• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 15

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 15

தன் அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தான் சித்தார்த் வர்மன்.

அவனுடைய அறைத் தோழர்கள் அவனிடம் வந்து, “ டேய் சித்தார்த் எவ்வளவு நாளாக இப்படியே அமர்ந்துகொண்டு இருப்பாய். உன் தேடல் நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். மதுரவர்ஷினி தன்னுடைய மருத்துவச் சான்றிதழை பெறுவதற்குக் கூட கல்லூரிக்கு வரவில்லை. அவளுடைய திடீர் மறைவுக்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கலாம். மதுரவர்ஷினி நிச்சயம் உன்னைத் தேடி வருவாள். உங்கள் இருவரின் காதல் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது “ என்று கூறி சித்தார்த் வர்மனை ஆறுதல் படுத்தினர்.

கண்களை மூடி இருந்தவனோ சிறு அசைவு கூட காட்டவில்லை.

குமரகுருபரர் அவனுடைய அறைக்குள் உள்ளே நுழைந்தார்.

“தம்பி சித்தார்த்.... “ என்ற அவருடைய பாசமான குரலில் படக்கென விழித்தெழுந்து நின்றான்.

“ ஐயா வாருங்கள். இந்த இருக்கையில் சற்று அமருங்கள்” என்றான்.

அவன் காட்டிய நாற்காலியில் அமர்ந்தவாறு அவனைப்பார்த்து, “சித்தார்த் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.” என்றார் சற்று கலக்கமான குரலில்.


“நீங்கள் செய்த உதவிக்கு இதுவரை நான் எந்த கைமாறும் செய்யவில்லை. அதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவே அந்த ஆண்டவன் எனக்கு கொடுத்த வரம் என்று நினைத்துக்கொள்வேன். சொல்லுங்கள் ஐயா நான் என்ன செய்ய வேண்டும் என்று” என்றான் அடக்கமான குரலில்.

“ நீ எதையோ இழந்துவிட்டு பரிதவிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் உன்னை வளர்த்தவன் என்ற உரிமையில் உன்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க வந்துள்ளேன்” என்றார் சித்தார்த் வர்மனை பார்த்தபடி.

அவர் என்ன கூறினாலும் அதை அப்படியே செய்வது என்ற முடிவுடன் அவர் கண்களையே பார்த்து நின்றான் சித்தார்த்.

“போதை மனிதனின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் ஒன்றாகும். இந்த போதையினால் இளம்பருவத்தினர் மிகவும் பாதிப்படைகின்றனர். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை இந்த பழக்கத்தில் ஈடுபட்டு தங்களை மீட்டெடுக்க முடியாமல் தங்கள் வாழ்க்கையையே இழந்து நிற்கின்றனர்.


நமது ஆசிரமம் போல் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் ஒரு ஆசிரமம் உள்ளது. அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளும், பெண்களும் இந்த போதையின் பிடியில் சிக்கித் தவிப்பதாக அதன் நிர்வாகி என்னிடம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.

இந்தப் போதையில் ஈடுபடுவோரை மீட்டெடுக்கும் மீட்புக்குழுவிற்க்கு உன்னை தலைமை ஏற்க வைத்து அங்கே செல்லும்படி அன்புக்கட்டளை இடவே இங்கே வந்தேன்.

நீயும் உன் தோழர்களும் அங்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

அடுத்தவர்களை மனதால் தேற்றும் முன் நீ உன் மனநிலையை சரி செய்து அங்கே சென்று வர வேண்டும் இதுவே உன் தந்தையாகிய எனது விருப்பம்” என்றார்.

தன்னை வளர்த்த தெய்வம் தன்னிடம் வந்து உதவியை யாசிக்கும் போது சட்டென சரி என்று தலை அசைத்தான் சித்தார்த் வர்மன்.

“ரொம்ப சந்தோஷம். உன்னால் அவர்கள் வாழ்வும் செழிக்க வேண்டும். நீயும் சுபிட்சமாக இருக்க வேண்டும்” என்று கூறி அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.


மதுரவர்ஷினியின் நினைவுகளை என் இதயத்தோடு இறுக்கிக் கொண்டு, தன்னை வளர்த்தவருக்கு நன்றிக்கடன் ஆற்ற கிளம்பினான் சித்தார்த்.

