• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் - 3

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 3

“கஸ்தூரி…” அறிவு அழைக்க, “ஸ்…ஸ்…” என உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறியவள்.. அருகில் அமர்ந்து இருப்பவர் பேசுவதை மீண்டும் கேட்க தொடங்கினாள்.

போனில் எதிர்புறம் என்ன பேசினாரோ…

“அன்னைக்கு எனக்கு அறிவு எட்டல டா. மூன்று தங்கச்சி இருக்கும் போது நம்ம எப்படி கல்யாணம் பண்ணுகிறது. அவுங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்துவிட்டு கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைத்தேன். இன்னைக்கு வயசு 42 ஆயிடுச்சு. இனி எனக்கு யார் பொண்ணு தருவா? இப்படியே தனியா ஒண்டி கட்டையா இருந்துட வேண்டியது தான்.”

“.......”

“தங்கச்சி யாரும் வரல டா. நான் ரிட்டையர் ஆனதும் வந்தாங்க. குடும்பத்தில் நிறைய கடன் இருக்கு அண்ணா உன் ரிட்டையர் மெண்ட் பணம் தான்னு வந்து நின்னாங்க. ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தேன். அதுக்கப்புறம் ஒருத்தர் கூட வந்து எட்டி பார்க்கல. எனக்கு தெரிந்ததை நானே சமைத்து சாப்பிடுறேன். ஆர்மிலேயே இருந்து அங்கேயே செத்து இருக்கலாம் போல டா. யாரும் இல்லாம அனாதையாக கிடக்கிறேன்.
அங்கேயும் இதே நிலை தான். ஆனால் மூன்று வேலை சோறு நேரத்துக்கு கிடைக்கும். பேச்சு துணைக்கு ஆள் இருக்கும்.

ஆனால் இங்க அனாதையாக தனியா கிடக்கிறேன். நேத்து பயங்கர காய்ச்சல். என்னனு கேட்க ஆள் இல்லை டா.” சொல்லும் போதே அவர் குரல் கரகரத்தது.

அவர் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் மனம் கனத்து போனது.

“சரி டா. வாய் கசக்குது. மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு போறேன். போய் படுக்கறேன்.” என்றவர் ஃபோனை கட் பண்ணிட்டு எழுந்து நடக்க, கஸ்தூரி கணவர் கை பிடித்து இழுத்துக் கொண்டே அவர் பின்னால் ஓடினாள்.

“கஸ்தூரி எதுக்கு இப்போ இவர் பின்னாடி போறோம்?”

“எல்லாம் காரணமாதான். இவர் வீட்டை பாக்கணும்.” நடையை நிறுத்தாமல் கூறினாள்.

“எதுக்கு டி?”

“வாங்க சொல்றேன்.”

அவர் மாத்திரை வாங்கி கொண்டு கடை அருகில் இருந்த சாலையில் நடந்தார். தன்னை இருவர் பின் தொடர்வது தெரிந்தும் சாதாரணமாக தான் இருந்தார். ராணுவத்தில் இருந்தவருக்கு தன்னை பின் தொடர்ந்து வருபவர்களை தெரியாதா?

வீடு வரை சென்றவர் தன் வீட்டு முன்பு நின்று “என்ன வேணும்? எதுக்கு என் பின்னாடி வரீங்க?” என்றார் இருவரையும் பார்த்து.

இருவருக்கும் வெலவெலத்து போனது. என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தனர்.

“நா… நா..ன் வரல. இவள் தான் என்னை இழுத்துட்டு வந்தாள்.” அறிவு பயத்தில் உலர.

“இந்த பொண்ணு யாரு?”

“எனக்கு தெரியாது ஐயா.” பயத்தில் மீண்டும் உலரினான்.

“மாமா…” கஸ்தூரி பல்லை கடித்தவள்,

“ஐயா நானும் இவரும் புருஷன் பொண்டாட்டி தான். நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டோம்.” பதமாக கஸ்தூரி கூற,

“அதுக்கு என்ன மா? கஞ்சி வச்சு கொடுக்க வந்தியா?”

அவர் கேள்வியில் உதடு விரிய அறிவு சிரித்தவன் தன் சிரிப்பை மறைக்க திரும்பி நின்று கொண்டான். ஆனாலும் அவர் கண்களுக்கு தப்பவில்லை.

