• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-14

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 14

"உண்மையை சொல்லு மாறா?" என்று அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றவளுக்கு துளியும் கோவம் இல்லை. அதற்கான காரணம் மட்டுமே தேவை. அதுவும் அவளுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவள் கண்களில் தேங்கி நின்றது.

அவன் சட்டையை அவள் கையிலிருந்து விடுவிக்காமலே, "எதுக்காக இருக்கும்னு நினைக்குற நிலா" என்றவன் விழி வழியே அவனது காதலை கடத்த முயற்சி செய்தான்.

அவன் விழி சொல்லும் மொழி அவளுக்குப் புரியாமலில்லை. ஏனோ அவன்‌ மீது இனம்புரியாத மயக்கம், தயக்கம், சொல்லென்னா உணர்வு அனைத்தும் இருக்கிறது. ஆனால் அதற்கு பெயர் சூட்டத் தெரியாமல் தடுமாறுகிறது நெஞ்சம். சட்டையின் பிடி அவள் கையில் இருப்பதால் அவன் முகம் அவள் முகத்துக்கு நேராக இருக்க, விழிகள் ஈட்டி போல் சொருகியது.

"நீதான் சொல்லனும். எனக்குத் தெரியல" என்று வாய் மட்டும் தான் சொல்லியது மனதின் பதிலை ஓரம் கட்டி.

"ஓ அப்டியா?. சும்மா தான் வர்றேன் வாரத்துக்கு ஒரு தடவை சென்னைய சுத்தி பாக்குறதுக்கு" என்று அவனும் பிடி கொடுக்காமல் சொல்ல.

"இதை நான் நம்பனும்?" என்று புருவம் நெறிக்க.

"ஆமா"

அவனை முறைத்து விட்டு, "என்ன பாக்கத்தான் வர்றியா மாறா?" என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக அவள் முகத்தைக் கூர்மையாக நோக்கினான்.

அவன் மௌனமே அவள் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்ல, "என்னைப் பார்க்கத் தான் வர்றியா மாறா? எனக்காகவா?" என்று அதிர்வைத் தாங்கி கேட்க.. அவன் தலை ஆமாம் என்று மேலும் கீழும் ஆடியது. சட்டையைப் பிடித்திருந்த கை விலகியது. 'ஏன்?' என்று விழியாலே கேள்வியைத் தொடுத்தாள் பெண்ணவள்.

அவள் கைகள் விலகிய அடுத்த நொடி, அவள் கன்னங்களை இருகைகளால் தாங்கியவன், "ஆமான்னு சொன்னா உன் அடுத்த கேள்வி என்ன நிலா?. உனக்காக தான் வர்றேன். உனக்காக மட்டும் தான். உன்னை மணிக்கணிக்கா பேசச் சொல்லி ரசிக்கனும்னு தோணுது. உன்கிட்ட பேசுனா என் மனசு பேரமைதியா இருக்கு. தனிமையை போக்குற. வலியை சொல்லாமலே ஆறுதலை கொட்டிக் கொடுக்குற. எப்படி புடிச்சது ஏன் புடிச்சதுனு கேட்டா எனக்கு சத்தியமா தெரியல. உனக்கும் எனக்கும் இடையில கிலோமீட்டர் கணக்குல தூரம் மட்டுமில்ல உசரத்துலயும் தூரம் தான். நீ எங்கோ கோபுரத்துல இருக்குற. நான் கண்ணுக்குத் தெரியாத கரும்புள்ளியா இருக்கேன். அந்த தூரம் மட்டும் இல்லனா என் மனசுல இருக்குறதை என் மனசுல சஞ்சலம் வந்தனைக்கே உன்கிட்ட சேர்த்திருப்பேனோ என்னவோ?" என்றவனின் விழிகளில் இருந்த தீவிரத்தை விழிகள் அகலாமல் பார்த்தாள். வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. நெஞ்சமெல்லாம் படபடத்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவனின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நிலா" என்றவனின் வார்த்தை குழைவாக வந்தது. அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத.. கடற்கரை காற்றின் குளிர் காற்றோடு அவன் சூடான மூச்சுக்காற்று மேனியைத் தழுவி இதமான உணர்வைத் தர கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இரு கையின் பெரு விரலால் இரு கன்னங்களிலும் இதமாய் வருட, அதற்கு மேல் முடியாமல் அவன் கையோடு அவள் கையை வைத்து அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். நிமிடங்கள் கடந்தது. இருவரும் அதே மோனநிலையில் இருந்தனர். கடற்கரை மணலில் நிலவின் சாட்சியோடு வெண்ணிலவின் சாரல் மேனியைத் தழுவ.. இப்படியொரு சூழ்நிலையில் தனது காதலை வெளிப்படுத்துவான் என்று அவனும் நினைக்கவில்லை அவளும் நினைக்கவில்லை.

