பகுதி 39
“நல்ல நாள் அதுவுமா பேசுற பேச்சாடா இது? பாவம்டா அந்த பொண்ணு. இது தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படும். பெண் பாவம் பொல்லாதது. ஏன்டா, நீ யார் மனசையும் புரிஞ்சுக்கிறதே இல்லை? இதில நானும் உனக்கு உடந்தையா இருக்கிறேன் என்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு." என்று இத்தனை நேரமும் மைதிலியின் நலன் விரும்பியாக பேசியவன்,
சட்டென தன் டோனை மாற்றி, "ஆனா மச்சான், உன்கூட நட்பு வச்சிக்கிட்ட நாள்ல இருந்து, என்னை எல்லாருமே ஒரு மாதிரியா பாக்கிறது மட்டும் இல்லடா, ரெண்டடி தள்ளி நின்னு தான் பேசுறாங்க." என்று கூறியவன் பேச்சோ ஸ்ரீயினது தலைசிறந்த நட்பின் இலக்கணமாக மாறியிருந்தது.
அவனது முன்னைய பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்த ஸ்ரீக்கு, அதன் அர்த்தம் புரியாமல் குதர்க்கமாக இருக்க,
"எரும... சொல்லுறத தெளிவா புரியும்படி சொல்லு. பைத்தியம் போல உளறிட்டு இருக்க." என்க,
"அதுதான் சரி, நீ மட்டும்தான் இந்த வார்த்தை சொல்லல. இப்போ நீயும் சொல்லிட்டியா?" என குரலில் வருத்தத்தைக் காட்ட,
"ஏன்? வேற யாரு உன்னை விசர்னு சொன்னாங்க?" என்றான்.
"யாரு சொல்லணும்? எல்லாருமே தான்..." என்றவன் ஸ்ரீயினது கோபப் பார்வையில்,
"கோவிச்சுக்காதடா! சொல்லிடுறேன். எல்லாம் அந்த சொட்டை மண்டையன் தான்." என்றான் செல்வம் மொட்டையாக.
"டேய்! ஒழுங்கா சொல்லுறியா? இல்லை கொல்லவா? மாடு மாதிரி வளந்திருக்கியே, கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லத் தெரியுதா?" என கோபப்பட்டவனிடம்,
"டேய் உனக்காக அசிங்கப்பட்டு வந்திருக்கிறேன். உன் நண்பனை, நீயும் அசிங்கப்படுத்துறது உன்னையே அசிங்கப்படுத்துறதுக்கு சமம்டா!" என வசனம் பேசியவனிடம் பொறுமை இழந்தவனோ,
"நீ இதுவரைக்கும் கொலையை நேர்ல பாத்திருக்கியாடா? இப்போ பாப்ப..." என்றான் எரிச்சலாய்.
"எல்லாம் அந்த சொட்டை மண்டையன், பரந்தாமன் தான்டா!"
"பரந்தாமன் சாரா? நீ எதுக்குடா அவர்கிட்ட போன? உனக்கு என்ன பிரச்சனை?" என்றான் ஸ்ரீ புரியாது.
"என்னடா! அம்னிஷியா வந்த ஆமை மாதிரி இந்த கேக்கிற? நீ கேட்டது உன் டிவோர்ஸ் மேட்டர் தானே?"
அவனது கேள்வியில் புருவத்தைச் சுருங்கியவன் மறுநொடியே, "சரி, விஷயத்துக்கு வா." என்றவன் குரலும் முன்னைய கம்பீரத்தை இழந்திருந்தது.
"என்ன மச்சான்! எதாவது தப்பா சொல்லிட்டேனா என்ன?" என்றான் அவனது மாறுதலைக் கண்டு.
"அப்பிடி எதுவும் இல்லடா! நீ முதல்ல விஷயத்தை சொல்லு."
