• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 34

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பகுதி 34


"பேசினதையே திரும்ப திரும்ப பேசிட்டிருக்க." என்று வெங்கட்டின் மேல் எரிந்து விழுந்தவன், பின் தாம் இருக்கும் இடம் புரிந்து,

"ஏன்டா, என் கோபத்தை கிளர்ற? நான்தான் தெளிவா சொல்லிட்டனே... எனக்கு என் முறைப்பொண்ணு மைதிலி வேண்டாம். நான் அவளை விரும்பல. சின்ன வயசில இருந்து வீட்டுல அவதான் என் மனைவின்னு சொல்லி வளத்ததனால வர ஈர்ப்பு. அதுக்காக காலம் முழுக்க அவகூட குடும்பம் நடத்த முடியுமா?" என்றான் அவன் நண்பனுக்கு புரிய வைக்கும் விதமாய்.

"நீ இந்த மாதிரி சொல்ற, ஆனா அவ உன்னையே நினைச்சிட்டு இருப்பாளே? அவளோட நிலைமையை நினைச்சு பாத்தியா? நீ கால் பண்ணுறப்பலாம் அத்தான் அத்தான்னு உருகிறத பார்த்து நானே எத்தனை தடவை ஏங்கிருக்கேன் தெரியுமா, இந்த மாதிரி எனக்கொரு முறைப்பொண்ணு இல்லன்னு. ஆனா நீ..."

"ஆமாடா... ஆமா... நான் பேசுறப்போ அத்தான் அத்தான்னு அவ உருகுவா தான். நான் அதை இல்லன்னு சொல்லல. ஆனா எப்போவாச்சும் நானும் சரி, அவளும் சரி காதல் வசனம் பேசி நீ கேட்டிருக்கியா? இல்லன்னா போன் பண்ணி மணி கணக்கில பேசித்தான் பாத்திருக்கியா? நாங்க அதிகமா பேசினதே ஐஞ்சு நிமிஷம் தான்டா! இங்க பாரு, ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப உனக்கு சொல்லிட்டிருக்க முடியாது." என நகரப் போனவன் கையை இறுக பற்றியவன்,

"இப்போ நீ என்ன சொல்லுற? மணி கணக்கில உருக உருக காதல் வசனம் பேசினால் தான் காதல் என்கிறியா?" என்று கூரிய பார்வையோடு கேட்டவன்,

"நீ வளர்ந்த சூழலை மறந்திட்டு பேசுறனு நினைக்கிறேன் ரஞ்சித். அவ கிராமத்து பொண்ணு. குனிஞ்ச தலை நிமிராமல் தரைப்பாத்து நடக்கிறவ. ஒரு ஆணோட கை, தன்மேல பட்டாலே கற்பு போயிடும்னு நினைக்கிற இடத்தில பிறந்திட்டு, அவகிட்ட போய் காதல் வசனம் எதிர்பாக்குற? இதெல்லாம் அவ பண்ணுவாளாடா? தெரிஞ்சும் இந்த மாதிரி பேசுறது கொஞ்சம் கூட நியாயமே இல்லடா. சின்ன வயசில இருந்து உன்னையே கணவனா நினைச்சிட்டு வாழ்றவளோட வாழ்க்கை, இனி என்னாகும்னு நினைச்சியா?

இல்லன்னா அவளால இன்னொருத்தனை கணவனா ஏற்க முடியுமா? ஏன்டா சுயநலமா யோசிக்கிற? அப்படி அவகிட்ட இல்லாத எதை இந்த மீனாக்கிட்ட கண்டுட்ட?" என மூச்சு விடாமல் பேசிய வெங்கட்டை முறைத்தவன்,

"போதும் வெங்கட்! உன் லிமிட்ட க்ராஸ் பண்ணுற. இதோட இந்த பேச்சை விட்டுட்டன்னா நல்லது. தேவையில்லாம என் விஷயத்தில தலையிடாத. அப்புறம் நண்பன் என்று கூட பாக்க மாட்டேன்." என்று குரலை மற்றவர்களுக்கு கேட்காமல் தணித்து பேசினாலும், அந்த பேச்சில் கோபம் அதிகமாகவே இருந்தது.

"சூப்பர்டா! இதையும் உங்கிட்ட எதிர்பார்த்தேன். இத்தனை வருஷம் உன்னையே நினைச்சிட்டு இருந்தவளையே ஏமாத்திட்டிருக்கிற உனக்கு, ரெண்டு வருஷ நட்பெல்லாம் எம்மாத்திரம்?" இகழ்வை பேச்சில் வெளிப்படுத்தியவன்,

"சரி நீயே சொல்லு, என் லிமிட் என்னனு? அந்த எல்லையோட இருந்துக்கிறேன். முன்னாடியே இதுதான் உன்னோட முகம்னு தெரிஞ்சிருந்தா, நிச்சயம் உன் நட்பை நான் ஏத்துக்கிட்டிருக்க மாட்டேன்டா. எனக்கொரு சந்தேகம், வேலையில சேர்ந்த மூனே மாதத்தில தான் அந்த மீனாக்கூட காதலாச்சே. அப்புறம் எதுக்கு அந்த பொண்ணுக்கு போன் போட்டு அவ மனசிலயும் ஆசைய வளர்த்த?

