• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-17

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 17

'இவளுக்கு எப்டி நான் வார வாரம் சென்னை போறது தெரியும்' என்று அதிர்ந்து முழித்தான்.

"என்னடா முழிக்குற?. அதுவும் சென்னை போயிட்டு ஒரே நாள்ல ரிட்டரன் வர்றியாம்"

"அப்படிலாம் இல்லக்கா. உனக்கு யாரு சொன்னா?. குமரேசன் சொன்னானா? அவனை எங்க பார்த்த?" என்று சந்தேகமாய் வினவ.

அவன் வருவதற்கு முன் அருணாவுடன் அவள் பேசிக் கொண்டிருந்ததின் விளைவு இது என்று அவனுக்குத் தெரியவில்லை. "யாரு சொன்னா என்ன?. எதுக்கு அவ்ளோ அலைச்சல்?"

"நானே வேலை இல்லாம சும்மா இருக்கும் போது வேலைக்கு ஒரு டிரைவர் வச்சு போக சொல்ல முடியுமாக்கா?. அந்த அளவுக்கு உன் தம்பி இன்னும் தொழிலதிபர் ஆகல. ரெண்டு மூனு டிரிப் சேர்ந்து வந்தா தான் டிரைவர் அனுப்புவேன். நான் சும்மா இருந்தா நானே போயிட்டு வந்துடுவேன்கா. அலைச்சல் எல்லாம் பார்த்தா தொழில் பார்க்க முடியுமாக்கா?" என்று அவளுக்கு புரிய வைத்தான். மனதில் உள்ள கள்ளத்தனம் மறைத்து.

"சரி தான். ஆனா உடம்பை பாத்துக்கோ" என்றவள், "கவர்ல என்னடா கொண்டு வந்த? துணிப்பை மாதிரி இருக்கு"

"அது.. அது எனக்கு தான் சட்டை" என்கவும் வெடுக்கென்று தம்பியை நிமிர்ந்து பார்க்க.. அவன் தலை குனிந்தபடி விழிகளை அங்குமிங்கும் உருட்டிக் கொண்டே சோற்றுப் பருக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தான்.

'சட்டைக்கு ஏது குஞ்சம்?' என்று வெளியே நீட்டிக் கொண்டிருந்த முந்தானையில் உள்ள குஞ்சத்தில் பார்வையை பதித்தவள், 'என்கிட்டயே ஏதோ மறைக்க ஆரம்பிச்சிட்டியாடா தம்பி?. அருணா சொன்னது சரி தான் போல. எதுக்கு சென்னை போயிட்டு வர்ற?. என்னைக்கா இருந்தாலும் தெரிய தான போகுது. அப்போ கேட்டுக்கலாம். இப்போ தோண்டித் துருவ வேண்டாம்' என்று இப்போதைக்கு அதை அப்படியே ஆறப்போட்டாள்.

"வீட்டுக்கு கூப்டு சமைச்சுத் தான் போட முடியவில்லை. கூப்டாலும் நீயும் வர்றதில்லை. போய் கறி எடுத்துட்டு வாடா. சமைச்சு வச்சுட்டுப் போறேன்" என்றாள்.

"இருக்கட்டும் கா. ஒருதரம் தான் வர்ற. சும்மா ரெஸ்ட் எடுத்துட்டுப் போ. எதுக்கு இங்கேயும் வந்து அடுப்படில கெடக்கனும்ங்குற" என்ற தம்பியிடம், "இது ஒரு வேலையா?. போயி வாங்கிட்டு வாடா" என்றவள் அவன் வாங்கி வந்து தரவும் அவனுக்குப் பிடித்தது போல் காரசாரமாக கோழிக்குழம்பை வைத்து விட்டுப் போனாள். தன் வீட்டுக்கு வராவிடிலும் எப்படியோ ஒருதரமாவது தன் கையால் அவன் சாப்பிடும் நிம்மதி அவளுக்கு.

அன்று என்றும் இல்லாமல் ரோகித் மற்றும் ப்ரியா இருவரும் நிலாவுடன் வீட்டுக்கு வந்திருக்க.. மனோகர் மற்றும் புவனா இருவரும் வரவேற்று அமர வைத்தனர்.

"அங்கிள்.. நெக்ஸ்ட் வீக் நிலா ப்ரத்டே. நாங்க பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கோம். நிலாகிட்ட கேட்டா அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்கனும் வர முடியாதுனு சொல்றா. ப்ளீஸ் அங்கிள்.. வி நீட் யுவர் பெர்மிஷன்" என்று ரோகித் கேட்க.