நீண்ட நாட்களாக சவரம் செய்யப்படாமல் இருந்தவன், தன்னைத் திருத்திக் கொண்டு, தன் வகுப்பு தோழர்களையும் அழைத்துக்கொண்டு, ஆலப்புழாவிற்கு கிளம்பினான்.


தனது மருத்துவக்குழுவோடு ஆலப்புழாவில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றவன், அதிர்ந்து நின்றான் ஒவ்வொருவரின் கதைகளை கேட்டு.

காப்பகத்தில் வளரும் குழந்தைகளை அனாதைகள் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தப்படும் போது, அவர்கள் தங்களை பலவீனமானவர்களாக தங்கள் மனதால் உணரத் தொடங்குகின்றனர்.


தங்களை தைரியமானவர்களாக அடையாளப்படுத்த, ஏதோ ஒன்றின் துணை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது ஒரு போதையாக இருப்பதில் அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகிறது.

போதையின் செலவிற்காக சக மாணவர்களிடம் திருடும் எண்ணம் உருவாகியது.
சில சமூகக் குற்றங்களில் ஈடுபட தூண்டியது.

இப்படியாக போதையின் பிடியில் சிக்கியவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த போதையை அறிமுகப்படுத்தும்போது, விளைவின் வேகம் விபரீதம் ஆகிறது.

சித்தார்த் வர்மனின் நண்பர்கள் போதையில் ஈடுபட்ட குழந்தைகளின் மனநிலையை மாற்ற, அவர்களுக்கு மனநல சிகிச்சைகள் அளிக்க ஆரம்பித்தனர்.

அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் எண்ணங்களை திசை திருப்ப முயன்றனர்.

அந்த ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த சித்தார்த் வர்மனுக்கு ஒரு அறை மட்டும் பூட்டு போடப்பட்டு அதன் உள்ளே ஒரு பெண்ணின் முனங்கள் ஈனஸ்வரத்தில் கேட்டது.

அந்த காப்பக பொறுப்பாளரும் சித்தார்த்திடம் வந்து, “இந்த அறையில் இருக்கும் பெண்ணின் பெயர் மானசா. 17 வயதே நிரம்பிய பெண் குழந்தை இவள். இவளுடைய வாழ்க்கையில் ஒரு டோஸ்க்காக உடலை விற்கும் அவலமும் அரங்கேறியது.

கட்டுப்படுத்த முயன்றால் மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்கிறாள்.


சிறிய பெண் என்பதால் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. தாய் தந்தை இல்லாத பெண்ணின் வாழ்வு இப்படி சீரழிந்தது எண்ணி நான் வருந்தாத நாளே இல்லை டாக்டர் “ என்றார் மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில்.

அந்த அறையின் கதவினைத் திறக்கச் செய்தான் சித்தார்த் வர்மன்.

அழகிய மலர்க்கொத்து ஒன்று வெயிலில் வாடி வதங்கி தரையில் விழுந்தது போல், அலங்கோலமாக கீழே விழுந்து கிடந்தாள் மானசா.

“மானசா.... “ என்று அன்போடு அழைத்தான்.

“யார் நீ? மருந்து கொண்டு வந்திருக்கிறாயா? ப்ளீஸ் எனக்கு போட்டுவிடு” என்று தன் கைகளை நீட்டினாள்.

தான் நின்ற நிலையிலிருந்து அவளையே உற்று நோக்கினான் சித்தார்த்.

“மருந்து தர மாட்டாயா?” மிட்டாய்க்கு ஏங்கும் சிறுபிள்ளையாய், உதடு பிதுக்கி அழத் தொடங்கினாள் மானசா.

தான் நின்ற நிலையில் இருந்த சிறிதும் அசையாமல் அங்கேயே நின்றான் சித்தார்த்.

“ஓ....உனக்கு அப்பொழுது என்ன வேண்டும்? “ என்று தன் தாடையின் மீது விரல்களை தட்டி யோசித்தாள்.

பின் கண்கள் பளிச்சிட, தான் அணிந்திருந்த நைட்டியின் முன்பக்க ஜிப்பை கீழ் பக்கம் இறக்கத் தொடங்கினாள்.

