• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 4

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 4

இரவு டியூட்டிக்காக மதுரவர்ஷினி மருத்துவமனைக்குள் நுழையும் நேரம் கார்முகில் வெளியேறினாள்.

சோர்ந்த நடையுடன் வெளியேறிய கார்முகிலைக் கண்ட மதுரவர்ஷினி,
“முகில் என்ன ஆயிற்று. ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது? “ என்று வினவினாள்.

“ அட போ... மது. நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்” என்றாள்.

“ என்ன ஆயிற்று முகில்? “ சிறிது லேசான பதட்டம் எட்டிப்பார்த்தது மதுரவர்ஷினிக்கு.

“ என் காதல் கோட்டை தகர்ந்து விட்டது.... “ என்றாள் முகில்.

“ என்ன உளறுகிறாய்? “ காதல் என்ற வார்த்தையே பதற்றம் கொடுத்தது மதுரவர்ஷினிக்கு.

“ என் ட்ரீம் பாய் சித்தார்த் வர்மனுக்கு திருமணம் முடிந்து விட்டதாம். அப்புறம் அப்புறம்..... “ என்று இழுத்தாள் முகில்.

தனக்குத் தெரிந்த விஷயமாக இருந்தாலும், ‘சித்தார்த் வர்மனுக்கு திருமணம் முடிந்து விட்டது’ என்ற வார்த்தைகள் மதுரவர்ஷினியின் சுவாசக்குழல்களை உலரச் செய்தது.

உமிழ் நீரை விழுங்கியவாறே, “ஓ.... “ என்று உதட்டைக் குவித்தாள் மதுரவர்ஷினி.

“ என்னடி ஓ...... மீதிக் கதையையும் கேளு. அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறதாம்” என்று உதட்டைப் பிதுக்கினாள் கார்முகில்.

சம்மட்டி கொண்டு தன் இதயத்தை யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது மதுரவர்ஷினிக்கு.

சுனாமிக்கு முன்னே கடல் உள் வாங்குவதைப் போல், இந்தப் பெண் கடல் கண்ணீரை உள்வாங்கியது.

ஒரு செய்தி வாசிப்பாளர் போல் செய்தியைக் கூறி விட்டு ஏக்கப் பெருமூச்சுடன் சென்றாள் கார்முகில்.

தன் அறைக்கு வந்தாள் மதுரவர்ஷினி. கோபத்தில் அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.

“ என்னுடைய நினைவுகளை எல்லாம் அழித்து விட்டு, என்னுடனான உலகத்தை எட்டி உதைத்து விட்டு, உனக்கென்று ஒரு புதிய உலகைப் படைத்தவனே, உன் கர்வத்தை நெருப்பில் கொளுத்துவேன்.

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டு, உன் குடும்பமாக நான் பணிபுரியும் இடத்திற்கே வந்து நிற்கும் உன் ஆணவத்திற்கு நிச்சயம் நான் பதிலடி கொடுப்பேன்” அவள் அறியாமல் அவளது கைகள் மேஜையை குத்தியது.

சத்தம் கேட்டு உள்ளே வந்த செவிலியர் “ மேடம் பேஷன்ட்களை அனுப்பட்டுமா? “ என்று வினவினார்.

“ம்....” என்று இசைவு தெரிவித்தாள் மதுரவர்ஷினி.

பெண்ணாய் இருந்து மருத்துவராய் உருமாறியவளின் மனம் சிறிது அமைதி ஆகியது.

இங்கு சீற்றம் எடுத்து சீரியவனோ, தன் படுக்கையில் ஒளிரும் கண்ணோடு விழித்திருந்தான். வலது கை உறங்கும் தன் மகனைத் தட்டிக் கொடுக்க, இடது கையோ மதுரவர்ஷினியின் புகைப்படத்தை தாங்கிப் பிடிக்க, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவளை.

“ சிரிக்கிறாயா? என்னை சிதையில் எரித்துவிட்டு நீ சிரிக்கிறாயா?

என் வாழ்க்கையை திசை மாற்றியவளே, உன் கண்ணைக் கட்டி, திசை தெரியாமல் ஆக்குகிறேனா இல்லையா பார்!

என்ன நெஞ்சழுத்தம் இருந்தால், என் முன்னே பூங்கொத்தை தூக்கிக் கொண்டு சிரித்தபடி வருவாய்?

நான் உன்னைத் தேடும் தகுதியை நீ இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இத்தனை நாள் நீ என் கண்ணில் படாமல் இருந்தாய். அதனால் தப்பித்தாய் மதுரவர்ஷினி.

