• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 48

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
49
0
6
Tamilnadu
தன் கணவன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போவதை, பத்மப்பிரியா மௌனமாகப் பார்த்தாள்; ஆதர்ஷோடு கூடவே எதிர்பாராவிதமாக அவளது கல்லூரிப் போராசிரியரும் வந்து நிற்க, அவர்களைக் கவனித்து வழியனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அந்தப் பேராசிரியைக்கு பத்மாவும் ஆதர்ஷும் நன்றாகத் தெரிந்த முகங்கள் தாம். இவர்கள் முதுவறிவியல் முடித்த மறு ஆண்டே கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்றவர். அவர் பல படிகளைத் தாண்டி இந்நிலைக்கு உயர்ந்திருப்பதை எண்ணிப் பூரித்துப் போவாள் பத்மா. அவர் தான் அவளுடைய ஊக்க மருந்து. இன்று அவரைக் கண்டதும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி எழுந்தது. ஆதர்ஷும் அவளும் சேர்ந்து தனது குருவிற்கு விருந்தே வைத்துவிட்டனர். அவ்விருந்து நிகழ்வில் விக்ரம் கலந்து கொள்ளாமல் போனது பத்மாவிற்கு வருத்தத்தைத் தராமல் இல்லை.

ஆசிரியரை வழியனுப்பி வைத்த பின்னர் இவர்கள் இருவரும் பெண்களுக்கான ஆடையகத்துக்குச் சென்றனர். ஆதர்ஷின் திருமண நாள் அடுத்த வாரம் வரவிருப்பதால், அவன் தன் மனைவிக்கு நல்ல உடையாக எடுக்க நினைத்தான். அதற்குத் துணைபுரியவே பிரியா உடன் சென்றாள்; அவளுக்கு ஆடை எடுத்து முடித்து, ஆரண்யாவிற்கு ஒரு அழகிய கவுனைப் பரிசாக வாங்கி அளித்தாள். ஆதர்ஷும் தோழியை வெறுங்கையோடு அனுப்ப விருப்பமின்றி ஒரு புடவை எடுத்துத் தந்தான்.

ஆதர்ஷையும் அனுப்பி வைத்தவள் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். அவள் கையில் துணிப்பையுடன் நுழைவதைக் கவனித்தபடி விக்ரம் வாசலில் தான் நின்றான். நீண்ட நேரம் கழித்து அவன் அறைக்குள் படுக்கச் செல்ல, அவனுக்காகவே விழித்திருந்தாள் பத்மா.

"ஏன் இப்படிப் பண்ணீங்க?"

"என்ன பண்ணாங்க?"

"எனக்குக் கோவம்லாம் இல்ல. நிதானமாவே கேக்குறேன். எதுவும் சொல்லாம நீங்க பாட்டுக் கிளம்பி வந்துட்டா நான் எப்டி எடுத்துக்குறது? விக்ரம் எங்க போனாருன்னு ஆதர்ஷ் எத்தன மொற கேட்டுட்டான். பதில் சொல்லி மாளல"

"..."

"என்னோட ரோல் மாடல் கூட வந்துருந்தாங்க. அவங்கள்ட்ட உங்கள இன்ட்ரோ பண்ணலாம்னு பாத்தா, வண்டியத் திருப்பிட்டுப் போய்ட்டீங்க. எதோ அவசர வேல போல; திரும்பி வருவீங்கன்னு பாத்தா. ஆளயும் காணும்; அட்ரஸயும் காணும்"

"அந்த மேடமத் தான் பாத்தனே"

"பாத்தா போதுமா? யாரு என்னனு தெரிய வேணாமா?"

"அதலாம் நீ முன்னாடியே சொல்லிருக்கணும். என் லைஃப்ல அவங்க அவங்களாம் இருந்தாங்க; அவங்கள்ல இவங்க இவங்க ரொம்ப இம்பார்டன்ட்; ஒரு நாள் நான் உங்களுக்கு நேர்லக் காட்றேன்னு ரெடி பண்ணி வைக்கணும். திடீர் திடீர்ன்னு யார் யாரையோ காட்டி ஷாக் கொடுத்தீனா, என்னால என்ன பண்ண முடியும்? அவங்களப் பத்தி ஒரு வெவரமும் தெரியாம, நீங்க பேசும்போது வாயவே பாத்துட்டு உக்காந்துருக்கச் சொல்றியா? அது ஒரு மாரி அன்கம்ஃபர்ட்டபுளா இருக்கு"

"ஏங்க, ஆதர்ஷ உங்களுக்குத் தெரியலயா? ஆதர்ஷ், வேணு ரெண்டு பேருமே நம்ம மேரேஜுக்கு வந்துருந்தாங்க. ரேகா மட்டுந்தான் வரல. அவள்ட்ட மட்டும் ஒன்னு ரெண்டு மீட்டிங்லயே நல்லாப் பழகுறீங்கள்ல. அதே மாரி இவங்கள்ட்டயும் பேசுனா என்னவாம்? அட்லீஸ்ட் டிரையாச்சும் பண்ணலாம்ல"

"..."

