மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 8
இளம் ரோஜா வண்ண சுடிதாரில், சிகப்பு நிற ரோஜா பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்டிருக்க, புதிதாக பூத்த மலராக காற்றில் நறுமணம் கமழ, புத்துணர்வுடன் படியிறங்கினாள் மதுரவர்ஷினி.
படி இறங்கி வரும் பனியில் நனைந்த மலராய் மலர்ந்திருந்த தன் மகளின் அழகை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சிவானந்தன்.
மூன்று வயதிலேயே தன் தாயைப் பறிகொடுத்த மதுரவர்ஷினிக்கு தாய்க்குத் தாயாக, தந்தைக்கு தந்தையாக ஒரு தாயுமானவனாக வாழ்ந்து வருபவர் சிவானந்தன்.
வெளியே வானில் வட்டமிடும் பருந்துகளுக்கு பயந்துகொண்டு தன் மகளை தன் சிறகுகளுக்குள்ளேயே அடைகாத்து வளர்த்து வருபவர்.
தன் மகளுக்காகவே மறுமணம் செய்து கொள்ளாதவர். தான் மறுமணம் முடித்தால் மகளின் பாசத்தில் பங்கு கேட்க வேறு ஒருத்தி வருவாளோ? என்று அச்சம் கொள்ளும் ஒரு பாசக்காரத் தந்தை.
மதுரவர்ஷினியின் விருப்பங்களை எல்லாம் காரண காரணமின்றி நிறைவேற்றி வைப்பவர்.
தன் மகளின் பாசத்தை யாருக்கும் பங்கு தர விரும்பாத வெறித்தனமான அன்பு உடையவர்.
அவர்களது உலகத்தில் வேறு யாருக்கும் அனுமதி இல்லாது இருந்தது.
விழிகளில் அன்பு பெருக தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையைப் பார்த்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தாள் மதுரவர்ஷினி.
“ அப்பா... தினமும் என்ன இதே பார்வை? வாருங்கள் சாப்பிடப் போகலாம்” என்றாள் செல்லமாக சிணுங்கியபடி.
அந்த செல்வச்செழிப்பான வீட்டின் ஒவ்வொரு பொருளும் செல்வத்தின் வளமையைக் காட்டியது.
பரம்பரைத் தனாதிபதியான சிவானந்தத்திற்கு ஏவல் புரிய பல வேலைக்காரர்கள் இருந்தாலும், மகள் கையால் பரிமாறப்படும் உணவை உட்கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை மதுரவர்ஷினி காய்ச்சலால் அவதியுற்று இரண்டு நாட்கள் படுக்கையில் இருந்து எழாமல் இருந்தபோது, அந்த இரண்டு நாட்களும் மகளுக்கு உணவை ஊட்டி விட்டு தான் உணவு உட்கொள்ளாமல் இருந்தவர்.
மதுரவர்ஷினி உணவு மேஜையில் உணவினைப் பரிமாற, இன்முகத்துடனே உண்டு முடித்தார் சிவானந்தன்.
தன்னை எப்பொழுதும் ஒரு இளவரசியாக உணரச் செய்யும் தனது தந்தையின் பாசத்தை, கர்வமாகவே உணர்வாள் மதுரவர்ஷினி.
இளங்கலை மருத்துவப் படிப்பில் இறுதியாண்டை தொடப்போகும் மாணவி மதுரவர்ஷினி. அவளுக்கு என்று பெரிதாக நண்பர்கள் வட்டமும் கிடையாது. யாரிடமும் சிரித்து பேசும் வழக்கமும் இல்லாதவள்.
மொத்தத்தில் அமைதியின் திருவுருவாய் திகழ்பவள்.
“ கல்லூரிக்கு சென்று வருகிறேன் அப்பா” என்று கூறிய மகளுக்கு இன்முகத்துடன் கையசைத்து வழியனுப்பி வைத்தார் சிவானந்தன்.
சாலையில் மகளின் கார் கடந்து செல்லும் வரையில் விழி அகலாது பார்த்து நின்றார்.
காரினுள் ஏறியதும் மதுரவர்ஷினி தன் புத்தகத்துடன் பேச ஆரம்பித்தாள்.