அவளின் செயலைக் கண்டு அதிர்ந்த சித்தார்த் உடனே ஓடிச் சென்று அவள் கைகளைப் பிடித்து மேலே உயர்த்தினான்.


மானசா சித்தார்த்தை கன்னம் கன்னமாக அறையத் தொடங்கினாள்.
அவளின் கைகளைப் பிடித்து அடக்கினான் சித்தார்த். திமிரியவளை கட்டுப்படுத்த முயன்றான்.

மானசா சித்தார்த்தின் கைகளை விடுவிக்க போராடினாள். இறுதியாக சித்தார்த்தை தான் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து விட்டு தன்னைத் தானே தாக்கிக் கொள்ள முற்பட்டாள்.

மானசாவின் போதை நிலை ஆரம்ப நிலையைக் கடந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தான் சித்தார்த்.


மருத்துவமனையில் அவளை சேர்க்க வேண்டிய உடனடி கட்டாயத்தை உணர்ந்தான்.

பின் அந்த ஆசிரம நிர்வாகியை அணுகி, மானசாவின் சிகிச்சை நிலைகளைப் பற்றி விளக்கினான்.

மானசாவை உடனடியாக ஆசிரம நிர்வாகி மற்றும் தனது தோழர்கள் இருவருடன் சேர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தான்.

மானசாவிற்க்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கட்டிலில் படுத்திருந்தவளின் உடல் திடீரென்று தூக்கிப்போட, அவளை தன் மடியில் கிடத்தினான் சித்தார்த்.
தன் உடன் பிறந்தவள் போல் அவளது தலையை பாசமாக வருடினான்.

தன்னை தவறாக தீண்டும் கரத்தையும், பாசமாக தீண்டும் கரத்தையும் உணர்ந்துகொள்ளும் பெண்மையின் ஆழ்மனது.

சித்தார்த் வர்மனின் கரத்தை தன் கையோடு இறுக்கிக்கொண்டாள். “நான் யார் உங்களுக்கு? “ என்றாள்.

“ நீ என் செல்ல குட்டி... “ என்றான்.


பாசத்திற்காக ஏங்கிய அந்த பிள்ளை மனது “அவ்வளவுதானா?” என்றது.

“ நீ என் புஜ்ஜு குட்டி, சமத்து குட்டி, லவ்லி கேர்ள்,ஸ்வீட் கேர்ள் ... “ என்று பாசத்துடன் அடுக்கிக் கொண்டே சென்றான் சித்தார்த் வர்மன்.


தன் தந்தை முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து அந்த மருத்துவமனையின் வராண்டாவைக் கடந்த மதுரவர்ஷினி, சித்தார்த் வர்மனின் குரலைக் கேட்டு, தன் உயிர் உறைய நின்றாள்.

அறைக் கதவு பூட்டி இருக்க, அவளோ அந்த அறையின் ஜன்னலில் தன் பார்வையைப் பதித்தாள்.

சித்தார்த் வர்மனின் மடியில் ஒரு பெண் படுத்து இருக்க, அவளது தலையை வருடியவாறு, ஆசை மொழிகள் பேசும் அவனைக் கண்டு, அதிர்ச்சியில் மௌனமானாள்.


கதவை அதிர்ந்து தட்ட அவள் எத்தனித்தபோது, “ப்ளீஸ் ஐ லவ் யூ சொல்லு...” என்ற மானசாவின் குரலில் அவளது கைகள் அந்தரத்தில் நின்றது.

போதைக்கு அடிமையாகி தன் சுயத்தை இழந்து நின்றுவளிடம், கடுமையான மன சிதைவால் பாதிக்கப்பட்டவளிடம், போதையின் பழக்கத்திலிருந்து அவளை மீட்டெடுக்கும் மருத்துவராக மாறினான் சித்தார்த் வர்மன்.

நோய்க்கு மருந்து தருவதுபோல், “ ஐ லவ் யூ கண்ணம்மா... “ என்றான் ஒரு தந்தையின் பாசத்துடன் தலையை வருடி.