சுற்றிலும் விழிகளை சுழட்டி விட்டு, "அது வந்து மச்சான், நீ அன்னைக்கு டிவோர்ஸ் பத்திரம் ரெடி பண்ணுனு தீவிரமா சொன்னியா? உன் குரலில் இருந்த கோபத்தில சொன்னதை செய்யலன்னா, என்னை ஏதாவது பண்ணிடுவியோனு நினைச்சு, அது சம்மந்தமா வக்கீல்கிட்ட போனேன் மச்சான். அவரு நடக்காத கல்யாணத்துக்கு எப்படி டிவோர்ஸ் தரமுடியும், நீ என்ன லூசான்னு கேட்டுட்டாரு மச்சான்." அப்பாவியாகச் சொன்னவன்,
"இதை தானடா நானும் கேட்டேன்? அதுக்கு நீ என்ன சொன்ன? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது. டிவோர்ஸ் வேணும்னு சொன்னல்ல... எனக்கு என்ன செய்றதுனே தெரியல மச்சான். அதனால தான் அந்தாள்கிட்ட போய் விஷயத்தை சொன்னேன். வீட்டை விட்டு முதல்ல வெளிய போறீயா? இல்லை நாயை அவுத்து விடவானு அந்த பெரிய மனுஷன் கேட்குறாருடா?
நாய் தானே! நம்ம பாக்காத நாயானு நினைச்சிட்டு, எனக்கொரு பதில் கிடைக்காமல் நான் போக முடியாதுனு நின்னேன். அவரு வீட்டு வேலைக்காரன், கண்டு குட்டிய நாய்ன்னு சங்கிலியில கட்டி இழுத்துட்டு வரான்டா. நல்லா உத்து பத்தேனா, உண்மையிலும் அது நாய் தான்டா! அங்க புடிச்ச ஓட்டம், காரை பறக்கவிட்டு வீடு வந்திட்டனே!" என தன் குறளி வித்தைகளை பெருமையாக கூறியவனிடம்,
"ஓ... அவ்வளவு தானே! வேற எதுவும் இல்லையே?”
"இருக்கு மச்சான்! அவரு முடியாதுனு சொன்னா நான் விட்டுடுவேனா? இல்லனா என்னைத்தான் நீ விட்டுடுவியா? அப்புறம் இன்னொரு வக்கீலை பாத்தேன். அவருக்கு கை மறைவில கொஞ்சம் அள்ளி விட்டேன்டா. நடக்காத கல்யாணம் என்ன? பிறக்கப்போற குழந்தைக்கே டிவோர்ஸ் வாங்கி குடுத்துடுவாரு அந்தளவு திறமையான மனுஷன். இன்னும் ஒரு வாரத்தில பத்திரம் நம்ம கையில வந்திடும். நம்ம யாரு? எடுத்த காரியத்தை முடிச்சிட மாட்டோம்?" என்று பெருமை பேச,
“அந்த பேச்சை விடு, நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே.” என்றவன் குரலோ, இம்முறை அதிகமாகவே உள்ளே போய் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.
ஸ்ரீயின் கேள்வியில், "அதுதான் சொல்லிட்டேனேடா?" ஸ்ரீயின் பேச்சில் குழம்பினாலும், அவனது மாற்றம் இம்முறை அவனையும் தாக்க,
"மச்சான்!" என்று அவனருகில் இன்னும் ஒட்டி நின்றவன், "என்னடா ஒரு மாதிரியாகிட்ட? எனக்கு புரியுது மச்சான், உனக்கு உன் தாரையை ரொம்ப புடிச்சிருக்கு. அவ மேல நீ உயிரையே வச்சிருக்கிற என்கிறது இந்த அவசர கல்யாணத்திலயே தெரியுது. ஏதோ முன்னாடி அவ தெரியாமல் பேசிட்டா என்கிற கோபத்தில், அந்த மாதிரி என்கிட்ட செய்ய சொல்லிருக்க. இப்போ அது தப்புன்னு புரிஞ்சிடிச்சில்ல?
ஃப்ரீயா விடு மச்சான், இது எல்லாம் பெரிய மேட்டர்னு ஃபீல் பண்ணிட்டு... நானும் நீ கேட்டனு நேரங்காலம் தெரியாமல் இதை போய் உங்கிட்ட சொல்லிட்டேன். உனக்கு இந்த மேட்டர் பிடிக்கலனா எதுக்குடா இப்போ அதை பத்தி பேசின? சரி, இப்போவாவது புத்தி வந்திச்சே! அந்த வக்கீல இந்த மேட்டரை இதோட நிறுத்த சொல்லுறேன். நீ கவலப்படாத மச்சான்." என அவன் தோள் மீது கை போட்டு சமாதானம் செய்தவன்,
தன் செல்லை எடுத்து வக்கீல் எண்ணை தேடிடவும், அவன் செல்லை பறித்து காலினை கட் பண்ணி அவனிடமே தந்தான்.