உடல் சார்ந்த மருத்துவம் மட்டுமே படிக்கும் அவளை தன் உள்ளத்தையும் படிக்கவைக்க எதிர் திசையில் இருந்து சித்தார்த் வர்மனும் மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி வந்தான்.
தாய் தந்தையரை பறிகொடுத்துவிட்டு, உறவினர்களால் கைவிடப்பட்டு, விவேகானந்தா கேந்திரா டிரஸ்டின் மூலம் பள்ளிப்படிப்பு படித்தவன். மாநிலத்தில் முதலாவதாக வந்தவனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து இன்றுவரை அவனுக்கு ஆதரவு தருபவர் அந்த டிரஸ்டின் நிர்வாகி குமரகுருபரர்.
மருத்துவ படிப்பில் இளங்கலையை, பல்கலைக்கழக தங்க பதக்கத்துடன் முடித்தவனின் திறமையைக் கண்டு மிரண்டவர், அவனது விருப்பப்படியே முதுகலை மருத்துவப் படிப்பை இதய நோய் சார்ந்த துறையில் படிக்க இன்று வரை உதவி செய்து வருபவர்.
தான் வளர்த்த குழந்தைகளிலேயே அறிவும், சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும், அமைதியும் நிறைந்த சித்தார்த் வர்மனை காணும் போதெல்லாம் பெருமையில் நெஞ்சம் விம்மும் அந்த வளர்ப்புத் தந்தைக்கு.
தங்களது படிப்பிலேயே இத்தனை வருடங்கள் கவனமாக இருந்தவர்களை கவனம் சிதறச் செய்ய பதறிய படி விதியும் ஓடிவந்தது.
இறுதி வகுப்பிற்கு அன்று ஆசிரியர் வராத காரணத்தினால், மாணவ மாணவியர் விளையாட்டு மைதானத்தின் அருகில் குழுமி இருந்தனர்.
பொழுதுபோக்கிற்காக மாணவியர் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் வட்டமிட்டு மகிழ்ந்தனர்.
பார்த்துக் கொண்டிருந்த மதுரவர்ஷினிக்கும் ஸ்கூட்டி பழக வேண்டும் என்ற ஆசை வந்தது.
விழிகளில் பல வர்ணஜாலங்கள் காட்டியபடி அந்தக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.
மதுரவர்ஷினியின் வகுப்புத் தோழி அவளைப் பார்த்து, “வர்ஷினி நீயும் வேண்டுமானால் ஒரு ரவுண்ட் அடிக்க வாயேன் “ என்றாள்.
“ நானா?.... “ நயனங்கள் விரிந்தது.
“ சும்மா வாப்பா. ஒன்னும் பயம் கிடையாது. நம்ம நந்தினி கூட இன்னைக்கு தான் ஓட்ட பழகினாள்” என்று
மதுரவர்ஷினியை உற்சாகப்படுத்தினாள்.
தயக்கத்துடன் எழுந்தபடி ஸ்கூட்டியில் அமர்ந்தாள். பொறுமையாக அவளது வகுப்புத் தோழி அவளுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
அனைத்தையும் தன் மனதில் வாங்கிய மதுரவர்ஷினி ஸ்கூட்டியை மெல்ல உயிர்ப்பித்தாள்.
அவளின் பொறுமையைக் கண்ட அவளது வகுப்புத் தோழர்கள், அவளை சீண்ட எண்ணி,
“ வர்ஷினி வீல் சுத்துது வீல் சுத்துது... “ என்று கத்திக் கூப்பாடு போட,
பதட்டத்தில் ஆக்சிலரேட்டரை முறுக்கினாள். வண்டி தாறுமாறாக விளையாட்டு மைதானத்தின் எல்லையை நோக்கிப் பறந்தது.
நிச்சயம் தான் கீழே விழப் போகிறோம் என்று எண்ணிய மதுரவர்ஷினி, அருகில் திருப்பத்தில் இருக்கும் அந்த மரத்தைக் கண்டாள்.
மரத்தை பிடித்துக் கொண்டு வண்டியை கீழே விட எண்ணி, இழுத்துச் சென்ற வண்டியினோடே, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு அந்த மரத்தினை கெட்டியாக பிடித்துக் கொண்டு வண்டியை கீழே விட்டாள்.
பயத்தில் அவளது இதயம் வேகமாக துடித்தது. பதட்டத்தில் அந்த மரத்தோடு முகத்தை இறுக்கினாள்.