"ப்ரத்டே பார்ட்டி தான.. வீட்லே அரேஞ்ச் பண்றேன். எல்லாரும் வந்து இங்கயே செலிபிரேட் பண்ணுங்க"

"இல்ல அங்கிள். அது வந்து.. நாங்களும் ஃபைனல் இயர் வந்துட்டோம்‌. அதுக்கும் சேர்த்து ஃபேர்வெல் பார்ட்டி மாதிரி வைக்கலாம்னு க்ளாஸ் புல்லா ப்ளான் பண்றோம். சேஃப்பான பார்ட்டி ஹால் தான் புக் பண்ணுவோம். நிலாவை சேஃப்பா வீட்ல ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க பெர்மிஷன் குடுங்க‌ . அவகிட்ட கேட்டா ஓவரா பண்றா" என்று மனேகரிடம் கேட்க.

அவர் சிறிது யோசனைக்குப் பின், "சரிப்பா. ஆனா சேஃப்பா பத்திரமா பார்ட்டி முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துடனும்" என்றார்.

"தேங்க்ஸ் அங்கிள். யூ ஆர் சோ ஸ்வீட். நிலா ஓவரா பில்டப் குடுத்து பயமுறுத்தி வச்சுருந்தா. இவ்ளோ ஈசியா பெர்மிஷன் குடுப்பேங்கனு நினைக்கல. நிலா என் பொறுப்பு. நானே பத்திரமா கூப்டு போய்ட்டு கூப்டு வந்துடுறேன்" என்று நிலா தன் பொறுப்பு என்பதை அழுத்தமாகச் சொன்னான்.

"நிலா எங்களை கேட்காம எதுவும் டிசைட் பண்ண மாட்டா ரோகித். அவ அப்டித்தான்" என்று மகளுக்காக பரிந்து பேசினார்.

அவரின் வார்த்தையில் நிலாவுக்கு சுருக்கென்றானது. 'மாறனைப் பற்றிய விஷயத்தை மறைப்பது தந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைப்பதற்கு சமமோ' என்று மனதெல்லாம் குற்றவுணர்வாக இருந்தது. காதலில் கள்ளத்தனம் ஒன்றும் புதிதில்லை. அவள் அவர்களை ஏமாற்ற எண்ணவில்லை. ஒரு உண்மையை மறைத்திருக்கிறாள் அவ்வளவே என்பது அந்த பேதைப் பெண்ணுக்கு தெரியவில்லை. 'உண்மை தெரிஞ்சாலும் அப்பா என்னை புரிஞ்சுப்பாரு' என்று ஆறுதல் சொல்லிக் கொண்டாள் தந்தை அவள் மேல் வைத்த பாசத்தின் மேலுள்ள நம்பிக்கையில். ஆனால் உண்மை தெரிய வரும் போது அது மாறனுக்கும் அவளுக்குமான அவளே எதிர்பார்த்திராத பெரிய இடைவெளியை உண்டு பண்ணும் என்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

அவள் யோசனையின் பிடியில் இருக்க, அவ்வப்போது ரோகித்தின் விழிகள் நிலாவின் பக்கம் சென்று வந்தது. 'உனக்கு அன்னைக்கு பெரிய சர்பிரைஸ் இருக்கு நிலா' என்று நினைத்துக் கொண்டான். அவனுக்கே அன்று மிகப்பெரிய சர்பிரைஸ் இருக்கப் போவது தெரியாது அவனுக்கு. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் போடும் கணக்கெதற்கு.

அந்த வாரம் அப்படியே முடிய பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் பொழுது, வழக்கம் போல் இரவு மாறனுக்கு அழைக்க அவள் அழைப்புக்காகவே காத்திருந்தவன் உடனே அழைப்பை ஏற்று, "நிலா என்ன பண்ற?" என்றான்.

"நீங்க என் ப்ர்த்டேக்கு வருவேங்களா இல்லையானு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்". மனதில் வைக்காமல் பட்டென்று உடைத்து விட்டாள்.

