பகுதி 35
முன்னே ஓடி வந்தவள் தன் வலியைக் காட்டிக்கொள்ளாது, விஜயாவின் அருகில் அமர்ந்தவளால் சுத்தமாக முடியவில்லை. தன் நிலையை நினைத்து அவளுக்கே வெட்கமாக இருந்தது. பல கஷ்டங்களைக் கடந்து வந்தவளால், இந்த ஏமாற்றத்தை மட்டு்ம் தாங்க முடியவில்லை. கண்கள் நீரை உமிழ, மற்றவர்கள் அறியாது உள்ளிழுத்தபடி இருந்தவள் மனதோ உள்ளே ஓலமிட்டது.
மனதின் வலி தாளாமல் உதடுகள் துடித்து, எப்போது வெடிப்போம் என தக்க சமயத்திற்காக காத்திருக்க, இமைகளை சுருக்கி, உதட்டினைப் பற்களுக்கு நடுவில் கடித்து, மூச்சோடு சேர்ந்து அழுகையினையும் அடக்கியவள், நெஞ்சு பகுதியோ சிலமுறை குலுங்கி அடங்கியது.
அத்தனை நேரம் அடக்கியிருந்த அவள் மூச்சு காற்றோ தன்னை இத்தனை நேரம் சிறை செய்த அவளது நடவடிக்கை பிடிக்காமல், வெப்பக் காற்றின் மூலம் தன் கோபத்தைப் பறை சாற்ற,
இதற்கு மேல் தன்னால் இங்கு இருக்க முடியாது. அப்படி இருந்தால் தன்னைத் தானே காட்டி கொடுத்து உண்மையை சொல்லி விட நேரும். பின்னர் எதற்காக தன்னை ரஞ்சித் வேண்டாம் என்றானோ அது அவனுக்கு கிடைக்காமலே போய்விடும். என் ஆசை நிராசை ஆனது. அவன் ஆசையாவது நிறைவேறட்டும் என நினைத்தவளாய், மூக்கை உறிஞ்சி அழுகையை அடக்கியவள், "கல்யாணம் முடிஞ்சுதே, நம்ம போகலாமாம்மா?" என்றாள்.
அவளது குரலில் திடீரென தெரிந்த மாற்றத்தால், அத்தனை நேரமும் வீடியோ பிடிப்பவர்கள் செய்த அட்டகாசத்தால், மணமக்கள் படும் பாட்டை ரசித்தவாறு இருந்தவர், மைதிலியிடம் திரும்பினார்.
கண்கள் கலங்கி, முகம் சோகத்தைப் பிரதிபலிக்க அதை கண்டு பதறியவர், "என்னடா ஆச்சு?" என்றார் அக்கறையாக.
இப்போது எதுவும் அவளால் கூறமுடியாது. அப்படி கூறும் நிலையிலும் அவள் இல்லை. அங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூச்சு முட்டுவது போல் இருந்தது. எங்கு, மறுபடியும் அவனைக் கண்டால் அவனிடமிருந்து ஒளியாமல், அவன் சட்டையைப் பிடிச்சு வெங்கட் கேட்டதைப் போல் தானும் கேட்டுவிடுவேனோ என்ற பயம்.
இருந்தும் தன்னை வேண்டாம் என சொன்னவனை, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பார்க்க கூடாது. அது அவனது உயிரில்லாத உடலாக இருந்தாலும் சரி. அப்படி அவனைப் பார்த்து விட்டால், இதுவரை தன் வாழ்க்கை தனக்கு வைத்த சோதனைகளில் வென்று வந்தவள், அந்த நிகழ்வுக்குப் பின் துவண்டு போவது நிச்சயம் என நினைத்தவளுக்கு, கண்ணீரை வெளிக்காட்டி தான் ஒரு கோழை என்பதை அவளாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விஜயா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மறுபுறம் தலையைத் திருப்பி கொண்டவள், தலையினைத் தாங்கியவாறு, "என்னவோ தெரியலமா, தலை வலியெடுக்குது. ரொம்ப நேரம் உக்கார முடியல. கல்யாணம் தான் முடிஞ்சுதே, போகலாமா?"
