• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்கழிப் பூவே - 2

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
"உன்னைக் கண்டதும் துளிர்க்க ஆரம்பித்த இந்த முள்மரத்தின் பூக்கள் உன் கூந்தல் சேருமா..?"


- மார்கழிப் பூவே இரண்டாம் அத்தியாத்தில் இருந்து....












"என்ன சைட் அடிக்கிறீங்களா?, முன்னப் பின்ன ஆம்பிளைய பார்த்ததே இல்லையா?",


அவனின் அந்தக் கேள்வியில் முல்லை திடுக் என்று உடல் தூக்கிப் போட நிமிர்ந்தாள்.


"இந்த மாதிரி முகத்தில் முள்ளைக் கட்டி வைத்து இருக்கும் ஒரு ஆம்பிளைய பார்த்ததே இல்லை..ஹலோ, சும்மா பாக்கிறதை எல்லாம் உங்க ஊரில் சைட்னு தான் சொல்லுவாங்களா?",


அவள் தன் புருவம் உயர்த்தி வினவியதில் அவன் முகத்தில் லேசாகப் புன்னகை வந்துச் சென்றது.


"இது சுதந்திர இந்தியா சார், இங்கே யாரு எதை வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படிப் பார்த்தால் சைட் அடிக்கிறனேனு அர்த்தம் இல்லை சார்...",


அவள் முகத்தில் லேசாக தெரிந்த கோபத்தில் அவன் புன்னகை இன்னும் அதிகமாகியது போல் அவளுக்கு தோன்றியது. ஆனால் அதை அவள் கண்டுக் கொள்ளவில்லை. அவள் யார் சிரிப்பழகி முல்லை!!! அவளாவது முகத்தில் மருந்திற்கு கூடச் சிரிப்பே இல்லாத இந்த மனிதனை போய் சைட் அடிப்பதாவது..


"இது சுதந்திர இந்தியா என்று தெரிந்த இந்த அம்மாவுக்கு அடுத்தவங்களுக்கு சொந்தமான இடத்தில் நிற்க கூடாதுனு தெரியலையா?",


அவனின் திடீர் கடுமைக் குரலில் அவன் முகத்தில் நான் இருக்கேனா இல்லையானு என்னைக் கண்டுப்பிடி பார்ப்போம் என்று அவளிடம் அதுவரை போக்கு காட்டிக் கொண்டு இருந்த அந்த புன்னகை அவன் முகத்தில் காணாமல் போனது.


"இது பிறந்ததில் இருந்து நான் ஓடி ஆடி விளையாண்ட இடமாக்கும், என்னமோ முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் மாதிரி திடீர்னு வந்து என் நாகாவுக்கு சொந்தம் கொண்டாடிட்டு இருக்கீங்க?",


"நாகாவா? ஹு இஸ் ஹீ?",


அவன் புருவம் சுருங்க கேட்டான்.


"இதோ இவங்க தான்..",


அவள் கைக்காட்டிய இடத்தைப் பார்த்தவன் கண்கள் அவளை வித்தியாசமாக பார்த்தது.


"ஓ... இந்த நாக லிங்க பிளவர்ஸ் மரங்களை தான் நீ நாகானு எதோ மனிதன் மாதிரி சொல்லிக் இருக்கியா?",


அவன் சட்டென்று அவளை வாங்க போங்க அழைப்பை கைவிட்டு ஒருமைக்கு தாவினான். அதை அவள் பேச்சின் சுவாரசியத்தில் உணர வில்லை.


"என்ன மனிதன் மாதிரி? மரங்கள் மனிதர்களை எந்த விதத்திலும் குறைந்து போய் விட வில்லை, சொல்லப் போனால் அவங்க மனிதருக்கும் மேலே.. மரங்களுக்கும் உணர்வும் உயிரும் உண்டுனு நினைப்பவள் நான்..., இவங்க எல்லாருமே என் மனதிற்கு நெருக்கமான பிரண்ட்ஸ்..",


"எங்க ஊரில் இந்த மாதிரி மரத்துக்கூடலாம் பேசுற வங்களை கீழ்ப்பாக்கம்னு ஒரு இடத்தில் சேர்ப்பாங்க...",


அவன் சொல்லிய விதத்தில் அவள் கோபத்துடன் அவனை முறைத்தாள்.


