் சாத்தான்.. எத்தினை வயசு ஆகுது உனக்கு.. இன்னும் உனக்கு லூசு எண்டுற சொல் ஒழுங்காவே வருகுதில்லை.."
என விழுந்து விழுந்து சிரித்தவனை, முறைக்க முடியாமல் போகவே தானும் சிரிக்கத் தொடங்கி விட்டாள் தேனு.


ஒரு மாதத்திற்கு பிறகு...

"என்ன ஒருத்தரும் இன்னும் ரெடியாகேல்லை என்ன.. நான் ஒருத்தி எவ்வளவு நேரம் கத்துக் கொண்டு இருக்கிறன்.. கொஞ்சம் கெதியா ரெடியாகுங்கோ எல்லாரும்.."

"அதெல்லாம் நேரத்துக்கு ரெடியாகிடலாம்.. நீ முதல்ல ஒரு இடமாக் கொஞ்ச நேரத்துக்கு இரு அமுதா.."

"இருக்க நேரமில்லை அத்தான்.. எட்டரையில இருந்து ஒம்பது பத்துக்குள்ள தான் நேரம் எண்டுறது தெரியும் தானே.. இங்க நேரத்தைப் பாருங்கோ சரியா எட்டு மணி.. கோயிலில எட்டகாலுக்கு நிக்க வேண்டியது.."

"அதெல்லாம் நிக்கலாம் அமுதம்.. நீ முதல்ல கோஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. எப்புடி முகமெல்லாம் வியர்த்து இருக்குது பாரு.."
என்று கொண்டே மனைவியின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை, தனது கைக்குட்டையால் ஒற்றி எடுத்து விட்டார் கவிவாணன்.

அமுதாவின் பரபரப்புக்கு காரணம், இன்று அவரது இரண்டு மகன்களுக்குமே திருமணம்.

ஆடம்பரம் ஏதும் இல்லாத, ஆளரவம் ஏதும் இல்லாத எளிமையான திருமணம் அது.

வல்வெட்டித்துறை அம்மன் கோவில் சந்நிதானத்தில், அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த தாலியைத் தாயும் தந்தையும் எடுத்துக் கொடுக்க, தங்கள் மனம் கவர்ந்தவர்களின் கழுத்தில் கட்டுவதற்கு தமிழும் இசையும் காத்திருந்தார்கள். அப்படியே கோவிலில் அன்னதானம் இவ்வளவு தான் வேலைப்பாடு.

"அண்ணா நீங்கள் ரெடியா.."

"நான் ரெடி இசை.. நீ.."

"நானும் ரெடி தான்.. ஆனா இந்த வேட்டி தான் இடுப்புல நிக்கவே மாட்டுதாம்.. எனக்கு கூடப் பரவாயில்லை அபி தான் பாவம்.. அடிக்கடி இடுப்பை இடுப்பைத் தொட்டுப் பாத்திட்டே இருக்கிறான்.."

"ஏன் வேட்டி இருக்கோ இல்லையோ எண்டு பாக்கிறானோ.. வெலிட்டை எடுத்துக் கட்டினால் வேட்டி தன்னால நிக்கப் போகுது.."
என்று சிரித்தபடி அபிக்கும் இசைக்கும் வெலிட் கட்டி விட்டான் தமிழ்.

அதே நேரத்தில் அளவான அலங்காரத்தோடு இருந்த வான்மதிக்கும் தேன்மதிக்கும் குடிப்பதற்காகப் பால் தேநீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் அம்பிகை.

"தேனு வேகமாக் குடி.. நேரமாகிக் கொண்டு இருக்குது.. மதி நீ என்ன முழிக்கிறாய் நீயும் வேகமாக் குடி.. சாப்பிட ஏதும் கொண்டு வரட்டுக்கோ.."
என்று கொண்டே இருவரையும் அழைத்து வந்து அறையில் அமர வைத்த அம்பிகை, இருவருக்கும் சுத்தி நெட்டி முறித்தார்.

எல்லோரையும் விட அபிராமைத் தான் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவனது ஆசை அக்காமாருக்கு அவனது அன்பு அத்தான்மார் தான் ஜோடி என்பதோடு அந்த நாளின் மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, அன்றைய நாளில் அவன் பம்பரம் போலச் சுழன்றடித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் ஒருவாறு தயாராகி அம்மன் சந்நிதானத்துக்கு வந்து சேர நேரம் தனது இருப்பைக் காலை எட்டு இருபது எனக் காட்டிக் கொள்ள, கோவிலில் திருமண வேலைகள் வேக வேகமாக அரங்கேறத் தொடங்கியது.

