பகுதி 51
வழமைப் போல் காலையில் கண்விழித்தவன் மைதிலியைக் காணாது, "இவ ஒருத்தி! உடம்பு சரியில்லனாலும் சீக்கிரம் எழுந்திடிச்சுடுவா. இப்போ இவ வேலை பாக்கலன்னு யாரு அழுதா? ஒருவேளை நேத்து சொன்னதை போல எல்லாரையுமே அழ வச்சிட்டிருக்காளோ? சரியான வாலு!" செல்லமாக அவளைத் திட்டியவாறு எழுந்தவன்,
"சரி, காஃபி குடிக்கிற சாக்குல பார்த்திடுவோம்." என பாத்ரூம் சென்றான். குளித்துவிட்டு வீட்டுடையுடனே வந்தவன்,
பத்திரிகையுடன் அமர்ந்திருக்கும் ரங்கசாமியைக் கண்டு, "என்ன தாத்தா, பேப்பர் என்ன சொல்லுது?" என்றவாறு எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,
"புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு? எப்பவும் போலதான். ஒரு கட்சியை ஒரு கட்சிக்காரன் புடிச்சு திங்கிறது போல, பேட்டி குடுத்தே பேப்பர ரொப்பி வச்சிருக்காங்க. நாடு கெட்டு போறதுக்கு காரணமே இவங்க தான்." சலித்தவாறு பேப்பரை டீப்பாய் மீது போட்டவர்,
"காஃபி என்னாச்சு ஈஸ்வரி? தெய்வானையும் இந்திராவும் வீட்டுல இல்லாதது நல்லவாவே தெரியுது." என கிச்சனுக்கு குரல் கொடுக்க,
"இதோ வந்துட்டேன்ங்க..." என்றவாறு கையில் தட்டுடன் வந்தார் ஈஸ்வரி.
"வீட்டுல தான் யாரும் இல்லனு தெரியுதுல்ல, அப்புறம் என்ன சத்தம்? உங்களுக்கு காஃபியை எடுத்திட்டு வரதா? இல்ல, சாம்பார பாக்கிறதா?" என அர்ச்சித்தவாறு ஸ்ரீயிடமும் தட்டினை நீட்டியவர்,
"நீயும் எடுத்துக்கோ ஸ்ரீ." என்று அவன் தயாராகாமல் இருப்பதைப் பார்த்து,
"என்ன, ரெடியாகாம வந்திருக்க? ஏன், இன்னைக்கு ஆஃபீஸ் போகாம, வெளிய எங்கேயாச்சும் போக போறீங்களா?" என்றதும்தான் மைதிலியைத் தேடி வந்ததை உணர்ந்தான்.
கண்களால் மைதிலியைத் தேடியவாறே, "இல்ல பாட்டி, பொறுமையா போய்க்கலாம்னு தான் ரெடியாகல."
"சரி... சரி, மைதிலிக்கு இப்போ பரவாயில்லையா ஸ்ரீ?" என்க,
"நீங்கதான் பாட்டி சொல்லணும்." என்றான் துடுக்காக.
"நல்லா இருக்குடா! அவளை ரூம்ல வச்சு பூட்டிட்டு என்னை சொல்ல சொன்னா எப்படி சொல்ல?" என்றதும், வாயருகில் கொண்டு சென்ற கப்பினை சட்டென இழுத்து புருவம் உயர்த்தியவன்,
"என்ன பாட்டி சொல்றீங்க? மைதிலி ரூம்ல இல்லையே?" என்றான்.
"அப்படியா? அவ கீழேயும் வரலையேடா! நேத்து உடம்புக்கு முடியலன்னதும், நானும் ரெஸ்ட் எடுக்கட்டும்னு விட்டுட்டேன்." என்றவர்,
"சரியா பாத்தியா ஸ்ரீ?" என்றார் பதட்டமாக.
அதே நேரம் பூஜையை முடித்துவிட்டு வந்த விஜயா, "என்ன, பாட்டியும் பேரனும் சீரியஸா பேசிட்டிருக்கிங்க?" என்றார் நடப்பது அறியாது.
"நீ நல்லா பாத்தியா? அவ பாத்ரூம்ல இருக்கப் போறா. நீதான் கவனிச்சிருக்க மாட்ட..." என்றார் ஈஸ்வரி விஜயாவின் பேச்சினைக் காதிலே வாங்காது.