"உனக்குத்தான் இந்த டிவோர்ஸ்ல இஷ்டம் இல்லல்ல, அப்புறம் என்னடா?" என்றான்.
இனம் புரியாத புன்னகையினை சிந்தியவவாறே, "மச்சான் முன் வச்ச காலை பின் வைக்கிற பழக்கம் எனக்கில்லடா. சரியோ, தவறோ எடுத்து வச்ச அடி, பாதை சரியில்லனா அதே பாதையினால வர குறுக்கு பாதையில் போயிடலாம்." என்றவன் பேச்சு செல்வத்தின் மண்டையைக் குழப்ப,
"ஆக்..." என தன் தலையினைத் தானே இரு கைகளாலும் கலைத்தவன்,
"மச்சான் உன்கூட சேந்தா அந்த சொட்டையன் சொன்னதைப் போல விசரனாத்தான்டா நான் ஆகப்போறேன். சும்மாவே நான் மக்கு மங்குனி. தெளிவா சொல்லி தொலைடா." என்று சினக்க,
அவனின் செயலில் இம்முறை மெய்யாகவே நகைத்தவன், அவன் தோள்மீது சாகவாசமாக கை போட்டு, "நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்னு சொன்னேன். டிவோர்ஸ்கு அப்ளே பண்ணது பண்ணதாவே இருக்கட்டும்."
தன் தோளில் இருந்த ஸ்ரீயின் கையினைக் கோபமாக தட்டி விட்டவன், "நீ இப்போ என்ன சொல்ல வர? டிவோர்ஸ் வேணும் என்கிறியா? வேணாம் என்கிறியா? என்னை குழப்பாமல் தெளிவா சொல்லித் தொலை!"
"ஊஷ்! கத்தாத... இது கல்யாண மண்டபம். யார் காதிலயாவது விழுக போகுது. அப்புறம் இந்த மேட்டர் தாரைக்கு தெரிஞ்சுதுனா தன்னை அடையுறதுக்கு நான் போட்ட நாடகம்னு நினைச்சிடப்போறா. மச்சான், முன்னாடி நான் அப்படி தான்டா நினைச்சேன். ஆனா மண்டபத்தில அவ அழுதிட்டு போனா பாரு... அந்த நொடி முடிவு பண்ணிட்டேன்டா. இனி யாருக்காகவும் அவ அழக்கூடாது. அவளை என் நெஞ்சுக்குள்ள வச்சு பாதுகாக்கணும்னு. என் முன்னாடி அவ அழுதுட்டு போனது, என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திச்சு தெரியுமா?
அப்போ தான்டா என் மனசே எனக்கு புரிஞ்சிச்சு. தாரை எனக்காக மட்டும் பிறந்தவ. அதனால தான்டா அவளை கடவுள் அவங்கிட்டருந்து பிரிச்சு என்கிட்ட குடுத்திருக்காரு. அவ என்னை தப்பா பேசினது ஒன்னும் தப்பில்ல மச்சான். நான் முன்னாடி பொறுக்கி போல தானடா நடந்துகிட்டேன். அவ கண்ணுக்கு நான் எப்படி தெரிஞ்சேனோ, அப்படி தானடா அவ சொல்லி திட்ட முடியும்? என் தாரைக்கு என்னை திட்ட உரிமையில்லையா என்ன?" என காதல் வசனம் பேசியவனை, செல்வம் நம்பமுடியாது பார்த்தான்.
