• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் - 9

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 9

அதிகாலை குளிருடன் சேர்ந்து மனதிலும் சில்லென்ற சாரல் தான் மலருக்கு.

சிறு வயதில் இத்தனை இன்பமான உணர்வுகளை அனுபவித்தது. அதன் பிறகான வாழ்வு முழுவதும் ரணமும், கண்ணீருமாக போக.. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் குற்றால சாரல் போன்ற சந்தோஷம். மனதில் பாரம் இல்லாமல் நிம்மதியாக இருந்தது. தாய் புலம்பல் இல்லாத விடியல்.

மென்மையாக விழிகளை திறந்தவள் வெற்று மார்புடன் கிடக்கும் கணவனை கன்னம் சிவக்க கண்டாள். மலர் மலர்ந்து போன நாள் இது அல்லவா. வெட்கமும், கூச்சமும் நடனம் ஆடியது அவள் முகத்தில்.

நெஞ்சிலும், முகத்திலும் ஆங்காங்கே மல்லிகை பூக்கள் ஒட்டி இருக்க, வலது கன்னத்தில் அவள் நெற்றியில் சூடி இருந்த குங்குமம் ஒட்டி இருந்தது.

கணவனை மேற்கொண்டு பார்க்க முடியாமல் திரும்பி கொண்டு எழுந்தவள் தன் நிலை கண்டு இன்னும் குங்குமமாக சிவந்து போனாள்.

“ அச்சோ…!! ” வெட்கத்தில் நெளிந்து தன் கலைந்து கிடந்த ஆடைகளை சரி செய்தபடி எழுந்து பின் வாசல் வழியாக குளிக்க சென்றாள்.

அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் வசீகரன் ஒருக்களித்து படுத்தவன் கைகள் தன்னிச்சையாக பாயில் கோலம் போட்டது மனைவியை தேடி.

கைக்கு எட்டிய தூரம் வரை மனைவி இல்லாமல் கண்களை திறந்தவன் வெடுக்கென்று எழுந்து அமர்ந்தான்.
‘ மலர் எங்க? ’ சுற்றிலும் பார்வையை திருப்பியவன் கதவு தாழ் நீக்கி இருப்பதை கண்டு ‘ அதுக்குள்ள எழுந்துட்டாளா? இவ்வளவு சீக்கிரமா? ’ தன் ஃபோனை தேடி எடுத்து நேரத்தை கண்டான். 4. 25 ஆகி இருந்தது. ‘ சீக்கிரம் எழுந்து பழக்கம் போல! ’
அதன் பின்பு தூக்கம் களைந்து விட படுத்திருந்த பாயை சுருட்டி, போர்வையை மடித்து வைக்க மலர் சத்தம் செய்யாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

முத்து முத்தாக முகத்திலும் கழுத்திலும் நீர் துளி இருக்க, தலைக்கு கட்டிய துண்டை தாண்டி நீர் கழுத்து வழியாக இறங்கியது.

கணவன் தூங்கி கொண்டிருப்பான் என்று தொந்தரவு செய்யாமல் உள்ளே வந்தவள் விழித்திருக்கும் கணவனை கண்டு கண்கள் படபடக்க ஸ்தம்பித்து நின்று போனாள்.

இரவு நடந்த மென்மையான கூடல்கள் இருவர் சிந்தையில் சிதற இருவருமே பேச்சற்று போனது சில வினாடிகள்.

“நீங்க தூங்கலையா?”

“நீ பக்கத்தில் இல்லாததும் தூக்கம் வரல.”

“இத்தனை வருடம் என் பக்கத்திலயா தூங்குனீங்க?”

“ அப்போலாம் நிம்மதியான தூக்கம் கிடையாது மா. நீ என் பக்கத்தில் வந்த பிறகு தான் நிம்மதியான தூக்கம். ”

“ நல்லா பேசுறீங்க நீங்க… ”

“ எதுக்கு முடியை காய வைக்காமல் ஈரத்துடன் இருக்க. சளி பிடிக்கும் மா. ” உரிமையாக கடிந்து கொண்டு அவள் அருகில் வர, தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தவள்,

“ நீங்க இன்னும் குளிக்கல. குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் எல்லாத்தையும் அலசி போட்டுடுறேன். ”

“ வேண்டாம் மா. நீ தான் குளிச்சிட்ட. நான் அலசி போட்டுட்டு குளிச்சிட்டு வரேன். ”

“ நீங்க துணி துவைக்க போறீங்களா? ”
ஆச்சரியமாக கேட்டாள். அவள் வீட்டு ஆண்கள் இது போன்ற வேலைகளை செய்தது இல்லையே.

“ இதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஆகுற? சாதாரண விஷயம். ”

“நான் துவைக்கிறேன். நீங்க குளிச்சிட்டு வாங்க.”

“மலர் எனக்காக ஒன்னு பண்ணு. எனக்கு தூங்கி எழுந்ததும் டீ குடிக்கிறது ரொம்ப பிடிக்கும். இத்தனை நாள் கொடுக்க யாரும் இல்லை. இன்னைக்கு எனக்கு போட்டு தரியா?”

அவன் கேட்ட பிறகு மறுப்பாளா “தோ எடுத்துட்டு வரேன். நீங்க இது எல்லாத்தையும் வச்சுட்டு குளிச்சிட்டு வாங்க.” என்றவள் அவசரமாக அடுப்படி நோக்கி ஓடினாள்.

அவள் சொல்லியதை வசீ கேட்கவில்லை.

வேகவேகமாக அனைத்தையும் துவைத்து போட்டவன் அவசரமாக குளித்து கொண்டிருந்தான்.

மலருடன் திருமணம் முடிவானதும் வீட்டுக்கு சிலிண்டர் அடுப்பு, பிரிட்ஜ் வாங்கி வைத்திருந்தான். எனவே தேவையான பொருட்கள் இருக்கவே மணக்க மணக்க ஏலக்காய், இஞ்சி போட்டு டீ போட்டு வடிகட்டி கொண்டிருக்க “அண்ணி அதுக்குள்ள எழுந்து குளிச்சிட்டீங்களா?” கேள்வியோடு கஸ்தூரி உள்ளே நுழைந்தவள் அவள் வடி கட்டிய டீயை ஆற்றி டம்ளரில் ஊத்தினாள்.

“கஸ்தூரி நீ குடி. அறிவுக்கு கொடு. நான் அவங்களுக்கு எடுத்துட்டு போறேன்.”

“நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்.”

மலர் எதிரே வந்து நின்றான் வசீ. “இதை கொடு.” வாங்கி ஓரமாக செல்ஃபில் வைத்தவன், மனைவியை திருப்பி அவள் தலையில் இருந்த துண்டை உருவினான்.

பெண்ணவள் ஏன் எதற்கு என்று புரியாமல் நிற்க “இனி இப்படி ஈரத்தலையோடு நிக்காத மா. எவ்வளவு தலை போற முக்கியமான காரியமாக இருந்தாலும் முதலில் முடியை காய வை. உடம்புக்கு முடியாம போயிடும்.” மென்மையாக கூறியவன் அவள் முடியை அழுத்தி தேய்த்து உலர வைத்துக் கொண்டிருந்தான்.

மலருக்கு கண்கள் பணித்தது. ‘எத்தனை பக்குவமான மனிதன்.. அன்பான ஆண்மகன்.’ நெஞ்சம் உருகி போனாள்.

‘தன் வீட்டில் தன் தாய் கூட தனக்கு இப்படி ஒரு நாள் கூட செய்தது கிடையாது. ஆனால் இவரோ வந்த முதல் நாளே அழகாக பார்த்துக் கொள்கிறார். ஒருவேளை முதல் நாள் மட்டும் தானா?’ தன் புத்தியில் கொட்டிக் கொண்டாள். அனைவரும் ஒரே மாதிரி கிடையாது என்று.

“போதும். டீ சூடா குடிங்க.” எடுத்து கொடுத்தாள்.

அனைத்தையும் காது வழியே மட்டும் கேட்ட கஸ்தூரிக்கு கொஞ்சமும் பொறாமை இல்லை. மாறாக மனம் நிறைந்து உதடு விரியச் சிரித்தாள்.

அதே சிரிப்போடு கணவனை தேடி சென்றாள். அறிவு அப்போது தான் கண்ணை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தான்.
மனைவி சிரித்தபடி வருவதை கண்டவன் “என்ன டி அதிகாலை பூஸ்டா?”

அவளோ புரியாமல் “டீ தாங்க.”

“உன் சிரிப்பை சொன்னேன்.”

இன்னும் பல் தெரிய சிரித்தவள் உள்ளே நடந்ததை கூற, “அக்கா சந்தோஷமா இருந்தா போதும் டி. நான் மாமா அளவுக்கு நல்லவன் கிடையாது. ஆனால் ரொம்ப மோசமானவன் கிடையாது டி.”