அவளது தாடையில் கை வைத்து தன் புறம் திருப்பியவர் அவள் கண்ணீர் கண்டு பதறியவராய், "அம்மாகிட்ட பொய் எதுவும் சொல்லுறியா?" என்றார்.
அவர் கையினை எடுத்துவிட்டவள், ‘ஆம்’ என்பது போல் தலையினை அசைத்து, "ரொம்பவே வலிக்குதும்மா, அதனால தான் இந்த கண்ணீரும் கூட." என பொய் கூற,
"ஓ... அப்பிடியா?" என்றவருக்கு நம்பும்படியாக இல்லை என்றாலும், "சரிடா, கொஞ்சம் பொறுத்துக்கோ சொல்லிட்டு போயிடலாம்." என்றவர்,
"கூட்டத்தோட மூச்சு காத்தினால இந்த மாதிரி தலைவலி வந்திருக்கலாம். இயற்கை காத்து படுற இடமா பாத்து இரு, சரியாகிடும்." என கூறிக் கொண்டிருக்கும் போதே,
"ம்மா நீங்க கிளம்புங்க, நான் சொல்லிக்கிறேன்." என்று திடீரென கேட்ட ஸ்ரீயின் குரலில், நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் தானாகவே தரை தாழ்ந்தது.
இருக்காதா பின்னே? அன்றே கூறினானே, ராவணன் முழுமையாக கெட்டவனும் இல்லை, ராமன் நல்லவனும் இல்லை. உன் அத்தானுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் அவனும் தன்னைப் போல் உலகில் உள்ள கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாவான். இப்போது அவனது வறுமையும் குடும்ப சூழலும் தான் அவனை கட்டிப்போட்டுள்ளது என்று. அது உண்மையென இப்போது மைதிலிக்கு புரிந்தது.
இவனுக்காகத் தானே அன்று அத்தனை இழிவான வார்த்தைகள் கொண்டு ஸ்ரீயைக் காயப்படுத்தினாள். அத்தனையையும் கேட்டுவிட்டு கோபமே கொள்ளாது நிதானமாக சொன்னானே, கூடிய விரைவில் உண்மை எது என்று தெரிய வரும். அப்போ என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சு பேசுற பாரு, அதை நினைச்சு நீயே வருத்தப்படுவ. அந்த நேரம் நான் சொன்னதெல்லாம் வேத வார்த்தையா இருக்கிறப்போ, என்னை பாக்க முடியாமல் கூனிகுறுகி நிப்பனு என்றவன் வார்த்தை இப்போதும் அவள் காதுகளில் ஒலிக்க, மனமுடைந்தவள் கண்ணீர் மீண்டும் கன்னங்களை நனைத்தது.
'அப்படி என்றால் மனிதர்கள் மனம் இதுதான் என்று எடைபோடவே முடியாதா? சந்தர்ப்பத்துக்கு தகுந்த போல தம்மை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகளா? ஆசைகளை கிளறிவிட்டு சாதாரணமாக கடந்து சென்று விடுபவர்கள், ஏன் அவர்களை நம்பி இருப்பவர்களின் நிலையினை நினைத்தே பார்ப்பதில்லை? ஆண்கள் எல்லோருமே ஒரு போல தான் இருப்பார்களா? ஒருவர் கூட உண்மையாக இருக்கவே மாட்டார்ளா?' என வெந்து போனவளுக்கு, தன்னை தவறாக பேசியவனை நினைக்கையில் மனம் இரணமாக வலித்தது.
கிடைத்த சிறிய இடைவெளியில் இவற்றை எல்லாம் சிந்தித்தவள் தலை, உண்மையில் வலி எடுக்கத்தான் செய்தது. ஸ்ரீயினைப் பார்க்க கூசியவளாய், குனிந்திருந்து நெற்றியினை நீவி விட்டவளது கவனத்தை ஈர்த்தது விஜயாவின் பேச்சு.