தன்னிடம் தன் காதலை வார்த்தையால் பரிமாறிக் கொள்ளாத சித்தார்த் வர்மன், ஒரு பெண்ணிடம் காதலாடுவதைக் கண்டு, இதயத்தில் இடி மின்னல் தாக்க, கண்களில் மழை பொழிந்தது மதுரவர்ஷினிக்கு.

சித்தார்த்தின் எதிர் புறம் அமர்ந்திருந்த அவனது வகுப்புத் தோழர்கள் அவளின் கண்களில் இருந்து மறைந்தது விதியின் செயலானது.

மதுரவர்ஷினியின் அதிர்ச்சியில், அவளது மகவும் அதிர்வு கொண்டு, இந்த உலகத்தை எட்டிப் பார்க்க முட்டி மோதியது.

சட்டென உணர்ந்த அதீத வலியில், “ அம்மா..... “ என்று அலறியபடி அந்த அறையின் வாசலில் சுருண்டு விழுந்தாள்.

மதுரவர்ஷினியின் உயிர்க் குரல் சித்தார்த் வர்மனை அடைந்த நொடி, மானசாவைத் தன் வகுப்பு தோழர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, அறையிலிருந்து விரைந்து வெளியேறினான்.


நிறைமாத வயிற்றுடன் தரையில் புழுவினைப்போல் துடித்த மதுரவர்ஷினியைக் கண்டு அதிர்ந்தான்.

அடுத்த கணம், தன் உயிரை கையில் சுமந்து இருந்தான். தன் மகளின் குரலை கேட்டு ஓடிவந்த சிவானந்தன் யாரோ ஒருவர் மகளுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டார்.


ஆனால் சித்தார்த், “மது... ப்ளீஸ் கண் முழிச்சு பாரு. உன்னை கண்டது இன்பம் என்றால், நான் தந்தையாக போவது பேரின்பமாக உள்ளது.

இத்தனை நாள் உன்னை காணாமல் நான் நானாக இல்லை மது.

இனி உன்னை விட்டு, நம் குழந்தையை விட்டு ஒரு பொழுதும் பிரிந்திருக்க முடியாது” என்று அவளுடன் ஆனந்தத்தில், அதிர்ச்சியில் பேசிக்கொண்டே வந்தான் சித்தார்த்.

அவனின் ஆனந்த குரலைக் கேட்ட சிவானந்தத்தின் கால்கள் அசைவற்று நின்றன.
மயங்கிய தன் மதுரவர்ஷினியை லேபர் வார்டில் சேர்த்தான்.

அறை வாசலில் நின்றிருந்தவனிடம், “நீதான் சித்தார்த் வர்மனா? “ என்றார் குரலில் வன்மத்தை தேக்கியபடி.

மதுரவர்ஷினியை தன் மகவோடு கண்ட சந்தோஷத்தில், கண்ணீர் மல்க தலையசைத்தான்.

“ என் மகளின் வாழ்க்கையிலிருந்து நீ இந்த நொடி முதல் விலகிவிடு “ என்றார் அதிகாரமாக.


சிரித்தவனின் இதழ்கள் அழுத்தமாய் இறுக்கி ஒடுங்கின.

“ இல்லையென்றால்..? “ அவரையே உற்று நோக்கினான்.

“ இத்தனை நாள் உன் கண்ணில் இருந்து மறைந்த மதுரவர்ஷினி, இந்த உலகத்தை விட்டும் மறைந்து விடுவாள் என்னோடு” என்றார் சிறிதும் குற்ற உணர்வு இன்றி.

“ஓ.... இந்த தலைமறைவு நாடகம், உங்கள் இயக்கம் தானா? “ நக்கலாய் மொழிந்தான்.

“ பணம் காசு இல்லாத அனாதை பையன் நீ. என் மகளை எப்படி காப்பாற்றுவாய்?.


உன்னிடம் என் மகளுக்கு என கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? “ என்றார் காரமாக.

“ என் உயிர் காதல் உள்ளது. எங்கள் இருவரையும் அதுவே ஒன்று சேர்க்கும்” என்றான் காதலில் கர்வமாக.

காதல் என்ற வார்த்தையை கேட்டவுடன் சிவானந்தத்திற்கு தீப்பிடித்தது போல் ஆனது.