"ஓ...மதராசின் மஹாராஜாவா வந்து இருப்பது? மனிதர்கள் அகராதியில் நான் பைத்தியம் என்றால் மரங்களின் அகராதியில் அதன் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாத உங்களைப் போன்ற ஆட்களும் பைத்தியம் தான்....",


என்றவள் விடு விடு வென்று நகர முயன்றப் போது தான் அந்த இடத்தில் அந்த அறிவிப்பு பலகையைப் பார்த்தாள்.


"இந்த இடம் தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு சொந்தமானது",


அப்போது தான் அடுத்தவருக்கு சொந்தமான இடத்தில் எதற்கு நிற்கிறாய் என்று அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் அவளுக்கு புரிந்தது. அவள் ஏக்கத்தோடு அந்த மரங்களைப் பார்த்தாள். சிறு வயதில் அவள் விளையாடி ஆடிப்பாடி திரிந்த இடம், இனி அவளால் அங்கு செல்லவே முடியாது என்று நினைக்கும் போதே அவள் மனம் பாரமானது. அவன் அந்த மரத்தில் சாய்ந்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் மெல்ல மெல்ல நடந்து அந்த பனிப் படர்ந்த தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்துப் போனாள். அதுவரை அந்த இடத்தில் இருந்து அவன் மனதை ஆட்டிவித்துக் கொண்டு இருந்த எதோ ஒரு உரிமை உணர்வு அவனை விட்டுச்சென்று விட்டது போல் அவனுக்கு தோன்றியது. அவளை தன் அருகிலே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவன் மனதில் ஆசை வந்தது. அவனை முள் போன்றவன், சிரிப்பை மறந்தவன், பைத்தியம் என்று அவனை சொல்லி விட்டு சென்ற அவளிடம் ஏனோ அவனுக்கு கோபம் வரவே இல்லை. அவனின் அந்த மனநிலை குறித்து அவனுக்கு திகைப்பு வந்தது, அந்த மரத்தில் சாய்ந்து அவன் கண்களை மூடினான்.



"உன் வாழ்க்கையின் கதவு திறக்கப்
பட்டு விட்டது மை டியர்...",



ஒரு ஆதுரமான ஆண் குரல் அவன் மனதில் ஒலித்தது. அது எதற்கு இப்போது அவன் நினைவுக்கு வருகிறது என்று அவன் யோசித்தான். அதற்கு காரணம், சற்று முன் தான் சந்தித்த அந்த அழகி தான் என்று அவனுக்கு புரிந்தது. அவளிடம் இருந்து எதோ ஒன்று அவளை நோக்கி தன்னை ஈர்ப்பதையும் உணர்ந்தவன் மனதில் ஒரே கேள்வி தான் எழுந்தது.


"யாரிவள்?",















"சோ, வீ ஹாவ் டூ சூஸ் திஸ் பிளான்ட் லீவஸ் அண்ட் ஸ்டெம்...",


ஊட்டியின் பிரதானப் பகுதியில் அமைந்து இருந்த அந்த பிரபலக்
கல்லூரியில் இறுதியாண்டு தாவரவியல் வகுப்பறையில் ஒரு குண்டுப் பேராசிரியை எதோ ஒரு சிறு செடியை வைத்துக் கொண்டு எதோ தீவிரமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


"அப்புறம் என்னாச்சு முல்லை?",


அதை அசுவாரசியமாக கவனித்துக் கொண்டு இருந்த முல்லையின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் அவள் அருகே அமர்ந்து இருந்த அவளின் தோழிகளில் ஒருத்தியான ஜெனி மெல்லியக் குரலில் கேட்டாள்.


"அப்புறம் என்ன, சகு குரங்கு திரும்ப தூங்கிட்டதால் நான் தப்பிச்சேன், இல்லனா அவள் மேல் தண்ணி ஊத்தினதுக்கு என்னை ஒரு வழியாக்கி இருப்பாள்டி...",


"ப்ச்...! அதைக் கேட்கலடி, அந்த ஹீரோ வந்தானு சொன்னல? அதை சொல்லுடி..",


என்ற தன் தோழியின் முகத்தை முறைத்து பார்த்தாள் முல்லை.