"இல்லையே பாட்டி... நான் பாத்ரூம் போய் தானே வந்தேன். அவ ரூம்ல இல்லை. அங்க இல்லன்னதும் தான், இப்போ உடம்பு நல்லாகிட்டுதானு பாத்திடுவோம்னு, ஆபீஸுக்கு கூட தயாராகாமல் கீழ வந்தேன். அவ இங்கேயும் இல்லன்னா எங்க போயிட்டா?" என்றான் நடுக்கத்தில் புலம்பியவனாய்.
"பதட்டமாகாதடா! அவ எங்க போயிட போறா? எப்பவும் போல பூப்பறிச்சு சாமிக்கு மாலை கட்ட போயிருப்பா. இதுக்கு எதுக்கு தேவையில்லாம யோசிச்சிட்டு?" என்றார் அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில்.
இடையில் வந்தாலும் இவர்கள் பேச்சில் மைதிலியைக் காணவில்லை என்பது புரிய, "நான் இன்னைக்கு சீக்கிரமே எழுந்துட்டேன். அதுவுமில்லாமல் நான்தான் காலையிலயே பூப்பறிச்சு, பூஜையை முடிச்சிட்டேனே! இனி எதுக்கு மாலை? மைதிலி தோட்டத்து பக்கம் வரவே இல்லை." என்றார் விஜயாவும் உறுதியாக.
"நீ வேற விஜயா, அவன்தான் பயப்படுறான்னா நீயும் பயமுறுத்திட்டு... அவ இங்கன தான் இருப்பா. இந்திரா ஊர்ல இல்லாததனால ஸ்கூல் பஸ் வரப்போகுதுனு நினைச்சு, ஜனாவை சீக்கிரம் எழுப்பி தயாராக்க அவளோட ரூமுக்கு போயிருக்கலாம்ல?" என்றவர்,
"இரு, நான் போய் கூட்டிட்டு வரேன்." என்று முன்னேறியவர் முன்பு வந்து நின்றாள் பள்ளிச் சீருடையில் ஜனா.
"ஸ்கூலுக்கு ரெடியாகிட்டியா ஜனா? அக்கா அறையிலயா இருக்கா?" காலையிலயே ஜனா தயாராகியதில் மைதிலிதான் ஜனாவை தயார் செய்ததாக நினைத்து கேட்டார்.
"அவ ஏன் பாட்டி அங்க வரப்போறா?" என்றவர் மற்றவர்களின் பதட்டமான முகத்தைக் கண்டு,
"ஏன் மாமா, பாட்டி என்கிட்ட அக்காவை கேக்கிறாங்க? அவ நேற்று உடம்பு முடியலனு உங்களோட தானே இருந்தா? எல்லாரும் ஏன் ஒரு மாதிரி இருக்காங்க?" என்று அவன் கையைப் பிடித்து கேட்டவள் கேள்வியில், மைதிலி தன்னிடம் பேசிய ஒவ்வொன்றும் நினைவலைகளில் வந்து போனது.
எதுவோ விபரீதம் நடந்ததாக அவன் மூளையும் உரைக்க, ஜனாவின் கையினை உருவிவிட்டு தோட்டத்திற்கு ஓடியவன், "தாரை... தாரை!" என்று கத்திக் கத்தியே வீட்டின் மூலை முடுக்கெங்கும் தேடினான்.
அவளை எங்கும் காணாது மீண்டும் அவர்களிடமே வந்து, இரு கைகளையும் விரித்து இல்லை என்பது போல் காட்டியவன், மறுநொடியே நெஞ்சுப்பகுதி ஏறி இறங்க, வெடித்து சிறுபிள்ளை போல் முகத்தினை மூடி ஷோபாவில் விழுந்தான்.
"இல்லம்மா... அவ எங்கேயும் இல்ல. என்னை விட்டு எங்கேயோ போயிட்டா..." என்று அழத் தொடங்கி விட்டான்.
