• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - ஆர்த்தி முருகேசன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
ஒரு பக்க கதை - மழை

மனிதநேயம்?

"யோவ் கருப்பு! மேற்கால வானத்த பாரு. சீக்கிரம் வீட்டப்பாக்க கிளம்புயா! பொஞ்சாதி கூப்பிட்டு உட்டுச்சு"

"சரி சுப்பு வேலை ஆகிட்டு. நடக்கட்ட வேண்டியதுதான் பாக்கி" மழை பெய்தால் ஏதுவாக தண்ணீர் ஓட, வாய்க்கால் வெட்டினான் கருப்பையன்.

தலைப்பாகை கழட்டி முகம் துடைத்து, மண்வெட்டியை தோளில் போட்டுகொண்டு சுப்புவின் சொல்படி கிழக்கே பார்க்க, வானமே தெரியா வகையில் மேகம் முழுக்க கருநீல போர்வை. ஊருக்கு இருட்டிய தோற்றத்தை கொடுத்து, சற்று மிரள வைத்தது.

அவர்கள் வசிக்கும் கிராமத்தில் பரவலாக புன்செய் நிலம். அதாவது வானம் பார்த்த பூமி. நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் பாசனம் கிடையாது. வருணனின் மனம் நம்பியே உழைத்து உயிர்வாழும் மக்கள்!

பருவகால மழையை எதிர்பார்த்து, அறுவடை பழகிய ஜீவன்களுக்கு இறைவன் வைக்கும் சோதனை பரிட்சையா காலநிலை மாற்றம்? அல்ல மக்கள் புரியும் மானுட செயல்களின் எதிர்வினையா? கேள்வி வேண்டுமானால் ஆயிரம் கேட்கலாம். ஆனால் பதிலுக்கு பதிலாக பாதிக்கப்படுவது பாவப்பட்ட விவசாயிகள் அல்லவா!

ரத்தினம் "சுப்பண்ணே அவுக எங்க? வேலை இன்னும் கிடக்கா?"

"இல்ல தங்கச்சி. கிளம்பிட்டான் வந்துடுவான் மழ வேற வராப்ல தெரிது. வயசுக்கு வந்த பொண்ண இப்படி வெளில உக்கார வச்சிருக்கியேமா?"

"என்ன அண்ணே பண்ணுவேன்? வீட்டுக்கு தூரம் வெயிலு மழை இதெல்லாம் பாத்த பொம்பள புள்ள வாழ முடியுமா?" தாயின் குரலில் செய்தே தீரவேண்டிய அகங்காரம் இல்லை. மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளின் தடையே தெரிந்தது.

கார்காலம்! பொழுதும் விரைவிலே இருட்ட தொடங்க, மழையின் அறிகுறி வேறு! வாடை காற்று வன்மையாய் தேகத்தை துளைத்தது. கணவன் மழையில் மாட்டிகொள்வானோ எனும் கவலையே ரத்தினத்தால் வீட்டுக்குள் அகப்பட இயலவில்லை.

"என்னமோ சொல்றிங்க? பொண்ண குலசாமியா கும்பிடுறோம். இந்த மூனு நாள் வந்தா சாமிய வீட்டுக்கு வாசல்ல வச்சி தீண்டாமைய புகுத்திடுறோம். மகமாயிதான் வழி சொல்லனும்" போகிற போக்கில் சுப்பு புலம்பியதை கேட்ட ரத்தினம், திண்ணையில் நடுங்கும் பதினான்கு வயது மீனாட்சியை பார்த்தார்.

தீப்பெட்டிக்குள் குருவி கூடு இதன் எடுத்துக்காட்டு கருப்பையாவின் வீடு. திண்ணையில் இரண்டு ஆள் புழங்கலாம். திறந்தவெளி திண்ணை தாண்டி உள்சென்றால் ஒரே பகுதி. சமையல் ஒரு மூலை, படுக்கை எதிர்மூலை. மற்ற பொருட்கள் ஒருபக்கம். கருணை காட்டும் கடவுளும் கிழக்கு நோக்கி குடிசைக்குள் குடிகொண்டிருந்தார். ஈரம் காத்த மண்சுவரில் வெடிப்புகள் அதிகம்.