அவனின் வருகையை அவள் எதிர்பார்த்துக் காத்திருப்பது அவனுக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் அன்று அவனுக்கு ஒரு பங்ஷன் கான்ட்ராக்ட் இருப்பதால் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. "அன்னைக்கு எனக்கு வேலை இருக்கு நிலா. வர முடியுமானு தெரிலயே". பிறந்தநாள் பெண் கேட்டு மறுப்பது கஷ்டமாகத் தான் இருந்தது. இருவரும் காதலின் முதல் படியில் நின்று கொண்டிருக்கின்றனர். சிறு பிள்ளை போல் மனம் அனைத்தையும் எதிர்பார்க்கிறது என்ன செய்வது. அவளைக் கொண்டாட அவளைச் சுற்றி உறவுகளும் நட்பும் பல பேர் இருந்தும் அவன் நேரில் வந்து சொல்லும் வாழ்த்துக்காக ஏங்கித் தவிக்கிறது பெண் மனம்.

"ம் ஓகே மாறா. சும்மா கேட்டேன். அன்னைக்கு ப்ரண்ட்ஸ் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்காங்க" என்று சொன்னவள் எங்கு ஏது என்ன ப்ளான் என்று அவனிடம் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒருநாளைக் கடந்து பிறந்த நாளும் வந்து விட்டது. இரவு பண்ணிரெண்டு மணி வரை முழித்திருந்து வாழ்த்து சொல்லி வைத்து விட்டதோடு காலை அவன் வேலைகளை பார்க்கச் சென்று விட்டான் மாறன்.

மனோகர் காலையிலே வீட்டை அலங்கரித்து பெரிய கேக்கை வாங்கி வைத்து அவள் பிறந்தநாளை சிறப்பிக்க.. ஏனோ தானோ என்று கேக் வெட்டி தாய்க்கும் தந்தைக்கும் ஊட்டி விட்டாள். அவர்களின் ஆசிர்வாதம் அன்று மட்டுமில்லை எப்போதும் அவளுக்கு உண்டு.

"நிலா என்னடி உற்சாகமே இல்லாம இருக்க?. உடம்பு கிண்டு சரி இல்லையா?" என்று தாய் புவனா பரிவாய் வினவினார்.

"அப்படிலாம் இல்லம்மா. எப்பவும் கொண்டாடுறது தான. நானென்ன சின்னப்புள்ளயா குதிச்சுக்கிட்டு அலைய. நானும் மெச்சூர்டாகிட்டேன்" என்று சிரிக்க.

"பாரு புவி.. என் பொண்ணு சின்னப் பொண்ணுனு நினைச்சுக்கிட்டு இருந்தா நான் பெரிய பொண்ணாகிட்டேன். இந்த மாதிரி கேக் கட் பண்ணி ஊட்டி விடுறதெல்லாம் இத்தோட நிறுத்திக்கோங்கனு சொல்லாம சொல்றா" என்று கேலி செய்ய.

"டாடி.. போங்க கிண்டல் பண்றேங்களா?. எத்தனை வயசானாலும் கேக் கட் பண்ணி உங்களுக்கு ஊட்டி விட தான் செய்வேன்" என்றவள் புவனா செய்து வைத்த அவளுக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு, "ஈவ்னிங் பார்டி முடிச்சுட்டு ரோகித் ப்ரியா கூட வீட்டுக்கு வந்துறேன் மா" என்று கல்லூரிக்குச் சென்றாள்.

வருடா வருடம் நடப்பது போல் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியாயிற்று. கல்லூரி வந்த பின் நண்பர்களும் வாழ்த்துக் கூறியாயிற்று. இத்தனை நாள் அதுவே நிறைவாக இருந்தது. இன்று ஏதோ ஒன்று மிகப்பெரிய குறை போல் இருந்தது. மனம் ஒருவனைத் தான் நினைத்து ஏங்குகிறது. அவனைக் காணாமல் சந்தோஷப்பட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது. மாறனின் வருகை‌ மட்டுமே அந்த நாளை முழுமையாக்க முடியும் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. 'இந்த அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறானா?' என்று அவளுக்கே வியப்பாக இருந்தது. தேடி வந்து அன்பு செய்யும் அவன் காதலுக்கு அவ்வளவு சக்தி உண்டு. அதில் தொலைந்து போகாமல் என்ன செய்வாள்.