“ உன்னை எனது மகள் வெறுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அவள் இனி உன்னை விரும்ப மாட்டாள்” என்றார்.

“ அதை என் மது சொல்லட்டும். பிறகு மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் நான் சென்று விடுவேன்” என்றான்.


உள்ளே மதுரவர்ஷினிக்கு மயக்க மருந்து கொடுக்கபட்டது.
“சித்தூ.... “ என்று அலறினாள்.


சிவானந்தன் எவ்வளவு தடுத்தும், லேபர் வார்டின் உள்ளே நுழைந்தான் சித்தார்த்.

அந்த மயக்கத்தில், சித்தார்த் வர்மன் அவளுடைய மனக்கண்ணில் வந்து சிரித்தான். “ ஐ லவ் யூ கண்ணம்மா...” என்றான்.

மயக்கத்திற்கு செல்ல இருந்தவள், வெறி பிடித்தது போல், “ சித்தார்த் வர்மன் நீ எனக்கு வேண்டாம்... உன் காதலும் வேண்டாம்... போ தொலைந்து போ.... என்னை விட்டு விலகி தூர போ.... “ கண் முன்னே சித்தார்த் வர்மன் நிற்பது போல் நினைத்து தன் கைகளால் அவனை காற்றில் அடிக்க ஆரம்பித்தாள்.

“மது... “ என்று உயிர் கசியும் குரலில் சித்தார்த் வர்மன்,

மதுரவர்ஷினியின் கையைப் பிடிக்க, இன்னொரு பெண்ணின் கரத்தை பிடித்தவன் என்ற அருவருப்பில் அவனுடைய கையை உதறித் தள்ளினாள்.

அவளின் பார்வைப்புலன் குறைய கலங்கலாக தெரிந்த சித்தார்த்தை போ போ என்று விரட்டினாள் சுயநினைவு இல்லாமல்.

தன் உயிர் நேசம் மரித்தது கண்டு துடித்தான். தலை குனிந்து வெளியே வந்தவனை பார்த்த சிவானந்தன் மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்தார்.

சூழ்நிலை தனக்கு சாதகமாக இருப்பதை கண்ட அவர், சித்தார்த்தை ஏளனமாகப் பார்த்து, “ உன் காதல் காலாவதியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன” என்றார்.

தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராத சித்தார்த், உடல் இறுக அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனின் எண்ணச் சுழலுக்குள் சிக்கித் தவித்து தன் தலையை இரு கைகளால் பிடித்து கொண்டான்.

வெளியே வந்த மருத்துவர், மதுரவர்ஷினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சந்தோஷமாக கூறினார்.
சித்தார்த் வர்மனின் முகம் மலர்ந்தது.

சிவானந்தத்தின் முகம் சுருங்கியது.

சித்தார்த்திற்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே சத்தமாக மருத்துவரிடம், “ டாக்டர் இந்த குழந்தை எனக்கும், என் மகளுக்கும் வேண்டாம். எங்கள் மருத்துவமனையில் யாராவது கேட்டால் இந்த குழந்தையை தத்து கொடுத்து விடுங்கள்” என்றார் ஆழ்மனதில் இரக்கமில்லாமல்.

“ உங்களுக்கு என்ன பைத்தியமா? அழகான ஆரோக்கியமான ஒரு குழந்தையை எந்த தாயாவது வேண்டாம் என்று கூறுவாளா? “ என்றார் அதிர்ச்சியாக.


வேண்டாவெறுப்பாக அந்த குழந்தையை தன் கையில் வாங்கினார் சிவானந்தன். மருத்துவர் உள்ளே சென்றதும், சித்தார்த் வர்மன் தன் உறுதியான நடையுடன் அவரின் முன் வந்து நின்றான்.

“ நீங்கள் கூறியது போல், என் வாழ்க்கையில் அனைத்தும் எனக்கு யாசகமாகவே கிடைத்தது, என் மதுரவர்ஷினியின்
காதலைத் தவிர.

சரி அது முடிந்து போன விஷயம். என் குழந்தையை எனக்கு யாசகமாக தருவீர்களா? “ உறுதியான அந்த ஆண்மகன் தந்தை பாசத்தில், தந்தை பாசத்தால் பைத்தியமான சிவானந்தத்தின் முன் மண்டியிட்டு தன் இரு கரங்களை நீட்டினான்.