முதல் நிமிடங்களில் வான்மதி தமிழ்பரிதி ஜோடிக்கும் அடுத்த நிமிடங்களில் தேன்மதி இசைவேந்தன் ஜோடிக்கும் கல்யாணப் படலம் நடைபெற்றது.

எத்தனையோ தடைகளைத் தாண்டி தன் நண்பனின் மீதம் இருந்த குடும்பத்தைக் கண்டு, அந்தக் குடும்பத்தை இப்போது தன் குடும்பத்துக்குள் சம்பிரதாயமாகவும் சட்டபூர்வமாகவும் இணைத்த இணையற்ற சந்தோஷத்தில் கவிவாணனுக்கும் அமுதாவுக்கும் உற்சாகம் ஊற்றெடுத்துப் பெருகியது.


ஐந்து வருடங்களுக்கு பிறகு..

இலண்டன் மாநகரத்தின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் காலை நேரம் அது.

"நந்துக்குட்டி எங்க ஓடுறீங்கள்.. இங்க அப்பப்பாட்டை வாங்க செல்லம்.. அமுதா ஞானுக்குட்டி எழும்பீட்டுதோ.."
எனத் தனது நான்கு வயது பேரனைத் தூக்கி மடியில் வைத்தபடி, இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் பேர்த்தியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் கவிவாணன்.

"ஓம் அத்தான்.. ஞானுக்குட்டி வெள்ளனவே எழும்பித் தகப்பனோடயும் மாமனோடையும் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்குது.."
எனும் போதே, குடு குடுவென ஓடி வந்த குழந்தை ஞானகியை அபியும் தமிழும் விரட்டிக் கொண்டு வந்தார்கள்.

சட்டென்று இடையிட்டு குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட அம்பிகை
"என்ரை செல்லத்தோட என்னடா வம்பிழுக்கிறீங்கள்.."
என்க,
"அம்மம்மா.. நாங்கள் ஒண்டும் வம்பிழுக்கேல்லை.. அபி வேலைக்குப் போக எடுத்து வைச்சிருந்த சூவைக் கொண்டு போய்.. அவாந்தை பூனைக் குட்டியைத் தூக்கி அதுக்குள்ள வைச்சிட்டு வந்திருக்கிறா மேடம்.. சூவைத் தாங்கோணு கேக்க அவன்டை சாக்ஸை தூக்கீட்டு ஓடி வந்தாச்சு.."
என நீளமாகக் குற்றப் பத்திரிகை படித்தான் தமிழ்.

தகப்பன் சொல்வதையே தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்த குட்டிப் பெண் ஞானகி, அப்போது தான் உள்ளே வந்த இசையைப் பாத்ததும்
"சீப்பா.."
என்று கொண்டு அவனிடம் ஓடினாள்.

தன்னிடம் ஓடி வந்த தமையன் மகளை வாகாகத் தூக்கி இடுப்பில் இருத்திக் கொண்ட இசையிடம், தந்தையையும் மாமனையும் கை காட்டினாள் குட்டி.

இசைக்கு விளங்கி விட்டது இருவரோடும் ஏதோ தகராறு போல அம்மணிக்கு என்பது, அதனால் அவளைச் சமாதானம் செய்யத் தனது அறைக்குள் தூக்கிச் சென்று அவளைக் கீழே இறக்கி விட்டான்.

அங்கே இசையின் அறைக்குள் நடந்து வந்த ஞானகியைப் பார்த்ததும்,
"காஆஆ.."
என்று கத்திக் கொண்டே ஓடி வந்து ஞானகியைக் கட்டிக் கொண்டது இசையினதும் தேனுவினதும் மூன்றே வயதான மூத்த மகள் சாருமதி.

சகோதரிகள் இருவரையும் விளையாட விட்டு, மனைவியின் பக்கம் திரும்பினான் இசை. தேனு தனது இரண்டாவது மகன் தனுராமுக்கு உடை அணிவித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன தேனூ.. உன்னோட அண்ணன் என்னவாம்.."

"ஆ.. உம் புருஷன் ஏதும் நூசுத்தனம் செஞ்சால் எங்கிட்ட விட்ரு நான் பாத்துக்கிறேனு சொல்றான்.."