மாலை கல்லுரி முடியவும் அவள் வகுப்பில் உள்ள மொத்தக் கூட்டமும் அந்த உயர்தர பார்ட்டி ஹாலில் குவிந்திருந்தார்கள். அது ஃபேர்வெல் பார்ட்டி என்றாலும் நிலாவின் பிறந்தநாள் விழாவும் என்பதால் அவள் தான் அன்று அந்தக் கூட்டத்தின் நாயகி. மிர்ரர் மற்றும் ஸ்டோன் வேலைப்பாடுகளுடன் கூடிய மெரூன் நிற ஸ்லீவ்லெஸ் பார்ட்டி வியர் லாங் கவுனில் தேவதையாக வலம் வந்தவளை ஆண்கள் மட்டுமல்ல பெண் தோழிகள் கூட ஆவென்று பார்த்தனர். எந்நேரேமும் இயல்பாய் சிரித்த முகத்துடன் இருப்பதால் சாதாரண உடையிலே அழகாக தெரிபவள், அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அந்த உடை மேலும் அழகோவியமாக காண்பித்தது. ஆனால் முழு பௌர்னமி நிலவாக ஜொலித்தாலும் மேகம் மூடிய வெண்ணிலவு போல அவள் மகிழ்ச்சி மாறனின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது. எதிலும் நாட்டம் செல்லவில்லை. கூல் டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எல்லாரும் சந்தோஷமாக இருக்க, "நான் வரல. நீங்க போங்க டி" என்று டேபிளில் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

கூட்டத்தின் நடுவே, "ஹலோ ஹைஸ்.." என்று உயர்தர கோட்சூட்டில் மிடுக்காய் வந்து நின்ற ரோகித்தின் மேல் அனைவரின் பார்வையும் சென்றது. அவன் வசதிக்கு எப்போதும் அவன் ஆடம்பரமாகத் தான் இருப்பான் என்பதால் நிலாவுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அவன் விழிகள் அவளைக் கொள்ளையிடத் துடிப்பது கூட புரியவில்லை.

"இன்னைக்கு நிலாவோட ப்ரத்டே. லெட்ஸ் செலிபிரேட் ஹெர் ப்ரத்டே பர்ஸ்ட்" என்றவன் கேக்கை வரவழைத்தான். பெரிய இதய கேக்.. ஒருபக்கம் சிவப்பு நிற செர்ரி பழங்களால் நிரப்பப்பட்டு மறுபுறம் ஹேப்பி பர்த்டே மூன் என்று எழுதி இருந்தது. கேக்கைப் பார்த்ததும் அவனது நெருங்கிய நண்பர்கள் அனைவரும், "மச்சான் கேக்லே சொல்றியா?. என்ஜாய்.." என்று ஆளுக்கொருபுறம் கேலி செய்து கொண்டிருந்தனர். அதெல்லாம் நிலா காதிலே விழவில்லை.

"நிலா வா கேக் கட் பண்ணு" என்க. நண்பர்கள் வாழ்த்துப் பாட, கேக் வெட்டி எல்லாருக்கும் குடுத்து விட்டு மறுபடி சென்று அமர்ந்து கொண்டாள். அதன் பின் ஆட்டம் பாட்டம் என்று அவரவர் கொண்டாட்டத்தில் மூழ்கி விட, "நிலா ஏன் டல்லா இருக்க?" என்றபடி வந்தமர்ந்தான் ரோகித் அவள் அருகில்.

"தலை வலிக்குதுடா. எப்போ பார்ட்டி முடியும்? வீட்டுக்குப் போகனும்"

"இன்னும் கொஞ்ச நேரம் தான். இப்போ தான் பசங்க செலிபிரேட் பண்ணவே ஸ்டார்ட் பண்ணிருக்காங்க. முடியவும் கிளம்பிடலாம்"

"ம்" என்றாள் சுரத்தேயில்லாமல்.

"நிலா இங்க மியூசிக் சத்தம் அதிகமா இருருக்குறதால தலைவலி அதிகம் தான் ஆகும். வா நாம வெளில ஒரு வாக் போலாம்" என்று அந்த ஹாலுக்கு வெளியே இருந்த புல்வெளித் தரைக்கு அழைத்து வந்தான்.

அதுவரை அவனிடமும் அவன் பார்வை மீதும் நிலாவுக்கு கவனம் செல்லவில்லை. "நிலா யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்" என்று குழைவான குரலில் சொல்ல அப்போது தான் அவன் முகத்தைக் கவனிக்கிறாள்.

அவளை மொத்தமாய் தின்றுவிடும் பார்வை. எப்போதும் பார்க்கும் பார்வையை விட ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள். அதை மேலும் ஆராயாமல், "தேங்க்ஸ்" என்று அமைதியாக நின்று கொண்டாள்.

"நிலா.. ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ" என்று பட்டென்று சொல்லி விட.. அவள் அதிர்வில் திருதிருவென விழித்தபடி நின்றாள்.


தொடரும்.