"அய்யே...!! அதுவா? அதுலாம் ஹீரோவானா வில்லன் ரோலை யாருடி பண்றது? சரியான முள்ளு மரம்..., அப்பா!!! வில்லத்தனத்துக்கு பத்துப் பொருத்தமும் பக்காவா பொருந்துற மூஞ்சிடி அது...,ஹீரோனா நீயேப் போய் அவன் கூட டான்ஸ் ஆடு..",


"ஹீரோ மாதிரி இருந்தால் ஒரு டூயட் பாடி ஆடுவேன்டி..",அதனாப் பார்த்தேன், என்னடா இன்னும் எதும் சொல்லலையேனு நினைத்தேன்,
அவனுக்கு முள்ளு மரம்னு பெயரே வைத்து விட்டாயா?, ஹாஹா....,


ஜெனி தன்னை மறந்து சிரித்து விட, என்ன இவளின் சிரிப்பு சத்தம் மட்டும் இப்படி சத்தமா கேட்கிது? என்ற கேள்வியுடன் நிமிர்ந்துப் பார்த்தாள் முல்லை. அங்கே அதுவரை தான் எடுத்துக் கொண்டு இருந்த வகுப்பை விட்டு விட்டு அந்த பருத்த உடல் உடைய அந்த பேராசிரியை முகத்தில் முறைப்புடனும், அந்த வகுப்பில் அமர்ந்து இருந்த அனைத்து மாணவ மாணவியர்களும் முகத்தில் சிரிப்புடனும் அவர்கள் இருவரைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


"ஜெ...ஜெ...ஜெனி...!!!",


தன் தோழியை உலுக்கினாள் முல்லை. அவளின் அந்த எச்சரிக்கையைக் கண்டுக் கொள்ளாது,


"செம்மடி...நீ முல்லை, அவன் முள்ளு...!! நீயும் அவனும் ஒண்ணா ஆடுனா எப்படி இருக்கும்? ஹா... ஹா...",


என்று சுற்றி இருக்கும் நிலை உணராது சிரிக்கும் தன் தோழியின் நிலை உணர்ந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டாள் முல்லை.


"என்னாச்சு முல்லை?",


அவளின் அந்த தோற்றம் கண்டு ஜெனி கேட்க, சட்டென்று எழுந்து நின்றாள் முல்லை.


"மேம்..அது வந்து...",


அவள் தன்னை முறைத்துக் கொண்டு இருந்த பேராசிரியை நோக்கி சொல்ல முற்பட்டுத் தடுமாற, அப்போது தான் தன் சிரிப்பு மறந்து சுற்றும் முற்றும் பார்த்த ஜெனிக்கு அந்த சூழல் உணர்ந்து முகம் மாறியது. அதை உணர்ந்த முல்லை,


"மாட்டினியா மவளே...?",


என்று கண்களால் வினவினாள்.


"மே...மே...",


ஜெனி வார்த்தை வராமல் தடுமாற,


"நான் அப்பவே சொன்னேன் மேம், இவள் தான் ஆடு கதை பேசிக் கொண்டு இருந்தாள்..இப்போ பாருங்க மேம்னு சொல்றதுக்கு பதில் முழுசா ஆடா மாறி உங்களையே ஆடு மாறி கூப்பிட்டுக் கொண்டு இருக்கா..",


என்று திடீர் நல்லவளாகி புகார் பத்திரம் பேராசிரியையிடம் வாசித்த முல்லை,


"ஜெனிட்டா, அது மே.. மே.. இல்லைம்மா, மேம்!!! எங்கே சொல்லு பார்ப்போம், மேம்.."


தன் அருகே நின்ற தன் தோழியைப் பார்த்து முல்லை ஆடுப் போல் கத்தி சொல்லியதில் அந்த வகுப்பறை குலுங்கி குலுங்கி சிரித்தது.


"சைலண்ட்...!!!",


அந்த பேராசிரியை உரக்க சப்தமிட்டதில் அந்த வகுப்பறை கப்சிப் ஆனது. அவர்கள் இருவரையும் பார்த்த அந்த பேராசிரியை,


"கெட் அவுட்...!!!!!!!",


என்றாள். உடனே இருவரும் தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு அந்த வகுப்பறை விட்டு வெளியேறும் போது, அந்த பேராசிரியை,


"ஜெனிட்டா மேரி, நாளை உன் பேரன்ட்சை அழைத்துக் கொண்டு என்னை வந்துப் பாரு...",


என்றுச் சொன்னதில், ஜெனியின் முகம் மாறியது.