"இதப் பாத்தீங்களா? ஆதர்ஷ் வாங்கித் தந்தான். கோரா சில்க்; டீல் ப்ளூ கலர். எக்ஸாக்டா இந்த கலர் தான் என்னோட ஃபேவரைட். இன்னுமே ஞாபகம் வச்சுருக்கான் ஆது"

"நான் இப்போ என்ன சொல்லணும்னு ஆசப்பட்ற?"

"நல்லாருக்கா?"

"உனக்கு இந்த கலர் சூட் ஆகாது. எல்லோ, ரெட், பிளாக் போட்டீனா ப்ரைட்டா தெரிவ. வொயிட் இன்னும் உன் அழகத் தூக்கிக் குடுக்கும்"

"எனக்குப் பிடிச்சுருக்குப்பா"

"உள்ளத உள்ளபடி தான் சொல்ல முடியும். இதுக்கு எதுக்கு என்ட்டக் காட்டி எப்புடி இருக்குன்னு கேட்ட?"

"சரி. உங்களுக்கு இது பிடிக்கலயா? இத விட பெட்டரா எடுத்துட்டு வந்து காட்டுங்க. அப்போ உங்க டேஸ்ட்டு தான் பெஸ்ட்டுனு ஒத்துக்குறேன்"

"ப்ரூவ் பண்றேன். பட், உன் ஸ்லிப்பர்ஸ் செலக்ஷன் சூப்பர். இன்னைக்கு மட்டும் உன் ஸ்கூல் ஃப்ரென்ட பாத்துருந்தா கண்டிப்பாப் பாராட்டிருப்பேன்"

"அவன் பேரு வேணுகோபால். ஞாபகத்துல வச்சுக்கங்க. ஸ்கூல் மெமரீஸ ஷேர் பண்ணும்போது, அவன் பேர அடிக்கடி யூஸ் பண்ணுவேன். அப்டினா யாருன்னு கேட்றாதீங்க"

"வேணு கோபால். ஆது... ஃபுல் நேம் என்ன? ஆதர்ஷா? அப்றம், காந்திபுரம் கஃபேல பாத்தனே. அவன் பேரென்ன?"

"அபிலாஷ்"

"அபிலாஷ், ஆதர்ஷ்; இந்த ரெண்டு பேரும் அடிக்கடி கன்ஃப்யூஸ் ஆக சான்ஸ் இருக்கு. வேற என்னலாம் வாங்கிக் கொடுத்தான் ஆதர்ஷ்?"

"இந்த சேரி மட்டுந்தான். அவன் பொண்ணுக்கு, நம்ம சார்பா, ஒரு டிரெஸ் வாங்குனேன். இருங்க, ஃபோட்டோ காட்டுறேன்"

"நைஸ்"

"கைல போட்ருக்கேன்ல; இந்த சில்வர் ரிங் ஆது குடுத்தது தான். எம். எஸ்சி. படிக்கும் போது வந்த பர்த்டே கிஃப்ட்டு"

"அப்பறம்?"

"இந்த ஹேன்ட்பேக் மதுவோட காசுல வாங்குனது. இதுக்கு முன்ன நான் வச்சுருந்த பேக்பாக் ப்ரொஃபஷனால இல்லன்னு, இத வச்சுக்க சொன்னாளா. அந்த பேக்பாக்கக் கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷம் யூஸ் பண்ணித் தேச்சுட்டேன். அது யாரோட கிஃப்ட்டுனு கெஸ் பண்ணுங்க, பாப்போம்"

"யாராயிருக்கும்? அபிலாஷ் தான. மிச்சம் இருக்குறது அவன் மட்டுந்தான்"

"கரெக்ட்டு"

"ஹையோ... உண்மையாப் பேசி என்னைக் கொடுமப்படுத்துறாளே. ஏன்டி, உனக்குலாம் மனசாட்சி இருக்கா? என்கிட்ட அது வேணும், இது வேணும்னு கேக்க மாட்டற. மத்தவங்க தந்தா மட்டும் எக்கச்சக்க சந்தோஷம் வருதோ?"