அவள் தழுவத் தழுவ மரமும் இறுகிக் கொண்டே வந்தது.
மதுரவர்ஷினியின் செவியில் அந்த மரத்தின் இதயத்துடிப்பு கேட்டது.
திடுக்கிட்ட அவள் அந்த மரத்தினை தன் கைகளால் தடவி பார்த்தாள். தேக்கு மரம் வழுவழுவென்று வழவழத்தது.
“வேப்பமரம் எப்பொழுது தேக்குமரம் ஆயிற்று? “ என்று சிந்தனை செய்தவள் தன் தலையை உயர்த்தி மரத்தினை பார்த்தாள்.
இரு புருவங்களையும் மத்தியில் சுருக்கியபடி தன்னை முறைத்துப் பார்க்கும் அந்த ஆறடி ஆண்மகனை கண்டு விதிர் விதிர்த்துப் போனாள்.
அவனை விட்டு தள்ளி நிற்க வேண்டும் என்ற ஆறு அறிவும் கெட்டு நின்றாள்.
பூங்கொடி ஒன்று தேக்கு மரத்தை பின்னிப் படர்ந்தது போல் நின்றவளைப் பார்த்து,
“ எக்ஸ்க்யூஸ் மீ.... “ என்றான் சற்றே எரிச்சல் கலந்த குரலில்.
தன் தந்தையின் கைகளைத் தவிர வேறு ஒருவனின் நெஞ்சினில் பாதுகாப்பினை உணர்ந்தவள் மனதிற்குள் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சி பறக்கத் துவங்கியது.
விழிமலர்த்தி பார்த்தவள், கன்னங்கள் செம்மையுற, நாணம் மேலிட, இயற்கைக்குப் புறம்பாக அந்த சூரியனை பார்த்து இந்த தாமரை வேறு திசை திரும்பியது.
மதுவர்ஷினியின் வகுப்புத் தோழர்கள், தூரத்தில் பதறியபடி ஓடி வர, தன் உள்ளங்கைக்குள் கட்டை விரலை வைத்து அழுத்தி தன்னை சமன் செய்தாள் மதுரவர்ஷினி.
அவளை சட்டை செய்யாமல் தன் சட்டையின் சுருக்கங்களை நீவியபடி முன்னேறினான் சித்தார்த் வர்மன்.
அவனின் பெயர் கூடத் தெரியாமல், காதல் போரில் புறமுதுகிட்டு ஓடும் அந்த வேந்தனை விழியால் சிறையெடுக்க வேந்தனின் வேல் விழியாள் இமை குடை திறந்து கண்வழியே மின்னலைப் பாய்ச்சினாள்.
அந்தோ பரிதாபம்! தீண்டும் மின்னலை தாண்டிச் சென்றது அந்த வானம்.
“ வர்ஷினி ஆர் யூ ஓகே? “ என்ற குரல்களில் நனவுலகிற்கு வந்தாள்.
“ நத்திங் ஐ அம் பைன்.. “ என்றாள் அவசரமாக.
கீழே பரிதாபமாக விழுந்து கிடந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கூட்டமும் நகர்ந்து கலைந்தது.
தன் படுக்கை அறையில், புத்தகங்கள் சூழ கனவுலகில் சஞ்சரித்து இருந்தாள் மதுரவர்ஷினி.
பெண்மையின் பூக்களை மலர செய்தவனோ, தனது ஆராய்ச்சி கட்டுரையை அங்கே எழுதிக் கொண்டிருந்தான்.
இங்கே பெண்ணவளோ தான் மோதியவனைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை மனதால் எழுதிக் கொண்டிருந்தாள்.
திண்ணென்ற மார்பில் நான் கன்னம் சாய்த்ததால், இதயம் மெட்டிசைக்க, அவன் உடலில் ஓடிய குருதியின் வெப்பம் என் கன்னங்களில் பாய்ந்து சிவக்கச் செய்ததே... அந்த நொடியை நான் எப்படி மறப்பேன்.
என் பத்து விரல்களும், அவள் முதுகோடு உறவாடியதே... அந்த கணத்தை நான் எப்படி உடைப்பேன்.
என் இதழ் தேன் அவன் இதய பூவில் சேர்ந்ததே..