"மே.. மே... மேம்!!!!",


அவள் தன்னிலை விளக்கம் கொடுக்க முயல, அவளின் அந்த மே மே உணர்ந்து முல்லை அந்த வகுப்பறையில் அமர்ந்து இருந்த தன் சக மாணவர்களுக்கு ஜாடை காட்ட, உடனே அவர்களுக்குள் மீண்டும் சிரிப்பலை பரவியது. அதை உணர்ந்த அந்த பேராசிரியை கோபத்தோடு தன் கையில் வைத்து இருந்த அந்த செடியை எடுத்து ஜெனியை நோக்கி வீசி விட்டு மீண்டும் ஒரு கெட் அவுட்டை சொல்லி விட்டு, அந்த வகுப்பறையின் வாயிலை நோக்கி கோபத்தோடு கை நீட்டினாள். இதற்கு மேல் அங்கு நின்றால் வம்பு என்று அவளை இழுத்துக் கொண்டு கல்லூரியின் வளாகத்தை நோக்கி நடந்தாள் முல்லை.


"என்னடி, இவளோ நேரத்துக்கு துளசியை பற்றித்தான் அந்தம்மா சொல்லிட்டு இருந்தாங்களா?, நான் கூட குப்பை மேனினு நினைத்தேன்..",


என்று தங்கள் பேராசிரியைனால் தங்கள் மேல் கோபத்தோடு வீசப்பட்டிருந்த அந்த சிறு செடியை கையில் வைத்துச் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே சொன்னாள் முல்லை. அவளின் அந்த நிலைப் பார்க்க ஜெனிக்கு சிரிப்பு தான் வந்தது.


"அது எப்படிடி உன்னால் மட்டும்
இந்த நிலையிலும் இப்படி காமெடியா பேச முடியுது?",


"நான் எதுக்குடி சீரியஸா ஆகணும்? என்னையா நாளைக்கு என் அப்பாவைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க?",


அவள் சிரித்தாள்.


"ஆமால, ஹே மிலிட்டிரிக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்டி.., முல்லை உன்னாலப் பாரு...",


தன் தந்தையை நினைத்துப் பயந்தப்படி சொன்னாள் ஜெனி.


"பேசாம, பாட்னி பீரியட்ல சுவாலஜியில் டவுட் வந்துட்டு நைனா..., அதான் ஆடு மாதிரி மேனு கத்திட்டேன்னு சொல்லிடு...",


என்று சிரித்தாள் முல்லை.


"நான் எங்கடி கத்துன, நான் மேம்னு கூப்பிடத் போனேன்...அது அந்த
அம்மா காதில் மேனு விழும்னு கனவா கண்டேன், ச்சே, இன்னக்கி யார் முகத்தில் முழிச்சேன்னு தெரியலை...",


புலம்பினாள் ஜெனி.


"முழிச்சதுலாம் நல்ல முகமா தான் இருக்கும், நடுவில் நீ பேசுன ஆளு தான் சரியில்லை..",


"யாரு நீதானே? உன்னை தானே சொல்ற?",


"அடிங்க..!!! இந்த முல்லை இருக்கும் இடத்தில் கலகலப்பு மட்டும் தான் இருக்கும், நீ பேசின ஆளுனு சொன்னது அந்த முள்ளை..,வில்லனை பற்றி பேசினல? அதான் உனக்கு வில்லத்தனமா நடந்துட்டு...",


என்று சொல்லி விட்டு அவள் செல்ல, ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று யோசித்தாள் ஜெனி.


"ஜெனி, இப்போ எங்கடி போகலாம்? வீட்டுக்கு போனா சகு குரங்கு கிட்ட மாட்டி நான் கைமா தான், உன் வீட்டுக்குப் போனால் உன் மிலிட்டரி அப்பா உன்னைக் கொன்று விடுவார், சொல்லு இப்போ எங்கே போகலாம்...?",


முல்லை கேட்டாள். தோழிகள் இருவரும் யோசித்துக் கொண்டே சில நொடிகள் கழித்து ஒரே குரலில் உற்சாகத்துடன் சொன்னார்கள்.


"ராயர் தாத்தா தோட்டம்!!!!"