“அதுக்கு வரல சார். உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். அதுக்காக தான் வந்தோம்.”

இருவரையும் நெற்றி சுருக்கி பார்த்தவர் “வாங்க.” மனம் வந்து வரவேற்றார்.

‘அப்பாடா…’ என இருந்தது கஸ்தூரிக்கு.

“மாமா வா…” புருஷனையும் விடாமல் இழுத்துக் கொண்டு சென்றாள்.

“ஏய் நில்லு டி. எதுக்கு இப்போ அவர் வீட்டுக்குள்ள போறோம். அவர் மிலிட்டரி காரர் டி அடிச்சா இந்த பிஞ்சு உடம்பு தாங்காது டி.” அவருக்கு கேட்காதபடி மனைவி காதில் கிசுகிசுத்தான்.

“மாமா இப்போ மட்டும் நீ அமைதியா வரல.. குரல்வளையை கடித்து புடுவேன்.”

அறிவு பயத்தில் தன் கழுத்தை மறைத்து பிடித்துக் கொண்டான். அறிவு இயல்பாக பயந்த சுபாவம் கொண்டவன். அதனால் தான் பயத்தில் மனைவியிடம் இத்தனை கேள்விகளை கேட்கிறான்.

போகும் போதே வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே சென்றாள். மாடி வீடு தான். பெரியது கிடையாது. ஒரு குடும்பம் தாராளமாக வாழலாம். சுற்றிலும் நிறைய இடம் உள்ளது. ஆனால் பராமரிக்காமல் குப்பைகளாக இருந்தது.

சுற்றிலும் வேலி விட்டு வைத்திருந்தார். வீட்டின் உள்ளே சுத்தமாக இருந்தது.

அவர் அசதியால் சாய்ந்து அமர்ந்து விட்டார்.
“உள்ள வாங்க.. என் கிட்ட என்ன பேசணும்?”
கம்பீரமாக கேட்டார்.

சாப்பிடாமல் காய்ச்சலில் சோர்ந்து போய் இருந்தாலும் அதை தன் பேச்சிலும் உடலிலும் காட்டிக் கொள்ளவில்லை.

கஸ்தூரி கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டவள், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த தன் மாமனையும் இழுத்து அருகில் அமர வைத்து கொண்டாள்.

“உங்க பேர் என்ன?”

“வசீகரன் மா.”

“அழகான பெயர். உங்களுக்கு அம்மா, அப்பா யாரும் இல்லையா?” தயங்கியபடி கேட்டாள்.

வசீகரன் கஸ்தூரியை இமை சுருக்கி பார்த்தவன் “இரண்டு பேரும் இறந்துட்டாங்க. மூன்று தங்கச்சிகள். எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவுங்க அவுங்க வாழ்க்கையை பாக்குறாங்க.”

“அப்ப நீங்க தனியா இருக்கீங்களா?”

“ஆமா மா.” பொறுமையாக பதில் கூறினார்.

“என்ன வேலை பாக்குறீங்க?”

“சொந்தமா சிமெண்ட் கடை வச்சிருக்கேன். ஆர்மி ல இருந்தேன். ரிட்டர் ஆகிட்டேன். நான்கு மாதம் ஆகுது.”

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“இல்ல மா. 42 வயசு ஆகிடுச்சு. தங்கச்சிகள் வாழ்க்கையை பார்த்த நான் என் வாழ்க்கையை விட்டுட்டேன். அதான் இப்போ தனிமரமா மொட்டை மரமா நிக்கிறேன்.”

தன் மனைவி எதற்காக இத்தனை கேள்வி கேட்கிறாள் என்று புரியாமல் முழித்தாலும் அவள் ஏதோ காரணத்துடன் தான் இங்கு வந்திருக்கிறாள் என்பது மட்டும் அறிவு அறிவுக்கு எட்டிய போனதால் அமைதியாக இருந்தான்.

“சரி எதுக்காக இத்தனை கேள்வி கேட்ட? நீ கேட்ட எல்லா கேள்விக்கும் நான் நேர்மையான பதில் தான் கொடுத்து இருக்கேன்.”