"உங்கண்ணன் தானே சொல்லுவான் சொல்லுவான்.. குடும்பத்துலயே உனக்கும் உன்ரை கொண்ணனுக்கும் தான் என்னில ஏதவோ கொலைவெறி.."
என்று கொண்டே சட்டென்று மனைவியின் கன்னத்தைக் கிள்ளி விட்டு வெளியே ஓடிப் போய் விட்டான் இசை.

"உன்னோட மச்சானுக்குக் கொழுப்புத் தானே அண்ணா.."
என்று கொண்டே தன் மகனாகிப் போன தன் அண்ணனைக் கொஞ்சினாள் தேனு.

தனுராமுக்கு புட்டிப்பால் கொண்டு உள்ளே வந்த வான்மதி மெல்லிய சிரிப்போடு, குழந்தை வடிவத்தில் இருந்த தன் மூத்த தம்பியைத் தூக்கிக் கொஞ்ச, மனைவியைத் தேடி வந்த தமிழ், அப்படியே வாசலில் நின்று விட்டான்.

அத்தானைப் பார்த்ததும், இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே போய் விட்டாள் தேன்மதி.

"என்ன பப்பீ.. என்னவாம் உந்தம்பி.."
என்று கொண்டே மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் தமிழ்.

அவனைக் கண்டதும் சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் வான்மதி.

குழந்தையோடு சேர்த்து மனைவியையும் அணைத்துக் கொண்டான் அவன்.

"இனிமேல் நீ அழவே கூடாது.. அது தான் என்ரை மாமனார் மாமியார் அப்புறம் சாரு தனு எல்லாம் நம்மக்கிட்ட திரும்ப வந்தாச்சே.. பிறகென்ன அழுகை.."
என்றவனை இறுக அணைத்து அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள் வான்மதி.

"நானுக்கு.. நானுக்கு.."
என்று கொண்டே ஓடி வந்து இருவருக்கும் நடுவில் நுழைந்து கொண்டு தாங்களும் கன்னத்தைக் காட்டினார்கள் ஞானகியும் சாருமதியும்.

குழந்தைகளைப் பார்க்கும் போதே அவளது தாயும் மூத்த தங்கையும் முன்னால் நிற்பது போன்றதொரு உணர்வு அவளுக்கு. அப்படியே கணவனையும் நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி.

அவளது வாழ்க்கையை வண்ணமயமாக்கிய தேவதூதன் அல்லவா அவன். பூவையின் மொழி அறிந்து அவள் வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களைக் கொடுத்து விட்டான் அவள் கணவன்.

வான்மதி தேன்மதியோடு சேர்த்து அபிராமையும் பொட்டலம் கட்டி வந்து விட்டானே இலண்டனுக்கு.

இந்த ஐந்து வருடங்கள் அவளுக்கு பொக்கிஷமான காலம், வான்மதிக்கும் தமிழுக்கும் முதலிலேயே இரட்டைக் குழந்தைகள் பிறக்க ஆண் குழந்தைக்கு நந்தன் என்றும் பெண் குழந்தைக்கு ஞானகி என்றும் பெயர் வைத்தது தமிழ் தான்.

அதன் பிறகு தேனுவுக்கும் இசைக்கும் மூத்ததாக ஒரு பெண் குழந்தை பிறக்க, அண்ணனும் தம்பியும் சேர்ந்து அவளுக்கு சாருமதி என்று பெயர் வைத்து விட்டார்கள், அதற்கு பிறகு பிறந்த ஆண் குழந்தைக்குத் தனுராம் என்றும் பெயர் வைத்தாகி விட்டது.

வான்மதியும் தேன்மதியும் அபிராமும் இவர்களது இந்தச் செயலை எதிர்பார்க்கவேயில்லை. என்றோ பட்ட வேதனைகள் நாள் ஆக ஆகக் கரைவதையே உணர்ந்தார்கள்.

அந்த அழகான குடும்பத்தை சந்தோஷமாக வாழ விட்டு, நாமும் விடைபெறுவோம்

நம் உறவுகளுக்குள் யாரேனும் நம்மை விட்டு மரணத்தை தேர்வு செய்தால், நம்மைத் தேற்றப் புது உறவுகள் நம் வாழ்வுக்குள் வருவார்கள் என்பது தானே உலகநியதி.
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
Very nice ending
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சொல்லவியலா துயரங்களை அனுபவித்து நின்றவர்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அடுத்து வரும் காலம் முழுமைக்கும்! 😍❤️