அவர்கள் விளிக்கும் அந்த ராயர் தாத்தா தோட்டம் என்பது அவர்கள் சிறு வயதில் இருந்தே செல்லும் ஒரு தோட்டம். அங்கே ஊட்டியின் பேமஸ் பழங்களான மங்குஸ்தான், பிளம்ஸ், லிச்சி என அனைத்தும் பயிரிடப்பட்டு தமிழக அரசின் வனத்துறைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும். அந்த பிரம்மாண்ட தோட்டத்தை சுற்றிப் பார்க்கவே நான்கு நாட்கள் ஆகும். முல்லையின் சிறு வயதில் இருந்தே அவள் அப்பா நர்சரி ராமனிடம் தாவரக் கன்றுகள் வாங்க வரும் போது அந்த ராயர் என்பவரும் அவரின் குடும்பமும் அவளுக்கு நல்லப் பழக்கம். அதனாலேயே இது போல் அவள் பள்ளி, கல்லூரியில் நடக்கும் போது அங்கே சென்று விடுவாள்.


"என்ன முல்லை...? இன்னைக்கும் வெளி நடப்பா?",


அவளைக் கண்டதும் அந்த தோட்டத்துக்கு அருகே இருந்த ஒரு பங்களா போன்ற வீட்டில் இருந்து ஒரு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு கொண்டே வெளியே வந்த அந்த ஏழு வயது குண்டுப் பையன் அவளைக் கேட்டான். அவனை இழுத்து அவனின் கொழுக்கொழு கன்னத்தை பிடித்து திருகிய முல்லை,


"டேய் பன்னு...நீ ஏண்டா ஸ்கூல் போல?",


என்று அவன் கையில் வைத்து இருந்த பழத்தை கொஞ்சம் எடுத்து ருசி பார்த்தாள் அவள்.


"நீ திருந்தவே மாட்டடி...",


அதைக் கண்ட ஜெனி தலையில் அடித்துக் கொண்டாள்.


"மக்கு முல்லை, ஹாஃப் யர்லி எக்சாம் முடிஞ்சி எனக்கு ஸ்கூல் லீவ் விட்டு இருக்காங்க, சகு அக்காவுக்கும் தான், அது சொல்லலயா?",


அவன் அவளை வாரினான்.


"ஆமா, காலையில் சொன்னா, அது ஏண்டா பன்னு? சகு மட்டும் அக்கா, நான் மட்டும் முல்லையா?",


"சகு அக்கா, என் கன்னத்தில் முத்தம் மட்டும் தான் கொடுக்கும், நீ தான் என் கன்னத்தை கடிச்சி வைக்கிற..அதான் உன்னை முல்லைனு கூப்பிடச் சொன்னுச்சு என் மாமா..",


"ஆஹான்..?, உன் மாமாவே இந்த முல்லை சிரிப்பில் கிளின் போல்டுடா..., இதையும் போய் அவரிடம் சொல்லு...",


என்றவள் குனிந்து அவனைக் கட்டிக் கொண்டு அவனின் கன்னத்தில் வழக்கம் போல் கடித்து வைக்க, அவன் அழுதுக் கொண்டே உள்ளே ஓடினான்.
அதைப் பார்த்த ஜெனி,


"ஏண்டி அவனை அழ வைக்கிற?",


என்று சிரித்தாள். அவளோடு இணைந்து சிரித்தவள் தோட்டத்தை நோக்கி நடந்தாள்.


"ஹே.. அவனைப் பாரேன், எவ்ளோ ஹான்ஸ்மா இருக்கான்?",


ஜெனியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் முல்லை. அங்கே அவன் நின்றுக் கொண்டு இருந்தான். அதுவும் கோட் சூட்டில் விறைப்பாக நின்றுக் கொண்டு இருந்தான். அவனின் அந்த உடை நிச்சயம் அவன் எதோ உயர்ந்த பதவியில் இருக்கிறான் என்று அவளிடம் சொன்னது.


"இவனா??? ஹே லூசு, இவன் தான்டி அவன், காலையில் நான் சொன்ன அந்த முள்ளு...",


"என்னச் சொல்ற? பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே...? நல்லா தான் இருக்கான், என்னமோ வில்லன் மாதிரி இருக்கானு சொன்ன?",


ஜெனி கேட்க, அவள் நிமிர்ந்தாள். அங்கே அவன் இல்லை.


