• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 46

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
பத்மாவைப் பொருத்தமட்டில் தன் கணவன் கவர்ச்சியானவன் என்பதை மறுப்பதற்கில்லை. அவனுடன் வெளியே செல்லும்போது இளவயது பெண்களின் விழிகள் அவனைச் சில நொடிகள் வட்டமிடுவதைக் கண்கூடாகக் கவனித்திருக்கிறாள். அவளுக்குமே அவனைக் கண்ணாரப் பார்க்க பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். தாடியும் மீசையுமாக உடற்பயிற்சியினால் கரங்களில் புடைத்திருக்கும் நரம்புகளோடு, காண வேண்டுமென்றால் சற்று முரடன் மாதிரி தோன்றலாம். அவனது மனம் அவ்வுருவத்திற்கு முற்றிலும் மாறானது.

தன்னைப் போல தொட்டதுக்கெல்லாம் கோபப்படாத அமுல் பேபி அவன். அவளின் மீது ஈடு இணையில்லாத அன்பும் அக்கறையும் உள்ளவன். அதைப் பலமுறை நிரூபித்தும் காட்டியிருக்கிறான். அது மனைவி என்ற உரிமையினால் வந்ததாகக் கூட இருக்கலாம். இப்போது அவன் சோஃபியா மற்றும் மேரிக்குச் செய்துள்ள உதவியோ தன்னலமற்றது; எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராதது. இந்தக் கனிவும் கருணையும் இன்றைய உலகில் எத்தனை பேருக்கு உள்ளது எனக் கேட்டால் மிக மிகச் சொற்பம் தான். அந்தச் சொற்பத்தில் கண்டெடுத்த முத்தாக அவனின் பிம்பம் அவளது உள்ளத்தில் உயர்ந்து நின்றது.

அவள் அவன் வரவிற்காகக் காத்திருந்து ஓய்ந்தே போனாள் "ராம் அண்ணா, அவரு இப்போதைக்கு வர மாரி தெரியல. வாங்க, நாமச் சாப்டுவோம். பசி வயித்தக் கிள்ளுது"

"சாப்புடலாம்"

"ஹேமா குட்டி, அங்கிள் கூட போய் ஹேன்ட்வாஷ் பண்ணிட்டு வா"

"ச்சேரி, சிச்சி"

ராமும் இவளும் கைக்கழுவி வருவதற்குள் பத்மா தட்டில் சோறள்ளி வைத்திருந்தாள்

ஒரு வாய் உண்டபடி "நல்ல டேஸ்ட்டுல்ல, ண்ணா. இருந்தாலும், நீங்க அன்னைக்குச் செஞ்ச மட்டன் பிரியாணி அளவுக்கு வரல. மறுபடியும் எப்போ செய்வீங்க?" என்று கேட்டிட்டாள்

"வர்ற சன்டே மச்சானுக்காக ஸ்பெஷலாப் பண்ணிரலாம்மா. அவன் பர்த்டே வருதுல்ல"

"பர்த்டேவா? எனக்குத் தேதியே நெனவில்ல. நல்லவேள ஞாபகப்படுத்துனீங்க"

"என்ன ப்ளான்?"

"சர்ப்ரைஸ் பண்ணலாம் தெரியாது, ண்ணா. எனக்கும் யாரும் பண்ணதில்ல. நானும் யாருக்கும் செஞ்சதில்ல. கண்டிப்பா, உங்க ஃப்ரென்ட்ஸலாம் கூப்டு கேக் வெட்டிரலாம். அவருக்கு என்ன கிஃப்ட்டுத் தர்றதுனு யோசிக்கணும்?"

"எப்புடியும் வாட்ச்சு, ஷூ, சன்கிளாஸ், ஷர்ட்டு இதுல எதாவது ஒன்னாத் தான் இருக்கும். பசங்களுக்கு வேறத் தர்றதுக்கு என்னருக்கு? சீக்ரம் சூஸ் பண்ணு. இன்னும் த்ரீ டேஸ் பாக்கி"

"டன் டன். என்னோட சைடு அங்கையும் ரேகாவும் தான். நீங்க என் சார்பா, லாஸ்ட் ஃப்ரைடே வீட்டுக்கு வந்துருந்தாங்கல்ல, அவங்களலாம் இன்வைட் பண்ணிட்றீங்களா?"

"ஓகே. அப்டியே நான் ஆஃபிஸ் போற வழியில ஆர்டர் குடுத்துட்றேன். என்ன கேக் வாங்கலாம்?"