"என்ன ஸ்ரீ, எதுக்கு இப்போ அவசரமா கிளம்பச் சொல்ற? எப்பவாச்சும் ஒருதடவை, அதுவும் இப்படி ஒரு நிகழ்வுனு வரப்ப தான், எல்லாரையும் பாக்குறோம். யார் கூடவும் சரியா பேசல, நின்னு பேசிட்டு சாயந்தரம் போகலாம்டா." என்றார் விஜயா.
மௌனமாக மைதிலியிடம் திரும்பியவன், அவள் இப்போது நெற்றியை நீவியவாறு இருக்க பார்வையைத் திருப்பாமலே, "ஒன்னும் தேவையில்ல, வேணும்னா இன்னொரு நாள் அழைச்சிட்டு வரேன். அப்போ பேசுங்க, இன்னைக்கு வேணாம்." என்றவன் பார்வை மைதிலியிடம் நிலைத்திருப்பதையும், அவன் கூறும் போது வார்த்தையில் இருந்த இறுக்கமும், கட்டளை தன்மையையும் கண்டுகொண்ட விஜயா,
"சரிடா, சரி போகலாம். இரு, நான் சொல்லிட்டே வரேன்."
"இல்லம்மா நீ கிளம்பு, நான் சொல்லிக்கிறேன்." என்றான்.
"என்ன ஸ்ரீ, நீயும் ஏன் வித்தியாசமா நடந்துக்குற? கல்யாணத்துக்கு வந்திட்டு முழுமையா பங்கேற்கத்தான் முடியல, மரியாதைக்காவது சொல்லிட்டு வந்திடுறேன். அப்புறம் ஏதாவது நினைச்சுக்க போறாங்க. இரு, ஒரு எட்டு சொல்லிட்டு வந்திடுறேன்." என்று இருக்கையினை நகர்த்தியவரை மறித்தவன்,
செல்வத்தை அழைத்து, "இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போ, நான் அத்தைக்கிட்ட சொல்லிட்டு வரேன்." என்றவன் பேச்சில் வேறு பேச்சிற்கு இடமில்லை என்ற கட்டளையே இருந்தது.
"என்னவோ செய், நாளைக்கு யாராவது குத்தம் சொல்லட்டும், உன்னைத்தான் புடிச்சு விடுவேன். அவங்களுக்கு நீயே பதில் சொல்லிக்கோ." என கூறியவர்,
"வாம்மா, நம்ம போகலாம்." என்று மைதிலியையும் அழைத்துக்கொண்டு சென்றார்.
“ஆமாம்மா! கட்டாயம் பதில் சொல்லத்தான் வேணும். பதில் சொல்லாம எங்க ஒளிய முடியும்? நிச்சயம் இதுக்கெல்லாம் பதில் சொல்லியே தீரணும்.” போய் கொண்டிருந்தவர்கள் முதுகினை வெறித்தவன் உதடுகளோ கோபத்தின் உச்சியில் உறுமியது.
விஜயாவினைப் பிடித்து காரினில் அமர்த்திய செல்வம், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து மைதிலியைத் திரும்பிப் பார்த்தான். அமைதியாக தன் புறமிருந்த கண்ணாடியில் பார்வையைப் பதித்திருந்தாள். உதடுகளோ ஒன்றையொன்று நசுங்கி விடும் அளவிற்கு இறுக்கமாக இருந்தது. அதன் காரணமும் செல்வம் அறிவான். எப்போதும் கலகலப்பாக இருப்பவளின் அமைதியும், சோகமான அவளது முகத்தினையும் கண்ட விஜயா, அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.
ஆனால் அடிக்கடி அவளை நோட்டமிட்டவாறே வந்தார். நான்கு மணிநேர பயணத்தின் பின் அவர்கள் மாளிகையின் முன் காரை நிறுத்தியவன், அவர்களோடு வீட்டினுள்ளே நுழைந்தான். பயணக்களைப்பில் சோபாவில் தொப்பென மூவரும் அமர்ந்தனர்.