"நிலா.. டைம் ஆச்சு. கிளம்புவோமா?" என்றவனின் குரலில் பட்டென்று விழிகள் திறந்தவள் அவன் கையிலிருந்து கையை எடுத்து விட்டு, 'சே.. எப்டி போஸ் குடுத்துக்கிட்டு அவன்கூட நின்னுருக்கேன். என்ன நினைச்சுருப்பான்' என்று திரும்பி நின்று கொண்டாள்.

அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்பி விட்டனர். நிலா யோசனையுடன் வர, மாறன் அவ்வப்போது திரும்பி திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவளும் காதலிக்க வேண்டும். உடனே அவனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அவள் மனதில் அவன்மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பது தெரியும். ஈர்ப்பு காதலாக மாறும் என்று அடித்துச் சொல்ல முடியாது. அதேபோல் ஈர்ப்பு ஈர்ப்பாகவே முடிந்து போகும் என்றும் சொல்ல முடியாது. அவள் மனதில் உள்ளதை உணர அவளுக்கு அவகாசம் வேண்டும் என்று அவன் நினைத்தான்.

இருவரும் ஆளுக்கொரு யோசனையில் இருக்க அவள் வீடு வந்து விட்டது.

அவள் இன்னமும் ஏதோ ஒரு உலகத்தில் இருக்க, "நிலா வீடு வந்துருச்சு" என்கவும் தான் சுற்றும் முற்றும் பார்த்தவள், "அதுக்குள்ள வீடு வந்துருச்சா?. இப்போ தான் கார்ல ஏறுன மாதிரி இருந்துச்சு. ஆமா ஒரு தடவை தான வீட்டுக்கு வந்துருக்கேங்க. எப்டி கரெக்டா அட்ரெஸ் ஞாபகம் வச்சு வந்தேங்க" என்று அவள் முழிக்க.

"நான் டிரைவர்மா. ஒரு தடவை வந்தாலே ஆயுசுக்கும் மறக்காது. அதுவும் நீ இருக்குற இடம் மறக்குமா?" என்று புருவம் உயர்த்தி கண்சிமிட்ட.

அவன் கண்சிமிட்டலில் இவள் இமைகள் படபடக்க அவனைக் காண, இதுவரை பார்க்காத அவனின் அழகை மொத்தமாய் உள்வாங்கினாள். விழிகளை மட்டுமே கண்டு இதுவரை கதைத்தவள் இன்று தலை முதல் கால் வரை அளந்தாள். அலைஅலையாய் பறக்கும் கேசமும், துடிக்கும் மீசையும், இதழுக்குள் தொங்கி நிற்கும் குறும்புமென ஒவ்வொன்றாய் விழிகள் ரசிக்க.. அதீத மயக்கத்தில் தோற்ற மயக்கங்கள் எல்லாம் தோற்றுத்தான் போகும். அழகு என்பது அவனிடம் இருப்பது மட்டுமே என்றாகியது. அவளின் பார்வை வீச்சில் ஆடவனுக்குத் தான் நாணம் வந்து விட்டது.

"என்னாச்சு?. உள்ளே போகலையா?. போக மனசில்லனா வா. அப்டியே இன்னொரு ரவுண்டு போய்ட்டு வரலாம். போலாமா?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்த..

'சே.. இவ்வளவு வெளிப்படையாவா சைட் அடிப்போம். இதற்கு மேல் நின்றால் நானே என்னைக் காட்டி குடுத்து விடுவேன்' என்று நினைத்தவள், "பை.. பார்த்து போங்க" என்று இறங்கப் போனவளின் கையைப் பிடித்தவனை அதிர்ச்சியோடு பார்க்க, அவள் விழியோடு விழி மோத விட்டவன்,

"இன்னைக்கு நாளை நான் மறக்கவே மாட்டேன் நிலா. என் காதலை உன் கிட்ட சேர்த்த நாள். தேக்கி வச்ச சொற்களையும் பூட்டி வச்ச மௌனங்களையும் சலனமே இல்லாம கொட்டித் தீர்க்க நீ வேனும்டி வாழக்கை முழுக்க. கொஞ்சம் அன்பைத் தானு யாசகம் கேட்டு உரிமையா நிக்க முடியல. உன்கிட்ட திணிக்கக்கூடாது. எனக்கே எனக்காக என்னை நீ விரும்பனும். நீ இப்படித்தான் வேண்டுமென்பதெல்லாம் இல்லை. நீ எப்டி இருக்கியோ அப்டியே எனக்கு போதும். உன் கண்ணுல எனக்கான ஈர்ப்பு இருந்துச்சு. உனக்கும் டைம் வேனும் புரிஞ்சுக்க. நான் காத்திருப்பேன்.." என்றவனின் வார்த்தைகளில் உருகி குழைந்து நின்றாள் பெண்ணவள். ஒவ்வொரு நிமிடமும் அவள் மனதில் ஆழமாய் இறங்கிக் கொண்டிருக்கிறான்.