சரி, பேசுறப்பவாவது, ஒரு வாட்டி நான் இப்படி ஒருத்திய விரும்புறேன்னு சொல்லியிருக்கலாமே? அப்பவே அவ தன்னோட மனச தேத்தியிருப்பாள்ல. இன்னைக்கு கஷ்டத்தையே வாழ்க்கையா வாழ்ந்திட்டிருக்கிற அவகிட்ட போய் இதை சொன்னா எப்படி தாங்கிப்பா? உன்னைப் போல ஒரு சிலர்னால தான்டா பெண்கள் மத்தியில மொத்த ஆண்களுக்குமே கெட்ட பேரு. என்னை பொறுத்தவரைக்கும் அவளோட பார்க்குறப்போ, இந்த மீனா எந்த விதத்திலயும் உயர்ந்தவ கிடையாது.

அதையும் மீறி அவளை நீ வேண்டாம்னு ஒதுக்கியிருக்கன்னா நிச்சயம் அது இவளோட பணத்துக்காத்தான் இருக்கும். ஏன்னா அவ அந்த ஒரு விஷயத்தில தான் குறைஞ்சவ." என்று வெங்கட் தக்க சமயம் பார்த்து உண்மையைக் கண்டுகொண்டு சொன்னான்.

தன்னை கண்டுகொண்டானே, தன் மேல் தவறைத் தூக்கி போடப் போகிறான் என நினைத்த ரஞ்சித், "இங்க பாரு வெங்கட், எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசாத. நான் ஒன்னும் எந்த தவறும் செய்யல. எவன் கூடவோ ஓடி போனவளுக்கெல்லாம் வாழ்க்கை கொடுக்க நான் ஒன்னும் தியாகி கிடையாது." என்று வெங்கட்டை எதிர்த்து ரஞ்சித் பேச, அவனது பேச்சில் வாயில் கை வைத்து அதிர்ந்தவன்,

"என்னடா சொல்ற? உங்க அம்மா மாதிரியே நீயும் அவளை சந்தேகப்படுறீயா? மீனா வரதுக்கு முன்னாடி அவ அப்படி, அவ இப்படின்னு அவளோட புராணம் தானடா பாடுன? ஆனா இன்னைக்கு எனக்கே உன் பேச்சை கேட்க காது கூசுதுடா. சரி அவ தப்பானவனு சொல்லுறல்ல, அப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உன்னோட அத்தைக்கு எதுக்கு வாக்கு குடுத்த, நான் அவளை கட்டிப்பேன்னு. கடவுளே வந்து மைதிலிய தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்னு நல்லவன் போல அவங்ககிட்ட சொன்ன.

அவங்ககிட்ட நேரே சொல்லிருக்கலாமே, உங்க பொண்ணு தப்பானவ, நான் கட்டிக்க மாட்டேன்னு." என்றான் குற்றம் சாட்டும் விதமாய்.

"அது எனக்கு தப்பா படல வெங்கட்! ஏற்கனவே பல கஷ்டங்களை தாங்கிட்டிருக்கிறவங்களுக்கு இதையும் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பல. இதுவும் ஒருவகை வைத்தியம் தான். அவங்களுக்கு அவங்க பொண்ணு தப்பே செய்திருந்தாலும் நல்லவ. ஆனா எனக்கு அப்பிடியில்ல. நான் அவளை கட்டிக்க மாட்டேன், அவ்ளோ தான்." என்று முடித்தவனை வெறுமையாக பார்த்து புன்னகைத்தவன்,

"இப்போ புரியுது, சார் தான் பெரிய இடத்து மாப்பிள்ளையாச்சே! இப்பிடித்தான் பேசுவாரு. இதுவே அந்த பட்டிக்காட்டு பொண்ணுக்கிட்ட பணம் இருந்திருந்தா, அவளை தப்பா சொன்ன இந்த வாயால நல்ல விதமா சொல்லியிருப்பல்ல. முன்னாடியெல்லாம் பொருளோட மதிப்பை மட்டும் தான் இந்த பணம் நிர்ணயிச்சிச்சு. ஆனா இப்போ ஒவ்வொருத்தர் நடத்தையையும் நிர்ணயம் செய்றதே இந்த காகிதம் என்கிறப்போ, இதை கண்டுபுடிச்சவன் மேல கோபமா வருது." என்றான் ஒரு பெண் வாழ்க்கை வீணாக போவதைத் தாங்காத இயலாமையில்.