ஈஸ்வரி கண்டுவிட்டு திருமணத்தைப் பற்றி விசாரித்தவர், வழமைக்கு மாறான மைதிலியின் அமைதியைக் கண்டார். சோர்ந்த முகத்தோடு எங்கோ வெறித்திருக்க, அவளது இந்த தோற்றத்தில் குழம்பி, விஜயாவிடம் என்ன என்பதாக புரிவம் உயர்வில் வினவினர். விஜயாவும் தெரியாது என்பதாக உதட்டைப் பிதுக்கினார்.
"எங்க விஜயா ஸ்ரீ? அவனும் கல்யாணத்துக்கு வந்தான் தானே?"
"ம்ம்... வந்தான் அத்தை." என்றவர், இறுதி நேரம் தன்னை ஸ்ரீ துரத்தி விட்டதையும், அதன் காரணமும் தனக்கு தெரியாது என்று விஜயா கூறியதும் மைதிலி காதில் விழுந்தது. சிந்தனை கலைந்தவள் சட்டென அவர்கள் பேச்சில் இடைபுகுந்து,
"நீங்க பேசுங்கம்மா, எனக்கு தலை ரொம்ப வலிக்குது. நான் போய் தூங்குறேன்." என எழப்போக,
"இரு, சாப்பிட்டு போ. காலையில இருந்து எதுவுமே சாப்பிடல. இந்த ஸ்ரீக்கும் என்னாச்சோ தெரியல, எதுக்கு சாப்பிடக்கூட விடாமல் துரத்தி விட்டானோ?" என விஜயா பேசிக்கொண்டிருக்கும் போதே,
"எனக்கு பசியில்லமா. தலைவலி தான் தாங்கல. கொஞ்சம் தூங்கினால் சரியாகிடும்." என்று நகரப் போனவளின் முன்னால் காஃபி ட்ரேயோடு நின்றாள் தெய்வானை.
"இதை குடிச்சிட்டு போய் தூங்கு மைதிலி. சுக்கு போட்டிருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் தலைவலி காணாமல் போயிடும்." என கூறி, அவள் கையில் காஃபியை திணித்து குடி என்றுவிட்டு செல்வத்திடமும் நீட்ட, அவனும் மைதிலியையே பார்த்தவாறு கப்பை எடுத்தான்.
மைதிலியும் தெய்வானை தந்த காஃபியை மறுக்காமல் பருகியவள் எழுந்து கொள்ள எத்தனிக்க, இதற்காகவே காத்திருந்ததைப் போல் அத்தனை நேரம் அமைதியாக இருந்த விஜயா அவள் கையினைப் பற்றி,
"என்னை ஒரு பேச்சுக்காக மட்டும் தானே அம்மான்னு சொல்லுற? உன் மனசளவில அம்மா ஸ்தானத்தில எப்பவும் நான் வரமுடியாதுல? அது சரி, பேச்சுக்கு எல்லாரையும் அம்மான்னு கூப்பிடலாம். பெத்தவ சொந்தவங்க வேற தானே? அவங்ககிட்ட தான நீ உரிமை எடுத்துக்க முடியும். அவங்ககிட்ட தான மனம் விட்டு பேசமுடியும். நான் எல்லாம் அவங்கள நெருங்க முடியுமா?" என வேதனை படிந்த முகத்தோடு வினவ,
திடுதிப்பென விஜயாவின் இந்த வார்த்தையைக் கேட்ட மைதிலிக்கு, எதற்காக விஜயா இப்படி பேசுகிறார் என்பது புரியாமல், எழுந்த வேகத்தில் தொம்மென அவரருகில் அமர்ந்தாள்.