என்ன நடந்தது? ஏது நடந்தது? என்பது அறியாதது ஒருபுறம். ஆண் மகன் என்பதை மறந்து குலுங்கி அழும் ஸ்ரீயினை எப்படி சமாதானம் செய்வதென மறுபுறமும் என பெண்கள் இருவரும் முழித்திருக்க,
ரங்கசாமிதான் அவன் அருகில் வந்து அமர்ந்தவர், "ஸ்ரீ, உண்மை தெரியாமல் சும்மா அழாத. அவ எதுக்கு வீட்டை விட்டு போக போறா? ரூம்ல சரியா பாத்தியா? அவ அங்க எங்கயாச்சும் தான் இருக்கணும். யாராச்சும் காரணம் இல்லாமல் விட்டுட்டு போவாங்களாடா? அவளோட குடும்பம் மொத்தமுமே இங்கதான் இருக்கு. அப்படி இருக்குறப்ப நீ நினைக்கிறது தப்பு. அவளுக்கு நம்மள விட்டா அடைக்கலம்னு சொல்லிக்க யாரும் இல்லடா." என ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும் போதே,
உள்ளே நுழைந்த இந்திராவைக் கண்ட ஜனா, "அம்மா..." என ஓடிச்செல்ல, அவளது குரலில் பெரியவர்கள் கவனமும் அவரிடம் சென்றது.
சட்டென இருக்கையை விட்டு எழுந்து, மாடிப்படிகளில் ஏறுபவனையும் இந்திராவையும் மாறி மாறி பார்த்த ஈஸ்வரி, "ஸ்ரீ... டேய் ஸ்ரீ! எங்கடா போற?" என்று கேட்டவருக்கு, ஏதாவது செய்து விடப்போகிறானோ என்ற பயத்தில் அவனைப் பின்தொடர்ந்தார்.
இந்திராவுக்கு எதுவும் புரியவில்லை. என்ன நடந்தது என்பதே தெரியாத விஜயாவும் அமைதி காக்க, "என்னாச்சு? ஏன் எல்லாரும் ஏதோ மாதிரி இருக்கிங்க?" என்றார்.
"ம்மா... அக்காவை காணல்லம்மா!" என்றாள் உதட்டைப் பிதுக்கி.
"அவ எங்க போயிடப்போறாடி? இங்கதான் எங்கயாச்சும் இருப்பா. அதுக்கா இந்த மாதிரி இருக்கிங்க?" என்றார் சாதாரணமாக.
"நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்." என்று நகரப்போனவர் கையினைப் பற்றிய ஜனா,
"ம்மா... அக்கா எங்கேயுமே இல்லம்மா. இப்போ தான் மாமா அங்க எல்லா இடமும் பாத்திட்டு வந்தாரு."
அவளது பேச்சில் பயம் வந்து ஒட்டிக்கொண்டாலும், எங்கே அவள் போயிருக்க போகிறாள்? அவளுக்கு இங்கு யாரைத் தெரியும்? அப்படி போவதென்றாலும் யாரிடமும் கூறாமல் போயிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில், "நீ எதுக்கு இப்போ இந்த மாதிரி இருக்க? அக்கா எங்கயும் போகமாட்டா. இங்க எங்கயாச்சும் தான் இருப்பா." என்றும் போதே,
"தாரை!" என்று ஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்டு ஏதோ அசம்பாவிதம் என்று மாடியைப் பார்த்தனர்.
வேகமாக படிகளில் ஓடியவளை தொடர்ந்து, இந்திராவும், ரங்கசாமியும் ஓட, விஜயாவால் ஏற முடியவில்லை.
நடப்பது என்னவென புரியாமல் பதட்டத்தோடு அமர்ந்திருந்தவர் மனமோ, அங்கே நடப்பது என்னவென அறியும் ஆவலில் பரிதவித்தது.
ஓடிவந்த இந்திராவின் கண்களில் பதிந்த காட்சி இதுதான். ஸ்ரீ தனது பெட்டின் மேல் அமர்ந்திருந்து கதற, ஈஸ்வரி கையில் ஒரு காகிதம் தவழ்ந்தது. அதை அத்தனை ஆர்வமாக படித்தவர் முகத்தில் அதிர்ச்சியானது அப்பட்டமாக தெரிந்தது.
"என்னாச்சு மாப்பிள்ளை? என் பொண்ணு எங்க போனா? நீங்க ஏன் அழறீங்க?" என்றார்.