தன்னவளின் நினைவோடு சென்னையிலிருந்து புறப்பட்டான். இருவருக்கும் புதுமையான அனுபவம். கடற்கரை மணலில் காதலியுடன் அமர்ந்து கதைப்பதெல்லாம் அவன் கனவிலும் நினைக்காத ஒன்று.

அவன் வாரத்தைகளில் மனம் துள்ளல் கொள்ள, குதித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவளிடம் அவள் அன்னை புவனா ஏதோ கேட்க, வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு, உடை மாற்றவும் தோன்றாமல் மெத்தையில் சென்று பொத்தென்று விழுந்தாள். அவன் கடற்கரையில் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது. மிக நெருக்கத்தில் கண்ட அவன் முகமும் குறும்பான கண் சிமிட்டலும் நினைவில் வந்து போக அவன் தாங்கிய கன்னங்கள் இரண்டும் தானாக சிவந்தது.

'எனக்குள்ளேயும் காதல் வந்துருச்சா?. இது தான் காதலா?. இல்லை இது வெறும் ஈர்ப்பு மட்டுமா?' என்று அவள் மூளை கேள்விகளை கேட்டு குடைந்தது.

'வார வாரம் அவனை வர சொல்லி பாக்கனும்னு தோனுது. அவன் கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியல. அவன் கூட இருந்தாலே பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். வெறும் ஈர்ப்பு மட்டும் இருந்தா அவன் நெருக்கத்தில் எதற்கு என் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஆட்டம் கானுது. அப்போ இது காதல் தானே?' என்று மனசாட்சி எடுத்துரைக்க மாறனின் மேல் உள்ள நேசத்தை மனம் மெதுவாய் உணரவும் தானாய் சிரித்துக்கொண்டாள்.

'எனக்கான நேரத்தை விரும்பியே எனக்குத் தருகிறான். என்னை நானா இருக்கச் செய்து ரசிக்கிறான். இதுக்கு மேல என்ன வேணும்?. ஆனா இது வெறும் நட்பு நிலையாக கூட இருக்கலாம்ல?' என்று இருதலைக் கொல்லி எறும்பாக அவள் மனம் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தடுமாறினாள். 'அவனை வாரவாரம் பாக்குறதால தான் எனக்கு இப்படி தோனுதோ? ஒருவேளை அடுத்த வாரம் பார்க்காமல் இருந்தால் அப்பவும் எனக்கு அவன் மேல அதே பீலிங்ஸ் இருக்குமா? இல்ல நான் அவனை மறந்துடுவேனா?. ரெண்டு வாரம் பாக்காம இருந்தா என் மனசு கேட்கிற கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்குமோ?' என்று சிந்தித்தவள் தனக்கே சுய பரிசோதனை வைத்துக்கொள்ள முடிவு செய்தாள்.

இங்கே ஊருக்கு வந்த மாறனுக்கோ எந்த வேலையிலும் நாட்டம் செல்லவில்லை. முடியாது என்று முகத்திற்கு நேராக சொல்லியிருந்தால் கூட விரும்பியது கிடைக்கவில்லை என்று மனதை ஆறுதல் படுத்தியிருப்பான். காதலை சொல்லியாச்சு. அவளுக்கு அவகாசம் வேண்டும் என்று புரிந்தாலும் காதல் கொண்ட மனம் உடனே பதிலை தெரிந்து கொள்ள தான் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறது. அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் மாற்றி மாற்றி தத்தம் மனம் கவர்ந்தவரின் வாட்ஸ்அப் சுயவிவர புகைப்படத்தை பார்த்தபடி நாட்களை கடத்தினர்.

வெள்ளிக்கிழமை வந்து விட்டது. வருகிறாயா என்று அவளும் கேட்கவில்லை. அவள் கேட்காமல் வருவேன் என்று இவனுக்கும் சொல்ல முடியவில்லை. 'அவள் மனம் தெளிவாய் இருந்தால் அதை நான் கல்லெறிந்து கலைக்கக் கூடாது‌. அவகிட்ட இருந்து அழைப்பு வராம நானா எதுவும் செய்யக் கூடாது' என்று உறுதியாய் இருந்தான்.

இருவரும் தவிப்பில், ஆளுக்கொருபுறம் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க, இரண்டாவது வார இறுதியும் வந்து விட்டது.


தொடரும்.
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
பிரிவு காதலை வலுப்படுத்தும் பார்ப்போம்
 
  • Like
Reactions: Pandiselvi