தன் கவலைகளை ஓரம் கட்டிவிட்டு விஜயாவின் கையினைப் பற்றி, பருந்திடம் சிக்கிய கோழிக்குஞ்சை அதனிடமிருந்து மீட்டு தன் கைகளுக்குள் பதுக்கி ஆறுதல் கூறுவதைப் போல், அவர் கையினை வருடிக் கொடுத்தவள்,
"ஏன்ம்மா இப்பிடி கேக்கிறீங்க? நான் அந்த மாதிரில்லாம் நினைக்கவே இல்லம்மா! என் அம்மா எப்படியோ, அந்த ஸ்தானத்தில தான்ம்மா உங்களையும் பாக்கிறேன். சொல்லப் போனா சொந்தங்களை பிரிஞ்சு வந்து ஒரு வாரம் தான் நான் கஷ்டப்பட்டேன். அப்புறம் எனக்கு அந்த கஷ்டம் தெரியவே இல்லை. இதுவும் என் வீடாகத் தான்ம்மா நினைக்கிறேன். அம்மாவுக்கு இணையான உங்க அன்பினால மட்டும் தான்மா என்னோட இயல்பை தொலைக்காமல் இருக்க முடியுது.
எப்படி அம்மாகிட்ட சேட்டை பண்ணி, அவங்கள இம்சை பண்ணுவேனோ அத தான்ம்மா இங்கயும் பண்றேன். இப்போ என்னோட அன்பில என்ன குறை கண்டு இந்த மாதிரி கேக்கிறீங்க? ஏதாவது தப்பு பண்ணிட்டேனாம்மா?" புரியாது நொந்தே போனாள்.
அவளை வேதனை நிறைந்த புன்னகையோடு ஏறிட்டவர், "இல்ல, நீ எந்த தப்பும் பண்ணல. நான்தான் தப்பு பண்ணிட்டேன். என் பொண்ணு என்கிட்ட எதையும் மறைக்க மாட்டாள்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனா அவ பெருசா எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறா. காலையில என் பேச்சை கேட்டு சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாரானவ, இப்போ சந்தோஷமா இல்ல. காரணம் எனக்கு தெரியாது. ஆனா அங்க நடந்த எதுவோ ஒன்னு, அவளை வேதனைப்படுத்தி இருக்குனு, இந்த நாலு மணிநேர அமைதியில என்னால புரிஞ்சுக்க முடியுது.
எல்லாரையும் தன்னோட சேட்டையினால எப்பவுமே சந்தோஷமா வச்சுக்கிற என் பொண்ணை, என்னால இந்த நிலையில பாக்க முடியல. அதே சமயம் அவகிட்ட உரிமையா என்னனு கேக்கவும் முடியல. இதுவே என் பொண்ணா இருந்தா, நான் கேட்குறதுக்கு முன்னாடி சொல்லியிருப்பாள்ல?" என்றார் விரக்தியாக.
அவரது பேச்சையே கேட்டிருந்தவளுக்கு, தனது நிலையினைக் கண்டுகொண்ட அவரது அன்பிலும் அக்கறையிலும், இத்தனை நேரம் அடக்கியிருந்த அழுகை வெடித்து, "அம்மா!" என்ற கேவலுடன் வேகமாக தாவி அவரை கட்டிக்கொண்டு கதறினாள்.
கதறியவளின் முதுகினை ஆறுதலாக வருடிய விஜயாவிற்கு அவளது கதறலே சொன்னது, எதற்கும் கலங்காத இவளை எதுவோ ஒன்று புரட்டி போட்டுவிட்டது என்பதை. அவள் கதறலில் கோவில் சென்று வந்த களைப்பில் படுத்திருந்த ரங்கசாமியும் வெளியே வந்து விட்டார்.
மற்றவர்கள் தன்னை வேடிக்கை பார்க்கின்றனர் என்ற எண்ணமே இல்லாது, இந்த நிமிடமே தன் கவலை முழுவதுமாக கொட்டி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழுது தானாகவே ஓய்ந்தவள், விஜயா தோளிலிருந்து எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அவளது கன்னங்களைப் பற்றிய விஜயா, "எதுக்கு இப்போ அழுத? பாரு, முகமெல்லாம் கொஞ்ச நேரத்தில வீங்கி போச்சு. ஏற்கனவே தலை வலி, கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காம போய் தூங்கு. அப்புறமா பேசிக்கலாம். தெய்வானை அவளை அழைச்சிட்டு போ." என்று தெய்வானைக்கு உத்தரவிட,
"இல்லம்மா, நான் இப்பவே சொல்லிடுறேன். இதுக்கப்புறம் அதைப்பத்தி நினைக்கவோ, பேசவோ நான் விரும்பல."