அதை எப்படி நான் மீட்டெடுப்பேன்.
என் ஆடை அவன் ஆடையில் வாசம் வாங்கியதே... அதை எப்படி நான் தொலைப்பேன்.
தனிமையான அவளது அறையில் இன்று அவனது நினைவுகளும் சேர்ந்துகொண்டு மதுரவர்ஷினியை காதல் சுழலுக்குள் சிக்க வைத்தது.
தனது நண்பர்களோடு சேர்ந்து அறையை பகிர்ந்து கொண்ட சித்தார்த் வர்மன், அனைவரும் சாப்பிடுவதற்கு வெளியே கிளம்ப, இவனையும் கூட வரும்படி வற்புறுத்தினர்.
ஆராய்ச்சிக் கட்டுரையை மூடிவைத்துவிட்டு, தாங்கியில் மாட்டியிருந்த தனது சட்டையை எடுத்தான்.
சட்டையை தன் கை வழியே நுழைக்கும் போது, பூ வாசத்தை அவன் நாசி நுகர்ந்தது. தன்னை மீறிய அனிச்சை செயலாக சுவாசத்தை இழுத்து வாங்கினான்.
அவனது நுரையீரல்களில் அந்த வாசம் நிறைந்து வழிந்தது.
யோசனையோடு புருவம் சுருக்கியவனின் நினைவடுக்குகளில் மருண்ட மான் விழிகள் வந்தது.
அழுத்தமான, சிரிப்பே அறியாத அந்த ஆறடி ஆண்மகனின் இதழ்கள் சிறிது விரிந்து கொடுத்தன.
தன் இதயத்தில் முட்டி மோதிய அவளது ஸ்பரிசத்தை தன் உள்ளங்கையால் தடவிப் பார்த்தான்.
இந்த இதய நிபுணனின் இதயமும் பலவீனமாகத் தொடங்கியது.
“மதூ.... மதுரவர்ஷினி.... மதுரவர்ஷினி... “ தந்தையின் குரல் காதில் விழுந்தாலும் அது அவளுடைய மூளையை சென்றடையவில்லை.
மூச்சடைத்தவனின் நினைவுகள் மூளையையும் அடைத்துவிட்டது.
என்றும் தன் குரலுக்கு துள்ளியபடி ஓடி வரும் மகள் இன்று வராததைக் கண்டு யோசனையில் கண்களைச் சுருக்கினார் சிவானந்தன்.
மாடி ஏறியவர், மதுவர்ஷினியின் அறையை கைகளால் தட்டினார்.
கதவு திறக்கப்படாததால், பலத்த குரலில் கத்திக் கொண்டே கதவினை ஓங்கித் தட்டினார்.
திடுக்கிட்ட மதுரவர்ஷினி ஓடி வந்து அறையின் கதவை திறந்தாள்.
நெற்றியில் வியர்வை பூத்தபடி நின்றிருந்த தன் தந்தையைக் கண்டு, மானசீகமாக தன் தலையில் கொட்டு ஒன்று வைத்துக்கொண்டாள்.
“ அப்பா.... என்னப்பா..... “ என்றாள்.
பதில் பேசாத அவள் தந்தையோ தன் கைகளை திருப்பி கை கடிகாரத்தை பார்த்தார்.
தன் நாக்கின் நுனியை இதழ் ஓரத்தில் கடித்தவாறு, “சாரிப்பா.... ஆராய்ச்சி செய்ததில் உங்கள் குரல் சரியாக காதில் விழவில்லை.
இதோ ஒரு நொடியில் வருகிறேன் “ என்று குறுகுறுத்த மனதுடன் தன் தந்தையை முந்திச் சென்று மாடிப்படிகளில் கீழிறங்கினாள்.
மகளின் நடவடிக்கைகளில் சுருக்கென்று ஒரு முள் இதயத்தில் குத்தினாலும், சமாளித்தபடி சிரித்துக்கொண்டே உணவு அறையை நோக்கிச் சென்றார் சிவானந்தன்.
உணவு மேசையில் மதுரவர்ஷினியின் கைகள் உணவினைப் பரிமாறினாளும், இதயத்தை பரிமாறியவனின் உதயத்தை எதிர் பார்க்க ஆரம்பித்தாள்.
மின்னல் வெட்டும்...