இந்திரா இப்படி ஒரு கேள்வியை கேட்கும் தருவாயில், தன் கையிலிருந்த காகிதத்தைப் படித்து முடித்திருந்தவர், தயங்கிய கைகளினால் இந்திராவிடம் அக்காகிதத்தை நீட்டினார்.
தாமதிக்கவில்லை இந்திரா. ஆம்! ரங்கசாமியின், ‘யாராச்சும் காரணம் இல்லாமல் வீட்டை விட்டு போவாங்களா?’ என்ற கேள்வியில் தான், ‘ஆமா, அவ ஏன் போகணும்? அப்படி என்ன நடந்தது? அவ அங்கே எங்கேயாவது தான் இருப்பா.' என்று சிறுது நம்பிக்கை வந்தவனாய் மாடிக்கு ஓடியவன் முதலில், தான் பாராத பால்கனியை எட்டிப்பார்த்தான்.
அங்கு அவள் இல்லாததனால், ஏமாற்றமாகவே மீண்டும் அறைக்கு வந்தவன், எதற்கும் ஒரு தடவை உறுதி செய்து கொள்வதற்காக பாத்ரூம் கதவினைத் திறந்து பார்த்தான். அங்கும் அவள் இல்லாதது ஏமாற்றமாகிப் போக,
எங்க போயிட்ட தாரை? ஏன்டி இப்படி பண்ற காலங்காத்தால? எங்க இருந்தாலும் வந்துடுடி! நீ இல்லாமல் என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.’ என மனதில் குமுறி கண்களின் அனுமதியினை மீறி, கன்னம் நனைத்த நீர் தடத்துடன் ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தான்.
‘இவ்ளோ காலையில எங்க போனா?’ என சிந்தித்தவனுக்கு பாதித்தூக்கத்தில் அவளுடன் உரையாடியது நினைவில் வந்தது.
"தாரை!" என்றவாறு கட்டிலில் இருந்து சரக்கென்று எழுந்தவன், "அப்போ பாத்ரூம் போறேன்னு சொன்னது பொய்யா? அந்த இரவிலயே என்னை விட்டு எங்கடி போன? உனக்கு என்னடி நான் பண்ணேன்? எதை மனசில வச்சிட்டு என்னை தவிக்கவிட்டு போன? நேற்று என்கிட்ட வித்தியாசமா நடந்துக்கிட்டதுக்கு காரணம் இது தானா? ஐய்யோ! இது எனக்கு தெரியாம போச்சே! நான் என்ன தப்பு பண்ணேன்னு இந்த தண்டனை தந்த தாரை?" என இயலாமையில் புலம்பியவன் மனமோ,
'தன்னை விட்டு சென்றதற்கான காரணமாக எதையாவது வைத்திருப்பாளோ?' என எண்ண, விழிகளால் வலை விரித்தவன் கண்களில் மின்னியது டீப்பாயில் மொத்தமாக கழட்டி வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள்.
அதைக் கண்டதும் அது மைதிலிக்காக, தான் பார்த்துப்பார்த்து வாங்கிக் கொடுத்த நகை என்பதைக் கண்டு கொண்டான். "அப்போ என்னை விட்டு நீ போனது நிஜம் தானா தாரை?" என, இதுவரை அவள் தன்னை விட்டு போனதிற்கு ஆதாரமாக கிடைக்காமல், கொஞ்சமாக இருந்த நம்பிக்கையும் அந்த நகைகளைக் கண்டதும் மனம் தளர்ந்தவனாய்,
தன் எண்ணங்களை காரணம் அறியாது எங்கேயோ விட்டிருந்தவன் விழிகள், அந்த நகை கூட்டத்தின் அடிப்பகுதியில் இருந்த காகிதத்தின் மேல் படிந்தது. நகைகளை ஓரமாக தள்ளிவிட்டு அந்த பேப்பரை கசங்காமல் எடுத்தான். மனமோ அதை அறியும் ஆவலில் பரபரத்தாலும், அதை பற்றியிருந்த கைகள் நடுங்காமல் இல்லை.
மனம் பூராவும் அவளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்ற வேண்டுதலோடு பிரித்தவன், மைதிலி வடித்த கண்ணீரையும் சேர்த்து பேனாவும் தன் கண்ணீரால் வரைந்திருந்தது.