"எப்டியும் விக்ரம் சாப்டப் போறதில்ல. நம்ம டேஸ்ட்டுக்கு ப்ளாக் ஃபாரஸ்ட் வாங்கிடலாம், ணா. செம்மயா இருக்கும். மத்தபடி, அவரு மூஞ்சுல அடிக்குறதுக்குத் தனி கேக்க ஒதுக்கி வச்சுருங்க. எப்பவும் மளிகை, காய்கறி பட்ஜட்ட எப்படி ஷேர் பண்ணிப்பீங்க?"

"நான் மாசத்துக்குக் கணக்கு எழுதி வைப்பேன். எவ்ளோ செலவாகுதோ பிஃப்ட்டி பிஃப்ட்டி பிரிச்சுப்போம்"

"இந்தத் தடவ ஒன் இஸ் டு த்ரீயா பிரிச்சுக்கலாம், ணா. நான், அக்காலாம் இருக்கோம்ல. பர்த்டே பார்ட்டிக்கும் செலவிருக்கு. பழைய கணக்கு ஒத்து வராது. அந்த த்ரீ பார்ட்ஸ நாங்க பே பண்ணிட்றோம்"

"அண்ணா, அண்ணான்னுட்டுப் பிரிச்சுப் பேசுற. நாம அப்டியா பழகிருக்கோம், ப்ரியா. இவ்ளோ நாள் ஒரே ஃபேமிலின்னு நான் தான் தப்பா நெனச்சுட்டேன் போல. இப்போ புரிஞ்சுடுச்சு; எல்லாம் வேற வேறன்னு" அவன் சிரித்துக் கொண்டே தான் சொன்னான்; அந்தச் சிரிப்பிலும் வலி ஒளிந்திருந்தது.

"இப்படிலாம் பேசுனா நான் அழுதுடுவேன் பாத்துக்கங்க. படத்துல சென்டிமென்ட் சீன் பாத்தாலே என் மனசு தாங்காது. தெய்வத்திருமகள்ல அந்த க்ளைமேக்ஸ் கோர்ட் சீன் பாத்து எத்தன முற அழுதுருக்கேன், தெரியுங்களா? இதுல நீங்க வேற... ச்ச்ச, வேறயும் இல்ல; தனித்தனியும் இல்ல; நாமலாம் ஒன்னு. இந்தக் கணக்க நீங்களே பாத்துக்கங்க. நான் தலையிட மாட்டேன்" பத்மாவின் விழியோரம் இரு சொட்டு நீர் கசிய அழுந்த துடைத்தாள்

"அய்யோ, சிச்சி. கண்ணு மையலாம் இலுப்புற. நல்லாவே இல்ல" ஹேமா அவளைப் பார்த்துவிட்டுக் கூற

ராம் எழுந்து அருகே போனான் "இதுக்குப் போயா அழற? நான் சும்மா விளயாட்டுக்குப் பேசுனேன், ப்ரியா"

"எவ்ளோ பெரிய வார்த்த சொல்லிட்டீங்க, ண்ணா. உங்கள விட சின்னவ நானு. எதுவும் தப்பாப் பேசிருந்தா மன்னிச்சுடுங்க"

"சரி, அழாம. என்னைப் பத்தி விக்ரம் உன்ட்ட என்ன சொல்லி வச்சுருக்கான்னு தெரியல. எனக்கு வாழ்க்கைலக் காசு பணம் முக்கியமில்ல. ஒருத்தங்களப் பிடிச்சுப் போச்சுனா, அவங்களுக்காக உயிரக் கூட தருவேன். அந்த லிஸ்ட்ல நீயும் இருக்க. இனிமே, செப்பரேட்டா பாக்காத"

"ஸாரி"

"பத்மா, உன்ட்ட ஒரு விஷயம் பேசணும்" ரேகாவைப் பற்றிக் கூறிடவே அவன் வாயெடுத்தான்

"என்னது, ண்ணா?" அவள் நிமிர்ந்து நோக்கி வினவிட

அக்ஷதாவுடன் விக்ரமும் உள்ளே வந்திட்டான் "என்னடா இங்க நடக்கு? வாசல் வரைக்கும் பிரியாணி ஸ்மெல் வளைச்சு வளைச்சு அடிக்குது"

ராமிடம் கேட்க வேண்டிய சேதியை பத்மா அக்கணமே மறந்து போனாள் "மேரி அக்கா பிரியாணி கொடுத்துவிட்டாங்க. பசி தாங்கலன்னு இப்போ தான் சாப்டோம். உங்களுக்குத் தனியா வெஜ் பிரியாணி இருக்கு. இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் எங்கப் போனீங்க?"