“மாமா உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். நீ இப்படியே இரு. அது தான் எனக்கு பிடிக்கும். மத்தவங்களை பார்த்து மாற வேண்டாம்.”

“ஆனா உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன் டி. நமக்கு இப்போ எந்த கடனும் இல்லை. அக்கா எந்த செலவும் வைக்கல. ரெண்டு பேரும் சம்பாதித்து சேர்த்து வைத்து சீக்கிரம் இதே மாதிரி குட்டியா ஒரு மாடி வீடு கட்டணும். வீட்டில் சின்ன சின்ன வசதியாவது உனக்காக உருவாக்கனும்.”

“எனக்கு குடிசை வீடு ஒழுகாமல் இருந்தா போதும். உன் கூட சந்தோஷமா வாழ்வேன்.”

மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டவன் “நீ என் மனைவியாக கிடைத்தது நான் செய்த புண்ணியம் டி.”

“ரொம்ப தான் சினிமா வசனம் எல்லாம் பேசுற. நான் போய் சமைக்கிறேன்.”

“சரி டி. சீக்கிரம் கிளம்புவோம். நமக்கும் நிறைய வேலை இருக்கு.” மனைவியை பார்த்து கண்ணடித்து கூறினான்.

“போ மாமா.” வெட்கத்தோடு உள்ளே ஓடிவிட்டாள்.

‘ஐயோ ஐயோ என் பொண்டாட்டி கூட வெட்க படுறா? இன்னைக்கு மழை தான். நமக்கே வெட்கம் வருதே.’ முகத்தை சட்டையில் பொத்தி மூடிக் கொண்டு அவனும் ஓடினான்.

கஸ்தூரி உள்ளே வர அதற்குள் மலர் மட மடவென வேலைகளை தொடங்கி இருந்தாள்.

“அண்ணி என்ன சமைக்கணும்? சொல்லுங்க. நானும் உதவி செய்கிறேன்.”

“நானே செய்கிறேன் கஸ்தூரி. நீ போய் பல் தேச்சிட்டு வா.”

“கொஞ்சம் உதவி செஞ்சுட்டு போறேன் அண்ணி.”

“சோறு வடிச்சி சாம்பார் வைச்சிட்டு அப்பளம் பொரிக்க போறேன் கஸ்தூரி.”

“நம்ம காலையில் சோறு சாப்பிடு ln pவோம். அண்ணா சாப்பிடுவாங்களா?”

“சாப்பிடுற ன்னு சொல்லிட்டாங்க மா.. நான் கேட்டுட்டு தான் அடுப்பு பத்த வைத்தேன்.”

“பொரியல் செய்யலாமே அண்ணி.”

காய்கறி எதுவும் இல்ல கஸ்தூரி. “கொத்தவரங்காய் மற்றும் தான் இருக்கு. அறிவுக்கு பிடிக்காது.”

“மாமாவுக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலனா என்ன? அண்ணாவுக்கு பிடித்தால் போதும். எடுங்க. நான் கட் பண்றேன்.” பேசிக் கொண்டே எடுத்து வெட்ட தொடங்கினாள்.

“நானும் உதவி செய்யவா?”

“எங்க ரெண்டு பேருக்கே வேலை இல்லை அண்ணா. உங்க பொண்டாட்டி அசால்டா 40, 50 பேருக்கு சமைப்பாங்க.”

“மலர் எந்த வேலைக்கும் அசர மாட்டாள்.”

மலர் கன்னம் சிவக்க கணவனை பார்த்தவள் “கஸ்தூரி மட்டும் என்ன வா. ஆம்பளைக்கு ஆம்பள, பொம்பளைக்கு பொம்பள.”

“அதுவும் தெரியும். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டே வேலை செய்ங்க.”

வசீ அறிவை தேடி வந்தவன் “அறிவு ராத்திரி கொசு கடி அதிகமா?”

“இல்ல மாமா. நல்லா ஜில்லுன்னு இருந்துச்சு.”

“மன்னிச்சிடு. உங்களை வெளியே படுக்க வச்சிட்டேன்.”

“அச்சோ மாமா.. நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேட்கலாமா?” பதறினான்.

“சரி அதை விடு.” அறிவு தோளில் கை போட்டவன், “உன் அக்கா வாழ்க்கை இப்போ சரியாகிடுச்சு. இனி உங்க வாழ்க்கையை பாரு. அது தான் நல்லது. புரிஞ்சுதா?” இருவர் வாழ்கை மீதும் இருந்த அக்கறையில் கூறினான்.