"ஹே...எங்கடி அவன்?",


அவனைத் தேடினாள் முல்லை.


"இங்கே இருக்கேன்...",


அவர்கள் பின்னால் அந்த ஆண் குரல் கேட்டது.


"என்ன காலேஜ் கட் அடிச்சிட்டு ஊரு சுத்திக் கொண்டு இருக்கீங்க போல?",


அவர்கள் இருவரையும் பார்த்து அவன் கேட்டான்.


"இதுக்கு தான்டி கழுத்தில் உள்ள ஐடி கார்டை கழட்டுனு சொன்னேன்...",


தன் அருகே இருந்த ஜெனியை முல்லை முறைத்தவள் தொடர்ந்தாள்.


"நாங்க கிளாஸ் தான் அட்டென்ட் பண்ணிட்டு தான் இருந்தோம், ஆனால் எங்க அறிவுக்கு நாங்க அந்த சின்ன கிளாஸ் ரூமில் இருக்க வேண்டிய ஆட்கள் இல்லனு வெளி உலகத்தை கத்துக்கிட்டு வாங்கனு அனுப்பி இருக்காங்க...",


"கிளாஸை விட்டு வெளியே துரத்தி விட்டுட்டாங்கனு சொல்லும்மா...",


அவன் சரியாகச் சொன்னதில் ஜெனி சட்டென்று சிரித்து விட்டாள். அவளை முறைத்து விட்டு முல்லை கேட்டாள்.


"ஆமா சார், அப்படி தான்.., இப்போ என்ன சார் உங்களுக்கு வேணும்?",


"ஓ...என்ன கேட்டாலும் தருவியா?",


அவன் ஒரு மாதிரியாக அழுத்தத்துடன் கேட்டதில் அவள் முறைத்தாள்.


"மரியாதை ரொம்ப குறையுது..",


"அந்த குட்டிப் பையன் முல்லைனு உன்னை பெயர் சொல்லி கூப்பட்டதை விடவா?",


"அது பாசமா கூப்பிடுவது",


"அப்போ எதுக்கு அவன் கன்னத்தை கடிச்ச?",


"அது...அது வந்து...?",


அவள் தடுமாற, ஜெனி சிரித்தாள்.


"அத்தனை வயது சின்னவன் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அந்த வேகம் தான் சார்.., அதான் அப்படி செய்தாள்..",


இதான் சந்தர்ப்பம் என்று ஜெனி கோர்த்து விட்டாள்.


"ஓ...அப்போ நானும் மரியாதைக் குறைவாக வா போ என்று கூப்பிட்டால் உங்க பிரண்ட் என்னையும் அப்படித் தான் செய்வாங்களா?",


அவன் புருவம் உயர்த்தி கண்களில் விஷமத்துடன் கேட்டதில் அவள் திடுக்கிட்டாள்.


"ஜெனி வா போகலாம்...",


அவனை முறைத்துக் கொண்டே முல்லை தன் தோழியை இழுத்துக் கொண்டு சென்றாள்.


"யாரிவன்?",


அவள் மனதில் இந்த ஒரேக் கேள்வி ஓடிக் கொண்டிருந்ததில் வீட்டிற்கு வந்தவுடன் சகுந்தலாவிடம் பதிலுக்கு பதில் சண்டைப் போட அவளால் முடியவில்லை. அன்று இரவு அதிசியத்திலும் அதிசியமாக அவளுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்தவளிடன் சுவர்க்கடிகாரம் நேரம் நள்ளிரவு மணி ஒன்று என்றது. அதைப் பார்த்தவளுக்கு தன் நிலை எண்ணி திகைப்பு வந்தது.


"அவனின் பார்வையும் அவன் பேச்சும் என்னிடம் சொல்லும் செய்தி என்ன? அது எப்படி பார்த்த மாத்திரத்திலேயே அவனால் பல நூறு ஆண்டுகள் பழகியது போல் பேச முடிகிறது? அவன் என்னைக் கவனிக்கிறான், இது எதற்கு அறிகுறி..? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இது நல்லதுக்கு அல்ல...",

- வாசம் வீசும்

Screenshot_20230323_083609_Gallery.jpg
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
வாவ்.. சூப்பர்

இன்னும் அவன் அவன் என்றே சொல்லிக் கொண்டிருக்கிரீர்கள்.. யார் அவன் பதில் எப்போது