"ஆமாடா! பணம்! பணம்! இதுதான் எல்லாமே! அன்பையும் நம்பிக்கையையும் வச்சு நாக்க கூட வழிக்க முடியாது, தெரியும்ல? ஆமா, நான் ஒரு பொண்ணை ஏமாத்திட்டேன் தான். நான் பெரிய பணக்காரன் கிடையாது, ஆனா ரொம்ப கஷ்டப்பட்டவன். இன்னைக்கு ஒருவேளை சாப்பிட்டேன்னா, அடுத்த நாள் சாப்பாட்டுக்கு யார்கிட்ட கடன் வாங்கலாம்னு யோசிக்கிற குடும்பம் என்னோடது. நான் சின்ன வயசில பட்ட கஷ்டத்தை நாளைக்கு என் பிள்ளை படக்கூடாது அதனாலதான்.

நான் விரும்பின வாழ்க்கையை உதறிட்டு, என்னை விரும்பி வந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன். எனக்கு என்ன தலையெழுத்தா, வாழ்க்கை பூராவும் கஷ்டப்படணும்னு? அழகும் காதலும் ஒரு நாளும் கஷ்டத்தைப் போக்கிடாது. வேணும்னா ரசிக்கலாம், அனுபவிக்கலாம், அதோட நிறுத்திடணும். எவ்வொரு கட்டத்துக்கும் இழுத்திட்டு போகமுடியாது. இப்போ உன் பிரச்சினை என்ன, மைதிலிய நான் ஏமாத்துறேன் அவ்வளவு தானே?

நான் உன் நண்பன்னு பாராமல், இதுவரை பேசி பழகிடாத ஒருத்திக்காக சண்டைக்கு வர? சரி, உனக்காக நான் அவளை கட்டிக்கிறேன். ஆனா அது என்னோட ஊரில மட்டும்." என்றவனது பேச்சு புரியாமல் இமை சுருக்கினான்.

"உலகத்துக்கு மீனா, ஊருக்கு மைதிலி இருக்கட்டும். ஆனா என்ன, ஒருதருக்கொருத்தர் தெரியாமல் பாத்துக்கணும். இந்த ரெண்டு வருஷம் பாத்துக்கிட்டேன்ல? எல்லாம் ஈஸி தான்." என்றான் படு கூலாக.

ஆத்திரம் மேலிட அவனது சட்டையைக் கொத்தாக பற்றியவன், "ச்சீ... உன்னை தொட்டாலே பாவம்டா!" மறுகணமே சட்டையிலிருந்து உதறி கையினை மீட்டவன்,

"நீயெல்லாம் மனுஷனா? அந்த பொண்ணு இத கேட்டானா எதையாவது குடிச்சு செத்து போயிடப்போறா."

"சாகட்டும்டா! செத்து தொலையட்டும்! அவ இருந்தா எப்படியும் தொல்லை தான். ஏற்கனவே தங்கை என்ற பெயரில என் ரத்தத்தை ரெண்டு பிசாசுங்க உறிஞ்சுதுங்க. அவங்களை கரை சேர்க்கவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இந்த லட்சணத்தில இவளையும் என் தலையில கட்டி, இவளோட தங்கை பாரத்தையும் நான் சுமக்கணுமா? வீட்டில ஆண் பிள்ளையா பிறக்குறது அவ்வளவு பெரிய குத்தமா என்ன? இல்ல, என் தலையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா? காலம் பூராவும் சம்பாதிச்சு கொட்டிட்டே இருக்க என்னால முடியாது.

இந்த சனியன் தொலைஞ்சதுனா மீனாவை கல்யாணம் பண்றதில கூட சிக்கல் இருக்காது. மீனாவை கல்யாணம் செய்தேன்னா என் தங்கைங்களையும் நானும் கஷ்டப்படாமல் கரை சேர்க்கலாம்." என்றான் ஆத்திரமாய்.

"நீயெல்லாம்... ச்சைய்... இதுக்கு மேல உன்கூட பேசினேன்னா, உன் பாவம் என்னையும் ஒட்டிக்கும். எப்படியோ போய் தொல." என்று அந்த இடத்திலிருந்து கோபமாக வெளியேறினான் வெங்கட்.

ஆம், வெங்கட் இவனது இரண்டு வருடத் தோழன். அதாவது இருவரும் ஒரே ஆஃபிஸ் தான். புதிய இடம், தெரியாத ஊரில் ஆஃபீஸ் சேர்ந்தவன், எங்கு தங்குவதென தெரியாமல் தடுமாறும் போது, தானும் ஊரிலிருந்து வந்து ரூம் எடுத்துத்தான் தங்கியிருக்கிறேன். ஒன்றாக இருவரும் தங்கலாம் என கூறி ரஞ்சித்தை தன் அறையிலேயே தங்க வைத்தான். ரஞ்சித்தை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ரஞ்சித் பேச்சில் பாதி மைதிலியை பற்றியதாக இருப்பதனால், அவன் அவளைப் பற்றி கூறும் போதெல்லாம் அவன் முகம் இரண்டு மடங்கு பிரகாசமாகும்.