கையிலிருந்த அந்தக் குழந்தை, தன் மகளையும் தன்னையும் பிரிக்கும் ஆயுதமாக எண்ணிய சிவானந்தன், அந்தப் பச்சிளம் குழந்தையை அதன் தந்தையிடமே யாசகமாக வழங்கினார்.

மெய் சிலிர்த்த அந்தத் தாயுமானவனின் மார்பில் உயிர் கசிந்தது.

பின் தன் காதல் பரிசை கையில் ஏந்தியபடி, அந்த தளத்திலிருந்து வெளியேறினான்.

மயக்கத்தில் இருந்து வெளிவந்த மதுரவர்ஷினி, தன் குழந்தையை தேடினாள்.
அவளிடம் வந்த சிவானந்தன், மகளின் கரங்களை இறுகப்பற்றி அவளுடைய குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.

ஒரே நாளில் தன் காதலும், குழந்தையும் இறந்ததைக் கண்டு, பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்பு, ஜன்னி கண்டு தூக்கிவாரிப்போட்டது.

அவள் உயிர் பிழைத்ததே மறு பிழைப்பாக இருக்க, தன் மகளைக் கண்ணும் கருத்துமாக காத்தார்.

அவள் வாழ்க்கையில் சித்தார்த் வர்மனும், அவள் குழந்தையும் ஒழிந்ததைக் கண்டு உள்ளத்தில் ஊறிய நிம்மதியுடன், தன் மகள் தனக்கு போதுமென்ற சுயநலத்துடன் உலா வந்தார்.

அந்த மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருந்தால், தனது குட்டு உடைந்துவிடும் என்பதை உணர்ந்த சிவானந்தன், பணத்தால் பலரை விலைக்கு வாங்கி, அந்த மருத்துவமனையின் குறையைச் சுட்டிக்காட்டி வேறு மருத்துவமனைக்கு மதுவை மாற்றி அழைத்து வந்தார்.


சித்தார்த் வர்மனுக்கோ, “தன்னை ஏன் மதுரவர்ஷினி வெறுக்கிறாள்? குழந்தையை தருவதற்கு எப்படி சம்மதித்தாள்? ஒருவேளை இது அவளுக்கு அறியாமல் நடந்த சதியோ? “ என்று சரியான பாதையில் சிந்தித்தான்.

அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் அவளைக் காணாது தவித்தான். அருகிலிருந்த ஆடம்பரமான மருத்துவமனைகளில் விசாரிக்க, ஒரு மருத்துவமனையில் மதுரவர்ஷினியின் பெயர் இருக்க அவளது அறைக்கு செல்ல லிஃப்டில் ஏறினான்.

மதுரவர்ஷினி அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தனது அலைபேசி ஒலிக்க அதனை எடுத்து காதில் வைத்தார் சிவானந்தன்.

சிவானந்தத்தால் சித்தார்த் வர்மனை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த அந்த நபர் பேசினார்.

சித்தார்த் வர்மன், கைக்குழந்தையுடன் ஆலப்புழாவில் உள்ள ஆசிரமத்தில் போதை மறுவாழ்விற்கான சிகிச்சைகள் அளிப்பதாக கூறினார்.


சித்தார்த் வர்மன் என்ற பெயரில் முகத்தினை சுளித்த சிவானந்தன், “ இனி நாம் அந்த வெட்டிப் பயல் சித்தார்த் வர்மனை மதுவிடம் இருந்து பிரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். ஏதோ ஒரு காரணத்தினால் என் மகளே அவனை வெறுத்து ஒதுக்கி விட்டாள் . காதலாம் காதல். எல்லாம் பொய்....” என்று பேசியபடியே திரும்பியவர் அதிர்ந்து விழித்த மதுரவர்ஷினியின் முகத்தைக் கண்டு திடுக்கிட்டார்.

சித்தார்த்தின் மற்றொரு காதல் முகத்தை கண்டு நொந்து இருந்தவள், தன் தந்தையின் மற்றொரு கோரமுகத்தை கண்டு, அந்த நொடியிலிருந்து அவருடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டாள் மதுரவர்ஷினி.