‘என் அன்புக்குரிய கணவருக்கு...’ என்று ஆரம்பித்திருந்தவள்,
‘உங்கள் அன்புக்குரியவள் நான் ஆக முடியாததனால் அன்புக் கணவருக்கு என்று, எழுத்தில் கூட கூறமுடியாத பாவி உங்கள் தாரை எழுதுவது,
எனக்கும் மற்ற பொண்ணுங்க போல கணவனோடு காதலுடனான வாழ்க்கை கடைசி நிமிஷம் வரை வேண்டும். உங்களுடன் காலத்துக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அதிகம் தான். ஆனால் நான் வாங்கி வந்த வரம் அப்படியில்லையே! என்னை படைக்கும் போதே, நீ எதையுமே திருப்திகரமா அனுபவிக்க முடியாது என்று எழுதி அனுப்பினார் போல. என் வாழ்க்கையிலான எதை நான் ஆழமா நேசிக்கிறேனோ, அது பாதியிலயே என்னை விட்டு போய்விடும்.
அப்பாவில ஆரம்பித்து படிப்பு, இப்போ நீங்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கும் உங்களை பிடிக்காது தான், என் காதலை உணரும் வரை. இப்போது என் உணர்வே நீங்கதான் என்கின்ற அளவுக்கு, உங்கள் மேல் பைத்தியமாகிவிட்டேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் நீங்கள்தான். அவ்வளவு ஏன்? என் உயிர் துடிப்பே உங்களால் தான் இயங்குகிறது. நீங்களும் என் மேல அதே அன்போடு இருக்கின்றீர்கள் என்றுதான் இன்று காலை வரை நினைத்திருந்தேன்.
ஆனால்...?
முடியலங்க என்னால... அந்த வார்த்தையை சொல்லக்கூட முடியல. என்மேல உங்களுக்கு காதல் இல்லை. பழி தீர்க்கணும் என்கிற வெறிதான் இருந்திருக்கு என்கிறத, இப்பவரைக்கும் என் மனசு ஏத்துக்குதில்ல. அதுவும் என் கண்ணாலயும் காதாலையும் கேட்டும் கூட... எப்படிங்க என்மேல காதல் இல்லாமலே உங்களால இத்தனை தத்ரூபமா, சந்தேகமே வராத அளவுக்கு நடிக்க முடிஞ்சுது? தப்புத்தாங்க... உங்களை நான் பொறுக்கின்னு பேசினது தப்புத்தான். அதுக்கு நான் உங்ககிட்ட ஏற்கனவே மன்னிப்பு கேட்டுட்டேன். இப்போ கூட அந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
இனி உங்ககிட்ட என்னால கேட்க முடியுமான்னு தெரியல. எல்லாத்துக்குமா சேர்த்து கடைசி தடவையா கேக்கிறேங்க, என்னை மன்னிச்சிடுங்க. ஆனாலும் நீங்களும் இந்தளவு பெரிய தண்டனையை எனக்கு தந்திருக்க கூடாது. மனசு வலிக்குது ஸ்ரீ. உங்களை மட்டுமே சுமந்த இந்த மனசு ரணமா வலிக்குது. தெரியாமல் செய்த தப்புக்கு நீங்க தந்த தண்டனையை ஏத்துக்கிறேன். ஆனா என் குடும்பம் உங்களுக்கு என்ன ஸ்ரீ பண்ணுச்சு?
இப்போ அவங்களுக்கு யாரு ஸ்ரீ பதில் சொல்லுவாங்க? நேற்று செல்வம் அண்ணாவும் நீங்களும் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன் ஸ்ரீ. செல்வம் அண்ணா பேசும் போது கூட அவரு உங்களை சீண்டுறதுக்கு தான் விளையாடுறாரோனு நினைச்சேன். அப்புறம் அவரு சொன்னதை உறுதி செய்யிறது போல நீங்களும் அதை ஆமோதிச்சு பேசினப்போ தான் புரிஞ்சுது. என்மேல எந்தளவுக்கு வெறுப்பிருந்திருந்தா, கல்யாணத்துக்கு முன்னாடியே டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணியிருப்பிங்க. வேணாம்ங்க... உங்களுக்கு என்னை துரத்துற அளவுக்கு எந்த சங்கடமும் வேண்டாம்.