ஆனால் இன்றோ..... நீ என் கண்ணில் மாட்டிக் கொண்டாய். உன் விழி வீச்சில் சாயும் அந்த சித்தார்த் வர்மன் இன்று பழி வீசும் வாளுடன் காத்துக் கொண்டிருக்கிறான்.

அது வார்த்தை ஆனாலும் சரி வாழ்க்கையானாலும் சரி. பார்த்துவிடலாம் மதுரவர்ஷினி நீயா? நானா? என்று” சினத்தில் சிவந்தான்.

உலகத்தில் அவள் மட்டுமே உறவு என்ற நம்பிக்கையில் அவள் கரம் பற்றி நடக்க நினைத்தவன், அந்தப் பிஞ்சு மழலையின் கரம் பற்றி உறங்கினான்.

தாய் இல்லாத தன் மகனின் நிலையை எண்ணிய சித்தார்த் வர்மன், இதுவரை அவளைக் காணாது அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் செதுக்கிய செப்புச்சிலையாக தன் முன்னே மீண்டும் தோன்றிய அவளைக் கண்டு கொதி நிலைக்கு தள்ளப்பட்டான்.

தான் தாய் என்பதையே அறியாத மதுரவர்ஷினியோ, இழந்த தன் தாயை இருண்ட அகண்ட வானில் தேடிக்கொண்டிருந்தாள்.

வலியில் துவளும் இருவரையும் தன் வழிக்கு அழைத்து வர விதி நினைத்தது.

மத்திய அமைச்சர் ஒருவர் இதய நோயின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தீபம் மருத்துவமனையிலிருந்து சித்தார்த் வர்மனுக்கு அவசரமாக கிளம்பி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

தன் மகனின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, மருத்துவமனைக்கு கிளம்பினான் சித்தார்த் வர்மன்.

தன் இரவு டியூட்டி முடித்துவிட்டு லிஃப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள் மதுரவர்ஷினி.

கீழ்த்தளத்தில் உள்ள லிஃப்டின் கதவுகள் திறக்க எதிரே நின்ற சித்தார்த் வர்மனை திடீரென்று கண்ட அதிர்ச்சியில், விழி விரிய அப்படியே நின்றாள்.

அவளின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சித்தார்த் வர்மன், லிஃப்டின்னுள் நுழைந்து மேல் தளத்திற்குரிய பட்டனை அழுத்தினான்.

அவனின் அத்துமீறிய செயலைக் கண்ட மதுரவர்ஷினி சினம் துளிர்க்க,
“ என்ன மிஸ்டர் சித்தார்த் வர்மனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் திரும்பி வருகிறதோ? “ எள்ளல் தெறித்தது அவள் குரலில்.

“ நேற்றுவரை எப்படி இல்லை. ஆனால் இன்று முதல், அதுவும் பழைய ஞாபகம் என்று நீ குறிப்பு காட்டியவுடன் புரிந்து கொண்டேன் மதுரவர்ஷினி” என்று கூறி அவன் அவளருகே நெருங்கி வந்தான்.

“ சித்தூ.... நோ....” என்ற பதட்டத்தில் பதறினாள்.
சட்டென்று அவளது கழுத்தை இறுக்கினான்.

“வர்மன். டாக்டர் சித்தார்த் வர்மன். சித்தூ.... இந்தப் பெயரை உபயோகிக்கும் தகுதி உனக்கு இல்லை.

சித்தார்த் வர்மனை பயமின்றி, அசையாது பார்த்தாள் மதுரவர்ஷினி.

காதலில்லா அவள் கண்களில் வெறுமையைக் கண்ட சித்தார்த் வர்மன், அவளை சோதிக்க எண்ணி,
காதருகே சுருண்டிருந்த அவள் கற்றைக் கூந்தலை ஒரு கையால் விலக்கி, அவள் காதருகே தன் உதட்டினை கொண்டு சென்று, மெல்லிய குரலில், “ படம் எடுத்து ஆடும் பாம்பினைப் போல் அதிக கவர்ச்சியுடன் இருக்கிறாய். அன்று காதல் என்ற ஆயுதம் கொண்டு என்னை தாக்கியது போல், இன்று அப்பாவி, அழகி என்ற முகமூடி அணிந்து கொண்டு என்னை சாய்க்கப் பார்க்கிறாயா?

நெவர்...... அன்று உன் தந்தையுடன் சேர்ந்து கொண்டு, குடும்பம் இல்லாத அனாதையாக நிற்கதியில் என்னை நிற்க விட்டுச் சென்றாய்.