"நானென்ன ஒவ்வொருத்தங்கள்ட்டயாப் போய்க் கேட்டா வாங்குறேன். அவங்கவங்களுக்கு எம்மேல அன்பு ஜாஸ்தியாருக்கு; சொந்தப் புத்தில வாங்கித் தராங்க. உங்களுக்கும் பாசமிருந்தா எனக்குன்னு எதாச்சும் வாங்கிருப்பீங்க. அன்பளிப்பாக் கொடுக்குறத வேணாம்னா சொல்லப் போறேன்"

"எனக்கு அப்போ பாசம் இல்லங்குறியா?"

"அது என்னவோப்பா. உங்க மனச நீங்களே தான் கேள்வி கேட்டுக்கணும். எனக்குன்னு இந்தத் தாலியத் தான் வாங்குனீங்க. அதயும் நான் சொமக்க முடியாமச் சொமந்துட்டு இருக்கேன்"

"சொமக்க முடிலயோ? கழட்டி வச்சுர்றது"

ஒரு கணம் சினத்தில் முகம் சிவந்தது அவளுக்கு "அறைஞ்சன்னா பல்லு கில்லுலாம் எகிறிடும். மரியாதயா, இந்த வார்த்தையலாம் வாபஸ் வாங்கிடுங்க"

"வாபஸ்... நல்லாக் கொட்டிக்கிட்டியா? ஏன் கேக்குறேன்னா, நான் இன்னும் சாப்பிடல. உனக்காக வெய்டிங்"

அவனைச் சமாதானப்படுத்தும் எண்ணத்தில் தட்டோடு வந்து அருகே அமர்ந்தாள் ப்ரியா "புதுப்புது பிரச்சனயா ஆரம்பிக்காதீங்க. இப்போதைக்கு என் வெள்ளக்கொடிய ஏத்துக்கங்க, ப்ளீஸ். இன்னைக்கு ஃபைட்டு போதும். இதுக்கு மேலத் தெம்பில்ல. ஆ வாங்குங்க. அங்கைக்கு ஜாப்போட ஃபர்ஸ்ட் டே; எப்டிப் போச்சுனு வேற விசாரிக்கணும்"

அவளது சமாதானக்கொடிக்கு அவன் இசைந்த போதிலும், அதன் ஆயுட்காலம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. பிந்தைய தின மாலையில் இவர்கள் இருவரும் பணி முடித்து வீடு திரும்ப, விக்ரமிற்கு ஓர் அழைப்பு வந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் இவனை விடவும் பத்மாவுக்கு ரத்தம் அழுத்தம் ஏறியது. இவளை அந்தளவு கலங்கடித்த அபிலாஷ் தான் மீண்டும் தொடர்பில் வந்தான். விக்ரம் அதை ஏற்றுப் பேச, இவனிடம் முகவரி விசாரித்துக் கொண்டு அவன் நேரிலேயே வந்துவிட்டான். எதற்கா? அமைதி பேச்சுவார்த்தை நடத்தத் தான். அபிலாஷ் உள்ளே நுழைந்தும்
இவள் கண்டுகொள்ளாமலே அமர்ந்திருந்தாள். விக்ரம் அவனை வரவேற்று காஃபியும் கொடுத்திட, கணவனைக் கொலைவெறியுடன் நோக்கினாள் பத்மா.

"லோட்ட..." ஆரம்பிக்கும்போதே அபிக்குக் குரல்வளை இழுத்துப் பிடித்தது

"சொல்ல வந்த விஷயத்தச் சொல்லிட்டுப் போய்ட்டே இரு. நீ இங்க வந்ததுல எனக்கு விருப்பமே இல்ல. எதோ விக்ரம் புண்ணியத்துல இவ்ளோ தூரம் வந்துருக்க. பேசுறத ஒழுங்காப் பேசு. லூசுத்தனமா எதுவும்..." கோபத்தில் அதற்கு மேல் இவளுக்கும் வார்த்தை வரவில்லை