நீங்க வேணும்னா என்னை ஒரு சதியோட பொய்யா விரும்பியிருக்கலாம். ஆனா நான் உங்க கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும், உண்மை காதலோடயும் தான் நெருங்கியிருக்கேன். கல்யாணமாகி இத்தனை நாள்ல நீங்க என்கிட்ட எதுவுமே கேட்டதில்லை. கேட்டாலும் என்னை தவிர உங்களுக்கு தர எங்கிட்ட எதுவும் இருந்ததில்ல. முதல் தடவையா என்னால நீங்க ஆசைப்பட்டு என்கிட்ட கேக்கலனாலும், அதை நான் தரதா முடிவு பண்ணிருக்கேன். ஆமாங்க உண்மை தான், நானே பிரிஞ்சு போயிடுறேன்.
உங்கள மட்டுமில்ல, இந்த உலகத்தோட பார்வையில இருந்தும் போறேன். என்னால பொய்யுக்கு கூட உங்களை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் உங்க நினைவால தினந்தினம் நான் செத்துக்கிட்டுத்தான் இருக்கணும். அப்படி ஒவ்வொரு நிமிஷமும் சாகுறத்துக்கு பதிலா, ஒரே நாள்ல செத்திடுறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி நேற்று எனக்கு நீங்க தந்த வாக்கையும் நினைவில வச்சுக்கோங்க. நான் இல்லன்னாலும் அதை காப்பாத்துவீங்கனு நம்புறேன். என்னை விட்டா என் குடும்பத்துக்கு யாருமே இல்லை. என் வாழ்க்கை பாதியிலேயே அழிஞ்சு போறது தெரிஞ்சா, அடுத்த நிமிஷமே அம்மா உயிரை விட்டுடுவாங்க. அவங்களும் போயிட்டா ஜனா அனாதையாகிடுவா, அது நடக்க கூடாது. இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிய வேண்டாம். அவங்களுக்கு தெரியாம இருக்கிறது தான் உங்களுக்கும் பின்னாடி பிரச்சனை வராமல் இருக்கிறதுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்.
நான் கண் காணாத தேசம் போயிட்டேன்னு அவங்க நம்புறது போல எதையாவது சொல்லி சமாளிங்க. இல்லனா எவன் கூடவோ ஓடி போயிட்டானு கூட சொல்லுங்க. அப்போ தான் உங்கள மாதிரி ஒரு நல்ல கணவரை விட்டுட்டு எவன் கூடவோ போயிட்டேன்னு என்னை வெறுப்பாங்க. அப்புறம் நீங்க இத்தனை நாள் மறைச்சு வச்ச டிவோர்ஸ் பேப்பர்லயும், என் முழு சம்மதத்தோட கையெழுத்து போட்டிருக்கேன். இனி நீங்க எப்பிடி இருக்கணும்னு ஆசைப்படுறீங்களோ அப்பிடியே இருந்துக்கங்க, நான் போறேன். இப்படிக்கு உங்கள் தாரை!’ என்று முற்றுப்புள்ளியோடு முடித்திருந்தவள்,
அந்த இடத்தில் பேனாவின் முனையை வைத்து அழுத்தியிருப்பாள் போல. சிறு பொட்டுக் கிழியலுடன் பேனா தன் ஆயுளை முடித்திருந்தது.
அதை படித்தவன், "தாரை!" என்று கத்த, ஏற்கனவே வாசலில் நின்று அவன் எதையோ தீவிரமாக படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஈஸ்வரி, "அது என்ன கையில?" என கேட்டவாறு அவன் அருகில் விரைய, கையிலிருந்த பேப்பரை அதிர்ச்சியில் நழுவவிட்டான்.
அந்த பேப்பரை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து பார்க்கும் போதுதான், கீழே செல்வத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிவோர்ஸ் பேப்பரைக் கண்டார்.
அதை பொறுக்கி எடுத்த பாட்டியின் கையிலிருந்து பிடுங்கியவனும், அப்போதுதான் படித்த கடிதத்தின் கீழிருந்த டிவோர்ஸ் பேப்பரையும் கண்டான். அதில் முகத்தை அழுத்தியவன் இயலாமை அழுகையாக வெளிவந்தது. அவனுக்கும் அப்போதுதான் தெரிந்தது, மைதிலியின் திடீர் மாற்றத்திற்கு காரணம் அந்த பேப்பர் அவள் கையில் கிடைத்ததும் தம்முடைய பேச்சும் என்று.