“கடைசியாக ஒரே ஒரு கேள்வி சார். உங்களுக்கு குடிப்பழக்கம், சிகரெட்… இந்த மாதிரி ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா?” கெஞ்சி கேட்டாள்.

“இல்ல மா. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நான் இது பக்கத்துல கூட போக மாட்டேன்.”

கஸ்தூரி முகத்தில் ஒரு ஒளி வட்டம் தோன்றி மறைந்தது.

“நான் உங்களை பத்தி கேட்க எனக்கு ஒரு காரணம் இருக்கு.”

பீடிகையாக பேசியவளை அமைதியாக புருவம் உயர்த்தி பார்த்தார்.

“இது என்னுடைய கணவர். இவருக்கு ஒரு அக்கா இருக்காங்க. இன்னும் அவுங்களுக்கு கல்யாணம் ஆகள. 37 வயசு ஆகுது. நாங்க அவுங்களுக்கு நல்ல மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம். இன்னைக்கு கூட அவுங்களுக்காக வேண்டிக்க தான் கோவிலுக்கு வந்தோம். அந்த அம்மன் கிட்ட உன் இடத்திலேயே அவுங்களுக்கு ஒரு மாப்பிள்ளை காட்டுன்னு வேண்டிகிட்டு வந்து வெளியே உட்கார்ந்து இருந்தேன். அப்போ தான் நீங்க வந்தீங்க. உங்களை பத்தி யோசிக்கும் போதே கோவில் மணி அடிச்சிட்டு. நான் உடனே கல்யாணம் பேசல. உங்களை பத்தி எங்களுக்கு தெரியாது. எங்களை பற்றி உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பாருங்க. எங்க வீட்டு பெண்ணை பிடித்து இருந்தால் மத்ததை பேசுவோம்.” ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கூடுதலாக வீட்டு முகவரியையும், அறிவு ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்தாள்.

“ஒரு நிமிஷம் இருங்க. வெறும் வயிற்றோடு காய்ச்சல் நேரத்தில் இருக்க கூடாது.” அங்கு சுவரோரம் இருந்த அடுப்பை பற்ற வைத்தவள் முதலில் அவருக்கு குடுக்க டீ கசாயம் போட்டு கொடுத்தாள். தேவையான பொருட்கள் அனைத்தையும் தேடி தேடி எடுத்து பின்னர் அவருக்கும் மட்டும் கொஞ்சமாக அரிசி போட்டு கஞ்சியாக கொதிக்க வைத்தவள் அருகில் காய்கறி என்ற பெயரில் ஒரு கூடை இருந்தது. அதில் இரண்டு கத்தரிக்காய் சுருங்கி போய் கிடக்க நான்கு வெங்காயம், ஒரு தக்காளி கொஞ்சம் இஞ்சி, பூண்டு இருந்தது.

சளி காய்ச்சலுக்கு இதமாக இஞ்சி ஊறுகாய் அரைக்க முடிவு செய்தவள் தன் கணவனிடம் சுத்தம் செய்ய கொடுத்தாள். வசீகரனிடம் புளி, மிளகாய் எல்லாம் எங்கு உள்ளது என்று கேட்டு கொண்டு அம்மியை தண்ணீர் ஊற்றி கழுவி அரைக்க தொடங்கினாள்.

அரைத்து முடிக்கவும், கஞ்சியும் குலைந்து போனது. “தப்பா எடுத்துக்காதீங்க. சக மனுஷியாக உங்க நிலைமை தெரிஞ்சும் அப்படியே விட்டுட்டு போக முடியல. கஞ்சி குடிங்க. விருப்பம் இருந்தால் வீட்டுக்கு வந்து எங்க பெண்ணை பாருங்க.” என்றவள் தன் மாமனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

செல்லும் இருவரின் முதுகையும் புன்னகையோடு பார்த்த வசீ அவள் காய்ச்சி வச்சிருந்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஊறுகாய் கொஞ்சம் எடுத்து வைத்து ஒரு வாய் கஞ்சியும் கொஞ்சம் ஊறுகாயும் முழுங்கியவருக்கு கண்கள் கலங்கியது.