இப்படி ஒரு அன்பா என ஆச்சரியப்படுபவன், பல சமயங்களில் ரஞ்சித்தைப் பார்த்து பொறாமையும் கொள்வான். கூடவே ஏக்கம் வந்து தொற்றிக்கொள்ளும், தனக்கு இப்படி ஒரு முறைப்பெண் இல்லையே என்று. இதை பலமுறை அவனிடமே சொல்லியிருக்கிறான். மூன்று மாதங்களாக இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவு என்பதும் இருந்ததில்லை. மைதிலியை வாரம் ஒருமுறை அழைப்பான். இருவரும் காதல் வாசகங்கள் பேசாமல், பொதுவான சில விஷயங்கள் மாத்திரம் பேசுவதனால், வெங்கட் முன் நின்றுதான் பேசுவான். அவள் புகைப்படத்தைக் கூட அவனுக்கு காட்டி இதுதான் என் மைதிலி என்று வேறு உரிமையோடு கூறுவான். அதுவே மூன்று மாதங்கள் கடந்திருக்க, தினமும் போனில் பேச ஆரம்பித்தான், அதுவும் வெங்கட்டிற்கு மறைத்து.

வெங்கட்டிற்கு முதலில் அது தவறாக படவில்லை. திருமணம் செய்யப் போகிறவர்கள், பேசுவதற்கு ஆயிரம் இருக்கும். தன் முன் பேசுவது சங்கடமாக இருப்பதனால், அப்படி தனிமையில் பேசுகிறான் என்று தானே நினைத்துக் கொண்டான். ஆனால் இடையிடையே தன் முன் நின்று பேசும் போது, எந்தவித சஞ்சலமும் இல்லாமல் மைதிலியிடம் பேசுபவன் முகம் மட்டும் இறுக்கமாக இருக்கும்.

அப்படி தன் முன் நின்று மைதிலியுடன் பேசும் போது, அந்த பேச்சுக்கூட மூன்று நிமிடங்களுக்கு அதிகமிருக்காது. ஆனால் மைதிலியின் பிரச்சனைகள் எல்லாம் வெங்கட்டிடம் இறுகிய முகத்துடனேயே கூறுவான். அதற்கு வெங்கட் நினைத்துக்கொண்ட காரணமே, தன் வருங்கால மனைவியை இன்னொருவன் கவர நினைக்கிறான் என்பதனால் வந்த கோபம் என்று.

மைதிலி துயரங்களைக் கேட்ட வெங்கட்டுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? நாளுக்கு நாள் இவனது நடவடிக்கைகளில் மாறுதலைக் கண்டாலும் அவன் கேட்டதில்லை. அன்று ஆஃபீஸில் திடீர் என ஒரு மீட்டிங் வைக்கப்பட்டது.

ஆஃபீஸ் பற்றி ஒரு சில தகவல்கள் பகிர்ந்து கொண்டதன் பின், இறுதியில் ஒரு குட் நியூஸ் என அறிவித்த மீனாவின் தந்தை நந்தன், ரஞ்சித்தை அருகில் அழைத்து, இவன் தன் வருங்கால மருமகன் என்னும் போது தான், வெங்கட்டிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை அங்கு காட்டாதவன், ரூமில் வந்து ரஞ்சித்தோடு பெரிய வாக்குவாதமே நடத்தி விட்டான். அதை தவறு என்றும், இரண்டு பெண்கள் மனதுடன் விளையாடாதே என எவ்வளவோ எடுத்துக் கூறிவிட்டான்.

ஆனால் ரஞ்சித்திடம் மாறுதல் தான் இல்லை. வெங்கட்டின் இந்த தொல்லை தாங்காது, வேறு ரூம் எடுத்து தங்கியவன், ஆஃபீஸில் வெங்கட்டோடு பேசும் தருணங்களைத் தட்டிக் கழித்தான். இன்று தன் இளைய முதலாளியின் திருமணம் என்பதால் தான் வெங்கட்டும் திருமணத்திற்கு வந்தான். வந்த இடத்தில் தான் வெங்கட்டிற்கு ரஞ்சித்தோடு பேசும் வாய்ப்பு கிடைக்க, அதை பயன்படுத்தி அவன் மனதை மாற்றி விடலாம் என நினைத்துதான், வெங்கட் அவனோடு பேச வந்தான்.

ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் அனைத்துமே ஆணாக இருந்து, அவனே அருவருக்கத்தக்க வார்த்தைகள் எனும்போது, இதை மைதிலி மட்டும் தாங்குவாளா என்ன? ஆம், மைதிலியும் இதை கதவின் அருகே நின்று கேட்டுவிட்டாள்.

முதலில் அவளுக்கே இது ரஞ்சித் தானா என்கிற சந்தேகம் தான். அதை உறுதி செய்வது போல் இருந்தது, மாப்பிள்ளை என்ற ஒருவரின் குரலில்.

'மாப்பிள்ளையா? என் அத்தான் இவருக்கு எப்படி மாப்பிள்ளை முறையாகும்? நமக்கு இப்படி ஒரு சொந்தமா? அதுவும் இங்கே?’ என சிந்தித்தவளுக்கு, மாப்பிள்ளை என்று உரிமையோடு அழைக்கும் அளவுக்கு இங்கு யாருமில்லை. அப்போ இது தன் அத்தான் இல்லை.' என நினைத்தவள்,

'அத்தானைத்தான் பார்க்க முடியவில்லை. அவர் உருவத்தையாவது பார்ப்போம்.' என நினைத்தவளாய், அவன் போன திசையில் போகும் போது தான், வெங்கட் அவனை தனியே தள்ளிக்கொண்டு போய் பேசுவதைக் கதவின் ஓரம் நின்று கேட்டவள் கண்களோ ஆறு கண்டிருந்தது. தன் அத்தானா இத்தகைய வார்த்தைகள் கொண்டு என்னை திட்டியது? அதுவும் என்னை செத்து தொலையட்டும் என கூறும் அளவிற்கு என்னை வெறுத்து விட்டானா? இல்லை இது என் அத்தானே இல்லை.' என அவனையே பார்த்திருக்க, அவனோ வெங்கட் கசக்கிச் சென்ற தன் சட்டையை சரி செய்து கொண்டிருந்தான்.

அவன் பின்னால் வந்த பெண்ணொருத்தி அவன் பின்புறமாக, அவனை இறுக கட்டிக்கொண்டவள் அவன் முதுகினில் வாகாக சாய்ந்தாள்.

"என்ன டார்லிங்! எதுக்கு இங்க வந்து தனியா நிக்கிறிங்க? ரொம்ப வேலை தந்து கொடுமை படுத்துறாங்களா? என்னோட ஃப்ரெண்ட்ஸ் உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க. சரினு மண்டபம் புல்லா தேடினாலும் கிடைக்கணுமே? இங்க என்னடான்னா பொறுப்பான மருமகனா மாறிட்டாரு அய்யா!" என்றாள் குழையும் குரலில்.

அவனோ தன் வயிற்றில் இருந்த அவளது கரங்களைப் பற்றி எதிரே நிறுத்தியவன், "இதுக்குத்தான் என்னை நீ தேடினியா? நானும் இந்த மாதிரி கட்டிப்பிடிச்சு கொஞ்சி பேசுறதை பார்த்து, வேறு எதுவோனு நினைச்சிட்டேன்." என்றவன் பேச்சின் போதே, அவளைத் தன் கைவளைவில் நிறுத்தியவன், யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என விழிகளைச் சுழல விட்டான்.

"யாரும் இல்ல, ஒன்னே ஒன்னு தாயேன்." என்று தன் உதட்டைக் குவித்துக் கேட்டான்.

"ச்சீ... போடா பொறுக்கி!" என்று செல்லமாக சிணுங்கியவள்,

"விடுங்க, நான் போகணும். வெளிய என்னை தேட போறாங்க." என அவன் கைவிலங்கை விலக்க முயன்றாள்.

"முடியாது! ஒன்னே ஒன்னு குடு, விட்டுடுறேன்." என்று பிடிவாதம் பிடிக்க,

"என்ன இது விளையாட்டு? யாராச்சும் வந்திடப் போறாங்க." என்று மறுக்க,

"வரட்டுமே! எனக்கு ஒன்னும் பயம் கிடையாது. நான்தான் உன்னை கட்டிக்க போறேன்னு எல்லாருக்கும் தான் தெரியுமே. நீ என்ன சொன்னாலும் நீயா எனக்கு உம்மா தரும் வரைக்கும், உன்னை நான் விடமாட்டேன்." என்றான் அவனும் விடாப்பிடியாக.

"நீ ரொம்ப மோசம்டா திருடா!" என்று அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளியவள், தன் முறைக்கும் ஒரு தடவை சுற்றி பார்வையை சுழல விட்டவள் யாரும் இல்லை என்றதும்,

"எனக்கு வெட்கமா இருக்கு, நீங்க கண்ண மூடுங்க நான் தரேன்." என்றாள்.