சோபவில் வசதியாக அமர்ந்தவள் தன் கைகளையேப் பார்த்தவாறு, மண்டபத்தில் தன் அத்தானைக் கண்டதிலிருந்து, அதன்பின் நடந்தவற்றை வரிசையாக அடுக்கினாள். அவள் கூற, கூற அவளது முகத்தினையேப் பார்த்தவர்கள் முகமும் மாறித்தான் போனது. நடந்தவற்றை கூறி முடித்ததும் நிமிர்ந்து மற்றவர்களை பார்த்தவள் விழிகளோ, மீண்டும் கண்ணீரைத் தத்தெடுத்திருந்தது.
அவளது அந்த நிலையினை வீட்டினரால் சிறிதும் பார்க்க முடியவில்லை. எப்போதுமே துடுக்குத்தனமாக பேசுபவள், இன்று கண்கள் வீங்கும் அளவிற்கு வேதனை தாளமல் அழுது புலம்பிக் கொண்டிருந்தால், எப்படி அவர்களால் பார்க்க முடியும்?
அவள் அருகில் வந்து அமர்ந்த ஈஸ்வரி, அவளை தன் நெஞ்சோடு வாரி அணைத்து கன்னம் வருடியவர், "அம்மாடி! பாட்டியால என்ன சொல்லி ஆறுதல் படுத்தணும்னு தெரியலடா. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுவேன்,
உனக்கு கணவனாக வரதுக்கு அந்த ரஞ்சித்துக்கு குடுப்பனை இல்ல. உன்னோட நல்ல மனச புரிஞ்சுக்காம பணம், வசதினு போறவனை நினைச்சு நீ அழுறது எனக்கு சரியா படல. உன்னோட அன்புக்கு தகுதி இல்லாதவனுக்காக உன்னோட விலைமதிப்பில்லாத கண்ணீரைக் கூட வேஸ்ட்டாக்குறது, உன்னோட அன்பை நீயே கொச்சை படுத்திறது போலம்மா." என்றவாறு அவள் தோள்களைப் பற்றி எழுப்பியவர்,
மைதிலியின் கன்னங்களை இரு கைகளிலும் தாங்கி அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவர், "நீ அழக்கூடாது, அழவேண்டியவன் அவன்தான். இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் உன்னை நினைச்சு நிச்சயமா வருந்ததான் போறான். அப்போ இந்த ராஜகுமாரி, உன்னை மட்டும் நேசிச்சு உனக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவன் மடியில சந்தோஷமா இருக்க போறா." என்று வராத புன்னகையினை வலுக்கட்டாயமாக வரவழைத்தார்.
“என்ன ஒரு கவலை... உன் அத்தானோட உண்மை முகத்தை எல்லாருக்கும் படம் போட்டு காட்டிட்டு வந்திருக்கணும். அப்படி செய்திருந்தன்னா, அவனோட சுயம் எல்லாருக்கும் தெரிஞ்சு, அவனை மீனாக்கு குடுக்காமல் விரட்டியிருப்பாங்க. அப்போ விட்டுட்டு இப்போ வந்து கவலைப்படுற?" என்றார் ஈஸ்வரி ஆதங்கத்தோடு.