காரமாக சுள்ளென்று ஏறியது. செத்த நாக்குக்கு இதமாக இருந்ததோடு கஸ்தூரி குணமும் பிடித்து போனது. வயிறு காய்ந்து போய் கிடக்க ஒரு கிண்ணம் கஞ்சியும் போன இடம் தெரியாமல் ஒரு சுருக்கில் குடித்து விட்டார். இன்னும் கொஞ்சம் ஊத்தியவர் மீதத்தை இரவுக்கு எடுத்து மூடி வைத்தார். கஞ்சி குடித்த பிறகு தான் கண்கள் தெளிவாக தெரிந்தது. உடலில் ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார். வாங்கி வந்த மாத்திரையை போட்டுக் கொண்டு அதே இடத்தில் படுத்துக் கொண்டவர் அடித்து போட்டார் போல் தூங்கினார்.

திருமணம் செய்ய கூடாது என்று நினைக்கவில்லை. 35 வயதில் அண்ணா உனக்கு பொண்ணு பாக்குறோம் பெரிய தங்கை கூறினாள். அதிலிருந்து பெண் பார்ப்பதாக மட்டுமே கூறினர். ஆனால் உண்மையில் அவர்கள் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. அண்ணனின் வருமானத்தை ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொண்டனர்.

முதுமை நெருங்கும் போது தான் தனக்கென்று துணை இல்லாத பயம் அவரை சூழ்ந்து கொண்டது. அதுவும் இந்த காய்ச்சல் காலங்களில் தன் அவல நிலை எண்ணி அவர் மனம் கழிவிரக்கம் கொண்டது. தூங்காமல், சாப்பிடாமல், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்.

இன்று கஸ்தூரி சமைத்து கொடுத்ததை சாப்பிட்டு நிம்மதியாக தூங்குகிறார்.

“கஸ்தூரி அவர் யார் என்னன்னு தெரியல.. எப்படி நீயா முடிவு பண்ண?”

“நான் முடிவு பண்ணல மாமா. ஆனால் அவர் நல்லவர்னு என் மனசு சொல்லுது. எப்படி உங்களை நம்புனேனோ அதே மாதிரி அவரையும் நம்புறேன்.” கஸ்தூரி முழு மனதோடு கூறினாள்.

“நல்லவரா இல்லனா?”

“மாமா அவர் கெட்டவராவே இருந்தாலும் பரவாயில்லை. உன் அக்காவுக்கு பிடிச்சா போதும். இனி நடக்க என்ன இருக்கு? கிட்ட தட்ட 13, 14 வருஷமா அவங்க கேட்காத வார்த்தையா? படாத அசிங்கமா? இனி என்ன இருக்கு? இத்தனை வயசுக்கு அவுங்க பட்டது போதும். கெட்டவரை கல்யாணம் பண்ணாலும் அவங்க அவங்களுக்காக வாழட்டும். குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கட்டும். பத்து நாள் வாழ்ந்தா கூட அவங்களுக்கு பிடிச்சு இருந்தா வாழட்டும். நம்ம பாத்துக்கலாம். நீங்களும் உங்க அம்மா மாதிரி பேசாதீங்க. வாயை மூடுங்க.” கணவனாகவே இருந்தாலும் அவன் செயலில் இருந்த தவறுக்கு
எதிர்த்து பேசினாள்.

தனக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவரை மாலையும் கழுத்துமாக பார்க்க வேண்டும் என்பது கஸ்தூரி ஆசை.

தொடரும்.......
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கஸ்தூரியோட நல்ல மனசுக்கு அவ வேண்டினதை போலவே நாத்தனாருக்கு மாப்பிள்ளை கிடைச்சிட்டாரு 😍

வசீயோட கூடப்பிறந்தவங்க எவ்வளவு சுயநலம்😢 இப்படியும் இருக்கதான் செய்யிறாங்க 😢

எந்த பந்தமுமே இல்லாம கஸ்தூரி வசீக்காக செஞ்சது❤️

காய்ச்சல் குணமானதும் பொண்ணை பார்க்க போவானா🤔🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
கஸ்தூரியை நினைக்கும் போது பெருமையா இருக்கு
இவ மனசுக்காகவாவது அந்த கல்யாணம் நடக்கட்டும்
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
கஸ்தூரிமா... உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப டா தங்கம்