• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -21

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
196
216
43
Salem
அந்த மருத்துவமனையின் அறையின் வாசலில் மனதால் கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தான் ஆதவன்..அவனருகில் அவன் தோளில் கைவைத்து அழுத்தினான் வளவன்.. வார்த்தை தராத ஆறுதலை ஒரு ஸ்பரிசம் தந்துவிடும் அது போல ஆதவனுக்கு தன் அழுத்தத்தால் ஆறுதல் தந்தான் வளவன்.

அவனின் மனம் முழுவதும் யாரோ சம்பட்டியால் அடித்தது போன்று வலித்தது.

இன்னும் எத்தனை வலிகளை இறவா இந்த சிறு பெண்ணிற்கு கொடுப்பாய்.. அவள் அனுபவித்த வலிகளை அவளின் நினைவுகள் மறக்கச் செய்துள்ளது.. புதிதாய் பிறந்தவளை மேலும் வலி கொடுத்து அல்லவா சித்ரவதை செய்கிறாய்.. நான் அவளை எப்படி மீட்டெடுப்பேன் சர்வேஸ்வரா..

மனதால் கடவுளிடம் மன்றாடியவன் அவள் கண் விழிக்கும் நொடிகளுக்காக காத்திருந்தான்.. அதை விட பதட்டம் அவளுக்கு என்ன நடந்தது என்று எதுவும் புரியாத நிலை.காலையில் நான் போகும் போது நன்றாகத்தானே இருந்தாள்.. ஒரு நான்கு மணி நேரத்தில் என்ன ஆனது என்று சிந்தனையில் இருந்தவனை அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வேகமாய் எழுந்தான்.

அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வந்த மருத்துவரை எதிர் கொண்டு,

"டாக்டர் அவ எப்படி இருக்கா.. நல்லாருந்தவ எப்படி சுயநினைவு தப்பி போனா.. என்னாச்சி டாக்டர் அவளுக்கு.." அவரை பதிலும் சொல்ல விடாதவனாய் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தான்.


"சார் என்னைய பதில் சொல்ல விடுங்க.. அவங்க உங்களுக்கு என்ன வேணும்.. " என்றார் எதையோ யோசித்தபடி.

அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தவன்,

"அவ எங்க வீட்டு பொண்ணு டாக்டர்.. அவளுக்கு என்னாச்சி.." என்றான் மீண்டும்.

"அவங்களுக்கு எப்பவாது பின்னந்தலையில அடிபட்டிருக்கா.. நான் என்ன சொல்ல வரேனா சின்ன வயசுல எங்கேயாவது விழுந்துருக்காங்களா.." எனக் கேட்டார்.

எதையோ சிறிது நேரம் யோசித்தவன், " ஆமா சார்.. அவ சின்ன வயசுல பின் மண்டையில அடிப்பட்டுச்சி.. ஆனா அது நடந்து பல வருசம் ஆச்சே சார்.. இப்போ ஏதாவது பிரச்சனையா.." என்றான் பதட்டத்துடன்.

"ஆமான்னும் சொல்ல முடியலை இல்லைன்னு சொல்ல முடியலை மிஸ்டர் ஆதவன்.. அவங்களோட பின் மண்டையில பலமா அடிபட்டுருக்கு.. அதை கவனிக்காம விட்டதால அவங்களோட பின் மண்டையில ரத்தம் கட்டியிருக்கும்னு நினைக்குறேன்.. எதுக்கும் நாம ஒரு எம் ஆர் ஐ ஸ்கேன் பார்த்துடலாம்.. அது தான் நல்லது.. என்னன்னு தெரியாம நம்மளோட யூகத்துக்கு யோசிக்க கூடாது இல்லை.." என்றார் பக்கத்திலிருந்த நர்ஸிடம் திரும்பி,

"சிஸ்டர் ஸ்கேனிங் ரெடி பண்ணுங்க.." என்று உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரும் சென்றும் மருத்துவர் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் நின்றிருந்த ஆதவனின் தோளை தொட்டான் வளவன்.

தன் மேல் கரம் விழவும் தன் நினைவுக்கு வந்தவன்,

"வளவா என்னடா சொல்றாரு இவரு.. அது அப்போ நடந்துச்சே இப்போ பாதிக்குமா டா.. இன்னும் என்ன என்ன சோதனையடா கடந்து வருவா.. என்னால முடியலை வளவா.. இன்னும் நான் என்னென்ன டா பாக்கனும்.." மனதின் பாரம் தாங்காமல் அவனின் தோளில் ஆறுதலாய் சாய்ந்தான்.

"அண்ணே டாக்டர் தான் இன்னும் தெளிவா எதுவும் சொல்லலை இல்லை.. ஸ்கேன் ரிப்போர்ட் வரட்டும் அண்ணே.. நீங்களா எதையும் கற்பனை பண்ணாதீங்க.. அண்ணி நிச்சயம் நல்லபடியா திரும்பி வருவாங்க அண்ணே.." என்று ஆறுதல் கூறியவன் மருத்துவரின் ஆலோசனைக்காக காத்திருந்தனர்.