"என்னடி கண்ண மூட சொல்ற? எப்படி நீ வெக்கப்படுறனு நானும் பாக்கணுமே செல்லம். அப்பிடியே குடேன்." என்றான் அவனும் குழைவான குரலில்.

"ஆசைய பாரு! கண்ணை மூடினா தான் கிடைக்கும்." என்றவள் விரல்களோ அவன் சட்டைப் பொத்தனைத் திருகியது.

"சரி, எப்படி தந்தா என்ன? கல்யாண வேலை எல்லாம் செய்தே எணர்ஜி குறைஞ்சிடிச்சு. பூஸ்ட்டா இருக்கட்டும், குடு." என கண்களை மூடினான்.

அவளும் அவன் கண்களை முடியதும் சிவப்பு சாயமிட்ட உதடுகளால் அவன் கன்னத்தில் உதட்டின் அச்சினைப் பதித்தவள், அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கையினைத் தட்டிவிட்டு வெளியே ஓடினாள்.

அவள் தன் கைகளைத் தட்டி விட்டதும் கண்களைத் திறந்தவனுக்கு, அவள் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடுவது தெரிய, “ஏய்ய்ய்!" என்றவாறு பின்னாலேயே ஓடினான்.

அத்தனை நேரமும் கதவு ஓரமிருந்த திரைச்சீலையின் பின் ஒளிந்து நின்று நடந்த அத்தனை காட்சிகளையும் பார்த்தவள், ரஞ்சித் ஓடி வரவும் சட்டென சுவர்புறம் திரும்பி, எதையோ தேடுபவள் போல விரல்களை சுவரின் மேல் கோலமிடச் செய்தாள்.

அவள் சுவரை ஒட்டி நின்றதனால், மீனாவின் பின் ஓடுவதிலேயே கவனம் செலுத்தியவனுக்கு பின்புறம் பார்க்க நேரம் அமையவில்லை. அவள் கண்களோ ஓடியவன் முதுகினையே வெறித்திருந்தது.

சந்தோஷமாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியின் இறகுகளை உடைத்து, சுடும் மணலில் போட்டால் துடிதுடித்து இறந்து போகும். அந்த நிலைதான் இப்போது மைதிலியின் நிலை. கால்கள் ஊன்றிய இடத்தை விட்டு நகர மறுத்தது. மரத்துப்போன உடலால் இமைக்கக்கூட முடியாமல், அவன் பார்வையின் எல்லை தாண்டியும், அவன் சென்ற பாதையையே வெறித்து நின்றாள்.

அய்யோ என்று வாய்விட்டு கதறவில்லை. அவள் மனம் கதறியது போலும். உள்ளே அழுவதை தேக்கி வைக்க இடமில்லாமல் கண்கள் கண்ணீரை அருவியாய் சொரிந்தது.

யாரோ ஒருவர் உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்தவர், "என்னாச்சும்மா? எதுக்கு கண்ணுல தண்ணி? சாப்பாடு ரொம்ப காரமா? நீ இதுக்கு முன்னா் இந்த மாதிரி காரமான சாப்பாடு சாப்பிட்டதே இல்லையா?" என்றார் பதிலை எதிர்பார்த்து.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ‘ஆமாம்’ என்பது போல தலையசைத்தவள், மறுபேச்சு பேச முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

பாவம், அவள் இருந்த மனநிலையில் அவளாலும் தன் எதிரில் நின்று பார்த்திருந்தவர்களைக் கவனிக்க முடியவில்லை. ஆம், அது வேறு யாருமில்லை, நம் ஸ்ரீயும் செல்வமும் தான்.

அழுது கொண்டு போகும் மைதிலியையே கண்ணசையாது பார்த்த ஸ்ரீயிற்கு, அவள் கலங்குவதைக் காண முடியவில்லை. தன்னால் இவள் அழுததையே பார்க்க முடியாதவன், இன்னொருவன் இவள் அழுகைக்கு காரணமாகிவிட்டான் என்னும் போது, அவனால் தாங்க முடியுமா என்ன? ரஞ்சித் மேல் பயங்கரமாக கோபம் வரத்தான் செய்தது.

ஆனால் இந்த அழுகையை அவனே விரும்பவில்லை என்றாலும், இவள் தாங்கித்தான் ஆகவேண்டும். இவள் அழுகிறாள் என்பதற்காக சில உண்மைகளை மறைக்க முடியாதே!? கசக்கும் என்பதற்காக மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நோய் ஆறுமா? உண்மை தெரியாது போனால் ஏமாந்திருக்க வேண்டும்.

‘நான்தான் சொன்னேனே, வாய்ப்புக்கள் அமையும் வரைதான் இங்கு பலர் இராமன். இதை இனியாவது புரிந்து கொள்வாள்.' என எண்ணினான்.