"மச்சான் டிவோர்ஸ்னா என்ன? சேர்ந்து வாழ்றதில ரெண்டு பேருக்குமே இஷ்டமில்லனு சொல்லி, சம்மதிச்சு கையெழுத்து போட்டால் தானே டிவோர்ஸ் கிடைக்கும். நீ என் சார்பில அப்ளே பண்ணதனால, நான் அதுக்கு சம்மதிக்கிறேன்னு அர்த்தமாகிடிச்சு. அதே எண்ணம் அவளுக்கும் வந்தா தானே மச்சான் அவ இதை விரும்புவா. அந்த எண்ணம் அவளுக்கு வராம, அவளுக்கு பிடிச்சவனா நான் நடந்துக்கிட்டா அந்த எண்ணமே அவளுக்கு வராதுல்ல?" என்க,
"ஆமால்ல மச்சான்? சூப்பர்டா!" என சந்தோஷப்பட்ட செல்வம், பின் எதுவோ சிந்தித்தவனாய்,
"ஆனா மச்சான், அவளுக்கு தான் உன்னை சுத்தமாவே பிடிக்காதேடா. அப்படினா சீக்கிரமாவே நீ கேட்டது போல அந்த பேப்பர்ல சைன் போட்டு, உனக்கு டிவோர்ஸ் தந்திடத்தான் போறாளா?" என்க,
அவன் முதுகில் ஒன்று போட்டவன், "எரும உன் வாய கழுவு... ஆயில் போட்டு அலசுடா நாதாரி! என்ன நேரத்தில என்ன பேச்சு பேசுற?" என்க,
அடிபட்ட முதுகினைத் தடவியவாறு, "நான் என்னடா பண்ணேன்? பண்றதெல்லாம் நீ, என்னை எதுக்குடா சாகடிக்குற?" என்க,
"பரதேசி! பரதேசி! டிவோர்ஸ்கு நம்ம அப்ளே பண்ணது அவளுக்கு தெரியுமா? இல்லல்ல...? அப்புறம் எப்படிடா அவ அந்த பேப்பர்ஸ்ல சைன் வைப்பா? உன் திருவாய மூடிட்டு இருந்தாலே போதும், எல்லாம் நல்லதாவே நடக்கும். அப்புறம் அவ மனசில எப்படி இடம் பிடிக்கிறது என்கிறத நான் பாத்துக்கிறேன். இதை பத்தி அந்த வக்கிலுக்கிட்ட மறுபடியும் பேசி, அந்தாள்கிட்டையும் வாங்கிக்கட்டிக்காத.
அந்த பத்திரம் வந்திச்சுனா என்கிட்ட கொண்டுவந்து கொடு. யாருக்கும் தெரியாமல் நானே கிழிச்சு போட்டுடுறேன்." என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்,
"சரி! நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாமல் தேவையில்லாததை எல்லாம் பேசி நேரத்தை கடத்திட்ட..." என்றவன்,
"நான் சொன்னதை ஏற்பாடு பண்ணிட்டியா?" என்றான்.
திரும்பவும் முதலில் இருந்தா? என்பதைப் போல் குழம்பியவன், "இன்னும் எதை கேட்கிற?"
"எரும! உன்னை என்னடா செய்ய சொன்னேன்? நைட்டுக்கு என் பிஸினஸ் ஃப்ரண்ட்ஸ் வருவாங்க, பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ண சொன்னது மறந்திட்டியா?”
"அதுதான் நான் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்ட..." என்றவன் பேச்சினை இடைநிறுத்தி,
"இதை தான் நீ முன்னாடியே கேட்டியா? நான்தான் எல்லாத்தையும் உலறிட்டேனா? முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா அதுக்கு மாத்திரம் பதில் சொல்லிட்டு, அந்த வக்கீல் மேட்டரை மறைச்சிருப்பேனேடா. என்னோட அவசர புத்தியினால தான் எல்லாம் சொதப்பிடிச்சா? இதுதான் மேட்டர்னு சொல்லிருந்தா அந்த வக்கிலுக்கிட்ட லூசுனு பெயர் வாங்கினாலும் பிரச்சனை இல்லனு, அந்த டிவோர்ஸ் மேட்டர நிறுத்தியிருக்கலாமே..." என்றவனை,
"அது உன்னால முடியாது மச்சான். உன் வாயிருக்கே, அதுதான் உனக்கு முதல் எதிரி! முடிஞ்சளவுக்கு பேச்சை குறைச்சனா நீ இன்னும் முன்னுக்கு வரலாம்." என்றவன்,
"ஓகே மச்சான், என் டார்லு எனக்காக வெய்ட் பண்றா. நான் வரேன்டா!" என்றவாறு மைதிலி அருகில் விரைந்தான்.
என்னதான் இவனால் தன் அனுமதியில்லாமல் தன்னை தொடமுடியாது என்று, இத்தனை நேரம் தன் மனதினை திடப்படுத்தினாலும், அவன் அறைக் கதவினை நெருங்க நெருங்க பதட்டம் கூடிக்கொண்டே போனது.