மகளின் பாசத்தை மீண்டும் பெற, சித்தார்த்திடம் அவளை ஒப்படைக்க அவரின் தன்மானம் இடித்தது.

குழந்தையைப் பற்றிக் கூறினால், முற்றிலும் தன்னை தவிர்த்து விடும் அபாயமும் உள்ளதைக் கண்டு குழம்பித் தவித்தார்.

இறுதியில் தன் மகள் தன்னுடன் இருப்பதே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

மதுரவர்ஷினியை தேடி தங்கள் குழந்தையுடன் வந்த சித்தார்த், அவளின் அறைக்குள் நுழைய முயன்ற செவிலியரிடம், “உள்ளே உள்ள பேஷன்ட் மதுரவர்ஷினியிடம் அவர்கள் குழந்தையுடன் நான் காத்திருப்பதாக கூறுங்கள் “ என்றான்.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கியவளின் முன் நிற்க அவனது தன்மானம் அவனை இடித்துரைத்தது.

அவனின் காதல் மனமோ, குழந்தையைக் காட்டி அவளுடன் இணைய நினைத்தது.

உள்ளே சென்ற செவிலியர், சித்தார்த் கூறிய செய்திகளைக் கூற, இதுவும் தன் தந்தை நடத்தும் நாடகங்களில் ஒன்று என்று நினைத்த மதுரவர்ஷினி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள்.

“ குழந்தையாம் குழந்தை... யாருக்கு வேண்டும்? எனக்கு எதுவும் வேண்டாம். அம்மா...“ என்று கதறித் துடித்தபடி தன் வயிற்றை இறுக்கிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

இறந்து போன தன் குழந்தைக்கு பதிலாக வேறு குழந்தையைக் காட்டி தன் தந்தை தன்னிடம் தன்னை ஏமாற்றுவதாக நினைத்தாள்.

வெளியே நின்றிருந்த சித்தார்த் வர்மனுக்கு, மதுரவர்ஷினியின் முடிவு பெரும் அதிர்வைக் கொடுத்தது.

“ தன் காதல் எங்கே தோற்றது?” என்று சிந்தித்தவனுக்கு “ தன் காதல் தோற்கவில்லை. அது மரித்துவிட்டது “ என்ற பொய்மை உண்மையாய் புலர, கண்கள் சினத்தில் சிவக்க, தன் குழந்தையுடன் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.


மின்னல் வெட்டும்....
 
Last edited:

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
சித்தார்த் வர்மன் மற்றும் மதுர வர்ஷினியின் நிலை மிகவும் பரிதாபத த்திற்குரியது.
 
  • Like
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சித்தார்த் வர்மன் மற்றும் மதுர வர்ஷினியின் நிலை மிகவும் பரிதாபத த்திற்குரியது.
இலையுதிர் காலத்திற்குப்பின் வசந்த காலம் தொடரும் 👍
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
சூழ்நிலை இப்படி ஆகிடுச்சு... 🥺🥺

சித்தார்த் ஒரு நல்ல எண்ணத்துல தான் மது அந்த பொண்ணு கிட்ட அப்படி பேசினார்...😔

சித்துவும் அவங்க இப்படி பேசினத...

ஆனா மது... பாவம்...🥺🥺

அவங்க அப்பா... 😡😡😡😡

அவர் சுயநலம் எத்தனை கஷ்டம் இவங்களுக்கு... 🥺🥺
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
"கண்ணால் காண்பதும் பொய்" என்ற வார்த்தையை ஏன் மறந்தாய் மது, உன்னவன் மேல் நீ கொண்ட நம்பிக்கை பொய்த்ததேனோ :mad::mad::mad:

தந்தை சொன்ன பொய்யை, உண்மை என்று நம்பியவளை குற்றம் சொல்வதா அல்லது சூழ்நிலை மாறியது அறியாமல் தன்னவளை தனியே தவிக்க விட்டு சென்றவனை குற்றம் சொல்வதா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சிவானந்தன் பாசம் கண்ணை மறைத்தது தான் விதியின் சதியா 🥺🥺🥺