வீட்டிற்கு வந்ததும் கருப்பு செய்த முதல் வேலை, பின்னிய தென்னை மட்டையை வைத்து மகளை குளிரிலிருந்து காக்க திண்ணைக்கு அடைப்பு கட்டியதே!

"இன்னைக்கு மட்டும் கண்ணு. நாளைக்கு மூனாந்தண்ணி ஊத்திட்டா உன் ஆத்தாக்காரி உள்ளவிட்ருவா" மகளுக்கு மற்றொரு போர்வையை கொண்டுவந்து கொடுத்தார் கருப்பு. மாதவிடாய் என்பது வலி அல்ல பெண்மையின் மதிப்பென அறிந்தவர் அவர்.

மண்ணை ஆளும் மானிடர்களுக்கு மழையின் அழகு தெரியும்! மண்ணை தொழும் விவசாயிகளுக்கு மழையின் அருமை தெரியும்! ஆனால் மண்ணோடு மண்ணாய் மதிக்கப்படும் ஏழைகளுக்கே மழையின் அவலம் புரியும்!

இரவாகியது! மக்களின் எதிர்பார்ப்பு படி மழை வலுத்தது. கூரை விலகின இடங்களில் மழைநீர் ஒழுக, இவ்விடத்தில் பாத்திரம் வைத்தே தூக்கம் போனது. அத்தோடு உயிராய் வளர்த்த மகள் வெளியே குளிரோடு போராடுகையில் நிம்மதி எங்கே? தூங்கும் மகளின் மறுபக்கம் வந்தமர்ந்தனர்.

நடுஜாமம் நெருங்க நெருங்க சாரல் அதிகமானது. மிரட்டும் இடியும் வெட்டும் மின்னலும் மகளை திடுக்கிட செய்ய, பெற்றோரின் மனதில் பதைபதைப்பு.

உடல் உபாதையும் இயற்கை சீற்றமும் போட்டிபோட மீனாட்சியின் சில்லிட்ட உடல் தூக்கிவாறி போட்டது. மொட்டைவிட மலர் மெ(மே)ன்மையல்லவா?

"சரிவராது ரத்தினம் உள்ள போயி பாயெடுத்து போடு" என்று மீனாட்சியை தூக்க சென்றார் கருப்பு.

"யோவ் என்னையா பண்ற? தீட்டு தொடக்கு வீட்டுக்கு ஆகாதுயா" திகைப்பு மீறிய வேதனை தாயவளுக்கு.

"பெத்த பொண்ணவிட இது முக்கியமாடி? மகாலட்சுமிய இப்படி வதச்சா என் குலத்துக்கே ஆகாதுடி! குப்பையில போடு உன் கட்டுப்பாட"

கருப்பையனை தடுக்க முடியவில்லை. ரத்தினத்திற்கு பழக்கவழக்கத்தை மீறுவதில் தயக்கம்!
உணர்வினை விட பழக்கம் பெரிது?

விடிந்தும் பார்த்தால் முட்டிவரை தண்ணீர்! அப்பகுதி மக்கள் அருகிலுள்ள பள்ளிக்கு இடமாற்றப்பட,
மனம் அகதியாய் உணர்ந்தது. அடிப்படையே ஆட்டம் காண ஆட்சி எங்கே மலர்வது?

"நல்ல வேல கருப்பு உன்னைப்பாத்து வடிகால் கட்டினேன் இல்லனா வயல் தண்ணீல நிக்கும்"

சிரித்த கருப்பு "விதச்சதும் மழை வந்துடுச்சு. இந்த வருஷம் வயித்து பொழப்புக்காவுது ஆகும்" மழை வெற்றியில் கலகலத்தது.

மனிதநேயம் வைத்த போட்டியில் மழை வென்றுவிட, மனிதா நீ எப்போது வெல்ல போகிறாய்?

- மாயாதி

 
Top