அவள் பதட்டத்தின் மத்தியில், அந்த வீட்டிற்கு வந்து முதல் நாள் இரவு ஸ்விம்மிங் ஃபூல் அருகில் தன் இடையினை வளைத்து, அவன் வைத்த முத்தம் நினைவில் வந்து அவளை இன்னும் பயம் கொள்ள செய்ய, நடையின் வேகத்தைக் குறைத்தவளைப் பற்றியிருந்த தெய்வானையோ,
"என்ன மைதிலி ஸ்லோவாகிட்ட? ரொம்ப பதட்டமா இருக்க போல? அங்க துடிக்கிற இதயத்தோட சத்தம் எனக்கே கேக்குதே! பதட்டத்தில கையில இருக்க பால் செம்பை கீழ விட்டுடாத. அப்புறம் அபசகுணம் ஆகுதோ, இல்லையோ ரொம்ப நேரம் முழிக்க முடியாமல் போயி பாதியில தூங்கிடப்போறீங்க." என்றாள் தெய்வானை கேலியாய்.
அவளது கேலியில் ஏற்கனவே வேகத்தைக் குறைத்திருந்த மைதிலி, தரையில் கால் வேரோடி நின்று கொள்ள, கைகளில் இருந்த செம்பு அவள் கைகளின் நடுக்கத்தில் இதோ விழுந்து விடுகிறேன் என்பது போல் ஆடுவதையும், தன்னையே மிரட்சியுடன் பார்திருப்பவளையும் கண்டவள், மூடிய இதழ்களையும் மீறி புன்னகைத்தவாறே, "என்னடி! இப்படி நடுங்குது? ஸ்ரீ என்ன பூச்சாண்டியா?"
"அக்கா உண்மையாலுமே என் இதயத்தோட படபடப்பு உங்களுக்கு கேக்குதா?" என சிறுபிள்ளை போல் கண்களை உருட்டி கேட்டவளின் பேச்சில் சத்தமாகவே சிரித்தவள்,
"லூசு! நான் சும்மா விளையாடினேன்." என்றவள்,
"சரி, பேசினது போதும் வா போகலாம். கீழே ஹால்ல இருந்து எல்லாருமே நம்மளத்தான் பாக்குறாங்க. இன்னைக்கு ஃபுல்லா செம்ம வேலை. உன்னை உன் புருஷன்கிட்ட ஒப்படைச்சிட்டு நான் போய் நல்லா தூங்க போறேன். நீயும் புருஷன் மனசு கோணாமல் நடந்துக்கோ." என்று விட்டு சிரித்தவளை முறைத்த மைதிலி,
"ஏன்க்கா, நீங்களும் என்னை இப்படி படுத்துறீங்க? உங்களுக்கு தான் உண்மை எல்லாம் தெரியுமே? வெக்கப்பட்டுட்டு போற நிலையிலயா நான் இருக்கேன்?" என அழுவது போல் கேட்க,
அவளது நிலை புரிந்தவளாய், "சாரிடி! சும்மா தான் விளையாடினேன். இப்போல்லாம் ஸ்ரீ அப்பிடி இல்ல. அவன் ரொம்பவே மாறிட்டான். நீயும் அதையெல்லாம் மறந்திடு." என்றவள் மைதிலியின் முகம் அருவருப்பாக மாறுவதைக் கண்டு,
"இங்க பாரு மைதிலி, நடந்த எதையும் மாத்த முடியாது. இங்க யாருமே தப்பு பண்ணாதவங்களும் கிடையாது. அதுக்காக அவன் பண்ண தப்பை சரின்னும் சொல்ல வரல. ஆனா அந்த தப்பை இங்க எத்தனை பேர் திருத்தியிருக்கோம், சொல்லு? ஸ்ரீ உனக்காக தன்னோட எல்லா தப்பையுமே திருத்தி, சரி பண்ணியிருக்கான் மைதிலி.
எல்லாமே உன் ஒருத்திக்காக மட்டும் தான். உன் காதல் தனக்கு கிடைக்கணும் என்கிறதுக்காக, அதையும் நீ மறந்திடாத." என அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தாள்.