"இல்ல பாட்டி, அதெல்லாம் எனக்கு வேண்டாம். அவரு என்னை பிடிக்கலன்னு சொன்னதில எனக்கு வருத்தமில்ல பாட்டி. அது அவரோட துணை எப்படி இருக்கணும்ன்னு, முடிவெடுக்கிற உரிமை அவருக்கிருக்கு பாட்டி. பிடிக்காதவ முகத்தை பாத்திட்டு காலம் பூராவும் வாழ்றதும் கஷ்டம். ஆனா என்னை பிடிக்கல என்கிறதுக்கு சொன்ன காரணம் தான் பாட்டி, என்னால தாங்கிக்க முடியல." என்றவள்,
"ஒன்னு தெரியுமா பாட்டி? எனக்காக வாதாடின அந்த வெங்கட் அண்ணா இருக்காரே, அவரு என்னை ஒரு தடவை கூட பார்த்ததோ, பேசினதோ கிடையாது. ஆனா என்னை பத்தி என் அத்தான் சொன்னதை வச்சு, நான் எப்பிடியானவனு, என்னை தெரியாத அந்த மனுஷனுக்கு தெரிஞ்ச அளவுக்குக்கூட, சின்ன வயசில இருந்து என்கூட வளர்ந்த என் அத்தானுக்கு தெரியல என்கிறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு. அவரு நினைக்கிற அளவுக்கு தப்பானவளா நான் பாட்டி?" என கண்களைத் துடைத்தவள்,
"விடுங்க பாட்டி, என்னை அத்தானுக்கு பிடிக்கல. பிடிக்காதவர்கிட்ட என்னை நிருபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அந்த பொண்ணை கட்டிக்கிட்டா அவரால சந்தோஷமா இருக்க முடியும்னா, அவரோட சந்தோஷத்துக்கு நான் இடையூறாகவும் இருக்க விரும்பல. இதுக்கப்புறம் எனக்கும் அவருக்கும் எந்த உறவுமில்ல. இதுதான் நான் அவரை பத்தி நினைக்கிறதும் பேசுறதும் கடசியாக இருக்கும்." என்றவள் கண்கள், மீண்டும் கலங்க இருப்பதை அலட்சியம் செய்து தொடர்ந்தாள்.
"இனி யாரும் எனக்காக காத்திட்டு இருக்கிறாங்க என்ற குறுகுறுப்பு இல்லாம, என் குடும்பத்த சந்தோஷமா வழி நடத்தலாம். வீட்டுக்கடன் அடைக்கணும், தங்கையை படிக்க வைக்கணும். இதுதான் இப்போதைக்கு என் மனசில பதிய வைக்கணும். அப்புறம் அதை செயற்படுத்தணும். நிறைய வேலையிருக்கு பாட்டி. முடிஞ்சு போன விஷயத்தை நினைச்சு என்னை நானே குழப்பிக்க விரும்பல. நான் கவலைப்படுவேனோனு நினைச்சு நீங்களும் உங்களை குழப்பிக்காதிங்க. இத்தனை நாள் எனக்கு மட்டும் தான் சொந்தம்ன்னு இருந்த பொருள், கடைசி நேரத்தில இப்படி கை மாறி போச்சே என்கிற ஏமாற்றம் தானே தவிர, வருத்தமில்லை." என எழுந்தவள்,
"மண்டபத்தில இருந்து வரப்பவே ரொம்ப தலைவலி பாட்டி. கொஞ்சம் தூங்கி எழுந்துக்கலாம்னு நினைக்கிறேன், நைட்டுக்கு செம்மையா சமைச்சு வைங்க. ஒரு வெட்டு வெட்டிட்டுத்தான், அடுத்த ரவுண்டு தூங்க போவேன்." என்று சாதாரணமாக கூறுவது போல் கூறி சிரித்தவளின் சொல்லிலோ, செயலிலோ உயிரில்லை.
ஏதோ கடமைக்கு பேசியவளைப் போல் கூறிவிட்டு, தன் அறை நோக்கி சென்றவள் முதுகினையே வெறித்தது அங்கு நின்றவர்கள் மாத்திரமல்ல, மைதிலியின் அத்தனை பேச்சையும் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீயும்தான்.
நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. இரண்டு நாட்கள் மைதிலியால் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்றாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் தன் இயல்புக்கு திரும்பியிருந்தாள் மைதிலி.
வழமையாக விஜயாவிற்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு, மதிய சாப்பாட்டின் பின் தனது கம்ப்யூட்டர் கிளாஸ் செல்பவள், மாலை வேளையில் விஜயாவைத் தோட்டத்தில் நடக்க பழக்குவாள். இப்போதெல்லாம் விஜயா யார் தயவுமின்றி சிறிது நேரம் தானாகவே எழுந்து நிற்கவும் பழிக்கொண்டார்.
தொடரும்…