ஈஸ்வரியிடமிருந்து வாங்கிய பத்திரத்தைப் பார்த்த இந்திரா, அவற்றை எல்லாம் சிறிதும் விடாமல் படித்துவிட்டு பாதி புரிந்தும் பாதி புரியாமலும், புரிந்தவரையில் இப்போது மகள் என்னவாகி இருப்பாள் என்பதும் எழுத்துக்கள் பறை சாற்ற, கண்கள் குளம் கட்டத்தொடங்கியது.
"இங்க என்னதான் நடக்குது? எதுக்கு என் பொண்ணு இந்த மாதிரி எழுதியிருக்கா? இப்போ அவ எங்களை எல்லாம் விட்டுட்டு எங்க போயிட்டா? இதில எழுதியிருக்கிறத பார்த்தா ஏதோ தப்பான முடிவை எடுத்திட்டானு தோனுது. எனக்கு எதுவுமே விளங்கேலயே... தயவு செய்து சொல்லுங்க, இங்க என்ன பிரச்சனை நடந்திச்சு?" என இயலாமையோடு ஆரம்பித்தவர் பேச்சானது ஆவேசமாக மாறியது. என்ன கூறுவது என தெரியாது தயங்கினார் ஈஸ்வரி.
ஏற்கனவே தன்னவளை இழந்து அடுத்து என்ன செய்வதென தெரியாது அனைத்தும் ஸ்தம்பித்து நின்ற ஸ்ரீ, இந்திராவின் கத்தலில் குற்றவுணர்வு மேலோங்க, எழுந்து இந்திராவின் அருகில் வந்தவன் அவரது கைகள் இரண்டினையும் பற்றி, "அத்தை!" என அழைத்தவன் கன்னம் நனைத்த கண்ணீரை மறைக்க தெரியாமல்,
“என்னை மன்னிச்சிடுங்கத்த, முழு தப்புமே என்மேல தான்..." என்று திருமணத்தின் போது, அத்தையிடம் தன்னைப்பற்றி மறைத்த அத்தனை மர்மங்களையும் உடைத்து விட்டவன், "முன்னாடி நான் தப்பானவன் தான் அத்த. ஆனா எப்போ மைதிலிய ஊர் பார்த்தேனோ, அப்பவே என்னோட அத்தனை கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டேன். அவமேல உள்ள காதலை உணராம செய்த தப்பு, இப்போ என்னை இந்த மாதிரி தண்டிக்கும்னு சத்தியமா தெரியாது அத்த. என்மேல இருந்த கோபத்தில அவ என்னை கட்டிக்க சம்மதிக்க மாட்டாள்னு, அம்மாகிட்ட அடம்புடிச்சு தான் உங்க பொண்ணை கட்டிக்கிட்டேன்.
அப்போல இருந்து அவகிட்ட எந்த விதத்திலும் நான் தப்பாவோ, பொய்யாவோ நடந்துக்கலத்த. சொல்லப்போனா எனக்கு எல்லாமே அவ தான். நேற்று ஒரு மாதிரி நடந்துக்கிட்டா, உடம்புக்கு வேற முடியல. அப்படியான நேரத்தில இப்படி என்னை தவிக்க விட்டு போவானு சத்தியமா நான் நினைச்சுக்கூட பாக்கலத்த." என நேற்று செல்வத்துக்கும் தனக்கும் நடந்த உரையாடலைக் கூறியவன்,
"இந்த டிவோர்ஸ் பத்திரம் செல்வம் என் கையில கொண்டுவந்து தந்ததும், அன்னைக்கிருந்த டென்ஷன்ல அதை கிழிச்சு போடாமல், நான்தான் அதை எங்கேயோ கை தவறி வச்சிட்டேன். அது நேற்றுதான் இவ கையில கிடைச்சிருக்கு. அதோட நாங்க பேசினதை முழுமையா கேட்டிருந்தான்னா, தப்பான முடிவெடுத்துருக்க வாய்ப்பே இல்லை. எங்கேயோ தவறு நடந்திருக்கு. அதையும் இதையும் பார்த்திட்டு தன்னைத் தானே குழப்பி இந்த மாதிரி பண்ணிருக்கா. என்னை மன்னிச்சிடுங்கத்த!" என, இந்திரா கையைத் தன் கண்களில் வைத்து கதறியழுபவனை, அவரால் தேற்ற முடியுமா என்ன?