"உன்னை இப்பவே அவன் செய்ததை எல்லாம் மறந்து, அவன்கூட குடும்பம் நடத்துனு நான் சொல்ல மாட்டேன். ஆனா அதையே நினைச்சிட்டு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதனு தான் சொல்லுறேன். இது உன்னோட வாழ்க்கை மாத்திரமில்ல, உன்னை மேல அனுப்பி வச்சிட்டு பல கனவுகளோட கீழே நம்மளையே பாத்திட்டிருக்காங்க பாரு, அவங்க அத்தனை பேரோட நம்பிக்கை. நீ படிச்சவ, புரிஞ்சு நடந்துப்பனு நினைக்கிறேன். நேரமாகுது, உள்ள போ." என ஸ்ரீயின் அறைக் கதவைத் திறந்தவள், மைதிலியை அனுப்பிவிட்டு சென்று விட்டாள்.
தெய்வானையின் பேச்சத்தனையும் கேட்டவள், மனதால் அதிக பாரத்தை சுமக்க முடியாதவள் போல், அவன் அறைக் கதவுடனே சாய்ந்து நின்றவளையே, கட்டிலில் பட்டு வேட்டி சட்டையோடு தலையணையை மடியில் வைத்து பார்த்திருந்தவன்,
"என்ன தாரை! கையில வச்சிருக்க செம்பு ரொம்ப கணமோ? கொஞ்சத்தூரம் வந்ததுக்கே கதவோட சாய்ஞ்சு நின்டுட்ட?" என்ற ஸ்ரீயின் கேலி பேச்சினால், தெய்வானை கூறிய சொற்பொழிவுகள் மறந்து போக, அதனுடன் சேர்ந்து சற்று தைரியமும் வந்து ஒட்டிக்கொண்டது.
'என் முன்பு தவறு செய்தவனே தைரியாமாக பேசும் போது, நான் எதற்கு பயந்து ஓடவேண்டும்?' என நினைத்தவள் அவனுக்கு, தான் ஒன்றும் சளைத்தவள் இல்லை என்பது போல்,
"ஆமா ஆமா... ரொம்ப கணம் தான். ஆனா என் கையில வச்சிருக்க செம்பு கிடையாது, காலையில ஏறின புதுத்தாலி. எப்படா இதை கழட்டி எறிவேன்னு இருக்கு." என்று கூறியவள்,
தான் கூறியதன் பொருள் புரிய பின் வார்த்தையை மாற்றி, "பேசாமல் இதை ஓரமா கழட்டி வச்சிட்டா கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கும். ஒரே கணமா இருக்கிறதை சொன்னேன்." என்றவளது பேச்சு வலியைத் தந்தாலும்,
அதை பெரிது படுத்தாதவன், "இருக்கட்டும் தாரை, தங்கம் கழுத்தில் இருக்கிறதனால உனக்குத்தான் நிறைய நன்மைகள். நீ படிச்சது இல்லையா? எனக்காக இல்லனாலும் உனக்காகவாது அந்த கணத்தை பொறுத்துக்கோ." என்றான்.
முதல் முறையாக அவளுடனான அவனது அமைதியுடன் கூடிய நிதானமான பேச்சு, இது மைதிலிக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதுவே மைதிலிக்கு ஒருவித திடத்தினை அளித்தது.
மீதமிருந்த பதட்டமும் விலக கையில் இருந்த செம்பினை எங்கு வைப்பதென, அந்த இடத்திலேயே நின்றவாறு கண்களால் இடம் தேடியவள் செயலினைப் புரிந்தவனாய்,
"தாரை அதை இங்க கொண்டு வந்து வை." என ஸ்ரீ தன் கட்டிலின் அருகில் எரியும் மணம் கமழும் ஊதுபத்தியும், கூடையுடன் வைக்கப்பட்ட பழத்திரள்களின் அருகில் இருந்த சிறிய இடத்தைக் காட்டினான்.
"எங்களுக்கும் கண் நல்லாவே தெரியும். யாரும் சொல்ல தேவையில்லை. அப்புறம் எனக்கு அப்பா மைதிலினு அழகா தான் பேரு வச்சிருக்காரு. புதுசா எவளோ ஒருத்தியோட பேரெல்லாம் வச்சு கூப்பிடுற வேலையெல்லாம் வேண்டாம்." என்றவள் உதட்டினை சுழித்துக் காட்டிவிட்டு கட்டிலை நோக்கி நடக்க,
அவள் கோபத்தை பறை சாற்றும் விதமாய், கால்களின் கொழுசொலி கணீர் கணீர் என பெரிதாக ஒலி எழுப்ப, கட்டிலருகே நகர்ந்தவள் முணுமுணுப்பு அவனுக்குமே கேட்டது.