"ஸாரி, பத்மா. நான் உனக்கு நெறயவே டார்ச்சர் கொடுத்துட்டேன். விக்ரம், உங்கள்ட்டயும் ஸாரி கேட்டுக்குறேன். அன்னைக்கு காஃபி ஷாப்ல பத்மா திட்டவுந்தான், நான் எவ்ளோ பெரிய தப்பச் செஞ்சுருக்கேன்னே புரிஞ்சுது. இவ்ளோ நாள் உம்மேல இருந்த காத... கண்ணு முன்னு தெரியாத பாசத்துனால அப்டி நடந்துகிட்டேன். அதுவும் நான் கடைசியாப் பண்ண காரியத்த நெனச்சா, எனக்கே ஆக்வார்டா இருக்கு. விக்ரம் நல்லவரா இருக்கப் போய் நியூட்ரலா ரியாக்ட் பண்ணாரு. அவரு அவசரப்பட்டுருந்தாருன்னா எல்லாம் தலைகீழாய்ருக்கும்; என்னால உன் வாழ்க்கையே நாசமாப் போயிருக்கும்; மீதி லைஃப் பூரா அந்த கில்ட்டோடயே நான் வாழ்ந்துருக்கணும். இப்போ எனக்குத் தெளிவு வந்துடுச்சு. லவ்வுக்கு ஆசப்பட்டு உன்னோட ஃப்ரென்ட்ஷிப்ப தானே கெடுத்துக்கிட்டேன். எல்லாம் முடிஞ்ச பிறகும் என் எதிர்பார்ப்புலாம் ஒன்னே ஒன்னு தான்; உன்னோட மன்னிப்பு. தயவுசெஞ்சு, என்னை மன்னிச்சுரு"

"ஆமென். அப்படியே ஆகட்டும். உன்னை மன்னிச்சுட்டேன். நீ பண்ணது எல்லாத்தயும் மறந்துட்டேன். சந்தோஷமாப் போய்ட்டு வா"

"தேங்க்ஸ். வீட்டுல எனக்கு எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க. பொண்ணு சென்னை. இன்னும் டூ வீக்ஸ்ல அவங்க வீட்டுலயே நிச்சயதார்த்தம்"

"கங்ராஜுலேஷன்ஸ்"

"நீயும் விக்ரமும் வந்துருங்க"

"மேரேஜுக்குக் கண்டிப்பா வாரோம்"

அவன் போய் விட, விக்ரம் வழியனுப்பும் நோக்கில் வெளியே சென்றான். இவளோ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்; ஒரு தொல்லை விட்டதென்ற நிம்மதியும் சற்றே பரவத் தொடங்கியது; அடுத்ததாக யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்க, அபிலாஷோ என நிமிர்ந்து பார்த்தாள். ஆனால், வந்ததென்னவோ ரேகா. அப்போது தான் அவளை வரவழைத்த நினைவே பத்மாவிற்கு மீண்டது.

அந்நேரம் அறையிலிருந்து வந்த ராம்குமார் "பாப்பா, விக்ரமக் கூட்டிட்டு வெளியப் போறேன். நைட்டு வர லேட்டாகும். லாக் பண்ணிட்டு இரு" என்று சேதி சொல்லியதோடு நண்பனை இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்

இது எதற்காக என்றால் நாளை வரவிருக்கும் பிறந்தநாளுக்கான, முந்தைய இரவே நடக்கப் போகிற, மது விருந்துக்காக. ராம் போகும்முன் ஒருமுறை கூட ரேகாவை ஏறிடவில்லை. அச்செயல் அவளுக்குச் சிறிது ஏமாற்றத்தை அளித்த போதிலும், அதை மறைக்க முனைந்து தோழியிடம் கவனத்தைத் திருப்பினாள்.

"எவனோ இப்போ இங்கருந்து போனானே? ஆப்போசிட்ல வரும்போது பாத்தேன். அண்ணாவோட தோஸ்த்தா?"

"என்னோட எதிரி; அபிலாஷ்"

"அந்தப் பன்னாடையா? அவன் ஏன்டி இங்க வந்துட்டுப் போறான்? அன்னைக்குக் காரித் துப்பிக் கண்லயே படாதன்னு சொல்லியுமா திரும்பி வந்தான்?"

"எல்லாம் உங்க நொண்ணன் பண்ற வேலை தான்"

"அண்ணாக்கு ரொம்பப் பெரிய மனசுடி. என்னைய எதுக்கு வரச் சொன்னவ?"

"நாளைக்கு அவரு பர்த்டே"

"சூப்பரு. கிஃப்ட்டு வாங்கணும்ல?"

"கிஃப்ட்டு தரணும். ஆனா, அது கடைலக் கிடைக்காது"

"அப்படி என்ன கிஃப்ட்டு?"

"கிட்ட வாயேன்"

"ஆ" ப்ரியா கூறியதைக் கேட்டு வாயைப் பிளந்தாள் மதுரேகா

யாருமே இல்லாத வீட்டில் ஏன் இதைக் காதில் சொல்ல வேண்டும்; அவ்வளவு பெரிய ரகசியமா?

என்னவா இருக்கும்!