அவள் என்ன ஆனாள்? இப்போது உயிரோடு இருக்கிறாளா? இல்லை கடிதத்தில் எழுதியது போல் இறந்து தான் போனாளா? ஸ்ரீயினது அழுகை இந்திராவின் அடி மனதில் இருந்த பயத்தோடு, பிள்ளை பாசத்தையும் தூண்டி அவரையும் கரைய வைத்தது. மைதிலி கடிதத்தில் எழுதியிருந்த வாசகங்களை சட்டென மனக்கண் முன் ஓடவிட்டு பார்த்தான் ஸ்ரீ.
"அத்தை ப்ளீஸ் அழாதிங்க... அப்புறம் உங்களுக்கு எதாவது ஆகிடப்போகுது. உங்க பொண்ணை எங்கிருந்தாலும் நான் கொண்டு வந்து சேர்க்கிறேன். அவ உங்களுக்காகவும் ஜனாவுக்காகவும் தன்னை பற்றி கொஞ்சமும் யோசிக்காம இத்தனையும் பாத்து பாத்து செய்தா. அவளுக்கு நீங்க எந்த விதத்திலும் கஷ்டப்டக்கூடாது, உங்க கண்ணீருக்கு தான் காரணமாகக்கூடாது. அதனால தான் அத்தை, நான் தப்பானவன்னு தெரிஞ்சும், உங்க பேச்சுக்கு மதிப்பு தந்து என்னை கட்டிக்கிட்டா. என் தாரை என்னை விட்டு தூரமா எங்கேயும் போயிருக்க மாட்டா. அவ என்னை அளவுக்கதிகமா விரும்புறா.
அதை அந்த கடிதத்தில கூட சொல்லிருக்கா. என்னோட காதலும் அவளோட காதலும் உண்மையா இருந்தா, நிச்சயம் அந்த கடவுள் அவ முடிவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டாரு. நாங்க ஒன்னா சேர்ந்து வாழ்றத நீங்க பாக்கத்தான் போறீங்கத்த. தயவு செய்து அழாதிங்க. இது உங்க பொண்ணோட ஆசை மட்டுமில்லை, என்னை நம்பி உங்களை ஒப்படைச்சிட்டு போன என் மனைவியோட ஆசை. அதை நிறைவேற்றணும் அத்தை." என்று மனைவியின் கடைசி ஆசைக்கு மதிப்பளித்து, சமாதானம் கூறிய அவன் கண்களிலேயே நீர் நிற்கவில்லை என்றால்,
பத்து மாதம் சுமந்து, ஒரு சிற்பிக்கு நிகராய் ஒவ்வெரு வினாடியும் வயிற்றைத் தடவி உருவம் அறியா மகளுக்கு உருவம் கொடுத்து, பிரசவித்து, பசி எடுக்கும் பிள்ளை பசியறிந்து பால் ஊட்டி, பனி கூட சுடுமென தன்னையே போர்வையாக்கி, அத்தனை கனிவோடு வளர்த்தவருக்கு வராதா, தன் மகளைக் காணவில்லை என்ற பயமும் பதட்டமும்.
எப்படி மாப்பிள்ளை என ஏக்கத்தோடு பார்த்த இந்திராவிடம், "அத்தை நீங்க உங்க மருமகனை நம்புறீங்கல்ல... அவ எங்க இருந்தாலும் நான் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன்." என்றவனிடம்,
"அதுக்கு அவ உசு..." என்று கூறவந்தவர் வாயின் மேல் கை வைத்து தடுத்தவன்,
"வேண்டாம் அத்த... உங்க வாயால அந்த வார்த்தை சொல்லாதிங்க. நான் வந்தா அவ கூடத்தான் வருவேன். இல்லனா நானும் எங்கேயாவது போய் செத்துடுறேன்." என்று கண்ணீரை அவசரமாக துடைத்தவன், உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று மாற்றிக்கொண்டு வெளியேறினான்.
தொடரும்…