"தாரையும் கூரையும் தான். பேரா இது? எந்த சிறிக்கி பேரோ? எந்தளவுக்கு அந்த சிறிக்கி மேல மயக்கம் இருந்ததுன்னா. என்னை அந்த பேர் சொல்லி கூப்பிடுவான்? நல்லாதான் மயக்கி வச்சிருக்கா..."
அவள் முணுமுணுப்பைக் கேட்டவாறு அவளையே பார்த்திருந்தவன் இதழ்களோ ரசனையில் விரிந்தது. செம்பினை வைத்துவிட்டு திரும்பியவள், அவனது பார்வையும் புன்னகையினையும் கண்டு, "என்ன லுக்கு?" என்று மிடுக்காக கேட்டாள்.
"ஏன் பார்க்க கூடாதா? இது என் ரூம், நீ என் பொண்டாட்டி. இங்க இருக்கிற எல்லாத்தையும் ரசிக்கிற உரிமை எனக்கிருக்கு." என்றவனது பேச்சில் உள்ள அர்த்தம் புரிந்தவள்,
சட்டென தன்னைத் திருப்பிக்கொண்டு முன்புறமிருந்த சோபாவில், ஸ்ரீயிற்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
"இன்னைக்கு நமக்கு முதலிரவுனு பெரியவங்க சொல்லி அனுப்பினதா நினைவு. ஏன், உனக்கு எதுவுமே சொல்லலையா?" என்று கூறியவனுக்கு ஏனோ அவளுடனான இந்த சீண்டல் பிடித்துப்போனது.
அவன் பேச்சில் ஆத்திரம் உண்டாக திரும்பி முறைத்தவளைப் பார்த்து, அழகாய் கண்ணடித்து புன்னகைத்தவன் செயலில், உதட்டை சுழித்து பழிப்புக் கட்டியவள் மறுபடியும் திரும்பி படுத்துக் கொண்டாள்.
"அப்போ எதுவும் இல்லாம, பட்டினி தான் போடப்போறியா?" என அவளைத் தெரிந்தும் வம்பிழுத்தவன் பொய்யாக முகத்தில் ஏக்கத்தைக் காட்டி,
"அப்போ லைட்டை ஆஃப் பண்ணிட்டு படுப்போம்." என்ற தன் பேச்சிற்கு அசையாது முதுகு காட்டி படுத்திருந்தவளை, புன்னகை மாறாது பார்த்தவன், மஞ்சள் நிறத்து மங்கல் லைட்டை ஔிரவிட்டு, மீதமுள்ள மின்குமிழ்களை அணைத்தவனுக்கு, தூங்கும் முன் அவளை வம்பிழுக்கும் நோக்கம் கொண்டு, "தாரை!" என்றான்.
ஏனோ அந்தப்பெயரில் அவளை அழைப்பதில் விருப்பமில்லை. வேறு யாரோ என்பது போல் படுத்திருக்க, இரண்டு முறை தாரை என்றவன் மூன்றாவது முறை, "மைதிலி!" என்றான்.
அவனது இடைவிடாது தொந்தரவிலும் தாரை என்ற அழைப்பிலும் சினந்திருந்தவள், "என்ன வேணும் இப்போ உங்களுக்கு? நிம்மதியா கொஞ்சம் தூங்க விடுறீங்களா?" என்றாள் கோபமாக.
அவளது கோபத்தில் கேட்க வந்ததைக் கேட்காமல், "ஒன்னுமில்லை படுத்துக்கோ!" என்றவனது முகமோ மிரட்சியைக் காட்டாமல் மாறாக புன்னகைத்தன.
இது அவள் தன் மீது புதிதாக படும் கோபமில்லையே! எப்போதும் போல் அவள் சினந்தாலும், இன்று உரிமையுடனான முதல் கோபம். ஆதலால் தன்னவளின் கோபத்தை ரசிக்கத்தான் செய்தான்.