இன்று எனக்கு என்று ஒரு அழகான குடும்பம். நீ இல்லாமல் நான் ஏங்குவேன் என்று நினைத்தாயா?” என்று உறுமினான்.

“ மிஸ்டர் மண்ணாங்கட்டி, உங்கள் தளம் வந்து விட்டது நீங்கள் செல்லலாம்” என்றாள் அசால்டாக.

அதிர்ச்சியில் அவள் கழுத்தில் இருந்த தன் கைகளை எடுத்துவிட்டு, “வாட்... கம் அகைன்..... “ என்றான்.

“ சித்தூ... என்று கூப்பிடக் கூடாது என்றால், உங்களுக்கு மண்ணாங்கட்டி என்பதுதான் சரியான பெயர். ஏனென்றால் உங்கள் மூளையில் அதுதானே அடைத்துக் கொண்டிருக்கிறது” என்றாள் நக்கலாக.

“ பணம் இருக்கும் திமிரில் ஆடிய அதே மதுரவர்ஷினி நீ!

உன் திமிர்க்கான தண்டனையை உனக்கு நான் தந்தே தீருவேன்“ என்றான்.

“ உங்களை நான் டாக்டர் என்று நினைத்தேனே . ஐயோ பாவம்.... தண்டனை தரும் நீதிபதி என்று நான் நினைக்கவில்லையே..“ என்றாள்.

அவள் தன்னை சீண்ட சீண்ட, கோபம் கண்ணை மறைக்க தன்னை மீறி அவளை அடிக்க கையை உயர்த்தினான்.

அவன் கையை உயர்த்திய வேளை மதுரவர்ஷினி லிஃப்டின் கதவு திறக்கும் பட்டனை அழுத்தினாள்.

சட்டென கதவு திறக்க, சித்தார்த் வர்மனை எதிர்நோக்கிய மருத்துவர்கள் குழு அங்கு காத்திருந்தது.

“ குட் மார்னிங் டாக்டர். “ இன்று அனைவரும் கோரஸ் பாட, வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் லிஃப்டை விட்டு வெளியேறினான் சித்தார்த் வர்மன்.

மலர்ந்த புன்னகை உதட்டில் தங்கிட, சித்தார்த் வர்மனை பேச்சு இழக்கச் செய்த அந்த நொடிகளை எண்ணி சிரித்துக்கொண்டாள்.

சித்தார்த் வர்மனுடன் உரையாடிய தருணமோ, அவனைச் சீண்டிய நொடிகளோ, அவனை அருகில் பார்த்ததாலோ, பிரித்தறிய முடியாத ஏதோ ஒன்று அவளுக்கு உற்சாகம் தர, மலர்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.

சிரித்தபடி வீட்டினுள் நுழையும் மகளைக் கண்ட, சிவானந்தனுக்கு, ஆச்சரியத்தில் புருவங்கள் மேலிட்டது. அவரது கைகள் அவரது தாடையை அழுத்தமாக வருடிக் கொடுத்தது.

அதிகாலை வேளையில் பறவைகளுக்கு தானியங்கள் வழங்குவது மதுரவர்ஷினிக்கு மிகவும் பிடித்த ஒன்று. இன்று மனதில் எழுந்த உற்சாக குமிழியில் கைகளில் தானியப் பையை எடுத்துக்கொண்டு, தனது ஸ்கூட்டியில் அருகிலிருந்த பார்க்கிற்கு கிளம்பினாள்.

அவளது வரவைக் கண்ட அந்த பார்க்கின் வாட்ச்மேன் அவளுக்கு சல்யூட் அடித்து காலை வணக்கம் கூறினார்.

தலையசைத்த படி இயல்பாக அவரது வணக்கத்தை ஏற்றுக் கொண்டாள்.

குருவிகளும், காக்கைகளும், புறாக்களும் இன்னும் பெயர் தெரியாத பல பறவைகளும் மகிழ்வோடு வந்து தானியத்தை கொத்தித் தின்றன.

பறவைகளின் மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்து நின்றிருந்த மதுரவர்ஷினியின் துப்பட்டாவை யாரோ இழுப்பது போல் தோன்ற சட்டென பின் திரும்பினாள்.

அன்று கோவிலில் கண்ட அதே மழலை, தன்னை தூக்கச் சொல்லி இரு கரங்களையும் நீட்ட, அந்த பூங்கொத்தை அள்ளி வாரி அணைத்துக் கொண்டாள்.