“மாமா இனி கண்டிப்பா எங்க வாழ்க்கையை நாங்க ஆரமிப்போம். நீங்க கவலை பட வேண்டாம். மாமா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்.”

“ஏன் அறிவு. இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போங்க.”

“மாமா வேலைக்கு போகணும். இன்னொரு நாள் வந்து தங்குறோம்.”

அறிவு நிலை புரிந்து கொண்டான். “சரி நீங்க வரலனாலும், நாங்க வருவோம். சீக்கிரம் எங்களுக்கு ஒரு மருமகனோ, மருமகளோ ஏற்பாடு பண்ணுங்க.”

அறிவு கூச்சத்தில் நெளிந்தவன் “சீக்கிரம் பண்றோம் மாமா.” கூறி விட்டு ஓடி விட்டான்.

“டேய் எங்க ஓடுற வா சாப்பிட்டு போ. அவ்வளவு அவசரமா?” வசீ கிண்டலடிக்க, அறிவு தலை குனிந்தபடி வீட்டுக்குள் ஓடி விட்டான்.

“குறும்பு காரன்.” சிரித்துக் கொண்டான்.

“மலர் சாப்பாடு ரெடியா? அறிவு வீட்டுக்கு கிளம்புறானாம்.”

“ம்ம் எல்லாம் தயார். என் கிட்ட கஸ்தூரி சொல்லிட்டாள்.”

“8.30 மணிக்கு தான் மா ஒரு பஸ் இருக்கு. அதை விட்டுட்டா மதியம் 2 மணிக்கு தான் மா.”

“அறிவு கஸ்தூரி பல் தேய்க்க போயிருக்கா. போய் கூப்பிட்டு வா.”

இருவரும் வருவதற்குள் ஆளுக்கொரு தட்டு வைத்து சுட சுட சோறு குழம்பு பரிமாறினாள்.

“மலர் நீயும் உக்கார். சேர்ந்து சாப்பிடுவோம்.”

மலர் மறுக்காமல் கணவன் அருகில் அமர்ந்து கொள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

பல வருடங்கள் எண்ணிக்கை இல்லாமல் உருண்டோடி விட்டது வசீகரன் இப்படி சாப்பிட்டு. குடும்பமாக சாப்பிடும் பாக்கியமும் கிடைக்கவில்லை. சூடாக சாப்பிடும் பாக்கியமும் கிடைத்ததில்லை.

தங்கைகள் இருந்த போதிலும் விடுமுறைக்கு வரும் நாட்களில் தனியாக தான் சாப்பிடுவான். மீதமான சாப்பாட்டை. தங்கைகள் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மலர் தன் கணவருக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். வசீகரன் அதிகமாக சாப்பிட மாட்டான். இன்று உணவின் ருசியில் மனைவி ஆசையாக அள்ளி வைக்க வைக்க வேண்டாம் என்று கூறாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

ஒவ்வொரு பருக்கை உணவின் அருமையும் அவனுக்கு நன்றாக தெரியும். அதன் வலியை நன்றாக உணர்ந்தவன் அவன்.

“மலர் நீ சாப்பிடு. அவங்களுக்கும் வை மா.”

“வைக்கிறேங்க. நீங்க சாப்பிடுங்க.” இன்னும் எடுத்து வைத்தாள்.

கிள்ளி சாப்பிடுபவன் கூட அன்பாக அள்ளி வைக்கும் கை கிடைக்கும் போது அளவு பார்க்காமல் சாப்பிடுவான்.

வசீகரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

சாப்பிட்டு கொஞ்ச நேரம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

“அண்ணா நாங்க கிளம்புறோம். அண்ணி விருந்துக்கு வந்து அழைக்கிறோம் நாங்க.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்கள் ஒரு நாளைக்கு வரோம். சீக்கிரம் நீ எனக்கொரு நல்ல செய்தி சொல்லு.”


“நீங்களும் சொல்லுங்க.. அது தான் எங்களுக்கு சந்தோஷம்.”

“அறிவு பத்திரமா போயிட்டு வாங்க. பஸ் கூட்டமா இருக்கும். கஸ்தூரியை பத்திரமா அழைச்சிட்டு போ.”

“சரி மாமா.” என்றபடி இருவரும் கிளம்பினர்.

தொடரும்.....
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
வசீ மலர்... இரண்டு பேரும் நல்லா வாழணும்... கஸ்தூரி நல்லா இருப்பா...

உடைந்து கிடந்த மனங்களுக்கு ஆறுதலாய் ஒரு ஒரு மனம். அவர்களுக்கே அவர்களுக்காய்... 😍