ஆம், அன்று மைதிலியின் அறைக்குள் நுழையும் போது, அவள் கையிலிருந்த புகைப்டத்தைப் பார்த்த ஸ்ரீயிற்கு அவனை எங்கோ பார்த்த நினைவு.

ஆனால் சட்டென்று நினைவில் இல்லை. ஆனால் அவனை ஒரு பெண்ணுடன் ஏதோ ஒரு பார்ட்டியில் பார்த்தது நன்றாக நினைவில் இருந்தது. அதனால் தான் துணிந்து அவளிடம் அன்று சவால் விட்டான். நாட்கள் போனதே தவிர, ஸ்ரீயினால் அவனை யார் என அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் மைதிலி அவனிடம் ஏமாறுகிறாள் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

அலுவலகம் சென்றால் அவன் யாராக இருக்கும் என்ற ஆராய்ச்சியைத் தவிர, தன் வேலையில் சுத்தமாக அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. தன் நிராகரிப்பினால் அடிக்கடி மைதிலியின் பார்வை தன்னை மேய்வதை அவனும் நன்கு அறிவான். எங்கே அவளுடன் பேசப் போனால், மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றுதான், அவளை கண்டுகொள்ளாமலே விட்டிருந்தான். அவனால் அவள் பார்வையில் இருக்கும் ஏக்கத்தின் காரணம் மட்டும் புரியவில்லை.

'நெருங்கினால் விலகுகிறாள், விலகினால் ஏங்குகிறாள். இவள் தேவைதான் என்ன?' என இருதலைக் கொள்ளியானான் ஸ்ரீ.

அதே சிந்தனையில இருந்தவன், மதிய சாப்பாட்டு நேரமானதனால் வீட்டு வாசலில் நுழையும் போது கேட்ட குரலில், யார் குரல் என பார்க்கும் போது தான், அவனது நெருங்கிய சொந்தமான நந்தன் மாமா ஹாலில் அமர்ந்து பேசுவதைக் கண்டான். கூடவே ரஞ்சித்தும் நினைவில் வந்தான். நந்தனைக் கண்டதும் ரஞ்சித் நினைவில் வர காரணம் மீனா தான்.

ஒரு வருடங்களுக்கு முன்பு தொழில் ரீதியான நெருங்கிய நண்பன் மகனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டான் ஸ்ரீ. அதே பார்ட்டியில் மீனாவினையும் கண்டான்.

சந்தோஷமாக அவளை அணைத்து விடுவித்தவன், "என்ன மீனா, நீ எப்படி இங்க?" என கேட்க,

"என்னோட ஃப்ரெண்ட் சன் பர்த்டே தான் ஸ்ரீ. என்னையும் அழைச்சிருந்தா, அதனால தான் வந்தேன்." என்று உற்சாகமாக சொன்னவள்,

"ஸ்ரீ உனக்கு ஒருத்தரை இன்ட்ரோ பண்றேன். பட் யார்கிட்டயும் சொல்லிடாத." என்ற நிபந்தனையை முன் வைத்தவாறே, சற்று தள்ளி நின்ற ரஞ்சித்தைக் கைப்பிடித்து அழைத்து வந்தவள்,

"இவரு பெயர் ரஞ்சித், என்னோட வருங்கால கணவர்." என்க,

ஸ்ரீக்கு மீனாவின் பேச்சு அதிர்ச்சியாக இருந்தாலும், அவனைப் பார்த்து சிறுநகை பூத்தவன், "ஹலோ ஸ்ரீ!" என்றவாறு கை குலுக்கியவன் மீனாவிடம், "சும்மா சொல்லக்கூடாது, செலக்ஷன் சூப்பர்." என மெச்சியவன், "மாமாக்கு தெரியுமா மீனா?" என்றான்.

"இல்ல ஸ்ரீ, இனிமே தான் சொல்லணும். என்ன, சொல்ல கொஞ்சம் பயம்மா இருக்கு." என்றவளிடம்,

"லவ் பண்ணுறப்போ வர தைரியம் அதை பேரண்ட்ஸ்கிட்ட சொல்ல வர்றதில்ல போல?" என்று நக்கலாக ஸ்ரீ கூற,

"அதெல்லாம் நிறையவே இருக்கு ஸ்ரீ. இவரும் அப்பா ஆஃபீஸ்ல தான் ஒர்க் பண்றாரு. சம்பளம் தர முதலாளிக்கு துரோகம் பண்ணுறேனோனு அப்பாகிட்ட சொல்ல பயந்து என்னையும் சொல்ல விடுறாரில்ல. சீக்கிரம் சொல்லணும்." என்று கூற,

"சீக்கிரம் சொல்லி வாழ்க்கையிலயும் இணையப் பாருங்க." என்றவன் பார்ட்டி முடிந்ததும் அதை மறந்தே விட்டான்.