குழந்தையின் பின்னே வந்த பெண்ணோ, “இவன் அப்பா அவசர வேலை காரணமாக வெளியே சென்று இருக்கிறார். விடாமல் அவனது தந்தையைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் மனதை மாற்றவே இங்கே அழைத்து வந்தேன்.

உங்களைக் கண்டதும் என் கையை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான்” என்றார்
அந்த பெண் கேர் டேக்கர்.

அந்த கேர் டேக்கரை குழந்தையின் அன்னை என்று தவறாக நினைத்துக் கொண்டாள் மதுரவர்ஷினி.

“ ஓ.....ரொம்ப அழகான குழந்தை” என்று கூறிக்கொண்டே அந்த மழலையின் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அந்த முத்தத்தில் சிலிர்த்த ஆதித்திய வர்மன், “ம்மா..... ம்மா..... “ என்று தன் மழலைக் கரம் கொண்டு மதுரவர்ஷினியின் முகத்தை தடவினான்.

அவன் அழைப்பில் சர்வமும் ஒடுங்கிய மதுரவர்ஷினி அந்தப் பிஞ்சு முகத்தை தன் கைகளில் ஏந்தி ரசிக்க ஆரம்பித்தாள்.

குழந்தையின் கண்களும், உதடுகளும் தனக்குப் பரிச்சயமானதாகத் தோன்ற பரிதவிக்கத் தொடங்கினாள் மதுரவர்ஷினி.

“ மம்மி அப்பா வீடு வா.... “ என்று அழைக்கத் தொடங்கினான்.
குழந்தையின் அழைப்பில் தன் நெஞ்சம் உருக நின்றாள்.

கேர் டேக்கரோ, “ ஆதித், யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழக மாட்டான். என்னையவே எட்டி நிற்கச் செய்வான். ஆனால் பாருங்கள் உங்களை இன்று வீட்டிற்கு அழைக்கிறான். ஆச்சரியம்தான்” என்றார்.

விழிகள் அதிர, “உன்னுடைய பெயர் என்ன? “ என்று நடுக்கத்துடன் வினவினாள்.

“நானு... ஆதி.... ஆதித்.... “ என்று அழுத்தமாக உரைத்தது குழந்தை.

கேர் டேக்கரோ “அவனுடைய முழுப் பெயர் ஆதித்திய வர்மன்” என்றார்.

அந்தப் பெயரைக் கேட்டவுடன் உலகம் தட்டாமாலை சுற்ற, குழந்தையைக் கீழே இறக்கி விட்டு அருகில் இருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தாள்.

“என்னுயிர் சேர்ந்த நம் உயிரின் பெயர் ஆதித்திய வர்மன்” என்ற குரலோசை அவள் செவிப்பறையை அதிரச் செய்தது.

மின்னல் வெட்டும்...
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️சித்தார்த்
வர்மன், ஆதித்யவர்மன்,
பெயர் மிக அருமை சகி. நிறைய secrets இருக்கும் போல 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஆனந்தமும், ஆச்சர்யமும்,
வலிகளும், வேதனைகளும்
வாழ்வின் மர்மங்கள் தான் 😁😁😁😁
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
54
28
Salem
என்னப்பா நீங்க அவங்கள திட்றீங்க... அவங்க உங்கள சொல்றாங்க....
யார் தான் தப்பு பண்ணது... 😅

தான் தாய் என்றே மது க்கு தெரியாதா...
அது எப்படி dr...🤔

சித்தார்த்... அஹ் ஏமாத்திட்டாங்களா... 🙄

ஆதித் குட்டி... கியூட்... 😍
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
குழப்பமும் கேள்விகளும் எனை பாரபட்சம் இல்லாமல் சூழ்ந்து விட்டதே ஆத்தரே 😭😭😭

அப்படியென்றால் வர்மன் வேறு ஒருத்தியையா திருமணம் செய்தான் ??? யாராவள் ???
ஆதித்தின் தாய் வேறாய் இருக்க, மதுவை அவனின் தாயாய் காட்ட காரணம் என்னவோ ???
மகனின் தாயில்லா நிலைக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம் ???
உண்மையில் விட்டு சென்றது வர்மனா இல்லை மதுவா ???
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

மது ஒரு தாயா 😳😳😳

வர்மனின் பேச்சில் அனல் அடிக்க, மதுவின் செய்கை பயம் அறியா நிமிர்வு :sneaky::sneaky::sneaky:

"ஆதித்திய வர்மன்" பெயரின் பின்னான பழைய ஞாபகங்கள் என்னவோ 🧐🧐🧐