விக்ரம் வதைபடாமல் நழுவ முனைந்தான் "அக்காவயே கேளு, சொல்லுவாங்க"

"டீ, நான் பேசுறது கேக்குதா உனக்கு?" அக்ஷதா இன்முகமாய் வினவிட்டாள்

"எல்லாம் உன் செல்லப் பொண்ணு பண்ண வேல. ஈவ்னிங் போல சரியாகிருச்சு""

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு, ப்ரியா"

"வாவ்... வாழ்த்துக்கள், அங்கயற்கண்ணி. எப்புட்றி?"

"எங்கூட டிப்ளமோ படிச்ச பொண்ணுட்ட ஒரு வார்த்த முன்னவே சொல்லி வச்சுருந்தேன். அவ வேல செய்யுற இடத்துலயே அர்ஜென்ட் வேக்கன்சி இருக்குன்னு கால் பண்ணா. அதான் போய்ப் பாத்தேன்; பேசுனேன். வெள்ளிக்கெழம வரச் சொல்லிட்டாங்க. எக்ஸ்பீரியன்ஸ் கம்மிங்குறதாலச் சம்பளம் இப்போதைக்குக் குறைவு தான். போக போக அதிகப்படுத்துறேன்னு சொல்லிருக்காங்க"

"சூப்பர், அக்கா" இம்முறை வாழ்த்தியது ராம்

"அத்தான் இம்புட்டு லேட்டாய்டுச்சா, அங்கை?"

"இல்ல. விக்ரம அழைச்சுட்டுப் போய் வீடு பாத்துட்டு வந்தேன்"

"யாருக்கு?"

"எனக்கும் ஹேமாக்கும்"

"என்ன? என்னங்க இது? விக்ரம்... சைலன்ட்டா இருந்தா என்ன அர்த்தம்? என்னைக் கேக்காம ஏன் இப்டிச் செஞ்சீங்க?" இடைவெளியே விடாமல் கேள்விகளாய் வெடிக்க ஆரம்பித்தாள் ப்ரியா

"நான் சொன்னேன், மா. ஆனா..." அவன் விளக்க முற்பட

"பேசாதீங்க"

"ப்ரியா..." அங்கையும் சமாளிக்க முயன்றாள்

"அக்கா, ப்ளீஸ்... எல்லாம் முடிவெடுத்தாச்சுல்ல. எனக்கு எந்த எக்ஸ்ப்ளனேஷனும் தேவயில்ல"

"ப்ரியா, ப்ரியா..." இவள் அழைக்க அழைக்க, அவள் அறைக்குள் சென்று மறைந்தாள்

"நான் போனா அடிச்சுடுவா. நீங்களே சமாதானப்படுத்துங்க, போங்க" என்று சொன்ன விக்ரம் உணவு மேசையிலேயே அமர்ந்துவிட்டான்

தமக்கையும் தங்கையும் அவர்களது பிணக்கைப் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் கவலையைப் புறந்தள்ளினான்; உணவுண்டு முடித்த பிறகும் பத்மாவின் பக்கம் எட்டிக் கூட பாராமல் ராமின் அறையில் அடைக்கலம் புகுந்தான். இங்கோ பத்மா தூக்கி வைத்த முகத்தை ஒரு இஞ்சு அளவும் இறக்கினபாடில்லை.

"என் பாசமுள்ள தங்கச்சி. நான் சொல்றதக் கேளேன்டி"

"முடியாது"

அவளின் இரு கரங்களையும் தன் கரத்தோடு கோர்த்தவாறு அக்ஷதா இறங்கிப் பேசினாள் "நீயும் என்னை மனுஷியா மதிக்கல இல்ல. எனக்கு என்னோட லைஃபப் பத்தித் தீர்மானிக்குற உரிமை இருக்குன்னு நீ தானச் சொல்லுவ"

"ஆமா, அதுக்கு... ஹேமாவும் நீயும் மட்டும் எப்டிக்கா? உங்களுக்குன்னு ஒரு தொண வேணாமா?"