இன்று நந்தனைப் பார்த்ததும் தான் ரஞ்சித்தே நினைவில் வந்தான். அதனால் தான் மீனாவிற்கு மாப்பிள்ளை பாத்தாச்சா என விசாரித்தான். ரஞ்சித்தால் மைதிலி ஏமாறுவதை தன் வாயால் சொன்னால், தன்மேல் இருக்கும் கோபத்தில் பொய் சொல்கிறேன், கட்டுக்கதை விடுகிறேன் என்று அதை நம்பாமல் இருக்க வாய்பிருப்பதாக நினைத்தான்.

நிச்சயம் மீனா காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததனால், ரஞ்சித்தும் திருமணத்திற்கு வருவான் என்பது நன்கு அறிந்தவனாய் நான் எதற்கு சொல்ல வேண்டும், அவளாகவே நேரிலே பார்க்கட்டும் என்று முடிவெடுத்தவன், மைதிலி திருமணத்திற்கு செல்ல வேண்டிய ட்ரெஸ்ஸை ஒரு வாரத்திற்கு முன்னர் தேர்வு செய்து, பிளவுஸ் தைப்பதற்காக அவளது அளவு பிளவுஸை அவளுக்கு தெரியாமலே திருடி, அளவுடையாக கொடுத்தவன், மீண்டும் அவளறியாமலே கொண்டு வந்து வைத்தும் விட்டான்.

திருமண நாள் அன்று காலையிலேயே ஆஃபிஸ் என்று கிளம்பியவன், வேலை எதுவும் இல்லாமலே வேலை என்று தாயின் அழைப்பை நிராகரித்தான். சில நிமிடங்களின் பின் அழைத்து மைதிலியை அழைத்து செல்லச் சொன்னான். கடைசி நேரத்தில் கூறினால் மைதிலியால் நிராகரிக்க முடியாது என்பது அவன் திட்டம். அது போலவே மைதிலியும் தயாரானாள்.

மண்டபத்தின் ஹாலுக்கு ஓடுவதைக் கண்ட ஸ்ரீ, அவள் பின்னால் அவனும் ஓட, ஸ்ரீயை ஓடவிடாது அவன் கையினைப் பற்றி நிறுத்திய செல்வம், "என்னடா நடக்குதிங்க?" என்றான் எதுவுமே புரியாமல்.

உண்மையில் நடந்த நிகழ்வில் மைதிலி மட்டும் உறைந்து போகவில்லை, செல்வமும் தான். ஸ்ரீயிற்காவது இவளது அழுகையின் காரணம் புரிந்தது. ஆனால் செல்வத்திற்கு மொழியறியா படம் பார்ப்பதைப் போல் தான் இருந்தது.

செல்வம் தன் கையைப் போகவிடாது பற்றியதில் சினந்தவன், "என்னடா... எதுக்கு இப்ப என்னை தடுக்கிற?" என்றான்.

"என்ன மச்சான் நடக்குது? எதுவுமே புரியலயேடா! யாரவன்? எதுக்கு அவனை பார்த்து இவ சாக் ஆகினா? வேறு ஒரு பொண்ணு கூட இவன் ரொமான்ஸ் பண்ணினா இவ எதுக்கு அழறா?"

"அவ அழுதிட்டு போறா, உனக்கு இப்போ இது கேக்கிற நேரமா?" என கடுகடுத்தவன்,

"இவன்தான் மைதிலியோட முறைப் பையன். இவனைத்தான் இவளுக்கு சின்ன வயசில நிச்சயம் பண்ணாங்க." என்றவன், செல்வத்தின் கையினை உருவிவிட்டு செல்ல, மைதிலியின் அழுகைக்கான காரணம் இப்போது புரிந்தது.

"இவனை நல்லவன் என்று நினைத்து தானே ஸ்ரீகூட சண்டை போட்டா. இவன் கூடவா ஸ்ரீயை ஒப்பிட்டு பேசினா? நம்பிக்கை துரோகம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம். கொஞ்சமும் குற்றவுணர்வே இல்லாமல் சாதாரணமாக செய்திட்டு, அதற்கு ஆயிரம் காரணம் அடுக்கும் இவன் நல்லவனா?

செய்வதெல்லாம் தானே செய்திட்டு, கடைசியில் இந்த பெண் நடத்தையில் குறை வேற... இதற்கு ஸ்ரீ எவ்வளவோ நல்லவனாச்சே! பாவம், இந்த ஏமாற்றத்தை எப்படி தாங்கிக்கப் போறாளோ? எத்தனை பேர்தான் அவள் வாழ்க்கையை மாற்றியமைக்க போறாங்களோ! இதில் இந்த ஸ்ரீ வேறு... புதுசு புதுசா அவளை பழி அது இதுன்னு..." என சலித்தவன் ஸ்ரீயின் பின்னே நகர்ந்தான்.



தொடரும்…