இங்கே ஆதவன் வெண்மதியை கையில் ஏந்தி கொண்டு வரும் போதே பார்த்த கனகம் அவன் யாருக்காகவும் நிற்காமல் தன் மகனும் அவனும் அவளுடன் செல்வதை தவறாக கற்பனை செய்தவள் அவர்கள் சென்றதுமே தன் திருவாயை திறந்து விட்டாள்.

"அய்யோ இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா.. என் பையன் செத்து போயிட்டான்னு இந்த சிறுக்கி மவ இங்கிருக்கற ஆம்பளை பசங்களை மயக்கி கைக்குள் போட்டுகிட்டாளே.. அஒனுங்களும் அண்ணன் பொண்டாட்டின்னு பாக்காம அவளை கையில தூக்கிட்டு போறானே.. இது தான் நீங்க ஊருக்கு தலைவனா வந்தவனோட பவுசா.. என் ஊட்டு மானம் பேச்சே மருவாதே போச்சே இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா..

எம்புள்ளையை எரிச்ச சாம்பல் கூட இன்னும் முழுசா கறையல.. அதுக்குள்ள பாதகத்தி இன்னொருத்தன சேத்துக்கிட்டாளே.. அதுவும் ஒருத்தன் போதாதுன்னு இத்தனை நாளா அண்ணி அண்ணின்னு சுத்தி வந்தவனையும் வளைச்சி போட்டுட்டாளே தே****யா.." தன் ஆக்ரோஷமான குரலால் ஊரையே திரட்டியிருந்தாள் கனகம்.

அவளின் ஆபசமான பேச்சு அங்கிருந்த அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.. அதில் அவளுக்கு ஆதரவாக சிலரும் எதிராக பலரும் வாதாடினர்.

ஆனால் எது நடந்த போதும் கனகம் இந்த வாய்ப்பை தவற விட தயாராயில்லை.. அவளுக்கு வெண்மதியையும் ஆதவனையும் அவமானப்படுத்த கிடைத்த சந்தர்ப்பம் இது.. அவ்வளவு எளிதில் இதை விடக்கூடாது என்ற எண்ணத்தில் தனது நடிப்பைப் மேலும் அரங்கேற்றினாள்.

"அய்யா நான் கெட்டவ தான்.. ஆனா எம்புள்ளைக்கு இந்த சிறுக்கி துரோகம் பண்றது தப்பிள்ளைங்களா.. ஒரு வேளை இவ தான் என் பையனை கொண்ணுருப்பாளோ.. இவ சந்தோஷமா வாழ.." நடக்காத ஒன்றை நடந்ததாய் கற்பனையில் கதை திரித்தாள்.

"அய்யா நீங்க எல்லாம் இங்கேயே இருங்க.. வெளியே போனவங்க வந்து தானே தீரணும்.. இதுக்கொரு முடிவு தெரியாம எனக்கு நியாயம் வாங்கி தராம யாரும் போகாதீங்க அய்யா.." என எல்லோரையும் அங்கேயே இருக்க வைத்தாள்.

உண்மை என்னவென்று கூற வந்த வள்ளியையும் தடுத்து விட்டாள்.. அவளும் கேட்டுக் கொள்ளவில்லை.. அவசரத்தில் கூட்டிய பஞ்சாயத்து அதில் அவமானம் அவளுக்கானது என்று தெரியாமலே வஞ்சத்துடன் காத்திருந்தாள்.


இங்கு ஸ்கேன் எடுக்கவே கிட்டதட்ட மூன்று மணி நேரம் முடிந்து போனது.. இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

ரிப்போர்ட் கிடைத்ததும் மருத்துவரை சென்று பார்த்தனர் இருவரும்.. அங்கே அவர் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் சிலையாகி விட்டனர் இருவரும்.


இங்கே குகையில் படுத்திருந்த மருதநாயகம் திடிரென,

"நாகா எங்கடா இருக்க... சீக்கிரம் இங்கே வாடா.. அங்கே என் பேத்திக்கு ஆபத்து டா.. எம் பேரன் நிலை குலைஞ்சு போய் இருக்கான் டா.. நான் அவங்களை பாக்கனும் டா.." என்று அவர் வார்த்தையை முடிப்பதற்குள்ளாகவே அங்கே வந்த நாகராஜன்,

"அய்யா என்னாச்சி ஏன் இப்படி பதட்டபடுறீங்க.." ஓடி வந்து கேட்டார்.

"நாகா சீக்கிரம் பூஜையை ஆரம்பி.. இனி இந்த சர்வேஷ்வரனைத் தான் நாம நம்பனும் டா.." உலகை ஆள்பவன் முன் நின்று கைகூப்பி வண்ங்கினார் தன் வம்சத்தின் குலவிளக்குக்காக.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
😘😘😘😘😘😘