"நான் இப்டியே துணைய எதிர்பாத்துட்டு உக்காந்துட முடியுமா? அதெல்லாம் யோசிச்சன்னா பழய ஜெயில்லயே போய் மாட்டிப்பேன். எனக்கு இந்தச் சுதந்திரம் வேணும். அதுக்காகத் தான இவ்ளோ போராட்டமும். சுதந்திரத்துக் கூடவே நெறயப் பொறுப்பும் ஆபத்துங்களும் வரும்னு நல்லாவே புரியுது. அத்தனையும் மனசுல வச்சுட்டுத் தான் சொல்றேன்; என்னை எம்போக்குல விட்டுரு. ஹேமாவ என்னால டேக் கேர் பண்ணிக்க முடியும். எனக்கெதும் உதவின்னா கூப்புட்ற தூரத்துலத் தான நீயும் விக்ரமும் இருக்கீங்க. எனக்கு இந்த சப்போர்ட்டே போதும், பத்மா. என்னை நம்பு"

"எனக்கு உம்மேல நெறயவே நம்பிக்க இருக்கு, க்கா. அதுக்குள்ள நீ வேறயா போறேன்னு சொல்லவும், எல்லாமே சீக்ரம் நடக்குற மாரி ஃபீல் ஆகுது"

"வாழ்க்கைலச் சில விஷயங்கள் நின்னு நிதானமா நடக்கும். சிலது கண்ண மூடித் தொறக்கறதுக்குள்ள நடந்து முடிஞ்சுடும். எப்பவும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். எனக்குக் கூட நீ இப்போ தான் பருவமடஞ்ச ஞாபகம். அக்கா, நான் சாகப் போறேன் போல; எனக்கு ரத்த ரத்தமா வருதுன்னு அழுதுட்டே சொன்னியே; மண்டு பாப்பா. இப்ப என்னடான்னா நெடுநெடுன்னு வளந்து நிக்குற; புருஷன் மொதக் கொண்டு எல்லாத்தயும் அதட்டி வைக்குற. ஆன்?"

"அக்கா..." அவள் வெட்கத்தில் சிணுங்கினாள்

"விக்ரம் மேல எந்தத் தப்பும் இல்ல. நாந்தான் புடிவாதமா வீடு பாக்கப் போகணும்னு நின்னேன். அவுரு கூட வந்தாரு அவ்ளோ தான். இதுக்கே உன்ட்டப் பேசி டிசைட் பண்ணலாம்னு சொன்னாரு. அவசரப்படுத்துனது நானு. என் சூழ்நில அப்டியிருக்கு. விக்ரம்ட்டக் கோவத்தக் காட்ட வேணாம்"

"சர்ரிரி..."

"உன் சரியே சரியில்லயே"

"அவர்கிட்ட அப்பப்போ டென்ஷனக் கொட்டிடுவேன். இந்த விஷயமாக் கோவப்படல. ஓகேவா?"

மெல்லியதாக முறுவலித்த அங்கை தங்கையின் கரங்களைச் சற்றே அழுத்தமாகப் பிடித்தாள் "பத்மா, உன்னை ஒரு விஷயம் கேப்பேன். மறைக்காமச் சொல்லணும்"

"கேளு, அங்கை"

"அம்மாக்கு இதப் பத்தித் தெரியாதுங்குறதால, அவங்க ஸ்தானத்துல இருந்து கேக்குறேன். ஹ்ஹூம்... ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா, ப்ரியா?"

"ஹேப்பியா தான் இருக்கோம்"

"ஒன்னா இருந்து... இருக்கீங்களா?"

"ஒன்னாத் தானேடி இருக்கோம்"

"ம்ச்ச். அதில்ல..."

"ஆ, கைய ஏன்டி போட்டு அழுத்துற? வலிக்குது, அங்கை"

"சரி, சரி, விட்டாச்சு. ரெண்டு பேரும் ஒன்னு மண்ணா ஆனீங்களா? இதுவும் புரிலயா? உங்களுக்கு இடயில அது நடந்துச்சாடி?"

"அதுவா? ம்ம்ம்... ம்ஹ்ஹும்... ம்ம்ம்ம்"

"ஒன்னு இப்டி ஆட்டி வையு. இல்ல, அப்டி ஆட்டு. எதுக்குக் குறுக்க மறுக்க எருமயாட்டம் தலயாட்டுற"

"ம்ஹூம்ம்"

"கேக்க ஆளில்லன்னு திரியுறியா நீயு? பாப்பு, வெளாடாத. அவரு உனக்கு என்ன கஷ்டம் குடுத்தாரு? வயசு முப்பதுக்கு மேலக் கூட கூட, ப்ரெக்னன்சில இடஞ்சலும் கூடிட்டே போகும். அதுக்கு முன்ன ஆகுற வேலையப் பாரு. ஓவரா துடுக்குத்தனம் பண்ணாத, பட்டு. சொல்றதச் சொல்லிட்டேன். அப்றம் உன் இஷ்டம்மா"

பூட்டி வைத்த மனதின் சாவி எங்கோ!